லக்ஷ்மி

(மீள்பதிவு, மூலப்பதிவு இங்கே)

சும்மா இருக்காமல் லக்ஷ்மியின் மிதிலாவிலாஸ் புத்தகத்தைத் திருப்பிப் படித்தேன். அதனால் இந்த மீள்பதிவு.

மிதிலாவிலாஸ் எளிய நாவல். ஆனால் இன்றும் இது போன்ற எளிய நாவல்களுக்கு வரவேற்பு இருக்கிறது என்று நினைக்கிறேன். தமிழில் பெண் எழுத்தாளர்கள் என்று வகைப்படுத்தக் கூடியவர்களின் (அனுராதா ரமணன், சிவசங்கரி, கமலா சடகோபன் என்று ஒரு நெடிய வரிசை இன்று ரமணி சந்திரன் வரை தொடர்கிறது) வழக்கமான சூத்திரத்திலிருந்து – “பத்தினிக்கு இன்னல் வரும் பழையபடி தீரும்” – கொஞ்சம் முன்னகர்ந்து “திருமணம் ஆகாத இளம் பெண்ணுக்கு இன்னல் வரும் பழையபடி தீரும்” என்ற சூத்திரத்தை வைத்து இந்த நாவலை எழுதி இருக்கிறார். அன்றைய விகடன், கல்கி, கலைமகள் மாதிரி பத்திரிகைகளில் தொடர்கதையாக வந்திருக்க வேண்டும்.

மாமன் வீட்டில் வளரும் தேவகி ஏறக்குறைய வேலைக்காரிதான். அவளுக்கு மாமன் மகன் ஈஸ்வரன் மேல் ஈர்ப்பு, ஈஸ்வரனோ கிரிஜா பின்னால். தேவகியின் நல்ல குணம் எல்லார் மனதையும் மாற்றி, வேறென்ன, சுபம்தான்! சரளமாகப் போகும் நாவல், எந்த வித முடிச்சும் இல்லாவிட்டாலும் படிக்க முடிகிறது.

நாவலை மீண்டும் படிக்கும்போது தோன்றிக் கொண்டிருந்த விஷயம் இதுதான். இதே கதையை, இதே சம்பவங்களை தேவகியை சூழ்ச்சி செய்பவளாக, கிரிஜாவை நாயகியாக வைத்து எழுதலாம். வம்பு பேசும் மதனி மைதிலியை எல்லாரும் கொடுமைப்படுத்துவதாக வெகு சுலபமாக மாற்றிவிட முடியும். கிரிஜாவும் மைதிலியும் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் –  வீட்டின் சமையல் வேலையை கவனித்துக் கொண்டால் போதும்! அது சரி, காதலொருவன் காரியம் யாவிலும் கை கொடுப்பது வரைதான் புரட்சி எண்ணங்கள் கொண்ட பாரதியால் கூட யோசிக்க முடிந்தது.

ஆனாலும் மிதிலாவிலாஸ் ஒரு காலகட்டத்தின் தேவையை பூர்த்தி செய்யத்தான் செய்திருக்கும். இன்றும் நாவலின் சரளம், சுலப்மாகப் படிக்கக் கூடிய தன்மை அதன் பலமாக இருக்கிறது. நாவலின் எந்த எதிர்மறைப் பாத்திரத்திமும் முழு வில்லன் இல்லை, ஏதாவது நல்ல குணம் இருக்கத்தான் செய்கிறது. அப்படி யாரையும் முழுதும் கறுப்பு வெள்ளையாக கறுப்பாக சித்தரிக்காததே அன்று பெரிய முன்னகர்தலாக இருந்திருக்க வேண்டும்.

லக்ஷ்மியின் சிறந்த நாவல்களில் ஒன்று. தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு பெற்றது. தமிழில் வணிக நாவல்கள் அதுவும் பெண் எழுத்தாளர்களின் நாவல்கள் எப்படி பரிணமித்தன என்பதில் ஆர்வம் உள்ளவர்கள் படிக்கலாம்.


லக்ஷ்மி ஒரு காலத்தில் நட்சத்திர எழுத்தாளர். ஒரு பத்து வருஷங்களாவது பெண்களின் மன நிலையை உண்மையாக எழுத்தில் கொண்டு வந்தார். அவரும் ஒரு எளிய சூத்திரத்தைப் பயன்படுத்தினார் – “பத்தினிக்கு இன்னல் வரும் பழையபடி தீரும்” – இந்த சூத்திரத்தை அவர் ஐம்பதுகளின், அறுபதுகளின் மத்திய தர வர்க்க, வேலைக்கு போக ஆரம்பித்த பெண்களின் மனம் கவரும் வண்ணம் சித்தரித்தார். அவரும் சில சமயம் புரட்சி செய்து கல்யாணம் ஆகாதபோதும் இன்னல் வரும் (ஆனால் பழையபடி தீரும்) என்று சூத்திரத்தை மாற்றுவார், அதுவே அவருக்கு அதிகபட்சம். ஒரு காலகட்டத்தின் தேவையை பூர்த்தி செய்தார் என்பதற்கு மேல் அவரைப் பற்றி சொல்ல எதுவுமே இல்லை. அவர் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய (வணிக) எழுத்தாளர் இல்லை.

ஒரு காவிரியைப் போல என்ற நாவலுக்கு சாஹித்திய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. இந்தப் புத்தகத்துக்கு விருது கொடுத்து தமிழ் இலக்கியத்தை கேவலப்படுத்தி இருக்கிறார்கள்.

மிதிலாவிலாஸ், ஸ்ரீமதி மைதிலி, பெண் மனம் போன்ற புத்தகங்கள் அவர் எழுதியவற்றில் சிறந்தவை என்று சொல்லலாம். ஆனால் கறாராகப் பார்த்தால் அவை எல்லாமே வீண்தான்.

அவருடைய எழுத்துகளை 2009-இல் தமிழக அரசு நாட்டுடமை ஆக்கியது, ஆனால் அவரது வாரிசுகள் இதை மறுத்துவிட்டார்கள். (இன்னும் புத்தகங்கள் விற்று நல்ல ராயல்டி வருகிறது போலும்!)

ஜெயமோகன் அவரது காஞ்சனையின் கனவு, அரக்கு மாளிகை ஆகியவற்றை தன் பரப்பிலக்கிய லிஸ்டில் சேர்த்திருக்கிறார். இந்தப் பதிவையே ஜெயமோகன் சொன்னார் என்பதால் “அரக்கு மாளிகை” பற்றி எழுதலாம் என்றுதான் ஆரம்பித்தேன். ஜெயமோகன் தனது seminal பட்டியலில் குறிப்பிட்டிருக்கும் ஒவ்வொரு நாவலையும் பற்றி நாலு வரி எழுத வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை. ஆனால் என் கண்ணில் அவ்வளவு worth இல்லை. எண்ணி நாலே நாலு வரிதான் எழுத முடியும். அதனால் இதை லக்ஷ்மியைப் பற்றிய பதிவாக மாற்றிவிட்டேன்.

ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் ஜெயமோகன் பரிந்துரைக்கும் அரக்கு மாளிகை, இருவர் உள்ளம் திரைப்படமாக வந்த பெண் மனம், மிதிலாவிலாஸ், ஸ்ரீமதி மைதிலி இவற்றில் ஏதாவது ஒன்றைப் படிக்கலாம்.

ஜெயமோகன் பரிந்துரைக்கும் அரக்கு மாளிகையில் வழக்கமான நாயகி. தாத்தா இறக்கிறார். பணக்கார பெரியப்பாவுக்கு அவளை வீட்டில் வைத்துக் கொள்ள இஷ்டமில்லை. வேலைக்குப் போன இடத்தில் முதலாளியம்மாவின் கணவன் அசடு வழிகிறான். அதாவது வழக்கமான பிரச்சினைகள். இன்னொரு வீட்டில் governess மாதிரி ஒரு வேலை. அங்கே வழக்கமான அழகான இளைஞனோடு வழக்கமான காதல். சதி செய்யும் அவன் சித்தி. இதற்கு மேலும் இதைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன?

பெண் மனம்: (1946): ஏழைப் பெண் சந்திராவை தன் பண பலத்தால் ஜகன்னாதன் மணக்கிறான். அவள் தன்னை விரும்பவில்லை என்று தெரியும்போது ஒதுங்கிப் போக பார்க்கிறான். கடைசியில் இருவரும் இணைகிறார்கள். “உங்களுக்கு என் உடல்தானே வேண்டும்? எடுத்துக் கொள்ளுங்கள், ஆனால் என் உள்ளம் கிடைக்காது” என்று சந்திரா முதல் இரவில் சொல்வது அந்நாளில் பேசப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது. சிவாஜி, சரோஜாதேவி, எஸ்.வி. ரங்காராவ், எம்.ஆர். ராதா நடித்து கருணாநிதி வசனத்தில் இருவர் உள்ளம் என்று சினிமாவாகவும் வந்தது.

ஒரு காவிரியைப் போல: இந்த முறை தென்னாப்பிரிக்கப் பெண். அவளுக்குப் பல இன்னல்கள். கடைசியில் காதல் நிறைவேறுகிறது. இதற்கெல்லாம் சாகித்ய அகாடமி பரிசா?

ஸ்ரீமதி மைதிலி அவரது வழக்கமான கதைதான். மைதிலியை அடக்கி ஆளும் எல்லாரும் கடைசியில் மைதிலியிடம் உதவி பெறுகிறார்கள்.

அவருடைய இன்னும் சில புத்தகங்கள் பற்றி:

அத்தை: அந்தக் காலத்து தொடர்கதை ஃபார்மட்டுக்கு நன்றாகவே பொருந்தி வரும்.இந்த முறை பணக்கார அண்ணனை எதிர்த்து ஏழையை மணக்கும் பத்தினிக்கு பல இன்னல்கள்.

நாயக்கர் மக்கள்: பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை. நாயக்கரின் மகன் அவரது எதிரியின் பெண்ணை காதலிக்கிறான். நாயக்கரின் மகளும் மாப்பிள்ளையும் சேராமல் இருக்க மாப்பிள்ளையை ஒரு தலையாக காதலித்த பெண் சூழ்ச்சி செய்கிறாள். கோர்வையாக இருக்கிறது, தொடர்கதை வடிவத்துக்குப் பொருந்தி வரும், அவ்வளவுதான்.

பண்ணையார் மகள்: பண்ணையாரும் மனைவியும் பிரிகிறார்கள். மகள் ஏழ்மையில் வளர்கிறாள், அப்பா பெரிய பண்ணையார் என்றே தெரியாது. அம்மா இறக்க, பெண் சொத்துக்கு வாரிசாக, மானேஜர் சொத்தை ஆட்டையைப் போடப் பார்க்க… இதற்கு மேல் கதையை யூகிக்க மாட்டீர்களா என்ன? தொடர்கதை வடிவத்துக்கு ஐம்பது அறுபதுகளில் பொருந்தி வந்திருக்கும், அவ்வளவுதான்.

சூரியகாந்தம்: வழக்கமான அவரது நாவல்தான், இருந்தாலும் வந்த காலத்தில் விரும்பிப் படிக்கப்பட்டிருக்கும். இந்த முறை கஷ்டப்பட்டு வளர்க்கும் அத்தையை வில்லியின் மயக்கத்தில் எதிர்த்துப் பேசிவிட்டு திருந்தும் மருமகன். அவனுக்கு ஊனமுற்ற ஒரு முறைப்பெண், சதி செய்யும் மாற்றாந்தாய் என்று வழக்கமான பாத்திரங்கள்.

அவள் ஒரு தென்றல், ஜெயந்தி வந்தாள், கை மாறியபோது, கூறாமல் சன்யாசம், குருவிக்கூடு, மோகனா மோகனா, மோகினி வந்தாள், நீதிக்கு கைகள் நீளம், நிகழ்ந்த கதைகள், ராதாவின் திருமணம், சீறினாள் சித்ரா, உறவு சொல்லிக் கொண்டு, உயர்வு, வசந்தத்தில் ஒரு நாள், வேலியோரத்தில் ஒரு மலர், விடியாத இரவு போன்ற குறுநாவல்களையும் சமீபத்தில் மூலப்பதிவை எழுதும்போது படித்தேன். இவையெல்லாம் இன்று தண்டமாகத தெரிந்தாலும் ஒரு காலகட்டத்தின் தேவையை பூர்த்தி செய்திருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

கங்கையும் வந்தாள்: நாயகனை ஏமாற்றும் நாயகியின் அப்பா. நாயகன்-நாயகிக்கு தமிழ் நாவல் வழக்கப்படி காதல், ஆனால் வெளியே சொல்லவில்லை. அப்பாவை பழிவாங்க நாயகியை மணந்து பிறகு தள்ளி வைக்கிறான். குழந்தை. குழந்தை முகம் பார்த்து அவன் மனம் மாறுகிறது. சுத்த தண்டம்.

காஷ்மீர் கத்தி: தவறான முறையில் பிறந்த பையன் குப்பத்தில் வளர்கிறான், அவனது பிரச்சினைகள். படிக்கலாம்.

கூண்டுக்குள்ளே ஒரு பச்சைக்கிளி: தண்டம். பெரிய மனிதர் தேவநாதன் உண்மையில் குரூரமானவர். தன்னை மணந்து கொள்ள மறுக்கும் இளம் பெண்+காதலனை உயிரோடு ஒரு அறையில் பூட்டிவிடுகிறார். ஆனால் வேலைக்காரன் வைரவன் தப்ப வைக்கிறான்.

முருகன் சிரித்தான்: பணக்கார, திமிர் பிடித்த டாக்டர் கணவன், மாமியார்; விவாகரத்து வரை விஷயம் போய்விடுகிறது. தற்செயலாக ஒரு விபத்து ஏற்பட, குடும்பம் இணைகிறது. தண்டம்.

ரோஜா வைரம்: தண்டம் என்ற ஒரு வார்த்தைக்கு மேல் இதைப் பற்றி எழுதும் எதுவும் அனாவசியம். For the record, தென்னாப்பிரிக்காவில் வைர வியாபாரம் செய்ய முயற்சிக்கும் ஒரு குடும்பம்.

உயிரே ஓடி வா: இன்னொரு தண்டம். பணக்காரப் பெண் ரேவதியை அவள் எழுதிய காதல் கடிதங்களை வைத்து முகுந்தன் ப்ளாக்மெயில் செய்கிறான். ரேவதியை மனம் செய்து கொள்ளப்போகும் சிவகுருவும், சிவகுருவின் அம்மாவும் அவனை பரவாயில்லை போ என்று துரத்துகிறார்கள்.

வீரத்தேவன் கோட்டை: தண்டம். இரண்டு குடும்பங்கள் எதிரிகள், வழக்கம் போல வாரிசுகளிடம் காதல், அப்புறம்தான் தெரிகிறது காதலன் வீரத்தேவன் எதிரி குடும்பத்தில் பிறந்து இங்கே வளர்கிறான் என்று.

விசித்திரப் பெண்கள்: சிறுகதைத் தொகுப்பு. எதுவும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய சிறுகதை இல்லை. ஆனால் மொத்தமாகப் படிக்கும்போது பழைய விகடன்/கல்கி/கலைமகள் இதழ்களைப் புரட்டுவது போல ஒரு உணர்வு ஏற்பட்டது.

அவரது புத்தகங்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டபோது மறைந்த சேதுராமன் எழுதிய அறிமுகம் கீழே.


சேதுராமன் தரும் புதிய தகவல்: “அண்மையில் லக்ஷ்மியின் சகோதரர் திரு. ராகவனுடனும், மருமகள் திருமதி மகேஸ்வரனிடமும் பேசினேன். லக்ஷ்மியின் வாரிசுகள் தமிழ்நாடு அரசின் நாட்டுடைமைக்கு ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டதாகத் தெரிவித்தனர்”.

சமுதாயத்தில் எத்துணைதான் படித்திருந்தாலும், பெண்ணுக்குச் சம உரிமை இல்லை; பெண்கள் சரி நிகர் சமான நிலை பெற வேண்டும் என்பதே குறிக்கோள். பெண் பிரச்சினை, உரிமையே மையக் கருத்து. பெண்ணின் பெருமை பேசுவதே, அருமை பாராட்டுவதே அடித்தளம். இல்லத்தின் உயிர் நாடியே பெண்தான் என்பது. குடும்பச் சிக்கல்களை அலசுவது. பெண்மையின் மென்மை உணர்வுகள்/ஆண்மையின் வன்மை உணர்ச்சிகள், இவற்றின் உரசல்களால் உருவாகும் நிகழ்ச்சிகளைப் பின்னித் தருபவர்; அதேசமயம் நமது தமிழ் மரபினையும், இந்தியப் பண்பாட்டினையும் உயிராகப் பேணி எழுதி வருபவர் – அவர் தான் லக்ஷ்மி என்கிற டாக்டர் எஸ்.திரிபுரசுந்தரி (மது.ச. விமலானந்தம்)

சிதம்பரத்தை அடுத்துள்ள அம்மாபேட்டை என்ற சிறு கிராமத்தில் 1921ம் வருஷம் மார்ச் மாதம் 21 தேதி பிறந்தவர் லக்ஷ்மி. பெற்றோர் திருச்சி ஜில்லா தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீனிவாசன், பட்டம்மாள் என்ற சிவகாமி. உடன் பிறந்தவர்கள் ஐவர், நான்கு சகோதரிகள், ஒரு தம்பி.

தொட்டியம் தொடக்கப் பள்ளியிலும், முசிறி உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்ற லக்ஷ்மி, தனது உயர் நிலைக் கல்வியைத் திருச்சியிலுள்ள ஹோலி க்ராஸ் கல்லூரியில் தொடர்ந்தார். காரணம் ஐந்தாவது ஃபாரம் படிப்பை முடித்து எஸ்.எஸ்.எல்.சி வகுப்புக்குப் போக வேண்டிய சமயம், முசிறிப் பள்ளியின் தலைமையாசிரியர் “ஆண்களுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பள்ளியில் தொடர்ந்து வயது வந்த ஒரு பெண்ணைப் படிக்க அனுமதிக்க முடியாது” என்றதால்தான். சீரான போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால், முறையிட்டு, விடுதி வசதியைப் பெற்றார் லக்ஷ்மி. தமிழில் வகுப்பில் முதல் மாணவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் ஆண்டு ஒரு பரிசையும் பெற்றார். இண்டர் முடித்தவுடன் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் சென்னையிலுள்ள கல்லூரிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பினார். முதலில் காத்திருப்புப் பட்டியலில் இருந்தபோதிலும் இவருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்தது.

முதல் ஆறு மாதங்கள் ப்ரி-ரிஜிஸ்ட்ரேஷன் ஸ்டான்லியிலும், கல்லூரியில் வசதிகள் இல்லாததால், அனாடமி, ஃபிசியாலஜி படிப்பை மதராஸ் மருத்துவக் கல்லூரியில் இரண்டு வருஷங்கள் தொடர்ந்து, மூன்றாம் வருஷப் படிப்பைத் தொடர ஸ்டான்லி திரும்பினார். இவர் மருத்துவம் படித்த காலம் இரண்டாவது உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம். அதன் தாக்கங்கள் எப்படியிருந்தன என்பதை கதாசிரியையின் கதை என்ற தமது சுயசரிதத்தில் விவரமாக எழுதியிருக்கிறார். மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள எழுத்தின் உதவியை நாடினார். அக்காலத்தில் ஆனந்த விகடன் காரியாலயம் ஸ்டான்லிக்கு அருகே ப்ராட்வேயில்தான் இருந்தது. இதைப் பற்றி திருமதி பட்டம்மாள் வாசன் நினைவு கூர்கிறார்:

ஒரு நாள் லக்ஷ்மி ஃபோன் பண்ணினா. “நான் கதையெல்லாம் எழுதுவேன், உங்கள் கணவரைப் பார்த்துப் பேச வேண்டும், உதவி செய்வீர்களா?” நீ ஆஃபீசுக்குப் போனால் அவரைப் பார்க்கலாம் என்றேன். அவரிடம் “டாக்டருக்குப் படிக்க வேண்டும், எங்களுக்கு இப்போது நிதி வசதி சரியாயில்லை. என்னுடைய கதைகள் சிலதைக் கொண்டு தருகிறேன். பிரசுரித்துப் பண உதவி செய்தால் சந்தோஷப்படுவேன்” என்று கேட்டிருக்கிறாள். நல்ல கதைகள் என்றால் பிரசுரிப்போம் என்று சொன்ன வாசன், பின்னர் கதைகள் தரமாக இருக்கவே பிரசுரம் செய்து உதவினார்.

டாக்டர் படிப்பு முடித்ததும் லக்ஷ்மியின் குடும்பம் சென்னையிலேயே குடியேறிற்று. தங்கைகள் கல்யாணம் பொறுப்பேற்று நடத்தி முடித்தார். 1955ம் வருஷம் தானும் கண்ணபிரான் என்ற தென்னாப்பிரிக்கத் தமிழரை திருமணம் செய்துகொண்டார். சென்னையிலுள்ள அடையாறு தியோசாஃபிகல் சொசைட்டியில்தான் இந்தத் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின் லக்ஷ்மி இருபத்திஇரண்டு வருஷங்கள் தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்தார். மகப்பேறு வைத்தியராகப் பணியாற்றினார். இத்தம்பதிகளுக்கு மகேஸ்வரன் என்ற ஒரு பிள்ளை.

1966ம் வருஷம் கண்ணபிரான் இறந்தது லக்ஷ்மியை மிகவும் பாதித்தது. இருப்பினும் அங்கேயே தன் வாழ்க்கையைத் தொடர்ந்த லக்ஷ்மி 1977ம் வருஷம் சென்னை திரும்பினார். என்ன காரணமாகவோ அதன் பிறகு அவர் தொடர்ந்து எழுதவில்லை. மகேஸ்வரனையும் மருத்துவப் படிப்பில் சேர்த்து அவரையும் மருத்துவராக்கினார்.

பதினான்கு வயதிலேயே எழுத ஆரம்பித்த லக்ஷ்மி நாற்பத்திஐந்து ஆண்டுகள் படைப்பிலக்கியம் செய்து ஆயிரத்துக்கும் மேலான சிறுகதைகள், நூற்றுக்கும் மேலான நாவல்கள் வெளியிட்டுள்ளார். மருத்துவம், மகப்பேறு போன்ற பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார். இவரது முதல் நாவல் பவானி (1940). பெண் மனம் (1946), மிதிலா விலாஸ் என்ற இரு நாவல்கள் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசையும், ஒரு காவிரியைப் போல 1984ல் சாகித்திய அகாதெமி விருதையும் பெற்றன. காஞ்சனையின் கனவு, பெண் மனம் என்ற நாவல்கள் காஞ்சனா, இருவர் உள்ளம் என்ற தலைப்புகளுடன் மூன்று தென்மொழிகளில் திரைப் படங்களாயின. இருவர் உள்ளம் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியது முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி.

லக்ஷ்மியின் மறைவு 1987ம் வருஷம் ஜனவரி மாதம் ஏழாம் தேதி சென்னையில். அவரது மறைவு குறித்து ஆனந்த விகடனில் (25-1-1987 – மீள் பதிப்பு ஆனந்த விகடன் 11-3-2009) பட்டம்மாள் வாசன் நினைவு கூர்வது:

வாழ்க்கையில் நிறையச் சிரமப்பட்டிருந்தாலும், அவ பேசறப்போ சிரிச்சுண்டேதான் பேசுவா. சாகித்ய அகாடமி பரிசு வாங்கியதும் என்னைத் தேடி வந்து சொன்னது எனக்குப் பெருமையா இருந்தது. சமீபத்திலே எங்க வீட்டுக் கல்யாணத்துக்கு வந்திருந்தபோது ‘என் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணப் போறேன்’ என்று ரொம்ப சந்தோஷமாச் சொன்னாள். அவ சாகும்போது, அந்த ஒரே பிள்ளையும் துரதிர்ஷ்டவசமா கிட்டக்க இல்லாம எங்கேயோ இங்கிலாந்திலேயா இருக்கணும்னு நினைச்சபோது என் மனசுக்கு கஷ்டமாயிருந்தது.”

சொல்லும்போதே திருமதி பட்டம்மாள் வாசனின் குரல் தழுதழுத்துக் கண்கள் பனித்தன.

லக்ஷ்மியின் படைப்புகள் வருமாறு:
அழகின் ஆராதனை — அவள் தாயாகிறாள் — அசோகமரம் பூக்கவில்லை — அடுத்த வீடு — அரக்கு மாளிகை — அதிசய ராகம் — அத்தை — அவளுக்கென்று ஒரு இடம் — அவள் ஒரு தென்றல் — இரண்டாவது மலர் — இவளா என் மகள் — இரண்டு பெண்கள் — இரண்டாவது தேனிலவு — இனிய உணர்வே என்னைக் கொல்லாதே — இருளில் தொலைந்த உண்மை – இன்றும் நாளையும் – உறவுகள் பிரிவதில்லை — உயர்வு — உறவின் குரல் — ஊன்றுகோல் — என் வீடு — என் மனைவி — ஒரு காவிரியைப் போல (சாகித்திய அகாதெமி பரிசு 1984) — ஒரு சிவப்பு பச்சையாகிறது

கடைசி வரை — கங்கையும் வந்தாள் — கதவு திறந்தால் — கதாசிரியையின் கதை (இரண்டு பாகங்கள்) — கழுத்தில் விழுந்த மாலை — கணவன் அமைவதெல்லாம் — காஷ்மீர் கத்தி — காளியின் கண்கள் — கூறாமல் சன்னியாசம் — கூண்டுக்குள்ளே ஒரு பைங்கிளி — கை மாறிய போது — கோடை மேகங்கள் — சசியின் கடிதங்கள் — திரும்பிப் பார்த்தால் — துணை — தை பிறக்கட்டும் — தோட்டத்து வீடு — நதி மூலம் — நல்லதோர் வீணை — நாயக்கர் மக்கள் — நிற்க நேரமில்லை – நியாயங்கள் மாறும்போது — நிகழ்ந்த கதைகள் — நீலப்புடைவை — நீதிக்குக் கைகள் நீளம் — பண்ணையார் மகள் – பவளமல்லி — பவானி (முதல் நாவல்) — புனிதா ஒரு புதிர் — புதை மணல் — பெயர் சொல்ல மாட்டேன் — பெண் மனம் (தமிழ் நாடு அரசு பரிசு) — பெண்ணின் பரிசு — மரகதம் — மனம் ஒரு ரங்க ராட்டினம் — மண் குதிரை — மருமகள் — மறுபடியுமா? — மாயமான் — மீண்டும் வசந்தம் – மீண்டும் ஒரு சீதை — மீண்டும் பிறந்தால் — மீண்டும் பெண் மனம் – முருகன் சிரித்தான் — மோகத்திரை

ராதாவின் திருமணம் — ராம ராஜ்யம் — ரோஜா வைரம் — வனிதா — வசந்திக்கு வந்த ஆசை — வடக்கே ஒரு சந்திப்பு — வாழ நினைத்தால் — வீரத்தேவன் கோட்டை — வெளிச்சம் வந்தது — ஜெயந்தி வந்தாள் — ஸ்ரீமதி மைதிலி

தகவல் ஆதாரம்:
1. தமிழ் இலக்கிய வரலாறு – மது.ச.விமலானந்தம்
2. லக்ஷ்மியின் கதாசிரியையின் கதை – பூங்கொடிப் பதிப்பகம் 1985
3. ஆனந்த விகடன் கட்டுரை (11-3-2009)
4. வலைத்தளக் கட்டுரைகள்


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
காஞ்சனையின் கனவு
தமிழ் விக்கி குறிப்பு

ஜெயகாந்தன் பேட்டி

jeyakanthanஹிந்து பத்திரிகையின் தமிழ் பதிப்பில் வெளிவந்திருக்கிறது. தவறவிடாதீர்கள்!

