தெலுகு உரைநடை இலக்கியம்

இந்தப் பதிவை எழுதியவர் கௌரி கிருபானந்தன். கௌரி தெலுகு தமிழ் இரண்டும் நன்றாகத் தெரிந்தவர். தெலுகிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து தெலுகுக்கும் நிறைய மொழிபெயர்த்திருக்கிறார். தெலுகு நவீன உரைநடை இலக்கியம் பற்றி எனக்கு அதிகம் தெரியவில்லை, தமிழர்களுக்காக ஒரு சின்ன கட்டுரை எழுதுங்களேன் என்று கேட்டிருந்தேன். அவரும் அனுப்பி இருக்கிறார். மிக்க நன்றி, கௌரி!

இங்கு குறிப்பிடப்பட்ட புத்தகங்களில் நான் படித்தது கன்யாசுல்கமும் சதுவு என்ற நாவலும்தான். இரண்டிலுமே முன்னோடி படைப்புகளுக்கு உடைய பலங்கள் பலவீனங்கள் இரண்டும் தெரியும். உண்மையைச் சொல்லப் போனால் அண்டை மாநிலத்து இலக்கியம் பற்றி நமக்கு ஒன்றுமே தெரியவில்லை என்பது கொஞ்சம் வருத்தமான விஷயம்தான். அது என்னவோ மீண்டும் மீண்டும் கன்னட, வங்காள, மலையாளப் படைப்புகள்தான் வெளியே தெரிகின்றன!

தெலுகில் முதன்முதலில் எழுதப்பட்ட நாவல் “ராஜசேகர சரிதம்”, 1878 (கந்துகூரி வீரேச லிங்கம்.) இவர் ஒரு சீர்திருத்தவாதி. விதவை மறுமணம் ஒரு இயக்க அளவில் செயல்படுத்தியவர்.

குரஜாட அப்பாராவ் எழுதிய ‘தித்துபாடு’ (didhubaatu) 1910ல் வெளிவந்த சிறுகதையை தெலுகில் முதல் சிறுகதையாக ஆய்வாளர்கள் கருதி வந்தனர். அதற்கு முன்பே, பண்டாரு அச்சமாம்பா என்கிற பெண்மணி எழுதிய ‘தன த்ரயோதசி’ கதை 1902ல் வெளிவந்துள்ளதாக சமீபத்தில் தெரிய வந்துள்ளது.

1900-க்கு முன்பே எழுதப்பட்ட குரஜாட அப்பாராவின் ‘கன்யா சுல்கம்’ என்கிற நாடகம் ஒரு புரட்சியாகக் கருதப்படுகிறது. பணத்திற்கு ஆசைப்பட்டு பெண் குழந்தைகளை கிழவர்களுக்கு மணம் செய்து கொடுப்பது அக்காலத்தில் நிலவி வந்த ஒரு நடைமுறை. அதனை பெருமளவில் தாக்கி எழுதப்பட்ட இப்படைப்பு பலமுறை நாடகமாக மேடை ஏற்றப்பட்டுள்ளது. திரைப்படமாகவும் வெளிவந்தது. இதன் ஆங்கில மொழியாக்கம் ‘GIRLS FOR SALE’.

chalamஆரம்ப காலத்தில் பிரம்ம சமாஜ கலாச்சாரத்தின் பாதிப்பும், வங்காள இலக்கியத்தின் பாதிப்பும் தெலுகு இலக்கியத்தின் மீது பெரும் அளவில் இருந்திருக்கிறது. சலம் (Gudipaati Venkata Chalam) என்பவர் ஆண் பெண் உறவில் பெண்களுக்கும் சுதந்திரமான சிந்தனை இருக்க வேண்டும் என்றும், காதலும், மோகமும் ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பொறுத்து இருக்கும் என்ற கருத்தை வெளியிடும் விதமாக பல படைப்புகளை உருவாக்கினார். மைதானம், சசிரேகா, தெய்வம் இச்சின பார்யா, அமீனா இவருடைய படைப்புகளில் சில. அந்தக் காலத்தில் பெண்கள் இவற்றைப் படிப்பது தண்டனைக்கு உரிய விஷயமாக கருதப்பட்டது. இறுதி நாட்களில் ரமணரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு திருவண்ணாமலையில் ரமண ஆசிரமத்தில் தங்கி இருந்தார்.

