பிரபஞ்சன் – அஞ்சலி

பிரபஞ்சனின் மறைவு வருத்தம் தந்த செய்தி. இரண்டு சிறந்த நாவல்களை எழுதி இருக்கிறார். இன்னும் நிறைய எழுதி இருக்கலாம் என்று நினைக்க வைத்தவர். ஆனால் நான் படித்த வரைக்கும் அவர் எழுதிய பிற நாவல்கள் என்னைப் பெரிதாகக் கவரவில்லை. உலகியல் காரணங்களுக்காக இதழியலில் ஈடுபட்டது, வாழ்வின் பிரச்சினைகள் அவரை கொஞ்சம் முடக்கிவிட்டன என்று கேள்வி. அவரது சிறுகதைகள் பொதுவாக நன்றாக இருக்கின்றன, ஆனால் என் கண்ணில் படித்தே ஆக வேண்டிய முதல் வரிசை சிறுகதைகள் அல்ல.

மானுடம் வெல்லும் முன்னுரையில் அவர் சொல்வது:

தமிழில் தக்க வரலாற்றுப் புதினம் தோன்றவில்லையே என்கிற வசை என்னால் ஒழிந்தது!

மேலும் சொல்கிறார் –

முறுக்கு மீசையும், வஜ்ரம் போல் மேனியும் கொண்ட இளவரசன், கச்சைக்குள் அடங்காப் பெரும் ஸ்தனங்களைக் கொண்ட மஞ்சளழகியைக் கட்டிலில் சேர்த்த வீர சாகசம், இந்த தமிழ் தேசத்தில் வரலாற்றுப் புதினம் என்ற பெயரால் அழைக்கப்படுவது, தமிழர்க்குத் தலைக்குனிவு தரும் செயலேயாகும்.

நானே என் பதிவில் எழுதியதைத்தான் மீண்டும் சொல்ல வேண்டி இருக்கிறது.

பிரபஞ்சன் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. சரித்திர நாவல் என்றால் எல்லாருக்கும் முதலில் ஞாபகம் வரும் பேர் சாண்டில்யன்தான். சாண்டில்யன் கதைகள் நமக்கு தரும் அனுபவம் எம்ஜிஆர் படங்கள், காமிக்ஸ் சாகசம் மாதிரிதான். அவர் கொண்டு வரும் வரலாறு எல்லாம் ராஜா ராணி இளவரசன் இளவரசி பற்றிதான். தமிழில் இது வரை வந்த சரித்திர நாவல்களில் மிக சிறந்ததாக நான் நினைப்பது பொன்னியின் செல்வன். சில ஆயிரம் பக்கங்கள் கொண்ட பொ. செல்வனில் அன்றைய வாழ்க்கை முறை – ஜாதி, விவசாயம், குறுநில மன்னர்கள்-மைய அரசு பற்றிய உறவு, படை எப்படி திரட்டப்பட்டது – பற்றி எல்லாம் ஒரு வரி கூட கிடையாது. அதைப் படித்து சுந்தர சோழனுக்கு அப்புறம் உத்தம சோழன் பட்டத்துக்கு வந்தார் என்று தெரிந்து கொள்ளலாம். பொ. செல்வனின் சிறப்பு அதன் கதைப் பின்னல் மட்டுமே.

நம் எல்லாருக்கும் வரலாறு என்றால் அசோகன், விக்ரமாதித்தன், நரசிம்மவர்மன், ராஜராஜன், அக்பர் என்று சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. படிக்கும்போது எனக்கு இந்த கேள்வி உண்டு – பாபருக்கு பிறகு அக்பர் ஆட்சிக்கு வந்தால் என்ன, இல்லை அக்பருக்கு பிறகு பாபர் வந்தால் என்ன, இந்த இழவை எல்லாம் எதற்கு படிக்க வேண்டும் என்று. தமிழ் வரலாற்று நாவல்கள் இந்த ராஜா-ராஜா சண்டைகளை தாண்டவே இல்லை.