அதுவும் முன்னாள் விகடன் ஆசிரியர் எஸ். பாலசுப்ரமணியன் ஜெயகாந்தனைப் பற்றி நினைவு கூர்வது மிகப் பிரமாதம். கட்டாயம் படியுங்கள்! விகடனில் ஜெயகாந்தன் எழுத ஆரம்பித்தது பல வேறு விசைகள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு நல்ல விளைவை உருவாக்கியது போல இருக்கிறது.

வசதிக்காக சில பகுதிகளை கீழே கொடுத்திருக்கிறேன்.

அக்னிப்பிரவேசம் சிறுகதை பற்றி:
பாலியல்ரீதியாக ஏமாற்றப்பட்ட மகளின் தலையில் அவளுடைய தாய் தண்ணீரைக் கொட்டி, ‘இது அக்கினி மாதிரி… நீ சுத்தமாயிட்ட’ என்று சொல்லி சுத்தமாக்கும் ‘அக்கினிப் பிரவேசம்’ கதையை 1966-லேயே துணிச்சலாக வெளியிட்டிருக்கிறீர்கள். எதிர்வினைகள் ஏதும் வரவில்லையா?
நல்லாக் கேட்டீங்க! பெரிய களேபரமே ஆகிப்போச்சு. ஆசிரியர் இலாகாவுக்குள்ளேயே எதிர்ப்பு. விகடன் இப்படி ஒரு கதையை எப்படிப் போடலாம்னு ஆசிரியர் குழுவிலேயே சிலர் கடுமையா எதிர்த்தாங்க. கடைசியா விஷயம் பாஸ் காதுக்குப் போயிட்டு (தந்தையார் எஸ்.எஸ். வாசன் பற்றி இப்படித்தான் குறிப்பிடுகிறார்). அப்போ அவர் விகடனை அதிகம் கவனிக்கலை. சினிமாவுல பிஸி. நிறைய பேர் அவர்கிட்ட பேசவும், என்னைக் கூப்பிட்டு, ‘என்னப்பா பாலு! அக்கினிப் பிரவேசம்னு ஒரு கதை போட்டிருக்கியாமே’ன்னார். ‘ஆமா சார், ஜெயகாந்தன்னு ஒருத்தரோட கதை’ன்னேன். ‘அதுக்கு முத்திரையெல்லாம் போட்டிருக்கியாமே?’ன்னார். ‘ஆமாம் சார்’ன்னேன். ‘அந்தக் கதையைப் போட்டதே தப்பு’ன்னு (கொத்தமங்கலம்) சுப்பு மாதிரியானவா சொல்றாளே’ன்னார்.
நான் அந்தக் கதை வந்த விகடனை பாஸ்கிட்டே குடுத்து, ‘நீங்க கதையைப் படிங்க. படிச்சுட்டு, நான் பண்ணினது தப்புதான்னு சொன்னா, வாசகர்கள் உட்பட அத்தனை பேர்கிட்டேயும் மன்னிப்பு கேட்டுக்குறேன்’னு சொல்லிட்டு வந்துட்டேன். மறுநாள் கூப்பிட்டார். போனேன். ‘ஏம்ப்பா, இந்தக் கதையையா நல்லால்லேன்னு சொன்னாங்க! ஒருமுறை அந்த ஜெயகாந்தனை வரச்சொல்லு. நான் பார்க்கணும்’னார்… இவ்வளவு கதை இருக்கு, அந்த ஒரு கதைக்குப் பின்னால…

ஜெயகாந்தனுக்கும் விகடனுக்கும் இருந்த உறவு பற்றி:
சிறுபத்திரிகைகளில் எழுதிக்கொண்டிருந்த ஜெயகாந்தனை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?
ஒரு நாள் மணியன்தான் வந்து ‘இந்தக் கதையைப் படிச்சுப் பாருங்க’னு ஒரு கதையை வாசிக்கக் கொடுத்தார். கதையைப் படிச்சப்போ பிரமிப்பா இருந்தது. அதுவரைக்கும் படிச்ச மாதிரி இல்லை அந்த எழுத்து. ஒண்ணு சொல்லணும்னு முடிவு பண்ணிட்டா அதை அப்படியே தலையில ஆணி அடிச்சு சொன்னாப்ல இருந்துச்சு. ஆனா, பாலியல் வர்ணனைகளும் கொஞ்சம் இருந்துச்சு. ‘எழுத்து பிரமாதமா இருக்கு. ஆனா, இந்த மாதிரி வர்ணனைகள் நமக்கு சரிப்படாதே’ன்னேன். ‘நீங்க ஒருமுறை அவரைச் சந்தியுங்களேன்’னார் மணியன். ‘ஓ, சந்திக்கலாமே’ன்னேன். அப்படித்தான் விகடன் ஆபீஸுக்கு ஜெயகாந்தன் வந்தார். வரும்போதே ஒரு கதையைக் கையில் எடுத்துட்டு வந்தார். ‘விழுதுகள்’ன்னு நெனைக்கிறேன். என் கையில கொடுத்துட்டு, கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தார். அவர் போன உடனே அந்தக் கதையைப் படிச்சா, அவ்ளோ பிரமாதமா இருக்கு!
அப்போ வாரம் ஒரு நல்ல கதையைத் தேர்வு பண்ணி அதுக்கு முத்திரை குடுக்குறது வழக்கம். அப்படி முத்திரைக் கதையா இருந்தா பரிசு ஐநூறு ரூபாய். அப்போ அது பெரிய காசு. அதாவது, எங்க கம்பெனி ஜெனரல் மேனேஜருக்கே எண்ணூறு ரூபாய்தான் சம்பளம். அந்த வார முத்திரையை ஜெயகாந்தன் கதைக்குக் கொடுத்தோம். கதை பிரசுரமானதும், ஜெயகாந்தன் வந்து என்னைப் பாத்தார். சன்மானத் தொகைபற்றி அவருக்கு ஆச்சரியம். ‘இந்தப் பணம் பெரிசு இல்ல. இப்படிப்பட்ட ஒரு கதைக்கு இதைக்கூட கொடுக்கலைன்னா நாங்க தப்பு பண்ணவா ஆயிருவோம்’னு சொன்னேன். ‘தொடர்ந்து விகடனுக்கு எழுதுங்கோ’ன்னும் சொன்னேன். இப்படித்தான் ஜெயகாந்தன் எங்களுக்கும் எங்க வாசகர்களுக்கும் அறிமுகம் ஆனார்.

அதற்குப் பின் தொடர்ந்து முத்திரைக் கதைகளாக ஜெயகாந்தனின் கதைகள் வெளியாயின. அவர் எழுதிய எல்லாக் கதைகளும் நீங்கள் நிர்ணயித்த தரத்தில் இருந்தனவா அல்லது அவர் நிறைய கதைகளை அனுப்பி, அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளை முத்திரைக் கதைகளாகப் பிரசுரித்தீர்களா?
அதாவது, தொடர்ந்து நீங்க கதை அனுப்புங்கன்னு சொன்னப்பவே ஜெயகாந்தன் ஒரு கோரிக்கை வெச்சார். ‘நான் எழுதுறேன். ஆனா, அது முத்திரைக் கதைக்கான தரத்தோட இருந்தா போடுங்க; இல்லாட்டித் திருப்பி அனுப்பிச்சிடுங்க. முத்திரைக் கதைக்கான காசை வேணும்னா கூடக்குறைச்சுக் கொடுங்க. ஆனா, அந்தத் தகுதி இல்லாத கதைகளைப் பிரசுரிக்க வேணாம்’னார். நான் சொன்னேன், ‘நீங்க ரொம்ப கஷ்டமான நிபந்தனையைப் போடுறீங்க. இருந்தாலும் பார்க்குறேன்’னு. ஆச்சரியம் என்னன்னா, அவர் அனுப்பின ஒவ்வொரு கதையும் முத்திரைக் கதைக்கான தகுதியோடதான் இருந்தது. ஒரு கதையைக்கூடத் திருப்பி அனுப்பத் தேவையே ஏற்படலை.

ஜெயகாந்தன் கறாரானவர்; தன்னுடைய கதைக்குத் தானே ராஜா என்று நினைப்பவர்; ஒரு வார்த்தையைத் திருத்தக்கூட அவரிடம் அனுமதி கேட்க வேண்டும் என்றெல்லாம் சொல்லப்படுவது உண்டு. அதேசமயம், ஒரு பத்திரிகையைப் பொறுத்தவரை அதன் ஆசிரியரே இறுதி முடிவை எடுப்பவர். ஒரு ஆசிரியர் – ஒரு எழுத்தாளர் இருவருக்குமான சுதந்திரத்தின் எல்லைகளை எப்படிக் கையாண்டீர்கள்?
கதை வேணுமா, வேணாமான்னு ஆசிரியர்தான் முடிவெடுக்குறார். அப்புறம் ஆசிரியர் கேட்குற திருத்தங்கள் அந்தப் படைப்பு மேல உள்ள அக்கறையில வர்றது. நான் ஜெயகாந்தனோட கறாரை ஒரு எழுத்தாளனோட கர்வமாப் பார்க்கல. ஒரு எழுத்தாளனோட தன்னம்பிக்கையாவும் துணிச்சலாவும் பார்த்தேன். ‘நீ யாரா வேண்ணா இரு. எனக்குத் தெரியும், என் கதையில இருக்கிற அழகு, அழுத்தம், ஆழம்’கிற சுய மதிப்பீட்டோட வெளிப்பாடா பார்த்தேன். அதேசமயம், ஜெயகாந்தன் நான் சொல்ற திருத்தங்களை ரொம்ப கவனமாக் கேட்பார். சரின்னு பட்டா ஏத்துக்குவார். நாம எதிர்பார்க்குற திருத்தங்களை நாமளே ஆச்சரியப்படுற வகையில அற்புதமா திருத்தி மறுநாள் அனுப்புவார்.

விகடனோடு தனக்கிருந்த உறவைப் பற்றி ஜெயகாந்தன் சொல்வது:
ஆனால், பத்திரிகை ஆசிரியர்கள் திருத்தங்களை வலியுறுத்தும்போது ஏற்றுக்கொண்டிருப்பீர்கள் இல்லையா? அப்படியான திருத்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் எழுத்துக்களில் மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கும் இல்லையா?
நான் மூர்க்கன் இல்லை. இது பரஸ்பரப் பகிர்தல். என்னிடமிருந்து அவர்களும் அவர்களிடமிருந்து நானும் கற்றுக்கொள்வது. நிச்சயமாக அந்தத் திருத்தங்கள் எழுத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால், ஒருபோதும் எழுத்துக்கு விரோதமான திருத்தங்களுக்கு நான் செவிசாய்த்ததில்லை.

ஊடகங்களுடனான உங்களுடைய உறவில் ஓர் எழுத்தாளருக்கும் பத்திரிகையாளருக்குமான உறவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பது எந்தப் பத்திரிகையை, எந்தப் பத்திரிகை ஆசிரியரை?
விகடனை. அதன் அன்றைய ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியனை.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன் பக்கம்

ஈ.வெ.ரா.வுடன் ஒரு பேட்டி (updated)

கிட்டத்தட்ட ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் ஈ.வெ.ரா.வை விகடன் எடுத்த பேட்டியை இங்கே மீள்பதிக்கிறேன். விகடனுக்கு நன்றி! வைக்கம் போராட்டம், சேரன்மாதேவி குருகுல விவகாரம், காங்கிரசிலிருந்து விலகியது, ராஜாஜியுடன் நட்பு என்று பலதையும் பற்றிப் பேசுகிறார். பேட்டியை சாவி எடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். கூடவே மணியன் இருந்திருக்கிறார். இதன் இரண்டாவது பாகத்தைக் கொடுத்த ரெங்கசுப்ரமணிக்கு நன்றி! இதன் தொடர்ச்சியும் கிடைத்தால் நன்றாக இருக்கும்…

இந்தப் பேட்டியை இந்தத் தளத்தில் பதிக்க ஒரே காரணம்தான். சர்ச்சைக்குள்ளான சில விஷயங்கள் அவர் வாயாலேயே தெளிவாகின்றன. அதனால் இந்தப் பேட்டிக்கு ஆவண முக்கியத்துவம் இருக்கிறது.

  • இணையத்தில் அடிக்கடி வைக்கத்தில் ஈ.வெ.ரா. என்னதான் செய்தார் என்ற கேள்வியைப் பார்க்கிறேன். வைக்கம் போராட்டம் அதன் முதல் தலைவர்களின் சிறைவாசத்தால் கொஞ்சம் துவண்டிருந்தபோது இவரை அழைத்து வழி நடத்தச் சொல்லி இருக்கிறார்கள், இவரும் விடாமல் போராடி இருக்கிறார். (ஆனால் இறுதி வரை இல்லை). அதாவது இவருக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு, ஆனால் இவர் முதன்மைத் தலைவர் இல்லை.
  • சேரன்மாதேவி குருகுல விஷயத்தில் தவறு வ.வே.சு. ஐயருடையதே. ஆனால் என் கண்ணில் அதற்கு அவர் கொடுத்த விலை மிக அதிகம். அந்த விலை அவர் செய்த தவறுக்காக அல்ல, அன்றைய பிராமணர்களின் மேட்டிமைத்தனம் மற்றவர்களை எத்தனை தூரம் பாதித்திருக்கிறது என்பதை உணராமல் இருந்ததற்காக. (For his insensitiveness.)
  • எதையும் பிராமணர்-அபிராமணர் வியூகத்திலிருந்தே ஈ.வெ.ரா. பார்த்திருக்கிறார். ஸ்வராஜ்யக் கட்சியை காந்தி பொறுத்துக் கொண்டதற்கு உண்மையான காரணம் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக்கு வராமல் இருக்கத்தான் என்கிறார். சென்னை மாகாணத்தில் ஜஸ்டிஸ் கட்சிதான் ஆட்சிக்கு வந்தது. பிற மாகாணங்களில்தான் – குறிப்பாக வங்காளத்தில் சி.ஆர். தாஸ், இன்றைய உத்தரப் பிரதேசத்தில் மோதிலால் நேரு – ஸ்வராஜ்யக் கட்சிக்கு கொஞ்சமாவது தாக்கம் இருந்தது.

ரெங்கசுப்ரமணி கொடுத்த இரண்டாவது பகுதியிலிருந்து என் கண்ணில் முக்கியமாகத் தெரிபவை:

  • ராஜாஜி தன் பகுதி நேரக்கல்வி (குலக்கல்வி திட்டம் என்று பிரபலமாகத் தெரிவது) திட்டத்தின்போது 6000 பள்ளிகளை மூடினார் என்று ஈ.வெ.ரா. திட்டவட்டமாகச் சொல்கிறார். மறைந்த டோண்டு அப்படி ஒன்று நடக்க வாய்ப்பே இல்லை என்று அடிக்கடி சொல்வார்.
  • ராஜாஜியோடு நெருங்கிய நட்பு இருந்திருக்கிறது. கூடவே இருக்கும் ஜஸ்டிஸ் கட்சி முக்கியஸ்தர்கள் யார் யாரோ சொல்லியும் மந்திரி சபை அமைக்கமாட்டேன் என்று உறுதியாக நின்றவர் ராஜாஜி சொன்னதும் சரி என்று கிளம்பி இருக்கிறார். மற்ற தலைவர்கள் ஒத்துழைக்காததால்தான் மந்திரிசபை அமைக்கவில்லை

ஓவர் டு விகடன்!

திருச்சி பெரியார் மாளிகைக்குள் காலடி எடுத்துவைக்கும்போதே, எங்கள் பார்வையில் பட்ட கறுப்புச் சட்டை இளைஞர் “ஐயா உள்ளேதான் இருக்கார். நீங்க வரப்போறீங்கனு சொல்லியிருக்கேன். உள்ளே போங்க” என்று புன்சிரிப்போடு வழி காட்டுகிறார்.

உள்ளே கட்டிலின் மீது சம்மணமிட்டு அமர்ந்திருந்த பெரியாரைப் பார்த்ததும் “வணக்கம் ஐயா!” என்று கும்பிடுகிறோம்.

“வாங்க வாங்க, ரொம்ப சந்தோசம்” எங்களை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்றபடியே “இப்படி உட்காருங்க” என்கிறார்.

சாதாரண வெள்ளைப் பனியன். நாலு முழம் வேட்டி. வயிற்றின் நடுப் பாதியில் வேட்டியின் இரு முனைகளையும் பனியனுக்கு மேல் கட்டியிருக்கிறார். அந்த முனைகள் இரண்டும் அவ்வப்போது தளர்ந்துபோகும் நேரங்களில் கைகள் தாமாகவே அவற்றை இறுக்கிவிடுகின்றன. நாய் ஒன்று வீட்டுக்குள்ளேயே குறுக்கும் நெடுக்கும் அலைகிறது, சிற்சில சமயங்களில் பலமாகக் குரைத்து வீட்டையே அதிர வைக்கிறது. பெரியாரின் பேச்சு எதனாலும் தடைபடவே இல்லை.

“ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து வந்திருக்கோம்.”

“தெரியுமே. வாசன் அவங்களை எனக்கு ரொம்பக் காலமாத் தெரியும். நான் குடியரசு பத்திரிகை ஆரம்பிச்ச காலத்திலே அடிக்கடி சந்திச்சுக்குவோம். கல்கி கிருஷ்ணமூர்த்தியும் என்கிட்டேதான் கதர் போர்டிலே கிளார்க்கா இருந்தார். ரொம்ப யோக்யமானவரு. கதர் போர்டு ஆட்டம் கொடுத்ததும் நான்தான் திரு.வி.க-வுக்கு கடுதாசி கொடுத்தனுப்பிச்சேன். நவசக்தியிலே சேர்ந்து கொஞ்ச நாளைக்கு வேலை செஞ்சாரு. அப்புறம்தான் விகடன்லே சேர்ந்துட்டார்.”

“ராஜாஜியோடு தங்களுக்குப் பழக்கம் ஏற்பட்டது எப்போது?”

“அதுவா? அந்தக் காலத்துலே ஈரோட்லே பி.வி.நரசிம்மய்யர்னு எனக்கு ரொம்ப வேண்டிய வக்கீல் ஒருத்தர் இருந்தார். ஈரோட்லே நான் சேர்மனா இருந்தப்போ குடியானவங்க வழக்கெல்லாம் என்கிட்டே நிறைய வரும். அந்த கேஸ் எல்லாம் அவருக்கு அனுப்புவேன். யாருக்கு? நரசிம்மய்யருக்கு. நான் சேர்மனா வர்றது சில பேருக்குப் பிடிக்கலே. பொறாமையினாலே எம் பேரிலே கலெக்டருக்கு பெட்டிஷன் எழுதிப் போட்டாங்க. சேர்மன் பதவின்னா இப்ப மாதிரி எலெக்ஷன்ல ஜெயிச்சதும் நேராப் போயி சேர்ல உட்கார்ந்துட முடியாது. கலெக்டர் சிபாரிசு செய்யணும்னு வெச்சிருந்தாங்க. அந்தச் சமயத்துலே சர் பி.ராஜகோபாலச்சாரிங்கிறவர் சப்-கலெக்டரா இருந்தார். அவருக்கு என்னைப் பத்தி நல்லாத் தெரியுமானதாலே பெட்டிஷனைப் பொய்னு தள்ளிட்டு என்னை சேர்மனாக்கிட்டார்.”

“ஆமாம். அந்த மாதிரி உங்களைப் பற்றித் தவறா பெட்டிஷன் எழுதிப் போட்ட ஆசாமி யார்?”

சீனிவாச முதலின்னு ஒரு வக்கீல். ஒரு நான்பிராமின் வக்கீலாயிருக்காரே, முன்னுக்குக் கொண்டாருவோம்னு நான்தான் அவரை முன்னுக்குக் கொண்டுவந்தேன். ஆனால் அவரே என் பேரில் பெட்டிஷன் கொண்டு வந்தார். அப்ப ராஜகோபாலாச்சாரி சேலத்துலே வக்கீல். கெட்டிக்கார வக்கீல்னு சொல்வாங்க. அதனாலே என்கிட்டே வர்ற கேஸெல்லாம் அவருக்கு அனுப்பிவைப்பேன். அந்தப் பழக்கத்துலே அவர் வரப் போக இருந்தாரு. எங்க வூட்டுக்கு அடிக்கடி வருவார். அவரும் அப்ப சேலத்துலே சேர்மன்.”

“எந்த வருஷம் அது?”

“தொள்ளாயிரத்துப் பத்தொன்பதுனு ஞாபகம்…”

வரதராஜுலு நாயுடு கேஸ் சம்பந்தமா அவர் மதுரைக்குப் போறப்ப நீங்களும் கூடப் போறது உண்டு இல்லையா?”

“ஆமா; போயிருக்கேன். ‘நீ சேர்மன் பதவியை விட்டுட்டு காங்கிரஸ்ல சேர்ந்துடு. நானும் விட்டுடறேன். ரெண்டு பேரும் சேர்ந்து பொதுப் பணி செய்யலாம்’னார். வரதராஜுலு நாயுடுவும் வற்புறுத்தினார். சரின்னு விட்டுட்டேன். அப்ப காங்கிரஸ் சத்தியமூர்த்தி குரூப் கையிலே இருந்தது. அமிர்தசரஸ் காங்கிரஸின்போது காங்கிரஸ் பிளவுபட்டு ரெண்டு குரூப்பாப் பிரிஞ்சுட்டது. சத்தியமூர்த்தி, ரங்கசாமி ஐயங்கார், திலகர் இவங்க ஒரு குரூப். காந்தி, ராஜகோபாலாச்சாரி, டாக்டர் ராஜன் இவங்களெல்லாம் ஒரு குரூப். நான் காங்கிரஸ்ல சேர்ந்ததே அமிர்தசரஸ் காங்கிரஸுக்கு அப்புறம்தான். அதுவரைக்கும் ராஜகோபாலச்சாரியும் நானும் நண்பர்கள்தான். அப்புறம்தான் சேர்ந்து வேலை செஞ்சோம்.”

“அதுக்கப்புறம் என்ன ஆச்சு?”

“எங்க நட்பு வளர்ந்தது. காங்கிரஸும் வளர்ந்தது. எங்களுக்குள்ளே ஒற்றுமையாயிருந்தோம். நான் கோவை ஜில்லா காங்கிரஸ் காரியதரிசி. அப்பவெல்லாம் செகரெட்டரிதான்; பிரசிடென்ட் கிடையாது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வந்தது. அப்பவும் நான்தான் செகரெட்டரி.”

“ஆமாம்; ராஜாஜி உங்களை எதுக்கு காங்கிரஸுக்கு இழுத்தார்?”

“ஜஸ்டிஸ் பார்ட்டிக்கு எதிரா காங்கிரஸ் வளர்றதுக்கு காங்கிரஸ்ல நான்பிராமின்ஸ் இருக்காங்கன்னு காட்டிக்க வேண்டியிருந்தது.”

“உங்களோடு வேறு யாரும் இல்லையா?”

“இருந்தாங்க. திரு.வி.க-வும் வரதராஜுலு நாயுடுவும் இருந்தாங்க. எங்க மூணு பேரையும்தான் எந்தக் கூட்டத்துலேயும் முதல்லே பேச விடுவாங்க. வரதராஜுலு நாயுடு பேச்சில் வசவு இருக்கும். திரு.வி.க. பேச்சு தித்திப்பா இருக்கும். நல்ல தமிழ் பேசுவார். என் பேச்சில் பாயின்ட் இருக்கும். பாயின்ட்டாப் பேசி கன்வின்ஸ் பண்ணுவேன். நாங்க மூணு பேரும் பேசினப்பறம்தான் சத்தியமூர்த்தி, ராஜகோபாலாச்சாரி எல்லாம் எழுந்து பேசுவாங்க.”

“இந்த பிராமின்-நான்பிராமின் தகராறு முதல் முதல் எப்ப ஏற்பட்டது?”

