மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்: சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல்

அனேகமாக ஒவ்வொரு மாட்டுப் பொங்கலுக்கும் வாடிவாசல் பற்றிய பதிவை மீள்பதித்துக் கொண்டிருக்கிறேன். அது சரி, மாட்டுப் பொங்கல் என்றால் வாடிவாசல் பற்றி எழுதாமல் எப்படி?

மாட்டுப் பொங்கல் என்றால் எப்போதும் நினைவு வருவது வாடிவாசல் குறுநாவல்தான். ஜல்லிக்கட்டை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட கதை. சி.சு. செல்லப்பா எழுதியது. விறுவிறுப்பான கதை. கதையில் முடிச்சு கிடிச்சு என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. செல்லாயி அம்மன் ஜல்லிக்கட்டுக்கு – செல்லாயி சல்லிக்கு – இரண்டு கிழக்கத்தியான்கள் – பிச்சி, மருதன் – வருகிறார்கள். பிச்சியின் அப்பா அம்புலித்தேவன் ஜல்லிக்கட்டை நடத்தும் ஜமீன்தாரின் காரிக் காளையால் குத்துப்பட்டு இறந்து போனார். அதற்கு பழி வாங்கும் விதமாக காளையை அடக்க வருகிறார்கள். ஜெயிக்கிறார்களா, காளையால் குத்துப்படுகிறார்களா, ஜமீன்தாரின் மனநிலை என்ன இதுதான் கதை. ஒரு எழுபது எண்பது பக்கம்தான் இருக்கும்.

எடுத்தால் கீழே வைக்க முடியாது. ஜல்லிக்கட்டு உலகத்தை, மறவர்களின் வீரத்தை, அவர்களது நெறிகளை, மிக அருமையாக வடிவ கச்சிதத்தோடு விவரிக்கும் குறுநாவல். நான் ஜல்லிக்கட்டெல்லாம் பார்த்ததில்லை. ஆனால் செல்லப்பா அந்த உலகத்தை நம் கண்ணெதிரில் நிறுத்துகிறார். இந்த ஒரு கதையே அவரை தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைநிறுத்த போதுமானது. இன்று யோசித்துப் பார்த்தால் வடிவ கச்சிதம்தான் இந்தக் குறுநாவலை உயர்த்துகிறது என்று தோன்றுகிறது.

வாடிவாசலை ஜெயமோகன் சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார். அவரது வார்த்தைகளில்:

வாடிவாசல் – சி.சு. செல்லப்பா: உண்மையில் ஒரு நீண்ட சிறுகதை ஆனால் நாவலாகக் கூறப்படுகிறது. மதுரைப்பக்க கிராமம் ஒன்றில் உயிரைப் பணயம் வைத்து காளைகளுடன் மோதும் இளைஞர்களின் கதையை திகிலான சொல்லாட்சியுடன் கூறும் வேகமான கதை. தன் தந்தையைக் கொன்ற அடங்காத காரிக்காளையை ரத்தம் சிந்தி வெல்கிறான் பிச்சி. ‘ரோஷம் ஆகாது தம்பி, மனுசனுக்கானாலும் மாட்டுக்கானாலும்’ என்ற அசரீரிக் குரல் தமிழ் மரபுமனத்தின், கிராமிய அகத்தின் வெளிப்பாடு.

எஸ்.ரா. இதை நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.

இந்த நூலின் ஆங்கில மொழியாக்கத்தை Oxford University Press வெளிக்கொண்டு வரப்போகிறது என்று நண்பர் ஹேம்கன் தகவல் தருகிறார். இப்போது வந்துவிட்டது. கல்யாணராமன் மொழிபெயர்த்திருக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் திரைப்படமாகிறதாம்.

தோழி அருணாவின் குறிப்புகள்: எனக்கு 14-15 வயது இருக்கும் பொழுது என் அப்பா வாங்கும் ஒரு சிறுபத்திரிகையில் (காலச்சுவடு என நினைக்கிறேன்) முதன் முதலாக வாடிவாசல் படித்தேன். எனக்கு மிக மன எழுச்சியை வழங்கிய கதை. கதையா, குறுநாவல்/ நாவலா என்று பாகுபாடு பார்க்கவெல்லாம் அப்பொழுது தெரியவில்லை. பிச்சி, மருதன் அவர்களிடம் உடனடி சினேகம் கொள்ளும் கிராமத்து பெருசு, வெல்ல முடியாத காளையை இவன் அடக்க வேண்டும் என ஒருபுறமும் ஆனால் ஒரு வேளை அடக்கி விடுவானோ என்ற பதட்டமுமாய் அவனை அடக்க அழைக்கும் ஜமீந்தார் என கதாபாத்திரங்களை சில பக்கங்களில் வெகு கச்சிதமாகக் காட்டுவார் செல்லப்பா. சிறிது நாள் முன் செய்த மீள்வாசிப்பிலும் என்னை வெகுவாக ஈர்த்தது.

ஜல்லிக்கட்டைப் பற்றிய அவர் அளிக்கும் வர்ணனை ஒரு சித்திரம் போல் என் மனதில் நான் முதல் முறை படித்ததில் இருந்தே பதிந்து விட்டது. அட்டையில் உள்ள ஓவியம் முதன் முறை வேறு மாதிரி இருந்ததோ எனத் தோன்றுகிறது. கோட்டோவியமாக பார்த்த ஞாபகம்.

பாரதிராஜா ஒருவேளை தமிழ் இலக்கியம் படிக்கிறார் என நினைகிறேன். மண்வாசனையில் வரும் ஜல்லிக்கட்டு காளையை கொல்லும் இடம் இப்புத்தகத்தையும், கு.ப.ரா.வின். வீரம்மாளின் காளை சிறுகதையையும் கோபல்ல கிராமத்தில் பெண்ணின் நகைக்காக அவளை தண்ணீரில் சாகடிக்கும் இடம் முதல் மரியாதையையும் ஞாபகப்படுத்துகிறது.

வாடிவாசல் பற்றி அசோகமித்ரன் எழுதியது இங்கே. என் ரசனையோடு நிறைய ஒத்துப் போகும் நண்பர் ரெங்கசுப்ரமணியின் விமர்சனம் இங்கே. வாடிவாசல் புத்தக விளம்பரம் – அன்றும் இன்றும்.

இன்னும் ஒரு சிறந்த ஜல்லிக்கட்டு சிறுகதை – கு.ப.ரா. எழுதிய வீரம்மாளின் காளை. அவரது நல்ல சிறுகதைகளில் ஒன்று. கட்டாயம் படியுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: செல்லப்பா பக்கம்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.