அகதா கிறிஸ்டியின் டாமி-டுப்பென்ஸ் கதைகள்

agatha_christieபதின்ம வயதில் நான் அகதா கிறிஸ்டியை விழுந்து விழுந்து படித்திருக்கிறேன். இன்று வெகு சில கதைகள் தவிர மற்றவற்றை மீண்டும் படிக்கும்போது குறைகள் பெரிதாகத் தெரிகின்றன, படிக்க சிரமமாக இருக்கிறது. ஆனால் டாமி-டுப்பென்ஸ் கதைகளைப் படிக்க முடிந்தது. மர்ம முடிச்சுகளுக்காக அல்ல, விறுவிறுப்புக்காக அல்ல. இளைஞர்களுக்கு வயதாகும் சித்திரத்துக்காக.

ஒரு வேளை எனக்கும் வயது ஏறிக் கொண்டே போவதாலோ என்னவோ தெரியவில்லை. இன்று இந்தப் புத்தகங்கள் charming ஆகத் தெரிந்தன. பிள்ளைகள் என் வழுக்கைத்தலையைப் பார்த்து சிரிக்கும்போது புன்முறுவல் வருவது போல அவ்வப்போது புன்னகைத்துக் கொண்டே இருந்தேன். அதிலும் கடைசி நாவலான Postern of Fate-இல் இருவரும் நிறைய வளவளவென்று பேசுவார்கள். எனக்குத் தெரிந்த பெரிசுகள் மாதிரியே இருக்கிறதே, இது கிறிஸ்டியின் புத்திசாலித்தனமான சித்தரிப்பா, இல்லை கிறிஸ்டிக்கு வயதாகிவிட்டதால் வளவள்வென்று எழுதி இருக்கிறாரா என்று தோன்றியது.

டாமி அன்றைய ஆங்கிலேயனின் கோட்டுச் சித்திரம் (caricature). தைரியம், வீரம் உண்டு, ஆனால் பெரிய புத்திசாலி இல்லை (not clever.) டுப்பென்ஸ் இன்னொரு கோட்டுச் சித்திரம் – கொஞ்சம் புத்திசாலி, ஆனால் ஆழம் தெரியாமல் காலை உள்ளே விடும் ரகம். கதைகL எப்படிப் போகும் என்று சுலபமாக யூகித்துவிடலாம்.

டாமி-டுப்பென்ஸ் முதல் உலகப் போர் முடிந்த காலகட்டத்தில் – Secret Adversary (1922) புத்தகத்தில் சந்திக்கிறார்கள். இருவருக்கும் கையில் பணமில்லை, வேலையில்லை, போர்க்காலம் முடிந்த பிறகு வாழ்க்கை போரடிக்கிறது, ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாட வேண்டி இருக்கிறது. அப்போது ஒரு மர்மம், கொஞ்சம் அதிர்ஷ்டவசத்தால், சில தற்செயல் நிகழ்ச்சிகளால் ஒரு கிரிமினல் மாஸ்டர்மைண்டை வெல்கிறார்கள்.

N or M? (1941) புத்தகத்தில் இருவருக்கும் வயதாகிவிட்டது. இரண்டாம் உலகப் போரின் காலம். தங்கள காலம் கடந்துவிட்டது, ஒன்றுக்கும் பயனில்லை என்ற விரக்தியில் இருக்கும்போது ஜெர்மானிய உளவாளிகளை கண்டுபிடிக்கும் பணி கிடைக்கிறது. தட்டுத் தடுமாறி கண்டுபிடிக்கிறார்கள். இந்தப் புத்தகத்தில் அவர்களுக்கு வயதாகிவிட்டதைச் சொல்வதுதான் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.

By the Pricking of My Thumbs (1968): புத்தகத்தில் இருவருக்கும் இன்னும் வயதாகிவிட்டது. எப்படியோ ஒரு மர்மத்தை வலிந்து கண்டுபிடித்து வலிந்து துப்பறிகிறார்கள். ஆனால் புத்தகத்தின் ஆரம்பத்தில் வரும் டாமியின் வயதான அத்தையின் சித்திரம் நன்றாக இருந்தது.

Postern of Fate (1968): நாவலில் இருவருக்கும் எழுபது எழுபத்தைந்து வயதாகிவிட்டது. ஒரு வீடு வாங்கி செட்டில் ஆகிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பழைய சிறுவர் புத்தகத்தில் மேரி ஜோர்டன் கொலை செய்யப்பட்டாள் என்று ஒரு சிறுவன் ‘எழுதி’ இருக்கிறான். டுப்பென்ஸ் வழக்கம் போல கிளம்பிவிடுகிறாள்!

இவற்றைத் தவிர Partners in Crime (1929): என்ற புத்தகத்திலும் இவர்கள் வருகிறார்கள். இந்த முறை கிறிஸ்டி அன்று பிரபலமாக இருந்த எல்லா துப்பறியும் எழுத்தாளர்கள் ஸ்டைலில் டாம்மி-டுப்பென்ஸ் துப்பறியும் சிறுகதைகளை எழுதிப் பார்த்திருக்கிறார். அவரையே நகல் எடுத்திருக்கிறார் என்றால் பாருங்களேன்!

நல்ல மர்மக் கதைகள் என்பதெல்லாம் இல்லை. ஆனால் ஏதோ ஒரு தருணத்தில் என்னை இவை தொட்டது உண்மை…

தொகுக்கப்பட்ட பக்கம்: துப்பறியும் கதைகள்

டாஷியல் ஹாம்மெட் எழுதிய ‘Maltese Falcon’

humphrey_bogart_in_maltese_falconசாகசக் கதைகள், துப்பறியும் கதைகள், மர்மக் கதைகள் எல்லாம் இலக்கியம் ஆக முடியுமா? முடியும் என்பதற்கு மால்டீஸ் ஃபால்கனை (1929) ஆதாரமாகக் காட்டலாம்.

மால்டீஸ் ஃபால்கனை இலக்கியமாக்குவது துப்பறியும் சாம் ஸ்பேடின் பாத்திரப் படைப்பு. ஸ்பேட் காவிய நாயகன். பீமன், கும்பகர்ணன், பீஷ்மர் போன்றவர்கள் வரிசையில் வைக்கப்பட வேண்டியவன். அவன் என்ன மர்மத்தை அவிழ்க்கிறான், யார் கொலையாளி, கதையில் என்ன நடக்கிறது என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். அவை எல்லாம் ஸ்பேடின் குணாதிசயங்களை, விழுமியங்களை, அவனுடைய அறத்தை, சுய பெருமிதத்தை எப்படி வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன என்பதுதான் முக்கியம். ஸ்பேட் ஒரு archetype. Western genre’s – ‘கௌபாய்’ கதைகளின் நாயகன். நகரத்தில் வாழ்கிறான் அவ்வளவுதான்.

