பாரதி வைத்த மூன்று நெருப்புகள்

(மீள்பதிவு)

இன்று என் அப்பாவின் பிறந்த நாள். அவர் இறந்து வருஷம் ஓடிவிட்டாலும் என் ஆழ்மனதில் அவர் உயிரோடுதான் இருக்கிறார். என் கனவுகளில் அவர் இன்னும் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்.

பத்து பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் அவர் இந்தத் தளத்தில் எழுதிய ஒரு பதிவு. அவர் பள்ளித் தலைமை ஆசிரியராக பணி புரிந்தவர். எனக்கு ஏழெட்டு வயது இருக்கும்போது ஏதோ பள்ளி உரையில் பாரதி 3 இடங்களில் தீயைப் பற்றி பாடியதாகக் குறிப்பிட்டார். நான் பாரதி பாடல்களைப் படிக்க ஆரம்பித்த பிறகு ஏண்டா அருமையான கவிதையாகிய அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் கவிதையை விட்டுவிட்டார் என்று யோசித்திருக்கிறேன், அவரிடம் கேட்கும் தைரியம் இருந்ததில்லை. 🙂

இதை பாரதி நினைவு நாளுக்காக எழுதிக் கொடுத்தார் என்று நினைவு.
அவர் நடைக்கும் என் நடைக்கும் உள்ள வித்தியாசம் ஆச்சரியப்படுத்துகிறது. ஓவர் டு அப்பா!


செப்டம்பர் 11-ஆம் தேதி அன்றுதான் பாரதிர பா ரதம் ஓட்டிய அமரகவி பாரதியின் நினைவு நாள். பாரதி “யார்” என்று கேட்காமல் ஆண்டுதோறும் அந்த நாளைக் கொண்டாடி வருகிறோம். அன்னார் சிலைக்கு மாலை அணிவித்தல், தேசிய கவி, கவிதை மூலம் விடுதலை வேட்கையைத் தூண்டிய புரட்சியாளர் சமுதாயச் சீர்திருத்தவாதி என்பன போன்ற புகழ் மாலைகள் சூட்டிப் பெருமை கொள்கிறோம். ஆனால் அந்தக் கவிஞன் இதயத்தில் கோபம் பல இடங்களில் கொப்பளிக்கிறது. மக்களை,சமூகத்தை பலவகையிலும் சாடுகிறான். கொழுந்து விட்டு எரியும் அந்தக் கனல் மூன்று இடங்களிலும் தீயிட்டுக் கொளுத்துகிற அளவுக்கு இருந்தது என்றால் அது மிகையாகாது.

முதலாவதாக நாம் பெண்ணியம், பெண் விடுதலை போன்ற விஷயங்களைப் பெருமையுடன் பெருமளவில் விவாதிக்கிறோம். அலசி அலசி பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றுகிறோம். ஆனால் அன்றே பாரதி “பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா” என்றும் “பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்று விடுதலைக் கும்மியிலும் பலவாறு பாடி மகிழ்கிறான். சக்தி, சக்தி எங்கும் சக்தி என உரத்துக் கூறிப் பெருமிதம் கொள்கிறான். ஆனால் பெண்களுக்கு இழுக்கு என்றால் அவன் நெஞ்சம் பொறுப்பதில்லை. “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்று வெகுண்டெழுகிறான். இதுதான் அய்யா, பாரதி பற்ற வைக்கும் முதல் நெருப்பு!

இரண்டாவதாக நாம் இலவசக் கல்வி, சமச்சீர் கல்வி,உயர் கல்வி, தொழிற் கல்வி என்றெல்லாம் அதிக அளவில் தர்க்கம் செய்கிறோம். மேடைகளில் முழங்குகிறோம். ஆனால் அடிப்படைக் கல்வியை, வாழ்க்கைக் கல்வியைப் பெருமளவில் மறந்துவிட்டோமே? கல்விக்கு வேண்டிய அடிப்படை வசதிகளைக் கூட செய்து கொடுக்கத் தவறிவிட்டோமே? இளஞ்சிறார் வாழ்க்கை வளம் பெற நல்ல பல ஆயத்தங்கள் செய்துவிட்டோமா? அமைப்புகளை உருவாக்கி இருக்கிறோமா? மீண்டும் பாரதி இங்கும் அறைகூவல் விடுக்கிறான்.

“அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்” போன்ற நற்காரியங்கள் பலவிருந்தாலும் “ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்ற உண்மையை முழுமையாக பாரதி உணர்ந்த காரணத்தால், “கல்வி வேண்டும், கல்விச் சாலைகள் வேண்டாவா?” என்று வினவுகிறான். மீண்டும் கவிஞன் குரல் உரத்துக் கேட்கிறது.

வீடுதோறும் கலையின் விளக்கம்
வீதிதோறும் இரண்டொரு பள்ளி
…………
நகர்களெங்கும் பலபல பள்ளி
தேடு கல்வியிலாத தோரூரை
தீயினுக்கு இரையாக மடுத்தல்

மீண்டும் பாரதியின் நெருப்பு; ஆம் பாரதியின் இரண்டாவது நெருப்பு.

சிறுமை கொண்டு பொங்கியவன் பாரதி. தவறென்று தெரிந்தால் தயக்கமின்றித் தட்டிக் கேட்கும் வல்லமை படைத்தவன். பாண்டவர்களின் மூத்தோன், தருமன் சூதாடி உடைமைகளனைத்தையும் – இளவல்கள், மனைவி அனைவரையும் இழந்தான். பாஞ்சாலி கெளரவ ஸபையில் அவமதிக்கப்பட்டாள். தவறு செய்த அண்ணனை, மூத்தவன் என்று கூடப் பாராமல் பீமன் சொற்களால் கவிஞன் சாடுகிறான்.

இது பொறுப்பதில்லை தம்பி!
எரிதழல் கொண்டு வா
கதிரை வைத்திழந்தான்-அண்ணன்
கையை எரித்திடுவோம்

மூன்றாவது முறையாக கவிஞன் பாரதியின் கனல் தெறிக்கும் சொற்கள் இது. பாரதியின் மூன்றாம் நெருப்பு.

பாரதி நினைவு நாளில், நாமும் வாய்ச்சொல் வீரராக இல்லாமல், செயல் வீரராக மாறி, அவனுடைய முற்போக்கு கருத்துக்களை நடைமுறைப்படுத்த சூளுரைப்போம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதியார் பக்கம்

Paula Richman (Ed): Ramayana Stories in Modern South India

நான் மிகவும் ரசித்துப் படித்த புத்தகங்களில் ஒன்று.

ரிச்மன் ராமாயண மறு வாசிப்புகளை – நாட்டுப் பாடல்கள், நவீன சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், சினிமா (காஞ்சன சீதா) என்று பலதரப்பட்ட மறு வாசிப்புகளைத் தொகுத்திருக்கிறார்.

மறுவாசிப்புகளில் மீண்டும் மீண்டும் சில கருக்கள் தெரிகின்றன; அக்னிப்ரவேசம், சீதையை ராமன் காட்டுக்கு அனுப்புவது, சம்புகன். கர தூஷணர், சுபாஹு-மாரீசன் மாதிரி பாத்திரங்களை வைத்து நான் எழுதினால்தான் உண்டு போலிருக்கிறது.

தெலுகு இலக்கியம் பற்றி அதிகம் தெரியவில்லை என்று சமீபத்தில் குறைப்பட்டுக் கொண்டிருந்தேன். இந்தப் புத்தகத்தில் சலம் எழுதிய சிறுகதை ஒன்று – அக்னிப்ரவேசம் என்றதும் சீதை உனக்கு ராவணனே மேல் என்று ராவணனின் சடலத்தோடு உடன்கட்டை ஏறிவிடுகிறாள்! வோல்கா லலிதகுமாரியின் சிறுகதையில் வால்மீகி ஆசிரமத்தில் இருக்கும் சீதையும் ஊனப்பட்ட சூர்ப்பனகையும் தோழிகள் ஆகிறார்கள். காவனசர்மா என்பவர் எழுதிய சிறுகதையில் சூர்ப்பனகை சீதையிடம் ஆண்களின் ஆதிக்கத்தைப் பற்றி உணர்த்துகிறாள். தவிர நாட்டுப் பாடல்களின் மொழிபெயர்ப்புகள். ஒன்றில் நேரத்துக்கு படுக்கைக்கு வரவில்லை என்று ராமன் குறைப்பட, சீதை மாமனார் மாமியாருக்கு சேவை செய்துகொண்டிருக்கிறாள். தாமதமாக வரும் சீதையை ராமன் படுக்கை அறைக்கு உள்ளே அனுமதிப்பதில்லை, கௌசல்யா வந்து சமாதானப்படுத்த வேண்டி இருக்கிறது. இன்னொன்றில் பட்டாபிஷேகத்தின்போது 14 வருஷம் தூங்காத லக்ஷ்மணன் தனக்கு தூங்க நேரமாகிவிட்டது என்று நினைவுபடுத்த வரும் நித்ராதேவியைப் பார்த்து சிரிக்கிறான். ராமன் சீதை உட்பட எல்லாருக்கும் லக்ஷ்மணன் தங்களைப் பார்த்து இளக்காரமாக நகைக்கிறான் என்று குத்துகிறது.

மாப்ளா ராமாயணம் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கேரளத்தின் மாப்ளா முஸ்லிம்களின் நாட்டுப்பாடல்கள் போல பாடப்பட்டதாம். இன்று மறைந்துவிட்டது. பிராந்தன் (ஆம், பிராந்தன்தான்) ஹாசன்குட்டி என்பவர் ஒரு காலத்தில் இதைப் பாடித் திரிந்து கொண்டிருந்தபோது அதைக் கேட்ட டி.ஹெச். குன்ஹிராமன் நம்பியார் (T.H. Kunhiraman Nambiar) என்ற சிறுவன் மிகவும் ஆர்வமாக கிட்டத்தட்ட 700 வரிகளை மனப்பாடம் செய்திருக்கிறார். அறுபதுகளில் எம்.என். கரசேரி (M.N. Karassery) என்பவர் அதை ஆவணப்படுத்தி இருக்கிறார். இது ஹாசன்குட்டி ஆரம்பித்ததா இல்லை அதற்கு முன்பே பல காலமாக இருந்ததா என்று நிச்சயமாகத் தெரியவில்லை. ரிச்மன் இங்கே ஒரு நூறு நூற்றைம்பது வரிகளைக் கொடுத்திருக்கிறார். சூர்ப்பனகையை ராமன் ஷரியா விதிப்படி உன்னை ஏற்பதற்கில்லை என்று சொல்லும் இடத்தில் நான் வாய் விட்டுச் சிரித்துவிட்டேன்.

