செகாவின் “Seagull” (1896)

anton_chekovபாதி வாரம் மிச்சம் இருக்கிறது. எந்த வித தீமும் இல்லாமல் தோன்றியதை எழுதப் போகிறேன்.

Seagull செகாவின் புகழ் பெற்ற நாடகங்களுள் ஒன்று.

நாம் எவரும் தர்க்க அறிவால் மட்டுமே வழிநடத்தப்படுவதில்லை. உடனடியான சந்தோஷத்துக்காக, வாழ்வில் விறுவிறுப்பு வேண்டுமென்பதற்காக “தவறான” பாதையை, பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கலாம் என்று தெரிந்தும் தேர்ந்தெடுப்பது மனித இயல்பின் கவர்ச்சிகளுள் ஒன்று. நம்மில் யார் இரண்டு நாளில் பெரிய பரீட்சை இருந்தும் சினிமா பார்க்காமல் இருக்கிறோம்? சமர்த்தாக, சாதுவாக இருக்கும் ஆணை விட கொஞ்சமாவது அயோக்கியத்தனம் இருக்கும் ஆண்களால்தான் பெண்கள் கவரப்படுகிறார்கள். ஆண்களும் அப்படித்தான்.

seagullசெகாவ் இதைத்தான் மிக அருமையாக இந்த நாடகத்தில் காட்டுகிறார். சிறு நகரம் ஒன்றில் இளம்பெண் நீனாவுக்கு நடிக்க வேண்டும் என்று கொஞ்சம் ஆசை இருக்கிறது. தன்னை உண்மையாக விரும்பும் ட்ரெப்லெவை விட்டுவிட்டு ஓரளவு பிரபலமான எழுத்தாளன் ட்ரிகாரினோடு வாழ வீட்டை விட்டு ஓடிப் போகிறாள். ட்ரிகாரினுக்கு தன் மேல் உண்மையான விருப்பம் இல்லை, ஏதோ பொழுதுபோக்குக்காக என்று அவளுக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால் ஏதோ கொஞ்ச நாள் தன்னுடன் வாழ்ந்துவிட்டு பிறகு அவளை ஏறக்குறைய மறந்துவிடும் ட்ரிகாரினுக்காக அவள் எதையும் தர தயாராக இருக்கிறாள். ட்ரெப்லெவைப் பற்றிய குற்ற உணர்ச்சி மட்டும்தான் அவளுக்கு இருக்கிறது.

ஒரு விதத்தில் பார்த்தால் நாடகம் முழுவதும் நிறைவேறாத ஆசைகள்தான். மெட்வடெங்கோ மாஷாவை விரும்ப, மாஷா ட்ரெப்லெவை விரும்ப, ட்ரெப்லெவ் நீனாவை விரும்ப, நீனா ட்ரிகாரினை விரும்ப, ட்ரிகாரின் யாரையும் விரும்புவதில்லை.

நீனாவுக்கு counterpoint ஆக ட்ரெப்லெவை விரும்பும், ஆனால் ட்ரெப்லெவின் பிரக்ஞையில் தான் இல்லை என்பதை உணர்ந்து safe ஆக பள்ளி ஆசிரியன் மெட்வடெங்கோவை மணக்கும் மாஷாவை முன்வைக்கிறார். மாஷாவின் தேர்வு சரியா இல்லை நீனாவின் தேர்வு சரியா என்பதை பக்கம் பக்கமாகப் பேசலாம். ஆனால் எந்த முடிவுக்கும் வருவதற்கில்லை.

ட்ரிகாரின் கடற்பறவை ஒன்றை எந்தக் காரணமும் இல்லாமல் சும்மா சுட்டுக் கொல்வதை இதற்கு metaphor ஆகக் காட்டுகிறார். அதை அவ்வளவு வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமா என்று எனக்கு கேள்வி உண்டு. என் கண்ணில் அது நாடகத்துக்கு செயற்கைத்தன்மையை அளிக்கிறது, கொஞ்சம் வலிந்து புகுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் நடிக்கப்படும்போது அது நாடகத்துக்கு தேவையாக இருக்கலாம்.

செகாவ் ஒரு மாஸ்டர் என்பதற்கு இந்த நாடகம் போதும். இணையத்தில் கிடைக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: செகாவ் பக்கம், நாடகங்கள்