தமிழறிஞர் வரிசை 17: வில்லுப்பாட்டுக்களை எழுதிய அ.க. நவநீதகிருஷ்ணன்

2009-இல் இவரது படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டபோதுதான் இவரது பேரை முதல் முறையாக கேள்விப்பட்டேன். மறைந்த சேதுராமன் அவரைப் பற்றி ஒரு அறிமுகக் கட்டுரை எழுதினார். பள்ளியில் தமிழாசிரியர், இலக்கியக் கட்டுரைகள் எழுதுவார் என்றதும் பெரிதாக ஆர்வம் ஏற்படவில்லை. சமீபத்தில் வள்ளுவர் சொல்லமுதம் என்ற புத்தகத்தின் ஒரு பகுதி இணையத்தில் கிடைத்தது. எனக்கான புத்தகம் அல்ல, ஆனால் குறள்களின் கருத்துகளை மற்ற பாடல்களோடு நன்றாக ஒப்பு நோக்குகிறார். பண்டிதர், நல்ல ஆசிரியராக இருந்திருப்பார் என்று தோன்றுகிறது. ஆழமாகவும் அகலமாகவும் தமிழ் இலக்கியங்களை பயின்றிருக்கிறார், ஆனால் அனேகமாக கோனார் நோட்ஸ் லெவலில்தான் – அதாவது ஆரம்ப நிலை விளக்கங்களாகத்தான் – அவரது புத்தகங்கள் இருக்கின்றன. புதிதாக நமக்கு – குறைந்தபட்சம் எனக்கு – எந்த தரிசனமும் கிடைத்துவிடவில்லை.

நவநீதகிருஷ்ணன் தானே சில வில்லுப்பாட்டுகளை எழுதி இருக்கிறார். அவர் வாழ்ந்த காலத்தில் வில்லுப்பாட்டு இலக்கியமாகக் கருதப்பட்டிருக்காது. வாய்மொழி இலக்கியம் என்ற கருத்தே இருந்திருக்காது. அப்போது இவர் அவ்வையார் கதை, கண்ணகி கதை, தமிழ் வளர்ந்த கதை, திருவள்ளுவர் கதை என்ற நாலு வில்லுப்பாட்டுகளைத் எழுதி இருப்பது கொஞ்சம் வியப்பாக இருக்கிறது. இவற்றில் மூன்று இணையத்தில் கிடைக்கின்றன. (எதுவும் என் ரசனைக்கு ஒத்துவரவில்லை, எதையும் நான் பரிந்துரைக்கமாட்டேன்.)

நவநீதகிருஷ்ணன் மாதிரி பண்டிதர்கள் இன்னும் இருக்கிறார்களா, அவர்களுக்குத் தேவை இருக்கிறதா, அவர்களுக்கு சமூகத்தில் மதிப்பு, அந்தஸ்து இருக்கிறதா என்ற சந்தேகமாகத்தான் இருக்கிறது. நான் கவிதையைக் கண்டால் ஓடுபவன், ஆனால் என் கண்ணோட்டத்தில் கூட எல்லாக் காலங்களிலும் இந்த மாதிரி பண்டிதர்கள் நிச்சயமாகத் தேவை. என்ன, இவர் போன்றவர்களை நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை, ஒருவரை மற்றொருவர் மிகச் சுலபமாக ஈடு செய்யலாம் என்று கருதுகிறேன்.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் கோவில்களில் கீரன் போன்றவர்கள் ஆன்மீக இலக்கியங்களைப் பற்றி பேசுவார்கள். கூட்டமும் வரும். கம்பன் கழகம் என்று ஒன்று இருந்தது. ம.பொ.சி., மு.மு. இஸ்மாயில், சௌந்தரா கைலாசம், கி.வா.ஜ. என்று பலரும் எழுபதுகளில் கூட தமிழ் இலக்கியத்தைப் பற்றி சொற்பொழிவாற்றுவார்கள். இன்று தமிழ் பேராசிரியர்களுக்கு, இந்த மாதிரி இலக்கிய வாசிப்புகளுக்கு ஏதாவது மரியாதை இருக்கிறதா? கு. ஞானசம்பந்தன், சாலமன் பாப்பையா முறையே பெரியபுராணத்தையும் குறளையும் கரைத்துக் குடித்தவர்கள் என்று கேள்வி. ஆனால் அவர்களுக்கும் பட்டிமன்ற நீதிபதியாகத்தான் பேசும் வாய்ப்பு கிடைக்கிறது.

என் கணிப்பில் இவர் வில்லுப்பாட்டு வடிவத்தை முயற்சித்திருப்பதால் மட்டுமே இலக்கிய வரலாற்றில் அடிக்குறிப்பு (footnote) என்ற அளவில் நினைவு கூரப்படுவார்.

வேறு புத்தகங்கள் பல இங்கே பலவும் கிடைத்தன. ஒரு விதத்தில் பார்த்தால் அறநூல் தந்த அறிவாளர் (1965), இலக்கிய தூதர்கள் (1966) எல்லாம் பண்டிதர்கள் பேசுவது எழுதுவது. காவியம் செய்த மூவர் புத்தகத்தில் இளங்கோ/சிலப்பதிகாரம், சீத்தலைச் சாத்தனார்/மணிமேகலை, சேக்கிழார்/பெரிய புராணம் பற்றி எழுதி இருக்கிறார். பாரதியாரின் குயில் பாட்டைப் பற்றிய புத்தகம் கோனார் நோட்ஸேதான். கோப்பெருந்தேவியர், முத்தமிழ் வளர்த்த முனிவர்கள் பள்ளி/கல்லூரியில் பாடப் புத்தகமாக வைக்க மாட்டார்களா என்ற நோக்கத்தில் எழுதப்பட்டவை என்று நினைக்கிறேன்.

சேதுராமன் அப்போது எழுதிய அறிமுகத்தை மீள்பதித்திருக்கிறேன். ஓவர் டு சேதுராமன்!

நாட்டுடமை ஆன எழுத்துக்கள் பற்றிய ஒரிஜினல் பதிவை இங்கே காணலாம்.

திருநெல்வேலி மாவட்டத்திலே, அம்பாசமுத்திரத்துக்கு அருகிலுள்ள ஊர்க்காடு என்னும் சிற்றூரில் பிறந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் தந்தையார் அங்குள்ள குறுநிலமன்னரின் அவைக்களப் புலவராக விளங்கியிருந்த ‘அரசவரகவி’ அங்கப்ப பிள்ளையென்பவர். அவருடைய மக்கள் மூவரில், நடுவர்தான் கங்காதர நவநீத கிருஷ்ணன்.

அ.க.ந. பள்ளிக் கல்வியைக் கற்று முடித்தபின் புலமைக் கல்வியும் கற்றுச் சிறப்படைய விரும்பியதால் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்குச் சென்றார். கல்வி கற்கும்போதே செய்யுள் பாடவும், இயற்றவும் கட்டுரைகள் எழுதவும் வல்லவரானார். இவர் கல்வி பயிலும்போது நாவலர் நெடுஞ்செழியனும், பேராசிரியர் அன்பழகனும் அண்ணாமலையில் கல்வி பயின்று கொண்டிருந்தனர். அவர்களோடு நெருங்கிப் பழகி அவர்களுடைய நன்மதிப்பையும் பெற்றவர் நவநீதகிருஷ்ணன்.

புலவர் கல்வி பயின்று தேர்ச்சி பெற்ற பிறகு, திண்டுக்கல் புனித சூசையப்பர் மகளிர் உயர் நிலைப்பள்ளியில் ஈராண்டுகள் பணி புரிந்தார். சிவகாசி மகாராஜ பிள்ளை அவர்களின் ஒரே மகளான பிச்சம்மாளை மணம் புரிந்து கொண்டு இல்லற வாழ்க்கையைத் தொடங்கினார். திருமணமான பிறகு, பாளையங்கோட்டையில் குடியேறி நெல்லையில் பணி புரியலானார். மந்திரமூர்த்தி உயர் நிலைப் பள்ளியில் ஒன்பது ஆண்டுகளும், பின்னர் மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கலாசாலைப் பள்ளியில் பதினைந்து ஆண்டுகளும் ஆசிரியராகப் பணி புரிந்தார்.

தமிழ்ப் பணியோடு சிவப் பணியையும் இடையிடையே செய்து வந்ததால், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் இவருடைய புலமையைப் பயன்படுத்தத் தொடங்கினர். காலத்துக்கு வேண்டியவாறு நூல்களை எழுதிப் பொருளும் புகழும் பெற்றார். திருக்குறளைப் பலருக்கும் போதித்ததோடு “வள்ளுவர் சொல்லமுதம்” என்னும் நூலையும் (நான்கு பகுதிகள்) எழுதினார். திருவள்ளுவர் கழகத்திற்குப் பன்னிரண்டு ஆண்டுகள் தலைவராக இருந்தவர், நெல்லையப்பர் கோயிலிலும் ஈராண்டுகள் திருக்குறள் விரிவுரையாற்றினார்.

இவரது தமிழ்த் தொண்டையும், சிவத் தொண்டையும் பாராட்டிய மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனம் இவருக்கு “தமிழ்க் கொண்டல்” என்ற சிறப்புப் பெயரையும், தருமபுரம் ஆதீனம் “செஞ்சொற்புலவர்” என்ற பெயரையும் வழங்கினர்.

1967ம் வருடம் சித்திரை முதல் தேதியன்று, கைத்தொழில் பொருட்காட்சியில் செய்யும் தொழிலின் ஏற்றத்தைப் பற்றி நெசவாளர்களுக்கு ஒரு சொற்பொழிவு நிகழ்த்திய பின் இல்லத்தை அடைந்தவர் திடீரென்று காலமானார்.

இவர் இயற்றிய நூல்களின் பட்டியல் வருமாறு:

  1. வள்ளுவர் சொல்லமுதம் (நான்கு பகுதிகள்)
  2. அறநூல் தந்த அறிவாளர்
  3. தமிழ் காத்த தலைவர்கள்
  4. காவியம் செய்த மூவர்
  5. இலக்கியத் தூதர்கள்
  6. கோப்பெருந்தேவியர்
  7. இலக்கிய அமைச்சர்கள்
  8. தமிழ் வளர்த்த நகரங்கள்
  9. முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்
  10. வள்ளலார் யார்?
  11. பாரதியார் குயில்பாட்டு
  12. முதல் குடியரசுத் தலைவர்
  13. தமிழ் வளர்ந்த கதை
  14. ஔவையார் கதை (வில்லுப் பாட்டு)
  15. கண்ணகி கதை (வில்லுப் பாட்டு))
  16. திருவள்ளுவர் கதை (வில்லுப் பாட்டு)
  17. சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை
  18. அடுக்குமொழி ஆவுடையப்பர் வரலாறு

(தகவல் நன்றி — தமிழ்ப் புலவர் வரிசை பத்தாம் பகுதி — ஆசிரியர் சு.அ. இராமசாமிப் புலவர் — பதிப்பாளர் திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்- சென்னை. 1973)

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள், சேதுராமன் பக்கம், நாட்டுடமை பக்கம்