மலையாளத்திலிருந்து தொக்குக்கப்பட்ட பிற மறுவாசிப்புகள்: குமரன் ஆசானின் கவிதை, மற்றும் லலிதா லெனின், கே. சச்சிதானந்தன் ஆகியோரின் கவிதைகள்; கே.பி. ஸ்ரீதேவி (K.B. Sridevi) என்பவர் எழுதிய சிறுகதை புதுமைப்பித்தனின்சாபவிமோசனம்” சிறுகதையை எதிரொலிக்கிறது. (1990-இல் எழுதப்பட்டிருக்கிறது) என்.எஸ். மாதவன் என்பவர் அகல்யை கதையை நவீன காலகட்டத்தில் திருப்பி எழுதி இருக்கிறார்.

கன்னடத்தில் குவெம்புவின் சூத்திர தபஸ்வி நாடகத்திலிருந்து சில பகுதிகள். சம்புகனை ராமன் கொல்வதில்லை, புகார் செய்த பிராமணனுக்குத்தான் ஆபத்து! சித்திர ராமாயணா என்ற நாடகத்திலிருந்து சில பகுதிகள் (தொன்மையான கதையை ஹெச்.எஸ். வெங்கடேச மூர்த்தி நாடகம் ஆக்கி இருக்கிறார். சூர்ப்பனகையின் சூழ்ச்சியால் ராவணனின் படத்தை சீதை வரைகிறாள், படம் உயிர் பெற்றுவிடுகிறது. சீதையைத் தழுவ விரும்பும் ராவணனுக்கு சீதை சொல்லும் யோசனை – என் மகனாகப் பிற! சந்தேகக்கார ராமன் ராவணனோடு போரிடும்போது, நான் வரைந்த படம், என் “மகன்” என்று சீதை ராவணனை காப்பாற்றப் பார்க்கிறாள்.) சில நாட்டுப் பாடல்களின் மொழிபெயர்ப்புகள்.

தமிழிலிருந்து குமுதினியின் “அந்தப்புர தபால்“, புதுமைப்பித்தனின்சாப விமோசனம்“, அம்பையின் “அடவி” சிறுகதையிலிருந்து ஒரு பகுதி, பாரதியாரின்குதிரைக்கொம்பு” என்ற ஒரு வேடிக்கைக் கதை, சிவசேகரம் என்ற இலங்கை எழுத்தாளரின் ஒரு கவிதை. அசோகமித்ரனின்உத்தர ராமாயணம்” யார் கண்ணிலும் படுவதே இல்லை என்பது எனக்கு பெரிய குறையாக இருக்கிறது.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

பின்குறிப்பு: இந்த புத்தகத்தை படித்துவிட்டு ஆப்ரே மேனன் எழுதிய ராமாயணத்தையும் (1954) படித்தேன். கொடுமை! கிண்டல் செய்கிறோம் என்று நினைத்துக் கொண்டு என்னத்தையோ எழுதி இருக்கிறார். பாலா ரிச்மன் போன்ற முழு வெள்ளைக்காரிக்கு ராமாயணம் பிடிபடும்போது மேனன் போன்ற அரை இந்தியர் அரை வெள்ளைக்காரருக்கு பிடிபடவில்லையே என்று நினைத்துக் கொண்டேன். மேனன் எழுதிய புத்தகம் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறதாம். இப்படி தடை செய்யப்பட்டிருப்பதால்தான் இதன் பேர் இன்னும் நினைவில் இருக்கிறது என்று தோன்றுகிறது. இதை எல்லாம் ஃப்ரீயாக விட்டுவிடவேண்டும் என்ற புரிதல் என்றுதான் இந்திய அரசுக்கு வருமோ தெரியவில்லை.


தொகுக்கப்பட்ட பக்கம்: ராமாயணம்

தொடர்புடைய சுட்டிகள்:
குமுதினியின் “அந்தப்புர தபால்”
ஏ.கே. ராமானுஜனின் “300 Ramayanas
நார்லா வெங்கடேஸ்வர ராவ் எழுதிய “சீதா ஜோசியம்
புதுமைப்பித்தனின் “சாபவிமோசனம்

பாரதி கவிதை மொழிபெயர்ப்பு

என் மூத்த பெண்ணுக்கு தாத்தாவும் பாட்டியும் தமிழ் படிக்கக் கற்றுக் கொடுத்திருந்தார்கள்; ஆனால் இப்போது மறந்துவிட்டாள் என்று நினைக்கிறேன். இளையவள் சுத்தம். அவர்கள் இருவருக்காகவும் இந்த மொழிபெயர்ப்பு.

This is one of my favorite Bharathi poems. I think it transcends language and satisfied my definition of a poem. Perhaps it deserves a better translator than I, but you have to do what you can…


The past won’t come back, fools!
Obsess not on the past and sink into the morass of misery
Don’t let the past weigh down your mind!

I am reborn this moment!
Let your heart ring with these words!
Eat and play and and take pleasure in life!

Stop whining and crying by obsessing over the past again again! Alas!

Oh men without genius!
Observe the  new and newer and newer and newer invigorating wind turning into fresh life in me!

Do not confusing soul with past deeds and torture yourself!

Forget self!
Surrender yourself to the doe-eyed, doe-eyed all supreme goddess!
She would shield you from all the unbearable past that weighs you down.

I am Vishnu, Am I not the son of Siva! Great? I am reborn this moment!

I am new, I am the supreme God, I am without decay
I live in the world like the Gods of heaven
I am the Siddha!
I stand tall on the hill of righteousness!
I am not bogged down by future plans and worries,
I can never be brought down, I can never be defeated!

The supreme men have great goals and perform millions of acts. But they don’t become slaves of karma!
They are the elite students of the one with Uma as his left side, the half crazed preceptor of sacred vedas, the Siva.
They conquer and demolish the intense karma and roam on the earth as the bright fire.

Oh bright disciple, do infinite things and become deathless!


சென்றதினி மீளாது மூடரே, நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்; சென்றதனைக் குறித்தல் வேண்டா.

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்.

அஃதின்றிச் சென்றதையே மீட்டும் மீட்டும்
மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா, அந்தோ!

மேதையில்லா மானுடரே! மேலும் மேலும்
மேன்மேலும் புதிய காற்றெம்முள் வந்து
மேன்மேலும் புதியவுயிர் விளைத்தல் கண்டீர்!

ஆன்மாவென்றே கருமத் தொடர்பை எண்ணி
அறிவு மயக்கம் கொண்டு கெடுகின்றீரே!

மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி
வசப்பட்டுத் தனை மறந்து வாழ்தல் வேண்டும்.
சென்றவினைப் பயன்களெனைத் தீண்ட மாட்டா.

ஸ்ரீதரன் யான் சிவகுமாரன் யானன்றோ?
நன்றிந்தக் கணம் புதிதாய்ப் பிறந்துவிட்டேன்.

நான் புதியவன், நான் கடவுள், நலிவிலாதோன்’
என்றிந்த உலகின்மிசை வானோர் போலே
இயன்றிடுவார் சித்தரென்பார்; பரம தர்மக்
குன்றின்மிசை ஒரு பாய்ச்சலாகப் பாய்ந்து
குறிப்பற்றார் கேடற்றார் குலைதலற்றார்.

குறி அனந்தமுடையோராய்க் கோடி செய்தும்
குவலயத்தில் வினைக்கடிமைப் படாதாராகி
வெறியுடையோன் உமையாளை இடத்திலேற்றான்
வேதகுரு பரமசிவன் வித்தை பெற்றுச்
செறியுடைய பழவினையாம் இருளைச் செற்றுத்
தீயினைப் போல் மண் மீது திரிவார் மேலோர்.

அறிவுடைய சீடா, நீ குறிப்பை நீக்கி
அனந்தமாம் தொழில் செய்தால் அமரனாவாய்.


குறிப்பாக இந்த வரிகள்:

ஸ்ரீதரன் யான் சிவகுமாரன் யானன்றோ?
நன்றிந்தக் கணம் புதிதாய்ப் பிறந்துவிட்டேன்

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்

தின்று விளையாடி என்பது கவிதை!

மேதையில்லா மானுடரே! மேலும் மேலும்
மேன்மேலும் புதிய காற்றெம்முள் வந்து
மேன்மேலும் புதியவுயிர் விளைத்தல் கண்டீர்

மேலும் என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி சும்மா பூந்து விளையாடுகிறார்! அதே போல வெறுமனே மான்விழி என்று சொல்லாமல்

மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி

என்பதெல்லாம் வேறு லெவல்.

பாரதியின் பலம் அவரது கவிதைகளின் உத்வேகம். அதை மொழிபெயர்க்கவே முடியாது, அவரால் தமிழ் மொழி என்ற எல்லையைத் தாண்ட முடியாது என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு.  இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்றால் தமிழில் கேட்கவே குளுமையாக இருக்கிறது, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் உதடு தானாக் சுழிக்கிறது.

மொழியைத் தாண்ட முடியாதது உயர்ந்த கவிதை அல்ல என்று நான் உறுதியாகக் கருதுகிறேன். அதனால் பாரதி மஹாகவி அல்லர் என்று என் புத்தி சொல்கிறது. ஆனால் ஏழெட்டு வயதிலிருந்தே பாரதி மஹாகவி என்று எனக்கு சொல்லித் தரப்பட்டிருக்கிறது, அது பசுமரத்தாணி போல பதிந்துவிட்டது. அதனால் என் மனம் எப்போதுமே அவரை மஹாகவி என்றே கருதி வந்திருக்கிறது/வருகிறது. மனமா புத்தியா என்றால் மனம்தான் வெல்லும்.