“எப்படி வந்தது வினைன்னா – வ.வே.சு. ஐயரால் வந்தது. சேரன்மாதேவியில் ‘நேஷனல் காலேஜ்’னு ஒண்ணு ஆரம்பிச்சு வீரர்களை உற்பத்தி செய்யப் போறதாச் சொன்னாங்க. பரத்வாஜ் ஆசிரமமோ என்னவோ அதுக்குப் பேர். அந்த குருகுலத்துக்கு எல்லாரும் ஆதரவு கொடுத்தாங்க. சிங்கப்பூர், மலேயாவில் இருந்தெல்லாம் பணம் வசூல் செஞ்சாங்க. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலேருந்தும் பணம் கேட்டாங்க. நான் அப்ப தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செகரெட்டரி. ராஜாஜி ‘நாயக்கரைக் கேளு’ன்னுட்டார். வ.வே.சு. ஐயர் வந்து உட்கார்ந்துக்கிட்டு இருபதாயிரம் வேணும்னார். நான் ‘முதல்லே பத்தாயிரம் இருக்கட்டும், அப்புறம் பார்க்கலாம்’னு சொன்னேன். ராஜாஜி சரின்னுட்டார். வ.வே.சு.ஐயர் அன்னிக்கு சாயந்திரமே பணம் வேணும்னு அவசரப்படுத்தினார். ஐயாயிரம்தான் கொடுத்தனுப்பிச்சேன்…”

“பத்தாயிரம் இருக்கட்டும்னு சொன்னீங்களே!”

“ஆமாம்; அப்படித்தான் சொன்னேன். ஆனா எனக்கென்னவோ சரியாப் படலே, அதனாலே ஐயாயிரம்தான் கொடுத்தேன். நான் சந்தேகப்பட்டதுக்குத் தகுந்தாப்பலேயே காரியம் நடந்துட்டுதே!”

“என்ன ஆச்சு?”

“முதல் மந்திரியாயிருந்தாரே ஓ.பி.ஆர். ரெட்டியார்…”

“ஆமாம்…”

“அவர் மகன் அந்தக் குருகுலத்துலே படிச்சுட்டிருந்தான். அடுத்த மாசமே அவன் வந்து கம்ப்ளெய்ன்ட் சொன்னான். என்னடானு கேட்டோம். ‘குருகுலத்துலே பார்ப்பனப் பிள்ளைங்களையும் எங்களையும் வித்தியாசமா நடத்துறாங்க. அவங்களுக்கு இலை போட்டு சாப்பாடு. எங்களுக்கு பிளேட். அவங்களுக்கு உப்புமா, எங்களுக்கு பழைய சோறு. அவங்க உள்ளே படுக்கணும். நாங்க வெளியே படுக்கணும். அவங்களுக்கு ஒரு பிரார்த்தனை. எங்களுக்கு ஒரு பிரார்த்தனை’னான். அவ்வளவுதான். ஜாதி வேற்றுமையை வளர்க்கிற குருகுலத்துக்கு இனி பணம் கிடையாதுன்னுட்டேன். அத்தோடு இந்த சங்கதியைப் பற்றி ராஜகோபாலாச்சாரிக்குத் தெரியப்படுத்தினேன். அவர் உடனே வ.வே.சு. ஐயரைக் கூப்பிட்டு விசாரிச்சாரு. ‘என்ன இது? காலம் என்ன? இதான் தேசியமா? தேசாபிமானமா? கொஞ்சம்கூட நல்லாயில்லே’னு கோபிச்சுக்கிட்டார்.”

“வ.வே.சு. ஐயர் அதுக்கு என்ன சொன்னார்?”

“என்ன சொன்னாரு! ‘நான் என்ன செய்யட்டும்? குருகுலம் ஆரம்பிச்சிருக்கிற இடம் ஒரு வைதீக சென்டர். அதனாலே அந்த இடத்துல அப்படி நடக்க வேண்டி வந்துட்டுது’னு சமாதானம் சொன்னார். அப்ப ரெண்டு ஜாயின்ட் செகரெட்டரிங்க. கே.எஸ். சுப்பிரமணியம்னு கடையத்துக்காரர் ஒருத்தர். அவர் ஒரு செகரெட்டரி. வ.வே.சு. ஐயர் எனக்குத் தெரியாம அவர்கிட்டே போய் இன்னொரு ஐயாயிரத்துக்கு செக்கை வாங்கிட்டுப் போயிட்டார். அதுக்குப் பின்னாலே ஒரு மாசம் கழிச்சுத்தான் இந்த சங்கதி அம்பலத்துக்கு வந்தது.”

“கடையத்துக்காரர் எப்படி செக் கொடுக்கலாம்?”

“செகரெட்டரி டு சைன்ங்கிறது ரெசல்யூஷன். கடையத்துக்காரர் ஒரு செகரெட்டரிங்கிறதால அவர்கிட்டே தந்திரமா கையெழுத்து வாங்கிட்டுப் போயிட்டார்.”

“அந்தக் கடையத்துக்காரர் இப்போ எங்கே இருக்காரு?”

“அவரா! அவர் அப்ப எடுத்த ஓட்டம்தான். அப்புறம் எங்கே போனாரோ? ஆசாமி திரும்பி வரலே. ராஜாஜிக்கு அப்பவே எல்லாம் புரிஞ்சு போச்சு, கோளாறு வந்துட்டுதுன்னு. அதுக்கப்புறம் நான் சும்மா இருக்க முடியுமா? அந்த விஷயத்தை ஒரு முக்கியப் போராட்டமா எடுத்துக்கிட்டேன். அதுக்கு சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்னு பேர். டாக்டர் வரதராஜுலு நாயுடு, திரு.வி.க. இவங்க ரெண்டு பேரும் எனக்கு ஆதரவு கொடுத்தாங்க. வரதராஜுலு நாயுடுவே இந்தப் போராட்டத்தை நடத்தினார். குருகுலம் ஒழிஞ்சது.”

“ராஜாஜி உங்க போராட்டத்தில் சேர்ந்தாரா?”

“சொல்லிக்கிட்டு வர்றேனே கேளுங்க. வரதராஜுலு நாயுடு காங்கிரஸ் கொள்கைக்கு விரோதமா வகுப்பு உணர்ச்சியைத் தூண்டுற மாதிரி நடந்துக்கிறார்னு அடுத்த கமிட்டி மீட்டிங்ல ராஜாஜி ஒரு தீர்மானம் கொண்டுவந்தார். எனக்கு அது சரியாப் படலே. வோட்டுக்கு விட்டாங்க. ஈக்வல் ஓட்டாச்சு. நான் தலைவன்கிற முறையில் ஒரு வோட்டைப் போட்டு ராஜாஜி தீர்மானத்தைத் தோற்கடிச்சேன். ராஜாஜி ராஜினாமா பண்ணிட்டார். என்.எஸ். வரதாச்சாரி, சாமிநாத சாஸ்திரி, டாக்டர் ராஜன், கே. சந்தானம், ஹாலாஸ்யம் இவங்களெல்லாம் ராஜாஜி பக்கம் சேர்ந்துட்டாங்க. நான், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், வரதராஜுலு நாயுடு எல்லாம் ஒரு பக்கம். எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமை பச்சையா நான் கண்டிக்கிற அளவுக்கு வளர்ந்துட்டுது…”

“க்ளிக்!” – போட்டோகிராபர் படமெடுத்துக் கொள்கிறார்.

இந்தச் சமயம் கறுப்புச் சட்டை அணிந்த இளைஞர் பெரியசாமி காபி கொண்டுவந்து எங்கள் முன் வைக்கிறார்.

நானும் நண்பர் மணியனும் அந்தக் காபியை எடுத்து அருந்துகிறோம்.

“சாதி வேற்றுமையெல்லாம் இப்போ ரொம்பக் குறைஞ்சுபோச்சு. முப்பது வருஷங்களுக்கு முன்னாலே பிராமணர்கள் யாராவது உங்க வீட்டில் இந்த மாதிரி வந்து சாப்பிட்டிருக்காங்களா?” – இவ்வாறு நான் கேட்டதும் பெரியார் ஒரு கணம் என்னை உற்றுப் பார்க்கிறார்.

“வெங்காயம்! அதுக்கு இத்தனை வருஷமா நான் செய்துக்கிட்டு வர்ற பிரசாரம்தான் காரணம். இன்னும் ரொம்ப மாறணும். புத்தனுக்கு அப்புறம் பகுத்தறிவுப் பிரசாரம் செய்றவன் யாரு? நான் ஒருத்தன்தானே!”

உணர்ச்சியுடன் பேசிக்கொண்டிருக்கும் பெரியாரின் கைகள் தளர்ந்துவிட்ட வேட்டியின் முடிகளைத் தாமாகவே இறுக்கிக் கட்டுகின்றன.

“அந்தக் காலத்துல எங்க வீட்டுக்கு ஒரு ஐயர் வருவார். எங்க அம்மா ரொம்ப ஆசாரம். ஒருநாள் அந்த ஐயர் தாகத்துக்குத் தண்ணி வேணும்னு கேட்டார். குடுத்தோம். அந்த தண்ணியைக் குடிக்க வேண்டியதுதானே? கொஞ்சம் மோர் இருக்குமானு கேட்டார். மோர் கொண்டுவந்து கொடுத்தோம். அந்தத் தண்ணியிலே கொஞ்சம் மோரை ஊத்திக் குடிச்சாரு. அந்த மோர் அந்தத் தண்ணியைச் சுத்தப்படுத்திட்டுதாம். அதெப்படி சுத்தப்படுத்தும்? தண்ணி எங்க வூட்டுது. மோரும் எங்க வூட்டுது. எங்க வூட்டு மோர் எங்க வூட்டுத் தண்ணியைச் சுத்தப்படுத்திடுமா?” – சிரிக்கிறார் பெரியார்.

“வைக்கம் வீரர்னு உங்களுக்கு எப்படிப் பேர் வந்தது?” – மணியன் கேட்கிறார்.

“அதுவா? அது ஒரு கதை… சொல்றேன். நீங்க என்னமோ கேட்டீங்களே, என்னது?” என்று என் பக்கமாகத் தலையைச் சாய்த்து காதைக் கைவிரல்களால் அணைத்துக் கேட்கிறார்.

“‘காந்தியை நீங்க சந்திச்சிருக்கீங்களா?’னு கேட்டேன்…” என்கிறேன் நான்.

“எங்க வூட்டுக்கே வந்து தங்கியிருக்காரே. சட்டசபைப் பிரவேசத்துக்கு காங்கிரஸை அவர் அனுமதிச்சபோது நான் கூடாதுனு தடை பண்ணினேன்; எதிர்த்தேன்; வாதாடினேன். அப்ப அவர் சொன்னார்: “நீ என்ன இப்படிச் சொல்றே? மோதிலால் நேரு, சி.ஆர். தாஸ் இவங்களையெல்லாம் நினைச்சுப் பாக்கணும். அவங்களையெல்லாம் விட்டுட முடியுமா? உனக்கு வேணாம்னா பேசாம இருந்துக்கோ”ன்னாரு. ஏன் அப்படிச் சொன்னாருங்கிற ரகசியம் எனக்குத்தான் தெரியும். என்ன ரகசியம்னா, காங்கிரஸ் சட்டசபைக்குப் போகலேன்னா ஜஸ்டிஸ் கட்சியே நிலைச்சு இருந்துடுங்கிற பயம்தான்!”

“அதுக்கப்புறம் நீங்க என்ன செய்தீங்க?”

“சட்டசபைக்குள் போறதா இருந்தா அம்பது பெர்சன்ட் நான்-பிராமின்ஸ்க்கு ஒதுக்கணும்னு ஒரு தீர்மானம் கொண்டு வந்தேன். ‘இதைக் கொள்கையா வேணும்னா வெச்சுக்குவோம். தீர்மானமாப் போட வேண்டாம்’னு ராஜாஜி கேட்டுக்கிட்டார். 1920-ல் திருநெல்வேலி மகா நாட்டிலே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை வற்புறுத்தி ஒரு தீர்மானம் கொண்டுவந்தேன். அப்ப தலைவராயிருந்த எஸ். சீனிவாசயங்கார் அதை அனுமதிக்காமத் தடுத்துட்டார். அப்புறம் திருப்பூர்ல, சேலத்துல, திருவண்ணாமலையில எல்லா இடத்துலேயும் தடுத்துட்டாங்க…”

“உங்க தீர்மானத்தை அதோடு விட்டுட்டீங்களா?”

“விட்டுடுவனா? திரு.வி.க-வை காஞ்சீபுரம் மகா நாட்டுக்குத் தலைவராக் கொண்டு வந்தேன். சட்டசபைக்குள் போறதா இருந்தா அம்பது பெர்சன்ட் நான் பிராமின்ஸ்க்கு ஒதுக்கணும்கிற தீர்மானத்தைக் கொண்டு வந்தேன். திரு.வி.க. பாலிஸிக்கு விரோதம்னு சொல்லி பிரசிடென்ட்டுங்கிற முறையிலே டிஸ்அலவ் பண்ணிட்டார். நான் கொண்டுவந்த தீர்மானத்தை நான் கொண்டு வந்த தலைவரே அனுமதிக்க மறுத்துட்டார். எதிரிங்ககிட்டேருந்தும் எனக்கு அடி. என் ஆளுகிட்டேருந்தும் அடி. ஆக ரெண்டு பக்கத்திலேருந்தும் அடி.”

“ரொம்பச் சங்கடம்தான்!”

“ஆனாலும் தீர்மானத்தை விட்டுடலே. ஓபன் மகாநாட்டிலே கொண்டுவர்றதுக்குப் பாடுபட்டேன். ஓபன் மகாநாட்டிலே தீர்மானத்தை எடுத்துக்கணும்னா அம்பது பேர் கையெழுத்து வேணும்னாரு. அம்பது என்ன? இந்தா எழுபத்தைந்து கையெழுத்துனு சொல்லிக் கையெழுத்தும் வாங்கிட்டுப் போனேன். திரு.வி.க. பயந்துபோய் தீர்மானத்தை அனுமதிக்க மறுத்துட்டார். எனக்குக் கோவம் வந்துட்டுது. ‘முதலியாரே! உங்களை யோக்கியன்னு நினைச்சேன். கையெழுத்து வாங்கிட்டு வானு சொல்றப்போ சொந்த புத்தி, இப்ப வேற புத்தியா?’னு கேட்டுட்டு இப்படித்தான் துண்டை எடுத்து தோள் மேலே போட்டுக்கிட்டு (பக்கத்திலுள்ள டவல் ஒன்றை எடுத்துத் தோள் மீது போட்டுக்கொள்கிறார்.) வெளியே நடந்துட்டேன். அப்புறம் எல்லாருமாப் பஞ்சாயத்துக்கு வந்தாங்க. காங்கிரஸ்காரங்க போக்கு எனக்குப் பிடிக்கலே. வெளியே வந்துட்டேன். ஆனா அதுக்கப்புறமும் கொஞ்ச நாளைக்கு காங்கிரஸ்காரனாத்தான் இருந்தேன். அப்படி இருந்துக்கிட்டே காங்கிரஸை எதிர்த்துப் பிரசாரம் பண்ணினேன். காங்கிரஸை எதிர்த்தாலும் ஜஸ்டிஸ் கட்சிக்குச் சாதகமா இல்லே.”

“உத்தியோகம், காலேஜ் அட்மிஷன் இதெல்லாம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இருப்பது சரினு நினைக்கிறீங்களா? திறமையைப் பார்த்துத் தேர்ந்தெடுத்துக்கட்டுமே…” – மணியன் கேட்கிறார்.

பெரியாருக்குக் கோபம் வந்துவிடுகிறது.

“என்ன திறமை வேண்டியிருக்குது? வெங்காயம்! ஜெயிலுக்குள்ளே போய்ப் பாருங்க. ஜாதிக் கணக்குப்படித்தானே அங்கேயும் இருக்காங்க. பார்ப்பன ஜாதி கொஞ்சம் குறைச்சலா இருக்கும். அதுக்குக் காரணம் என்னன்னா அவன் கொஞ்சம் பயந்தவன். கொலை, கொள்ளைக்குப் போவ மாட்டான். அவ்வளவுதானே? மத்தப்படி ஜாதி விகிதாசாரப்படிதானே ஜெயில்லயும் இருக்காங்க? ஆனபடியாலே சர்க்கார் உத்தியோகம், காலேஜ் அட்மிஷன் இதிலேயும் ஜாதி விகிதாச்சாரம் இருந்துட்டுப் போவட்டுமே…”

“காங்கிரஸை விட்டு விலகினீங்களே… அப்புறம் என்ன ஆச்சு?”

“கம்யூனல் ஃபீலிங் வளர ஆரம்பிச்சது. சி.என். முத்துரங்க முதலியார், சி.பி. சுப்பையா, காமராஜ் இவங்களை வெச்சு காங்கிரஸை வளர்த்துட்டாங்க…” சட்டென்று நண்பர் மணியன் பக்கமாகத் திரும்பி “நீங்க என்னமோ கேட்டீங்களே? ஆமா வைக்கம் சங்கதி… சொல்றேன், கேளுங்க” என்கிறார்.

காலை நாங்கள் பெரியார் மாளிகைக்குள் சென்றபோது மணி ஒன்பதரை இருக்கலாம். அப்போது அவர் கட்டிலின் மீது உட்கார்ந்திருந்தார். எங்களுடன் பேசி முடிக்கும்போது மணி இரண்டு. அந்த இடத்தில் எப்போது உட்கார்ந்தாரோ தெரியாது. எங்களுடன் பேசி முடிக்கும் வரை அப்பால் இப்பால் நகரவில்லை. இடையில் காபி கொண்டு வந்து வைக்கப்பட்டபோதுகூட “ஐயா! காபி ஆறிப் போறது” என்று ஞாபகப்படுத்திய பின்னரே அதை எடுத்து அருந்தினார்.

இதற்குள் நான் இருபது முறை கால்களை மாற்றிப் போட்டுக்கொண்டேன். பின்பக்கம் சாய்ந்தேன். முன்பக்கம் சாய்ந்தேன். முகத்தை இடது கையினால் தாங்கிக்கொண்டேன். எத்தனைவிதமான கோணங்களில் உட்கார முடியுமோ அப்படியெல்லாம் மாறி மாறி உட்கார்ந்தேன்.

பத்து நிமிடங்களுக்கு மேல் எந்த இடத்திலும் நிலைத்து உட்கார முடியாதவர் நண்பர் மணியன். அவர் நான்கு முறை எழுந்து நின்றார். இரண்டு முறை டெலிபோனில் பேசிவிட்டு வந்தார். கைகளைச் சொடுக்கினார். கால்களை நீட்டினார். இப்படி ஏதேதோ தேகப் பயிற்சிகள் எல்லாம் செய்துகொண்டிருந்தார். சற்றும் சோர்வின்றி, அலுக்காமல் சலிக்காமல் சளைக்காமல் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருந்த பெரியாரின் அதிசய சக்தியைப் பற்றி நான் மனதுக்குள் வியந்துகொண்டிருந்தேன். பெரியார் மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்:

“வைக்கம் என்கிற ஊர் கேரளாவிலே இருக்குது. அந்த ஊரிலே ஒரு தெரு வழியா தாழ்த்தப்பட்டவங்க யாரும் நடக்கக் கூடாதுனு ரொம்ப நாளாக் கட்டுப்பாடு. இந்தப் பக்கத்துலே உள்ளவங்க குடிதண்ணீர் கொண்டுவரணும்னா, குறுக்கே உள்ள அந்தத் தெருவைத் தாண்டித்தான் போய் வரணும்.”

“வேற வழி இல்லையா?”

“வேறொரு தெருப் பக்கமாகவும் போகலாம். ஆனால் அது சுத்து வழி. ‘ஜாதிப் பேரால நடக்கிற இந்த அக்கிரமத்தை ஒழிச்சுடணும் தெருவிலே நடந்துபோறதுக்கு எல்லாருக்கும் சம உரிமை இருக்கணும்கிறதுதான் போராட்டம். அந்தப் போராட்டத்தை ஜார்ஜ் ஜோசப், நீலகண்ட நம்பூதிரி இவங்கள்லாம் நடத்தினாங்க. திருவாங்கூர் சர்க்கார் அவங்க எல்லோரையும் புடிச்சு ஜெயில்லே போட்டுது. போராட்டம் கலகலத்துப் போச்சு. எனக்கு லெட்டர் போட்டாங்க. யாரு? ஜார்ஜ் ஜோசப்பும் நீலகண்ட நம்பூதிரியும். நீங்க உடனே வைக்கத்துக்கு வந்து போராட்டத்தை ஏற்று நடத்தினால்தான் எங்க மானம் மிஞ்சும், கால தாமதம் செய்யாமல் புறப்பட்டு வரணும்னு ஜெயிலுக்குள்ளேயிருந்து லெட்டர் எழுதி அனுப்பிச்சாங்க.

அப்ப எனக்கு உடம்பு சரியில்லை. ஆனாலும் உடனே புறப்பட்டுப் போய்ப் போராட்டத்தை நடத்தினேன். ரொம்பப் பேர் என்னோடு சேர்ந்து வந்தாங்க. மலையாளத்துக்காரங்களும் வந்தாங்க. தமிழ்நாட்டுக்காரங்களும் வந்தாங்க. போராட்டம் வலுவடைஞ்சுது. நான் ரெண்டு முறை ஜெயிலுக்குப் போனேன். கடைசியிலே சத்தியாக்கிரகம் வெற்றி அடைஞ்சுது. அதோடு அந்தத் தெரு வழியா எல்லோரும் நடக்கலாம்னு ஆயிட்டுது.”

வைக்கத்திலே உள்ள கோயில், கோயிலுக்குப் பக்கத்திலே உள்ள அந்தத் தெரு, குடி தண்ணீருக்குச் சுற்றிக்கொண்டு போக வேண்டிய இன்னொரு வழி இவ்வளவையும் ஒரு காகிதத்தில் பிளான் போட்டுக் காட்டுகிறார் பெரியார்.

“ரெண்டு முறை எதுக்கு ஜெயிலுக்குப் போனீங்க?”- நான் கேட்கிறேன்.

“முதல் முறை ஒரு மாசம் போட்டாங்க. இருந்துட்டு வெளியே வந்தேன். அப்புறம் கேரளாவுக்குள்ளேயே கால் வைக்கக் கூடாதுனு தடை போட்டாங்க; மீறினேன். மறுபடியும் தண்டனை கொடுத்து திருவாங்கூர் சென்ட்ரல் ஜெயில்ல கொண்டுபோய்ப் போட்டாங்க…”

அண்ணாதுரை உங்க கட்சியிலே எப்போது சேர்ந்தார்னு சொல்ல முடியுமா?” மணியன் கேட்கிறார்.

பொப்பிலி ராஜாகிட்டே கணக்கு எழுதிட்டிருந்தாரு. என்கிட்டே வந்தாரு. இருக்கச் சொன்னேன். கூட்டத்துக்கெல்லாம் கூடவே வருவாரு. ஒருநாள் எழுந்து பேசினாரு. இப்படியே பேசிப் பேசித் தலைவனாயிட்டாரு…” (“விடுங்க, இப்ப எதுக்கு அந்தப் பேச்செல்லாம்” என்ற பாவனை பெரியார் முகத்தில் தெரிகிறது.)

“ராஜாஜி உங்களை ஜெயில்ல போட்டாரே, அது எப்போ?”

”முப்பத்தேழுலே நடந்த எலெக்ஷன்ல ஜஸ்டிஸ் கட்சி தோத்தது. அப்ப அந்தக் கட்சிக்கு பொப்பிலி ராஜாதான் தலைவர். பொப்பிலி, பெத்தாபுரம் எல்லாரும் தோத்துப்போனாங்க. காங்கிரஸ் ஜெயிச்சுட்டுது. ராஜாஜி மந்திரிசபை அமைச்சாரு. அப்பத்தான் கட்டாய இந்தியைக் கொண்டுவந்தாங்க. நான் எதிர்த்தேன். புரொகிபிஷனைக் காரணம் காட்டி விற்பனை வரி போட்டாங்க. என்னை ஜெயில்ல போட்டாங்க. ஜஸ்டிஸ் கட்சி மெம்பர்களைப் பழிவாங்க ஆரம்பிச்சாங்க. நான் ஜெயிலுக்குள்ளே இருக்கிறபோதே பொப்பிலி எல்லாம் சேர்ந்து என்னை ஜஸ்டிஸ் கட்சித் தலைவனாக்கிட்டாங்க.”

”அப்புறம் எப்ப ஜெயில்லருந்து வந்தீங்க?”

”அஞ்சாறு மாசத்துக்கெல்லாம் என்னை விட்டுட்டாங்க. ஆனா இந்தியை மட்டும் விடாம வெச்சுட்டிருந்தாங்க…”

”எப்பத்தான் விட்டாங்க?”

”இதுக்குள்ளே காங்கிரஸிலேயே தகராறு. ‘பட்டாபி சீதாராமய்யா தோல்வி என் தோல்வி’னு காந்தி சொன்னாரே ஞாபகம் இருக்குதா? அந்தத் தகராறுதான். தலைவர் தேர்தல்ல பட்டாபி தோத்துட்டாரு, சுபாஷ் போஸ் ஜெயிச்சுட்டாரு. போஸ் கட்சியைச் சேர்ந்தவங்க காங்கிரஸுக்குப் பதவி மோகம்னு சொன்னாங்க. கொஞ்ச நாளைக்கெல்லாம் ராஜாஜி மந்திரிசபை ராஜினாமா செய்ய வேண்டி வந்துட்டுது. அந்தச் சமயத்திலே கவர்னர் என்னைக் கூப்பிட்டு மந்திரிசபை அமைக்கச் சொன்னாரு.

சீமையிலே இப்படித்தான் வழக்கம். ஒரு கட்சி விலகிட்டுதுனா அடுத்த பெரிய கட்சியைக் கூப்பிட்டு மந்திரிசபை அமைக்கச் சொல்லுவாங்க. ‘இப்ப காங்கிரஸுக்கு அடுத்த பெரிய கட்சி ஜஸ்டிஸ் கட்சிதான், நீ என்ன சொல்றே?’னாரு. நான் மாட்டேன்னேன். மந்திரிசபை அமைச்சா அத்தோடு ஜஸ்டிஸ் கட்சியே போயிடும். வேண்டாம்னு வந்துட்டேன். சண்முகம் செட்டி, குமாரராஜா, பன்னீர்செல்வம் எல்லாரையுமே கூப்பிட்டுப் பேசினாரு கவர்னர்.”

”அவங்களெல்லாம் என்ன சொன்னாங்க?”