பிரபஞ்சன் தாண்டி இருக்கிறார். தகவல்களை தேடி எடுத்து அதை சுவாரசியமான கதை ஆக்கி இருக்கிறார். கோழி திருடியவன் எப்படி பிடிபட்டான், அடிமைக்கு என்ன விலை, பாண்டிச்சேரியின் ஃப்ரெஞ்சு கவர்னர் கடலோரமாக உட்கார்ந்துகொண்டு கக்கூஸ் போகக் கூடாது என்று போட்ட சட்டம், என்று நிறைய வாழ்க்கை முறை தகவல்களை நாவல் ஆக்கி இருக்கிறார்.

வானம் வசப்படும் மானுடம் வெல்லுமின் நீட்சியே. இன்னும் கொஞ்சம் கோர்வையாக இருக்கும். 1995-ஆம் ஆண்டுக்கான சாஹித்ய அகடமி விருதை வென்றது. ஆனால் என் கண்ணில், coherence குறைவாக இருந்தாலும் மானுடம் வெல்லுமே கலை ரீதியாக அதிக வெற்றி பெற்ற நாவல்.

பிரபஞ்சனின் மொத்த பங்களிப்பும் இந்த இரண்டு நாவல்கள் மட்டுமே என்றுதான் நான் கருதுகிறேன். ஜெயமோகன் தனது seminal நாவல் பரிந்துரைகளில் மானுடம் வெல்லுமுக்கு பத்தாவது இடத்தை அளிக்கிறார். வானம் வசப்படும், மற்றும் மஹாநதி என்ற நாவல்களை தனது இரண்டாம் பட்டியலில் சேர்க்கிறார். எஸ்ராவின் நூறு சிறந்த நாவல்கள் பட்டியலில் மானுடம் வெல்லும் மற்றும் சந்தியா இடம் பெறுகின்றன.

மனசு, அப்பாவின் வேஷ்டி, மற்றும் கருணையினால்தான் என்ற சிறுகதைகள் ஜெயமோகனின் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் இடம் பெறுகின்றன. எஸ்ராவின் சிறுகதை பரிந்துரைகளில் அப்பாவின் வேஷ்டி மற்றும் மரி என்கிற ஆட்டுக்குட்டி என்ற சிறுகதைகள் இடம் பெறுகின்றன. மீன் என்ற சிறுகதையை சுஜாதா பரிந்துரைத்தார் என்று நினைவு.

மனசு யூகிக்கக் கூடிய கதைதான் என்றாலும் கச்சிதமாக எழுதப்பட்ட சிறுகதை. அ. வேஷ்டியில் வேஷ்டியை அப்பாவின் குறியீடாக மாற்றி இருக்கிறார். கருணையினால்தான் கதையில் கோபத்தில் கொலை செய்தாலும் அழகை ரசிக்கும் இளைஞன் நல்ல பாத்திரப் படைப்பு. மரி என்கிற ஆட்டுக்குட்டி சிறுகதையில் தனக்கிருக்கும் கடுப்பால் மற்றவர்களை கடுப்பேற்றும் பதின்ம வயதுப் பெண் அன்புக்குக் கட்டுப்படுவது நன்றாக விவரிக்கப்படுகிறது. மீன் எல்லாம் என்ன சிறுகதை என்றே புரியவில்லை. மிச்ச எல்லாம் நல்ல சிறுகதைகள்தான். இவற்றைத் தவிர பிரும்மம் என்ற சிறுகதையும் நினைவில் இருக்கிறது. ஆனால் நான் தமிழின் சிறந்த சிறுகதைகள் என்று என்றாவது ஒரு தொகுப்பு வெளியிட்டால் அந்தப் பட்டியலில் இடம் பெறாது.

அவருடைய பல சிறுகதைகளை இங்கே படிக்கலாம். என்றாவது படிக்க வேண்டும். அவரது சிறுகதைகள் அவரது பிற நாவல்களை விட நன்றாக எழுதப்பட்டவை என்று தோன்றுகிறது.