இந்தக் கவிதைக்கு மொழி தடையே அல்ல, மனதுக்கும் புத்திக்கும் நடுவே தகராறே கிடையாது…

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்

நால்வர்: திரு.வி.க., வ.வே.சு. ஐயர், சிவா, பாரதி

வெ. சாமிநாத சர்மா எழுதிய அருமையான புத்தகம் நான் கண்ட நால்வர் (1959) – திரு.வி.க., வ.வே.சு. ஐயர், சுப்ரமணிய சிவா, பாரதி இவர்கள் நால்வரோடும் தன் பழக்கத்தைப் பற்றி எழுதி இருக்கிறார். அவரது அனுபவங்கள் என்ற குறுகிய ஆடியிலேயே (lens) இவர்கள் நால்வரின் குணங்களை நன்றாகப் புரிய வைத்துவிடுகிறார். சுருக்கமாகச் சொன்னால் அவர் கண்ணில் திரு.வி.க. சீலர்; வ.வே.சு. ஐயர் வீரர்; சிவா போராளி; பாரதி? கொஞ்சம் பித்துப் பிடித்த கவிஞர்!

சர்மாவின் நடை, அதிலிருக்கும் வேகம், எளிமை, உண்மை (genuineness) எனக்கு எப்போதும் மிகவும் பிடித்தமானவை. அவை இந்தப் புத்தகத்தில் மிகச் சிறப்பாக வெளிப்பட்டிருக்கின்றன.

சர்மாவுக்கு ஒரு குறை. வ.உ.சி. இவர் வேலை பார்த்த அலுவலகத்துக்கு அடிக்கடி வருவாராம். ஆனால் அவரோடு நெருங்கிப் பழக முடியவில்லையாம். அவரைப் பற்றி இந்தப் புத்தகத்தில் எழுத முடியவில்லையே என்று வருத்தப்படுகிறார்.


சர்மாவுக்கு திரு.வி.க. குரு. பத்திரிகையாளராக, எழுத்தாளராக ஆக்கியவர் அவர்தான். தேசபக்தன் பத்திரிகையில் உதவி ஆசிரியராகச் சேர்ந்ததிலிருந்து பழக்கம் ஆரம்பிக்கிறது. திரு.வி.க.வை ஒரு வார்த்தையில் விவரித்துவிடுகிறார் – சீலர்! வேலைகளை இழுத்துப் போட்டு செய்து திரு.வி.க.வின் அன்பைப் பெற்றிருக்கிறார். திரு.வி.க.வால் கண்டிப்பாக பேச முடியாது, அதற்கு சர்மாவை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். சர்மாவே சில சமயம் திரு.வி.க. எழுத வேண்டிய தலையங்கம், பத்திகள் எல்லாவற்றையும் எழுதிவிடுவாராம் – அதுவும் திரு.வி.க.வின் பாணியிலேயே! திரு.வி.க. சர்மா குடத்திலிட்ட விளக்காக இருக்கிறார், தான் சாதிப்பதைக் கூட வெளியில் சொல்லிக் கொள்வதில்லை என்று வருத்தப்படுவாராம். திரு.வி.க.வோடு மாலை நேரத்தில் ராயப்பேட்டையிலிருந்து கடற்கரைக்கு லாயிட்ஸ் ரோடு வழியாக நடந்து போவார்களாம்; (பிற்காலத்தில் மாம்பலத்துக்கு நடை) அந்த நடையும் பேச்சும் சர்மாவுக்கு பொன்னான தருணங்கள்.

சர்மாவுக்கு திரு.வி.க. மேல் இருப்பது ஏறக்குறைய பக்தி. ஆனால் திரு.வி.க. சர்மாவோடு தன்னை நெருக்கமாக உணரவில்லையோ என்று எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. ஏனென்றால் திரு.வி.க.வின் தன்வரலாறான வாழ்க்கைக் குறிப்புகள் புத்தகத்தில் சர்மாவின் பேர் ஓரிரு பக்கத்தில் வந்திருந்தால் அதிகம்.


தேசபக்தன் பத்திரிகையிலிருந்து திரு.வி.க. விலகி நவசக்தி என்ற பத்திரிகையை ஆரம்பித்திருக்கிறார். அவருக்கு பதிலாக வ.வே.சு. ஐயர் தேசபக்தன் பத்திரிகை ஆசிரியராக வந்திருக்கிறார். சர்மா திரு.வி.க. பத்திரிகையில் சேரப் போகிறேன் என்றதும் ஐயர் முதலியாரே போயிருக்கக் கூடாது, இப்போது நீங்களும் விலகினால் எப்படி, நான் முதலியாரோடு பேசிக் கொள்கிறேன் என்று இவரை நிறுத்திக் கொண்டாராம். திரு.வி.க. முடிந்த வரையில் தமிழில் எழுதுவார் என்றால் ஐயர் வடமொழி கலந்து எழுதுவாராம். (ஆனால் ஆங்கிலத்தை அறவே தவிர்ப்பாராம்.). சர்மா ஐயர் பாணியில் அவ்வப்போது தலையங்கம், பத்தி எழுதுவாராம். திரு.வி.க. காலத்தில் அவர் எழுதியதை திரு.வி.க.வே எழுதியது என்று படிப்பவர்களை நினைக்க வைத்தது போலவே இப்போது ஐயரே எழுதியது என்று நினைக்க வைத்தாராம்.

ஐயருக்கு ஆசிரியர் வேலைக்கு என்ன சம்பளம்? மாதம் 150 ரூபாய்! அது அப்போது பெரிய பணம்தான் என்று நினைக்கிறேன். ஐயர் சரித்திர நாவல்கள் பலவற்றை எழுதி தமிழர்களுக்கு வீரம் ஊட்ட வேண்டும் என்று நினைத்திருக்கிறார். அதற்குத்தான் சிறுகதைகள் எழுதிப் பழகிக் கொண்டாராம். ஐயர் கறாரானவரும் கூட. சர்மா எழுதிய பாணபுரத்து வீரன் நாடகத்துக்கு இது நாடகத்துக்கு நான் வைத்திருக்கும் வரையறைக்கு சரிப்படவில்லை, அணிந்துரை தரமாட்டேன் என்று மறுத்துவிட்டாரம். தனக்கு மிக நெருக்கமான பாரதியாரின் பாடல்களுக்கு – கண்ணன் பாட்டு – எழுதிய அணிந்துரையிலேயே நொட்டை சொல்லி இருக்கிறார் என்கிறார்.

1923-இல் காகிநாடா காங்கிரசில் ஐயர் பூரண ஸ்வராஜ்யமே நமது குறிக்கோள் என்று தீர்மானம் கொண்டு வந்தாராம். ஆனால் ஐயரின் தீர்மானத்துக்கு ஆதரவாக ஒரு ஓட்டு கூட விழவில்லையாம். நேரு லாகூரில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட பூரண ஸ்வராஜ்யத் தீர்மானம் ஆறு வருஷங்களுக்குப் பின்னால்தான் நிறைவேறி இருக்கிறது.

ஐயருக்கு ஜாதி ஆசாரமெல்லாம் கிடையாது, ஆனால் சுத்தமாக இருக்க வேண்டும் என்று கண்டிப்பாக இருப்பார் என்கிறார். குருகுல விவகாரம் மிகைப்படுத்தப்பட்டது என்கிறார். கட்டுமஸ்தாக இருப்பார், தான் எழுதாத கட்டுரைக்கு பொறுப்பேற்று சிறை சென்றபோதுதான் அவர் உடல் நலம் கொஞ்சம் கெட்டது என்கிறார். ஐயர் அவருக்கு அடுத்த குரு.


சிவா மயிலாப்பூரில் இவர் வீட்டுக்கு அருகேதான் வாழ்ந்திருக்கிறார். அவ்வப்போது தேசபக்தன் அலுவலகத்துக்கு வந்து ஐந்து பத்து வாங்கிக் கொள்வாராம். அதுவும் எப்படி? திரு.வி.க.வை விளக்கெண்ணெய் முதலியார், வழவழா முதலியார் என்றுதான் அழைப்பாராம். உரிமையோடு கேட்டு வாங்கிக் கொள்வாராம். திரு.வி.க.வும் எப்போதும் மறுத்ததில்லையாம். அன்னி பெசண்டுக்கு திரு.வி.க.வும் சர்மாவும் தந்த ஆதரவை வெறுத்தாராம். அடுத்த நாட்டுக்காரி நமக்கு விடுதலை வாங்கித் தரமுடியாது என்று நினைத்தாராம். சர்மா எப்போதும் “அன்னை பெசண்ட்” என்றுதான் எழுதுவாராம், அது சிவாவுக்கு கடுப்பைக் கிளப்புமாம். “அன்னிய பெசண்ட்” என்று எழுதும் என்பாராம். சிவா வறுமை, நோய் என்று படாதபாடு பட்டிருக்கிறார், ஆனால் பத்திரிகை, எழுத்து, போராட்டம், சிறை என்று சோர்வே இல்லாமல் உழைத்திருக்கிறார்.


பாரதியும் அவ்வப்போது தேசபக்தன் அலுவலகத்துக்கு வருவார். சர்மாவின் பத்திகளைப் படித்துவிட்டு எழுதியவர் இவரா என்று வியந்தாராம். பாரதியின் கவித்துவம் அப்போது தான் உட்பட்ட பலராலும் புரிந்து கொள்ளப்படவில்லை என்கிறார். வ.உ.சி., வ.வே.சு. ஐயர், சிவா போன்ற வெகு சிலரே அவரது மேதமையை உணர்ந்திருந்தார்களாம். மறைவுக்குப் பிறகுதான் அவர் ஒரு படிமம் (icon) ஆனார் என்கிறார். அருமையாகப் பாடுவாராம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

வ.உ.சி. கண்ட பாரதி


இன்று பாரதி நினைவு நாள் (செப்டம்பர் 11). வ.உ. சிதம்பரம் பிள்ளை எழுதிய நான் கண்ட பாரதி என்ற சிறு புத்தகத்தைப் பற்றி இன்று.

வ.உ.சி.க்கும் பாரதிக்கும் இருந்த நட்பையும், பந்தத்தையும், உறவையும் பற்றி எனக்கு சிறு வயதில், முதன்முதலாக ஏற்பட்ட பிம்பம் கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் மூலமாத்தான். ஆனால் வ.உ.சி. சிறை சென்ற பிறகு, பாரதி புதுவை சென்ற பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் மறந்துவிட்டார்களா, உண்மையாகவே ஆழமான நட்புதானா என்று தோன்றவும் செய்தது. வயதான பிறகுதான் உண்மையான பந்தம் இருந்தாலும் குடும்பக் கவலைகளாலும் பணப் பிரச்சினைகளாலும் நெருங்கிய நண்பர்களுக்குள்ளும் தொடர்பு விட்டுப் போகக் கூடும் என்று சொந்த அனுபவத்திலேயே உணர்ந்துகொண்டேன். இருந்தாலும் இருவரும் கடிதம் கூட எழுதிக் கொள்ளவில்லையா என்று தோன்றியது.

