Skip to content

அரு. ராமநாதனின் “வீரபாண்டியன் மனைவி”

by மேல் ஓகஸ்ட் 24, 2011

வீரபாண்டியன் மனைவி என் படித்தே ஆக வேண்டிய நாவல்கள் லிஸ்டில் வராது. ஆனால் நான் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்த லிஸ்டில் இருந்தது. அதனால்தான் மாற்றங்கள் நடக்கும் என்று சொன்ன பிறகும் இதைப் பற்றி எழுதுகிறேன்.

தமிழில் சரித்திர நாவல்கள் என்று ஆரம்பித்த ஒரு சீரிஸ் இந்த தளத்தின் நல்ல பதிவுகள் பலவற்றைக் கொண்டது. நான் படிக்க வேண்டிய சரித்திர நாவல்கள் என்று சில பல நாவல்களை குறிப்பிட்டிருந்தாலும் உண்மையிலேயே படிக்க விரும்பியவை நான்குதான் – வீரபாண்டியன் மனைவி, டணாய்க்கன் கோட்டை, உடையார் மற்றும் காவல் கோட்டம். இந்த வருஷம் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்த புனைவுகளில் ஒன்று.

வீரபாண்டியன் மனைவி புத்தகத்தில் முதல் ஐம்பது பக்கம் தாண்டியதும் இது அரண்மனைச் சதி genre லெவலைத் தாண்டப் போவதில்லை என்று புரிந்தது. இன்னும் எத்தனை பக்கம் படிக்க வேண்டும் என்று சோர்வு வந்தது. ஆனாலும் விடாமல் படித்தேன். ஓரளவு ஜவ்வுதான், ஆனால் அகிலன், ஜெகசிற்பியன் மாதிரி பேப்பருக்குப் பிடித்த கேடு என்று சொல்லமாட்டேன். கல்கி, சாண்டில்யன் ரேஞ்சில் இருக்கிறது என்று நிச்சயமாகச் சொல்லலாம். தமிழின் நல்ல சரித்திர நாவல்களில் ஒன்று. ஆனால், in absolute terms, இது சில நல்ல கூறுகள் கொண்ட சுமாரான நாவல் மட்டுமே.

புத்தகத்தில் நினைவிருக்கப் போவது ஜனநாதக் கச்சிராயன் பாத்திரப் படைப்பு மட்டுமே. எந்த விதமான போலித்தனமும் இல்லாத சிந்தனையாளனாக, முடியாட்சியின் குறைகளை உணர்ந்து அதற்கு மாற்று தேடும் ஒருவனாக, உருவாக்கி இருக்கிறார். நிச்சயமாக எழுதப்பட்ட காலத்தில் பெரிய அளவு ஹிட் ஆகி இருக்கும். இன்று வாய்ச்சவடால் அதிகமாக இருப்பதாகத் தோன்றுகிறது, இருந்தாலும் ரசிக்கக் கூடிய பாத்திரப் படைப்புதான்.

ஜனநாதனைக் கழித்தால் புத்தகத்தில் வேறு ஒன்றுமே இல்லை. தட்டையான பாத்திரப் படைப்பு, போரடிக்கும் தெய்வீகக் காதல், எதிர்பார்க்கக் கூடிய திருப்பங்கள் என்றுதான் போகிறது. அதுவும் வீரபாண்டியனின் மனைவியை சிறை மீட்க நடக்கும் முயற்சிகள், அவற்றின் தோல்வி எல்லாம் ஒரு ஆயிரம் பக்கத்துக்கு மேல் இழு இழு என்று இழுக்கிறார். தொடர்கதையாகப் படித்தால் தெரிந்திருக்காது, புத்தகமாகப் படிக்கும்போது எப்படா கடைசிப் பக்கம் வரும் என்று திருப்பிப் திருப்பிப் பார்த்தேன்.

மூன்றாம் குலோத்துங்க சோழன் வீரபாண்டியனை முறியடித்து விக்கிரம பாண்டியனை பாண்டிய அரியணையில் அமர்த்தினான் என்பது வரலாறு (என்று நினைக்கிறேன்). அந்தப் பின்புலத்தில் சோழ அதிகாரிகள் – ஒற்றர் படைத்தலைவன் ஜனநாதன், மதுரையைப் பிடித்ததில் பெரும் பங்கேற்று அதிகாரியாக உயர்ந்த வீரசேகரன் -, அவர்களது அதிகாரச் சண்டைகள், வீரசேகரன்-பாண்டிய “சதிகாரி” ஊர்மிளா காதல், வீரபாண்டியனின் மனைவியைப் பிடித்து சிறையில் வைத்தல், அவளை மீட்க வீரபாண்டியனின் முயற்சிகள், ஜனநாதன் அவற்றை தோற்கடித்தல், தொடர்கதைகளுக்கு வேண்டிய திடுக்கிடும் திருப்பங்கள், அசாதாரண நிகழ்ச்சிகள் என்று கதை போகிறது.