மா. வெல்லும், மற்றும் வா. வசப்படும் நாவல்கள் என்னை மிகவும் கவர்ந்ததால் வேறு ஏதாவது கிடைக்குமா என்று தேடினேன். கிடைத்த புத்தகங்களின் தரம் – மகாபாரத மாந்தர்கள், காதலெனும் ஏணியிலே, நானும் நானும் நீயும் நீயும், சுகபோகத் தீவுகள், உள்ளங்கையில் ஒரு கடல், ஈரம் எல்லாம் சுமார்தான்.

எனக்கு மகாபாரதப் பித்து அதிகம். மகாபாரத மாந்தர்கள் என்ற தொடர் பல பாத்திரங்களை சுருக்கமாக விவரிக்கிறது. படிக்கலாம்தான், ஆனால் புதிய insights என்று எதுவும் இல்லை.

காதலெனும் ஏணியிலே: நாயகன் சேது நல்லவன், வல்லவன். அவன் மீது உயிரையே வைக்கும், அவன் தன்னை காதலிக்கவில்லை என்று தெரிந்தும் ஏறக்குறைய தன் சொத்தை அவன் மேல் எழுதி வைக்கும் நாயகி சுமி. Go-getter ரேகா. முக்கோணக் காதல். வாரப் பத்திரிகைகளில் பெண்களை குறி வைத்து எழுதப்படும் தொடர்கதைகள் தரத்தில்தான் இருக்கிறது, சுவாரசியமே இல்லை. தவிர்க்கலாம்.

நானும் நானும் நீயும் நீயும்: திருமணம் நிச்சயமான பிறகு தனக்கு வேண்டியது என்ன என்பதை உணரும் பெண். டக்கென்று முடித்துவிட்டார்.

உள்ளங்கையில் ஒரு கடல்: நல்ல இயக்குனர் மூர்த்தி சினிமாத்துறையை விட்டு ஒதுங்குகிறான். ஒரு நிருபி அவனை மீட்டுக் கொண்டு வருகிறாள். இதே போன்று ஒரு நீளமான சிறுகதையைப் படித்த நினைவும் இருக்கிறது. சுமார்.

சுகபோகத் தீவுகள்: அரசியல்வாதிகளுக்கு பின்னால் நிற்கும் ஓரளவு படித்த மானேஜர் போன்ற ஒருவனை முன்னால் வைத்து (தொண்ணூறுகளின்) அரசியல் நிலையை நமக்கு சொல்ல ஒரு முயற்சி. கிராமத்து படித்த இளைஞன் தன் அரசியல்வாதி மாமாவிடம் வந்து சேர்கிறான். குறுகிய காலத்தில் விவசாயிகளை ஏமாற்றி நிலம் வாங்கும் ஒரு நிகழ்ச்சியை முன்னின்று நடத்திக் கொடுக்கிறான். தலைவர் மாமாவை பின் தள்ளிவிட்டு இவனை முன்னே கொண்டு வருகிறார். விரைவில் நம்பகமான ஆலோசகன் ஆக மாறிவிடுகிறான். இன்னொரு முன்னாள் நடிகை, இந்நாள் அரசியல்வாதியின் மகளிடம் ஏற்படும் காதல் கொஞ்சம் குற்ற உணர்வைத் தருகிறது. காதல் வலுக்க வலுக்க கடைசியில் அரசியலை விட்டுவிடுகிறான். சுமாரான த்ரில்லர். அரைகுறையாக இருக்கிறது. அவரது திறமைதான் இதை காப்பாற்றுகிறது. அரசியல் நிகழ்வுகள் நன்றாக வந்திருக்கின்றன, அதை இன்னும் கொஞ்சம் விவரமாக எழுதி இருக்கலாம். நாவல் அனேகமாக வாரப் பத்திரிகையில் தொடர்கதையாக வந்திருக்க வேண்டும்.

ஈரம் என்ற மினி-தொடர் சகிக்கவில்லை.

சுருக்கமாகச் சொன்னால் இரண்டு நல்ல நாவல்கள், சில நல்ல சிறுகதைகள் எழுதி தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார். இன்னும் எழுதி இருக்கலாம் என்று தோன்ற வைக்கிறார்.