”அவங்கள்ல சில பேருக்கு ஆசைதான். எங்களுக்குள்ளே விவாதம் நடந்தது. ‘ஜஸ்டிஸ் கட்சிக்கு நோ எலெக்ஷன்; நோ மந்திரிசபை இதுதான் என் கொள்கை’ன்னேன். எல்லோரும் oppose பண்ணாங்க. என் மேலே ரொம்பக் கோவம் அவங்களுக்கு. சௌந்தரபாண்டியன் கூட ‘ஏன் இப்படி முரட்டுத்தனமா இருக்கீங்க?’னு கேட்டாரு.”

”நீங்க என்ன சொன்னீங்க?”

”’என்னைத் தலைவனாப் போட்டதுக்கு இதுதான் பலன்’னு சொன்னேன். ‘வேணும்னா என்னைத் தோற்கடிச்சுடுங்க’ன்னேன். பன்னீர்செல்வத்துக்கு மட்டும் என்னை விட்டுடறதுல இஷ்டமில்லே. அவருக்குத் தெரியும், நான் இல்லாட்டி கட்சி ரொம்ப வீக்காப் போயிடும்னு…”

”உங்களை மந்திரிசபை அமைக்கச் சொன்னாரே, அவர் பேர் என்ன?”

”காளை மாடு, விவசாயம்னு சொல்லிக்கிட்டிருப்பாரே ஒருத்தர்… யாரது?”

லின்லித்கோ

”ஆ, லின்லித்கோ! அவனேதான். கிண்டிக்குக் கூப்பிட்டுப் பேசினான். நான் சொன்னேன், ‘மந்திரிசபை அமைச்சா யார் யாருக்கு மந்திரிங்கிறதுலேயே எங்களுக்குள்ளே சண்டை வந்துடும். கொள்கை அடிபட்டுப்போகும். முடியாது’ன்னேன்.

அப்புறம் வேவல் கூட என்னைக் கூப்பிட்டு சம்மதிக்கச் சொன்னாரு. முடியவே முடியாதுன்னுட்டு வந்துட்டேன். அப்புறம்தான் ரொம்ப முக்கியமான சங்கதி ஒண்ணு நடந்தது. கவனிக்கணும்.”

”சொல்லுங்க…”

”ராஜாஜி வந்தாரு. மெதுவா எங்கிட்டே வந்து ‘நாயக்கரே, நல்ல சமயம். கஷ்டப்பட்டுப் பிடிச்ச சர்க்காரை வெள்ளைக்காரன்கிட்டே விட்டுடக் கூடாது. நீங்க மந்திரிசபையை ஒப்புக்கணும். நிலைச்சு நிக்கும்; கவலைப்படாதீங்க. வேணுமானா காந்தி, காங்கிரஸ் எல்லார்கிட்டேயும் நான் சம்மதம் வாங்கித் தர்றேன். இதிலே உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா, நீங்களும் இஷ்டப்பட்டா, என்னையும் ஒரு மந்திரியாச் சேர்த்துக்குங்க; நானும் உங்ககூட இருந்து பக்கபலமா வேலை செய்யறேன்’னாரு.”

”ராஜாஜிக்கு என்ன பதில் சொன்னீங்க?”

” ‘நீங்க சொல்றதுலே சந்தோஷம்தான். ஆனா யார் யாரோ சொல்லியும் மாட்டேன்னுட்டேன். இப்ப நீங்க சொல்றதுனாலே யோசனை பண்ணிப் பாக்கறேன்’னேன். ‘நல்லா யோசிச்சுச் சொல்லுங்க’னு போயிட்டாரு. எங்க ஆளுங்களோட யோசிச்சேன். முதல்லே மந்திரிசபையை ஒப்புக்கணும்னு சொன்ன ஆசாமிங்க எல்லாம் ராஜாஜி மந்திரிசபைக்கு வர்றார்னு சொன்னதும் வேணவே வேணாம்னுட்டாங்க”

”அப்புறம் என்ன நடந்தது?”

”ஒரு வேடிக்கை நடந்தது. என்ன வேடிக்கைனா, வாருக்கு அப்புறம் வெள்ளைக்காரன் பவரை ஹேண்ட்ஓவர் பண்றப்போ நான் போய்க் கேட்டேன்… ‘நாங்க பாடுபட்டோம், சர்க்காரோடு ஒத்துழைச்சோம். கடைசியிலே பவரை அவங்க கையிலே கொடுக்கிறது என்ன நியாயம்?’னு கேட்டேன்.”

”வெள்ளைக்காரன் அதுக்கு ‘வி நோ ஹிண்டு அண்டு முஸ்லிம் ஒன்லி. ரெண்டே ரெண்டு பார்ட்டிதான் எங்களுக்குத் தெரியும். பிராமின்-நான்பிராமின் இந்த விஷயமெல்லாம் தெரியாது’னு பதில் சொல்லிட்டான்.”

”அதோடு நீங்க திரும்பி வந்துட்டீங்களா?”

”வருவேனா? இதுதான் வெள்ளைக்காரன் யோக்கியதையான்னு கேட்டேன்.”

”என்ன பதில் சொன்னாங்க?”

”என்னத்தைச் சொல்லுவான். சிரிச்சு மழுப்பிட்டான். சரி இத்தோட விட்டுடக் கூடாதுன்னு ஜின்னாவைப் பார்த்துப் பேசறதுக்காக பம்பாய் போயிருந்தேன். அவரைக் கண்டு எல்லா சங்கதியையும் பேசினேன். நான் சொல்றதையெல்லாம் கவனமாக் கேட்டுக்கிட்டு ‘சரி, நான் மெட்ராஸுக்கு வர்றப்போ முஸ்லிமும் ஜஸ்டிஸ் பார்ட்டியும் சேர்ந்து சப்ஜெக்ட்டை ஒண்ணா டேபிள் பண்ணுவோம்’னு சொன்னாரு.”

”அப்பறம் ஜின்னா வந்தாரா?”

”வந்தாரு. ‘உன் கட்சி விஷயம் என்னா?’னு கேட்டாரு. ‘என் கட்சியிலே முக்கியமா ஒன்பது பேரு இருக்கோம். ஒன்பது பேரும் ஒன்பது ஜாதி. ஆனா ஆல் நான்பிராமின்ஸ்’னேன். ஜின்னா சிரிச்சுட்டு ‘என்ன நினைச்சு இப்படி ஒரு கட்சி வெச்சிருக்கீங்க? நல்ல கட்டில்தான். ஆனா கால் இல்லாக் கட்டிலாயிருக்குதே’ன்னு கேலி பண்ணாரு. ‘என்ன செய்யறது? எப்படியோ இதைத்தான் ஒரு கட்டிலா வெச்சு ஓட்டிட்டிருக்கோம்’னேன்.”

”ரெண்டு பேரும் சேர்ந்து டேபிள் பண்ணலாம்னு சொன்ன விஷயம் என்ன ஆச்சு?”

”உன் பிரச்னையைத் தனியாவே எடுத்துச் சொல்லிக்கோனுட்டுப் போயிட்டாரு. அப்பத்தான் ராமசாமி மூஞ்சியிலே ஜின்னா கரியைப் பூசிட்டார்னு பத்திரிகையிலே எழுதினாங்க.”

”52-லே ஜெனரல் எலெக்ஷன் நடந்ததே, அப்ப நீங்க யாரை ஆதரிச்சீங்க?”

”காங்கிரஸை எதிர்த்துப் பிரசாரம் செஞ்சேன். காங்கிரஸ் தோத்தது. நல்லபடியாத் தோத்தது. மந்திரிசபை அமைக்கிறாப்ல எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கலே. மறுபடியும் ராஜாஜி வந்தாரு. படையாச்சி, கவுண்டரு எல்லாரையும் சரிபண்ணிக்கிட்டு மந்திரிசபை அமைச்சாரு. குலக்கல்வி, ஒரு நேரப் படிப்புன்னாரு. 6000 பள்ளிக்கூடங்களை மூடினாரு. எதிர்த்தோம். அதுக்குப் பின்னாலதான் காமராஜ் முதல் மந்திரியா வந்தாரு. தமிழர் நலனுக்காக நல்ல காரியமெல்லாம் செய்ய ஆரம்பிச்சாரு. அதிலிருந்து வெளிப்படையா நான் காங்கிரஸை ஆதரிக்க ஆரம்பிச்சுட்டேன்.”

”காமராஜை நீங்க எப்பவாவது சந்திச்சிருக்கீங்களா?”

”எப்பவோ ஒரு சமயம் நான் ஜெனரல் ஆஸ்பத்திரியில படுத்திருக்கப்போ, அவராகவே வந்து எப்படி இருக்கீங்கனு விசாரிச்சாரு. அந்த நேரம் சி. சுப்பிரமணியமும் அதே ஆஸ்பத்திரியிலே படுத்திருந்தாரு. அவரைப் பார்க்க வந்தப்போ என்னையும் பார்த்துட்டுப் போனாரு.”

”அந்தக் காலத்துலே இந்தியை எதிர்த்துப் போராட்டமெல்லாம் நடத்தினீங்களே, இப்ப ஏன் சும்மா இருக்கீங்க?”

காதை வலது கையால் அணைத்து நான் சொல்வதை உற்றுக் கேட்டுக்கொண்ட பெரியார் கோபத்தை வெளியே காட்டாமல் ”அப்படியா? மன்னிக்கணும்; இப்ப இந்தி எங்கே இருக்குது? தெரியாமத்தான் கேக்கறேன். சொல்லுங்கோ?”

”இந்திதான் ஆட்சி மொழியா வந்துட்டுதே…”

”எங்கே வந்துட்டுது? உனக்குத்தான் இங்கிலீஷ் இருக்குதே. இந்தியா ஒண்ணா இருக்கணும்னா பொதுவா ஒரு ஆட்சிமொழி வேணும்தானே? இந்திக்காரன் உங்களை மாதிரி இங்கிலீஷை நினைக்கலையே. இங்கிலீஷை அவமானம்னு நினைக்கிறானே. தமிழ்நாட்டுக்காரன் சொல்றபடி இந்தியா நடக்குமா? அது ஜனநாயகமா?”

”ஒரு நாளைக்கு இல்லாவிட்டால் ஒரு நாளைக்கு இந்தி வரத்தானே போகுது?”

”நல்லாருக்குதே! ஒரு நாளைக்கு இல்லாட்டி ஒரு நாளைக்குச் சாவு வரத்தானே போகுதுன்னு எவனாவது இப்பவே போய் கிணத்துலே விழுவானா? அப்படியே ஒருவேளை இந்தி வந்ததுன்னா, உயிரோடு இருந்தா அதை எதிர்க்கப்போறவன் நான்தானே?”

”மத்திய சர்க்கார்ல உத்தியோகம் கிடைக்கிறதுக்கு இந்தி அவசியம் இல்லேன்னாலும் உத்தியோகத்துலே சேர்ந்தப்புறம் படிக்கச் சொல்றாங்களே?”

”படிச்சிட்டுப்போயேன். தாசில்தார் உத்தியோகம் படிக்கப்போறவங்க சர்வே படிப்பு படிக்கிறதில்லையா? அந்த மாதிரி இந்தியைப் படிச்சுக்கிறது. உனக்கு இதிலே என்ன கஷ்டம்? இல்லே நஷ்டம்? அவன் நேரத்துலே அவன் கொடுக்கிற சம்பளத்துல நீ இன்னொரு மொழியைப் படிச்சுத் தெரிஞ்சுக்கப்போறே. இது லாபம்தானே?”

விகடனில் எம்.ஏ. சுசீலா பேட்டி

விகடனுக்கு நன்றி!

m_a_ suseelaaஃப்யோதர் தஸ்தயெவ்ஸ்கி எழுதிய ‘இடியட்’ என்ற ஆயிரம் பக்க நாவலை ‘அசடன்’ என மொழிபெயர்த்திருக்கிறார் பேராசிரியை எம்.ஏ. சுசீலா. இதற்காக இந்த ஆண்டின் கனடா ‘தமிழ் இலக்கியத் தோட்டம்’ வழங்கும் மொழிபெயர்ப்புக்கான இயல் விருது, ‘திசை எட்டும்’ மொழியாக்க இலக்கிய விருது என அங்கீகாரங்கள் வரிசை கட்டுகிறது! இதற்கு முன்னர் தஸ்தயெவ்ஸ்கியின் ‘க்ரைம் அண்ட் பனிஷ்மென்ட்’ நாவலை ‘குற்றமும் தண்டனையும்’ என மொழிபெயர்த்திருந்தார் சுசீலா. இரண்டு நாவல்களுமே மனித உணர்வின் ரத்தமும் சதையுமான சித்திரங்கள்.

தமிழிலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற சுசீலா, மதுரை ஃபாத்திமா கல்லூரியில் தமிழ்த் துறைப் பேராசிரியையாக 36 ஆண்டுகள் பணிபுரிந்து பணிநிறைவு பெற்றபின் புரிந்த சாதனைகள் இவை. வார்த்தை வார்த்தையாகக் கோத்து மென்மையாகப் பேசத் தொடங்கினார் சுசீலா.

“‘குற்றமும் தண்டனையும்’, ‘அசடன்’ இந்த இரண்டு நாவல்களுமே சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு படைக்கப்பட்டவை. மொழி, கலாசாரங்களில் நம்மிடம் இருந்து மிகவும் விலகி இருப்பவை. காலம், கலாசாரம், மொழி எல்லாமே முற்றிலும் அந்நியப்பட்டவை. மொழிபெயர்க்கும்போது இதனால் ஏற்பட்ட சவால்கள் எப்படிப்பட்டவை?”

“‘ஒரு கலாசாரச் சூழலில் இருந்து மற்றொரு கலாசாரச் சூழலுக்கு ஒரு படைப்பைப் பரிவுடன் விரல் பற்றி இட்டுச்செல்வதுதான் மொழிபெயர்ப்பின் தலையாய சவால்’ என்கிறார் ஜெயகாந்தனின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன். ‘அசடன்’ படிக்கும்போது அதை நீங்கள் உணர முடியும். அயல்நாட்டு இலக்கியங்களில் இடம்பெறும் பெயர்கள், குடும்பத் துணைப் பெயர்கள் மற்றும் சுருக்கமாகக் குறிப்பிடும் செல்லப் பெயர்கள், பல ஊர்ப் பெயர்கள், தட்பவெப்ப சூழல்கள், உணவு வகைகள் இவை நம்மை அந்த நாவலுக்குள் செல்லவிடாமல் தடுப்பது போன்ற ஒரு நிலை ஏற்படுத்துவது இயல்புதான். ‘விசித்திர விபரீத உடையுடன், பாஷையுடன் காணப்பட்டாலும் அதற்கும் அப்புறத்திலிருந்து துடிக்கும் மனித இயற்கையைக் காண்பிக்கவே மொழியாக்கம் முயற்சி செய்கிறது’ என்கிறார் புதுமைப்பித்தன். ஆக, அந்தக் கட்டத்தை மட்டும் தாண்டிச்சென்றுவிட்டால், எங்கும் வியாபித்துக் கிடக்கும் மனித இயற்கையும் உணர்வுகளுமே பிறமொழி நாவல்களிலும் உயிர்த் துடிப்போடு விரிந்துகிடப்பதை தரிசிக்க முடியும்!”

“அந்த நாவல்களின் உணர்வுச் சித்திரிப்புகளை இங்கே பொருத்திப் பார்க்க முடியுமா?'”

“ஒரு குற்றத்தைப் புரிந்துவிட்டு அதையே தண்டனையாய்க் கொண்டு அவதிப்படும் ‘குற்றமும் தண்டனையும்’ ரஸ்கோல்நிகோவ் போன்றவர்கள் நாடு, இனம், மொழி என்ற பேதமின்றி நம்மைச் சுற்றி நிறைந்திருப்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ‘அசடன்’ நாவலில் பணக்கார மனிதன் ஒருவனின் பாதுகாப்பில் வளர்ந்து, அவனுக்குச் சில காலம் ஆசை நாயகியாகவும் வாழ நேரிட்டதை நினைத்து நினைத்தே தன்னிரக்கம் கொண்டவளாகிறாள் ஒருத்தி. முறையான திருமண வாழ்வுக்கான தாபமும் ஏக்கமும் கொண்டிருந்தபோதும் அதற்கு தகுதியற்றவளாக தன்னைக் கருதி, ஒவ்வொரு முறையும் மண மேடை வரை வந்துவிட்டு ஓடிப்போகும் நஸ்டாஸியா ஃபிலிப்போவ்னா, ஜெயகாந்தனின் கங்காவை (சில நேரங்களில் சில மனிதர்கள்) நமக்கு நினைவுபடுத்துகிறாள்.
ஒரு சில கலாசார வேறுபாடுகளை மட்டும் சற்று கவனத்தோடு உள்வாங்கிக்கொண்டு நாவலின் முதல் 50 பக்கங்களைக் கடந்துவிட்டால் உணர்ச்சிமயமானதும் நமக்கு நன்கு பரிச்சயமானதுமான ஓர் உலகம் அங்கே காத்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்!”

“உங்களின் அடுத்த முயற்சிகள் என்ன?”

“வாழ்க்கை வரலாற்றுப் பாணியிலான புனைவு ஒன்றை எழுதி முடித்து அதைச் செம்மைப்படுத்தும் பணியில் இருக்கிறேன். அதை அச்சுக்கு அனுப்பியதும் தமிழில் இதுவரை பெயர்க்கப்படாத இன்னும் சில உலகப்பேரிலக்கியங்களை மொழியாக்க விருப்பம். குறிப்பாக, தஸ்தயெவ்ஸ்கியின் ‘கீழுலகின் குறிப்புக்களை‘ மொழிபெயர்க்கத் திட்டமிட்டிருக்கிறேன்!”

“பெண் எழுத்தாளர்களுக்கான படைப்புச் சுதந்திரம் எப்படி உள்ளது?”

“படைப்புச் சுதந்திரம் என்பது தனிப்பட்ட படைப்பாளிகளின் நிலைப்பாட்டைப் பொறுத்தது மட்டுமே. அதில் ஆண், பெண் என்ற பாலினப் பாகுபாடுகளுக்கு இடமில்லை. அவரவர் முன்வைக்க விரும்பும் கருத்தைச் சொல்லும் உரிமையும் சுதந்திரமும் அனைவருக்கும் உண்டு!”

“நீங்கள் போற்றும் பெண் எழுத்தாளர்கள்?”

ஆர். சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், காவேரி லட்சுமி கண்ணன், அம்பை, கிருத்திகா, வாஸந்தி, பாமா, சிவகாமி ஆகியோர் என் மதிப்புக்கும் அன்புக்கும் உரிய பெண் படைப்பாளிகள். சமகாலப் பெண் படைப்பாளிகளில் கவிஞர்கள் மிகுந்திருக்கும் அளவுக்குப் புனைகதை எழுத்தாளர்கள் அதிகமில்லை என்பது சற்றே வருத்தமும் சோர்வும் அளிக்கிறது.”

“அரசாங்கம், சினிமாவுக்கும் மதுவுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை கலைக்கும் இலக்கியத்துக்கு கொடுப்பதில்லையே?”

“சினிமாவும் மதுவும் அளிக்கும் வருவாயைக் கலைகளும் இலக்கியங்களும் அளிப்பதில்லை அல்லவா? வருங்காலத் தலைமுறையை அறிவார்ந்த சமூகமாக உருவாக்க வேண்டும் என்ற மெய்யான ஆர்வமும், தரமான கலை இலக்கியங்கள் வழியாகத்தான் அவற்றை சாதிக்க முடியும் என்ற விழிப்போடுகூடிய முனைப்பும் அரசியல்வாதிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் ஏற்படும் வரையில் எந்த மாற்றமும் வந்துவிடப் போவதில்லை. ஒவ்வோர் ஆண்டும் வெளியாகும் தரமான படைப்புகளை அரசு நூலகங்களுக்கு வாங்கினால் கூட அது எழுத்தாளர்களுக்கும் பதிப்பகங்களுக்கும் உற்சாகமளிப்பதாக இருக்கும்.”


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டி: எம்.ஏ. சுசீலாவின் தளம்

லக்ஷ்மி

லக்ஷ்மி ஒரு காலத்தில் ஸ்டார் எழுத்தாளர். ஒரு பத்து வருஷங்களாவது பெண்களின் மன நிலையை உண்மையாக எழுத்தில் கொண்டு வந்தார். அவரும் ஒரு சிம்பிள் ஃபார்முலாவை பயன்படுத்தினார் – “பத்தினிக்கு இன்னல் வரும் பழையபடி தீரும்” – இந்த ஃபார்முலாவை அவர் ஐம்பதுகளின், அறுபதுகளின் மத்திய தர வர்க்க, வேலைக்கு போக ஆரம்பித்த பெண்களின் மனம் கவரும் வண்ணம் சித்தரித்தார். அவரும் சில சமயம் புரட்சி செய்து கல்யாணம் ஆகாதபோதும் இன்னல் வரும் (ஆனால் பழையபடி தீரும்) என்று ஃபார்முலாவை மாற்றுவார், அதுவே அவருக்கு அதிகபட்சம். ஒரு காலகட்டத்தின் தேவையை பூர்த்தி செய்தார் என்பதற்கு மேல் அவரைப் பற்றி சொல்ல எதுவுமே இல்லை. அவர் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய (வணிக) எழுத்தாளர் இல்லை.

ஒரு காவிரியைப் போல என்ற நாவலுக்கு சாஹித்திய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. இந்தப் புத்தகத்துக்கு விருது கொடுத்து தமிழ் இலக்கியத்தை கேவலப்படுத்தி இருக்கிறார்கள். மிதிலாவிலாஸ், ஸ்ரீமதி மைதிலி, பெண் மனம் போன்ற புத்தகங்கள் அவர் எழுதியவற்றில் சிறந்தவை என்று சொல்லலாம். ஆனால் அவை எல்லாமே வீண்தான். அவருடைய எழுத்துகளை 2009-இல் தமிழக அரசு நாட்டுடமை ஆக்கியது, ஆனால் அவரது வாரிசுகள் இதை மறுத்துவிட்டார்கள். (இன்னும் புத்தகங்கள் விற்று நல்ல ராயல்டி வருகிறது போலும்!)

ஜெயமோகன் அவரது காஞ்சனையின் கனவு, அரக்கு மாளிகை ஆகியவற்றை தன் பரப்பிலக்கிய லிஸ்டில் சேர்த்திருக்கிறார். இந்தப் பதிவையே ஜெயமோகன் சொன்னார் என்பதால் “அரக்கு மாளிகை” பற்றி எழுதலாம் என்றுதான் ஆரம்பித்தேன். ஜெயமோகன் தனது seminal பட்டியலில் குறிப்பிட்டிருக்கும் ஒவ்வொரு நாவலையும் பற்றி நாலு வரி எழுத வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை. ஆனால் என் கண்ணில் அவ்வளவு worth இல்லை. எண்ணி நாலே நாலு வரிதான் எழுத முடியும். அதனால் இதை லக்ஷ்மியைப் பற்றிய பதிவாக மாற்றிவிட்டேன்.

ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் ஜெயமோகன் பரிந்துரைக்கும் அரக்கு மாளிகை, இருவர் உள்ளம் திரைப்படமாக வந்த பெண் மனம், மிதிலாவிலாஸ், ஸ்ரீமதி மைதிலி இவற்றில் ஏதாவது ஒன்றைப் படிக்கலாம்.

ஜெயமோகன் பரிந்துரைக்கும் அரக்கு மாளிகையில் வழக்கமான நாயகி. தாத்தா அவுட். பணக்கார பெரியப்பாவுக்கு அவளை வீட்டில் வைத்துக் கொள்ள இஷ்டமில்லை. வேலைக்குப் போன இடத்தில் முதலாளியம்மாவின் கணவன் அசடு வழிகிறான். அதாவது வழக்கமான பிரச்சினைகள். இன்னொரு வீட்டில் governess மாதிரி ஒரு வேலை. அங்கே வழக்கமான அழகான இளைஞனோடு வழக்கமான காதல். சதி செய்யும் அவன் சித்தி. இதற்கு மேலும் இதைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன?

பெண் மனம்: (1946) ஏழைப் பெண் சந்திராவை தன் பண பலத்தால் ஜகன்னாதன் மணக்கிறான். அவள் தன்னை விரும்பவில்லை என்று தெரியும்போது ஒதுங்கிப் போக பார்க்கிறான். கடைசியில் இருவரும் இணைகிறார்கள். “உங்களுக்கு என் உடல்தானே வேண்டும்? எடுத்துக் கொள்ளுங்கள், ஆனால் என் உள்ளம் கிடைக்காது” என்று சந்திரா முதல் இரவில் சொல்வது அந்நாளில் பேசப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது. சிவாஜி, சரோஜாதேவி, எஸ்.வி. ரங்காராவ், எம்.ஆர். ராதா நடித்து கருணாநிதி வசனத்தில் இருவர் உள்ளம் என்று சினிமாவாகவும் வந்தது.

ஒரு காவிரியைப் போல: இந்த முறை தென்னாப்பிரிக்கப் பெண். அவளுக்குப் பல இன்னல்கள். கடைசியில் காதல் நிறைவேறுகிறது. இதற்கெல்லாம் சாகித்ய அகாடமி பரிசா?

மிதிலாவிலாஸ்: மாமன் வீட்டில் வளரும் தேவகி ஏறக்குறைய வேலைக்காரிதான். அவளுக்கு மாமன் மகன் ஈஸ்வரன் மேல் ஈர்ப்பு, ஈஸ்வரனோ கிரிஜா பின்னால். தேவகியின் நல்ல குணம் எல்லார் மனதையும் மாற்றி, பிறகென்ன, சுபம்! சரளமாகப் போகும் நாவல், எந்த வித முடிச்சும் இல்லாவிட்டாலும் படிக்க முடிகிறது.

ஸ்ரீமதி மைதிலி அவரது வழக்கமான கதைதான். மைதிலியை அடக்கி ஆளும் எல்லாரும் கடைசியில் மைதிலியிடம் உதவி பெறுகிறார்கள்.

அவருடைய இன்னும் சில புத்தகங்கள் பற்றி:

அத்தை: அந்தக் காலத்து தொடர்கதை ஃபார்மட்டுக்கு நன்றாகவே பொருந்தி வரும்.இந்த முறை பணக்கார அண்ணனை எதிர்த்து ஏழையை மணக்கும் பத்தினிக்கு பல இன்னல்கள்.

