இந்த நூற்றாண்டுக்கான பரிந்துரைகள்

Wisdom of the Crowds இலக்கியத்தில் சிறந்தவற்றை நிலைநிறுத்தி பாதுகாத்துவிடுகிறது. ஷேக்ஸ்பியரை இன்னும் படிக்கிறோம், நடிக்கிறோம். அவரது சம காலத்திய நாடக ஆசிரியர்களான க்ரிஸ்டோஃபர் மார்லோ, பென் ஜான்சன் போன்றவர்களை அனேகமாக மறந்துவிட்டோம். புதுமைப்பித்தனும் மௌனியும் கு.ப.ரா.வும் அழகிரிசாமியும் தி.ஜா.வும் இன்னும் நமது பிரக்ஞையில் இருக்கிறார்கள். விந்தனும் மு.வ.வும் ஏறக்குறைய மறைந்தேவிட்டார்கள்.

ஆனால் Wisdom of the Crowds சமீபத்திய இலக்கியத்தைப் பொறுத்த வரை வேலைக்காகாது. கடந்த பத்து இருபது வருஷங்களில் வெளியானவற்றில் என்ன படிப்பது என்று கண்டுபிடிப்பது எப்போதுமே கொஞ்சம் கஷ்டம்தான். விருதுகளும் பரிந்துரைகளும் இலக்கிய விமர்சகர்களும் அங்கேதான் ஒரு வாசகனுக்கு தேவைப்படுகிறார்கள்.

சமீபத்தில் ஜெயமோகன், எஸ்ரா இருவரும் பரிந்துரைத்த படைப்புகளின் பட்டியல்கள் கண்ணில் பட்டன. வசதிக்காக கீழே மீள்பதித்திருக்கிறேன். இவற்றில் நான் படித்தவை தமிழ்மகனின் ‘வெட்டுப்புலி‘ மற்றும் கிறிஸ்டோஃபர் ஆண்டனியின் ‘துறைவன்’ நாவலின் திருத்தப்படாத வடிவம் ஆகியவைதான். வெட்டுப்புலி கால வெள்ளத்தில் நிற்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை என்பதைப் பதிவு செய்கிறேன்.

ஜெயமோகன் பரிந்துரைத்தவை:

 1. அத்துமீறல்: வி.அமலன் ஸ்டேன்லி, நல்ல நிலம் பதிப்பகம் – அமலன் ஸ்டேன்லி முக்கியமான கவிதைகளை எழுதியவர். அடிப்படையில் அறிவியலாளர். ஆய்வகச் சுண்டெலி ஒன்றின் வாழ்க்கையின் சித்திரமாக முதல் வாசிப்பில் அமையும் இந்த நுணுக்கமான நாவல், இருத்தலியம் ஓங்கி நின்றிருந்த காலகட்டத்தின் குறியீட்டு நாவல்களின் அழகிய கவித்துவத்தைச் சென்றடைகிறது.
 2. ஆதிரை: சயந்தன், தமிழினி பதிப்பகம் – தமிழ்ப் பண்பாட்டில் போர் இல்லாமலாகி இருநூறாண்டுக் காலமாகிறது. ஆகவேதான் நம் மொழியில் இத்தனை போர்க் கூச்சல்கள். ரத்தமும் கண்ணீரும் தெறித்த ஒரு போர்க் காலகட்டத்தின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆதிரை, போர் என்றால் என்ன என்று காட்டுகிறது. தமிழில் போர் குறித்து எழுதப்பட்ட நாவல்களில் இதுவே முதன்மையானது.
 3. துறைவன்: கிறிஸ்டோபர் ஆண்டனி, முக்கூடல் வெளியீடு – கடலோர மக்களின் வாழ்க்கையைச் சொல்லும் நாவல். நாமறியாத ஒரு நிலப் பகுதியை, உணர்வுக் களத்தை நுணுக்கமான தகவல்களுடன் சொல்கிறது.
 4. குறத்தியாறு: கௌதம் சன்னா, உயிர்மை பதிப்பகம் – நாட்டார் பண்பாட்டிலிருந்து பெற்ற குறியீடுகளையும் நவீனப் புனைவு முறைமைகளையும் கலந்து எழுதப்பட்ட இந்நாவல், சமகால வரலாற்றின் ஒரு மாற்று வடிவம்.
 5. காலகண்டம்: எஸ் செந்தில்குமார், உயிர்மை பதிப்பகம் – நூற்றைம்பதாண்டு காலப்பரப்பில் கண்ணீரும் கையாலாகாத சோர்வும் கொந்தளிப்புமாக ஓடிச் செல்லும் ஆசாரிமார் சமூகத்தின் வாழ்க்கையின் சித்திரம் இந்நாவல்.
 6. ஆங்காரம்: ஏக்நாத், டிஸ்கவரி புக் பேலஸ் – தென்னகக் கிராமம் ஒன்றின் சித்தரிப்பு வழியாக ஓர் இளைஞனின் தேடலையும் தன்னைக் கண்டறியும் தருணத்தையும் சித்தரிக்கும் குறிப்பிடத்தக்க படைப்பு.
 7. ஆயிரம் சந்தோஷ இலைகள்: ஷங்கர் ராமசுப்ரமணியன், பரிதி பதிப்பகம் – படிமங்கள், உருவகங்கள் ஆகியவற்றை மெல்லக் கைவிட்டுவிட்டு, நுண்சித்தரிப்புகளாகவோ சிறிய தற்கூற்றுகளாகவோ தன் அழகியலை உருவாக்கிக் கொண்டிருக்கும் இன்றைய கவிதையின் முகம் வெளிப்படும் முக்கியமான முழுத் தொகுப்பு.
 8. மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது: குமரகுருபரன், உயிர்மை பதிப்பகம் – கவிதைக்கு எப்போதுமிருக்கும் கட்டின்மையும் பித்தும் வெளிப்படும் வரிகள் கொண்ட நவீனப் படைப்பு.
 9. ஒரு கூர்வாளின் நிழலில்: தமிழினி, காலச்சுவடு பதிப்பகம் – மறைந்த விடுதலைப் புலிப் பெண் போராளி ஒருவரின் வாழ்க்கை விவரிப்பு. இதன் நேர்மையின் அனல் காரணமாகவே பெரிதும் விவாதிக்கப்பட்டது. முக்கியமான வரலாற்றுப் பதிவு.
 10. சாமிநாதம் (உ.வே.சா.முன்னுரைகள்) : ப.சரவணன், காலச்சுவடு பதிப்பகம் – இளைய தலைமுறை தமிழறிஞர்களில் முதன்மையானவரான ப.சரவணன் தொகுத்தளித்திருக்கும் இந்நூல், அவரது முந்தைய ஆய்வுத் தொகுப்புகளைப் போலவே வரலாற்றை அறிவதற்கான ஒரு முதன்மை வழிகாட்டி.