வ.உ.சி.யின் மகனான வ.உ.சி. சுப்ரமணியம் அப்பா தன் நண்பரைப் பற்றி எழுதிய குறிப்புகளை 1946-இல் புத்தகமாகப் பிரசுரித்திருக்கிறார். அ.இரா. வேங்கடாசலபதி அதன் கையெழுத்துப் பிரதியையே வாங்கிப் படித்துப் பார்த்தாராம். 1946-இல் வ.உ.சி.யும் இல்லை, பாரதியும் இல்லை என்பது புத்தகத்துக்கு poignancy-ஐத் தருகிறது.

புத்தகம் முழுக்க முழுக்க வ.உ.சி.யின் பர்சனல் நினைவுகள். சிதம்பரம் பாரதிக்கு பத்து வருஷம் மூத்தவர். ஆனால் பாரதிதான் சிதம்பரத்துக்கு மாமா; சிதம்பரம் பாரதிக்கு மாப்பிள்ளை. சிதம்பரத்தின் சிறு வயதில் பாரதியின் அப்பா சின்னச்சாமி ஐயர் சிதம்பரத்தின் சொந்த ஊரான ஒட்டப்பிடாரத்துக்கு அடிக்கடி வருவாராம். பாரதியைப் பற்றி சிதம்பரம் கேள்விப்பட்டிருக்கிறார். சென்னை சென்றபோது ஒரு முறை பார்த்திருக்கிறார். இருவருக்கும் விடுதலை வேட்கை; வெள்ளைக்காரன் மீது கோபம். திலகர் கோஷ்டி. பிபின் சந்திரபாலால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள். நட்பு பற்றிக்கொண்டுவிட்டது. சூரத் காங்கிரசிற்கு இருவரும் சேர்ந்து போய் திலகர் பக்கம் நின்று போராடி இருக்கிறார்கள். சிதம்பரம் விஞ்ச்-சிதம்பரம் பற்றி பாடிய பாட்டை எல்லாம் தண்டனைக்கு முன் பாரதி வாயாலேயே கேட்டு மகிழ்ந்திருக்கிறார். சிதம்பரம் சிறை சென்றபின் பாரதி கப்பல் கம்பெனியைக் காப்பாற்றுங்கள் என்று பிச்சையே எடுத்திருக்கிறார். Literal ஆகவே மூர்மார்க்கெட்டில் நின்று பேசி சேர்த்த பணம் ஒரு ரூபாய், எட்டணா என்றெல்லாம் குறிப்பு இருக்கிறது. ஆனால் லட்சக்கணக்கில் பணம் தேவைப்பட்டிருக்கிறது, சில நூறுகள்தான் சேர்ந்திருக்கின்றன. சிதம்பரம் விடுதலை ஆன பிறகு புதுவை சென்று பாரதியை சந்தித்திருக்கிறார்.

தான் கடைசியாக பாரதியை சந்தித்தது பற்றி வ.உ.சி. எழுதி இருப்பது உள்ளத்தைத் தொடும் நிகழ்ச்சி. சென்னையில் ஒரு நாள் சிதம்பரம் வீட்டுக்கு பாரதியும் ஒரு சாமியாரும் போயிருக்கிறார்கள். வீட்டில் சிதம்பரம் இல்லை. சிதம்பரத்தின் மனைவியிடம் உரிமையோடு சோறு போடு என்று கேட்டு வாங்கி சாப்பிட்டுவிட்டு (பாரதிக்கு ஜாதி ஆசாரம் எதுவும் கிடையாது என்பதை பல முறை பாரதிதாசனும் சொல்லி இருக்கிறார்.) இருவரும் அங்கேயே வராந்தாவில் தூங்கி இருக்கிறார்கள். சிதம்பரம் வந்ததும் பாரதிக்கு கண்ணில் ஒளி இல்லை என்று கவனிக்கிறார். பிறகு பாரதியும் சாமியாரும் எலுமிச்சங்காய் அளவில் கஞ்சா தின்பதைக் கண்டு சிதம்பரம் அதிர்ந்திருக்கிறார். “அடப்பாவி! காலையிலேயே இவ்வளவா!” என்று கேட்க பாரதியோ கூலாக “நீ திட்டுவாய் என்றுதான் இவ்வளவு குறைவாக எடுத்துக் கொள்கிறேன்” என்று சொல்லி இருக்கிறார்.

உண்மையான தியாகிகளுக்கு செத்த பிறகுதான் சிலை வைக்கிறோம், அதுவும் சில சமயம் மட்டுமே.

புத்தகத்தை இணைத்திருக்கிறேன், படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்

ம.பொ.சி. எழுதிய “கப்பலோட்டிய தமிழன்”

இன்று வ.உ.சி.யின் பிறந்த நாள். (செப்டம்பர் 5). அதனால் மீள்பதித்திருக்கிறேன். புத்தகத்தின் மின்பிரதி இங்கே.

வ.உ. சிதம்பரம் பிள்ளை தீவிரமாக இயங்கிய 1905-1908 காலத்துக்குப் பிறகு அவரை தமிழர்கள் மறந்தே போனார்கள். மறக்காதவர் ம.பொ.சி.

ம.பொ.சி.க்கு வ.உ.சி. மீது பக்தியே இருந்திருக்கிறது. சிதம்பரத்தின் தியாகங்களை இந்தியாவும் தமிழகமும் மறந்துவிடக் கூடாது என்று அவர் படாதபாடு பட்டிருக்கிறார். அன்றைய காங்கிரசாருக்கு – ராஜாஜி, சத்தியமூர்த்தி உட்பட – இதில் பெரிதாக அக்கறை இருந்ததாகத் தெரியவில்லை. இத்தனைக்கும் ராஜாஜி வ.உ.சி.யோடு பழக்கம் உள்ளவர். சூரத் காங்கிரசுக்கு அவரோடும் பாரதியோடும் சென்றிருக்கிறார். ஆனால் முப்பதுகளின் இறுதியில் காங்கிரஸ் அலுவலகத்தில் சிதம்பரத்தின் சிலை வைக்க வேண்டுமென்று ம.பொ.சி. முயன்றதற்கு எதிர்ப்பு இருந்திருக்கிறது. ஒரு பத்து பதினைந்து வருஷத்தில் இந்த நிலை மாறி இருக்கிறது. அதற்கு ம.பொ.சி.தான் காரணம்.

ம.பொ.சி. ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். பெரிய படிப்பு எல்லாம் கிடையாது. பிராமணர்களுக்கு இருக்கக் கூடிய நெட்வொர்க்கும் இல்லை. ரொம்பக் கஷ்டப்பட்டு நாற்பதுகளில் இந்த புத்தகத்தின் (வீரபாண்டிய கட்டபொம்மன் புத்தகமும் கூட) முதல் பதிப்பைக் கொண்டு வந்திருக்கிறார். புத்தகம் விற்கவில்லை.

இரண்டு மூன்று வருஷம் கழித்து சின்ன அண்ணாமலை என்ற காங்கிரஸ்காரரைப் போய்ப் பார்த்திருக்கிறார். சி. அண்ணாமலை ஒரு பதிப்பகம் நடத்தி வந்திருக்கிறார். சி. அண்ணாமலை சாணி நிற காகிதத்தில் மோசமான முறையில் அச்சிடப்பட்ட புத்தகத்தைப் பார்த்திருக்கிறார். புத்தகத்தை நல்ல முறையில் பதித்து பெரிதாக விளம்பரம் செய்திருக்கிறார். புத்தகம் விற்றது, கப்பலோட்டிய தமிழன் என்ற பெயர் நிலைத்துவிட்டது. சிதம்பரம் பிள்ளையை மறக்க முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. (கட்டபொம்மன் புத்தகமும் பிரபலமானது.)

முக்கியமான புத்தகம், ஆனால் நல்ல biography இல்லை. ம.பொ.சி.க்கு சிதம்பரம் பிள்ளை ஏறக்குறைய தெய்வம். தெய்வத்தைப் பற்றி பாரபட்சமில்லாமல் எங்கே எழுதுவது? அதுவும் இது ஒரு propaganda புத்தகம், சிதம்பரம் பிள்ளையைப் பற்றி எல்லாரும் நல்லபடியாக நினைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்ட புத்தகம். இதில் குறை காண்பது என்ற பேச்சே கிடையாது. சுருக்கமாக பிறப்பு, வக்கீல் தொழில், ஹார்வி (கோரல்) மில் ஸ்ட்ரைக், கப்பல் கம்பெனி, தூத்துக்குடி+திருநெல்வேலி வட்டாரத்தில் அவர் இட்டதே சட்டம் என்ற நிலை, மக்கள் ஆதரவு, கலெக்டர் வின்ச், கொடூரமான ஜெயில் தண்டனை, ஜெயிலிருந்து திரும்பிய பிறகு பட்ட கஷ்டங்கள் என்று எழுதி இருக்கிறார்.

பிள்ளையை ஒழித்து விடவேண்டும் என்று ஆங்கில அரசு முனைந்தது தெரிந்த விஷயம். உதாரணமாக சுப்ரமணிய சிவாவுக்கு பத்து வருஷமோ என்னவோ சிறைத்தண்டனை. அவருக்கு உதவியதற்காக பிள்ளைக்கு இருபது வருஷம் சிறைத்தண்டனை. குற்றம் செய்தவனை விட உதவி செய்தவனுக்கு அதிக தண்டனை என்ற விசித்திரம் எல்லாம் நடந்தது. பிள்ளையின் சொத்து சுகம் எல்லாம் போனது. ஜெயிலிலிருந்து வந்ததும் அடுத்த 24 வருஷம் கஷ்ட ஜீவனம்தான். அரசியலில் தீவிரமாக ஈடுபடமுடியாத நிலை. மீண்டும் ஜெயிலுக்குப் போக வேண்டும் என்றால் நிச்சயமாக பயந்திருப்பார். காந்தி வந்து எல்லாரும் ஜெயிலுக்குப் போகலாம் என்றால் பிள்ளை என்ன சந்தோஷத்தில் குதித்திருப்பாரா? ம.பொ.சி. இதை காந்தியின் வழியை வ.உ.சி. நிராகரித்தார் என்று நாசூக்காக சொல்ல முயற்சிக்கிறார்.