எவ்வளவு வரலாறு, எவ்வளவு கற்பனை என்று தெரியவில்லை. குறிப்பாக ஜனநாதன் என்று ஒரு அதிகாரி இருந்தானா என்று சந்தேகமாக இருக்கிறது. ஆதாரங்கள் பற்றி அரு. ராமநாதன் எதுவும் குறிப்பிடவில்லை.

1940களில் எழுதப்பட்ட கதை. வருஷம் சரியாகத் தெரியவில்லை. அவரே நடத்திய காதல் இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.

ஜெயமோகன் இதை நல்ல வரலாற்று romances லிஸ்டில் சேர்க்கிறார். எஸ்.ரா. இதை நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாகக் கருதுகிறார். எனக்கு இதை சிறந்த தமிழ் சரித்திர நாவல்களில் ஒன்றாகச் சேர்க்கலாம், ஆனால் சுமாரான நாவலே.

அரு. ராமநாதன் ராஜராஜ சோழன் என்ற நாடகத்தையும் எழுதி இருக்கிறார். இதை டி.கே.எஸ். சகோதரர்கள் அரங்கேற்றினர். பிற்காலத்தில் சிவாஜி கணேசன் நடித்து ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் நாடகமாகவும் வந்தது. இவரைப் பற்றி மேலும் தகவல்களுக்கு தோழி அருணாவின் அப்பா கிருஷ்ணன் வெங்கடாசலம் எழுதிய கட்டுரையைப் பார்க்கலாம்.

புத்தகத்தை மீனாட்சி கல்லூரி எதிரில் உள்ள பிரேமா பிரசுரத்தில் வாங்கினேன். இது அரு. ராமநாதன் ஏற்படுத்திய நிறுவனம். இன்றும் அவரது மகன் ரவிதான் நடத்தி வருகிறார். பார்த்தால் அசப்பில் அப்பா மாதிரிதான் இருக்கிறார். விலை 225 ரூபாய்.

அரு. ராமனாதனின் அசோகன் காதலி என்ற சிறு நாவலையும் படித்தேன். அதே பாணி. அசோகனை புத்த மதத்தின் பக்கம் திருப்பியது அவன் காதலி காரூவகி என்று எழுதி இருக்கிறார். நான் ரசித்தது சாணக்யனின் பேச்சுக்களை மட்டுமே.

நாயனம் சௌந்தரவடிவு என்ற இன்னொரு நாவலும் கிடைத்தது. நாதஸ்வரம் வாசிக்கும் நாயகன், நாயகி அவர்களுக்குள் காதல், போட்டி என்று போகிறது. பாய்ஸ் கம்பெனி நாடகம் பார்ப்பது மாதிரி இருக்கிறது.

Advertisements
14 பின்னூட்டங்கள்
 1. பிருந்தாபன் permalink

  இதைப் படிக்கும் போது நான் இங்கு (https://siliconshelf.wordpress.com/2011/05/25/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/#comment-1449) சொன்னது ஞாபகம் வருகிறது 🙂 நான் இந்த நாவலை எனது பத்தொன்பதோ இருபதோ வயதில் படித்தேன். அதனாலோ என்னவோ அந்தக் காதல் மிகவும் ஈர்த்தது. 🙂 ஜன நாதான் போல் ஒரு பாத்திரப் படைப்பை உருவாக்கி அக்கால அரசியலைச் சாடுவது உங்களுக்குப் புதுமையாகத் தெரியவில்லையா? இந்தக் கதை எனக்கு “most intelligent ” என்று தோன்றியதற்குக் காரணங்கள்:
  1) என்னதான் மீண்டும் மீண்டும் சிறை மீட்புத் திட்டம் என்று ஜவ்வாக இருந்தாலும் சாண்டில்யன் போல் இல்லாமல் அந்த சிறை மீட்புக்காக உண்மையாக சிரமம் எடுத்து யோசித்து செய்வார்கள். அத்தோடு அதை முறியடிப்பவனும் புத்திசாலி (சாண்டில்யனுக்கு கதாநாயகன் மட்டும் தான் அறிவாளி. மீதி எல்லோரும் முட்டாள்கள்).
  2) பாகங்கள் ராமாயண காண்டங்களை ஒத்து ஆனால் reverse ஆக வரும். ரசித்தேன். முதல் பாகத்தில் படலங்கள் கூட அப்படியே வரும் 🙂
  3) ஜன நாதன் போன்ற ஒருவன் அந்நாளில் இருந்துதான் இருப்பான். அந்தப் படைப்பு மூலம் சரித்த நாவல் என்றாலே “மன்னன் என்பவன் அழகன், ஆற்றலுள்ளவன். அவன் காலில் விழ மக்கள் காத்திருப்பார்கள் என்ற ரீதியில் எழுதிய கல்கி, சாண்டில்யன் போன்றோரிடமிருந்து விலகி நின்றது பிடித்திருந்தது.
  4) கடைசியாக அந்தக் காதல் 🙂 அந்த வயதில் நாம் வீரசேகரனாக இருந்திருந்தால் இப்படித்தான் நடந்திருப்பேன் என்று தோன்றியது 🙂