உங்கள் கண்ணில் வேறு நல்ல புத்தகங்கள் ஏதாவது எழுதி இருக்கிறாரா? நீங்கள் எவற்றை பரிந்துரைப்பீர்கள்?

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: அஞ்சலிகள், பிரபஞ்சன் பக்கம்

தொடர்புள்ள சுட்டிகள்:
பிரபஞ்சனின் “மானுடம் வெல்லும்”
பிரபஞ்சனின் “வானம் வசப்படும்”

11 thoughts on “பிரபஞ்சன் – அஞ்சலி

 1. //எனக்கு மகாபாரதப் பித்து அதிகம்//
  எனக்கும். இதுவரை வாசிக்கவில்லை என்றால் எஸ் எல் பைரப்பா எழுதிய பர்வா படியுங்கள். தமிழில் மிக அழகான மொழிபெயர்ப்பில் வந்திருக்கிறது.

  அற்புதமான புத்தகம்.

  Like

  1. இங்கே அஞ்சலிப்பதிவுகள் கூட இன்னொரு எழுத்தாளரை மட்டம் தட்டித்தான் எழுத வேண்டுமென்கிற சாங்கியம் இருக்கிறதா?

   சாண்டில்யன் கதைகளில் சிருங்கார ரசம் இருந்தது வாஸ்தவம். ஆனால், இந்த தேசத்தின் சரித்திரத்தை அவர் எழுதிய அளவுக்கு விரிவாகப் படித்துப் புரிந்து கொண்டு ஆதாரங்களுடன் எழுதியவர் வேறு எவரும் இல்லை. கல்கிக்கு நிறுவனபலம் இருந்தது.

   சாண்டில்யனுக்குக் குமுதம் போல ஒரு பக்கா கமெர்ஷியல் வார இதழின் தயவு வேண்டி இருந்தது. குமுதத்துக்கேற்றபடி கதை எழுதினார் என்பதற்காக அவர் எழுதியது சரித்திரமே இல்லை, கதையே இல்லை, ஆதாரமே இல்லை என்பீர்களா?

   வானம் வசப்படும் நாவலை சிலாகிப்பதே கூட ஒரு வித மந்தைத்தனம் தானோ? #GoodReads தளத்தில் 2016 இல் K ஜெகன் என்பவர் எழுதிய ஒரு விரிவான வாசகப்பார்வை.. இந்த நாவலைக் குறித்து எழுதியிருப்பதை இங்கே பகிர்ந்திருக்கிறேன்

   பிரபஞ்சனுடைய உலகம் புதுச்சேரி அளவுக்குச் சின்னதுதான், அதைத்தாண்டி அவர் வெளியே வந்தமாதிரி எனக்குத் தெரியவில்லை.

   மிகச்சமீபத்தில் இறந்து போன ஒருவரைப் பற்றி இப்படிக்கு கடுமையாக எழுதக் கூடாதுதான்! ஆனால் சம்பந்தமே இல்லாமல் இன்னொரு எழுத்தாளரை மட்டம் தட்டித்தான் இவரை உயர்த்த வேண்டுமென்றால், இவர் அத்தனை உயரமானவரில்லை.