ஜெயிலிலிருந்து திரும்பி வந்ததும் நெருங்கிய நண்பர்களாக இருந்த பிள்ளையும் பாரதியும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளவே இல்லையா? (தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என்று வ.உ.சி.யே தகவல் தருகிறார்.) ஜெயிலில் தனக்கு பிள்ளை அல்லது பிராமண ஜாதியை சேர்ந்த ஒருவனே சமைக்க வேண்டும் என்று அவர் போராடியது உண்மையா? (ம.பொ.சி. அவர் ஜாதி வித்தியாசம் பார்ப்பதில்லை என்பதற்கு சில உதாரணங்கள் தருகிறார், ஆனால் இதுவும் உண்மையே.) ஈ.வே.ரா.வின் தி.க. இயக்கத்தை – குறிப்பாக பிராமண எதிர்ப்பு நிலையை – அவர் ஆதரித்தாரா? (ம.பொ.சி. இல்லை என்கிறார், ஆனால் சில சுயமரியாதை இயக்க மாநாடுகளில் கலந்து கொண்டிருக்கிறார்.) இதற்கெல்லாம் நீங்கள் இங்கே விடை பெற முடியாது.

சின்ன புத்தகம். ஆனால் முக்கியமான ஆவணம். ம.பொ.சி.யின் பக்தி வலிமையாக வெளிப்படுகிறது. கட்டாயமாக படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

மயிலாப்பூர் பூங்கொடி பதிப்பகத்தில் கிடைக்கிறது. (இது கபாலீஸ்வரர் கோவில் அருகில் இருக்கிறது)

ஆதாரங்கள்: சின்ன அண்ணாமலையின் memoirs – சொன்னால் நம்பமாட்டீர்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் non-fiction

தொடர்புடைய பதிவுகள்:
ம.பொ.சி. – ஒரு மதிப்பீடு
கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் – ஆர்வியின் விமர்சனம்

செந்தமிழ் நாடென்னும் போதினிலே

பாரதிதாசன் பாரதியின் – இல்லை இல்லை ஐயரின் – பரமபக்தர் என்பது தெரிந்ததே. பாண்டிச்சேரியில் பாரதி வாழ்ந்த காலத்தில் “செந்தமிழ் நாடென்னும் போதினிலே” என்ற கவிதையை எழுதி இருக்கிறார். கவிதை எப்படிப் பிறந்தது என்று பாரதிதாசன் விவரிக்கிறார்.

தமிழ்நாட்டைப் பற்றித் தமிழ்ப்பாக்கள் தந்தால்
அமைவான பாட்டுக்களிப்போம் பரிசென்று
சான்ற மதுரைத் தமிழ்ச்சங்கத்தார் உரைத்தார்

தேன்போற் கவி ஒன்று செப்புக நீர் என்று
பல நண்பர் வந்து பாரதியாரை
நலமாகக் கேட்டார்: அதற்கு நம் ஐயர்
என் கவிதான் நன்றாய் இருந்திடினும் சங்கத்தார்
புன்கவி என்றே சொல்லிப் போட்டிடுவார், போட்டால்தான்
சங்கத்தில் சர்க்கார் தயவிருக்கும், ஆதலினால்
உங்களுக்கு வேண்டுமெனில் ஓதுகின்றேன் என்றுரைத்தார்
அந்தவிதம் ஆகட்டும் என்றார்கள் நண்பரெலாம்

“செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே” என்று
அழகுத் தமிழ்நாட்டை அப்படியே நெஞ்சால்
எழுதி முடித்தார் இசையோடு பாடினார்

காதினிக்கும் நல்ல கருத்தினிக்கும் பாட்டிந்நாள்
மேதினியிற் சோதி விளக்கு.


பாரதியின் கவிதை:

செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே

வேதம் நிறைந்த தமிழ்நாடு – உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு – நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் – இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு

காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி – என
மேவிய யாறு பலவோடத் – திரு
மேனி செழித்த தமிழ்நாடு

முத்தமிழ் மாமுனி நீள்வரையே – நின்று
மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு – செல்வம்
எத்தனை உண்டு புவி மீதே – அவை
யாவும் படைத்த தமிழ்நாடு

நீலத் திரைக்கடலோரத்திலே – நின்று
நித்தம் தவஞ்செய் குமரி எல்லை -வட
மாலவன் குன்றம் இவற்றிடையே – புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு

கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு – நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின் – மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு

வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – நெஞ்சை
அள்ளும் சிலப்பதிகாரமென்றோர் – மணி
யாரம் படைத்த தமிழ்நாடு

சிங்களம் புட்பகம் சாவகம் – ஆகிய
தீவு பலவினுஞ் சென்றேறி – அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் – நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு

விண்ணை இடிக்கும் தலை இமயம் – எனும்
வெற்பை அடிக்கும் திறனுடையார் – சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் – தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு

சீன மிசிரம் யவனரகம் – இன்னும்
தேசம் பலவும் புகழ் வீசிக் – கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும் – மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்

சென்றதினி மீளாது – பிடித்த பாரதியார் கவிதை

சென்றதினி மீளாது மூடரே, நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்; சென்றதனைக் குறித்தல் வேண்டா;

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்;

அஃதின்றிச் சென்றதையே மீட்டும் மீட்டும்
மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா, அந்தோ!

மேதையில்லா மானுடரே! மேலும் மேலும்
மேன்மேலும் புதிய காற்றெம்முள் வந்து
மேன்மேலும் புதியவுயிர் விளைத்தல் கண்டீர்!

ஆன்மாவென்றே கருமத் தொடர்பை எண்ணி
அறிவு மயக்கம் கொண்டு கெடுகின்றீரே!

மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி
வசப்பட்டுத் தனை மறந்து வாழ்தல் வேண்டும்.
சென்றவினைப் பயன்களெனைத் தீண்ட மாட்டா;

ஸ்ரீதரன் யான் சிவகுமாரன் யானன்றோ?
நன்றிந்தக் கணம் புதிதாய்ப் பிறந்துவிட்டேன்;

நான் புதியவன், நான் கடவுள், நலிவிலாதோன்’
என்றிந்த உலகின்மிசை வானோர் போலே
இயன்றிடுவார் சித்தரென்பார்; பரம தர்மக்
குன்றின்மிசை ஒரு பாய்ச்சலாகப் பாய்ந்து
குறிப்பற்றார் கேடற்றார் குலைதலற்றார்.

குறி அனந்தமுடையோராய்க் கோடி செய்தும்
குவலயத்தில் வினைக்கடிமைப் படாதாராகி
வெறியுடையோன் உமையாளை இடத்திலேற்றான்
வேதகுரு பரமசிவன் வித்தை பெற்றுச்
செறியுடைய பழவினையாம் இருளைச் செற்றுத்
தீயினைப் போல் மண் மீது திரிவார் மேலோர்

அறிவுடைய சீடா, நீ குறிப்பை நீக்கி
அனந்தமாம் தொழில் செய்தால் அமரனாவாய்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்

யதுகிரி அம்மாள் எழுதிய “பாரதி நினைவுகள்” பற்றி வெ.சா.

(மீள்பதிப்பு)

ரொம்ப நாளாக – க.நா.சு.வின் படித்திருக்கிறீர்களா புத்தகத்தில் இதைப் பற்றி பார்த்த நாளிலிருந்து – யதுகிரி அம்மாள் எழுதிய “பாரதி நினைவுகள்” புத்தகம் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். புத்தகம் பிரிண்டில் இல்லை. அதிர்ஷ்டவசமாக வேங்கடகைலாசம் என்பவர் அரசி என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத் தன்னுடைய தளத்தில் பதித்திருக்கிறார். மொழிபெயர்ப்பிலேயே யதுகிரி அம்மாளின் ஸ்டைல் எப்படி இருக்கும் என்று புரிகிறது. எந்தவிதமான மிகைப்படுத்தலும் இல்லாமல், ஒரு சிறு பெண்ணின் கண்ணில் பாரதி எப்படித் தென்பட்டாரோ அது அப்படியே எழுதப்பட்டிருக்கிறது. கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். கிளாசிக்.

முதல் பகுதி இங்கே, இரண்டாம் பகுதி இங்கே.

இந்தப் புத்தகத்தைப் பற்றி நான் எழுதுவதை விட வெங்கட் சாமிநாதன் எழுதி இருப்பதை கீழே தருகிறேன். அவருடைய கருத்தோடு நான் ஏறக்குறைய முழுமையாக இசைகிறேன். அவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை – Subramanya Bharati – a multi faceted genius – National Herald, New Delhi, Sunday, 11.9.1988 – விக்கிசோர்ஸில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து:

பாரதியின் ஆளுமை சிக்கலும் கூட்டுத் தொகுப்புமான ஒன்று. ஆனாலும் நம் மீது கொட்டப்பட்டுள்ள வண்டிச்சுமைக் குப்பை கூளத்திலிருந்து தானிய மணிகளைச் சிரமப்பட்டுப் பொறுக்கிய பின்னும் நமக்கு பாரதி என்னும் பன்முகத் தொகுப்பிலிருந்து அவரவர்க்குப் பிடித்த தேர்ந்தெடுத்த சிலவும் பின்னப்பட்டதுமே கிடைக்கும். பின் பாரதி என்ற உன்னத எழுச்சி அது தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் காட்சிகளின் நாடகம். வறுமைப்பட்ட ஜீவனம், என்று கைதாகலாம் என்ற பயத்தின் இடைவிடா துரத்தல், தேசீய இயக்கத்தின் அரசியலில் ஈடுபாடு, தட்டிக் கழிக்க முடியாத குடும்பப் பொறுப்பும் பாசமும், எல்லாம் கடைசியில் கஞ்சாவின் பிடியில் கொண்டு தள்ளுகிறது. பாரதி இறந்தபோது அவனுக்கு வயது 39தான்.

