எனக்குப் பிடித்த சிறுவர் புத்தகங்களில் ஒன்று.
சாதாரண ஆள் மாறாட்டக் கதைதான். இங்கிலாந்தின் இளவரசனும் ஒரு ஏழைச் சிறுவனும் பார்க்க ஒரே மாதிரி இருக்கிறார்கள், இடம் மாறிவிடுகிறார்கள். போலி இளவரசனுக்கு ராஜாவாக பட்டம் சூட்டப்படும் தறுவாயில் உண்மை இளவரசன் வெளிப்படுகிறான், அவ்வளவுதான். அதை “திரைக்கதையாக” எழுதி இருக்கும் விதம்தான் இந்தப் புத்தகத்தை ஒரு ஜாலியான புத்தகமாக மாற்றுகிறது.
இளவரசன் எட்வர்டும் ஏழைச் சிறுவன் டாமும் தற்செயலாக சந்திக்கிறார்கள். எட்வர்ட் டாமை அரண்மனைக்குள்ளே அழைத்துச் செல்கிறான். விளையாட்டாக இருவரும் உடைகளை மாற்றிக் கொள்கிறார்கள். கொஞ்சம் வெளியே வரும் எட்வர்டை காவலர்கள் அரண்மனையை விட்டு துரத்திவிடுகிறார்கள். அரண்மனைக்கு வெளியே வரும் எட்வர்டை எல்லாரும் ஏழைச்சிறுவன் என்றே நினைக்கிறார்கள். உள்ளே இருக்கும் டாமை இளவரசன் என்று நினைக்கிறார்கள். டாம் தான் இளவரசன் இல்லை என்று சொல்வதை யாரும் நம்புவதில்லை. அவனுக்கு மனநிலை பிறழ்ந்துவிட்டதோ என்று வைத்தியம் பார்க்கிறார்கள். வெளியே வரும் எட்வர்ட் தான் இளவரசன் என்று சொன்னால் பைத்தியம் என்று அவனைத் தாக்குகிறார்கள்.
மைல்ஸ் ஹெண்டன் என்ற வீரன் எட்வர்டை தாக்குதலிலிருந்து காக்கிறான். ஹெண்டன் சிறுவனுக்கு பைத்தியம், அதனால்தான் தான் இளவரசன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறான் என்று நினைக்கிறான். சிறுவன் மேல் இரக்கம் கொண்டு அவனைப் பாதுகாக்கிறான். ஏழைச் சிறுவனின் “பிரமைகளை” உடைக்க அவன் விரும்பவில்லை. எட்வர்ட் நீதி-சட்டம் எப்படி ஏழைகளுக்கு எதிராக செயல்படுகிறது என்பதை நேரடியாகப் பார்க்கிறான். தான் அரசனாகும்போது இதை நிறுத்துவேன் என்று உறுதி கொள்கிறான். ஒரு கட்டத்தில் அவனும் ஹெண்டனும் பிரிந்துவிட, அவன் தனியாக டாமுக்கு முடிசூட்டும் விழாவுக்குச் சென்று அதைத் தடுத்து நிறுத்துகிறான். பல கேள்விகளுக்கு பதிலளித்து தானே உண்மையான இளவரசன் என்று நிரூபிக்கிறான். டாம் தான் இளவரசன் இல்லை என்று சொல்வதை எல்லாரும் இப்போதுதான் நம்புகிறார்கள். எட்வர்ட் அரசனாகிறான்.
ஹெண்டன் எட்வர்டுடன் இருக்கும்போது எட்வர்ட் தான் இளவரசன், தனக்குரிய மரியாதைகளில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது என்று எதிர்பார்க்கிறான். ஏழைச் சிறுவன் மீது இரக்கப்பட்டு ஹெண்டன் எட்வர்ட் எதிர்பார்க்கும் முறைமைகளில், மரியாதைகளில் குறை வைக்காமல் பார்த்துக் கொள்கிறான். எட்வர்ட் இப்படி என்னைப் பாதுகாப்பதற்கு உனக்கு என்ன பரிசு வேண்டும் என்று கேட்கும்போது ஹெண்டன் இளவரசன் முன்னால் உட்கார அனுமதி கேட்கிறான். அவனுக்கு நின்று நின்று கால் வலிக்கிறது! கடைசி காட்சியில் எட்வர்டுக்கு பட்டம் சூட்டப்பட்ட பிறகுதான் ஹெண்டன் அவனை அரசவையில் மீண்டும் பார்க்கிறான். உடனே உட்கார்ந்து கொள்கிறான்! அவனை கைது செய்ய விரையும் காவலர்களை முன்னாள் ஏழைச்சிறுவன்-இளவரசன், இன்னாள் ராஜா தடுத்து அது ஹெண்டனுக்குத் தரப்பட்ட உரிமை என்பதை எல்லாருக்கும் அறிவிக்கிறான். சிறந்த காட்சி.
ட்வெய்ன் சிறுவர் புத்தகங்களாகப் படிக்கக் கூடிய Tom Sawyer, Huckleberry Finn, Connecticut Yankee in King Arthur’s Court என்று சில புத்தகங்களை எழுதி இருக்கிறார். இவற்றில் Huckleberry Finn மற்றும் Connecticut Yankee இரண்டும் சிறுவர் புத்தகங்களாகவும் படிக்கக் கூடியவை, பெரியவர்களும் படிக்கக் கூடியவை என்பதுதான் சிறப்பு.
எர்ரால் ஃப்ளின், க்ளாட் ரெய்ன்ஸ் நடித்து 1937-இல் திரைப்படமாகவும் வந்தது.
இதைப் படிக்க ஏற்ற வயது எட்டிலிருந்து பனிரண்டு வரை என்று நினைக்கிறேன். குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுங்கள்!
தொகுக்கப்பட்ட பக்கம்: சிறுவர் புத்தகங்கள்
One thought on “மார்க் ட்வெய்ன் எழுதிய “ப்ரின்ஸ் அண்ட் த பாப்பர்””