Around the World In 80 Days

ஜூல்ஸ் வெர்னின் மிகப் பிரபலமான நாவல். 1872-இல் வெளிவந்தது.

பத்து பனிரண்டு வயதில் தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்றைப் படித்த நினைவு இன்னும் இருக்கிறது. ஃபிலியஸ் ஃபாக் கப்பல், ரயில், யானை, பனியில் செல்லும் “படகு” என்று பலவற்றிலும் மாறி மாறி பயணிப்பது, ஏடன், ப்ரிண்டிஸி, சிங்கப்பூர், ஹாங்காங், ஷாங்காய், யோகஹாமா, சான் ஃப்ரான்சிஸ்கோ, சிகாகோ, நியூ யார்க், லிவர்பூல், லண்டன் என்று என்னவோ பல கேள்விப்பட்டே இராத exotic நகரங்களின் பேர்கள், கடைசியில் அந்த முத்தாய்ப்பு (climax) எல்லாம் மனதைக் கவரந்தன. அட்சரேகை, தீர்க்கரேகை எல்லாம் அப்போதுதான் பாடப்புத்தகத்தில் பேசப்பட்டன, ஒவ்வொரு டிகிரிக்கும் நாலு நிமிஷம் நேரம் முன்னால் நகரும் என்று படித்திருந்தாலும் இந்தப் புத்தகம்தான் அதை தலையில் நன்றாக ஏற்றியது. ஆனால் பின்னாளில் ஆங்கிலத்தில் தேடிப் பிடித்து படித்தபோது அந்த மன எழுச்சி உண்டாகவில்லை.

இன்று உலகம் சுருங்கிவிட்டது. 80 நாள் என்ன, 8 நாளில் நாலு முறை உலகை சுற்றி வரலாம். மேலும் என் கண்ணில் ஜூல்ஸ் வெர்ன் காலாவாதி ஆகிக் கொண்டிருக்கும் எழுத்தாளர். காலாவதி ஆகிவிட்டார் என்று கூட சொல்லலாம். அதனால் மீண்டும் படித்துப் பார்ப்பதில் அத்தனை உற்சாகம் இல்லைதான். எப்படியோ மனதைத் தேற்றிக் கொண்டு படித்தேன்.

புத்தகம் ஏன் வெற்றி பெற்றது என்று நன்றாகவே புரிந்தது. இப்போது கூட கொஞ்சம் மன எழுச்சி உண்டாகத்தான் செய்கிறது. ஃபிலியஸ் ஃபாகின் சித்திரம் caricature-தான், ஆனாலும் சுவாரசியமாக இருக்கிறது. கடைசி முத்தாய்ப்பு இன்றும் சுவாரசியமாகத்தான் இருக்கிறது. ஆனால் இன்று இந்த நாவலுக்கு இருப்பது curiosity value மட்டுமே.

என்ன கதை? ஃபிலியஸ் ஃபாக் உணர்ச்சிகளை வெளிக்காட்டாத ஆங்கிலேயர். எல்லாம் ஒழுங்காக சொன்ன நேரத்தில் சொன்னபடி நடக்க வேண்டும். தன் நண்பர்களிடம் 80 நாளில் உலகைச் சுற்றி பயணிக்க முடியும் என்று பந்தயம் வைக்கிறார்.

அன்று அது கஷ்டம்தான்; லண்டனிலிருந்து கப்பல்கள் மாறி சூயஸ் கால்வாய் வழியாக பம்பாய் செல்ல வேண்டும்; பம்பாயிலிருந்து கல்கத்தாவுக்கு அப்போதுதான் ரயில் பாதை போடப்பட்டிருக்கிறது. கல்கத்தாவிலிருந்து ஹாங்காங்கிற்கு ஒரு கப்பல்; ஹாங்காங்கிலிருந்து ஜப்பானுக்கு இன்னொரு கப்பல்; ஜப்பானிலிருந்து சான் ஃப்ரான்ஸிஸ்கோவிற்கு இன்னொரு கப்பல் பயணம்; அமெரிக்காவில் அப்போதுதான் மேற்குக் கடற்கரையிலிருந்து நியூ யார்க் வரை ரயில் பயணம்; நியூ யார்க்கிலிருந்து லிவர்பூல்; லிவர்பூலிலிருந்து லண்டனுக்கு ரயில். ஒரு இடத்தில் மாறுவதில் ஏதாவது தாமதம் ஏற்பட்டாலும் 80 நாளுக்கு மேலே தேவைப்படும்.