மலையாகக் குவிக்கப்பட்டுள்ள கூளத்திலிருந்து, ஏன் அதிலிருந்து பொறுக்கிக் கிடைத்த தானிய மணிகளிலும் கூட ஒரு வைரக்கல் கிடைக்கிறது. ஆச்சரியப்படும் வகையில் இந்த வைரக்கல் நமக்குக் கிடைத்திருப்பது ஒரு சாதாரண குடும்ப ஸ்த்ரீயிடமிருந்து. வீட்டில் கிடைத்த படிப்புதான் அவரது. இலக்கியக் கனவுகள் ஏதும் காணாதவர். தனக்கு இயல்பாக வந்த பகட்டற்ற சாதாரண தமிழில் பாரதியுடனான தன் நினைவுகளை கிட்டத்தட்ட நூறு பக்கங்களே கொண்ட ஒரு சிறிய புத்தகத்தில் அவர் பதிவு செய்துள்ளார்.

அதுவும் ஒரு புஸ்தக வெளியீட்டாளர் அவர் பாரதி பாண்டிச்சேரியில் தங்கியிருந்த போது அவருடைய தந்தையார் பாரதியோடு நெருங்கிப் பழகிய காரணத்தால் ஒரு சிறுமியாக பாரதியுடன் பழகிய விவரம் அறிந்து அவரை அந்நினைவுகளை எழுதித் தரும்படி கேட்டுக்கொண்டதால் எழுதியது. யதுகிரி அம்மாள், அதுதான் அவர் பெயர், இதை எழுதியது 1939-ல், பாரதி இறந்து 18 வருஷங்களுக்குப் பிறகு. 1912-லிருந்து 1919 வரை அவர் பாரதி பற்றி அவர் நினைவில் மிஞ்சி இருந்தவற்றை எழுதியிருக்கிறார். அவர் பாரதியின் குழந்தைகளுக்கு விளையாட்டுத் தோழி. பாரதியின் வீட்டில் அவரும் ஒரு செல்லக் குழந்தை. அவருடைய தந்தையார் மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரியார், வ.வே.சு. அய்யர், பின் அவர்களுடன் பாண்டிச்சேரி வந்து சேர்ந்த அரவிந்தர், அப்போது தான் அரவிந்தர் அலிப்பூர் வெடிகுண்டு வழக்கிலிருந்து விடுதலை பெற்றிருந்தார், இவர்கள் எல்லோரும் பாரதியின் சகாக்கள். அப்போது நடந்தவற்றை சிறுமியான யதுகிரி உடனிருந்து பார்த்தவர்.

வேடிக்கையான ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். யதுகிரி அம்மாள் தன் பாரதி நினைவுகளை எழுதப் பணிக்கப்பட்டபோது அவருக்கு வயது 40. அந்த சமயத்தில் தான் பாரதி திரும்பக் கண்டெடுக்கப்பட்டு, புதிதாக மதம் மாறியவனின் பக்தி வெறிபோல பாரதியைப் போற்றிப் புகழ்வதற்கும் அந்த சந்தடி சாக்கில் எழுத்தாளர்களும் தாங்கள் பாரதியை மீட்டெடுத்த தீர்க்கதரிசிகளாக தம் சுயசித்திரத்தைத் தீட்டிக் கொள்வதற்குமான ஒரு சந்தர்ப்பத்தை இதில் கண்டார்கள். அந்த சமயத்தின் உணர்ச்சிப் பெருக்கிற்கும் உற்சாக வெள்ளத்திற்கும் பாரதியைப் பற்றிய அவர்கள் புகழாரமயமான மதிப்பீடுகள் வழியமைத்தனவே அல்லாது 1905 லிருந்து 1921 வரை அவர்கள் பாரதியை அறிந்தவற்றின் உண்மைப் பதிவாக இருக்கவில்லை. ஒரே ஒரு விதிவிலக்கு யதுகிரி அம்மாள் தன் இயல்பில் வரைந்திருந்த பாரதி பற்றிய நினைவுகள். அவருடைய நினைவுகளில் பதிந்திருந்தவை, தன் குழந்தைப் பருவத்திலிருந்து பதினாலோ பதினைந்தோ வயது வரையில் அவர் இதயத்தில் பாரதி பதித்துச் சென்றவைதான். அதை மீறி இப்போதைய புத்திபூர்வ அலசல்களோ சமாதானங்களோ, மிகையான சித்தரிப்போ இல்லாதவை. எனவே பாரதியின் செயல்களில் பல குழந்தை யதுகிரிக்கு புரிபடாது திகைப்பூட்டியவை. புரியாது கேட்கும் குழந்தைக்கு பதில் சொல்லும் அக்கறை பெரியவர்களுக்கும் இருப்பதில்லை. இந்த மாதிரி அசட்டுக் கேள்விகளெல்லாம் கேட்காதே என்று பெரியவர்கள் கண்டித்தது உண்டு. அவையெல்லாம் அந்த அசட்டுத்தனங்களாகவே இங்கும் பதிவு பெறுகின்றன.

பாரதியை இங்கு அவரது எல்லா உணர்ச்சி நிலைகளிலும், அதன் எதிர் எதிர் கோணங்களிலும் பார்க்கிறோம். ஒரு சமயம் அன்பே உருவான கணவனும், தந்தையுமாக. அதன் ஒரு கோடியில், தன் குழந்தைகளின் முன்னிலையிலேயே தன் மனவியுடன் காதல் மொழி பேசி கொஞ்சும் பாரதி. இதன் இன்னொரு கோடியில் தன் சொல்படி கேட்டே ஆகவேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் சர்வாதிகாரப் போக்கு. தன் சமூக சீர்த்திருத்த கருத்துக்களை எவ்வளவு தரம் சொன்னாலும் புரிந்து கொள்ளாத மௌனம் சாதித்து தன் வழியே செயல்படும் மனைவியின் பழங்காலச் சிந்தனைகள். கடற்கரையில் மீனவர்கள் பாடும் பாட்டில் லயித்துப் போகும் பாரதி அவர்களிடம் சென்று அவர்களைத் திரும்பப் பாடச்சொல்லி அதை எழுதி வைத்துக் கொண்டு வீடு திரும்பிய பாரதி, தன் மனைவி குழந்தைகளிடம் சொல்வார்: “பார் இது ஒன்றும் நீங்கள் நினைப்பது போல அலட்சியப்படுத்துகிற விஷயம் இல்லை. மனிதன் பரிணாமம் பெற்ற வரலாற்றையே சுருக்கமாகச் சொல்கிறது இந்தப் பாட்டு. வார்த்தைகள்தான் கொச்சையாக இருக்கின்றன”

அப்போதே அந்த மீனவர் பாடிய மெட்டில் தானே ஒரு பாட்டு எழுதி பின் பாடவும் செய்தார். அவரோடு குழந்தைகளும் சேர்ந்து பாடுகின்றன. யதுகிரிக்கு பாரதியின் இன்னொரு பாட்டு கிடைத்து விட்டது. இன்னொரு மெட்டும் கிடைத்து விட்டது. உடனே தன் நோட்டில் பதிவு செய்துகொள்கிறாள் சிறுமி யதுகிரி. தன் தந்தையைப் போல தன்னிடம் பாசத்தைப் பொழியும் பெரியவரிடமிருந்து இம்மாதிரி பரிசுகள் தினம் கிடைக்கும். இந்த யுகத்தின் மகா கவிஞரிடமிருந்து கிடைத்த ஒரு அமர கவிதையாக இல்லை. அந்த பிரக்ஞை யதுகிரிக்கு அப்போது இல்லை. பின்னர் தான் அது தெரியவரும். இப்போதைக்கு தான் சேகரித்துப் பாதுகாக்கும் பாடல் புத்தகத்தில் சேர்க்க இன்னும் ஒன்று. குடும்பத்தினர் எல்லோரும் ஒன்று சேர்ந்திருக்கும் போது, அல்லது வீட்டில் நடக்கும் சுபகாரியங்களின் போது யதுகிரியும் அவள் தோழிகளும் பாடுவார்கள். அதில் பாரதியும் சேர்ந்து கொள்வார். யதுகிரியின் சின்ன புத்தகத்தில் ஒரு இடத்தில் கூட மிகையான ஒரு சொல்லோ பொய்யான பாவனைகளோ கிடையாது.

இன்னொரு சமயம் வீட்டில் வேலைக்காரிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து பாடிக்கொண்டே நெல் குத்திக் கொண்டிருக்கிறார்கள். பாரதி அதைச் சிறிது நேரம் கேட்கிறார். பின் அவர் அந்த மெட்டில் தானும் ஒரு பாட்டு இயற்றிப் பாடத் தொடங்குகிறார். குழந்தைகள் ஆரவாரத்தோடு சூழ்ந்து கொள்கின்றனர். வேலைக்காரிகள் பாடிக்கொண்டு நெல் குத்திக் கொண்டிருந்தவர்கள், திடீரென்று நெல் குத்துவதை நிறுத்தி பாரதி அவர்கள் பாடுவதைக் கேலி செய்து பாடுவதாகச் சொல்லி பாரதியுடன் சண்டை பிடிக்கத் தொடங்குகின்றனர். தான் அவர்களைக் கேலி செய்யவில்லையென்றும், அவர்களிடமிருந்து அந்த மெட்டைக் கற்று தானும் பாடுவதாக அவர்களுக்கு எவ்வளவு சமாதானம் சொல்லியும் அவர்கள் அதை நம்ப மறுக்கிறார்கள். கடைசியில் பாரதியின் மனைவி செல்லாம்மாள் வந்து அவர்களுக்கு விஷயத்தைச் சொல்லி சமாதானம் செய்ய வேண்டி வருகிறது. அந்த தின நிகழ்ச்சியும் யதுகிரியின் நோட்டுப் புத்தகத்தில் பதிவு செய்யப்படுகிறது. யதுகிரி மனப்பாடம் செய்துகொள்ள இன்னொரு பாட்டு கிடைத்துவிட்டது. இம்மாதிரி பாரதி அவ்வப்போதைய தூண்டலில் உடன் இயற்றும் பாடல்கள் யதுகிரியின் பிஞ்சு மனதில் மிக ஆழமாக பதிந்துவிடுகின்றன. பல சமயங்களில் அவர் தன் நினைவில் பதிந்த பாடங்களே சரியானவை, ஏனெனில் அவை பாரதியே பாட தான் நேரில் கேட்ட பாடங்கள், பின்னர் அச்சில் வந்தவை பல இடங்களில் தவறாகப் பதிவானவை, என்று மற்ற பதிப்புகளில் உள்ள பாடபேதங்களைச் சுட்டிக் காட்ட முடிந்திருக்கிறது.

