விட்டல்ராவின் “தமிழகக் கோட்டைகள்”

தமிழில் பயண இலக்கியம் என்ற வகை எழுத்து அவ்வளவு சுகப்படவில்லை. தி.ஜா. மற்றும் சிட்டி எழுதிய “நடந்தாய் வாழி காவேரி” மற்றும் ஜெயமோகன் தான் ஊர் ஊராக சுற்றுவதைப் பற்றி எழுதுவது இரண்டுதான் எனக்குத் தெரிந்து குறிப்பிட வேண்டியவை. மணியன் டைப் நான் அமெரிக்காவில் வத்தக்குழம்பு சாப்பிட்டேன், ஆஃப்ரிக்காவில் ரசம் குடித்தேன் எழுத்து, இல்லாவிட்டால் கோவில் கோவிலாகப் போய் அந்தக் கோவிலின் தலபுராணம், ஊருக்கு எப்படி போவது என்ற வழி குறிப்புகள், ஊரில் அவருக்கு உதவிய மணியக்காரர், குருக்கள் பற்றி நாலு பாரா என்றுதான் இருக்கிறது. பாஸ்கரத் தொண்டைமான், பரணீதரன், கி.வா.ஜ.வின் பயண எழுத்துக்கள் இப்படிப்பட்டவையே.

விட்டல்ராவ் இதில் ஒரு சின்ன மாற்றம் கொண்டு வருகிறார். கோவில் கோவிலாகப் போவதை விட்டுவிட்டு கோட்டை கோட்டையாக சுற்றி இருக்கிறார். சிறு வயதில் பார்த்த கோட்டை, கொத்தளம் என்று தேடி இருக்கிறார். சிறு வயதில் அவர் பார்த்த சில கோட்டைகள் (ஹோசூர் கெனில்வொர்த் கோட்டை) இப்போது ஊர் பெரிதாகி அழிந்துபோய் வீடுகளாக மாறிவிட்டிருக்கின்றன. தென்கரைக் கோட்டையைப் போய்ப் பார்க்கும்போது அங்கே பாளையக்காரர்கள் குலசாமியைக் கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பல கோட்டைகள் இடிந்துவிட்டன. ஒவ்வொரு கோட்டைக்கும் கொஞ்சம் சரித்திரம், கொஞ்சம் அந்தக் கால நினைவு, கொஞ்சம் இந்தக் கால நடப்பு என்று எழுதி இருக்கிறார். இன்னும் பத்து வருஷம் கழித்துப் போனால் இப்போது இருப்பதும் இடிந்துதான் போயிருக்கும்.

