18வது அட்சக்கோடு

ஹைதராபாத் இரண்டு பெரிய பரம்பரைகளால் ஆளப்பட்டு வந்தது. முதலில் குதுப் சாஹிப் பரம்பரை. அப்பொழுது ஹைதரபாத் என்ற நகரம் இல்லை. கோல்கொண்டாவை தலைநகராகக் கொண்டு 8 குதுப் சாஹிப் மன்னர்கள் 1518லிருந்து 1687 வரை ஆண்டு வந்தார்கள். அதில் ஐந்தாவது குதுப் சாஹிப் மன்னன், முகமது குவாலி குதுப் சாஹிப் தன் பதினான்கு வயதிலிருந்து பாக்மதி என்ற இந்து அரண்மனை நாட்டியப் பெண்ணின் மேல் காதலுற்றான். ஆனால் அன்றைய சமூகம் அதை அங்கீகரிக்கத் தயங்கியது. அவன் தந்தை மகனின் ஆசையை புரிந்துக் கொண்டு பாக்மதி வாழும் சிச்லம் கிராமத்திற்கு மகன் சென்று வர வசதியாக இருக்கட்டுமே என்று நினைத்து கோல்கொண்டாவிற்கும் சிச்லத்திற்கும் நடுவே ஓடும் மூஸி நதிக்கு மேல் ஒரு பாலம் அமைத்துக் கொடுத்தான். அது புராணப்பூல் அல்லது “ஓல்ட் பிரிட்ஜ்” என்று இன்றும் வழங்கப் படுகிறது. பொறுத்திருந்து தான் மன்னனானதும் (1591ல்) பாக்மதியை திருமணம் செய்து அவளை இஸ்லாமிய மத மாற்றம் செய்தான். அவளை பட்டத்து ராணியாகவும் ஆக்கினான். அப்பொழுது இரண்டு பெயர் மாற்றங்கள் நடந்தன். பாக்மதியின் பெயரை “ஹைதர் மஹால்” என்றும் மனைவியின் மேல் உள்ள அன்பின் அடையாளமாக கோல்கொண்டாவை “ஹைதராபாத்”என்றும் மாற்றியமைத்தான். பின்னர் மூன்று குதுப் சாஹிப் மன்னர்கள் ஆண்டனர். தானா ஷா கடைசி மன்னன். அவன் ஆண்டு கொண்டிருக்கும் பொழுது முகலாய மன்னன் ஔரங்கசீப் ஹைதரபாத் மீது படையெடுத்தான். எட்டு மாதங்கள் தாக்குப் பிடித்த தானா ஷா, தன் தளபதி மஹாபத் கானால் நம்பிக்கை மோசடி செய்யப்பட்டு 1687ல் தன் பிடியை இழந்தான். மஹாபத் கான் முகாலாய மன்னன் ஔரங்கசீப் அணியில் சேர்ந்ததன் பயனாக கோல்கொண்டாவின் கவர்னராக ஆனான். காலப்போக்கில் இதுவரை தக்கானத்தின் தலைநகராக இருந்து வந்த ஹைதராபாதை விட்டு இந்தக் காலகட்டத்தில் தலைநகர் ஔரங்காபாத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் ஹைதரபாத் களையிழந்தது.

1713இல் பரூக்சியர், ஔரங்கசீப்பின் படைத்தளபதி சின் க்விலிஜ் கானின் பேரனான குவமாருட்டினை ஹைதராபாதின் கவர்னர் பதவியில் அமர்த்தினான். அப்பொழுது தான் “நிஜாம்-அல்-ஹக்” என்ற அடைமொழி வழங்கப்பட்டது. முகலாய சாம்ராஜ்யத்தின் சரிவு நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டம் இது. அஸாஃப் சாஹி என்று வழங்கப் படும் இந்த நிஜாம் பரம்பரை முழுமையாக தக்கான ஆட்சியை தன் கையில் எடுத்துக்கொண்டது குவமாருதீன் காலத்தில் தான். மீண்டும் ஔரங்காபாத்திலிருந்து தலை நகர் ஹைதரபாத்திற்கு மாற்றப்பட்டது. ஏழு நிஜாம்கள் இந்த பரம்பரையில் ஆட்சி செய்து வந்தனர்.