maltese_falconபிற கதாபாத்திரங்களும் நினைவில் நிற்பவைதான். குறிப்பாக குட்மன். குட்மன் எப்போதும் கொஞ்சம் formal, stilted மொழியில்தான் பேசுவான். அது அவன் எத்தனை அபாயமானவன் என்பதை இன்னும் தெளிவாகக் காட்டுகிறது. சின்ன சின்ன பாத்திரங்கள் கூட – ஸ்பேடின் அலுவலகக் காரியதரிசி பெர்ரின் போன்றவர்கள் கூட சிறப்பான கோட்டோவியமாக வடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கதையின் க்ளைமாக்ஸ், denouement காட்சி மிகப் பிரமாதமானது. நாடகமாக நடிக்க ஏற்றது. ஹம்ஃப்ரி போகார்ட், ஜாக் நிக்கல்சன், அல் பசினோ போன்றவர்கள் பிய்த்து உதற வாய்ப்புள்ளது. (திரைப்படத்தில் நடித்தது போகார்ட்தான்). இந்த மர்மக் கதையை இலக்கியமாக்குவதில் அதற்கு பெரிய பங்குண்டு. 1941-இல் ஜான் ஹுஸ்டன் இயக்கத்தில் திரைப்படமாக வந்திருக்கிறது.

இலக்கியமாக்கும் இன்னொரு காட்சி – ஸ்பேட் தன் பழைய கேஸ் ஒன்றை விவரிப்பான். கணவன், மனைவி, குழந்தைகள் என்று ஒரு சந்தோஷமான மத்திமர் குடும்பம். ஒரு நாள் அலுவலகம் செல்லும் கணவன் திரும்பவில்லை. பிணம் கிடைக்கவில்லை. ஸ்பேட் கண்டுபிடிக்க இறங்குகிறான். கணவன் ஊரை விட்டு ஓடிவிட்டான் என்று நினைக்கிறான், ஆனால் அவனுக்கு எந்தப் பணப் பிரச்சினையும் இல்லை, எதிரிகள் இல்லை, மனைவியிடம் சண்டை சச்சரவு இல்லை, அவன் பர்சில் இருக்கும் இருபது முப்பது டாலர்களோடு மட்டும்தான் ஓடிப் போயிருக்க வேண்டும், வங்கியில் இருக்கும் பணத்தை எடுக்கக் கூட அவன் முயற்சி செய்யவில்லை, எந்தத் தடயமும் இல்லை. ஸ்பேடால் கண்டுபிடிக்க முடியவில்லை. சில வருஷங்கள் கழித்து கணவனை தற்செயலாக இன்னொரு நகரத்தில் பார்க்கிறான். அவனைப் பிடித்து விசாரிக்கிறான். காணாமல் போன அன்று மதிய நேரத்தில் உயரமான கட்டிடத்திலிருந்து ஒரு செங்கல் விழுந்திருக்கிறது. கணவன் மயிரிழையில் தப்பித்திருக்கிறான். அவனது வாழ்க்கையின் பொருள் என்ன, இந்தக் குடும்பம், குழந்தை, செய்து கொண்டிருக்கும் பிசினஸ் இதெல்லாம் வாழ்க்கை இல்லை என்று தோன்றி இருக்கிறது. பாக்கெட்டில் இருக்கும் பணத்தோடு ஓடிவிட்டான். ஓடியவன் இப்போது இருக்கும் நகரத்தில் அதே பிசினஸைத்தான் செய்து கொண்டிருக்கிறான். மீண்டும் மணம் செய்துகொண்டிருக்கிறான், குழந்தைகள் பிறக்கின்றன. அதே மத்திமர் வாழ்க்கை!

இன்னொரு நல்ல காட்சி – ஜோயல் கெய்ரோ என்பவன் ஸ்பேடின் அலுவலகத்தில் மால்டீஸ் ஃபால்கன் இருக்கிறதா என்று தேட வருகிறான். ஸ்பேடை துப்பாக்கியைக் காட்டி மிரட்டுகிறான். ஸ்பேட் சின்னதாக சண்டை போட்டு அலட்சியமாக அவன் துப்பாக்கியைப் பிடுங்கிக் கொள்ள கெய்ரோ ஸ்பேடையை சிலையைத் தேட நியமிக்கிறான். பிசினஸ் எல்லாம் பேசி முடித்த பிறகு ஸ்பேட் கெய்ரோவிடம் துப்பாக்கியைத் திருப்பித் தர, இப்போது கெய்ரோ ஸ்பேடை துப்பாக்கி முனையில் வைத்து அலுவலகத்தில் தேடிப் பார்க்கிறான்!

dashiell_hammettHard-boiled detective stories என்று துப்பறியும் கதைகளில் ஒரு sub-genre உண்டு. ஹாம்மெட்டே இதற்கு முன்னாலும் அப்படிப்பட்ட சில கதைகளை எழுதி இருந்தாலும் இதுதான் அந்த sub-genre-இல் முதல் படைப்பாகக் கருதப்படுகிறது. அவரும் ரேமண்ட் சாண்ட்லரும் இந்த sub-genre-இல் சிறப்பான புத்தகங்களை எழுதி இருக்கிறார்கள்.

மால்டீஸ் ஃபால்கன் குறைகள் இல்லாத புத்தகம் இல்லை. Rough edges தெரிகின்றன. நுண்விவரங்கள் எல்லாம் மிகக் குறைவு. உண்மையைச் சொன்னால் நுண்விவரங்கள் வரும்போது கதை எப்போது தொடரும் என்றுதான் பொறுமை இல்லாமல் படித்தேன். இரண்டாம் வரிசை இலக்கியம்தான். ஆனாலும் இலக்கியமே. கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

ஸ்பேட் துப்பறியும் சில சிறுகதைகள் Adventures of Sam Spade என்று வெளிவந்திருக்கின்றன. இவை தீவிர ஹாம்மெட் ரசிகர்களுக்கு மட்டுமே.

தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம், துப்பறியும் கதைகள்

பாபநாசம்/த்ரிஷ்யம் திரைப்படத்தின் மூலக்கதை – Devotion of Suspect X

drishyamஎழுதியவர் கெய்கோ ஹிகஷினோ. வெளிவந்த வருஷம் 2005. துப்பறியும் புத்தகங்களுக்குத் தரப்படும் எட்கர் விருது உட்பட பல விருதுகளை வென்றிருக்கிறது. ஹிகஷினோ எழுதும் டிடெக்டிவ் கலைலியோ சீரிசில் மூன்றாவது புத்தகம்.