   https://suvasikkapporenga.blogspot.com/2018/12/blog-post_21.html

   Like

   1. சாண்டில்யனை வாசித்து மன்னர்களின் சரித்திரத்தை (யாருக்குப் பின் யார் வந்தார்கள், எப்படி இந்தப் போரில் வென்றார்கள்) என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால் மக்கள் சரித்திரத்தை , மக்கள் எப்படி வாழ்ந்தார்கள், படை எப்படித் திரட்டப்பட்டது, கட்டடங்கள் எப்படிக் கட்டப்பட்டன, பண்பாடு என்ன, குடும்ப அமைப்பு என்ன என்று ஒன்றுமே தெரிந்து கொள்ள முடியாது. அதற்காக அவை சரித்திர நாவல் ஆகாது என்று சொல்ல முடியாது தான். அது ஒரு வகை. இது ஒரு வகை.
    ஆனால் சாண்டில்யன் மீது எனது குற்றச்சாட்டு, அவர் சரித்திரத்தைக் கூட அரைப்பக்கத்தில் சொல்ல வேண்டியதை பாகம் பாகமாகச் சொல்லி விட்டார் என்பதே. ஜல தீபத்தில் எல்லாம் பெரிதாக சரித்திரம் எதுவும் இல்லை. அதுவும் இரண்டாம் பாகம் அந்த வெள்ளைக்காரக் காதல்/காமத்துக்காக மட்டுமே. சரித்திரம் கொஞ்சமாகக் கடைசியில் வரும். கடல் புறா கூட அப்படித்தான். இரண்டாம் பாகத்தில் சரித்திரம் குறைவு. விஜயமகாதேவி எல்லாம் இன்னும் கொடுமை. கல்கி அப்படியில்லை. பொன்னியின் செல்வனில் பல இடங்களில் சோழ சரித்திரம் பிறர் ஊடாகச் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும். அது தான் கல்கியின் திறன்.

    Like

 2. எனக்கு ஒரு சந்தேகம். உடையார் நீங்கள் கேட்கும் அனைத்தையும் செய்திருக்கும் (அக்கால மக்கள் பற்றிப் பேசும், குடும்ப அமைப்பைப் பற்றி, ஜாதிய வேறுபாடு பற்றி, போர் வீரன் அறம் பற்றி, பழக்கவழக்கம் பற்றி என எல்லாவற்றையும் தொட்டுச் செல்லும்). அப்படி இருந்தும் பாலகுமாரன் பிரபஞ்சன் அளவுக்கு இலக்கியத்தில் பேசப்படாதது என்? குறிப்பாக ஜெயமோகன் எல்லாம் உடையாரை முற்றிலும் புறந்தள்ளி விடுகிறார். ஏன்?

  Like

  1. பிருந்தாபன்,

   // உடையார் நீங்கள் கேட்கும் அனைத்தையும் செய்திருக்கும் (அக்கால மக்கள் பற்றிப் பேசும், குடும்ப அமைப்பைப் பற்றி, ஜாதிய வேறுபாடு பற்றி, போர் வீரன் அறம் பற்றி, பழக்கவழக்கம் பற்றி என எல்லாவற்றையும் தொட்டுச் செல்லும் //

   உடையாரின் முதல் சில பக்கங்களில் ஒரு படைத்தலைவர் காலை சரியாக கழுவாததால் தீய சக்தி ஒன்று ஒட்டிக் கொள்கிறது என்று படித்தேன். அதற்கப்புறம் புத்தகத்தை மேலும் படிக்கும் ஆர்வம் குறைந்துவிட்டது. என்றாவது ஒரு நாள் படிக்க வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் இப்படி ஆவி, மந்திரம், தீய சக்தி மாதிரி கதைகள் எனக்கு பெரிதாக அப்பீல் ஆவதில்லை.

   ஜெயமோகன் ஏன் புறம் தள்ளுகிறார் என்று எனக்கென்ன சார் தெரியும்? அவருக்கு என்னைப் போல ஏதாவது அலர்ஜி ஏற்பட்டிருக்கலாம். அவருக்கு என்னை விட பொறுமை அதிகம், அலர்ஜி ஏற்பட்டிருந்தாலும் படித்திருப்பார் என்றுதான் நினைக்கிறேன். அவரைத்தான் கேட்க வேண்டும்…

   Like

 3. சாண்டில்யனை மட்டம் தட்டுவது ஆகாது இது, இயல்பான ஒப்புமை, சரித்திரநாவல் என்றாலே, பொன்னியின் செல்வனையும், கடல் புறாவையும் தவிர்த்துவிட்டு பேசமுடியாது. சாண்டில்யன், நல்ல சரித்திர நாவல்களை எழுதியிருக்க கூடும், குமுதம் வாசகனுக்கு எழுதினார், அதனால் தரம் பாதாளத்திற்கு போயிவிட்டது. சாண்டில்யனை பத்து பக்கம் தாண்டி படித்தால் கூட கதை புரியும். சிறுகதைகளை வளவளவென்று நாவலாக்கினார்.