இன்னம் சில சந்தர்ப்பங்களில், இதுகாறும் வெளிவந்துள்ள பாரதி கவிதைத் தொகுப்புகளில் இடம் பெறத் தவறியுள்ள பாரதி பாடல்கள் பலவற்றை யதுகிரி தன் நினைவிலிருந்து சொல்ல முடிந்திருக்கிறது. யதுகிரி மிக ஆசையோடு கவனமாக பாதுகாத்து வந்த அந்த நோட்டுப் புத்தகங்கள் எல்லாம் புதுச் சேரியில் அடித்த புயலில் நாசமடைத்து போயின. அப்புயலில் புதுச்சேரி தெருக்களில் முழங்கால் அளவு தண்ணீரில் மூழ்கியது மரங்கள் வேரோடு சாய்ந்தன. குடிசைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. தண்ணீர் வற்றியதும், தமிழ் மண்ணின் இந்த நூற்றாண்டின் மகாகவி குடிசை இழந்த அந்த ஏழை ஜனங்களிடையே, அவர்கள் தென்னை மட்டைகளைக் கொண்டு திரும்பவும் குடிசை எழுப்புகிறவர்களோடு அவரும் வேலை செய்துகொண்டிருந்தார். ஒரு குடிசைக் கிழவி சொல்ல அவளுக்கு உதவிக்கொண்டு இருந்தார்.

பாரதிக்கு பாண்டிச் சேரி வாழ்க்கை போதும் போதும் என்றாகிவிடுகிறது. பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து தன்னைத் தேடி வந்து துன்புறுத்தும் போலீசுக்குப் பயந்தே காலம் கழிகிறது. ஒருவருக்கும் தெரியாமல் பாரதி பாண்டிச்சேரியிலிருந்து தலைமறைவாகிறார். போலீசார் கையில் அகப்பட்டால் அவரைச் சிறையில் அடைத்து விடுவார்களே என்று செல்லம்மாள் பயப்படுகிறார். குழந்தைகளும் மற்ற பெரியவர்களும் செல்லம்மாளுக்கு சமாதானம் சொல்கிறார்கள். பயப்பட வேண்டாம், பாரதி ஜாக்கிரதையாக தன்னைக் காத்துக்கொள்வார் என்று. ஆனால் செல்லம்மாளுக்கு மனம் சமாதானம் அடைவதில்லை. “யார் கண்டார்கள். அவர் எதையாவது பார்த்து, திடீரென்று உற்சாகத்தில் உரக்க பாட ஆரம்பித்து விட்டால்? அவர் அகப்பட்டுக் கொள்ள மாட்டாரா? அவர் சுபாவம் எல்லாருக்கும் தெரிந்ததுதானே?” என்று கேட்கிறார். “அவர் இப்படிப்பட்ட சமயத்தில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டுமே செய்வாரா? என்றும் கேட்கிறார். சற்று நேரம் எல்லோரும் அமைதியாக இருக்கிறார்கள். செல்லம்மாள் சொல்வது உண்மைதான். அது எல்லோருக்கும் தெரிந்ததுதான். செல்லம்மாளை இப்படியெல்லாம் சொல்லி பொய் சமாதானம் செய்து வைக்க முடியாது. இம்மாதிரியான சாதாரண சம்பவங்களிலிருந்தும் உரையாடல்களிலிருந்தும் நாம் பாரதியின் கவித்வ ஆளுமையையும் மேதமையையும் தெரிந்து கொள்கிறோம். இந்த மாதிரி மாணிக்கச் சிதறல்களை ஒரு சிறுமியின் நினைவுகளிலிருந்துதான் பெற முடிகிறது. மிகப் படித்த அறிவாளிகள் பண்டிதர்கள் மலையாகக் குவித்துள்ள பாரதியின் கவித்வ விசாரணைகளில் மதிப்பிட்டு வார்த்தைப் பெருக்கில் காணமுடியாது.

பாரதி நினைவுகள் முடிவுறும் கடைசி வருடங்களில் யதுகிரி நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டு பின் படுக்கையை விட்டு எழத் தொடங்கியதும், உடல் நிலை முற்றிலும் ஆரோக்கியமடைய, சூரியன் உதிக்கும் முன் காலை நேரத்தில் நீண்ட தூரம் நடந்து வந்தால் நல்லது என்று டாக்டர்கள் யதுகிரிக்கு ஆலோசனை சொல்கிறார்கள். அதன்படி யதுகிரி தன் தந்தையாரோடு காலை நேரத்தில் நடந்து செல்வார். அப்போது ஒரு நாள் தூரத்தில் யாரோ பாடுவது கேட்கிறது. அது கடற்கரையின் திசையிலிருந்து வந்தது. காலை நேர ராகமான பூபாளம் காற்றில் மிதந்து வருகிறது. பாட்டு வந்த திசையில் கடற்கரையை நோக்கி நடக்கிறார்கள். கிட்ட நெருங்க நெருங்க குரல் பரிச்சயமான குரலாக, கிட்டத்தட்ட பாரதியின் குரல் போலப் படுகிறது. கிட்ட நெருங்கினால் பாரதி ஒரு கட்டுமரத்தின் அருகே கிழக்கு நோக்கி உட்கார்ந்து கைகளை அகல விரித்து பலமாக ஆட்டிக்கொண்டும் சூரிய உதயத்தை எதிர் நோக்கிப் பாடிக் கொண்டிருக்கிறார்.

யதுகிரியின் தந்தை அங்கேயே சற்று தூரத்தில் நிற்கச் சொல்லி பாரதியின் அருகில் சென்று அவரிடம் என்னமோ நீண்ட நேரம் பேசிக்கொண்டிருக்கிறார். பாரதியை அவர் கோபத்தோடு ஏதோ கண்டித்துப் பேசுவது போலத் தோன்றுகிறது. பின் அவர்கள் எல்லோரும் பாரதியின் வீடு நோக்கி நடக்கிறார்கள். வழி நெடுக யதுகிரியின் தந்தை பாரதியை ஆங்கிலத்தில் கடுமையாகக் கண்டித்துக் கொண்டு வருகிறார். பாரதியின் கண்களிலிருந்து நீர் வடிகிறது. அவர் மௌனமாகவே கேட்டுக்கொண்டு வருகிறார். எதுவும் பேசவில்லை. அப்படி பாரதி இருக்கவே மாட்டார். அது அவர் குணமல்ல. செல்லம்மாள் வீட்டு வாசற்படியில் நின்று கொண்டு காணாமற் போன பாரதியின் வரவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். பாரதி எதுவும் பேசாமல் விரைவாக வீட்டிற்குள் நுழைகிறார். “பாரதி நேற்று இரவிலிருந்து வீட்டிற்கு வரவில்லை என்று செல்லம்மாள் சொன்னாள். ஆனால் செல்லம்மாள் பாரதியிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இரண்டு பேரும் மௌனமாக இருக்கிறார்களே ஏன்? ” என்று யதுகிரி தன் தந்தையாரிடம் கேட்க, அவர் யதுகிரிக்கு பதில் ஏதும் சொல்லவில்லை. யதுகிரி இன்னும் சின்னக் குழந்தை. கள்ளங்கபடற்றவள். அவளிடம் இப்போது பாரதியின் தவறான நடத்தைகளையும், கஞ்சாப் பழக்கம் கொண்டிருப்பதையும் பற்றிச் சொல்லக் கூடாது. பாரதியின் குடும்பம் மிக கஷ்டத்தில் இருந்து வருகிறது. யதுகிரிக்கு கல்யாணம் நடந்து மைசூரில் இருக்கும் தன் மாமனார் வீட்டிற்குச் செல்கிறார். வெகு சீக்கிரம் பாரதியின் மரணத்தைப் பற்றிய செய்தி அவளுக்குக் கிடைக்கும்.

இந்த அழகிய சிறிய புத்தகம் ஒரு க்ளாசிக் என்று சொல்லவேண்டும். வேறு எந்த புத்தகமும், இதன் அழகிற்கும், மனதை நெகிழ்த்தும் பாவனைகளற்ற நடைக்கும், ஈடாக மாட்டாது. ஒரு குழந்தையின் மனதில் ஒரு மகா கவிஞனும் மாமனிதனும் வரைந்துள்ள சித்திரம் இது.

இந்த நினைவுகளை எழுதித் தரும்படி கேட்க யதுகிரி இதை எழுதியது 1939-ல். இந்த 100 பக்க சின்ன புத்தகம் வெளிவருவதற்கு அதன் பின் 15 ண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்திருக்கிறது. கடைசியில் இது வெளிவந்தபோது, யதுகிரி உயிருடன் இல்லை. இதுதான் ஒரு மகாகவிக்கும், ஒரு க்ளாசிக்கிற்கும் தமிழ் நாட்டில் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும்.

சமீபத்தில் ஜெயமோகன் தமிழில் வந்த நல்ல வாழ்க்கை வரலாறுகளை பட்டியல் போடும்போது இதையும் குறிப்பிட்டிருந்தார்.

புத்தகத்துக்கு இப்போது மறுபதிப்பு வந்திருப்பதாகத் தெரிகிறது. சென்னை நியூபுக்லாண்ட்சில் கிடைக்கிறதாம். விலை முப்பத்தைந்து ரூபாய்.

வேங்கடகைலாசம் இந்தப் புத்தகம் சந்தியா பதிப்பகத்தில் கீழ்க்கண்ட விலாசத்தில் கிடைக்கிறது என்று தகவல் தருகிறார். கிடைப்பது ஆங்கில மொழிபெயர்ப்பா இல்லை ஒரிஜினலா என்று தெரியவில்லை.
Sandhya Padhipakam,
Old no. 77, New no. 57A, Behind ICICI Bank
53rd Street, Ashok nagar Channai.
Ph: 98411-91397

அரசி+வேங்கடகைலாசத்தின் முயற்சியைப் பாராட்டுகிறேன். வாழ்த்துக்கள், அரசி+வேங்கடகைலாசம்!