Papanasam_posterDevotion of Suspect Xதான் த்ரிஷ்யம் திரைப்படத்தின் மூலக்கதை என்று எங்கோ படித்ததால்தான் நான் இந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். மகா அறுவையான ஆரம்பம். கணக்கு வாத்தியார் இஷிகாமி காலையில் எழுந்து பள்ளிக்குப் போவது உணர்ச்சியே இல்லாத நடையில் ஆல் இந்தியா ரேடியோ செய்திகள் போன்ற தொனியில் விவரிக்கப்படுகிறது. என்னடா இது பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை என்று நினைத்துக் கொண்டே பத்து பக்கம் படித்தேன். நல்ல வேளையாக அந்த பத்து பக்கத்துக்குள் ஒரு கொலை. அதை மறைக்க இஷிகாமி எடுக்கும் முயற்சிகள் சூடு பிடிக்கின்றன. கதை விறுவிறுவென்று போக ஆரம்பித்துவிடுகிறது. இஷிகாமியின் முயற்சிகள், யசுகோவாடு அவரது ஒருதலைக் காதல், கொஞ்சம் டுபாக்கூர் alibi மாதிரி தெரிந்தாலும் உடைக்க முடியாத alibi, துப்பறியும் போலீஸ்காரர்கள், இஷிகாமியின் முன்னாள் கல்லூரி நண்பர், இப்போது போலீசுக்கு உதவும் பேராசிரியர் யுகாவா, நல்ல முடிச்சு என்று கதை போகிறது.

keigo_higashinoஇந்த நாவலுக்கும் பாபநாசம்/த்ரிஷ்யத்துக்கும் பல மைல் தூரம். கருவில் – தனக்கு வேண்டியவர்கள் செய்த கொலையை மறைக்க நாயகன் சிருஷ்டிக்கும் காட்சிகள் – மட்டும்தான் ஒற்றுமை. ஜீது ஜோசஃப் இதனால் inspire ஆகி இருக்கிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஹிந்தி, தமிழ், மலையாளம் மூன்றிலும் எனக்கு மலையாள த்ரிஷ்யம்தான் டாப்.

அங்கங்கே கணித references வருவதை நான் ரசித்தேன். P=NP reference நாலைந்து முறை வருகிறது.

நல்ல துப்பறியும் கதைகளுக்கு என்று சில விதிகள் உண்டு. சுருக்கமாகச் சொன்னால் ஆசிரியன் எல்லா உண்மைகளையும் வாசகனுக்குக் காண்பித்துவிட வேண்டும், ஆனாலும் வாசகனுக்கு மர்மத்தை யூகிப்பது ஏறக்குறைய முடியாத காரியமாக இருக்க வேண்டும். கடைசி பக்கத்தில் முதல் முறையாக கதையில் தோன்றும் பக்கத்து வீட்டு பாதிரியார் சுரங்கம் வழியாக வந்து கொன்றுவிட்டு திரும்பிப் போய்விட்டேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்து கதையை முடிக்கக்கூடாது. அந்த விதிகளை இந்தப் புத்தகம் மீறுகிறது. விதிகள் எல்லாம் போட்டு கதை எழுதுவது முடியாத காரியம் என்ற என் எண்ணத்தை உறுதிப்படுத்துகிறது.

மர்மக்கதைகளை விரும்புபவர்கள் நிச்சயமாகப் படிக்கலாம்.

பிற நாவல்கள் எல்லாம் ஓரிரு மாற்று குறைவுதான். ஒரு வேளை பாபநாசம்/த்ரிஷ்யம் போன்று வேறு கனெக்‌ஷன்கள் இல்லாததால் அப்படி தோன்றுகிறதோ என்னவோ தெரியவில்லை. அவற்றைப் பற்றி சின்ன குறிப்புகள்:

A Midsummer’s Equation நாவலிலும் அதே பேராசிரியர் யுகாவாதான் துப்பறிகிறார். கடற்கரை நகரம் ஒன்றில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் இறந்து போகிறார். குடிபோதையில் உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார் என்று முதலில் நம்பப்படுகிறது. பிறகுதான் அவர் கார்பன் மோனாக்சைடை சுவாசித்ததால் இறந்துவிட்டார் என்று தெரிகிறது. கதையில் ஒரு பத்து வயதுப் பையனும் பேராசிரியர் யுகாவாவும் நண்பர்கள். அந்த நட்பு, அதிகாரி எப்படி கொல்லப்பட்டார், ஏன் கொல்லப்பட்டார் என்ற மர்மங்கள் கதையை சுவாரசியப்படுத்துகின்றன. ஆனால் இது விறுவிறு நாவல் அல்ல, மெதுவாகத்தான் போகும்.

Malice கொஞ்சம் இழுத்தாலும் படிக்கலாம். இதில் ஒரு கதாசிரியன் கொல்லப்படுகிறான். யார் கொலையாளி என்று பல வித யூகங்கள்…

Salvation of a Saint என்ற நாவல் படு சுமார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: மர்மக் கதைகள்

ஜூலியன் சைமன்ஸ் எழுதிய ‘Man Who Killed Himself’

julian_symonsஒரு லெவலில் பார்த்தால் இந்தப் புத்தகம் வெறும் gimmick-தான். சில சமயம் gimmicks-களும் என்னைக் கவர்கின்றன. 🙂

சிம்பிளான கரு. ஆர்தர் ப்ரௌன்ஜான் இரட்டை வாழ்வு வாழ்கிறான். ஒரு வாழ்க்கையில் மனைவி க்ளேருக்கு அடங்கிய கணவன். அடிக்கடி பயணம் செய்யும் வேலை பார்ப்பவன். அதாவது அப்படி சொல்லிவிட்டு இன்னொரு ஊரில் dating agency நடத்தும் மேஜர் மெல்லனாக பாதி நாள் இன்னொரு வாழ்க்கை. க்ளேரின் பணம் வேண்டும். என்ன செய்வது? மேஜர் மெல்லன் க்ளேரைக் கொலை செய்துவிடுவதாக ஜோடிக்கிறான். கொலைக்கப்புறம் மெல்லனை யாரும் பார்ப்பதில்லை. ஆனால் துரதிருஷ்டம், ஆர்தர் மெல்லனை கொன்று பிணத்தை ஒழித்துவிட்டதாக ஆர்தர் மேலேயே சந்தேகம் விழுகிறது!

இலக்கியம் எல்லாம் இல்லை, நல்ல வணிக நாவல் மட்டும்தான். சைமன்ஸின் நடை tongue in the cheek பாணியில் நன்றாக அமைந்திருக்கிறது. இரட்டை வேஷக் கணவன், அவனுடைய ‘கம்பெனிகள்’, அடக்கி ஆளும் மனைவி எல்லாவற்றையும் கோட்டோவியங்களாக திறமையாகக் காட்டுகிறார். புன்னகை எழுந்து கொண்டே இருந்தது. அதற்காகவே படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: துப்பறியும் கதைகள்

காலின் டெக்ஸ்டர் எழுதிய “Last Bus to Woodstock”

colin_dexterகாலின் டெக்ஸ்டரின் புகழ் பெற்ற படைப்பு இன்ஸ்பெக்டர் மோர்ஸ். மோர்ஸ் ஆங்கிலக் காவல் துறையில் சீஃப் இன்ஸ்பெக்டர். கொஞ்சம் eccentric. நிறைய குசும்பு, கொஞ்சம் தீசத்தனம் உடையவர். மோர்சுக்கு வாட்சனாக இருப்பவர் சார்ஜெண்ட் லூயிஸ். மோர்ஸ் அவ்வப்போது லூயிசையே போட்டு வாட்டி எடுப்பார்.

last_bus_to_woodstockமுதல் புத்தகம் Last Bus to Woodstock (1975). இதைத்தான் இந்த சீரிசில் சிறந்த புத்தகமாகக் கருதுகிறேன். இருபது இருபத்தைந்து வருஷங்களுக்குப் பின்னால் சமீபத்தில் மீண்டும் படித்தேன். சிறந்த கதைப்பின்னல் என்று அப்போது நினைத்தது ஊர்ஜிதமாயிற்று.