1911ல் ஏழாம் நிஜாம் மிர் ஒஸ்மான் அலிக் கான் ஆட்சிக்கு வந்தான். 1947ல் இந்தியா விடுதலை அடைந்த பொழுது தான் சுதந்திரமாக பிரிட்டிஷ் ஆட்சிக்கு கீழ் வரவேண்டும் என விரும்பினான். அதாவது இந்தியாவுடன் இணைவதற்க்கு தயாராக இல்லை. ஆனால் இது சர்தார் படேலுக்கு ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு தலைவலி. இந்தியாவின் வயிற்றில் வளரும் புற்றுநோய் தக்கானம் என்று நினைத்தார். பிரபல வக்கீல் சர் வால்ட்டர் மான்க்ட்டன் நிஜாமுக்காக பிரிட்டிஷ் பார்லிமெண்டில் வாதடினார். ஆனால் மவுண்ட்பேட்டன் நிஜாம் இந்தியாவுடன் இணைவதே  சிறந்தது என்று கருத்துக் கூறி வந்தார். இந்தியாவுக்காக ஹைதராபாத் ஸ்டேட் காங்கிரஸ் தக்கானத்தில் போராடியது. நிஜாமுக்காக இட்டிஹாட்-அல்-முஸ்லிமீன் போராடியது. இதன் தலைவர் காஸீம் ரஜ்வி என்ற அலிகாரில் பயிற்சி பெற்ற வக்கீல். ரஜாக்கர் என்ற போராளிகள் படையை உருவாக்கினான். கத்தியையும் துப்பாக்கிகளையும் கையில் வைத்துக் கொண்டு ஹைதராபாத் தெருக்களை வலம் வந்தனர் ரஜாக்கர்கள். அதே நேரத்தில் நிஜாம் ஆட்சியில் அதிருப்தி அடைந்திருந்த கம்யூனிஸ்ட்கள் தெலிங்கானா பகுதிகளில் நிலங்களை நிஜாம் ஆட்சியிலிருந்து அபகரித்து விவசாயிகளுக்கு பங்கீடு செய்யத் தொடங்கினர். இந்த கம்யூனிஸ்ட் ”இணை ஆட்சியில்” வாராங்கல், கரீம்நகர், நல்கொண்டா பகுதிகளிலிருந்து கிட்டதட்ட 1000 கிராமங்கள் நிஜாம் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்தது. காசீம் ரஜ்வி (ஜின்னாவின் ஆதரவுடன்), பிரிட்டிஷ் கான்செர்வேட்டோரி கட்சி, நிஜாம் ஒரு பக்கம் – மாநில காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், இந்தியா இன்னொரு பக்கம்.

இந்த பின்புலத்தில் தான் அசோகமிதரனின் ”18வது அட்சக்கோடு” விரிகிறது. சந்திரசேகர் என்னும் கல்லூரி மாணவன் தன் குடும்பத்துடன் செகந்திராபாத் லான்ஸர் பாரக்ஸில் வசிக்கிறான். கொந்தளிக்கும் ஹைதராபாத்தில் ஹிந்துக்களின் எண்ணிக்கை அதிகம். 85 சதவிகிதம் இந்துக்கள். நிஜாம் சர்க்காரின் பெரிய பதவிகளில் அனேகமாக முஸ்லீம்கள். சராசரி மக்கள் தொகை பிற முஸ்லிம்களாலும் இந்துக்களாலும் அடங்கியிருந்தது. நிஜாமுக்கும் இந்திய யூனியனுக்கும நடக்கும் போராடங்களெல்லாம் மேட்டிமை இஸ்லாமியக் குடுமபங்களைப் பாதிக்காது போலும் என்று சந்திரசேகருக்குத் தோன்றுகிறது. அவன் கிரிக்கெட் நெட் பிராக்டீஸ் போகும் பொழுது நாஸிர் அலிக்கானால் அவன் கௌரவமாகவே நடத்தப்படுகிறான். சில சமயங்களில் அவனிடமிருந்து சலுகைகளும் கிடைக்கிறது. ஆனால் கிரிக்கெட் பிராக்டீஸ் முடிந்து வீடு திரும்பும் பொழுது ரஜாக்கர்களால் தாக்கப்படுகிறான். என்ன ஏது என்று கேட்பதற்கு ஆள் இல்லை. கேட்பவர்களும் ஏதோ பிரச்சனையை கொண்டு வருவானோ என்று ஒதுங்கப் பார்க்கிறார்கள்.