விஸ்வநாத சத்யநாராயணவேயி படகலு” என்ற பெருங்காப்பியத்தை (1934) படைத்தார். அவர் சொல்லச் சொல்ல அவருடைய தம்பி 29 நாட்களில் 999 பக்கங்கள் எழுதினார். ஆந்திரா பல்கலைக்கழகத்தால் அறிவிக்கப்பட்ட போட்டியில் பரிசு பெற்று இருக்கிறது. “சகஸ்ர பண்” என்ற தலைப்பில் ஹிந்தியில் இதனை மொழி பெயர்த்தவர் முன்னாள் பிரதமர் திரு. பி.வி. நரசிம்ஹராவ். விஸ்வநாத சத்யநாராயண ஞானபீடம், மற்றும் சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். இவருடைய நடை தற்கால வாசகர்களுக்கு புரிவது கொஞ்சம் சிரமம்.

ரங்கநாயகம்மா என்பவர் பெண்களுக்கு நிகழும் அநீதியை எதிர்த்து, அவர்கள் விழிப்படைய வேண்டிய கட்டாயத்தை, வாழ்க்கையில் முன்னேற வேண்டிய அவசியத்தை வெளிப்படுத்தும் விதத்தில் பல படைப்புகளை உருவாக்கி உள்ளார். அவற்றுள் சில கிருஷ்ணவேணி, பேகமேடலு, பலிபீடம், ஸ்வீட் ஹோம், ஜானகி விமுக்தி. எழுபதுக்கு மேற்பட்ட வயதில் இவருடைய சமீபத்திய படைப்பு “கள்ளு தெரிசின சீதா”.

சிருஷ்டியில் ஆணும் பெண்ணும் சமம் என்றும், திருமண வாழ்க்கையில் அர்த்தநாரீஸ்வர தத்துவத்தை கடைபிடித்தால் எல்லோரும் சந்தோஷமாக வாழ முடியும் என்ற கொள்கையை பின்பற்றி திருமதி யத்தனபூடி சுலோசனா ராணி அறுபதுக்கும் மேற்பட்ட நாவல்களை படைத்துள்ளார். இவருடைய அத்தனை படைப்புக்களுமே வெற்றி பெற்றதுடன் பல நாவல்கள் திரைப்படமாக வந்துள்ளன. இவருடைய முதல் நாவல் “செக்ரட்ரி” 1965 ல் வெளிவந்தது. இவருடைய படைப்புகள் முள்பாதை, செக்ரட்ரி, தொடுவானம், சங்கமம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சம்யுக்தா, மௌனராகம், சிநேகிதியே, விடியல், அன்னபூர்ணா என தமிழில் வெளிவந்துள்ளன. அந்தக் காலத்தில் பெண்களை அதிகம் படிக்க வைக்க மாட்டார்கள். பள்ளிப் படிப்புடன் நிறுத்தி விடுவார்கள். பத்திரிகைகள் மற்றும் நாவல்களை படிப்பதுதான் அவர்களுடைய பொழுதுபோக்கு. அது போன்ற நிலையில் அவர்கள் கனவுலகில் சஞ்சரிக்கும் விதமாக, இனிமையான எதிர்பார்ப்புகள் நிறைந்தவையாக யத்தனபூடியின் நாவல்கள் அமைந்து இருந்தன. இவருடைய கதாநாயகன், கதாநாயகி மற்ற கதாபாத்திரங்களும் நமக்கு மத்தியில் உலா வருவது போல் தோன்றும்.