மாலை நேரத்தில் இரண்டு பெண்கள் வுட்ஸ்டாக் செல்ல ஒரு பஸ்ஸுக்கு காத்திருக்கிறார்கள். அங்கே வரும் கொஞ்சம் வயதான ஒரு பெண் இனி மேல் வுட்ஸ்டாக் செல்ல பஸ் கிடையாது என்கிறாள். (தவறான தகவல்). வரும் கார்கள் ஏதாவது ஒன்றில் லிஃப்ட் கேட்கலாம் என்கிறாள் ஒருத்தி. இன்னொருத்தி தயங்க, முதல் பெண் “Come on, we will have a giggle about this in the morning” என்கிறாள். பிறகு இருவரும் லிஃப்ட் கேட்க சாலையில் நடந்து செல்கிறார்கள்.

அன்றிரவு அவர்களில் ஒருத்தி – சில்வியா – கற்பழித்துக் கொல்லப்படுகிறாள். இறந்த இருவரும் ஒரு சிவப்பு காரில் ஏறிச் சென்றதைப் பார்த்த சாட்சிகள் இருக்கிறார்கள். மோர்ஸும் லூயிசும் கூட வந்த பெண் யாரென்று கண்டுபிடிக்க முயல்கிறார்கள். ஆனால் கூடச் சென்ற பெண் தான்தான் மற்றவள் என்று முன்வரவில்லை. பஸ் கிடையாது என்று சொன்ன பெண்மணி மூலம் அந்த giggle பற்றிய பேச்சு தெரிய வருகிறது. காலையில் இதைப் பற்றி சிரிப்போம் என்றால் மற்றவள் சில்வியாவோடு வேலை செய்பவளாக இருக்க வேண்டும் என்று மோர்ஸ் யூகிக்கிறார். கூட வேலை செய்யும் ஜென்னிஃபர் கோல்பிக்கு ஒரு ரகசிய வேண்டுகோளோடு வந்திருக்கும் கடிதம் ஒன்றைக் கண்டுபிடித்து மோர்ஸ் ஜென்னிஃபர் மீது சந்தேகப்படுகிறார், ஆனால் ஜென்னிஃபர் அசைக்க முடியாத பதில்களைச் சொல்கிறாள், நான் அவளில்லை என்று மறுக்கிறாள்.

பெண்ணைக் கண்டுபிடிக்க முடியாத மோர்ஸ், லிஃப்ட் கொடுத்தது யாரென்று கண்டுபிடிக்க முயல்கிறார். ஒரு சிறந்த பகுதி இங்கே – சில பல hypothesis-களைக் கொண்டு தான் தேடும் பகுதியில் ஒரே ஒருவர்தான் தான் நினைக்கும் குணாதிசயங்களுடன் சிவப்பு கார் ஓட்டுகிறார் என்று முடிவுக்கு வருகிறார். அப்படி கார் ஓட்டும் ஆக்ஸ்ஃபோர்டில் பேராசிரியராக இருக்கும் பெர்னார்ட் க்ரௌதரை நெருங்குகிறார். க்ரௌதர் தான்தான் லிஃப்ட் கொடுத்தேன், ஆனால் இறக்கிவிட்டுவிட்டேன் என்று ஒத்துக் கொள்கிறார். மனைவிக்குத் தெரியாமல் அன்று தன் கள்ளக் காதலியை சந்திக்க சென்றதால் இது வரை தானே முன்வந்து உண்மையைச் சொல்லவில்லை என்கிறார்.

க்ரௌதரின் மனைவி மார்கரெட் கள்ளக் காதலைத் தான் கண்டுபிடித்துவிட்டதாகவும், கோபத்தில் சில்வியாவை தான்தான் கொன்றேன் என்று ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள். மனைவி இறந்ததும் பெர்னார்டுக்கு ஹார்ட் அட்டாக். கள்ளக் காதலியை அன்று பார்க்க முடியாததால் சில்வியாவோடு உறவு கொண்டதாகவும், சில்வியா மிரட்டியதால் அவளைக் கொன்றதாகவும் சொல்லிவிட்டு அவரும் இறக்கிறார். மோர்ஸ் இருவருமே கொலை செய்யவில்லை, கொன்றது இன்னொருவர் என்கிறார். மிச்சத்தை படித்துக் கொள்ளுங்கள்.

க்ளூக்களை புத்தகம் முழுதும் இறைத்திருக்கும் விதம், சின்ன சின்ன ஒட்டைகளை அடைக்கும் விதம் இரண்டிலும் டெக்ஸ்டரின் திறமை தெரிகிறது. ஆனால் முக்கியமான giggle க்ளூவைப் படித்தபோது என்னடா மோர்ஸ் ஒரு obvious பகுதியைக் கோட்டை விடுகிறாரே என்று ஒரு நிமிஷம் தோன்றியது, ஆனால் கதையின் சுவாரசியம் அதை விரைவிலேயே மறக்கடித்துவிட்டது.

நல்ல மர்ம நாவல் எழுதுவது கஷ்டம். மர்ம நாவலின் ஃபார்முலாக்களை மீறாமல் சிறந்த கதைப் பின்னலை (plot) டெக்ஸ்டர் உருவாக்கி இருக்கிறார். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: மர்ம நாவல்கள்

தொடர்புடைய சுட்டி: ஆர். அஜயின் அலசல் (சிவா கிருஷ்ணமூர்த்திக்கு நன்றி!)

துப்பறியும் கதைகளில் அறம் – டிக் ஃப்ரான்சிசின் சிட் ஹேலி

துப்பறியும் சாகசக் கதைகளில் நமக்கு உள்ள எதிர்பார்ப்புகள் குறைவு. முதல் தேவை கதை விறுவிறுவென்று போக வேண்டும். இரண்டாவது தேவை லாஜிகல் ஓட்டைகள் இருக்கக் கூடாது, அப்படி இருந்தால் அவற்றை கவனிக்க நேரம் இருக்கக் கூடாது, அவ்வளவுதான். அவற்றைத் தாண்டி மேலும் பலங்கள் தென்படும்போது கதைகள் பொதுவாகப் பிடித்துப் போகின்றன.