  ஆனால் பிரபஞ்சனின் நாவல்களும் அப்படி ஒன்றும் ஓகோவென்று இல்லை. கிடைத்ததை எல்லாம் அள்ளி போட்டு வைத்துவிட்டார். தரவுகளை இணைப்பதிலும் ஒரு சுவாரஸ்யம் வேண்டும், அது சுத்தம். முதல் பகுதியாவது கொஞ்சம் படிக்க முடிகின்றது, இரண்டாம் பாகம் சுத்த வளவள. ஆனந்தரங்கம் பிள்ளையின் டைரியை பகுதி பகுதியாக தந்துவிட்டு, நாவல் என்றால்.. டைரியின் வாசகங்கள் அப்படியே வருவது போல உள்ளது, அக்கால தமிழ், இக்காலத்தமிழ், பேச்சுத்தமிழ் பக்கத்திற்கு பக்கம் வித்தியாசம் காட்டியிருக்கின்றார். அதைவிட, காவல்கோட்டம் மிகச்சிறப்பான சரித்திர நாவல் எனலாம்.

  பருவம் – அழகான மொழி பெயர்ப்பா.., தமிழில் இத்தனை பிழைகளுடன் நான் ஒரு புத்தகம் படித்ததில்லை. மூன்றாம் வகுப்பு குழந்தை கூட இதைவிட சுத்தமான தமிழில் எழுதும். மொழிபெயர்ப்பு நடை, மொழி சுத்தம், ஆனால் அச்சு கொடூரம்.

  உடையார், ஆரம்பம் நன்றாகத்தான் இருக்கின்றது. ஒரு பாகம் மட்டுமே படிக்க முடிந்தது. ஆனால் பலரும் போகப் போக வளவளவென ஆகி, சுவாரஸ்யம் இழக்கின்றது என்கின்றனர். முதல்பாகம் நன்றாகத்தான் இருக்கின்றது….

  Liked by 1 person

  1. //பருவம் – அழகான மொழி பெயர்ப்பா.., தமிழில் இத்தனை பிழைகளுடன் நான் ஒரு புத்தகம் படித்ததில்லை. மூன்றாம் வகுப்பு குழந்தை கூட இதைவிட சுத்தமான தமிழில் எழுதும். மொழிபெயர்ப்பு நடை, மொழி சுத்தம், ஆனால் அச்சு கொடூரம்.
   //
   அப்படியா சொல்கிறீர்கள்? அது மஹாபாரதத்தை காட்டிய புது கோணத்தில் நான் கவனிக்கவில்லையா என்னவோ. பிழை மலிந்த பதிப்பாக எனக்குத் தோன்றவில்லை

   Like

   1. /இவ்வளவு எழுத்து பிழைகளோடு ஒரு நூலை நான் இதுவரை வாசித்ததில்லை. ஒவ்வொரு பக்கத்திற்கு ஐந்தாறு பிழைகள். ள், ன் பிரச்சினை. எழுத்துகள் இடமாறும் பிரச்சினை. அதைவிட கொடுமை பெயர்களே மாறி வருகின்றன. துருபதன் கம்பாசிடர் கைங்கர்யத்தில், துரோணரை கொல்ல சபதம் செய்ததற்கு பதில் துருபதனையே கொல்ல சபதம் செய்கின்றான். நல்ல வேளை தற்கொலை செய்து கொண்டுவிடவில்லை. பல இடங்களில் பத்தி பிரிக்கப்படாமல வரிகள் ஒன்றின் மீது ஒன்று சவாரி செய்து கொண்டு போகின்றது. நாவலின் சுவாரஸ்யமே அனைத்தையும் மீறி படிக்கவைக்கின்றது./ படித்தபின்பு என் தளத்தில் எழுதியது.

    நான் வாங்கிய பதிப்பின் அழகு அப்படித்தான்……

    Like

 4. உங்களிருவருக்கும் ஒரு கேள்வி!

