பாலகுமாரனின் “கரையோர முதலைகள்”

பாலகுமாரன் ஒரு intriguing எழுத்தாளர். அவருடைய திறமை அவரது எழுத்தில் முழுதாக வெளிப்படவில்லை. வெற்றி என்பதை அவர் வாரப் பத்திரிகை உலகில் வெற்றி என்றே புரிந்துகொண்டிருந்தார். பிராபல்யத்துகான தேடல், வாசகனை அதிர்ச்சிக்குண்டாக்க வேண்டும் என்ற விழைவு, கொஞ்சம் பெரிசு ஆனதும் உபதேசம் செய்யும் மனநிலை இவை எல்லாம் அவரை நீர்த்துப் போகவைத்துவிட்டன என்றேதான் கருதுகிறேன்.

அதிலும் ஆரம்பத்தில் இருந்த சூடு, படைப்புகளில் இருந்த நேர்த்தி எல்லாம் காலம் காலம் போக குறைந்துவிட்டது. நீர்த்துப் போய்விட்டார். ஒரு காலத்தில் – மெர்க்குரிப் பூக்களையும், ஆனந்த வயலையும், இரும்புக் குதிரைகளையும், கரையோர முதலைகளையும், பந்தயப் புறாவையும், அகல்யாவையும் மட்டுமே நான் படித்திருந்த காலத்தில் – இவரால் திருப்பித் திருப்பி ஒரே சூழலை எழுதும் தி.ஜா.வை மிஞ்ச முடியும் என்றே நான் கணித்திருந்தேன். தி.ஜா.வின் அருகே இவரால் நிற்கக் கூட முடியாது என்று இப்போது தெரிகிறது. அப்படி குறுகிய காலத்துக்கு நினைத்தது என் முட்டாள்தனத்தைத்தான் காட்டுகிறது!

கரையோர முதலைகள் அவரது பொற்காலத்தில் – எண்பதுகளின் பிற்பாதி, தொண்ணூறுகளின் முற்பாதி – எழுதப்பட்டது. வாரப்பத்திரிகையில் (விகடன்?) தொடர்கதையாக வந்தது. செக்ஸ் பற்றி கொஞ்சம் விவரித்து – அன்றைய வாரப் பத்திரிகைகளில் எல்லைகளை கொஞ்சம் மீறி – நம்மை எல்லாம் ஷாக் செய்யும் எண்ணம் தெளிவாகத் தெரிகிறது. அம்மா பெண்ணைப் பார்த்து “சூடான சாம்பலை வைத்து தேய்த்துக்கொள்” என்று சொல்வாள். அந்தக் காலத்தில் அதுவும் விகடனில் அப்படி ஒரு வரி அதிர்ச்சிதான். ஆனால் அப்படி பத்திரிகைகளில் எல்லைகளை கொஞ்சூண்டு மீறுவது பல வருஷஙகளாக சாண்டில்யனும் சுஜாதாவும் புஷ்பா தங்கதுரையும் செய்து கொண்டிருந்ததுதான். இப்படி எல்லாரும் கொஞ்சம் கொஞ்சமாக மீறி ஐம்பது வருஷத்துக்கு முன்பிருந்த எல்லைகள் இப்போது கண்ணுக்கே தெரிவதில்லை.

சரளமான, சிம்பிளான, நேரடியான கதை. நாயகி ஸ்வப்னா இரண்டு பேரால் ஏமாற்றப்படுகிறாள். அது அவளிடம் பெரிய வன்மத்தைக் தூண்டி இருக்கிறது. இன்று உத்தமக் கணவன், நல்ல நட்பு எல்லாம் இருந்தாலும் அந்த வன்மம் அவ்வப்போது பிறரிடம் வெடிக்கிறது. அவர்களைப் பழி வாங்க முயல்கிறாள்.

பாலகுமாரனின் வாரப் பத்திரிகை தொடர்கதைகளில் ஒரு pattern உண்டு. ஆர்ப்பாட்டமாக ஆரம்பிப்பார், படிப்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவார், எப்படி முடிப்பது என்று தெரியாமல் திணறுவார். செயற்கையாக ஒரு crisis-ஐ உருவாக்கி அதை climax ஆகக் காட்டுவார். அகல்யா, ஆனந்தவயல் என்று பல நாவல்களை எடுத்துக்காட்டாக சொல்லலாம். இதிலும் அப்படித்தான். கடைசி பழி வாங்கும் முயற்சிகள், பாய்ஃப்ரெண்ட் வேறு திருமணம் வேறு என்று பேசும் இளம்பெண் எல்லாம் செயற்கையாக இருக்கின்றன.

இந்தக் கதைக்கு அன்றிருந்த தாக்கத்தை இன்று உணர்வதே கஷ்டம். கோபக்காரி நாயகிகளே அப்போதெல்லாம் அபூர்வம். இவளோ நடு ரோட்டில் செருப்பைக் கழற்றி அடிக்கிறாள். இரண்டு பேரோடு பழகிய பிறகு உத்தமக் கணவன் என்றால் அலுவலகத்துக்கு மதிய உணவு கட்டிக் கொண்டு வாரப் பத்திரிகையை ரயிலில் படிக்கும் பெண்கள் கூட்டம் கவரப்படும். பழி வாங்கத் துடிக்கும் நாயகி என்பது புதுமை. அங்கங்கே பாலியல் வர்ணனைகள் வேறு. (அப்போதெல்லாம் கழுத்துக்கே கீழே கை போனது என்று படித்தாலே கிளர்ச்சி அடையும் பருவம்). நடுநடுவே கவிதை வேறு. அதுவும் முதலைகளைப் பற்றி. தொடர்கதை பெரிய வெற்றி பெற்றது.