பெண்கள் கல்வி கற்று வேலைக்குப் போக ஆரம்பித்து சுய முன்னேற்றத்தைப் பற்றி யோசிக்கும் நிலை வந்தபோது எண்டமூரி வீரேந்திரநாத் இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்தார். பரபப்பான மர்மக் கதைகள், விஞ்ஞானக் கதைகள், மனோதத்துவ அடிப்படைக் கதைகள் என பல பரிமாணங்களில் அவருடைய படைப்புகள் வெளியாயின. மனிதர்களின் நடத்தையை விலாவாரியாக அலசி, அதற்கான காரணத்தையும் விவரிக்கும் இவரது சிறுகதைகள், நாவல்கள் வாசகர்கள் மத்தியில் மிகப் பிரபலம். தமிழில் இவருடைய மொழி பெயர்ப்புகளுக்கு தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்தர்முகம், தளபதி, துளசிதளம், மீண்டும் துளசி, நிகிதா, பந்தம் பவித்ரம், காஸநோவா 99, கண்சிமிட்டும் விண்மீன்கள், பர்ணசாலை, பனிமலை, சாகர சங்கமம், காதல் செக், வர்ணஜாலம், பிரியமானவள், நெருப்புக்கோழிகள் த்ரில்லர், பணம், மனம் மைனஸ் பணம், சொல்லாத சொல்லுக்கு விலை ஏது, லேடீஸ் ஹாஸ்டல் மற்றும் பல புத்தகங்கள் வெற்றியை நோக்கிப் பயணம், பெண்கள் தனித்தன்மை வளர்த்துக் கொள்வது எப்படி, உங்கள் குழந்தைள் உங்களை நேசிக்க வேண்டும் என்றால், வெற்றிக்கு ஐந்து படிகள் போன்ற சுய முன்னேற்ற புத்தகங்களும் வெளிவந்துள்ளன. தெலுகில் வந்த ‘விஜயானிக்கு ஐது மெட்லு’ பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

வோல்கா என்ற புனைப்பெயர் கொண்ட லலிதகுமாரியின் “தோடு” என்ற படைப்பு(1993) சிறுகதைதான் என்றாலும் சமுதாயத்தில், மக்கள் மனதில் பெரிய அளவில் மாற்றம் உருவாவதற்கு முதல் படியாக அமைந்தது. இதனுடைய தமிழாக்கம் “துணை” என்ற தலைப்பில் தமிழோவியம்(2004) என்ற இணைய இதழில் வெளிவந்தது. ஒரு பெண் கணவனை இழந்து தனித்து இருப்பதற்கும், ஒரு ஆண் மனைவியை இழந்து தனித்து இருப்பதும் மேலோட்டமாக பார்க்கும் போது வாழ்க்கை துணை இழப்பு இருவருக்கும் ஒன்றுதான் என்றாலும், யதார்த்தத்தில் பார்க்கும் போது இருவரின் இழப்பு மாறுப்பட்டவை என்று புரியும். இதுதான் “தோடு” கதையின் கரு. வோல்காவின் மற்றொரு படைப்பு “மானவி” யின் தமிழாக்கம் திண்ணை இணைய இதழில் தொடராக வெளி வந்து வாசகர்களின் கவனம் பெற்றது. தெலுகில் இவருடைய படைப்புகள் kanneeti kerataala vennela, sakaja, raajakeeya kathalu, prayogam. இவருடைய படைப்புகள் பெண்ணியம் மட்டுமே கொண்டவை அல்ல. பெண்களுடைய பிரச்னைகளை, இரண்டாம் நிலையில் அவர்கள் நடத்தப்படும் முறையை, பெண்கள் தம்முடைய எண்ணங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை தம எழுத்துக்கள் மூலமாய் வலியுறுத்தி வருகிறார். சீதையை மையமாக கொண்ட vimuktha என்ற இவருடைய சமீபத்திய கதைத் தொகுப்பு புதிய பார்வையில் எழுதப்பட்டுள்ளது ஊர்மிளா, அகல்யா, சூர்பனகை மற்றும் ரேணுகா இவர்களை சீதை சந்தித்து உரையாடுதல் ராமாயண நிகழ்ச்சிகளை வேறு கண்ணோட்டத்தில் சித்தரிக்கின்றது ராஜ்ஜியத்தின் தலைவன் என்ற முறையில் ராமனுக்கு இருந்த கட்டுப்பாடுகள் பற்றிய கதையும் இதில் அடக்கம். இதன் தமிழாக்கம் வெளிவர இருக்கிறது.

டி. காமேஸ்வரி பெண்களின் பிரச்னைகள் மையமாக கொண்ட சிறுகதை, நாவல்களில் இறுதியில் தீர்வு இருக்கும் விதமாக எடுத்துச் செல்வார். இவருடைய இரண்டு நாவல்கள் “துணையைத் தேடி”, “வாழ்க்கையை நழுவவிடாதே” என்ற தலைப்புகளில் தமிழ் வாசகர்களுக்கு விருந்தும், மருந்துமாக அமைந்தன.

