அசோகமித்ரன் எழுதிய “இன்று”

asokamithranசில சமயம் அசோகமித்ரனின் படைப்புகள் எனக்குப் புரிவதில்லை. ஆனால் இப்போதோ இந்தப் புத்தகம் – இன்று – தொகுக்கப்பட்டிருக்கும் விதமே எனக்குப் புரியவில்லை. சில சிறுகதைகள்; ஒரு சிறுகதை தலைப்பில் சம்பந்தம் இல்லாத மூன்று கதைகள். இதை யார் தொகுத்தது, ஏன் இப்படித் தொகுத்திருக்கிறார் என்றுதான் மனதில் எண்ணங்கள் ஓடுகின்றன.

இந்தத் தொகுப்பில் பிரமாதமாக வெளிப்படுவது அசோகமித்ரனின் நகைச்சுவை உணர்ச்சி. உதாரணத்துக்கு ஒன்று – வரதட்சணைக்கு எதிராக கையெழுத்து வேட்டை நடத்தும் குழு. ஒரு கலந்துரையாடலில் ஒருவர் வரதட்சணை அதிகமாக வாங்குவது படிக்காதவர்கள் என்று ஆட்சேபிக்க, இன்னொருவர் சொல்கிறார் – “அது ஒன்றும் பெரிய விஷயமில்லை – கைநாட்டு வாங்கிக் கொள்ளலாம்.” நான் வாய்விட்டுச் சிரித்துவிட்டேன்.

இன்னொரு இடத்தையும் சொல்லியே ஆக வேண்டும். எழுத்தாளர் ஹரிதாசனை பேட்டி காணும் நிருபர் அவர் எழுதிய ஒரு கதையை நினைவு கூர்கிறார். “பிரமாதமான கதை” என்கிறார். ஹரிதாசன்: “இந்தக் க்தையை நான் எழுதல”. நிருபர்: “நீங்க எழுதலயா? ரொம்ப நல்ல கதை.” “என்ன செய்யறது, நான் எழுதல!”

எமர்ஜென்சி பிரகடனம் செய்யப்பட்டத்தைப் பற்றி சின்ன சின்ன பத்திரிகைச் செய்திகளாக வருகிறது. அதில் காமராஜ் மறைவைப் பற்றி ஒரு வரி – “தி.மு.க.வை ஆரம்பித்ததே காமராஜர்தானோ என்று சந்தேகப்படும்படியாக “உடன்பிறப்புகளுக்கு” முரசொலியில் கருணாநிதியின் கடிதங்கள்”.

எனக்கு இவற்றில் மிகவும் பிடித்த சிறுகதை புனர்ஜென்மம். பேரிளம்பெண் சீதா; ஏற்கனவே மணமான ஒருவனோடு தொடர்பு. அவன் இவளையும் கல்யாணம் செய்து கொள்ள மறுக்கிறான். சீதா தற்கொலை. இதை எழுதும்போது என் போதாமை எவ்வளவு பெரியது என்று தெரிகிறது. கதைச் சுருக்கத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய? படித்துப் பாருங்கள் என்றுதான் சொல்ல முடியும். இந்தச் சிறுகதை இணையத்தில் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. ராம், சீக்கிரம் அழியாச்சுடர்களில் பதியுங்கள்!

முன்னர் குறிப்பிட்ட எழுத்தாளர் பேட்டி ஒரு சிறுகதையில் வரும் மூன்று சரடுகளில் ஒன்று. இன்னொரு சரட்டில் குழந்தைகளைத் தவறவிடும் அப்பா நினைத்துக் கொள்கிறார் – “கடவுள் காப்பாற்றுவார்”. சரடு அடுத்த வரியில் முடிகிறது – “கடவுள் காப்பாற்றினார், ஒரு குழந்தையின் காலைத் தவிர.” அது எப்படி அய்யா ஒரு வரியில் இவ்வளவு குரூரம்? கதை வேறு தளத்துக்கே போய்விடுகிறது!

தொகுப்பில் முதல் கதையான டால்ஸ்டாய் அவரது புகழ் பெற்ற “காந்தி” சிறுகதையைப் போல அமைக்கப்பட்டிருக்கிறது. டால்ஸ்டாயைப் பற்றி இரு கட்டுரைகள் – அவற்றைப் படித்துவிட்டு கடைசியில் ஒருவன் சிரிக்கிறான். எனக்கு இன்னும் “காந்தி” சிறுகதையே புரியவில்லை, இது எங்கே?

அவரது அற்புதமான நகைச்சுவை உணர்ச்சிக்காக பரிந்துரைக்கிறேன்.


தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்ரன் பக்கம்