சந்திரசேகருக்கு வெளியில் பிரச்சனைகள் எல்லாம் பதின்ம பருவ பிரச்சனைதான். ஆனால் எதிலும் உக்கிரமில்லாத மேம்போக்கான பிரச்சனைகள். வீட்டின் பொறுப்புகளை அக்கறையுடன் கவனிப்பது, பிரச்சனை உருவாக்க வரும் ஆங்கிலோ-இந்திய குடுமபச் சகோதரர்களை கையாளுவது, கிரிக்கெட்டில் தான் காலூன்றுவோமா என்று தவிப்பது , மகாத்மா காந்தியை சுட்டவர்கள் மேல் வெறி உருவாகுவது போன்ற நிகழ்வுகளில் பல்வேறு உணர்ச்சிகளுடன் ஒரு பதின்ம வயது உள்ளம் எப்படி போராடும், பின்னர் இப்படிப்பட்ட மனச் சஞ்சலங்களை கையாள எந்தக் குடுமப்ச் சூழ்நிலை சாதகமாக இருக்கும் என்பதெல்லாம் பல இடங்களில் நயத்துடன் வெளிப்படுத்தப்படுகிறது.

அசோகமிதரன் கதைகளில் பல விஷயங்கள் பூடகமாகவே சொல்லப்பட்டிருக்கும். வாசகர்கள் சிந்தித்துப் பார்த்து தெரிந்துக் கொள்ளவேண்டும். கெமிஸ்டிரி லாப்பில் உப்பை கஷ்டப்பட்டு கண்டுபிடிப்பது ஒரு இருபது பேர் என்றும் மற்றவர்கள் அதை மிகச்சுலபமாக கண்டுபிடித்து விடுவார்கள் என்பது முதல் பிற பல முக்கிய விஷயங்களையும் அவர் பூடகமாகவேச் சொல்கிறார். 18வது அட்சக்கோடு என்பதும் கூட பூடகம் தானே!

கலவரங்களில் மனித மனம் எப்படியெல்லாம் தன் உயிரை காத்துக் கொள்ள போராடுகிறது, தன் குடுமபத்தை காப்பாற்றுகிறது. வெறுப்பு என்ற ஒரே காரணத்திற்க்காக நுன்னுணர்வுகளை அகத்தில் அழித்து சக மனிதர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துக் கொள்ள எப்படி முடிகிறது? நுன்னுணர்வுகள் இரண்டு வகையாக பரிணமிக்கிறது. ஒன்று பிற மனிதர்களை இழிவு படுத்திவிடக்கூடாது என்பதற்காக எழுச்சியூட்டும் அறமற்ற செயலை செய்யாமலேயே விலகியிருந்து பாதுகாப்பது; அல்லது தெரிந்தோ தெரியாமலோ ஒரு இழிவுச் செயலில் ஈடுபட்டு அதன் குற்ற உணர்வில் ஒரு தரிசனத்தை அடைவது. மனிதனை மனிதனாகவும் உலகை வாழ்வதற்கு உகந்த இடமாக வைப்பதும் இந்நுணர்வுகளே என்பது கதையின் ஒரு பெரிய தரிசனமாக உணரப்படுகிறது.

A related Slideshow

This slideshow requires JavaScript.

 

இந்த புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபயர்க்கப்பட்டு “18th Parallel” என்று வெளியிடப்பட்டுள்ளது.

11 thoughts on “18வது அட்சக்கோடு

 1. rathnavel natarajan – நன்றி. படித்துப் பாருங்கள். நல்ல புத்தகம்.

  BaalHanuman – நன்றி. இந்த இரண்டு பதிவுகளும் சேர்ந்து ஒரு முழுமையை கொடுக்கும். பேராசிரியர் வே.சபாநாயகம் புத்தகதை முழுமையாக அலசியிருக்கிறார். நான் பின்புலத்தை முழுமையாக கொடுக்க முயன்றிருக்கிறேன். நாவலை இன்னும் படிக்காதவர்கள் இதை முதலில் படித்து, பின்னர் நாவலை படித்து அதன் பின் பேராசிரியரின் பதிவை படிப்பது ஒரு நல்ல வரிசையாக இருக்குமென நினைக்கிறேன்.

