காலின் டெக்ஸ்டர்: Last Bus to Woodstock

இந்தப் புத்தகத்தை பல வருஷங்களுக்கு முன் படித்தேன். புத்தகத்தை மீண்டும் படித்ததனால் எழுத ஆரம்பித்தேன். இந்தப் பதிவை எழுதி முடித்த பிறகுதான் ஏற்கனவே ஒரு முறை எழுதி இருக்கிறேன் என்றே தெரிந்தது. பழைய பதிவையும் புதிய பதிவையும் இணைத்துவிட்டேன்…

Last Bus to Woodstock (1975) துப்பறியும் நாவல்களில் ஒரு minor classic. அகதா கிறிஸ்டி, டோரதி சேயர்ஸ், ஜோசஃபின் டே போன்றவர்களின் நாவல்களின் நவீனப்படுத்தப்பட்ட வடிவம். நல்ல முடிச்சு(கள்) கொண்டது. துப்பறியும் கதை ரசிகர்கள் தவறவிடக் கூடாத நாவல்.

துப்பறிபவர் தலைமை இன்ஸ்பெக்டர் மோர்ஸ்; மோர்சுக்கு வாட்சனாக இருப்பவர் சார்ஜெண்ட் லூயிஸ் மோர்ஸ்தான் காலின் டெக்ஸ்டரின் புகழ் பெற்ற, சுவாரசியமான பாத்திரப் படைப்பு. சுவாரசியமாக இருக்க வேண்டும் என்றே எழுதப்பட்டது. மோர்ஸ் கொஞ்சம் eccentric. நிறைய குசும்பு, கொஞ்சம் தீசத்தனம், கொஞ்சல் அலட்டல், தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற அகங்காரம் எல்லாம் சேர்ந்தவர். மோர்ஸ் அவ்வப்போது லூயிசையே போட்டு வாட்டி எடுப்பார்.

டெக்ஸ்டரின் முதல் நாவல் இதுதான். இதற்குப் பிறகு மோர்ஸை வைத்து பல நாவல்களை எழுதி இருக்கிறார். ஆனால் இதைத்தான் இந்தத் தொடர் நாவல்களில் சிறந்த புத்தகமாகக் கருதுகிறேன். சிறந்த கதைப்பின்னல் என்று முதல் முறை படித்தபோது நினைத்தது மறுவாசிப்புகளிலும் ஊர்ஜிதம் ஆயிற்று.

கதையின் கவர்ச்சி மோர்சோடு சேர்ந்து படிப்பவர்களும் யோசிப்பதுதான். ஒவ்வொரு இடத்திலும் தர்க்கபூர்வமான சிந்தனை வெளிப்படுகிறது. அணுகுமுறை மாற்றம் – துப்புகளை வைத்து ஆளை கண்டுபிடிப்பதற்கு பதிலாக யூகத்தின் அடிப்படையில் தான் தேடுபவனுக்கு இன்னின்ன குணாதிசயங்கள் இருக்க வேண்டும் என்று யோசித்து பிடிப்பது மிக நன்றாக வந்திருக்கிறது. சுஜாதாவின் ஒரு விபத்தின் அனாடமி குறுநாவலை, ஹாரி கெமல்மனின் Nine Mile Walk சிறுகதையை நினைவுபடுத்துகிறது. மோர்சின் பாத்திரப் படைப்பும் சுவாரசியப்படுத்துகிறது.

என்ன கதை? மதுச்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட காருக்கும் சுவருக்கும் நடுவில் இளம் பெண் இறந்து கிடக்கிறாள். அவள் உடலில் காயங்கள், தொடையில் விந்து வழிந்திருக்கிறது, ஆடை அலங்கோலமாக இருக்கிறது. தலையில் அடித்து கொலை. (கதை எழுதப்பட்டது 1975-இல், மரபணு பரிசோதனை, அலைபேசி எல்லாம் எதிர்காலத்தில்தான்)

பிணத்தைப் பார்த்த ஜான் சாண்டர்ஸுக்கு அந்தப் பெண்ணை ஏற்கனவே தெரியும் என்று மோர்ஸ் யூகிக்கிறார். ஏனென்றால் அவன் காரில் வரவில்லை, கார் இல்லாதவன் எதற்கு கார் நிறுத்தும் இடத்துக்குப் போக வேண்டும்? ஜான் சாண்டர்ஸும் இறந்த பெண்ணும் மதுச்சாலையில் சந்திப்பதாக இருந்தது, அவள் உள்ளே வரவில்லை, வெளியே அவளைப் பார்த்ததும் சாண்டர்ஸ் போய் தேடி இருக்கிறான் என்று கண்டுபிடிக்கிறார். அடையாளம் தெரியாத பிணம் இல்லை, இறந்தவள் பெயர் சில்வியா என்று உடனடியாகத் தெரிந்துவிடுகிறது