நாயக்கர் மக்கள்: பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை. நாயக்கரின் மகன் அவரது எதிரியின் பெண்ணை காதலிக்கிறான். நாயக்கரின் மகளும் மாப்பிள்ளையும் சேராமல் இருக்க மாப்பிள்ளையை ஒரு தலையாக காதலித்த பெண் சூழ்ச்சி செய்கிறாள். கோர்வையாக இருக்கிறது, தொடர்கதை ஃபார்மட்டுக்கு பொருந்தி வரும், அவ்வளவுதான்.

பண்ணையார் மகள்: பண்ணையாரும் மனைவியும் பிரிகிறார்கள். மகள் ஏழ்மையில் வளர்கிறாள், அப்பா பெரிய பண்ணையார் என்றே தெரியாது. அம்மா இறக்க, பெண் சொத்துக்கு வாரிசாக, மானேஜர் சொத்தை ஆட்டையைப் போடப் பார்க்க… இதற்கு மேல் கதையை யூகிக்க மாட்டீர்களா என்ன? தொடர்கதை ஃபார்மட்டுக்கு ஐம்பது அறுபதுகளில் பொருந்தி வந்திருக்கும், அவ்வளவுதான்.

சூரியகாந்தம்: வழக்கமான அவரது நாவல்தான், இருந்தாலும் வந்த காலத்தில் விரும்பிப் படிக்கப்பட்டிருக்கும். இந்த முறை கஷ்டப்பட்டு வளர்க்கும் அத்தையை வில்லியின் மயக்கத்தில் எதிர்த்துப் பேசிவிட்டு திருந்தும் மருமகன். அவனுக்கு ஊனமுற்ற ஒரு முறைப்பெண், சதி செய்யும் மாற்றாந்தாய் என்று வழக்கமான பாத்திரங்கள்.

அவள் ஒரு தென்றல், ஜெயந்தி வந்தாள், கை மாறியபோது, கூறாமல் சன்யாசம், குருவிக்கூடு, மோகனா மோகனா, மோகினி வந்தாள், நீதிக்கு கைகள் நீளம், நிகழ்ந்த கதைகள், ராதாவின் திருமணம், சீறினாள் சித்ரா, உறவு சொல்லிக் கொண்டு, உயர்வு, வசந்தத்தில் ஒரு நாள், வேலியோரத்தில் ஒரு மலர், விடியாத இரவு போன்ற குறுநாவல்களையும் சமீபத்தில் படித்தேன். இவையெல்லாம் இன்று தண்டமாகத தெரிந்தாலும் ஒரு காலகட்டத்தின் தேவையை பூர்த்தி செய்திருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

கங்கையும் வந்தாள்: ஹீரோவை ஏமாற்றும் ஹீரோயினின் அப்பா. ஹீரோ-ஹீரோயினுக்கும் தமிழ் நாவல் வழக்கப்படி காதல், ஆனால் வெளியே சொல்லவில்லை. அப்பாவை பழிவாங்க ஹீரோயினை மணந்து பிறகு தள்ளி வைக்கிறான். குழந்தை. குழந்தை முகம் பார்த்து அவன் மனம் மாறுகிறது. சுத்த வேஸ்ட்.

காஷ்மீர் கத்தி: தவறான முறையில் பிறந்த பையன் குப்பத்தில் வளர்கிறான், அவனது பிரச்சினைகள். படிக்கலாம்.

கூண்டுக்குள்ளே ஒரு பச்சைக்கிளி: வேஸ்ட். பெரிய மனிதர் தேவநாதன் உண்மையில் குரூரமானவர். தன்னை மணந்து கொள்ள மறுக்கும் இளம் பெண்+காதலனை உயிரோடு ஒரு அறையில் பூட்டிவிடுகிறார். ஆனால் வேலைக்காரன் வைரவன் தப்ப வைக்கிறான்.

முருகன் சிரித்தான்: பணக்கார, திமிர் பிடித்த டாக்டர் கணவன், மாமியார்; விவாகரத்து வரை விஷயம் போய்விடுகிறது. தற்செயலாக ஒரு விபத்து ஏற்பட, குடும்பம் இணைகிறது. வேஸ்ட்.

ரோஜா வைரம்: வேஸ்ட் என்ற ஒரு வார்த்தைக்கு மேல் இதைப் பற்றி எழுதும் எதுவும் வேஸ்ட். For the record, தென்னாப்பிரிக்காவில் வைர வியாபாரம் செய்ய முயற்சிக்கும் ஒரு குடும்பம்.

உயிரே ஓடி வா: இன்னொரு வேஸ்ட். பணக்காரப் பெண் ரேவதியை அவள் எழுதிய காதல் கடிதங்களை வைத்து முகுந்தன் ப்ளாக்மெயில் செய்கிறான். ரேவதியை மனம் செய்து கொள்ளப்போகும் சிவகுருவும், சிவகுருவின் அம்மாவும் அவனை பரவாயில்லை போ என்று துரத்துகிறார்கள்.

வீரத்தேவன் கோட்டை: தண்டம். இரண்டு குடும்பங்கள் எதிரிகள், வழக்கம் போல வாரிசுகளிடம் காதல், அப்புறம்தான் தெரிகிறது காதலன் வீரத்தேவன் எதிரி குடும்பத்தில் பிறந்து இங்கே வளர்கிறான் என்று.

விசித்திரப் பெண்கள்: சிறுகதைத் தொகுப்பு. எதுவும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய சிறுகதை இல்லை. ஆனால் மொத்தமாகப் படிக்கும்போது பழைய விகடன்/கல்கி/கலைமகள் இதழ்களைப் புரட்டுவது போல ஒரு உணர்வு ஏற்பட்டது.

அவரது புத்தகங்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டபோது மறைந்த சேதுராமன் எழுதிய அறிமுகம் கீழே.


சேதுராமன் தரும் புதிய தகவல்: “அண்மையில் லக்ஷ்மியின் சகோதரர் திரு. ராகவனுடனும், மருமகள் திருமதி மகேஸ்வரனிடமும் பேசினேன். லக்ஷ்மியின் வாரிசுகள் தமிழ் நாடு அரசின் நாட்டுடைமைக்கு ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டதாகத் தெரிவித்தனர்”.

சமுதாயத்தில் எத்துணைதான் படித்திருந்தாலும், பெண்ணுக்குச் சம உரிமை இல்லை; பெண்கள் சரி நிகர் சமான நிலை பெற வேண்டும் என்பதே குறிக்கோள். பெண் பிரச்சினை, உரிமையே மையக் கருத்து. பெண்ணின் பெருமை பேசுவதே, அருமை பாராட்டுவதே அடித்தளம். இல்லத்தின் உயிர் நாடியே பெண்தான் என்பது. குடும்பச் சிக்கல்களை அலசுவது. பெண்மையின் மென்மை உணர்வுகள்/ஆண்மையின் வன்மை உணர்ச்சிகள், இவற்றின் உரசல்களால் உருவாகும் நிகழ்ச்சிகளைப் பின்னித் தருபவர்; அதேசமயம் நமது தமிழ் மரபினையும், இந்தியப் பண்பாட்டினையும் உயிராகப் பேணி எழுதி வருபவர் – அவர் தான் லக்ஷ்மி என்கிற டாக்டர் எஸ்.திரிபுரசுந்தரி (மது.ச. விமலானந்தம்)

சிதம்பரத்தை அடுத்துள்ள அம்மாபேட்டை என்ற சிறு கிராமத்தில் 1921ம் வருஷம் மார்ச் மாதம் 21 தேதி பிறந்தவர் லக்ஷ்மி. பெற்றோர் திருச்சி ஜில்லா தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீனிவாசன், பட்டம்மாள் என்ற சிவகாமி. உடன் பிறந்தவர்கள் ஐவர், நான்கு சகோதரிகள், ஒரு தம்பி.

தொட்டியம் தொடக்கப் பள்ளியிலும், முசிறி உயர் நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்ற லக்ஷ்மி, தனது உயர் நிலைக் கல்வியைத் திருச்சியிலுள்ள ஹோலி க்ராஸ் கல்லூரியில் தொடர்ந்தார். காரணம் ஐந்தாவது ஃபாரம் படிப்பை முடித்து எஸ்.எஸ்.எல்.சி வகுப்புக்குப் போக வேண்டிய சமயம், முசிறிப் பள்ளியின் தலைமையாசிரியர் “ஆண்களுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பள்ளியில் தொடர்ந்து வயது வந்த ஒரு பெண்ணைப் படிக்க அனுமதிக்க முடியாது” என்றதால்தான். சீரான போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால், முறையிட்டு, ஹாஸ்டல் வசதியைப் பெற்றார் லக்ஷ்மி. தமிழில் வகுப்பில் முதல் மாணவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் ஆண்டு ஒரு பரிசையும் பெற்றார். இண்டர் முடித்தவுடன் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், சென்னையிலுள்ள கல்லூரிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பினார். முதலில் வெய்டிங் லிஸ்டில் இருந்த போதிலும் இவருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்தது.

முதல் ஆறுமாதங்கள் ப்ரி-ரிஜிஸ்ட்ரேஷன் ஸ்டான்லியிலும், கல்லூரியில் வசதிகள் இல்லாததால், அனாடமி, ஃபிசியாலஜி படிப்பை மதராஸ் மெடிகல் காலேஜில் இரண்டு வருஷங்கள் தொடர்ந்து, மூன்றாம் வருஷப் படிப்பைத் தொடர ஸ்டான்லி திரும்பினார். இவர் மருத்துவம் படித்த காலம் இரண்டாவது உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம். அதன் தாக்கங்கள் எப்படியிருந்தன என்பதை கதாசிரியையின் கதை என்ற தமது சுய சரிதத்தில் விவரமாக எழுதியிருக்கிறார் லக்ஷ்மி. மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள எழுத்தின் உதவியை நாடினார் லக்ஷ்மி. அக்காலத்தில் ஆனந்த விகடன் காரியாலயம் ஸ்டான்லிக்கு அருகே ப்ராட்வேயில் தான் இருந்தது. இதைப் பற்றி திருமதி பட்டம்மாள் வாசன் நினைவு கூர்கிறார்:

ஒரு நாள் லக்ஷ்மி ஃபோன் பண்ணினா. “நான் கதையெல்லாம் எழுதுவேன், உங்கள் கணவரைப் பார்த்துப் பேச வேண்டும், உதவி செய்வீர்களா?” நீ ஆஃபீசுக்குப் போனால் அவரைப் பார்க்கலாம் என்றேன். அவரிடம் “டாக்டருக்குப் படிக்க வேண்டும், எங்களுக்கு இப்போது நிதி வசதி சரியாயில்லை. என்னுடைய கதைகள் சிலதைக் கொண்டு தருகிறேன். பிரசுரித்துப் பண உதவி செய்தால் சந்தோஷப்படுவேன்” என்று கேட்டிருக்கிறாள். நல்ல கதைகள் என்றால் பிரசுரிப்போம் என்று சொன்ன வாசன், பின்னர் கதைகள் தரமாக இருக்கவே பிரசுரம் செய்து உதவினார்.

டாக்டர் படிப்பு முடித்ததும் லக்ஷ்மியின் குடும்பம் சென்னையிலேயே குடியேறிற்று. தங்கைகள் கல்யாணம் பொறுப்பேற்று நடத்தி முடித்தார். 1955ம் வருஷம் தானும் கண்ணபிரான் என்ற தென்னாப்பிரிக்கத் தமிழரை திருமணம் செய்து கொண்டார். சென்னையிலுள்ள அடையாறு தியோசாஃபிகல் சொசைட்டியில்தான் இந்தத் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின் லக்ஷ்மி இருபத்தியிரண்டு வருஷங்கள் தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்தார். மகப்பேறு வைத்தியராகப் பணியாற்றினார். இத்தம்பதிகளுக்கு மகேஸ்வரன் என்ற ஒரு பிள்ளை.

1966ம் வருஷம் கண்ணபிரான் இறந்தது லக்ஷ்மியை மிகவும் பாதித்தது. இருப்பினும் அங்கேயே தன் வாழ்க்கையைத் தொடர்ந்த லக்ஷ்மி 1977ம் வருஷம் சென்னை திரும்பினார். என்ன காரணமாகவோ அதன் பிறகு அவர் தொடர்ந்து எழுதவில்லை. மகேஸ்வரனையும் மருத்துவப் படிப்பில் சேர்த்து அவரையும் மருத்துவராக்கினார்.

பதினான்கு வயதிலேயே எழுத ஆரம்பித்த லக்ஷ்மி நாற்பத்தி ஐந்து ஆண்டுகள் படைப்பிலக்கியம் செய்து, ஆயிரத்துக்கும் மேலான சிறுகதைகள், நூற்றுக்கும் மேலான நாவல்கள் வெளியிட்டுள்ளார். மருத்துவம், மகப்பேறு போன்ற பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார். இவரது முதல் நாவல் பவானி (1940). பெண் மனம் (1946), மிதிலா விலாஸ் என்ற இரு நாவல்கள் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசையும், ஒரு காவிரியைப் போல 1984ல் சாகித்திய அகாதெமி விருதையும் பெற்றன. காஞ்சனையின் கனவு, பெண் மனம் என்ற நாவல்கள் காஞ்சனா, இருவர் உள்ளம் என்ற தலைப்புகளுடன் மூன்று தென் மொழிகளில் திரைப் படங்களாயின. இருவர் உள்ளம் படத்திற்கு, திரைக்கதை, வசனம் எழுதியது முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி.

லக்ஷ்மியின் மறைவு 1987ம் வருஷம் ஜனவரி மாதம் ஏழாம் தேதி சென்னையில். அவரது மறைவு குறித்து ஆனந்த விகடனில் (25-1-1987 – மீள் பதிப்பு ஆ.வி.11-3-2009) பட்டம்மாள் வாசன் நினைவு கூர்வது:

வாழ்க்கையில் நிறையச் சிரமப்பட்டிருந்தாலும், அவ பேசறப்போ சிரிச்சுண்டேதான் பேசுவா. சாகித்ய அகாடமி பரிசு வாங்கியதும் என்னைத் தேடி வந்து சொன்னது எனக்குப் பெருமையா இருந்தது. சமீபத்திலே எங்க வீட்டுக் கல்யாணத்துக்கு வந்திருந்தபோது ‘என் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணப் போறேன்’ என்று ரொம்ப சந்தோஷமாச் சொன்னாள். அவ சாகும்போது, அந்த ஒரே பிள்ளையும் துரதிர்ஷ்டவசமா கிட்டக்க இல்லாம எங்கேயோ இங்கிலாந்திலேயா இருக்கணும்னு நினைச்ச போது என் மனசுக்கு கஷ்டமாயிருந்தது.”

சொல்லும்போதே திருமதி பட்டம்மாள் வாசனின் குரல் தழுதழுத்துக் கண்கள் பனித்தன.

லக்ஷ்மியின் படைப்புகள் வருமாறு:
அழகின் ஆராதனை — அவள் தாயாகிறாள் — அசோகமரம் பூக்கவில்லை — அடுத்த வீடு — அரக்கு மாளிகை — அதிசய ராகம் — அத்தை — அவளுக்கென்று ஒரு இடம் — அவள் ஒரு தென்றல் — இரண்டாவது மலர் — இவளா என் மகள் — இரண்டு பெண்கள் — இரண்டாவது தேனிலவு — இனிய உணர்வே என்னைக் கொல்லாதே — இருளில் தொலைந்த உண்மை – இன்றும் நாளையும் – உறவுகள் பிரிவதில்லை — உயர்வு — உறவின் குரல் — ஊன்றுகோல் — என் வீடு — என் மனைவி — ஒரு காவிரியைப் போல (சாகித்திய அகாதெமி பரிசு 1984) — ஒரு சிவப்பு பச்சையாகிறது

கடைசி வரை — கங்கையும் வந்தாள் — கதவு திறந்தால் — கதாசிரியையின் கதை (இரண்டு பாகங்கள்) — கழுத்தில் விழுந்த மாலை — கணவன் அமைவதெல்லாம் — காஷ்மீர் கத்தி — காளியின் கண்கள் — கூறாமல் சன்னியாசம் — கூண்டுக்குள்ளே ஒரு பைங்கிளி — கை மாறிய போது — கோடை மேகங்கள் — சசியின் கடிதங்கள் — திரும்பிப் பார்த்தால் — துணை — தை பிறக்கட்டும் — தோட்டத்து வீடு — நதி மூலம் — நல்லதோர் வீணை — நாயக்கர் மக்கள் — நிற்க நேரமில்லை – நியாயங்கள் மாறும்போது — நிகழ்ந்த கதைகள் — நீலப்புடைவை — நீதிக்குக் கைகள் நீளம் — பண்ணையார் மகள் – பவளமல்லி — பவானி (முதல் நாவல்) — புனிதா ஒரு புதிர் — புதை மணல் — பெயர் சொல்ல மாட்டேன் — பெண் மனம் (தமிழ் நாடு அரசு பரிசு) — பெண்ணின் பரிசு — மரகதம் — மனம் ஒரு ரங்க ராட்டினம் — மண் குதிரை — மருமகள் — மறுபடியுமா? — மாயமான் — மீண்டும் வசந்தம் – மீண்டும் ஒரு சீதை — மீண்டும் பிறந்தால் — மீண்டும் பெண் மனம் – முருகன் சிரித்தான் — மோகத்திரை

ராதாவின் திருமணம் — ராம ராஜ்யம் — ரோஜா வைரம் — வனிதா — வசந்திக்கு வந்த ஆசை — வடக்கே ஒரு சந்திப்பு — வாழ நினைத்தால் — வீரத்தேவன் கோட்டை — வெளிச்சம் வந்தது — ஜெயந்தி வந்தாள் — ஸ்ரீமதி மைதிலி

தகவல் ஆதாரம்:
1. தமிழ் இலக்கிய வரலாறு – மது.ச.விமலானந்தம்
2. லக்ஷ்மியின் கதாசிரியையின் கதை – பூங்கொடிப் பதிப்பகம் 1985
3. ஆனந்த விகடன் கட்டுரை (11-3-2009)
4. வலைத்தளக் கட்டுரைகள்


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
காஞ்சனையின் கனவு

அசோகமித்திரன் பேட்டி

அசோகமித்திரன் விகடனில் கொடுத்த பேட்டியை இட்லிவடை தளத்தில் மறு பிரசுரம் செய்திருக்கிறார்கள். அசோகமித்திரன் எழுத்தைப் போலவே அவரது பேச்சும் ரத்தினச் சுருக்கமாக இருக்கிறது. இது ஒரு மோசமான பேட்டி, மண்டபத்தில யாரோ எழுதிக் கொடுத்ததைப் போட்டிருக்கிறார்கள் என்று சில நண்பர்கள் சொன்னார்கள். எனக்கு இதில் அசோகமித்ரனின் டச் தெளிவாகத் தெரிகிறது. இது வரை பார்க்காவிட்டால் கட்டாயமாகப் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன். விகடனுக்கும் இட்லிவடைக்கும் நன்றி!

சில excerpts:

“இந்த வயதில் இருந்து பார்க்கும்போது, வாழ்க்கை எப்படி இருக்கிறது?”
“ரொம்பச் சோர்வாக இருக்கிறது. தள்ளாமையும் வியாதிகளும் வலியும் கொல்கின்றன. உலகம் விடை கொடுத்துவிடாதா என்று காத்திருக்கிறேன்.”

“உங்கள் 60 ஆண்டு எழுத்து வாழ்க்கை திருப்தியைத் தருகிறதா?”
“இதுவரைக்கும் 9 நாவல்கள், முந்நூற்றிச் சொச்ச சிறுகதைகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். என்னுடைய எழுத்து மேல் திருப்தி இருக்கிறது. வாழ்க்கை மேல் புகார்கள் கிடையாது. ஆனால், என் எழுத்தைப் படித்துவிட்டு எழுத்தாளனாகப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு யாராவது என்னைப் பார்க்க வந்தால் மட்டும் எனக்குப் பொல்லாத கோபம் வரும். ‘போடா மடையா… உருப்படியாக ஏதாவது வேலையைத் தேடிக் கொள்’ என்று கத்தத் தோன்றும். நான் எப்படியோ வாழ்ந்துவிட்டேன். எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கை. மற்றவர்களுக்கு இந்தக் கஷ்டம் வேண்டாம்.”

“தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே சிறப்பாக எழுதக் கூடியவர் நீங்கள். ஆனால், தமிழைச் சுற்றியே உங்கள் படைப்பு உலகத்தை அமைத்துக் கொண்டீர்கள். ஏன்?”
“1952-ல் நான் எழுத வந்தேன். அப்போது தமிழில்தான் செய்ய வேண்டியது நிறைய இருப்பதாகத் தோன்றியது. அதற்கு நிறையப் பேரின் தேவையும் இருந்தது. தமிழைத் தேர்ந்தெடுத்தேன்.”

“புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, கு.ப.ரா. எனப் பலர் அந்தக் காலகட்டத்திலேயே புதுப் புது முயற்சிகளில் ஈடுபட்டு இருந்தார்கள் இல்லையா?”
“ஆமாம்; ஆனால் அது தொடக்கம்தான். செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருந்தது.”

“ஒரு வாசகராக உங்களை மிகவும் பாதித்த படைப்புகளைச் சொல்லுங்கள்?”
உ.வே.சா-வின் ‘என் சரித்திரம்’, நாமக்கல் கவிஞரின் ‘என் கதை’, கல்கியின் ‘தியாக பூமி’, புதுமைப்பித்தனின்சித்தி’, சரத்சந்திர சாட்டர்ஜியின் ‘சந்திரநாத்’, அலெக்சாண்டர் டூமாஸின் ‘The Count of Montecristo’, சார்லஸ் டிக்கன்ஸின் ‘A Tale of Two Cities”

“கடந்த ஒரு நூற்றாண்டில் இந்திய அளவில் மகத்தான இலக்கியச் சாதனையாக எதைச் சொல்வீர்கள்?”
தாகூரின் ‘கோரா’.”

“ஒரு விமர்சகராக நீங்கள் கறாராகச் செயல்பட்டது இல்லை என்ற குற்றச்சாட்டு உண்டு…”
“ஏன் கறாராகச் செயல்பட வேண்டும்? விமர்சகனாக அடையாளப்படுத்திக்கொள்ளக் கூட நான் பிரியப்பட்டது இல்லை.”

“உங்கள் அளவில் நல்ல இலக்கியத்துக்கான வரையறை என்ன?”
“மனிதன் மீது அக்கறை காட்டுகிற எல்லாமே இலக்கியம்தான். மனிதர்களைப் பிரிக்கிற எதுவுமே இலக்கியம் இல்லை.”

“தமிழில் இப்போது எழுதுபவர்களில் நம்பிக்கை அளிப்பவர்களாக யாரைக் கருதுகிறீர்கள்?”
ஜெயமோகன். அவருக்கு இருக்கும் அனுபவங்களும் வாசிப்பும் இன்னும் அவரைப் பெரிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும் என்று நினைக்கிறேன். ஆனால், படைப்புகளைத் தாண்டி அவர் எழுதுவதும் பேசுவதும்… ம்ஹூம்…”

“உங்களை நீங்கள் சுயவிமர்சனம் செய்துகொள்வது உண்டா? உங்கள் படைப்புகளை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?”
“ஒவ்வொருவருக்கும் அது அவசியம் இல்லையா? எல்லாக் காலங்களிலுமே என்னை சுயவிமர்சனம் செய்து வந்திருக்கிறேன். உலகத் தரத்தில் என் எழுத்துகளை ஒப்பிடச் சொன்னால், நான் யாருக்கும் தாழ்ந்தவன் இல்லை என்று சொல்வேன்.”

“நாட்டுநடப்புகள், அரசியல் போக்குகள்பற்றி நீங்கள் அதிகம் விமர்சித்தது இல்லை…”
“வாழ்க்கையோடு முட்டி மோதி நின்றவன் அல்ல நான். வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்தவன். அரசியலையும் அப்படித்தான் பார்த்தேன்.”


தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்திரன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்: முழு பேட்டியும் இங்கே

வாலியின் தேர்வுகள்

வாலி நல்ல சினிமா பாட்டு எழுதக் கூடியவர் என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. அவரது “இலக்கிய” முயற்சிகள் எல்லாம் வெட்டி. மிகவும் வலிந்து எதுகை மோனை கண்டுபிடிப்பார், எரிச்சலாக இருக்கும்.

விகடனில் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில் தனக்குப் பிடித்த பத்து புத்தகங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அவரது தேர்வுகள் என்னை வியப்படைய வைத்தன. விந்தனையும் கருணாநிதியையும் ஒரு லிஸ்டில் பார்ப்பது இதுதான் முதல் தடவை. அதுவும் கருணாநிதி இப்போது ஆட்சியில் கூட இல்லை. அந்த வியப்பை பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.

  1. காண்டேகரின் – ‘யயாதி’
  2. லா.ச.ரா.வின் – ‘ஜனனி’
  3. கண்ணதாசனின் – ‘அர்த்தமுள்ள இந்து மதம்’
  4. பழநிபாரதியின்- ‘காற்றின் கையெழுத்து’
  5. விந்தனின் – ‘பாலும் பாவையும்’
  6. கல்கியின் – ‘கள்வனின் காதலி
  7. ஜெயகாந்தனின் – ‘ஜயஜய சங்கர ஹரஹர சங்கர!’
  8. கலைஞரின் – ‘நெஞ்சுக்கு நீதி’
  9. வ.ரா-வின் – ‘கோதைத் தீவு’
  10. புஷ்பா தங்கதுரையின் – ‘திருவரங்கன் உலா’

தொகுக்கப்பட்ட பக்கம்: புத்தகப் பரிந்துரைகள்

நாஞ்சில் நாடனின் ஒரு பழைய பேட்டி

நாஞ்சில்நாடன் பேசியதை எல்லாம் பக்ஸ் சென்சார் செய்துவிட்டான். 🙂 அவரது இங்கே பேசிய பல கருத்துகளை தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்காக விகடனில் அவர் அளித்த பேட்டி ஒன்றை இங்கே மறு பிரசுரம் செய்திருக்கிறேன். பேட்டியில் உள்ளதை விட வலிமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினார், அதற்காகப் போய் பக்ஸ் தயங்கி இருக்க வேண்டாம். 🙂 பேட்டியை அனுப்பிய உப்பிலி ஸ்ரீனிவாசுக்கும், விகடனுக்கும் நன்றி!