Dick_Francisஎனக்குப் பிடித்த சாகசக் கதை எழுத்தாளர்களில் டிக் ஃப்ரான்சிசுக்கு ஒரு இடம் உண்டு. 30, 35 கதை எழுதி இருப்பாரோ என்னவோ, அதில் எனக்கு ஒரு பத்து கதைகளாவது தேறும். அவரது முக்கியமான பலம் அவரது நாயகர்கள் – எல்லாரும் ஒரே அச்சில் வார்த்தவர்கள்தான் – வலிமையான அற உணர்வு, honor code உள்ளவர்கள். ஒரு செயல் தன்னுடைய அறத்தை மீறுவது என்று உணர்ந்தால் என்ன விலை கொடுத்தாலும் அந்தச் செயலைச் செய்ய மாட்டார்கள். எந்த பிரச்சினை வந்தாலும் கலங்கமாட்டார்கள், அதை தீர்க்க முயற்சி எடுப்பார்கள். உணர்ச்சிகளுக்கு அடிமையாக மாட்டார்கள், ஆனால் உணர்ச்சிகளுக்கு உரிய இடம் தரப்பட வேண்டும் என்று அறிந்த அதையும் கணக்கில் சேர்த்துக் கொள்ளும் அளவுக்கு கூர்மையான அறிவுடையவர்கள். அவர்களுடைய அற உணர்வில் கருணை போலவும் ஒன்று தெரியும். தண்டனை தருவதை விட, பழி வாங்குவதை விட பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்பதற்குத்தான் முக்கியத்துவம் தருவார்கள். அது கருணை அல்ல, கணக்கு. இந்த வில்லனுக்கு முழு தண்டனை பெற்றுத் தந்தால் அதற்கு தானும் தன்னவர்களும் இப்போதும் எதிர்காலத்திலும் என்ன விலை தர வேண்டி இருக்கும், அந்த விலையைத் தருவது சுலபமாக கஷ்டமா என்ற கணக்கு. சுருக்கமாகச் சொன்னால் தன்னை, தன் honor code-ஐ நன்றாகப் புரிந்து கொண்ட செயல் வீரர்கள்.

ஃப்ரான்சிசைப் பற்றி முன்னாலும் எழுதி இருக்கிறேன். யாருக்கும் நினைவிருக்கப் போவதில்லை என்பதால் மீண்டும் ஒரு முறை. குதிரைப் பந்தயம் பல மேலை நாடுகளில் பெரிய தொழில். ஃபிரான்சிஸ் ஒரு முன்னாள் குதிரைப் பந்தய ஜாக்கி – அதுவும் steeplechase ஜாக்கி. இங்கிலாந்து அரச குடும்பத்தினரின் குதிரைகளை எல்லாம் ரேசில் ஓட்டி இருக்கிறார். ஜாக்கி தொழிலிருந்து ரிடையர் ஆன பிறகு எழுத ஆரம்பித்தார். எல்லாமே குதிரைப் பந்தய பின்புலம் உள்ள த்ரில்லர்கள். பலதரப்பட்டவர்கள் ஹீரோவாக வருவார்கள். ஆனால் எல்லாருக்கும் குதிரை பந்தய பின்புலம், அதுவும் steeplechase பின்புலம் இருக்கும். குதிரை வாங்க கடன் கொடுத்த வங்கி அதிகாரி, குதிரைப் பந்தயம் பற்றி எழுதும் பத்திரிகையாளர், குதிரை ரேஸ் உலகத்தில் துப்பறிபவர், ஜாக்கிகளை ஒரு ரேஸ் கோர்சிலிருந்து இன்னொன்றுக்கு commuter plane ஒன்றில் அழைத்துச் செல்லும் விமான ஓட்டி, குதிரை தரகர், ரேஸ்கோர்ஸ் நிறுவன பங்குதாரர் இத்யாதியினர். சில சமயம் ஹீரோ ஃப்ரான்சிசைப் போலவே ஒரு ஜாக்கியாகவும் இருப்பார். அப்படி ஜாக்கியாக இருந்தால் அவர்களது வாழ்வின் அர்த்தமே குதிரைகளை பந்தயத்தில் ஓட்டுவதாகத்தான் இருக்கும்.

ஃப்ரான்சிஸ் ஃபார்முலாவில் நாயகன் வில்லன்களிடம் பயங்கர அடி வாங்கும் காட்சி ஒன்று இருக்கும். பல நாவல்களில் அதுவே புத்தகத்தின் உச்சக்கட்டம். அடி என்றால் உங்க வீட்டு அடி எங்க வீட்டு அடி இல்லை. Nerve-இல் ஹீரோவை heating இல்லாத குதிரை லாயத்தில் கைகளை மேலே தூக்கி கட்டிவிட்டு கூரையிலிருந்து தொங்கவிட்டுவிட்டு வில்லன் போய்விடுவான். ஹீரோ நாலைந்து மணி நேரம் அப்படி தொங்க வேண்டி இருக்கும். Forfeit-இல் ஹீரோ விஸ்கியை raw ஆக இரண்டு முழு டம்ளர் குடித்துவிட்டு கார் ஓட்ட வேண்டி இருக்கும்.

ஃப்ரான்சிசின் நாயகர்கள் எப்போதும் தங்கள் honor code-ஐ உணர்ந்தவர்கள், அதிலிருந்து பிறழமாட்டார்கள் என்று சொல்லி இருந்தேன். ஒரு விதிவிலக்கு உண்டு. சிட் ஹேலி. ஹேலி அளவு கடந்த விரக்தி, பயம் ஆகியவற்றால் சில சமயம் தன் அறத்தை உடைக்கிறான், ஆனால் மீண்டும் ஒவ்வொரு முறையும் திரும்புகிறான். ஹேலி தேரின் சக்கரங்கள் பூமிக்கு அரை அடி மேலேயே இருக்கும் யுதிஷ்டிரன் இல்லை. தோல்வி, தன் அறத்தை மீறுவது என்றால் அவனுக்கு என்ன என்று தெரியும். அதிலிருந்து மீண்டு வரும் redemption சித்திரம் அவனது பாத்திரப் படைப்பை மேலும் உயர்த்துகிறது. Redemption இந்தக் கதைகளின் முக்கிய ஓட்டம் இல்லைதான், இருந்தால் அடிநாதமாக அது இருப்பது ஹேலி கதைகளை மேலும் உயர்த்துகிறது.dick_francis_whiphand

பொதுவாக ஃப்ரான்சிசின் நாயகர்கள் ரிபீட் ஆகமாட்டார்கள். ஹேலி விதிவிலக்கு. நான்கு நாவல்களின் நாயகன். ஃப்ரான்சிசின் மகன் ஃபீலிக்ஸ் ஃப்ரான்சிஸ் அப்பாவின் plot ஒன்றை வைத்து இப்போது புதிதாக Refusal என்று ஹேலி நாவல் ஒன்றை எழுதி இருக்கிறாராம் இருக்கிறார். பொதுவாக ஃபீலிக்ஸ் அப்பா தரத்தில் எழுதுவதில்லை. ஆனால் அவர் எழுதிய கதைகளில் இதுவே மிகச் சிறந்தது.