  Like

 2. இந்த நாவலை கல்லூரி நாட்களில் நூலகத்தில் எடுத்தேன். ஆரம்பத்தில் சந்திரசேகரன் கிரிக்கெட் என்று பார்த்ததும் எடுத்துகொண்டேன்!
  அவர் அம்மா அவரை மாடு தேட அனுப்புவார் என நினைக்கிறேன் – கோபமாக வந்தது!
  பல வருடங்களுக்கு பின் படிக்கும் போதுதான் வேறு விஷயங்களும் பிடிபட்டது.

  அசோகமித்திரன் இந்த செகந்திராபாத் அனுபவங்களை அவரது நிறைய சிறுகதைகளில் (கூட விளையாடும், கல்கத்தா ரையாட்டில் இருந்து தப்பித்த, மாறுகண் இஸ்லாமிய பையன்), பார்த்த நியாபகம்.

  அப்புறம் ஆர்வி…இவ்வளவு நாட்களாக இந்த வலைத்தளத்திற்கு வருவேன், “புத்தகத்திற்கு ஒரு பிளாக்” ஜெமோ புகைப்படம் என்று பார்த்தவுடன் “சரி, புதிதாக எதுவும் இல்லை போல” என்று திரும்பிவிடுவேன். இன்னும் முதுகு பெரு வலியிலேயே இருக்கிறார் போல என்று நினைத்துக்கொண்டுவிட்டேன்!
  இன்று தற்செயலாக scroll செய்தபோதுதான் நான் நினைத்தது தவறு என்று புரிந்தது…நான் மட்டும்தான் இப்படி புரிந்து கொண்டேனா அல்லது வேறு யாரும் இப்படியா என்று தெரியவில்லை…லேட்டஸ்ட் பதிவுகள் முன்னே இருக்கப்படாதா!

  Essex சிவா

  Like

  1. எஸ்செக்ஸ் சிவா,

   புதிதாக வருபவர்களுக்கு உதவியாக இருக்குமே என்று அந்த முதல் ஸ்டிக்கி போஸ்ட். அது இப்படி ஒரு குழப்பத்தை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. என்ன செய்வது என்று யோசிக்க வேண்டும்…

   Like

 3. Essex சிவா,

  எங்கள் தளங்களில் முதல் போஸ்ட் ஸ்டிக்கி போஸ்ட். (ஒரு வித நோட்டீஸ் போர்ட்) இரண்டாவதிலிருந்து தான் புதிய போஸ்ட்கள் ஆரம்பமாகும். ஏமாந்து விடாதீர்கள் 🙂

  Like

 4. சிவாவிற்கு ஏற்பட்ட அதே குழப்பம்தான் எனக்கும். ப்ல முறை எட்டிப் பார்த்து ஜெ.மோகனை
  தரிசித்துவிட்டு மேற்கொண்டு பார்க்காமல் போயிருக்கிறேன் 🙂 இப்ப சில வாரங்களுக்கு முன்புதான் அப்டேட் ஆவது தெரிந்தது !
  முடிந்தால் புதியதை முதலில் காட்டுங்கள். எங்களைப் போல பலரும் இப்படி ஏமாந்து இருக்கலாம்.

  Like

 5. அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு – ஒரு பார்வை — அண்ணாமலை ஸ்வாமி

  சமீபத்தில் நான் படித்த நாவல் அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு. 1976ல் எழுதப்பட்ட இந்த நாவல் 1977 ஆம் ஆண்டுக்கான இலக்கியச் சிந்தனை விருது பெற்றிருக்கிறது. சுதந்திரத்திற்கு பிறகு பல சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த நம் நாடு சர்தார் வல்லபாய் பட்டேல் போற்றவர்களின் முயற்சியில் ஒன்றிணைத்து தற்போதைய இந்தியாவாக ஆனது. இந்த சமஸ்தான இணைப்புகளில் பெரும் சிரமும் கொடுத்தது ஹைதராபாத் நிஜாம் சமஸ்தானமும் காஷ்மீர் ராஜாவும். சுதந்திரம் கிடைத்து சில மாதங்களுக்குப் பிறகே நிஜாம் சமஸ்தானம் நம் நாட்டுடன் இணைந்தது. சுதந்திரத்திற்குப் பிறகும் நம் நாடுடன் இணைவதுற்கு முன்பும் இருந்த ஒரு கலவர சூழலை இந்த நாவல் படம் பிடித்துக் காட்டுகிறது.