  அரு. ராமநாதன் வெற்றிவேல் வீரத்தேவன் (சரித்திர கால சமூக நாவல் – மணி பல்லவம் போல் “சரித்திர காலத்தில் நடக்கும். ஆனால் மன்னர் பற்றி இல்லை” வகை) என்று ஒரு நாவலும் எழுதியிருக்கிறார். நான் பிரேமா பிரசுரத்தில் தான் வாங்கினேன். உங்களுக்குக் கிடைக்கவில்லையா?

  Like

  • பிருந்தாபன், // ஜனநாதன் போல் ஒரு பாத்திரப் படைப்பை உருவாக்கி அக்கால அரசியலைச் சாடுவது உங்களுக்குப் புதுமையாகத் தெரியவில்லையா? // அது ஒன்றுதான் எனக்கு கதையில் நினைவிருக்கப் போகும் அம்சம். அதை பதிவிலும் சொல்லி இருக்கிறேன், இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்க வேண்டுமோ என்னவோ.

   அப்புறம் இராமாயண காண்டங்கள் மாறி வருவது எனக்கு வலிந்து புகுத்தப்பட்டதாகத்தான் தெரிந்தது. பாலகாண்டம் என்றால் அதில் ஒரு பாலன் இருக்கிறான்; யுத்த காண்டம் என்றால் போர் நடக்கிறது என்கிற மாதிரி இருந்தது.

   Like

  • Ragav permalink

   “(சாண்டில்யனுக்கு கதாநாயகன் மட்டும் தான் அறிவாளி. மீதி எல்லோரும் முட்டாள்கள்).”
   idhu endha alavukku unmai? Yavana Raaniyil Diberius, Rajathilagathil Vikramadhitha Sathyasrayan and Sri Ramapunya Vallabar ivai antagonist pathirangal inaiyaana arivukoormaiyai velipadhuthum udharanangal.

   Melum, Kadal Pura Ameer, Agoodha, Kalinga Raani Brahmanandha Adical ivai thunai pathirangal sirappikka patta udharanangal.

   Oruvarai paratta innoruvarai thaazhtha vendiya thevai enna?

   Appadi paarthal, pakkam pakkamaaga VPM-il Janajaadhan vasanam than irukkiradhu [Namma Shankar Pada Herokkal Madhiri LOL]!

   Like

 2. ஜனநாதன் = ராமநாதன்

  நல்ல விறுவிறுப்பான நாவல்தான். என்ன ஒரு 40 வருடம் கழித்துப் படிப்பதால் அங்கங்கே ஜவ்வாகத் தோன்றுகிறதோ என்னவோ?

  Like

  • ரமணன், //40 வருடம் கழித்துப் படிப்பதால் அங்கங்கே ஜவ்வாகத் தோன்றுகிறதோ // தொடர்கதையாகப் படித்தால் ஜவ்வாகத் தெரிந்திருக்காது என்று நினைக்கிறேன்.
   மாற்றங்கள் பற்றிய வாழ்த்துகளுக்கும் நன்றி!

   Like

 3. periyar permalink

  Jananathan character and dialoigue is very nice in any time so the novel author writing talent exhibit revolution is good.

  Like

  • பெரியார், உண்மை ஜனநாதன் பாத்திரப் படைப்பு நினைவில் தங்கும்.