எனக்கு மிகவும் பிடித்த ஹேலி நாவல் Whiphand (1979).

ஹேலிக்குப் பெரிய பின்கதை உண்டு. ஹேலி ஒரு காலத்தில் நம்பர் ஒன் ஜாக்கி. பரம ஏழைப் பின்புலத்திலிருந்து துவங்கி பணம், புகழ், அழகான மேல்குடி குடும்ப மனைவி ஜென்னி என்று எல்லா விதத்திலும் வெற்றி. ஜாக்கிகளின் வாழ்வில் கீழே விழுவது, அடிபடுவது, எலும்புகள் உடைவது எல்லாம் சாதாரண நிகழ்ச்சிகள். ஜென்னியால் அந்த டென்ஷனைத் தாங்க முடியவில்லை. குதிரைப் பந்தயத்தில் பங்கேற்பதை நிறுத்தும்படி மன்றாடுகிறாள். கடைசியில் விவாகரத்தே ஆகிவிடுகிறது. விவாகரத்து ஆன ஆறாவது மாதத்தில் ஒரு குதிரைப் பந்தய விபத்தில் ஹேலியின் ஒரு கை நரம்புகள் துண்டிக்கப்படுகின்றன. பேருக்குத்தான் கை, அதை பயன்படுத்த முடியாது. ஜாக்கி வாழ்க்கை முடிவடைந்துவிடுகிறது. (பிற்காலத்தில் கை துண்டிக்கவே படுக்கிறது, prosthesis பயன்படுத்த வேண்டி இருக்கிறது.) ஹேலியின் ஒரே நண்பன், மற்றும் mentor ஜென்னியின் அப்பா, அவனது முன்னாள் மாமனார், அட்மிரலாக இருந்து ஓய்வு பெற்ற சார்லஸ். தன் இரண்டாவது வாழ்க்கையில் ஹேலி துப்பறிபவனாக – அதுவும் குதிரைப் பந்தய உலகத்தில் தலையாயத் துப்பறிபவனாக – பரிணமிக்கிறான்.

எனக்குப் பிடித்த Whiphand கதையில் ஹேலி நம்மை மோப்பம் பிடிக்க ஆரம்பித்துவிட்டான் என்றால் வில்லன்களுக்கு கொஞ்சம் கலக்கம் ஏற்படும் அளவுக்கு முன்னேறி இருக்கிறான். ஜார்ஜ் என்ற ஒரு முக்கிய ட்ரெய்னரின் குதிரைகள் – ரேஸ்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் சில குதிரைகள் எதிர்பாராத விதமாகத் தோற்கின்றன. சில சமயம் நடப்பதுதான், அதனால் ஜார்ஜ் உட்பட யாருக்கும் பெரிய சந்தேகம் ஏற்படவில்லை. ஜார்ஜின் மனைவி ரோஸ்மேரி ஹேலியை ஜார்ஜுக்குத் தெரியாமல் துப்பறியச் சொல்கிறாள். முக்கியமாக அடுத்த குதிரையைக் காக்கும்படி கேட்டுக் கொள்கிறாள். ஹேலிக்கே இங்கே ஏதோ வில்லத்தனம் நடக்கிறது என்று பெரிதாக சந்தேகம் இல்லை. இருந்தாலும் அங்கும் இங்கும் விசாரிக்கிறான். வில்லன் ட்ரெவர் பெட்டிங் ப்ரோக்கர், பயப்படுகிறான். ஹேலியை நீ இதைத் தொடர்ந்தால் உன் இன்னொரு கையையும் வெட்டிவிடுவேன் என்று பயமுறுத்துகிறான்.

ஒரு கை இல்லை என்ற நிலையை சமாளித்து மீண்டும் வாழ ஆரம்பிக்க ஹேலிக்கு சில வருஷங்கள் ஆனது. இரண்டு கையும் இல்லை என்ற நிலையை எதிர் கொள்ள முடியாத ஹேலி இங்கிலாந்தை விட்டே ஓடிவிடுகிறான். ஹேலி காக்க வேண்டிய குதிரை தோற்கிறது.

ஆனால் ஓடி ஒளிந்து கொண்டு தன்னால் வாழ முடியாது, அப்படி வாழ்வது தன்னைப் பொறுத்த வரையில் வாழ்க்கையே இல்லை என்பதை ஹேலி ஓரிரு வாரத்தில் புரிந்து கொள்கிறான். மீண்டும் வருகிறான். ட்ரெவர் மட்டுமில்லை, வேறு சில வில்லன்களும் அவன் பின்னால். வழக்கம் போல அடி விழுகிறது. நாயகர்கள் எப்போதும் வெல்லத்தானே வேண்டும்? வில்லன்கள் தோற்கிறார்கள், ட்ரெவர் ஜெயிலுக்குப் போக வேண்டியதில்லை என்றாலும் அவன் தொழில், பணம் எல்லாம் அழிகிறது.

புத்தகத்தின் கடைசி காட்சியில் ட்ரெவர் ஹேலியின் இன்னொரு கையை வெட்ட அவன் வீட்டிலேயே ஒளிந்து கொண்டிருக்கிறான். ஹேலியால் தப்பிக்க முடியாது. என்ன முடிவு என்பதை வெள்ளித்திரையில் காண்க. 🙂

ஹேலி கதைகளில் ஒன்றே ஒன்று படிக்க வேண்டுமென்றால் இதைத்தான் பரிந்துரைப்பேன்.

dick_francis_odds_againstஇதற்கு முந்தைய கதையான Odds Against (1965) ஹேலியின் குதிரைப் பந்தய விபத்துடன் ஆரம்பிக்கிறது. குதிரை ஓட்டுவதே வாழ்வின் அர்த்தம், அதற்காக மனைவியையும் விவாகரத்து செய்யலாம் என்று வாழ்ந்த ஹேலிபெரும் விரக்தி அடைகிறான். ஒரு துப்பறியும் நிறுவனத்தில் பேருக்கு வேலை செய்கிறான். Depression. இரண்டு வருஷம் இப்படியே சாரமில்லாத வாழ்வு. கதை இங்கேதான் ஆரம்பிக்கிறது. முதல் காட்சியில் அவன் சுடப்படுகிறான். உயிருக்கு ஆபத்தில்லை. (நாயகன் இல்லையா?) அந்த நிகழ்ச்சி அவனுக்கு மீண்டும் வாழ இச்சை தருகிறது. சார்லஸ் வாழ்வில் மீண்டும் சுவாரசியம் வர அவனுக்கு ஒரு வில்லனைக் காட்டுகிறார். அந்த வில்லன் ஒரு ரேஸ்கோர்ஸை இடித்து அங்கே ரியல் எஸ்டேட் தொழில் செய்யத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறான். அவனைத் தடுக்கும் முயற்சியில் மெதுமெதுவாக ஹேலி வாழ்வுக்குத் திரும்புகிறான். நாவலின் முடிவில் வில்லன் அந்த உபயோகமற்ற கையை போட்டு அடிக்கும் அடியில் கையை வெட்டிவிடுகிறார்கள். கதையின் சிறந்த இடம் தன் கையைப் பற்றிய இழிவுணர்ச்சியை ஹேலி எதிர்கொள்ளும் விதம்தான். அவன் சந்திக்கும் ஒரு பெண்ணின் முகத்தின் ஒரு பாதியில் பெரும் தீக்காயம். அவர்கள் இருவரும் தங்கள் பயங்களை மற்றொருவர் உதவியுடன் எதிர்கொள்கிறார்கள்.