கொடவடிகண்டி குடும்பராவ் என்பவரின் படைப்பு “சதுவு“ என்ற நாவல் ‘படிப்பு” என்ற தலைப்பில் தமிழில் வெளி வந்துள்ளது. இவருடைய படைப்புகள் நடுத்தர வர்க்கத்து மக்களின் வாழ்கையை பிரதிபலிப்பதாக இருக்கும். “சந்தமாமா” என்ற குழந்தைகளின் மாத பத்திரிகையில் 1952 முதல் இறுதி மூச்சு வரையில் (1980) வேலை பார்த்து இருந்து அதனுடைய முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகித்தார்.

புச்சிபாபு, பாலகங்காதர் திலக், அடவி பாபிராஜு, C. நாராயண ரெட்டி, ஸ்ரீ. ஸ்ரீ., ஸ்ரீபாத சுப்பிரமணிய சாஸ்திரி, மல்லாதி ராமகிருஷ்ண சாஸ்திரி என்று எழுத்தாளர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகும். கொவ்வலி லக்ஷ்மி நரசிம்ஹா ராவ் வாழ்ந்தது அறுபத்தி மூன்று வருடங்கள்தான் என்றாலும் ஆயிரம் நாவல்களை எழுதி சாதனை படைத்திருக்கிறார். இவருடைய படைப்புகள் ரயில் நிலையத்தில் அதிகமாக காணப்பட்டதால் Railway Literature என்றும் அழைக்கப் பட்டன. கொம்மூரி சாம்பசிவராவ் என்பவர் துப்பறியும் நாவல்களை எழுதியவர். அவர் படைத்த டிடெக்டிவ் யுகந்தர் மற்றும் அசிஸ்டென்ட் ராஜூ பாத்திரங்கள் சுஜாதாவின் கணேஷ் மற்றும் வசந்த் போல் வாசகர்களின் மனதில் நிலையாக இடம் பெற்று விட்டன. தற்காலத்தில் வட்டார, தலித், சிறுபான்மை என்ற பிரிவுகளில் சிறுகதைகள் பிரபலமாகி வருகின்றன.

தெலுகு இலக்கியத்தில் எனக்குத் தெரிந்த வரையில் படைப்புகளை, எழுத்தாளர்களை குறிப்பிட்டு உள்ளேன். இன்னும் எத்தனையோ எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். காலம் கடந்து நிற்கும் படைப்புகள் இருக்கின்றன. மாறி வரும் வாசகர்களின் ரசனையும், பதிப்பாளர்களின் வியாபார நோக்கும், பத்திரிகைகளின் வணிகப் போக்கும் எழுத்தாளர்களின் ஆர்வத்தை ஓரளவுக்கு மட்டுபடுத்தத்தான் செய்கின்றன.

மீண்டும் ஆர்வி: சமீபத்தில் பாலா ரிச்மன் தொகுத்த “தென்னிந்திய மொழிகளில் ராமாயணத்தின் மறு ஆக்கங்கள்” என்று ஒரு புத்தகத்தைப் பார்த்தேன். இங்கே குறிப்பிடப்பட்ட சலம், வோல்கா இருவரின் சிறுகதைகளும் அதில் இடம் பெற்றிருக்கின்றன. சலம் எழுதிய சிறுகதையில் சீதையை அக்னிப்ரவேசம் செய்யச் சொன்னதும், உனக்கு ராவணனே மேல் என்று ராவணனின் சடலத்தோடு உடன்கட்டை ஏறிவிடுகிறாள்! வோல்கா எழுதிய ஒரு சிறுகதையில் வால்மீகி ஆசிரமத்தில் தங்கி இருக்கும் சீதை சூர்ப்பனகையை மீண்டும் சந்திக்கிறாள், நட்பு கொள்கிறாள். சீதையை ராமன் படுத்திய பாடு பல எழுத்தாளர்களை யோசிக்க வைத்திருக்கிறது! (சாஹித்ய அகாடமி விருது பெற்ற நார்லா வெங்கடேஸ்வர ராவ் எழுதிய சீதா ஜோசியம் என்ற நாடகமும் நினைவு வருகிறது.)