சக மனிதர்கள் மீதான அக்கறையும் சமூகம் மீதான கோபமுமே நாஞ்சில் நாடனின் எழுத்து. ‘தலைகீழ் விகிதங்கள்’, ‘எட்டுத் திக்கும் மத யானை’, ‘என்பிலதனை வெயில் காயும்’ எனத் தமிழின் முக்கிய நாவல்கள் படைத்தவர். ‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுப்புக்காகச் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள நாஞ்சில் நாடன், “என்னைப் பார்த்து எழுத வந்தவர்கள், எனக்கு முன்பு சாகித்ய அகாடமி விருது பெற்று விட்டார்கள். இது தாமதமாக எனக்குக் கிடைத்த விருதுதான்!” – சிநேகமாகச் சிரிக்கிறார். இலக்கியம், சினிமா, அரசியல் எனப் பல தளங்களிலும் தன் கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்கிறார் நாஞ்சில்நாடன்.

“சாகித்ய அகாடமி விருது மகிழ்ச்சியா?”
“இது ஓர் அங்கீகாரம், அடையாளம். அவ்வளவுதான். அது இருக்கட்டும். அதனால் என்ன நிகழும்?
கேரளாவின் புகழ் பெற்ற எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயருக்கு ஞானபீட விருது கிடைத்தது. அவர் வீட்டுக்குப் பாராட்ட வந்து நின்ற கார்களில் கேரள முதல்வர் ஏ.கே. அந்தோணியின் காரும் ஒன்று. ஆனால், யோசித்துப் பாருங்கள். தமிழகத்தில் ஓர் எழுத்தாளருக்கு ஞானபீட விருதே கிடைத்தாலும் முதலமைச்சர் வீடு தேடி வந்து பாராட்டுவாரா?
எழுத்தாளரே தன் சொந்த செலவில் சால்வையும் பூச்செண்டும் வாங்கிக்கொண்டு, புகைப்படக் கலைஞரையும் கூட்டிக் கொண்டு முதல்வர் இல்லத்துக்குச் செல்ல வேண்டும். மறு நாள் செய்தித்தாள்களில் அது செய்தியாக வரும், ‘ஞானபீட விருது வென்ற எழுத்தாளர், முதல்வரிடம் வாழ்த்து பெற்றார்!’ என்று. ஆக, முதல்வர் அப்போதும் எழுத்தாளரை வாழ்த்துவது இல்லை, முதல்வரிடம் எழுத்தாளன்தான் வாழ்த்துப் பெற வேண்டும்.
தமிழ்ச் சமூகம் சினிமாவுக்குப் பின்னால் அலைகிற சமூகம். இரண்டு காட்சிகளில் தலை முடியைக் கலைக்கும் நடிகனுக்குக் கொடுக்கும் மரியாதையை எழுத்தாளனுக்குத் தருவது இல்லை. நடிகர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் தருகின்றனவே, ஏதாவது ஓர் எழுத்தாளருக்கு எப்போதாவது டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு இருக்கிறதா?”

“இப்போது இலக்கியத்தை சினிமாவுக்குள் நுழைவதற்கான விசிட்டிங் கார்டுபோல சிலர் பயன்படுத்துகிறார்களே, பிறகு, அவர்களே, ‘என் கதையைச் சிதைத்துவிட்டார்கள்’ என வருத்தம் தெரிவிப்பதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?”
“முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நாவலை எடுத்துக்கொண்டால், அது முழுக்க முழுக்க எழுத்தாளனின் ராஜ்யம். ஆனால், சினிமா என்பது பலர் கூடி இழுக்கும் தேர். சினிமாவுக்குப் போகிற எழுத்தாளன் சினிமா வேறு, எழுத்து வேறு என்பதில் சரியான புரிதலுடன் இருக்க வேண்டும். நான் வட்டார வழக்கில் எழுதிய ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவல் ‘சொல்ல மறந்த கதை’ என சினிமாவாக வெளியானபோது, அதில் ஒரு வட்டார வழக்குச் சொல் கூட இல்லை. ஆனால், அதுதான் சினிமா!
ஆறு பக்கங்கள் நான் எழுதித் தள்ளுவதை இயக்குநர் ஒரே ஒரு ஷாட்டின் மூலம் கடந்து விடுவார். இதை எல்லாம் கணக்கில் கொண்டு தான் என் கதையைச் சினிமாவாக மாற்றுவதற்கு நான் சம்மதிக்கிறேன். அதன் பிறகு, ‘நாவலைச் சினிமா சிதைத்துவிட்டது!’ என்று புலம்புவதில் அர்த்தமே இல்லை!”

“சினிமா இருக்கட்டும், அரசியலுக்குப் போகிற எழுத்தாளர்களை ஆதரிக்கிறீர்களா?”
“இல்லை. அரசியல் என்பது இப்போது ஒரு தொழில். சொல்லப்போனால், மிக மோசமான தொழில்!
ஊழல் பண்ணத் தெரிந்தவன், சாதி ரீதியாக அரசியல் பண்ணத் தெரிந்தவன், தன்மானத்தைத் துறக்கத் தெரிந்தவன் இவர்கள்தான் இன்றைய அரசியலுக்குத் தகுதியானவர்கள். ஒரு வேளை இலக்கியவாதிகள் அரசியலுக்குப் போனால், அரசியல் மேம்படுமே என்று கேட்கலாம். சினிமா எவ்வளவு தரம் கெட்டுப் போனாலும், படைப்பாளிகள் பங்கெடுக்கும்போது அதை மீட்டெடுக்க முடியும். ஆனால், அரசியல் மீள முடியாத ஒரு சாக்கடை. இப்போது அரசியலுக்குப் போன இலக்கியவாதிகளையே எடுத்துக் கொள்வோம். அவர்கள் எழுதித் தள்ளும் ஆதர்சங்களுக்கும் அவர்களின் அரசியலுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இதில் விதிவிலக்குகளே இல்லை. மேலும், அரசியலுக்குப் போகிற இலக்கியவாதிகள் மீது இலக்கியவாதிகளுக்கே மரியாதை கிடையாது. சுருக்கமாகச் சொல்லப் போனால், குற்றம் செய்யக் கூசாத மனோபாவம்தான் அரசியலுக்குத் தேவை!”

“விஜயகாந்த், குஷ்பு, விஜய் போன்றவர்கள் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவதையாவது ரசிக்கிறீர்களா?”
“தமிழக அரசியல் என்பது சினிமா கவர்ச்சியின் உச்சம். நான்கு படங்களில் தலை காட்டுகிற நடிகர்கள், ஒரு கட்டத்தில் தான் முதல் அமைச்சர் ஆகிவிடலாம் என்று நினைப்பதும் நம்புவதும் எனக்கு இன்னமும் ஒரு கலாசாரப் புதிராகவே இருக்கிறது. ஒரு குடிமகன் என்ற வகையில் ஒரு நடிகன் அரசியலுக்கு வருவது தப்பு இல்லைதான். ஆனால், ஓர் இசைக் கலைஞன், ஓவியன் இவர்களுக்கு எல்லாம் வராத மனத் துணிவு ஒரு சினிமா நடிகனுக்கு மட்டும் எப்படி வருகிறது என்பதுதான் கேள்வி. ஒரு கட்டத்தில் மக்களுக்கு அறிவுரை சொல்பவனாக நடிகன் மாறிவிடுகிறான். மக்களுக்குச் சொன்னால் கூடப் பரவாயில்லை, அறிஞர்களுக்கே அறிவுரை சொல்பவனாகவே நடிகன் மாறி விடுகிறான். படிப்பறிவில் பின் தங்கியுள்ள பீகார் போன்ற மாநிலங்கள் கூட சினிமா பைத்தியத்தால் சீரழியவில்லை. தமிழகம் அளவுக்கு வேறு எந்த மாநிலத்திலும் நாட்டு நடப்புகள் குறித்து இவ்வளவு அசிரத்தைகள் இல்லை!”

“சினிமா மட்டும்தான் தமிழ் கலாசாரத்துக்கு அபாயமானதா என்ன?”
“கலாசாரம் என்பது எப்போதும் நிலையான ஒன்று இல்லை. அது மாறிக் கொண்டே இருப்பது. ஆனால், மரபைக் கணக்கில் எடுக்காத கலாசார மாற்றம் பாழ். அற மதிப்பீடுகளும் ஒழுக்க விழுமியங்களும்தான் ஒரு பண்பாட்டின் வேர்கள். தமிழ் சினிமாதான் தமிழ் சமூகத்தின் மாபெரும் சாபக்கேடு. தமிழ் சமூகம் அளவுக்குச் சினிமாவின் கேடுகளை உள்வாங்கிக்கொண்ட சமூகம் வேறு எதுவும் கிடையாது. அது போக, அரசியலும் ஊடகமும் கல்வியும் நம் சமூகத்தை நாசம் செய்து கொண்டு இருக்கின்றன. கறிக் கோழியை வளர்ப்பதற்கும் குழந்தைகளை வளர்ப்பதற்கும் பெற்றோர்களிடம் எந்த வித்தியாசமும் இருப்பதில்லை. பிராய்லர் கோழியை வளர்ப்பதைப்போல பிள்ளைகளை வளர்த்தால், அந்தச் சமூகம் எப்படி உருப்படும்? படிப்பு, வேலை இதைத் தவிர, மனித வாழ்க்கைக்கு அர்த்தங்களே இல்லையா? குறிக்கோள்களே இல்லையா? நமது சமூகம் எப்படி மதிப்பீடுகளை இழந்துகிடக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். சில நாட்களுக்கு முன் எனக்கு பி.எஸ்.என்.எல்.லில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. எடுத்துப் பேசினால், ‘ஹாய், மச்சான் சௌக்கியமா?’ என்றது. அது ஒரு பதிவு செய்யப்பட்ட குரல். எதிர்முனையில் இருப்பவர் யார்? எழுத்தாளரா, கொலைகாரரா, ஆசிரியரா, நோய்வாய்ப்பட்டவரா, அவருக்கு என்ன வயது இருக்கும் என்று எந்தக் குறைந்தபட்ச அறிவும் இல்லாமல் கூவுகிற வியாபாரக் குரல்கள் என்னை இம்சை செய்கின்றன!”

“இன்றைய மாணவர்களுக்கு அரசியல் உணர்வு இல்லாமல் இருக்கிறதே?”
“உண்மைதான். தேசிய உணர்வு, அதற்குப் பிறகு இந்தி எதிர்ப்புப் போராட்டம் எழுந்த காலத்தில், தமிழ் உணர்வு ஏற்பட்ட காலம் எங்கள் மாணவப் பருவக் காலம். ஆனால், இப்போது உள்ள மாணவர்களோ, ‘மானாட மயிலாட’ பார்ப்பதற்குச் செலவழிக்கும் மணித்துளிகளை செய்திகளைப் பார்ப்பதற்குச் செலவழிக்க மனம் இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால், இன்னொரு விஷயத்தையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
மாணவர்கள் பின்பற்றக்கூடிய அளவுக்கு, இன்று எந்தத் தலைவனுக்குத் தகுதி இருக்கிறது? தேசியக் கொடி பறக்கும் காரில் உட்காரும் தகுதி கூட இல்லாதவர்கள்தான் இன்றைய தலைவர்கள். நயவஞ்சகர்களை, துரோகிகளை எப்படிப் பின்பற்ற முடியும்?
இன்று ஸ்பெக்ட்ரமில் 1,76,000 கோடி ஊழல் என்பதை ஜோக்காகப் புரிந்துகொள்ளும் அளவுக்கு நாம் சுரணை அற்றவர்களாக மாறிவிட்டோம். ஒரு புதுப்படம் வெளியானால், முதல் ஏழு நாட்கள் இருக்கையை நிரப்புபவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள்தானாம். உணர்ச்சிவசப்படுவதும் போராடுவதும்தான் இளைய தலைமுறையின் இயல்பே. ஆனால், இன்றோ எது நடந்தாலும் ஈரத்தில் ஊறிக் கிடக்கும் எருமையைப்போல இருக்கிறான் இளைஞன்.
எல்லோருக்குமே படிக்க வேண்டும் சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தாண்டி, எந்தக் குறிக்கோளும் இருப்பதாகத் தெரியவில்லை!”

“ஈழப் பிரச்னை ஒரு படைப்பாளியாக உங்களை எப்படிப் பாதித்தது?”
“வெகுவாக! அடுத்து வெளிவர இருக்கிற என்னுடைய ‘பச்சை நாய்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பில் ஈழம் சார்ந்த அரசியல் கவிதைகள் நிறைய இருக்கும். நான் ஒரு படைப்பாளி. என்னுடைய மறுப்பைப் படைப்பாகத்தான் பதிவு செய்ய முடியும். ஆனால், பல படைப்பாளிகள் தங்கள் எதிர்ப்புகளையும் உணர்வுகளையும் படைப்பாகக்கூட பதிவு செய்யவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால், இந்தத் தலைவர்கள் என்ன செய்தார்கள்? என்னை ஒரு மலையாள எழுத்தாளர் கேட்டார், ‘இவ்வளவு பெரிய இன அழிப்பு நடந்திருக்கிறதே, ஏன், உங்கள் ஊரில் ஒரு முனிசிபல் கவுன்சிலர் கூட ராஜினாமா செய்யவில்லை?’ என்று. மௌனத்தைத் தவிர, வேறு எந்தப் பதிலும் என் வசம் இல்லை. ஈழப் பிரச்னையைப் பொறுத்த வரை அலட்டிக் கொள்கிறோமே தவிர, எல்லாமே பாசாங்கோ என்று தோன்றுகிறது. நிறைய இளைஞர்களுக்குப் பிரச்னையே என்னவென்று புரியவில்லை!”

“இணையத்தில் எழுதும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறதே?”
“மகிழ்ச்சிதான். ஆனால், இவர்கள் எவ்வளவு ஆழமாகப் படிக்கிறார்கள் என்கிற சந்தேகம் உண்டு. முன்பு எழுத்தாளர்கள், சமகாலம் மற்றும் முற்காலத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களை வாசித்துவிட்டுத்தான் எழுதினார்கள். ஆனால், இணையத்தில் எழுதும் எழுத்தாளர்களிடம், வாசிப்புப் பழக்கம் மிக மிகக் குறைவு. இணையத்தில் வம்பு வழக்குகளும் கிசுகிசுக்களும் அதிகமாகிவிட்டன!”

“மற்றவர்களைக் குற்றம் சாட்டுவது சரி. எழுத்தாளர்கள் என்றாலே குடிகாரர்கள், குழு மோதலில் ஈடுபடுபவர்கள் என்றுதானே மற்றவர்கள் நினைக்கிறார்கள்?”
“குடி என்பதே நண்பர் வட்டம்தானே! யார் இங்கே குடிக்காமல் இருக்கிறார்கள்? எல்.ஐ.சி-யில் வேலை பார்ப்பவர்கள், வங்கியில் பணி புரிபவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், ஐ.டி. துறை ஊழியர்கள் என நண்பர்கள் சேர்ந்தால் குடிக்கத்தானே செய்கிறார்கள். அதேபோல இலக்கியவாதிகளும் நண்பர்களாகச் சேர்ந்தால் குடிக்கிறார்கள். காசு இருக்கிறவன் அடுத்தவனுக்கு வாங்கித் தருகிறான். இல்லாதவன் அடுத்தவனோடு சேர்ந்து குடிக்கிறான். நாலு லார்ஜுக்கு மேல் போனால் சண்டை வருவது எல்லாப் பக்கமும் இருக்கும் இயல்புதான். எழுத்தாளர்களுக்கு மட்டும்தான் குடித்தால் சண்டை வருகிறதா என்ன? எல்லா எழுத்தாளனும் ஏதோ ஒரு வகையில் மொழிக்கும் சமூகத்துக்கும் பங்காற்றவே செய்கிறான். எனவே சச்சரவுகள், சர்ச்சைகளை வைத்து மட்டுமே எழுத்துலகத்தை மதிப்பிட முடியாது, கூடாது!”

“இன்று புத்தக வெளியீட்டு விழாக்களுக்கும் சினிமா பூஜைகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விட்டதே, பளபளப்பான ஆளுமைகள்தானே புத்தக விழாக்களில் கலந்து கொள்கிறார்கள்?”
“அப்படி பொத்தாம்பொதுவாகச் சொல்லாதீர்கள். நாஞ்சில் நாடன், கண்மணி குணசேகரன், திருச்செந்தாழை இவர்களின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு எல்லாம் எந்த சினிமாக்காரர், எந்த வி.ஐ.பி. வருகிறார்?
சென்னையில் இருக்கும் எழுத்தாளர்களுக்கு இருக்கிற வசதி அது. புத்தகம் வெளியிடும் பதிப்பகங்களின் வியாபார உத்திகளையும் சார்ந்தது இது. ஆனால், இதில் ஒன்றும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. அன்று ஒரு நாளாவது, ஒரு சினிமா பிரபலம் ஓர் எழுத்தாளனைப் பாராட்டி நாலு வார்த்தைகள் பேசிவிட்டுத்தான் போகட்டுமே!”

கேணி சந்திப்பில் அவர் பேசியதைப் பற்றி இங்கே ஒரு பதிவு, இந்தக் கருத்துகளையும் அவர் இங்கே பல சந்திப்புகளில் வலியுறுத்தினார். பதிவிலிருந்து சில பல பத்திகளை கீழே கட் பேஸ்ட் செய்திருக்கிறேன்.

தேவை கருதியே சொற்கள் உருவாகின்றன. அப்படி உருவாகும் சொற்களை அழியாமல் பாதுகாக்க வேண்டிய கடமை படைப்பாளிகளுக்கு இருக்கிறது. ஒரு படைப்பில் சமுதாயக் கூறுகள், பண்பாட்டுக் கூறுகளை பதிவு செய்வதைப் போலவே மொழியின் கூறுகளையும் பதிவு செய்வது முக்கியம். 4000 பக்கங்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தலைச் சொற்களும் கொண்டு, இன்றளவும் பயன்படத் தக்கச் சிறந்ததொரு நூலாக விளங்குவது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் (lexicon) அகராதி. இதிலுள்ள வார்த்தைகளைத் தவிர வேறு வார்த்தைகளே தமிழில் இல்லையா? கடந்த ஐம்பது ஆண்டுகளில் புதிதாக சொற்களே தோன்றி இருக்காதா? கணினி, பின்னூட்டம் போன்ற வார்த்தைகள் எப்பொழுது தோன்றியது? இவற்றையெல்லாம் ஆவணப்படுத்த வேண்டாமா?

ஒரு படைப்பாளிக்கு பயணம் என்பது இன்றியமையாத ஒன்று. அது மட்டுமே பல விதமான மனிதர்களை, கலாச்சாரங்களை, வார்த்தைகளை, அனுபவங்களை படைப்பாளிக்கு வழங்கும். நான் விற்பனைப் பிரதிநிதியாக பல மாநிலங்களுக்கும் பயணம் செய்தவன். அந்த வகையில் பல மொழிகளும் என்னைக் கவர்ந்திருக்கிறது. இந்த மொழிதான் சிறந்தது, அந்த மொழிதான் சிறந்தது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு காவிரிப் பிரச்சனையில் கன்னடர்களுடன் பிரச்சனை இருக்கலாம், முல்லைப் பெரியாறு பிரச்சனையில் மலையாளிகளுடன் பிரச்சனை இருக்கலாம், சிவசேனாவினால் மராட்டியர்களுடன் கருத்து மாறுபாடு இருக்கலாம், ஆனால் அவர்களுடைய மொழியை நேசிக்கிறேன். அவர்களிடமுள்ள சிறந்த படைப்புகளை நேசிக்கிறேன். என்னுடைய மொழி தமிழ்தான் என்றாலும் காளிதாசரையோ, காண்டேகரையோ எப்படி நான் வெறுக்க முடியும்? அவர்களெல்லாம் மொழியின் கொடைகள் இல்லையா!

ஒரு அறையின் மூலையில் சிகப்பு வண்ண பெயிண்ட்டையும், இன்னொரு மூலையில் பச்சை வண்ண பெயிண்ட்டையும் கொட்டிக் கவிழ்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு வண்ணங்களும் பயணம் செய்து ஒன்றோடொன்று கலந்து மையத்தில் துல்லியமான நீல நிறம் கிடைக்கிறது. ஓரங்களில் மெல்லிய நிற மாற்றங்கள் கிடைக்கிறது இல்லையா? அது போலவே ஒரு மொழி இன்னொரு மொழியுடன் சேரும் பொழுது வேறு பல சொற்கள் மொழிக்குக் கிடைக்கிறது. அது மொழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். களிறு என்ற சுத்த தமிழ் வார்த்தை நம்மிடம் இன்று புழக்கத்தில் இல்லை. மலையாள மொழியில் இருக்கிறது. இந்த வார்த்தையை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இதுபோல நிறைய வார்த்தைகள் இருக்கின்றன.

சமீபத்தில் நான் வாசித்த டாக்டர் கு. சீனிவாசன் எழுதிய தாவரங்களைப் பற்றிய புத்தகம் குறிப்பிடப் படவேண்டிய ஒன்று. அது போலவே அ.கா. பெருமாள், பெருமாள் முருகன், கி.ரா., பா. சுப்பிரமணியம், கண்மணி குணசேகரன் போன்றவர்கள் வேலை மெனக்கெட்டு வார்த்தைகளைத் தொகுக்கிறார்கள். இதை யார் செய்ய வேண்டும்? ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதியில் கல்லூரியில் என்னதான் செய்கிறார்கள்? “மாணவர்களை கிராமங்கள் நோக்கித் துரத்துங்கள். புதுசா வார்த்தைகளையோ, இதிகாச துணைக் கதைகளையோ கண்டுபுடிச்சிட்டு வந்தா, அவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுங்க” என்று கல்லூரியில் நடக்கும் கலந்துரையாடலின்போது துறைத் தலைவர்களிடம் சொல்லியிருக்கிறேன். இந்த வேலையை படைப்பாளிகள் உட்கார்ந்து செய்துக்கிட்டு இருக்காங்க.

சென்னையிலிருந்து தமிழ் நாட்டின் கோயம்புத்தூர், நெல்லை, கன்யாகுமரி போன்ற உட்புற கிராமங்களுக்கு செல்லும் பொழுது தமிழுக்கு தமிழே மாறுபடுகிறது. அங்கெல்லாம் எவ்வளவு புதிய சொற்கள் இருக்கிறது, அவற்றையெல்லாம் தொகுக்க வேண்டாமா? ஒரு மண்வெட்டியின் பத்து பாகங்களின் பெயர்களை என்னால் சொல்ல முடியும். அதையெல்லாம் தொகுக்க வேண்டாமா? சந்தியா பதிப்பகத்தின் எதுகை அகராதியை சமீபத்தில் வாசித்தேன். எதுகையில இவ்வளவு விதம் இருக்கானு ஆச்சர்யமா இருந்தது. சினிமாவுக்கு பாட்டெழுதறவன் கையில கிடைக்கணும்னு நெனச்சிக்கினேன்.

இன்றைக்கு இருக்கும் கவிஞர்கள் அதிகமான வார்த்தைகளைத் தெரிந்து கொள்ளுவதில்லை. தமக்குத் தெரிந்த 1000 சொற்களையே மாற்றி மாற்றிப் போட்டு எழுதுகிறார்கள். இரண்டு கவிதைத் தொகுப்புகளின் முன் அட்டையை கிழித்துவிட்டால் யாருடைய கவிதைத் தொகுப்பு என்றே தெரியாது. அந்த அளவிற்கு சலிப்பாக இருக்கிறது.வார்த்தைகளைத் தெரிந்து கொள்ள அவர்கள் மெனக்கெட வேண்டும். கட்டுரை, புனைகதை போலவே அகராதி வாசிப்பும் சுவாரஸ்யமான ஒன்று. இளம் படைப்பாளிகள் நேரம் எடுத்து அதை செய்ய வேண்டும்.

டென்னிஸ் விளையாட்டில் ஒரு பெண் பின் பாக்கெட்டில் இரண்டு பந்துகளை வைத்துக் கொண்டிருக்கிறாள். ஒரு பந்தை எடுத்து மேலே தூக்கிப் போட்டு பார்க்கிறாள். பந்து சரியில்லை என்று தூக்கிப் போடுகிறாள். அடுத்த பந்தை எடுக்கிறாள் அதுவும் சரியில்லை என்று தூக்கிப் போடுகிறாள். வேறு பந்தைக் கொடுக்கிறார்கள், அதை சரி பார்த்து சர்வீஸ் போடுகிறாள். ஒரு சர்வீசுக்கே இப்படி என்றால் 100 வருடம், 1000 வருடம் வாழப் போகிற படைப்பிற்கு சரியான சொல்லைத் தேட வேண்டாமா?

அடிப்படையில் நான் மொழி வல்லுநர் இல்லை. என்னுடைய ஆர்வமெல்லாம் வார்த்தைகளைப் பற்றியது. வார்த்தைகள்தானே மொழியை செம்மையாக்குகின்றன! ஒருமுறை ஆனந்த விகடனுக்கு ‘தெரிவை’ என்ற கதையை எழுதி அனுப்பியிருந்தேன். அவர்கள் ‘நீலவேணி டீச்சர்’ என்று தலைப்பை மாற்றி இருந்தார்கள். ஜனரஞ்சக பத்திரிகையில் இதெல்லாம் சகஜம்தான். நான் சொல்ல வருவது, தெரிவை என்பது பெண்களின் பருவ நிலைகளில் ஒன்று. பெண்களைப் போலவே ஆண்களுக்கும் பருவ நிலைகள் இருக்கிறது என்று பின் குறிப்பில் எழுதியிருந்தேன்.வேடிக்கை என்னவெனில் விகடனுக்கு சந்தேகம் வந்து, செம்மொழி மாநாடு நடத்தும் குழுவிலுள்ள முக்கியமானவருக்கு ஃபோன் செய்து பேசியிருக்கிறார்கள். அவருக்கு தெரிந்து அப்படி எதுவும் இல்லை என்று சொன்னாராம். உடனே அவங்க எனக்கு ஃபோன் செய்தாங்க. அந்த நேரம் பார்த்து நான் ஒரு எழவு வீட்டில் இருந்ததால் சரியான தகவல்களை அவர்களுக்குக் கொடுக்க முடியவில்லை.