இரண்டு கதைகள் படிக்க வேண்டுமென்றால் இதையும் பரிந்துரைப்பேன்.

இதைத் தவிர Come to Grief (1995) மற்றும் Under Orders (2006) என்று இரண்டு ஹேலி நாவல்கள் எழுதி இருக்கிறார். படிக்கலாம், போர் அடிக்காது, ஆனால் சாகச நாவல்கள் மட்டுமே.

ஹேலி நாவல்களைப் பரிந்துரைப்பேன் என்றாலும் ஒரே ஒரு ஃப்ரான்சிஸ் நாவல் படிக்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது Forfeitதான் (1968). Nerve (1964) இன்னொரு சிறந்த சாகச நாவல். Enquiryயையும் (1969) இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.

அறம், honor code உள்ள துப்பறிபவர்களைப் பற்றி எழுதிய மற்றவர்களில் டாஷியல் ஹாம்மெட் மற்றும் ரேமண்ட் சாண்ட்லரைக் குறிப்ப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஷெர்லாக ஹோம்ஸ் பற்றி புதிதாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: துப்பறியும் கதைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
Forfeit
Nerve
Enquiry

நோபல் பரிசு பெற்ற வில்லியம் ஃபாக்னர் எழுதிய துப்பறியும் கதைகள்

william_faulknerபுத்தகம்: Knight’s Gambit – ஐந்து சிறுகதைகள், ஒரு குறுநாவல்

நோபல் பரிசை வென்றவர் துப்பறியும் கதைகளும் எழுதினார் என்பது ஆச்சரியப்படுத்தலாம். ஆனால் இவை ஃபாக்னரின் பாணி கதைகளே. இவற்றில் உள்ள மர்மம் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் போலவோ அகதா கிரிஸ்டி கதைகள் போலவோ நம்மை என்ன நடந்திருக்கும் என்றெல்லாம் யூகிக்க வைப்பதில்லை. கதாபாத்திரங்கள், சூழல் போன்றவற்றுக்குத்தான் முக்கியத்துவம். மெல்வில் டேவிசன் போஸ்ட் எழுதிய அங்கிள் ஏப்னர் கதைகளைப் போன்ற நடை. மாற்றிச் சொல்கிறேனோ – துப்பறியும் கதை விரும்பிகளைத் தவிர வேறு யாருக்கும் போஸ்ட் யாரென்று தெரியப் போவதில்லை! அங்கிள் ஏப்னர் கதைகள் காலத்தால் முற்பட்டவை. அதனால் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.

knights_gambitகதைகளின் நாயகன், துப்பறிபவர், காவின் ஸ்டீவன்ஸ் என்ற அரசு வக்கீல் (Prosecutor). கொஞ்சம் அத்தைப்பாட்டி ஸ்டைலில், விவிலிய ஸ்டைலில்தான் பேசுவார். ஃபாக்னரின் நடையே கொஞ்சம் விவிலிய ஸ்டைல்தான். கதைகள் அவரது மருமகனும் பதின்ம வயதினனும் ஆன சக் மாலிசனின் கண்ணோட்டத்தில் விவரிக்கப்படுகின்றன.

ஏற்கனவே மேலோட்டமாகத்தான் எழுதுகிறேன் என்று குறை சொல்கிறார்கள். 🙂 ஏன், எனக்கே அப்படித்தான் தோன்றுகிறது. வாசிப்பு அனுபவம் ஒவ்வொருவருக்கும் பர்சனல், அதை அடுத்தவர்களுக்கு உணர்த்த முடியாது என்று எனக்கு இப்போதெல்லாம் தோன்றிக் கொண்டே இருக்கிறது. மர்மக் கதைகளுக்கோ கதைச்சுருக்கம் கூட எழுதுவதற்கில்லை. கதைகளை ட்விட்டர் ஸ்டைலில் அறிமுகம் செய்ய வேண்டியதுதான்!

இந்தக் கதைகளில் நான் தலை சிறந்ததாகக் கருதுவது Monk என்ற சிறுகதைதான். அதை மர்மக் கதை என்றெல்லாம் சொல்வது அதை குறைத்து மதிப்பிடுவது. மர்மமும் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். கொஞ்சம் முட்டாள் பயல் – சிறையிலிருந்து விடுதலை ஆகும் சமயத்தில் ஒரு கொலை செய்கிறான். ஏன் என்று மெதுவாகப் புரிகிறது.

Tomorrow என்ற சிறுகதையையும் குறிப்பிடலாம். குற்றவாளி என்று எல்லாருக்கும் தெரிகிறது ஆனால் ஜூரி அவனை விடுவிக்கிறது. ஏன்? இது 1971-இல் ராபர்ட் டுவால் நடித்து திரைப்படமாகவும் வந்தது

Smoke மற்றும் An Error in Chemistry என்ற இரண்டு சிறுகதைகளும் சிறந்த துப்பறியும் சிறுகதைத் தொகுப்புகளில் சேர்க்கப்படுகின்றன. படிக்கலாம்.

மற்ற கதைகளை – Hand upon the Waters மற்றும் Knight’s Gambit ஆகியவற்றை நான் பெரிதாக ரசிக்கவில்லை.

படியுங்கள் என்று நான் பரிந்துரைப்பேன்.


தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம், துப்பறியும் கதைகள்

உலகின் சிறந்த மூடிய அறை மர்மம் (லாக்ட் ரூம் மிஸ்டரி)

துப்பறியும் கதைகளில் locked room mystery என்பது ஒரு sub-genre. அதாவது இழுத்து தாழ்ப்பாள் போடப்பட்ட அறைக்குள் ஒரு பிணம். பிணத்தைத் தவிர வேறு யாரும் அறையில் கிடையாது. எப்படி மரணம் நடந்தது?

இந்த வகைக் கதைகள் அனேகமாக ஒரு புதிர் மாதிரி இருக்கும். நம்பகத்தன்மை என்பதெல்லாம் பற்றி ரொம்ப யோசிக்கக்கூடாது. Probable இல்லாவிட்டாலும் possible என்று இருந்தால் போதும். பாத்திரப் படைப்பு, கருத்து, தரிசனம், இலக்கியம் என்று தேடுபவர்கள் எல்லாம் இந்தப் பக்கம் வராதீர்கள்.