எனக்கு மீண்டும் மீண்டும் தோன்றிய ஒரு விஷயம் ரொம்ப சிம்பிளானது. ஏன் அந்த ஊரிலேயே இருப்பவர்களுக்கு இதைப் பற்றி எல்லாம் தெரிவதில்லை? நான் செங்கல்பட்டில் இரண்டு வருஷம் படித்தேன். பத்து மைல் கூட இருக்காத கூடுவாஞ்சேரியில் எங்கள் குடும்பம் 25 வருஷம் வாழ்ந்திருக்கிறது. செங்கல்பட்டைக் கடக்கும்போதெல்லாம் ரோட்டிலிருந்தே ஒரு கோட்டையின் சுவர்களைப் பார்க்கலாம். அது என்ன கோட்டை, யார் கட்டியது என்றெல்லாம் எனக்கு படிக்கும்போது தோன்றியதே இல்லை. பாடப் புத்தகத்தில் இதைப் பற்றி ஒரு வரி இருந்திருந்தால் கூட, யாராவது வாத்தியார் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் கூட பற்றிக் கொண்டிருக்கும். அது என்ன எல்லா பாடப் புத்தகத்திலும் தஞ்சை பெரிய கோவிலைப் பற்றி மட்டுமே? லோகல் ஹிஸ்டரி கொஞ்சம் இருந்தால் உற்சாகமாக இருக்காதா? உத்திரமேரூர் என்ற ஊருக்கு பக்கத்தில் உள்ள கிராமங்களில்தான் என் சிறு வயது முழுதும் கழிந்தது. ஒரு இருபது வயது வாக்கில்தான் உத்திரமேரூரில் இருக்கும் ஒரு பெரிய ஏரி தந்திவர்மப் பல்லவன் எட்டு ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டி வைத்த ஏரி என்று தெரிந்தது! அவ்வளவு புராதனமான ஏரி என்றால் சும்மா ஜாலியாக ஒரு பிக்னிக்காவது போய் வந்திருப்போம். இன்று யோசித்துப் பார்த்தால் மானாம்பதி கிராமத்தில் இருந்த ஒரு சம்பிரதாயமான கோவிலை யார் கட்டியது, செங்கல்பட்டு குளவாய் ஏரி எப்போது வெட்டப்பட்டது, கூடுவாஞ்சேரியில் இருக்கும் ஒரு பழைய சிவன் கோவிலை யார் கட்டியது, எங்கள் குலதெய்வமான வைத்தீஸ்வரன்கோவில் எப்போது கட்டப்பட்டது, அது பாடல் பெற்ற ஸ்தலமா, அவ்வப்போது போயிருக்கும் திருக்கழுக்குன்றம் கோவில், மயிலை கபாலீஸ்வரர் கோவில், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில், திருத்தணி, திருப்பதி கோவில்களின் வரலாறு எல்லாம் எவ்வளவு சுவாரசியமாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. தாஜ் மகாலும், தஞ்சை பெரிய கோவிலும் முக்கியம்தான், ஆனால் பக்கத்தில் இருக்கும் வரலாறை நாம் ஏன் கண்டுகொள்வதே இல்லை?

விட்டல்ராவின் புத்தகத்தில் எனக்குப் பிடித்த விஷயம் இதுதான். அவர் சிறு வயதில் கோட்டைப் பித்து பிடித்து அலைந்திருக்கிறார். ஐம்பது வயதில் அந்தக் கோட்டைகளைத் தேடிப் போயிருக்கிறார். ஒவ்வொரு கோட்டைக்கும் சின்னதாக ஒரு வரலாற்றுக் குறிப்பு எழுதுகிறார். படிக்கும் நமக்கும் போய்ப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.

அம்ருதா வெளியீடு, கிழக்கு தளத்தில் 150 ரூபாய்க்குக் கிடைக்கிறது. வாங்கலாம். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

அவர் சென்ற கோட்டைகளின் பட்டியலை கீழே தந்திருக்கிறேன். நீங்கள் இந்தக் கோட்டைகளில் எதையாவது பார்த்திருந்தால், இல்லை வேறு ஏதாவது கோட்டையைப் பார்த்த அனுபவம் இருந்தால் அதைப் பற்றி சொல்லுங்களேன்!

அனுபந்தம்

அவர் எழுதி இருக்கும் கோட்டைகளின் பட்டியல்:

  1. நாமக்கல் கோட்டை
  2. ஓமலூர் கோட்டை (இப்போது அழிந்துவிட்டதாம்)
  3. ஹோசூரின் கெனில்வொர்த் கோட்டை (இப்போது அழிந்துவிட்டது)
  4. தென்கரைக் கோட்டை
  5. கிருஷ்ணகிரிக் கோட்டை
  6. தங்கணிக் கோட்டை
  7. ராயக்கோட்டை
  8. ஜெகதேவி
  9. வீரபத்திர துர்கம்
  10. மகராஜகடை
  11. சங்ககிரி
  12. ஆத்தூர் (இப்போது அழிந்துவிட்டது)
  13. தியாகதுர்கம்
  14. செங்கல்பட்டு
  15. வந்தவாசி
  16. வேலூர்
  17. செயின்ட் ஜார்ஜ் கோட்டை (சென்னை)
  18. செயின்ட் டேவிட் கோட்டை (கடலூர்)
  19. சந்திரகிரி
  20. பாலக்காடு
  21. சதுரங்கப் பட்டினம்
  22. செஞ்சி
  23. திருமயம்
  24. பெங்களூர்
  25. தரங்கம்பாடி
  26. ஸ்ரீரங்கப்பட்டினம்


This slideshow requires JavaScript.

