ஜெயமோகனின் திராவிட இயக்கம் பற்றிய பதிவுகள்

jeyamohanஜெயமோகன் “திராவிட இயக்கத்தை ஏன் நிராகரிக்கிறேன்” என்ற தலைப்பில் இரண்டு மிக தெளிவான பதிவுகளை எழுதி இருக்கிறார். அவர் எப்போதோ எழுதிவிட்டார், இருந்தாலும் நீளமான பதிவை படிக்க சோம்பேறித்தனப்பட்டு நான் அப்போது மேலோட்டமாக மட்டுமே பார்த்தேன். அவருடைய கருத்துகளை ஏற்கிறீர்களோ இல்லையோ, கட்டாயமாக படிக்க வேண்டும்.

ஜெயமோகன் சொல்வதை என் போன்ற சோம்பேறிகளுக்காக நான் இங்கே சுருக்கித் தருகிறேன்.

  1. திராவிட இயக்கம் அழிவு சக்தி இல்லை. அது ஒரு historical inevitability.
  2. திராவிட இயக்கம் எண்ணிக்கையில் குறைந்த உயர்ஜாதியினர் கையில் இருந்த அதிகாரத்தை எண்ணிக்கையில் அதிகமான உயர்/இடை ஜாதியினரிடம் மாற்றியது, அதிகாரத்தை பரவலாக்கியது. இது இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் நடந்தது/நடக்கிறது.
  3. இந்த இயக்கம் “முற்போக்கு” கருத்துகளை மக்களிடையே பரப்பியது. ஓரளவாவது அது பாமர மக்களின் இயக்கமாக இருந்தது.

அப்படி என்றால் இதை ஏன் நிராகரிக்க வேண்டும்?

  1. அதன் நோக்கம் அரசியல் அதிகாரமே. நல்ல இயக்கத்துக்கு அரசியல் அதிகாரம் is not an end in itself, but a means to an end.
  2. அது கருத்துகளை சுலபமாக கைவிட்டுவிட்டு கோஷத்தையே முன் வைக்கிறது. மூர்க்கமான நிலைப்பாடுகளை உருவாக்குகிறது. கவனத்தை கவரும் செயல்களே அதன் விருப்பம். கோஷம்தான் நிறைய பேரை அடையும். மூர்க்கமான நிலைப்பாடுதான் ஓட்டு வங்கிகளை உருவாக்கும்.
  3. அதற்கு நல்ல கலை, இலக்கியம் தேவை இல்லை, பரபரப்பு, entertainment-தான் முக்கியம். அதுதான் நிறைய பேரை அடையும், ஓட்டுகளை பெற்றுத் தரும்.
  4. அது காட்டும் எந்த லட்சியமும் உண்மையானது இல்லை. உடனடி பயன் முடிந்ததும் லட்சியங்களை எல்லாம் கைவிட்டு விடவேண்டியதுதான்.
  5. “சுலபமான” ஊடகங்களை மட்டுமே அது கையாளும் – சினிமா, மேடைப் பேச்சு, இப்போது டிவி. எழுத்து, படிப்பு, நல்ல தமிழ் ஆராய்ச்சி எல்லாம் அம்போதான். கலைக்களஞ்சியத்துக்கு ஈடான ஒரு முயற்சி கழக ஆட்சியில் நடைபெறவில்லை.
  6. திராவிட இயக்கம் தமிழுக்கு உருப்படியாக எதுவும் செய்யவில்லை. தமிழ் செம்மொழி என்கிறார்கள், அதனால் நிதி கிடைக்கிறது, ஆனால் நிதியை வைத்து என்ன நடக்கிறது? விழா வைத்து புகழ் மாலை போட்டுக் கொள்கிறார்கள், தமிழுக்கு ஒரு லாபமும் இல்லை. நல்ல ஆராய்ச்சி, தமிழ் படிக்க விரும்புவர்களுக்கு செம்பதிப்புகள், ஏதாவது வந்திருக்கிறதா?

கொசுறாக இதையும் திராவிட இயக்கத்தின் தொடக்க கால வரலாறையும் தருகிறார்.

  1. ஆங்கிலேயர் ஆட்சியின்போது வட்டார மொழிகளைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட ஆரம்பித்தது. தமிழில் இது மூன்று தளங்களில் ஏற்பட்டது – ஏட்டுச் சுவடிகளில் இருந்த தமிழ் நூல்களைப் பதிப்பித்தல், தமிழிசை, சமஸ்கிருத கலப்பற்ற தனித்தமிழ் இயக்கம். உ.வே.சா., சி.வை. தாமோதரம் பிள்ளை போன்றவர்கள் தமிழ் நூல்களை பதிப்பித்தனர். ஆபிரகாம் பண்டிதர், அண்ணாமலை அரசர், தண்டபாணி தேசிகர் போன்ற பலர் தமிழிசைக்கு பெரும் பங்காற்றினர். மறைமலை அடிகள், திரு.வி.க. போன்ற பலர் தனித்தமிழ் இயக்கத்தில் தீவிரமாக இருந்தனர்.
  2. இந்த “தமிழியக்க” முன்னோடிகள் பெரும்பாலும் சைவர்கள்; காங்கிரஸ் அனுதாபிகள்; ஜஸ்டிஸ் கட்சியை ஏற்கவில்லை. ஜஸ்டிஸ் கட்சியில் அந்நாளில் தெலுங்கரே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தினர்.
  3. ஜஸ்டிஸ் கட்சி பெரியாரின் தலைமையில் திராவிட கழகமாக பரிணமித்தபோதும் அது தமிழியக்கமாக மாறிவிடவில்லை. பெரியார் கலை, இலக்கியத்தில் அவ்வளவு ஆர்வம் இல்லாதவர். அவரது “தமிழ் காட்டுமிராண்டி பாஷை” கமென்ட் தெரிந்ததே.
  4. தமிழியக்கத்தில் இந்த காலத்தில் பிராமணர் அற்ற உயர்சாதியினர் ஆதிக்கம் செய்தனர். அவர்களில் பலருக்கு பிராமண எதிர்ப்புப் போக்கு இருந்தது. அதனால் திராவிட இயக்கத்திற்கும் இவர்களில் சிலருக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு உருவாகியது. ஆனால் பல முன்னோடிகளுக்கும் பெரியாருக்கும் ஒத்துவரவில்லை.
  5. தமிழியக்கத்துக்கும் திராவிட இயக்கியத்துக்கும் இருந்த முரண்பாடுகளை நீக்கிய பெருமை அண்ணாவுடையது. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று பல சமரசங்களை உருவாக்கினார். மெதுமெதுவாக திராவிட இயக்கம் தமிழியக்கத்தின் சாதனைகளை, சாதனையாளர்களை திராவிட இயக்க சாதனைகள், முன்னோடிகள் என்று உரிமை கொண்டாட ஆரம்பித்தது.

ஏறக்குறைய நானும் இப்படித்தான் நினைக்கிறேன். இதை படிப்பவர்கள்?

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம்

தொடர்புடைய பக்கங்கள்:
திராவிட இயக்கத்தை என் நிராகரிக்கிறேன் – ஜெயமோகனின் பதிவு: பகுதி 1, பகுதி 2