1970-இல் விஸ்வநாத சத்யநாராயணாவும் (ராமாயண கல்பவ்ருக்ஷா) 1988-இல் சி. நாராயண ரெட்டியும் (விஸ்வாம்பரா) ஞானபீட விருது பெற்றிருக்கிறார்கள். சாஹித்ய அகாடமி விருது பெற்ற தெலுகு எழுத்தாளர்களின் பட்டியல் இங்கே.

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: கௌரி பதிவுகள், இந்திய இலக்கியம்

தொடர்புடைய பதிவுகள்: தெலுகு புத்தக சிபாரிசுகள்

தெலுங்கு புத்தகங்கள்

கொல்லப்புடி மாருதி ராவ் – தெலுங்கு எழுத்தாளர், நடிகர் – படிக்க வேண்டிய தெலுங்கு புத்தகங்கள் என்று ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார். நான் செகந்தராபாதில் வாழ்ந்த காலங்களில் இப்படி ஒரு லிஸ்ட் கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பாஸ்டன் பாலாவின் தளத்தில் லிஸ்ட் இருக்கிறது.

சாதாரணமாக லிஸ்டுக்கு குறிப்புகள் எழுதுவேன். இந்த முறை படித்திருப்பது ரொம்ப கொஞ்சம், அதனால் குறிப்பு எல்லாம் இல்லை. படித்திருக்கும் இரண்டு புத்தகங்கள் பற்றி கீழே:

குருஜாதா அப்பாராவ் எழுதிய கன்யா சுல்கம் – செகந்தராபாதில் வாழ்ந்தபோது கேள்விப்பட்ட ஒரே தெலுங்கு புத்தகம் இதுதான் கன்யாசுல்கம் ஒரு க்ளாசிக். இப்போது கொஞ்சம் வயதாகிவிட்டது. கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம் படிக்கிற மாதிரி ஒரு ஃபீலிங் வரும்.

கொடவடிகண்டி குடும்பராவ் எழுதிய சதுவு தமிழ் மொழிபெயர்ப்பு ஃப்ரீமான்ட் நூலகத்தில் கிடைக்கும். தமிழில் இதன் பெயர் படிப்பு. சாஹித்ய அகாடமி வெளியீடு. 1910-35 கால கட்டத்தில் ஒரு மத்திய தர குடும்பம், ஸ்கூல் படிப்பு, சுதந்திர போராட்ட பின்புலத்தை வைத்து எழுதப்பட்டது. பின்புலம் நன்றாக வந்திருக்கும், ஆனால் கதையில் என்ன பாயின்ட் என்று எனக்கு தெளிவாகவில்லை.

அற்பஜீவி புத்தகத்தைப் பற்றி ஜெயமோகனும்கண்ணீரைப் பின்தொடர்தல்” புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மற்ற இந்திய மொழி எழுத்தாளர்களை பற்றி நாம் அவ்வளவாக தெரிந்து கொள்ளாமல் இருப்பது, அப்படியே படித்தாலும் ஆங்கில மொழிபெயர்ப்புகள் மூலமே தெரிந்து கொள்வது நம் துரதிருஷ்டம். இது போன்ற லிஸ்டுகள் கொஞ்சம் உதவுகின்றன, பாஸ்டன் பாலாவுக்கு அதற்காக நன்றி!

கொல்லப்புடி குறிப்பிடும் மற்ற புத்தகங்கள்:

  1. விஸ்வநாத சத்யநாராயணாவின் ஏகவீரா
  2. புச்சிபாபுவின் சிவரகு மிகிலேதி
  3. ரா. விஸ்வநாத சாஸ்திரியின் அல்பஜீவி
  4. ஸ்ரீ ஸ்ரீயின் மஹா ப்ரஸ்தானம்
  5. ஸ்ரீபாதா சுப்பிரமணிய சாஸ்திரியின் அனுபவாலு-ஞாபகாலு
  6. கல்லகூரி நாராயணராவின் வரவிக்ரயம்
  7. கொல்லப்புடி மாருதிராவின் கள்ளு, சாயங்காலாமாயிந்தி
  8. வத்தேரா சண்டிதாசின் ஹிமஜ்வாலா
  9. த்ரிபுரனேனி கோபிசந்தின் கதைகள்
  10. தேவுலபள்ளி கிருஷ்ண சாஸ்திரியின் கிருஷ்ண பக்ஷம்

(மீள்பதிவு)