10 thoughts on “விட்டல்ராவின் “தமிழகக் கோட்டைகள்”

  1. விட்டல்ராவ் அவர்களைப் பற்றி இப்பதிவின் மூலம் அறிந்தேன். நன்றி. நம் அருகில் இருக்கும் விசயங்களை குறித்து அறிந்து கொள்ள ஒரு நல்ல சூழல் இங்கில்லை என்பது மிகவும் வருத்தமான விசயம். நம்முடைய பள்ளிகளில் சிலபஸ் தாண்டி வந்தால் சாமிகுத்தம் ஆகிவிடும் என்று இருக்கிறார்கள். இதிலுள்ள கோட்டை ஒன்றைக்கூட நான் பார்த்ததில்லை. மதுரையைச் சுற்றியே ஒரு கோட்டை இருந்ததை காவல்கோட்டம் நாவலில் சு.வெங்கடேசன் எழுதியுள்ளார். இப்போது அதுவும் அழிந்துவிட்டது.

    Like

  2. Interesting coincidence. இரு தினங்களுக்கு முன் தான் விட்டால் ராவைப் பற்றி வாசித்தேன். அவரது “வாழ்வின் சில உன்னதங்கள்” புத்தகத்திற்கு விருது கிடைத்ததைப் பற்றியும், அந்தந புத்தகத்தைப் பற்றியுமான சுவாரஸ்யமான கட்டுரை.

    http://www.thehindu.com/arts/books/article3839768.ece

    இந்தியா வந்திருக்கிறேன். புத்தகங்களைத் ‘தேடித் தேடி’ ( எஸ்.ராவைப் போல :)) அலைந்து கொண்டிருக்கிறேன். இவற்றையும் வாங்க வேண்டிய பட்டியலில் சேர்த்தாகிவிட்டது.

    Like

  3. இந்தப் புத்தகத்தை நானும் படித்திருக்கிறேன். கோட்டைகள் பற்றிய வரலாற்றினை ஒரு கோர்வையாகச் சொல்லாமல் முன்னும் பின்னுமாக, தன் வரலாற்றோடும், அனுபவங்களோடும் விட்டல்ராவ் சொல்வது எனக்குப் பிடித்திருந்தது. ஆனாலும் அந்த மொழிநடை கொஞ்சம் கடு நடையாக இருப்பது போல் பட்டது. இன்னும் கொஞ்சம் எளிமைப்படுத்தி எழுதி இருக்கலாம் என நான் நினைக்கிறேன்.
    உங்கள் கருத்தென்ன ஆர்வி?

    Like

  4. விட்டல்ராவ் அவர்களை வெறும் பயண இலக்கியம் படைத்தவராக மட்டும் குறுக்கிவிட முடியாது. அவர் மேலும் பல சிறப்புகளுக்குச் சொந்தக்காரர். மேலதிகத் தகவல்கள் என் வலைத்தளத்தின் ‘எழுத்தாளர்’ பகுதியில் காணக்கிடைக்கிறது.

    Like

  5. ரெங்க சுப்பிரமணி, விட்டல்ராவின் நடை எனக்கு கடினமாகத் தெரியவில்லையே!

    சித்திரவீதிக்காரன், விட்டல்ராவின் காலவெளி எனக்கு பிடித்த புத்தகங்களில் ஒன்று. அவர் தொகுத்த இந்த நூற்றாண்டு சிறுகதைகள் (6 தொகுதிகள்) முக்கியமான ஒன்று, கட்டாயம் வாங்கிப் படியுங்கள்.

    பாலாஜி, புத்தகம் கிடைத்ததா?

    ஜீவி, விட்டல்ராவை பயண எழுத்தாளராகக் குறுக்கவில்லை, அவரது பயண எழுத்தைப் பற்றி எழுதி இருக்கிறேன், அவ்வளவுதான்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.