தொடர்புடைய சுட்டிகள்:

  • வெங்கட் சாமிநாதன் கட்டுரையின் மொழிபெயர்ப்பு – பாரதி எனும் பன்முக மேதை
  • பாரதி பற்றி அவரது மனைவி செல்லம்மாள் பாரதி
  • ஜெயமோகன் சிபாரிசு – தமிழில் எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறுகள்
  • ஜெயமோகன் பதிவு – பாரதியார் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள்
  • க. நா. சு.வின் படித்திருக்கிறீர்களா?
  • பாரதி மகாகவியா இல்லையா?

    bharathiஎனக்கு ஒரு இருபது இருபத்திரண்டு வயது இருக்கும்போது எனது நெருங்கிய மலையாளி நண்பன் ஸ்ரீகுமார் பாரதி பாரதி என்று தமிழர்கள் கொண்டாடுகிறீர்களே, எனக்கு ஒரு கவிதையை மொழிபெயர்த்து சொல்லேன் என்று கேட்டான். எனக்கு சட்டென்று நினைவு வந்த எல்லா கவிதைகளும் மொழிபெயர்த்தால் கவித்துவம் இழப்பதை ஒரு க்ஷணத்தில் உணர்ந்தேன். கூலி மிகக் கேட்பான், சூதர் மனைகளிலே, வெள்ளை நிறத்திலொரு பூனை என்று முயற்சி செய்து பார்த்து சரிப்படாது என்று அவனிடம் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டேன். மொழியைத் தாண்ட முடியாதது நல்ல கவிதையா, நல்ல இலக்கியமா என்று முதன்முதலாக யோசனை வந்தது அப்போதுதான். பாரதி மகாகவியா இல்லையா என்ற சந்தேகம் வந்ததும் அந்த நொடியில்தான்.

    ஆனால் பாரதி மகாகவியா இல்லையா என்று பேசும் மனநிலையும் அறிவு நிலையும் எனக்கில்லை. பாரதியின் கவிதைகளை என்னால் அறிவுபூர்வமாக அலச முடிவதில்லை. எனக்கு பாரதி பிடித்தமான கவிஞர், அவ்வளவுதான் சொல்ல முடியும்.

    ஜெயமோகன் ரொம்ப நாளைக்கு முன்னால் (“என்னது? இந்திரா காந்தி செத்துட்டாரா!” அளவுக்கு முன்னால்) பாரதி மஹாகவிதானா என்று ஒரு விவாதத்தைத் தொடங்கினார். எனக்கு கவிதையே ததிங்கிணத்தோம்; இரண்டாவதாக உணர்வு பூர்வமான தாக்கம் உள்ள பாரதி பற்றி விவாதம். பற்றாக்குறைக்கு முன்னால்jeyamohan சொன்ன மாதிரி எனக்கே ஒரு சந்தேகமும் உண்டு. வாயை மூடிக் கொண்டிருந்துவிட்டேன்.

    சரி நமக்குத்தான் கவிதை ததிங்கிணத்தோம், கவிதையை ரசிக்கும் எத்தனையோ பேர் இருக்கிறார்களே, அவர்களெல்லாம் இதற்கு என்ன பதில் சொல்கிறார்கள் என்று அப்போது இணையத்தில் அங்கும் இங்கும் மேய்ந்தபோது விட்டேனா பார் உன்னை, பாரதியை குறைத்து மதிப்பிட நீ யார், உன் அலெக்சா ரேட்டிங்கை உயர்த்தத்தான் இந்த வேலை செய்கிறாய், பாரதி மகாகவி என்று விளக்க வேண்டிய துரதிருஷ்டம் தமிழனுக்கு மட்டும்தான் என்று சில எதிர்வினைகள் கண்ணில் பட்டன. என்னைப் போலவே உணர்வுபூர்வமான அணுகுமுறை உள்ளவர்களோ என்று நினைத்தேன்.

    இத்தனை காலம் கழித்து ஒன்றை உணர்ந்தேன். பாரதியின் கவிதைகளைத்தான் என்னால் அறிவுபூர்வமாக அலச முடியாது, அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களின் அடிப்படையை – விமர்சனங்களை அல்ல, விமர்சனத்தின் தியரியை – அலசுவதில் ஒரு பிரச்சினையுமில்லை.

    மகாகவி என்றால் என்ன நீங்கள் என்ன பொருள் கொள்கிறீர்கள்? பாரதி பெரும்பாலான தமிழர் கண்களில் உலக மகாகவி ஆக இருப்பதும் பாரதிதாசன் பாண்டிச்சேரிக் கவி கூட ஆகாததும் ஏன்? “பாரதி மகாகவியா இல்லையா?” என்று விவாதம் ஆரம்பித்தால் இதுதானே ஆரம்பப் புள்ளி? பாரதி மகாகவி என்பது axiomatic என்ற லெவலில் வாதிடுவது வெறும் hero worship. அது என்னவோ தமிழர்கள் தங்கள் நாயகர்களை icon-களாக மாற்றி அவர்களுக்குப் பின்னால் ஒரு ஒளிவட்டத்தை அழுத்தமாக அமைத்துவிடுகிறார்கள். அட அரசியல் காரணங்களுக்காக ஈ.வெ.ரா., அண்ணாதுரை, எம்ஜிஆர் பின்னால் இப்படி ஒரு ஒளிவட்டத்தைப் பொறுத்தினால் புரிந்து கொள்ள முடிகிறது. பாரதி, சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமலஹாசன், இளையராஜாவுக்கெல்லாம் ஏன்?

    ஜெயமோகன் மஹாகவி என்பதற்கு ஒரு வரையறையைத் தருகிறார். அந்த வரையறையை வைத்து ஒரு தர வரிசையை உருவாக்குகிறார். அந்தத் தர வரிசைப்படி கம்பனுக்கு முதல் இடம், அவன்தான் மகாகவி, பாரதி இல்லை என்கிறார். அந்த வரையறையை ஏற்கமுடியாது, வேறு வரைமுறைதான் சரி; இல்லாவிட்டால் அந்த வரையறைப்படி பார்த்தாலும் பாரதி மகாகவிதான் என்று வாதாடுவது எதிர்வினை. நீ யாரடா பாரதியை மகாகவி இல்லை என்று சொல்ல என்பது எதிர்வினை இல்லை. அவரது கருத்தை மறுக்கலாம். அணுகுமுறையை எப்படி மறுக்க முடியும்?

    ஜெயமோகனின் கருத்துகளோடு நீங்கள் வேறுபடலாம். கருத்து வேறுபாடு சர்வசாதாரணமான விஷயம். ஆனால் ஒரு மகாகவியிடம் நான் இன்னின்ன எதிர்பார்க்கிறேன், அவற்றை பாரதி எனக்குத் தரவில்லை (அல்லது தருகிறார்) என்ற அணுகுமுறையில் என்ன குறை காண்பது? என் எதிர்பார்ப்புகள் வேறு (அல்லது அதே எதிர்பார்ப்புகள்தான்), ஆனால் நீங்கள் சொல்லும் எல்லாவற்றையும் பாரதி எனக்குத் தருகிறார் என்று வாதிடுங்கள். அறிவுபூர்வமாக வாதிட முடியாத என் போன்றவர்களும் அடுத்த லெவலுக்குப் போக உதவியாக இருக்கும். நீ யாரடா பாரதியைப் பற்றிப் பேச, சினிமாவுக்கு வசனம் எழுதும் புல்லனே என்பதெல்லாம் ஒரு வாதமா?

    என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். ஜெயமோகனின் கருத்தை மறுக்கவோ அல்லது ஏற்கவோ என்னால் முடியாது. ஏனென்றால் பாரதி என்று வந்தால் அங்கே என் தர்க்க அறிவு வேலை செய்வதில்லை. ஆனால் அவரது அணுகுமுறையை தர்க்கரீதியாக ஏற்றுத்தான் ஆக வேண்டும். என்ன, என் வரையறை வேறு. மகாகவி என்றால் எனக்கு என் மனதைத் தொடும் கவிதைகளை எழுதியவர், அவ்வளவுதான். இது மிகவும் subjective ஆன அணுகுமுறை. என் மனதைத் தொடும் கவிதை உங்கள் மனதைத் தொடாமல் போகலாம். “வானமகள் நாணுகிறாள், வேறு உடை பூணுகிறாள்” என்பது உங்கள் மனதை இன்னும் ஆழமாகத் தொடலாம். இந்த வரையறையை வைத்து அறிவுபூர்வமாகப் பேசுவதும் விவாதிப்பதும் கஷ்டம். எனக்கு மஹாகவி (அல்லது இல்லை), உனக்கு எப்படி இருந்தால் எனக்கென்ன என்று போக வேண்டியதுதான்.

    புள்ளியியல் அணுகுமுறையை வைத்து நிறைய பேர் மனதைத் தொட்டிருக்கிறது, அதனால் பாரதி மகாகவி என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால் பாப்புலாரிட்டி என்பது மட்டுமே அளவுகோலானால் ரமணி சந்திரனுக்கு ஞானபீட விருது கொடுக்க வேண்டி இருக்கும். எனக்கு மகாகவி, நிறைய பேர் என்னைப் போலவே உணர்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். அது முக்கியமான அணுகுமுறையே; ஆனால் அது ஒரு ஆரம்ப கட்ட அணுகுமுறையாக மட்டுமே இருக்க முடியும்.

    உயர்ந்த கவிதை என்றால் மொழி என்ற எல்லையைத் தாண்ட வேண்டும் என்று வரையறுத்தால் பாரதி ஃபெயில்தான். ஆனால் யார் பாஸ்? ஜெயமோகன் கம்பன் பாஸ் என்கிறார். நான் கம்பனை எல்லாம் விரிவாகப் படித்தவன் இல்லை. வாரணம் பொருத மார்பும் என்று சில சமயம் மேற்கோள் காட்டுவதற்கே ததிங்கினத்தோம். ஆனால் எனக்கு நினைவு வரும் நாலு வெண்பாக்களை மொழிபெயர்த்தால் – he looked, she looked என்றால் – அதில் எந்தக் கவித்துவமும் எனக்குத் தெரியவில்லை. பாரதிக்காவது அவரது வசன கவிதையை கவித்துவம் கெடாமல் மொழிபெயர்க்க முடியும்.

    எனக்கு கவிதையின் கற்பூர வாசனை தெரியாது என்பதை இன்னொரு முறை அழுத்திச் சொல்கிறேன். என் வரையறை எனக்கு, ஜெயமோகனின் வரையறை அவருக்கு. என் வரையறைப்படி எனக்கு பாரதி மஹாகவி; அவர் வரையறைப்படி அவருக்கு அப்படி இல்லை. இதில் என்ன பிரச்சினை?

    தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்