எஸ்ரா பரிந்துரைத்தவை

 1. யந்தனின் ‘ஆறாவடு’ (தமிழினி பதிப்பகம்)ஈழத் தமிழர்களின் துயர்மிகு வாழ்வினைச் சித்தரிக்கும் சிறந்த நாவல்.
 2. முருகவேளின் ‘மிளிர்கல்’ (பொன்னுலகம் பதிப்பகம்) கண்ணகியைத் தேடும் பயணத்தின் ஊடாக ரத்தினக்கல் தேடும் வணிக சூதின் கதையைச் சொல்லும் புதிய நாவல்.
 3. நக்கீரனின் ‘காடோடி’ (அடையாளம் பதிப்பகம்) சூழலியல் அக்கறையுடன் எழுதப்பட்ட புது வகை நாவல்.
 4. லட்சுமி சரவணக்குமாரின் ‘உப்பு நாய்கள்’ (உயிர்எழுத்து பதிப்பகம்) விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை நுட்பமாகப் பதிவு செய்த நாவல்.
 5. கீரனூர் ஜாகிர் ராஜாவின் ‘மீன்காரத் தெரு’ (மருதா பதிப்பகம்) இஸ்லாமியர்களின் வாழ்வியல் நெருக்கடிகளைப் பேசும் நாவல்.
 6. சுகுமாரனின் ‘வெலிங்டன்’ (காலச்சுவடு பதிப்பகம்) ஊட்டியின் வரலாற்றுடன் பால்ய நினைவுகளை ஒன்று கலந்து விவரிக்கும் சிறந்த நாவல்.
 7. இரா. முருகனின் ‘அரசூர் வம்சம்’ (கிழக்கு பதிப்பகம்) தலைமுறைகளின் கதையைக் கூறும் மாய யதார்த்தவாத நாவல்.
 8. தமிழ்மகனின் ‘வெட்டுப்புலி’ (உயிர்மை பதிப்பகம்) திராவிட இயக்க அரசியலை மையமாகக் கொண்ட நாவல்.
 9. யூமா. வாசுகியின் ‘ரத்த உறவு’ (தமிழினி பதிப்பகம்) குடியால் அழிந்த குடும்பத்தின் கதையைச் சொல்லும் நாவல்.
 10. பிரான்சிஸ் கிருபாவின் ‘கன்னி’ (தமிழினி பதிப்பகம்) காதலின் துயரைக் கவித்துவமாகப் பதிவு செய்த நாவல்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.