  புறநானூற்றில், வரிசையாக ஆறுபாடல்கள்! இரண்டு வெவ்வேறு புலவர்கள் பாடியது, ஆளுக்கு மூன்று பாடல்களைப் பாடி இருக்கிறார்கள். இவர்கள் வாழ்ந்த காலம் என்ன, பாட்டுடைத் தலைவனுக்கு வேறு என்ன ஆதாரம் என்றெல்லாம் தேடிப் பிடிக்க முனைபவர்கள் முனையலாம்! சோம்பல் கொள்கிறவர்கள், இதெல்லாம் கதைக்கு ஆகாது, முழுக்க முழுக்க புனைவு தான் என்று சொல்லி அபீட்டாயிக்கலாம்!

  இந்த ஆறுபாடல்களிலும், சாத்தந்தையார் என்ற புலவர் எழுதிய முதல் பாடலில் மட்டும் தான் ஒரு குறிப்புக் கிடைக்கிறது. மற்ற ஐந்திலும் வேறு பெரிதாக விவரமேதும் கிடைப்பதில்லை. அதனால் முதற்பாடலை இங்கு பார்க்கலாம்! மற்ற ஐந்தையும் பார்க்க வேண்டுமானால், புறநானூற்றின் 81 முதல் 85 வரையிலான பாடல்களை Project Madurai தளத்தில் இருந்து பார்க்கலாம்.

  இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்,
  மைந்துடைமல்லன் மதவலி முருக்கி
  ஒருகால் மார்பொதுங் கின்றே; ஒருகால்
  வருதார் தாங்கிப் பின்னெதுங் கின்றே
  நல்கினும் நல்கான் ஆயினும், வெல்போர்ப்
  போர் அருந் தித்தன் காண்கதில் அம்ம
  பசித்துப் பணைமுயலும் யானை போல
  இருதலை ஒசிய எற்றிக்
  களம்புகும் மல்லன் கடந்துஅடு நிலையே

  புற நானூறு பாடல் எண்: 80 பாடியவர் சாத்தந்தையார், தும்பைத் திணை, எருமை மறத் துறை, பாடல் தலைவன் சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி

  இந்தப் பாடலில் சரித்திரம், புனைவு ஏதேனும் தென்படுகிறதா என்று பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்! சாண்டில்யன் மாதிரி, திறமையான எழுத்தாளரின் கைகளில் எப்படி ஒரு அற்புதமான சித்திரம் வெளிப் படுகிறது என்பதை அடுத்துப் பார்க்கலாம்!

  Like

  1. கிருஷ்ணமூர்த்தி,

   // புற நானூறு பாடல் எண்: 80 // எனக்கு கவிதை என்றால் கொஞ்சம் அலர்ஜி. சமீப காலத்தில்தான் தம் கட்டி சில பல குறுந்தொகைப் பாடல்களை படித்தேன். இப்போதைக்கு ஒன்றும் சொல்வதற்கில்லை.

   Like

 5. சாண்டில்யன் சங்க இலக்கியங்களில் புலமை உள்ளவர்தான். பல இடங்களில் பயன்படுத்தியுருக்கின்றார். …… இவ்வாறு பட்டினப்பாலை கூறுவது போல அங்கு பெண்கள் நீராடிக் கொண்டிருந்தார்கள், ….. என்று மலைபடு கடாம் பேசுவது போல பெண்கள் துள்ளியாடிக் கொண்டிருந்தனர் என்று வளவளப்பது எல்லாம் அவர் எழுதுவது சரித்திரம் என்று நினைக்க வைக்கவில்லை.

  வெற்று வர்ணனைகளும், திடுக்கிடும் திருப்பங்கள் (அடுத்த அந்தியாயம் வரும் போது சை என்று தோன்றும்) வைத்தும் எழுதப்பட்ட தொடர்கதைகள். ஒன்றிரண்டு நாவல்கள் என்றால் பரவாயில்லை, எல்லாம் ஒரே வகை. எப்போதாவது அவர் எழுதும், அபூர்வமாக தட்டுப்படும் ஒன்றிரண்டு விஷயங்களுக்கு ஆயிரம் பக்கத்தை படிப்பது அயர்ச்சியானது.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.