தன் வேலைக்காரன் பாஸ்பார்த்தூவோடு ஃபாக் கிளம்புகிறார். பணத்தை தண்ணீராக செலவழிக்கிறார். காவல்துறை அதிகாரி ஃபிக்ஸ் ஃபாக் வங்கியிலிருந்து பணத்தை திருடியவர் என்று தவறாக சந்தேகிக்கிறான். ஆனால் கைது செய்ய தேவைப்படும் warrant கிடைப்பதில் தாமதம், அதனால் ஃபாகைத் தொடர்கிறான்.

பம்பாயிலிருந்து கல்கத்தா போவதில் சிக்கல். ஃபாக் நம்பி இருந்த செய்தித்தாள் தகவல் தவறு, ரயில் பாதை போடுவது இன்னும் முடியவில்லை, நடுவே கொஞ்ச தூரம் பயணிகள் தானே ஏதாவது ஏற்பாடு செய்து கொண்டு அலஹாபாத் போக வேண்டும். ஃபாக் ஒரு யானையை வாங்கி பயணம் செய்கிறார். நடுவில் உடன்கட்டை ஏற பலவந்தப்படுத்தப்படும் ஔதாவைக் காப்பாற்றி தன்னுடன் அழைத்துச் செல்கிறார்.

ஃபிக்ஸ் ஹாங்காங் வரை தொடர்கிறான், வாரண்ட் இன்னும் அவன் கைக்கு வரவில்லை. ஹாங்காங்கில் அவன் சதியால் ஃபாக் தன் போக வேண்டிய கப்பலில் ஏற முடியவில்லை. இதனால் சான் ஃபரான்ஸிஸ்கோ செல்ல வேண்டிய கப்பலை தவற விடும் அபாயம். ஆனால் ஃபாக் இன்னொரு சிறு கப்பலை தனக்கு பிரத்தியேகமாக ஏற்பாடு செய்து கொண்டு போய் அந்தக் கப்பலை பிடித்துவிடுகிறார்.

இப்போது ஃபாக் ஆங்கில காலனிகளுக்கு வெளியே. ஃபிக்ஸால் அவரை கைது செய்ய முடியாது. அதனால் ஃபிக்ஸ் அவரை தாமதப்படுத்தும் முயற்சிகளை கைவிடுகிறான். அவர் சீக்கிரம் இங்கிலாந்து சென்றடைய தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறான்.

ஃபாக் அமெரிக்கா வருகிறார். ரயில் பயணத்தில் செவ்விந்தியர்கள் ரயிலைத் தாக்குகிறார்கள். அபாயகரமான நிலையில் ஒரு பாலம். சிறு தாமதங்களால் லிவர்பூல் செல்லும் கப்பலைத் தவறவிடுகிறார்கள்.

ஃபாக் மீண்டும் இன்னொரு கப்பலைப் பிடிக்கிறார். அந்தக் கப்பலை வாங்கியே விடுகிறார். நிலக்கரி தீர்ந்து போகும் நிலையில் கப்பலில் உள்ள மரச்சாமான்கள், பாய்மரங்கள் எல்லாவற்றையும் எரித்து லிவர்பூல் வந்து சேர்கிறார்.

லிவர்பூலில் இறங்கியதும் ஃபிக்ஸ் ஃபாகை கைது செய்கிறான். இரண்டு மணி நேரம் கழித்து தன் தவறு புரிகிறது. ஃபாக் தனக்கென்று ஒரு பிரத்தியேக ரயில் ஏற்பாடு செய்து கொண்டு லண்டன் வருகிறார். ஆனால் அவர் லண்டன் வந்து சேரும்போது அவர் சொன்ன கெடுவுக்கு மேல் சில நிமிஷங்கள் சென்றுவிடுகின்றன.

பந்தயத்தில் தோற்றோம் என்று ஃபாக் வீட்டில் முடங்கிக் கிடக்கிறார். ஆனால் ஃபாக் கிழக்கிலிருந்து மேற்காகப் பயணித்திருக்கிறார். அமெரிக்காவில் எனக்கு இரவு எட்டு மணி என்றால் இந்தியாவில் காலை ஒன்பதரை மணி அல்லவா? அதனால் ஃபாக் வந்து சேர்ந்தது 79-ஆவது நாளில். அதை கடைசியில் உணர்ந்து சரியான நேரத்திற்கு போய்விடுகிறார். ஔதாவை மணக்கிறார். சுபம்!