இன்றைக்கு மீண்டும் படிக்கும்போது ஸ்வப்னா அலுவலகத்தில் உண்டாக்கும் சின்னச் சின்ன சிக்கல்கள் உண்மையாகத் தெரிகின்றன. கோபக்கார மனைவி, மனைவியை சாந்தப்படுத்த கணவனின் முயற்சிகள், போலீஸ் கேஸ் வேண்டாம் என்று நகர்ந்து போக முயற்சிப்பது எல்லாம் உண்மையாகத் தெரிகின்றன. அதாவது ஸ்டீரியோடைப் – ஸ்டீரியோடைப் என்பது முற்றிலும் சரியல்லதான், ஆனால் கோபக்கார மனைவி, உத்தமக் கணவன் என்பது அவர்களை விவரித்துவிடுகிறது – படைப்பையும் மீறி உண்மையான சித்தரிப்பு தெரிகிறது. அதனால்தான் இதை பாலகுமாரனின் வெற்றியாகக் கருதுகிறேன்.

கரையோர முதலைகளை ஜெயமோகன் தனது சிறந்த வணிக நாவல்கள் பட்டியலில் வைக்கிறார். ஜெயமோகனுக்கு நேரடித்தன்மை, சரளம் போன்றவை குறைகள். எனக்கு அவை உத்திகள். எனக்கு இது முதல் நிலை இலக்கியம் அல்லதான், ஆனால் இலக்கியமே.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாலகுமாரன் பக்கம்
தொடர்புடைய சுட்டிகள்:
பாலகுமாரன் பற்றி ஜெயமோகன்

4 thoughts on “பாலகுமாரனின் “கரையோர முதலைகள்”

  1. பாலகுமாரன் எனது டீன் ஏஜில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளராக இருந்தார். மெர்க்குரிப் பூக்களும், அகல்யாவும் சாவி வார இதழில் வெளிவந்தபோதே வாசித்திருக்கிறேன். மெர்க்குரிப் பூக்களின் முதல் அத்தியாயத்தின் முடிவில் கதாநாயகன் இறந்துபோவது வித்தியாசமாக இருந்தது. அவரது “சின்னச் சின்ன வட்டங்கள்” என்னை மிகவும் பாதித்தது. பாலகுமாரன் தி.ஜானகிராமனை மிஞ்சிவிடுவார் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவ்வாறு நிகழவில்லை!!!

    Like

    1. சுந்தர், // பாலகுமாரன் தி.ஜானகிராமனை மிஞ்சிவிடுவார் என்றுதான் நினைத்திருந்தேன் // என்னைப் போலவே தப்புக்கணக்கு போட்டிருக்கிறீர்கள்!

      Like

  2. சாரி ஆர்வீ உங்கள் review confusing ஆக உள்ளது. பாலகுமாரன் சாரைப்பற்றி நீங்கள் கூறியுள்ள விஷயங்களை நான் ஒத்துக்கொள்கிறேன். அவரது “மனம் விரும்புதே” ஒரு அருமையான நாவல். விரசமாக ஏன் எழுதினார் என்றால் விற்பனையைக்கூட்டத்தான். சுஜாதா படு விரசமாக எழுதி உள்ளார் ஆர்வீ. பின்னாட்களில் அவரது நாவல்களைபடிக்கும் போது ஒரு வித deja vu ஏற்பட்டது வாஸ்தவம் தான். ஆனாலும் எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். ஒரு காலத்தில் அவரது தொடர்களை விரும்பிப்படித்தவள் இந்த சந்திரப்ரபா. என் கணவர் வேங்கடகிரியும் அவரது தீவிர வாசகர். ரெண்டு பெண்டாட்டிக்காரர் என்ற பேர் வேறு. மற்றும் அவர் தனது தந்தையின் மீது காட்டிய கட்டம் என்னை வியப்பில் ஆழ்த்தியது என்னவோ நிஜம்.

    Balakumaran influenced me a lot through his writings. The more prolific he became in his later years, the more repetitive his writings turned out to be. This was expected. But he was someone who had to leave a factory job and enter the writing profession. He also had a tough childhood. A great man, no doubt. Towards the end, he became overtly philosophical. Yes I agree with you that this kind of diluted the intensity of his writings.

    Like

    1. சந்திரா, ‘மனம் விரும்புதே’ எனக்கு நினைவில்லை. பாலியல் சித்தரிப்புகளில் ஒரு தவறும் இல்லை. ஆனால் அன்றைய பத்திரிகைகளின் எல்லைகள் உடைக்கப்பட்டுக் கொண்டிருந்தன, அவ்வளவுதான்.

      Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.