தமிழின் சமகால 10 சிறந்த படைப்பாளிகளின் பெயர்களை சொல்கிறேன். அவர்களுக்கு மாநாட்டிற்கான அழைப்பு சென்றிருக்குமா என்று விசாரித்துப் பாருங்கள். ஒருவருக்கும் சென்றிருக்காது. மொழியை அடுத்த இடத்திற்கு நகர்த்துவது படைப்பாளிகள்தான். அவர்களுக்கான கவனிப்பை சரியாகக் கொடுப்பதில்லை. கேரளாவில் வாசுதேவன் நாயர் ஞானபீட விருது வாங்கினால், மத்திய அமைச்சர் அந்தோணி வாசுதேவனின் வீட்டு வாசலில் காலையில் நின்றுகொண்டிருப்பார். அவரை வாழ்த்திவிட்டு அமைச்சர் சென்றுவிடுவார். வாசுதேவனும் அவருடைய வேலையைப் பார்க்க சென்றுவிடுவார். தமிழ்நாட்டில் அப்படி நடக்குமா? எழுத்தாளனே ஒரு சால்வையை வாங்கிக் கொண்டு, புகைப்படக்காரனையும் அழைத்துக் கொண்டு பீடத்தில் இருப்பவர்களை சென்று பார்க்க வேண்டும். மறுநாள் அவனே அதை பத்திரிகைகளுக்கும் அனுப்ப வேண்டும். இந்த நிலையில்தானே இருக்கிறோம்! மூத்த படைப்பாளிகள் அவர்களால் முடிந்த வரை மொழியைத் தாங்கிப் பிடித்தார்கள். அதை முடிந்த வரை பிடித்துக் கொண்டு நாங்கள் ஓடினோம். இனி இளம் படைப்பாளிகள்தான் அதற்கு முன் வர வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்.

எதுகை அகராதியைத் தொகுத்தவர் தர்மபுரியில் ஒரு நெசவாளர் என்று சொன்னார். பகலெல்லாம் நெசவுத் தொழில், இரவில் எதுகை அகராதி என்று இருந்தாராம். பேர் சொன்னார், என் போன்ற சோம்பேறிகளுக்கு பேர் கூட நினைவிருப்பதில்லை. கண்மணி குணசேகரன் தொகுத்திருக்கும் நடுநாட்டு சொல் அகராதியை மிகவும் சிலாகித்தார்.

நண்பர் முத்துகிருஷ்ணன் தரும் தகவல் – எதுகை அகராதியை தொகுத்த நெசவாளர் – கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை என்ற ஊரில் பிறந்த பசுபுல இராமசாமி அப்பாய் செட்டியார் – வருடம் 1938. இப்போது சந்தியா பதிப்பகம் மீள்பதிப்பு வெளியிட்டுள்ளது.

அவர் அழுத்திச் சொன்ன இன்னொரு விஷயம் – செல் ஃபோன் பயன்பாடு. இன்றைய இளைஞர்கள்/இளைஞிகள் இதை காமத்துக்கு ஒரு வடிகாலாக (காமெரா, ஆண்-பெண் சதா பேச்சு) என்று வருத்தப்பட்டார். அவரே இன்னொரு இடத்தில் சொன்ன மாதிரி இது அறம் இல்லை, ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயம். ஒழுக்க மதிப்பீடுகள் காலம், இடத்துக்குத் தகுந்த மாதிரி மாறிக் கொண்டே இருக்கின்றன. நான் இரண்டு பெண்களுக்குத் தகப்பன், அவரை விட ஓரிரு தலைமுறைகளே பிந்தியவன், அதனால் அவரது வருத்தத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நான் காலேஜில் படித்த காலத்தில் செல் ஃபோன் இருந்திருந்தால் நானும் இப்படித்தான் இருந்திருப்பேன். நாஞ்சில்நாடனின் இளமைப் பருவத்தில் செல் ஃபோன் இருந்திருந்தால் அவரும் இப்படித்தான் அதை பயன்படுத்தி இருப்பார் என்றே நினைக்கிறேன். ஆண்-பெண் ஈர்ப்பு எந்த வயதிலும் உள்ளதுதான், ஆனால் இளமைப் பருவத்தில் உள்ளது போல intensity வேறு எப்போதும் இல்லை. அது இப்படி வெளிப்படாவிட்டால்தான் ஆச்சரியம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில்நாடன் பக்கம்

எழுத்தாளர் சூடாமணியைப் பற்றி விகடனில்

சமீபத்தில் படித்த கட்டுரை. சூடாமணி எத்தனை தனிமையில் வாழ்ந்திருப்பார்கள் என்ற எண்ணம் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. அவர்களை நினைவு கூர்ந்த விகடனுக்கு நன்றி!

அவள் விரிவு, அவள் முழுமை, அவள் பெருக்கம் – அவற்றைப் பிறப்பு உரிமைகளாகக் கேட்கும் முதிர்ச்சியல்லவா அவளுடையது? அவளை எதிலும் அடைக்க முடியாது. தளைப்படுத்த முடியாது. அவள் ஒரு சுதந்திர ஜீவன். சிறையும் விடுதலையும் நாமாக ஆக்கிக் கொள்வதுதானே? அவள் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட ஜீவன்!

எழுத்தாளர் ஆர். சூடாமணி எழுதிய ‘நான்காம் ஆசிரமம்’ கதையின் வரிகள் இவை. கிட்டத்தட்ட அவரும் இப்படியாகத்தான் வாழ்ந்தவர். சுமார் 500-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மூலம் எழுத்துலகில் தனக்கென அழுத்தமான தடம் பதித்தவர் சூடாமணி. சிறு வயதில் தாக்கிய அம்மை நோயின் பாதிப்பு, கை கால்களின் எலும்பு வளர்ச்சியைப் பாதித்திருக்கிறது. அந்தப் பாதிப்பு குறித்த கேள்விகளையும் பார்வைகளையும் எதிர்கொள்ளத் தயங்கி, வீடெனும் கூட்டுக்கு உள்ளேயே தன் உலகை அமைத்துக் கொண்டவர் சூடாமணி. ஆனால், அவர் படைத்த சிறுகதைகள் மனித மனத்தின் விசித்திரங்கள் மீது எல்லை கடந்து ஊடுருவி வெளிச்சம் பாய்ச்சின!

சிறுகதை, ஓவியம் மீது ஆர்வம்கொண்டு இருந்த சூடாமணி, தான் இறப்பதற்கு முன் 10 கோடி மதிப்பு உள்ள சொத்துகளைத் தானமாக வழங்கி இருக்கிறார். அவருடைய 4.5 கோடி மதிப்பு உள்ள வீடு மற்றும் வம்சாவழியாக வந்த சுமார் 6 கோடி மதிப்பு உள்ள சொத்துகளை, ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் விடுதி, ராமகிருஷ்ணா மடத்தின் மருத்துவமனை, வி.ஹெச்.எஸ். ஆகிய அமைப்புகளுக்குத் தானமாகக் கொடுக்கச் சொல்லி உயில் எழுதிவைத்து இருக்கிறார். இந்தச் சொத்துக்களின் விற்பனை மற்றும் விநியோகத்தின் பொறுப்புகளை நீதிபதி சந்துருவின் மனைவி பேராசிரியர் பாரதியிடம் ஒப்படைத்திருந்தார் சூடாமணி. 2010-ல் சூடாமணி இறந்த பிறகு, வீட்டை விற்றுக் கிடைத்த 4.5 கோடியை 2011-ல் மூன்று அமைப்புகளுக்கும் சமமாகப் பிரித்து வழங்கிய பாரதி, 6 கோடியை கடந்த வாரம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கினார்.

சூடாமணியுடன் தனக்கு இருந்த நெருக்கம் பற்றி மனம் திறந்து பேசினார் பாரதி. “25 வருஷங்களுக்கு முன்னாடி நான் கல்கியில் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, சூடாமணியம்மா கதைகள் எழுதி அனுப்புவாங்க. கதைக் கட்டுக்குள்ளேயே ஒரு கவரும் வெச்சு அனுப்புவாங்க. ஒருவேளை கதை நல்லா இல்லைன்னா திருப்பி அனுப்பும் சிரமத்தை நமக்கு கொடுக்கக் கூடாதுனு அப்படிப் பண்ணுவாங்க. அவங்களோட ஒவ்வொரு கதை வந்ததும் படிச்சிட்டு, ‘ரொம்ப நல்லா இருந்தது’னு உடனே நான் தொலைபேசியில் பாராட்டுவேன். அப்படித்தான் சூடாமணியம்மா எனக்குப் பழக்கம்!

வீட்ல வெச்சே சூடாமணியம்மாவுக்கு அவங்க அம்மா கனகவல்லி, படிப்பு, ஓவியம் சொல்லிக் கொடுத்தாங்க. வீடே பள்ளி என ஆன பிறகு, எப்பவும் வாசிச்சுட்டே இருப்பாங்க சூடாமணியம்மா. நிறைய எழுத ஆரம்பிச்சாங்க. அவங்க முதல் கதை ‘பரிசு விமர்சனம்’ 1954-ல் வெளியாச்சு. விகடனில் முத்திரைக் கதைகள்ல அவங்க கதை வந்திருக்கு.

நல்ல செல்வச் செழிப்பான குடும்பப் பின்னணியில் வளர்ந்தாலும், காந்திய வழியில் வாழ்ந்தாங்க சூடாமணியம்மா. சகோதரிகள் மூணு பேர் இறந்த பிறகு, அவங்க தனி மனுஷியாகிட்டாங்க. எழுத்து, புத்தகங்கள்தான் அவங்களுக்குத் துணையா இருந்துச்சு. அவங்க அம்மா கனகவல்லியிடம் இருந்த நெட்டிலிங்கம் மர சரஸ்வதி சிலைதான் எப்பவும் அவங்களுக்குத் துணை. வீட்டில் இருந்து மெரினாவுக்கு காரில் பயணம்… காருக்குள் உட்கார்ந்துக்கிட்டே கடற்கரையை ரசிப்பது… இதுதான் அவங்களோட ஒரே பொழுதுபோக்கு.

2006-ல் இந்த உயிலை எழுதினாங்க சூடாமணியம்மா. அப்பவே எனக்கு இந்த சரஸ்வதி சிலையையும் பரிசாக் கொடுத்துட்டாங்க!

அம்மா என்னை நம்பி ஒப்படைச்ச பொறுப்பை முடிச்சிட்டேன். ஆனா, இதோடு என் வேலை முடியலை. அவங்ககிட்ட இருந்த புத்தகங்களை ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்துக்குக் கொடுத்துட்டோம். அவங்களைப் பத்தி ஓர் ஆவணப் படம் எடுத்திருக்கேன். அவங்க எழுதின மொத்தக் கதைகளையும் ஒரே தொகுப்பாக் கொண்டு வரும் எண்ணம் இருக்கு.

சூடாமணியம்மா வரைஞ்ச ஓவியங்களை சில மாதங்களுக்கு முன்னாடி காட்சிக்கு வெச்சிருந்தோம். அந்த ஓவியங்களின் விற்பனை மூலம் வரும் தொகையையும் நல்ல காரியங்களுக்குச் செலவழிக்கலாம்னு நினைச்சோம். ஆனா, ‘1950-60கள் காலகட்டத்தில் பெண்கள் வரைந்த ஓவியங்கள்னு எதுவுமே இல்லை. இவங்க வரைந்த ஓவியங்கள் எல்லாம் ‘ஆர்க்கியாலஜிக்கல் வேல்யூ’ கொண்டவை. இவை எல்லாம் பாதுகாக்கப்பட வேண்டியவை. வித்துடாதீங்க’னு சொன்னாங்க ஆர்ட் கேலரியைச் சேர்ந்த ஓவிய ரசிகர்கள். அதனால, இப்போ அவங்க ஓவியங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் இருக்கோம்.

சூடாமணியம்மா தானம் கொடுத்த தொகை, மாணவர்களின் படிப்பு, தொழுநோயாளிகளுக்கான சிகிச்சை, நவீன வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அறைனு நல்ல காரியங்களுக்குப் பயன்படுது. இன்னும் பல நல்ல விஷயங்களுக்குப் பயன்படும். ‘நீயே என் உலகம்’னு ஒரு கதை எழுதினாங்க சூடாமணியம்மா. அதில் நாயகன், ‘நான் சமர்த்தனான வியாபாரி. பெரும் செல்வத்தைக் கொடுத்து ஏழைகளின் புன்னகையை வாங்கி இருக்கிறேன்’னு ஒரு இடத்தில் சொல்வான். சூடாமணியம்மாவும் அப்படித்தான்!”

தொடர்புடைய சுட்டிகள்:
ஆர். சூடாமணி மறைவு
சூடாமணி பற்றி ஜெயமோகன்
சூடாமணியைப் பற்றி அம்பை
விக்கி குறிப்பு
சூடாமணியைப் பற்றி அனுத்தமா
பா.ரா.வின் அஞ்சலி
விமலா ரமணியின் அஞ்சலி
எம்.ஏ. சுசீலாவின் அஞ்சலி
ஜீவியின் அறிமுகம்
பாவண்ணன் ரயில் சிறுகதையை அலசுகிறார்
அழியாச்சுடர்கள் தளத்தில் இரண்டு சிறுகதைகள் – இணைப்பறவை, பூமாலை

ஒரு லட்சம் புத்தகங்கள் – சுஜாதா சிறுகதை

எனக்குப் பிடித்த சிறுகதைகளில் ஒன்று. இதைப் பற்றி விலாவாரியாக முன்னால் எழுதி இருக்கிறேன். சமீபத்தில் விகடனில் வெளியிட்டிருந்தார்கள், அதை இங்கே கட் பேஸ்ட் செய்திருக்கிறேன். விகடனுக்கு நன்றி!

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்! – மகாகவி

WELCOME TO DELEGATES OF BHARATHI INTERNATIONAL

நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் துணியில் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் வாயிலில் ஆடின. தலைப்பாகைக்காரரின் படம் கீழே துடித்துக்கொண்டு இருந்தது. அருகே பல வண்ணக் கொடிகள் சஞ்சலித்துக்கொண்டு இருந்தன. டாக்டர் நல்லுசாமி கண்ணாடிக் கதவைத் திறப்பதற்கு முன் சேவகன் திறந்து புன்னகைத்தான். உள்ளே குளிர்பதனம் செய்யப்பட்ட அரங்கில் கம்பளத்தில் தமிழ் அறிஞர்கள் நிறைந்து இருந்தார்கள். புதுக் கவிஞர் கேக் கடித்துக்கொண்டு இருந்தார். சாகித்திய அகாதமி சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு இருந்தார். பரிபாடல் சோபாவில் உட்கார்ந்துகொண்டு தொடை மேல் காகிதம் வைத்துக் கடிதம் எழுதிக்கொண்டு இருந்தார். உரையாடலில் தமிழ் உலவியது.

” ‘தமிழ்நாட்டிலே சாஸ்திரங்கள் இல்லை. உண்மையான சாஸ்திரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்துவிட்டு, தமிழ்நாட்டுப் பார்ப்பார் பொய்க் கதைகளை மூடரிடம் காட்டி வயிறு பிழைத்து வருகிறார்கள்!’ – இதைச் சொன்னது யாரு, சொல்லுங்க பார்க்கலாம்?”

“பேரறிஞர் அண்ணாங்களா?”

“இல்லைங்க. பார்ப்பனரான சுப்பிரமணிய பாரதி. ‘காற்று’னு வசன கவிதை படிச்சுப் பாருங்க.”

“அவரு எல்லாவிதத்திலும் புரட்சியாளருங்க. ஆயிரத்துத் தொளாயிரத்துப் பத்து இருபதுகளில் ஒரு பார்ப்பனர் இந்த மாதிரி சொல்றதுக்கு எத்தனை தைரியம் வேணும்!”

டாக்டர் நல்லுசாமி அவர்களை அணுக “வாங்க, வாங்க, வாழ்த்துக்கள்!”

“எதுக்கு?” என்றார் டாக்டர்.

“அ! தெரியாத மாதிரி கேக்கறீங்க.”

“உண்மையிலேயே தெரியாதுங்க.” தெரியும்.

“பாரதி பல்கலைக்கழகத்துக்கு உங்களைத்தான் துணைவேந்தராப் போடப்போறாங்களாம்.”

“ஓ… அதுவா? எத்தனையோ பேர்களில் என் பேரும் இருக்குது.”

“இல்ல. நீங்கதான்னு சொல்றாங்க. அமைச்சர் உங்களைக் கவனிக்கத்தான் இன்னிக்கு உங்க கூட்டத்துக்கே வராருன்னு சொல்றாங்க.”

“சேச்சே! அமைச்சருக்குப் பாரதி மேல அப்படி ஒரு ஈடுபாடுங்க.”

“உங்களைவிட்டா பொருத்தமா வேற யாருங்க?”

“எதோ பாக்கலாம். அதெல்லாம் அவ்வளவு சுலபம் இல்லைங்க. அரசியல் வேற கலக்குது…” டாக்டர் நல்லுசாமி அவர்களை விட்டு விலக,

“வள்ளுவர் சொல்லியிருக்காரு…

மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்’னு.

இப்ப யாருங்க பாப்பான்? யாரும் கிடையாதுங்க. அந்த அர்த்தத்தில்தான் பாரதி சொல்லி இருக்காரு.”

ரிசப்ஷனில் அவர் தன் அறைச் சாவியை வாங்கிக்கொள்ளும்போது அந்தப் பெண், “சார் யூ ஹவ் எ மெசேஜ்” என்று புறாக் கூட்டில் இருந்து ஒரு குறிப்பை எடுத்துக் கொடுத்தாள்.

‘செல்வரத்தினம் மூன்று முறை உங்களுக்காக போன் செய்தார்’. நல்லுசாமிக்குச் சற்றுக் குழப்பமாக இருந்தது. யார் இந்த செல்வரத்தினம்? புரியவில்லை. “தேங்க்ஸ்!” என்று அவளைப் பார்த்தபோது “யூ ஆர் வெல்கம்” என்று புன்னகைத்தபோது அவள் உடுத்தியிருந்த சன்ன ஸாரி டாக்டர் அவர்களைப் படுத்தியது. தன் வாழ்நாளிலேயே முதன்முதலாக மனைவியை (டாக்டர் மணிமேகலை) விட்டு வந்திருக்கிறார். இந்தப் புன்னகையில் நிச்சயம் வரவேற்பு இருந்தது!

‘கூடிப் பிரியாமலே – ஓரிராவெல்லாம்
கொஞ்சிக் குலவியங்கே
ஆடி விளையாடியே – உன்றன் மேனியை
ஆயிரங்கோடி முறை நாடித் தழுவி…’

“டாக்டர், வணக்கம்!”

“ஓ, பெருமாள்! வாங்க, எங்க இருக்கீங்க இப்ப?”

“உத்கல்ல! புதுசா டமில் செக்ஷன் ஆரம்பிச்சு இருக்காங்க…”

“உத்கல் எங்க இருக்குது?”

பக்கத்தில் பச்சைக் கண்களுடன் ஒரு பெண்பிள்ளை இவர்களைப் பார்த்துச் சிரித்து ஹலோ என்று சொல்ல, டாக்டர் பெருமாள் அறிமுகப்படுத்திவைத்தார்.

“இது வந்து கத்தரினா. ரஷ்யாவுல இருந்து பாரதி ஆராய்ச்சி பண்ண வந்திருக்காங்க. திஸ் இஸ் டாக்டர் நல்லுசாமி!”

“ஆ, ஐஸ்ஸீ!” என்று பெண்மணி அவர் கையைப் பற்றிக் குலுக்கினாள். சற்று வலித்தது. டிராக்டர் ஓட்டும் பெண்பிள்ளைபோல் ஏராளமாக இருந்தாள். வல்லி இடையில்லை, ஓங்கி முன்னிற்கும் மார்பையும் சரியாக மூடாமல் ததும்பினாள்.

“யூர் ரீடிங் பேப்பர், ஆர்ன்ட் யூ?”

“நோ… ஐம் பிரிஸைடிங்! மத்தியானம்… ஆஃப்டர் நூன். யூ நோ டாமில்?”

“யெஸ்! கான்ட் ஸ்பீக்!”

“இந்தம்மா பாரதியை வறுமைல ஏன் வாட விட்டாங்க தமிழங்கன்னு கேக்குது!”

“அவர் காலத்துத் தமிழங்க அவர் பெருமையை உணரலை…”

“டாக்டர்! உங்களுக்குத் துணைவேந்தர் ஆயிருச்சாமே?”

“சேச்சே! இன்னும் எதும் தீர்மானிக்கலைப்பா.”

“ஆயிட்டுதுன்னுதான் சொல்றாங்க. உங்களைத்தான் நம்பியிருக்கேன். என்னை உத்கல்ல இருந்து எப்படியாவது ரீடராக் கொண்டு வந்துருங்க. சப்பாத்திச் சாப்பாடு. சூடு அதிகமா… என்னுடைய பைல்ஸுக்கு ஒப்புக்கலை!”

“பாக்கலாங்க, முதல்ல ஆகட்டும்.” செல்வரத்தினம்… எங்கயோ கேட்ட மாதிரி பேராக இருக்கிறதே? ரஷ்யியைப் பார்த்து மறுபடி புன்னகைத்துவிட்டு, டாக்டர் மெத்தென்ற மாடிப்படிகளில் ஏறும்போது உற்சாகமாகத்தான் சென்றார். மணிமேகலைக்குச் செய்தி சொல்ல வேண்டும். அவளுக்குத்தான் சந்தோஷமாக இருக்கும். சே! அதற்குள் எத்தனை கோட்டைகள்!

மெஸனைன்னைத் தாண்டியதும் இங்கிருந்தே மாநாட்டு முதல் ஹால் தெரிந்தது. அதன் வாசல் ஏர்கண்டிஷனுக்கு அடைத்திருந்ததால் உள்ளே பேச்சு கேட்கவில்லை. அவ்வப்போது உள்ளே இருந்து டெலிகேட் ஒருவர் டாய்லெட் போகவோ அல்லது முந்திரிப் பருப்பு கேக்குடன் தயாராக இருந்த காபி சாப்பிடவோ கதவைத் திறந்தபோது, “அவன் சர்வதேசக் கவிஞன்! பிஜி மக்களுக்காக இங்கிருந்து கண்ணீர் வடித்தான். ‘மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற் கடைக்கண் வைத்தாள்’ என்று ரஷ்யப் புரட்சியைப்பற்றிப் பாடினான். அவனன்றோ…” என்று மாநாடு கசிந்தது. பல பேர் டாக்டரை வணங்கினார்கள். பரிச்சயம் இல்லா முகங்கள். எல்லோருக்கும் தெரிந்திருக்கும். துணைவேந்தர் என்றால் சும்மாவா? அமைச்சர் அதற்குத்தான் பிற்பகல் கூட்டத்துக்கு வருகிறார். என்னைக் கணிக்கத்தான்! நல்லுசாமிக்கு உள்ளுக்குள் புல்லரித்தது. திறமைப்படி கொடுக்க வேண்டுமானால் அவருக்குத்தான் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் அவரைக் காட்டிலும் பாரதி கவிதைகளில் பரிச்சயம் உள்ளவர் யாரும் கிடையாது. ‘பாரதி கவிதைகளில் சமத்துவம்’ என்று டாக்டர் பட்டத்துக்கு அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை இன்னும் ஒரு மைல் கல்!

மத்தியானக் கூட்டம் தொடங்க இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது. ஆனால், திறமை மட்டும் போதாதே. அறைக்குச் சென்று சற்று ஓய்வு எடுத்துக்கொண்டுவரலாம். முதலில் மணிமேகலைக்குத் தொலைபேசி மூலம் விவரம் தெரிவித்துவிடலாம்.

டாக்டர் லேசாக,

‘காதல் செய்தும் பெறும்பல இன்பம்,
கள்ளில் இன்பம், கலைகளில் இன்பம்,
பூதலத்தினை ஆள்வதில் இன்பம்…’

என்று பாடிக்கொண்டே அறைக் கதவில் சாவியைப் பொருத்தும்போது, அறை வாசலில் நின்றுகொண்டு இருந்தவனைக் கவனித்தார்.

“வணக்கம் ஐயா!”

“வணக்கம்! நீங்க..?”

இருபத்தைந்து சொல்லலாம். ஒல்லியாக இருந்தான். உக்கிரமான கண்களுக்குக் கீழ் அவன் வயசுக்குச் சற்று அவசரமான நிழல்கள். தோளில் பை மாட்டியிருந்தான். அதில் விழாவின் சிறப்பு மலர் எட்டிப் பார்த்துக்கொண்டு இருந்தது.

“கண்டு கன காலம்” என்றான். டாக்டர் அவனைத் தன் ஞாபக செல்களில் தேடினார்.

எங்கோ பார்த்திருக்கிறோம் மையமாக. “வாங்க! எப்ப வந்தீங்க?”

“இஞ்சாலையா?”

இப்போது ஞாபகம் வந்துவிட்டது. சிலோன்! இவனைச் சிங்களத்தில் பார்த்திருக்கிறோம்.

“நீங்கதானா, செல்வரத்தினம்?”

“ஐயாவுக்கு நினைப்பு உண்டு. யாழ்ப்பாணத்தில் சந்திச்சிருக்கோம்.”

இப்போது முழுவதும் ஞாபகம் வந்துவிட்டது. இவன் வீட்டில் யாழ்ப்பாண உலகத் தமிழ் மகாநாட்டின்போது டாக்டர் இரண்டு நாள் தங்கியிருக்கிறார்.

“எங்க வந்தீங்க?”

“சும்மாதானாக்கம். இடைசுகம் விசாரிச்சுக் கொண்டு போவமெண்டு வந்தனாக்கம்!” மனசுக்குள் மொழி பெயர்த்துக்கொள்ள வேண்டியிருந்த அவன் தமிழ் சற்று நிரடியது. இருந்தும், “வாங்க! உள்ள வாங்க” என்றார்.

அறைக்குள் ஆஷ்டிரே தேடினான். டாக்டர் அவனுக்கு நாற்காலி காட்ட அதில் விழுந்தான்.

“விழாவில் எண்ட பேச்சும் உண்டு” என்றான்.

“அப்படியா! சந்தோஷம். விழாவுல கலந்துக்கறதுக்காக வந்தீங்களா சிலோன்ல இருந்து?”

“ஆமாம்.”

“ரொம்பப் பொருத்தம். சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்னு மகாகவி சொன்னதுக்கு ஏற்ப…”

இப்போது அவனை முழுவதும் ஞாபகம் வந்துவிட்டது. யாழ்ப்பாணம் மாநாட்டில் இவன் குடும்பமே தமிழில் ஈடுபாடுகொண்டு அவர்கள் வீட்டில் இவருக்கு விருந்து வைத்ததும், இவன் தங்கை இனிமையான குரலில் ‘நெஞ்சில் உரமுமின்றி’ பாடியதும் நினைவுக்கு வந்தது. அந்தப் பெண் பெயர் என்ன..?

“உக்காருங்க… ஊர்ல எல்லாரும் சௌக்கியமுங்களா?”

“ஊர்ல யாரும் இல்லீங்க.”

“அப்படியா? அவங்களும் வந்திருக்காங்களா? உங்க தங்கச்சி வந்திருக்குதோ?”

“தங்கச்சி இல்லைங்க” என்றான். அவன் கண்களில் பளபளப்பு ஏற்பட்டது.

“என்ன சொல்றீங்க?”

“எண்ட தங்கச்சி, அப்பா, அம்மா எல்லாரும் இறந்துட்டாங்க.”

“அடப்பாவமே! எப்ப? எப்படி?”

“ஆகஸ்ட் கலகத்துலதாங்க!”

“ஐயையோ! எப்படி இறந்து போனாங்க?”

“தெருவுல வெச்சு… வேண்டாங்க! விவரம் வேண்டாங்க… நான் ஒருத்தன்தான் தப்பிச்சேன். அதுவும் தற்செயல்.”

டாக்டர் மௌனமாக இருந்தார். எப்படி ஆறுதல் சொல்வது? அவன் சிரமப்பட்டுக் கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொண்டு இருக்கும்போது, எது சொன்னாலும் பிரவாகம் துவங்கிவிடும் என்று தோன்றியது. இருந்தும் ஏதோ பேச வேண்டிய அவசியத்தில்,

“ஏதாவது சாப்பிடறீங்களா?”

“கோப்பி” என்றான்.

“இத்தனை நடந்திருக்குனு நினைக்கவே இல்லை! அதும் நமக்குத் தெரிஞ்சவங்க. நாம பழகினவங்க இதுல பலியா இருக்காங்கன்னா ரத்தம் கொதிக்குது…”

“அதைப் பத்தி இப்பப் பேச வேண்டாங்க. நான் வந்தது வேற விசயத்துக்காக.”

“சொல்லுங்க. உங்களுக்கு எந்த விதத்துல என்ன உதவி தேவையா இருக்குது?”

“நிகழ்ந்தது எல்லாம் தமிழ் நாட்டுல முழுவதும் தெரியாதுண்டுதான் தோணுது. யாழ்ப்பாணம் பொது நூலகத்துல இருந்த ஒரு லட்சம் தமிழ்ப் புத்தகங்களை போலீஸ்காரங்களே எரிச்சாங்க. அது தெரியுமோ உங்களுக்கு?”

“அப்படியா?”

“அருமையான புத்தகங்கள்! பாரதியாரே சொந்தச் செலவில் பதிப்பித்த ‘ஸ்வதேச கீதங்கள்’ 1908-லயோ என்னவோ வெளியிட்டது. ‘இதன் விலை ரெண்டணா’ண்டு போட்டு இருந்தது. ஆறுமுக நாவலருடைய முதல் எடிஷன்கள் எல்லாம் இருந்தது. 1899-ல் வெளியிட்ட சிங்காரவேலு முதலியாருடைய அபிதான சிந்தாமணி முதல் பிரதி! லட்சம் புத்தகங்கள்னா எத்தனை தமிழ் வார்த்தைகள்! எண்ணிப் பாருங்க. அத்தனையும் தெருவுல எரிச்சாங்க.”

“அடடா!”

“அதை நான் சொல்ல விரும்பறேன். அப்புறம் நான் இந்தியாவுக்கு வந்து பதினஞ்சு நாளா தமிழ்நாட்டில் பார்த்த சில விஷயங்களையும் சொல்ல விரும்பறேன்.”

“எங்க சொல்ல விரும்பறீங்க?”

“இன்றைய கூட்டத்தில்தான்!”

“இன்றைய கூட்டம் பாரதி பற்றியதாச்சே!”

“பாரதி பெல்ஜியம் நாட்டுக்காகவும் பிஜி தீவினருக்கும் அனுதாபப்பட்ட சர்வதேசக் கவிஞன். ருஷ்யப் புரட்சியை வாழ்த்தினவன்! இன்றைக்கு இருந்திருந்தா, சிங்களத் தமிழர்களுக்காக உருகியிருக்க மாட்டானா?”

“கட்டாயம்… கட்டாயம்…”

“அதைத்தாங்க சொல்லப்போறேன்!”

“அதுக்கு இந்த மேடை சரியில்லைங்களே!”

“இந்த மேடைதான் மிகச் சரியானது. தமிழ் பயிலும் எல்லா நாட்டவர்களும் வந்திருக்காங்க. தமிழக அமைச்சர் வரார். சர்வதேச ஆராய்ச்சியாளர்கள், அனைத்திந்தியத் தமிழறிஞர்கள் எல்லாரும் வர்ற இந்த மேடையில எனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கத்தான் துக்கத்தையும் மறந்து வந்திருக்கிறேன்!”

டாக்டர் சற்றே கவலையுடன், “குறிப்பா என்ன சொல்லப்போறீங்க?” என்றார்.

“சிங்களத் தமிழர்களைத் தமிழகம் நடத்தற விதத்தையும் பார்த்தேன். அதையும் சொல்லப் போறேன்.”

“புரியலீங்க.”

“ஐயா! நான் வந்து பதினைந்து தினம் ஆச்சு. முதல்ல மண்டபம் டிரான்ஸிற் காம்ப்புக்குப் போனேன். இலங்கையைத் துறந்து இங்க வந்த தமிழர்கள் என்ன செய்யறாங்க, அவங்களை எப்படி ‘றீட்’ (treat) பண்ணறாங்கன்னு பாக்கிறதுக்கு. ராமேஸ்வரம் வந்து சேர்ந்த உடனே அவங்களைத் தமிழகம் எப்படி வரவேற்குது தெரியுமோ? டிரான்ஸிற்றர் வெச்சிருக்கியா? றேப் றிக்கார்டர் கொண்டுவந்திருக்கியா?

தங்கத் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வந்துட்டோமிண்டு கண்ணில கனவுகளை வெச்சுக்கிட்டு வந்தவங்களுக்கு எல்லாம் ரெண்டே மணி நேரத்துல கலைஞ்சுபோயிருதுங்க, அந்த காம்ப்பைப் பார்த்ததும். சிறைக் கைதிங்க பரவாயில்லை! சன்னல் இல்லாத ஓட்டு வீடு. பிரிட்டிஷ் காலத்துல க்வாரன்டைன் காம்ப்பா இருந்ததை இன்னும் மாற்றாம வெச்சிருக்காங்க. இரண்டு ரூமுக்குப் பத்து பேற்றை அடைச்சு வெச்சிருக்காங்க. அவங்களுக்கு ஆளுக்கு இரண்டு வாரத்துக்கு எட்டு ரூபா உபகாரப் பணம். ஆறாயிரம் ரூபா சர்க்கார் கடன் கொடுக்குதுனு பேரு. எல்லாம் அப்ளிகேசனாத்தான் இருக்குது. ஆறு மாதம் காத்திருந்தாலும் லஞ்சம் இல்லாம வராது. இவங்க உடமைகளை, கொண்டு வந்த அற்பப் பணத்தை ஏமாற்றிப் பறிக்க எண்ணூறு பேர். சிலோன் ரூபாய்க்கு எழுபத்து மூணு பைசா கொடுக்கணும். கிடைக்கிறது நாப்பத்தஞ்சுதான். எல்லாரும் திரும்பிப் போயிரலாம், அந்த நரகமே மேல்னு சொல்றாங்க. திரும்பச் சேர்த்துக்க மாட்டாங்க! போக முடியாது.

1964 வரைக்கும் இலங்கையைத்தான் தாயகம்னு நினைச்சுக்கிட்டு இருந்தாங்க. திடீர்னு ‘இது உன் தாயகம் இல்லை, தமிழ்நாட்டுக்குப் போ’னு அழையாத விருந்தாளிங்களா பேப்பரை மாற்றிக் கொடுத்துட்டு கப்பலில் அனுப்பிச்சிட்டாங்க. எதுங்க இவங்க தாயகம்? அங்க பொறந்து வளந்து ஆளாகி, ஒரே நாளில எல்லாம் கவரப்பட்டு, இங்கயும் இல்லாம அங்கயும் இல்லாம இவங்களைப் பந்தாடிக்கிட்டு இருக்காங்க. இது ஒரு சர்வதேசப் பிரச்னை இல்லையா?”

“எல்லாம் சரிதாங்க. இதை நீங்க சொல்ல வேண்டிய மேடையைப் பத்தித்தான் எனக்கு…”

“வேற எங்கங்க சொல்ல முடியும்? அரசியல் வாதிங்ககிட்டயா? ஏ.டி.எம்.கே-காரங்க, ‘இதுக்குத்தான் நாங்க தமிழகம் பூரா கதவடைப்பு செஞ்சமே’ங்கறாங்க! டி.எம்.கே, ‘இதுக்குத்தான் நாங்களும் தமிழகம் பூராக் கதவடைப்பு செஞ்சமே’ங்கறாங்க!”

“இல்லை. இதைத் தமிழ்ப் பத்திரிகைகளில் ஒரு கட்டுரை மாதிரி எழுதலாமே நீங்க…”

“சொல்றேங்க! எல்லாப் பத்திரிகையையும் போய்ப் பார்த்தேன். விகடன்ல சொன்னாங்க; நாங்க அட்டைப் படமே கண்ணீர்த் துளியா ஒரு இஷ்யூல போட்டாச்சேன்னாங்க. குமுதம் ஆளுங்களைச் சந்திக்கவே முடியலை. குங்குமத்துல கேட்டா, விகடன்ல வந்துருச்சேன்னாங்க. ராணியில இதைப்பத்தித்தான் கட்டுரைத் தொடர்ல நாங்களே எழுதிட்டு இருக்கமேன்னாங்க…”

“நீங்க என்ன எழுதறதா சொன்னீங்க?”

“அந்தப் புத்தகங்களை எரிச்சதைப்பற்றித்தாங்க! ஒரு லட்சம் புத்தகங்க! அத்தனை வார்த்தைகளும் எரிஞ்சுபோய், ராத்திரி பூரா வெளிச்சமா இருந்ததை! ஒருத்தர் மட்டும் சொன்னாரு எழுதுங்கனு… ஆனா, அப்படியே உங்க தங்கச்சி றேப்பையும் எழுதுங்க… அவங்க கலர் ட்ரான்ஸ்பரன்ஸி இருந்தா கொடுங்க, அட்டையில போடுவோம்… கொஞ்சம் ஹ்யூமன் இன்ட்ரஸ்ட் இருக்கும்னாருங்க! அவர் பேர் சொல்ல விரும்பலை. எனக்கு என் சொந்த சோகத்தை எழுத விருப்பம் இல்லை. அவளை என் கண் எதிரிலேயே துகிலுரிச்சாங்க! முதல்ல பக்கத்து வீட்ல சிங்களக் குடும்பத்தில்தாங்க அடைக்கலம் கொடுத்தாங்க. நாள் பூரா கக்கூஸ்ல ஒளிஞ்சிக்கிட்டு இருந்தது! அவங்க உயிருக்கே ஆபத்து வந்திரும்போல நிலையில பின்பக்கமா ஓடிப்போயிருச்சுங்க. சந்துலவெச்சுப் பிடிச்சுத் தெருவுல… நடுத் தெருவுல… என் கண் முன்னாலயே! கண் முன்னாலயே…” அவன் இப்போது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதான்.

“ரொம்பப் பரிதாபங்க.”

கொஞ்ச நேரம் அழுதுவிட்டு “எனக்கு இதைச் சொல்லி அனுதாபம் தேடிக்க விருப்பம் இல்லைங்க. இந்த மாதிரி வன்முறைங்க உங்க ஊர்லயும் நிறைய நடக்குது. இங்கயும் றேப்புக்குப் பஞ்சம் இல்லை. ஆனா, அந்தப் புத்தகங்களை எரிச்சது, அது என்னவோ ஒரு சரித்திர சம்பவமாத்தான் எனக்குத் தெரியுது. அந்த நெருப்புல இருந்த வெறுப்பு நிச்சயம் சர்வதேசக் கவனத்துக்குக் கொண்டு வரவேண்டியதுங்க…” சட்டையில் முழங்கைப் பகுதியில் தன் முகத்தைச் சரியாகத் துடைத்துக்கொண்டு, “எனக்கு ஒரு நாட்டு ‘குடிமகன்’கிறது யாருங்கறதைப் பற்றி ஆதாரமா சந்தேகங்கள் வருதுங்க. சிங்களவர்கள் தமிழர்கள் இரண்டு பேரும் இந்தியாவுல இருந்து வந்தவங்க. அவங்க வங்காளம் ஒரிஸ்ஸாவில் இருந்து வந்த ஆரியர்களாம். நாங்க ஒண்ட வந்த கள்ளத் தோணிங்களாம். சக்கிலியங்களாம்! இதைஎல்லாம் சொல்ல வேண்டாம்? ஆறு லட்சம் பேர் எங்க போவோங்க? என்ன செய்வோங்க? இதெல்லாம் சொல்ல வேண்டாமா?”

டாக்டர் மூக்கைச் சொறிந்துகொண்டார்: “இவ்வளவு விவரமாச் சொல்ல வேண்டாங்க. ஏன்னா, இது இலக்கியக் கூட்டம். இதில் அரசியலை நுழைக்கிறது நல்லால்லை. ஒண்ணு செய்யுங்க…”

“அரசியல் இல்லைங்க, மனித உரிமைப் பிரச்னை இல்லையா?

‘சொந்தச் சகோதரர்கள்
துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடீ-கிளியே!
செம்மை மறந்தாரடீ!’னு

பாரதி பாடலையா? இலங்கைத் தமிழர்களைச் சகோதரர்கள்னுதானே நீங்க எல்லாரும் சொல்றீங்க?”

“அதுவும் ஒரு விதத்துல வாஸ்தவம்தான். இருந்தாலும்…”

“எனக்கு இதைவிட்டா வேற வாய்ப்புக் கிடையாதுங்க. ரத்தினாபுரத்துல நடந்ததைச் சொன்னா, கண்ல ரத்தம் வரும். அதெல்லாம் நான் சொல்லப்போறது இல்லை. ஒரு லட்சம் புத்தகங்களை எரிச்சாங்க. அதுக்குப் பதில் ஒரே ஒரு புத்தகத்தை மேடையில எரிக்கப்போறேன்!”

“என்ன புத்தகம்?” என்றார் கவலையோடு.

“இந்த மாநாட்டு மலரை!”

“எதுக்குங்க அதெல்லாம்..?”

“பாரதி சொன்ன எதையும் செய்யாம ஏர் கண்டிசன் ஹோட்டல்ல சாக்லேட் கேக் சாப்ட்டுக்கிட்டு மாநாடு போடறது எனக்கு என்னவோ பேத்தலாப் படுது. அதனோட சிகரம்தான் இந்த வெளியீடு. இதை மேடையில எரிச்சுட்டு, பாரதி சொன்னதை நடைமுறையில் செய்து காண்பிங்கனு சொல்லப்போறேன். ‘சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்’னு அவன் சொன்னது கான்க்ரீட் பாலம் இல்லை. முதல்ல மனப்பாலம் அமைங்க! அப்பதான் பளிச்சுனு எல்லார் மனசிலயும் பதியும். நேரமாயிடுச்சுங்க. ரெண்டு மணிக்குல்ல கூட்டம்?” அவன் எழுந்து வணங்கிவிட்டுச் சென்றான். ‘செல்வரத்தினம்…’

டாக்டர் அவன் போன திக்கைத் திகைப்பில் பார்த்துக்கொண்டு இருந்தார். சற்று நேரம் யோசித்தார். நிகழ்ச்சி நிரலைப் பார்த்தார். இரண்டாவதாகப் பேசுவது ‘செல்வரத்தினம், ஸ்ரீலங்கா’ என்றிருந்தது. யோசித்தார். நாய்க்குட்டி போல் இருந்த டெலிபோனை எடுத்தார். மதுரைக்கு டிரங்க்கால் போட்டார். “பீப்பி கால். டாக்டர் மணிமேகலை…”

பத்து நிமிஷத்தில் கால் வந்தது.

“மணி! நாந்தான்.”

“என்ன, விசாரிச்சீங்களா? கிடைச்சிருச்சா?”

“ஏறக்குறைய கிடைச்ச மாதிரிதான். செக்ரெட்டரியேட்லயே விசாரிச்சுட்டேன். அமைச்சர் கையெழுத்து ஒண்ணுதான் பாக்கியாம்.”

“அப்ப இனிப்பு செய்துர வேண்டியதுதான். இந்தக் கணத்துல உங்க கூட இருக்க…”

“மணி! ஒரு சின்ன சிக்கல்…”

“என்னது… அருணாசலம் மறுபடி பாயறாரா?”

“அதில்லை மணி! இன்னிக்குக் கூட்டத்துல அமைச்சர் வராரு. எனக்கு முன்னால ஒரு சிலோன்காரன் பேசறதா இருக்கு. நாம யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ் மகாநாட்டுல சந்திச்சிருக்கோம். அவன் பேசறான்.”

“பேசட்டுமே, உங்களுக்கு என்ன?”

“அதில்லை மணிமேகலை. அவன் சமீபத்திய கலகத்துல ரொம்ப இழந்து போய் ஒரு வெறுப்புல இருக்கான். ஏறக்குறைய தீவிரவாதியாக் கிறுக்குப் புடிச்ச பயலா இருக்கான்.”

“என்ன செய்யப்போறான்?”

“யாழ்ப்பாணத்துல லட்சம் புத்தகங்களை எரிச்சாங்களாம். அதுக்குப் பதிலா மேடையில விழா மலரை எரிச்சுக் காட்டப்போறேங்கறான். கேக்கறதுக்கே விரசமா இருக்குது. எனக்கு என்னடான்னா, கூட்டத்துல கலாட்டா ஆகி, எங்கயாவது எனக்குச் சந்தர்ப்பம் வர்றதுக்குள் கலைஞ்சு போச்சுன்னா, அமைச்சர் வந்து…”

“த்ரீ மினிட்ஸ் ப்ளீஸ்!”

“எக்ஸ்டென்ஷன் பண்ணுங்க.”

“என்ன, கேக்குதா?”

“கேக்குது… கேக்குது. இத பாருங்க. உங்க பேச்சை இன்னிக்கு அமைச்சர் கேக்க வேண்டியது ரொம்ப முக்கியம். நீங்க முன்னாடி பேசிடுங்களேன்.”

“எப்படி? நிகழ்ச்சி நிரல்ல மாறுதல் செய்யணுமே! தலைமை தாங்கறதால, இறுதியுரைன்னா நானு?”

கொஞ்ச நேரம் மதுரை யோசித்தது.

“என்ன செய்யச் சொல்றீங்க?”

“எப்படியாவது உங்க அண்ணன்கிட்ட அவசரமா போன் பண்ணிச் சொல்லிடு…”

“அதைத்தான் நானும் யோசிச்சுக்கிட்டு இருந்தேன்… வெச்சுருங்க.”

“எப்படியாவது…”

“வெச்சிருங்கன்னு சொன்னனில்லையா? அதிக நேரம் இல்லை. ஒரு டிமாண்ட் கால் போட்டுர்றேன்.”

“சரி மணிமேகலை!”

“கவலைப்படாதீங்க. பேச்சு நல்லா பேசுங்க. கிடைச்சா மாதிரிதான்னு அண்ணனும் சொல்லியிருக்காரு. அமைச்சர் உங்க பேச்சைக் கேட்டுட்டாப் போதும்னாரு…”

டெலிபோனை வைத்துவிட்டு டாக்டர் சற்றுத் திருப்தியுடன் எழுந்தார். மணிமேகலை செய்து காட்டிவிடுவாள். இவ்வளவு செய்யக் கூடியவள் இது என்ன? இப்போதே அவள் விரல்கள் தொலைபேசியில் செயல்பட்டுக் கொண்டு இருக்கும். அவள் சக்தி!

வாழ்வு பெருக்கும் மதியே சக்தி
மாநிலம் காக்கும் மதியே சக்தி
தாழ்வு தடுக்கும் சதிரே சக்தி
சஞ்சலம் நீக்கும் தவமே சக்தி

இரண்டு மணிக்குக் கூட்டம் துவங்கியது. எதிரே ஹால் நிரம்பியிருந்தது. வெள்ளைக்கார முகங்கள் முதல் வரிசையில் பளிச்சென்று தெரிந்தன. பட்டுப்புடவை உடுத்திய நங்கை மைக்கைத் தொட்டுப் பார்த்துவிட்டு ‘எண்ணிய முடிதல் வேண்டும், நல்லதே எண்ணல் வேண்டும்…’ என்று இனிமையாகப் பாடினாள். மேடையில் பேச இருப்பவர்கள் வரிசையில் ஓரத்தில் செல்வரத்தினம் உட்கார்ந்து இருந்தான். டாக்டரைப் பார்த்துப் புத்தகத்தை உயர்த்திக் காட்டினான். கவலையாக இருந்தது. என்ன! ஒன்றுமே செய்ய முடியவில்லையா? இரு இரு பார்க்கலாம். அமைச்சர் இன்னும் வரவில்லை. எல்லோரும் வாயிலையே பார்த்துக்கொண்டு இருக்க, வரவேற்புரைஞர், “தலைவர் அவர்களே! உலகெங்கிலும் இருந்து வந்திருக்கும் தங்கத் தமிழர்களே!” என்று துவங்க, சலசலப்பு தொடர, அமைச்சர் அங்கும் இங்கும் வணங்கிக்கொண்டு நடுவில் நடந்து வந்தார். டாக்டரைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டுத் தன் இருக்கையில் உட்கார்ந்துகொண்டு, உடனே தன் முழுக்கைச் சட்டையை உருவி கடிகாரம் பார்த்தார். டாக்டர் அருகில்தான் உட்கார்ந்திருந்தார்.

இப்போது கேட்கலாமா? இது சந்தர்ப்பமா? இல்லை… இல்லை. அவர் கேட்கும் வரை காத்திருப்போம்.

பின்னால் பார்த்தார். இன்னும் இருந்தான். கவலை சற்று அதிகமாகியது.

“முதற்கண் பிஜி தீவில் இருந்து வந்திருக்கும் ஜார்ஜ் மார்த்தாண்டம் அவர்கள் பேசுவார்” என்று அறிவித்துவிட்டு உட்கார்ந்தார்.

“ரெஸ்பெக்டட் அண்ட் ஹானரபிள் மினிஸ்டர் அண்ட் ஃபெலோ டெலிகேட்ஸ்! ஐ’ம் எ தர்ட் ஜெனரேஷன் டமிலியன் அண்ட் ஐ’ம் ஸாரி ஐ’ம் நாட் ஏபிள் டு ஸ்பீக் இன் டமில். பட் தி கிரேட் ஸுப்ரமண்ய பாரதி…”

டாக்டர் தன்னை அறியாமல் பின்னால் பார்க்க… போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு காகிதத்தைப் பின் வரிசை ஓரத்தில் இருந்தவரிடம் காட்டி ஏதோ கேட்க, அவர் செல்வரத்தினத்தைக் காட்ட, இன்ஸ்பெக்டர் செல்வரத்தினத்தின் பின் நழுவி வந்து தாழ்ந்த குரலில் ஏதோ சொல்ல, செல்வரத்தினம் கலவரத்துடன் உடனே எழுந்து அவருடன் செல்வதைப் பார்த்தார்.

பெரிதாக மூச்சுவிட்டுக்கொண்டார். மணிமேகலை மணிமேகலைதான்! ஒரு மணி நேரத்தில் சாதித்துவிட்டாள். அவருக்குள் புன்னகை ஒன்று மலர்ந்தது.

“அடுத்துப் பேசவிருந்த ஸ்ரீலங்காவைச் சேர்ந்த திரு.செல்வரத்தினம் அவர்களை மேடையில் காணாததால், சோவியத் நாட்டைச் சேர்ந்த கத்தரீனா ஐவனோவாவை அழைக்கிறேன்…”

தினமணி நாளிதழில் மறுதினம் செய்தி வந்திருந்தது:

டாக்டர் நல்லுசாமி தன் தலைமை உரையின்போது, “‘சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்’ என்று பாரதி சொன்னது கான்க்ரீட் பாலத்தை அல்ல; மனப் பாலத்தை…” என்றார். அமைச்சர் தன் உரையில் உள்ள புதிதாகத் துவக்கப்போகும் பாரதி பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் நல்லுசாமி துணைவேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிற செய்தியை அறிவித்தார்.

செல்வரத்தினத்தின் விசா ரத்து செய்யப்பட்டு இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் தாய்நாடு திரும்பிச் செல்லும்படி, கட்டளையிடப்பட்ட செய்தி நாளிதழ்கள் எதிலும் வரவில்லை!

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம், சிறுகதைகள் பக்கம்