எளிய சூத்திரத்தை வைத்து எழுதப்பட்ட நாவல்தான். உலக வரைபடத்தையும் நாடுகளின் எளிய சித்திரத்தையும் வைத்துக் கொண்டு சுலபமாக எழுதிவிடலாம். ஆனால் விறுவிறுப்பாக செல்கிறது. இன்றும் பதின்ம வயதினருக்குப் பிடிக்க வாய்ப்பிருக்கிறது. காலாவதி ஆகிவிட்டதோ என்று சந்தேகித்தாலும் என் கண்ணில் இன்னும் வசீகரிக்கும் நாவல் (charming).

நாவல் எழுதப்பட்டது 1872-இல். சூயஸ் கால்வாய் கட்டப்பட்டது 1869-இல்; அமெரிக்காவில் பசிஃபிக் கடற்கரையையும் அட்லாண்டிக் கடற்கரையையும் இணைக்கும் ரயில் பாதைகள் (transcontinental railway) கட்டப்பட்டதும் 1869-இல். பம்பாய்-கல்கத்த ரயில் பாதை போடப்பட்டது 1870-இல். அதற்கு முன் இப்படி 80 நாள் உலகப் பயணம் சாத்தியமே இல்லை.

1956-இல் டேவிட் நிவன் ஃபிலியஸ் ஃபாகாக நடித்து திரைப்படமாகவும் வந்தது. திரைப்படம் ஆஸ்கார் விருதை வென்றது.

படியுங்கள், பத்து பதினோரு வயது சிறுவர்களுக்கு வாங்கிக் கொடுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சிறுவர் புத்தகங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

உண்மையான 5 SF கணிப்புகள்

நிலவுக்கு போவது: 1865, ஜூல்ஸ் வெர்ன், From the Earth to the Moon: A Direct Route in 97 Hours, 20 Minutes. வெர்ன் 97 மணி நேரம் என்று எழுதினார், உண்மையில் 75 மணி நேரம்தான் ஆயிற்று. 🙂 வெர்ன் எழுதியது போல பீரங்கியிலிருந்து ராக்கெட் ஏவப்படவில்லை. ஆனால் அவர் காலத்திற்கு அது நல்ல கற்பனைதான்.

டாப்லெட் கம்ப்யூட்டர்கள்: 1968, ஆர்தர் சி. க்ளார்க், 2001: A Space Odyssey. கறாராகச் சொன்னால் முதலில் திரைப்படம்தான் வந்தது, பிறகுதான் அதை க்ளார்க் நாவலாகவும் எழுதினார். திரைக்கதையை அமைத்ததில் ஸ்டான்லி குப்ரிக்குக்கும் பங்குண்டு என்று நினைவு. க்ளார்க் இவற்றுக்கு வைத்த பேர் நியூஸ்பாட். இன்று ஐபாட்கள். அவர் செய்திகள் மட்டுமே படிக்கப்படும் என்று காட்சியை வடிவமைத்திருந்தார். இணைத்துள்ள வீடியோவைப் பாருங்கள், இன்று ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் காட்சி (ஐபாடுக்கு பதிலாக ஃபோன்களை நோண்டிக் கொண்டிருக்கிறோம்)

இன்டர்நெட்: இதுவும் கொஞ்சம் ஏமாற்றுதான். ஆனால் உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் அதை உடனுக்குடன் பார்ப்பது, தெரிந்து கொள்வது என்று மார்க் ட்வைய்னின் இந்தக் கதையில் – From the ‘London Times’ of 1904– வருகிறது.

அலைபேசிகள்: என் தலைமுறைக்காரர்கள் அனேகருக்கு ஸ்டார் ட்ரெக்தான் அலைபேசிகளை அறிமுகம் செய்து வைத்தது.

ஹோலோகிராம்: என் தலைமுறைக்காரர்களுக்கு ஸ்டார் வார்ஸ்தான். சுஜாதா ரசிகர்கள் கொலையுதிர்காலத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

மூலக்கட்டுரை இங்கே. சிலிகன்ஷெல்ஃபில் திரைப்படங்களையும் சேர்ப்பது கொஞ்சம் ஏமாற்று வேலைதான், இருந்தாலும் நான் உத்தமன் இல்லையே!

தொகுக்கப்பட்ட பக்கம்: SF