ஜான் டிக்சன் கார் (John Dickson Carr) இந்த வகை நாவல் எழுதுபவர்களில் தலை சிறந்தவர் என்று கருதப்படுகிறார். அவர் எழுதிய அத்தனை நாவல்களிலும் த்ரீ காஃபின்ஸ் (Three Coffins) மிக சிறந்ததாக கருதப்படுகிறது.

கதையின் மர்மங்களை எடுத்துக் கொள்ளுங்களேன்; எங்கோ ஹங்கேரி, ட்ரான்சில்வேனியா பக்கத்திலிருந்து தப்பி ஓடி வந்த அகதி க்ரிமாட். இப்போது லண்டனில் ஒரு இளைஞிக்கு அப்பா. ஓரளவு வசதியாக இருக்கிறார். ஒரு நாள் இரவு நண்பர்களுடன் ஒரு மதுச்சாலையில் (pub) பேசிக்கொண்டிருக்கும்போது அங்கே ஒரு மாஜிக் காட்டுபவன் வந்து அவரை மிரட்டுகிறான். க்ரிமாட் அசரவில்லை. ஆனால் நாலைந்து நாளில் க்ரிமாட் தனது தாழ்ப்பாள் போடப்பட்ட அறையில் சுடப்பட்டு இறந்து கொண்டிருக்கிறார். அன்று பனி (snow) பெய்துகொண்டிருக்கிறது. ஜன்னல் வழியாக தப்பித்தால் அங்கே கால் சுவடுகள் இருக்க வேண்டும், எதுவும் இல்லை. சுட்டது க்ரிமாடை மிரட்டிய மாஜிக் நிபுணன் என்று நினைக்கிறார்கள், அந்த மாஜிக் நிபுணன் க்ரிமாடின் சகோதரன் என்றும் யூகிக்கிறார்கள்.

அந்த சகோதரன் க்ரிமாடை சுடப்பட்ட அதே துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்கிறான். அவன் இறப்பது ஒரு தெருவின் நடுவில். எங்கும் பனி. போஸ்ட்மார்ட்டம் துப்பாக்கியை ஏறக்குறைய அவன் மீது வைத்து சுட்டிருக்கிறார்கள் என்று சொல்கிறது. அவன் தெரு நடுவில் இறக்கும்போது அவனை இரண்டு சாட்சிகள் பார்க்கிறார்கள். அவன் அருகில் யாருமில்லை. பனியில் கால் சுவடுகளும் இல்லை.

டாக்டர் கிடியன் ஃபெல் துப்பறிகிறார். மர்மத்தை கண்டுபிடிக்கிறார். அனேகமாக யாராலும் யூகிக்க முடியாத தீர்வு என்று நினைக்கிறேன். ஆனால் improbable தீர்வுதான்.

கதாபாத்திரங்கள் கொஞ்சம் போர்தான். அதுவும் ஃபெல் உலக மகா போர். மர்மத்துக்காக மட்டும்தான் படிக்க வேண்டும்.

நடுவில் ஃபெல் locked room mysteries பற்றி ஒரு லெக்சர் கொடுக்கிறார். அது ஒரு நல்ல ஆய்வுக் கட்டுரை.

துப்பறியும் கதை பிரியர்களுக்காக மட்டும்.

பேரனஸ் ஆர்க்சி எழுதிய “ஓல்ட் மான் இன் தி கார்னர்”

துப்பறியும் கதைகளை விரும்பிப் படிப்பவரா நீங்கள்? உங்களுக்கு இரண்டு பக்கத்துக்கு ஒரு துப்பாக்கி சண்டை தேவை இல்லையா? அப்படி என்றால் Baroness Orczy எழுதிய Old Man in the Corner கதைகளை படிக்கலாம். யாரும் ஷெர்லாக் ஹோம்ஸ் அருகே போகமுடியாது என்றாலும் துப்பறியும் கதைகள் genre-இல் இவை கிளாசிக்.

Armchair Detective என்று சொல்வார்கள் – உட்கார்ந்த இடத்திலிருந்தே எல்லாருக்கும் தெரியும் க்ளூக்களை வைத்து யார் குற்றவாளி என்று கண்டுபிடிப்பவர்கள். (ஷெர்லாக்கின் அண்ணன் மைக்ராஃப்ட் இப்படிப்பட்டவர்தான்) பேர் தெரியாத, ட்வைன் நூலில் முடிச்சுப் போட்டுக் கொண்டே இருக்கும் இந்த கிழவர் அப்படிப்பட்டவர்தான். (இது முழுக்கவும் உண்மையில்லை, அவர் அவ்வப்போது கோர்ட்டுக்கு போய் கேஸ் எப்படி நடக்கிறது என்று பார்ப்பார்). ஒரு சீப்பான ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட வரும் ஒரு நிருபியிடம் – பாலி பர்டன் (Polly Burton)- மட்டும் பேசுவார் – போலீசாரால் கண்டுபிடிக்க முடியாத குற்றங்களை அலசுவார், யார் குற்றவாளி என்று தெளிவாக சொல்வார். இரண்டு மூன்று கதை படித்த பிறகு நமக்கு முடிச்சுகளை யூகிக்க முடியும். என்றாலும் இந்தக் கதைகள் சிறப்பானவையே. குறிப்பாக Fenchurch Street Mystery, Mysterious Death in the Underground Railway ஆகிய கதைகளை சொல்லலாம்.

Lady Molly of Scotland Yard என்ற துப்பறியும் கதைப் புத்தகமும் உண்டு. Curiosity value மட்டுமே.

பேரனஸ் ஆர்க்சி எழுதிய Scarlet Pimpernel கதைகள் அந்தக் காலத்தில் பெரும் வெற்றி பெற்றவை. (ஃபிரெஞ்ச் புரட்சி காலத்தில் இந்த பிம்பர்நெல் ஃபிரான்சிலிருந்து கில்லட்டினின் பிடியில் இருக்கும் பிரபுக்களை காப்பாற்றி இங்கிலாந்துக்கு கொண்டு வரும் சாகசக் கதைகள்) இன்றும் கொஞ்ச கொஞ்சம் படிக்கப்படுகின்றன. இன்று போர்தான். வெகு சில நாவல்களே கொஞ்சமாவது சகித்துக் கொள்ளக் கூடியவை. – Triumph of the Scarlet Pimpernel (1922). குறிப்பாக Sir Percy Leads the Band (1936) போன்ற கதைகள் உப்பு சப்பில்லாதவை.

பொழுதுபோக்கு எழுத்து, துப்பறியும் கதை பிரியர்களுக்கு மட்டும். துப்பறியும் கதை பிரியர்கள் கட்டாயம் படிக்க வேண்டும்.

இந்த கதைகள் கூடன்பெர்க் தளத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன.

தொகுக்கப்பட்ட பக்கம்: துப்பறியும் கதைகள்