   Like

 4. அரு. ராமநாதனின் வீரபாண்டியன் மனைவி – மின் புத்தகம் கிடைகிறதா? இனைய தளத்தில் உள்ளதா?

  Like

  • மோகன், எனக்குத் தெரிந்து வீரபாண்டியன் மனைவி மின்புத்தகமாகக் கிடைப்பதில்லை. பிரேமா பிரசுரத்தார் அப்படி வெளியிடமாட்டார்கள் என்றே யூகிக்கிறேன். உங்களுக்குக் கிடைத்தால் எனக்கும் சொல்லுங்கள்.

   Like

 5. Iswarya permalink

  கருத்தை கேலி கெண்டும் பதிவிடலாம் என ஜனநாதனிடம் தான் கற்ற வேண்டும். நல்ல திட்டம், நல்ல நுணுக்கம், நேர்மையான வழி, அனைத்துமே நாவலினை இரசிக்க வைக்கின்றது….

  Like

  • ஐஸ்வர்யா, வீரபாண்டியன் மனைவி நாவலுக்கு இன்னொரு ரசிகையப் பார்ப்பது மகிழ்ச்சி!

   Like

 6. நாவலின் சிறப்புக்களாக நான் கருதுவது, வழக்கமான அமானுஷ்ய நாயகர்கள் இல்லை, மன்னர்கள் புகழ் இல்லை, முடிந்தவரை யதார்த்தமான நிகழ்ச்சிகளை வைத்திருக்கின்றார். அதற்கு நேர் எதிரிடையாக காதல் காட்சிகள் இருக்கின்றன. பலவீனங்கள் அதீத உணர்ச்சி கொண்ட நாடகத்தனமான பாத்திரங்கள். குலோத்துங்க சோழனை ராவண சன்னியாசியாகவே காட்டுகின்றார். வீரபாண்டியன் கடைசி வரை மனைவியை மீட்க போராடிக் கொண்டே இருக்கும் ஒரு மன்னன். கண்டதும் காதலில் விழும் வீரசேகரன். வீரமிருந்தும் இளகிய மனம் படைத்த ஒருவன். அவன் காதலால் உணர்ச்சி வசப்பட்டு செய்யும் செயல்களை கண்டால், இப்படி கிறுக்குகள் உண்டோ என்றுதான் தோன்றுகின்றது.

  முக்கிய பாத்திரமாக வரும் ஜனநாத கச்சிராயனின் பாத்திரப்படைப்பே வித்தியாசமானதாக வருகின்றது. சோழ அதிகாரியாக இருந்தும் சோழ நாட்டை அழிப்பதை ஒரு கடமையாக செய்யும் ஒரு பாத்திரம். ஒரு சிறந்த அறிவாளியாக, மனிதர்களின் மனதுடன் விளையாடி காரியம் சாதித்தும் கொள்ளும் ஒருவனாக வருகின்றான். இவனையும் முழுக்க முழுக்க நல்லவனாகவும் காட்டவில்லை. சர்வசாதரணமாக உயிர்களை கிள்ளி எறிந்துவிட்டும் போகும் ஒரு பாத்திரமாகவே வருகின்றான். வீரபாண்டியன் மகன் தலையை வெட்ட வைப்பதிலிருந்து, அவன் செய்யும் வேலைகளை பார்த்தால் நாயகன் டயலாக்தான் நினைவில் வருகின்றது. குலோத்துங்க சோழன் பெயர் மட்டும் வருகின்றது ஆளை காட்டுவதில்லை.

  முதலில் பிரமாதமாக ஆரம்பிக்கும் கதை போகப்போக தொய்வடைகின்றது. சில இடங்களில் பக்கம் பக்கமாக காதல் வசனம் வேறு பேசி கொல்கின்றனர். மிகப் பெரிய சைஸ் புத்தகம். கதை வளவளவென்று போவதுடன், எவ்வித சுவாரஸ்ய முடிச்சுகளின்றி போகின்றது. வீரபாண்டியன் சர்வசாதரணமாக மதுரைக்குள் வலம்வருவதெல்லாம் காதில் பூ.

  இறுதியில் வரும் திடீர் திருப்பங்கள் எல்லாம் மேடை நாடகங்களுக்கே உரித்தானவை.

  Like

  • ரெங்கா, மிகச் சரி.

   Like

  • ரெங்கா,

   வீ. மனைவியின் பலவீனங்களையும் பலங்களையும் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். மெலோட்ராமாவை அரு. ராமநாதனால் தாண்ட முடியாததுதான் குறையாக நிற்கிறது.

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: