உலகின் முதல் எழுத்தாளர் என்ஹெடுவன்னா

உலகின் முதல் கதையை, கவிதையை எழுதியவர்/சொன்னவர்/படைத்தவர் யார்? நமக்கு என்றும் தெரியப் போவதில்லை. ஆனால் முதன்முதலாக தெரிந்த பெயர் என்ஹெடுவன்னா.

என்ஹெடுவன்னா 4300-4400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவராம். கி.மு. 23-ஆம் நூற்றாண்டு என்று கணிக்கிறார்கள். ஒப்பிடுவதற்காக ரிக்வேதத்தில் காலம் கி.மு. 15-ஆம் நூற்றாண்டுக்கு பிற்பட்டது என்றும் தொல்காப்பியம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு பிற்பட்டது என்றும் கணிக்கிறார்கள். இன்று கிடைக்கும் முதல் தொன்மம் என்று கருதப்படும் கில்கமேஷ் ஏடுகளே இவற்றுக்கு 300-400 ஆண்டுகள் பிற்பட்டவைதான். ஆனால் கில்கமேஷ் என்ஹெடுவன்னாவுக்கு 400-500 ஆண்டுகள் முன் வாழ்ந்தவர், வாய்வழித் தொன்மமாக அப்போதே ஆரம்பித்திருக்கும் என்று ஊகிக்கிறார்கள்.

உலகின் முதல் பேரரசு என்று கருதப்படும் அக்கடியன் அரசை – சுமேரிய நாகரிகம், இன்றைய இரான்/இராக் பகுதிகள் – உருவாக்கிய சக்ரவர்த்தி சார்கனின் மகள் என்ஹெடுவன்னா. அன்றைய அக்கடிய மதத்தையும் சார்கன் வென்ற பகுதிகளின் சுமேரிய மதத்தையும் ஒன்றிணைக்க சார்கனால் நியமிக்கப்பட்ட மதகுருவாம். அவர் எழுதியவற்றில் Exaltation of Inanna, Sumerian Temple Hymns ஆகியவை இன்று கிடைக்கின்றன. கண்டுபிடிக்கப்பட்ட இனான்னா ஸ்தோத்திரம் பிரதியில் – களிமண் ஏட்டில் க்யூனிஃபார்ம் எழுத்துக்கள் – “இந்த கவிதை என்னிடம் பிறந்தது உனக்காகவே. இதை நான் நள்ளிரவில் உனக்காகப் பாடுகிறேன், பாடகர்கள் நண்பகலில் இதை மீண்டும் பாடட்டும்” (என் மொழிபெயர்ப்பு) என்று இருக்கிறதாம். சுமேரியன் கோவில் துதிகளில் “இதை எழுதியது என்ஹெடுவன்னா, இதற்கு முன் இது எழுதப்படவில்லை” என்று இருக்கிறதாம்.

1927-இல் சர் லியோனார்ட் வுல்லி என்பவர் இந்த களிமண் ஏடுகளை கண்டெடுத்திருக்கிறார்.

சுமேரியக் கோவில் துதிகளின் மொழியை வைத்து அவை என்ஹெடுவன்னாவால் எழுதப்படவில்லை என்று சிலர் கூறுகிறார்கள்.

இனான்னாதான் பிற்காலத்தில் இஷ்டார் என்று அழைக்கப்பட்ட தெய்வமாம்.

என்ஹெடுவன்னாவின் பேர் க்யூனிஃபார்ம் எழுத்துக்களில்: 𒂗𒃶𒌌𒀭𒈾

பிபிசி கட்டுரையைப் படிக்கும்போது எதற்காக தமிழர்கள்/ஹிந்துத்துவர்கள் சமஸ்கிருதமோ தமிழோதான் முன் தோன்றி மூத்த மொழி என்று நிறுவ முயன்று கொண்டே இருக்கிறார்கள் என்றுதான் தோன்றியது. குறைந்த பட்சம் சுமேரிய/எகிப்திய/சீன நாகரீங்களிலிலிருந்து நமக்கு இன்று என்னவெல்லாம் கிடைக்கிறது என்று தேடிப் பார்த்துவிட்டு பிறகு பேசலாம். மொழி கி.மு. 1000-த்தில் ஆரம்பித்ததா, பொ.யு. 1000-த்தில் ஆரம்பித்ததா என்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை, என்ன கிடைக்கிறது, அவற்றின் தரம் என்ன என்பதைப் பற்றி பேசலாம். “அவரோ வாரார் முல்லையும் பூத்தன” என்பது எப்போது எழுதப்பட்டிருந்தால் என்ன? அது கவிதையா இல்லையா என்பதுதானே முக்கியம்?

தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்

தொடர்புடைய சுட்டிகள்:
விக்கி குறிப்பு
பிபிசி கட்டுரை

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.