  நிஜாம் சமஸ்தானத்தில் வாழும் ஒரு தமிழ் குடும்பத்தை சுற்றி இந்த நாவல் பின்னப்பட்டிருக்கிறது. அவர்கள் வாயிலாக அன்றைய கலவர சூழலை காட்சிப்படுத்துகிறார் அசோகமித்திரன். அந்த தமிழ் குடும்பத்தின் இளைஞனான சந்திரசேகரனின் பார்வையில் இந்த நாவல் முழுவதும் எழுதப்பட்டிருக்கிறது. சந்திரசேகரனின் கல்லூரியில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் அவன் வெளியிடங்களில் சந்திக்கும் சம்பவங்கள் வாயிலாக அந்த சமயத்தின் சூழ்நிலையை விவரிக்கிறார் ஆசிரியர். அந்த சமயத்தில் நிஜாம் ராஜா இந்திய அரசுக்கு எதிராக செயல் பட முயற்சிப்பதும் பாகிஸ்தானும் ஜின்னாவும் உதவுவார்கள் என்று எதிர்பார்ப்பதும் பிறகு இந்தியப் படையிடம் தோற்பதும் குறிப்பிடபட்டிருகிறது.

  நாவல் ஆரம்பிக்கும் போது நிஜாம் ராஜாங்கத்தை சேர்ந்த ராஜாக்கள் ஹீரோவாக திரிவதும் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் கெத்து குறைவதும் பிறகு அடங்கிப் போவதும் விவரிக்கப்பட்டிருக்கிறது. நாவலின் முடிவில் ராஜாக்கள் மீது ஏனோ ஒரு பரிதாபம் ஏற்படுகிறது. மகாத்மா காந்தி இறந்து போகும் சமயத்தில் அதை உறுதி செய்து கொள்ள போது படும் பாடும் அது உறுதி என தெரிந்ததும் போது படும் வேதனையும் படிக்கும் போது நமக்கே அந்த வேதனையை உணரமுடிகிறது.

  நாவலின் சந்திரசேகரனின் வாலிப ஆசையையும் அங்கங்கே பதிவுசெய்து இருக்கிறார் ஆசிரியர். ஆனால் என்னை பெரிதும் பாதித்தது அந்த முடிவு. சற்றும் எதிர்பாராத அந்த முடிவு என்னை வெகுவாக பாதித்தது அதுவே இந்த நாவல் என் நினைவில் இருந்து நீங்காமல் இருக்க காரணமாக இருக்கிறது.

  இந்த நாவல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இதன் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு மத நல்லிணக்க விருதும் கன்னட மொழிபெயர்ப்புக்கு சாகித்திய அகடமி விருதும் பெற்றது.

  தமிழ்நாட்டில் சந்தித்திராத இந்த சூழலை தமிழில் எத்தனை பேர் நூலாக்கி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை, அந்த வகையில் இந்த நாவல் ஒரு வரலாற்று சான்றாக விளங்குகிறது. இந்த நாவலை படித்த முடித்த போது ஒரு சிறந்த நூலைப் படித்த உணர்வு ஏற்பட்டது.

  –http://manipuram.blogspot.com/2009/06/18.html

  Like

 6. ஆர்வி , இந்த வரலாற்று குறிப்புகள் தொகுப்பாக உள்ளது நன்று , ஜெமோ சொன்னாரே என்றுதான் வாசிக்க தொடங்கினேன் , மறுவாசிப்பில்தான் மறைந்திருந்தவை வெளிப்பட்டது .

  Like

  1. அரங்கசாமி,

   18 -ஆவது அட்சக்கோடு பதிவை எழுதியது பக்ஸ் என்கிற பகவதி பெருமாள். நானும் மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும் என்று பார்க்கிறேன், கைவரவில்லை.

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.