இறந்த சில்வியா இன்னொரு பெண்ணோடு பஸ்ஸுக்காக காத்திருப்பதை பார்த்ததாக ஒரு சாட்சி வருகிறது. முந்தைய நாள் மாலை நேரத்தில் இரண்டு பெண்கள் வுட்ஸ்டாக் செல்ல ஒரு பஸ்ஸுக்கு காத்திருப்பதை வயதான பெண் ஒருத்தி பார்த்திருக்கிறாள். அவளே அவர்களிடம் இனி மேல் வுட்ஸ்டாக் செல்ல பஸ் கிடையாது என்கிறாள். (தவறான தகவல்) வரும் கார்கள் ஏதாவது ஒன்றில் லிஃப்ட் கேட்கலாம் என்கிறாள் ஒருத்தி. இன்னொருத்தி தயங்க, முதல் பெண் “Come on, we will have a giggle about this in the morning” என்கிறாள். பிறகு இருவரும் லிஃப்ட் கேட்க சாலையில் நடந்து செல்கிறார்கள். அவர்களுக்கு ஒரு சிவப்புக் காரில் லிஃப்ட் கிடைக்கிறது. அதற்கப்புறம் சில்வியாவை யாரும் பார்க்கவில்லை. காலை பார்க்கலாம் என்று பேசிக் கொள்வதால் கூட வந்தவள் சில்வியாவோடு வேலை செய்பவளாக இருக்க வேண்டும். ஆனால் வேலை செய்யும் இடத்தில் விசாரித்தால் அங்கே எந்தப் பெண்ணும் தான்தான் கூட இருந்தது என்று ஒத்துக் கொள்ளவில்லை.

தனிப்பட்ட கடிதங்களை அலுவலக முகவரிக்கு அனுப்புவதை சில்வியாவின் மேலாளர் அனுமதித்திருக்கிறார். அவற்றில் ஜென்னிஃபர் கோல்பிக்கு வந்த கடிதத்தில் அவள் வேறு வேலைக்கு போட்ட மனு நிராகரிக்கப்பட்டது என்று இருக்கிறது. மோர்ஸ் விசாரித்தால் ஜென்னிஃபர் தான் எந்த வேலைக்கும் மனுப் போடவில்லை என்று சாதிக்கிறாள். அந்தக் கடிதத்தில் ஒரு ரகசியச் செய்தி இருப்பதை மோர்ஸ் கண்டுபிடிக்கிறார். மோர்ஸ் ஜென்னிஃபர் மீது சந்தேகப்படுகிறார், ஆனால் ஜென்னிஃபர் அசைக்க முடியாத பதில்களைச் சொல்கிறாள், நான் அவளில்லை என்று மறுக்கிறாள். இடையில் ஜென்னிஃபருடன் வசிக்கும் சூவுக்கும் மோர்சுக்கும் ஈர்ப்பு ஏற்படுகிறது.

லிஃப்ட் கொடுத்தவர் சாட்சி சொல்ல முன் வரவும் என்று காவல் துறை கேட்டுக் கொள்கிறது. ஆனால் யாரும் வரவில்லை. மோர்ஸ் தன் அணுகுமுறையை மாற்றுகிறார். துப்புகளை ஆராய்ந்து கொலையாளியைக் கண்டுபிடிப்பதற்கு பதில் கொலையாளியைப் பிடிப்போம், எப்படி கொலை நடந்தது என்று அவனே சொல்லிவிடுவான் என்கிறார். கொலையாளி சிவப்புக் காரை ஓட்டியவன் என்று வைத்துக் கொள்கிறார். சிறு நகரச் சூழல்தான், கொலை செய்தவன் ஆண், 35-50 வயதுக்குள் இருக்கும், மணமானவன், பிற பெண்களுடன் உறவு கொள்பவன், கார் வைத்திருக்கிறான், சிவப்புக் கார் என்றெல்லாம் சுருக்கி சுருக்கி இப்படிப்பட்ட சிவப்பு காருக்கு சொந்தக்காரனான, மணமான, 35-50 வயதுக்குள் உள்ள ஆண் இந்த சிறு நகரத்தில் ஓரிரு பேர்தான் இருப்பார்கள் என்ற முடிவுக்கு வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களைத் தேடுகிறார்கள்.

பல்கலைக்கழக ஆசிரிய்ரும், மேலே சொன்ன அத்தனை பொருத்தங்களும் உள்ள பெர்னார்ட் க்ரௌதர்தான் லிஃப்ட் கொடுத்தவர். போலீஸ் விசாரிப்பதைக் கண்டதும் அவரே போய் நான்தான் லிஃப்ட் கொடுத்தேன், ஆனால் இறக்கி விட்டுவிட்டேன் என்று ஒத்துக் கொள்கிறார். தனக்கு இன்னொரு பெண்ணோடு தொடர்பு இருப்பதாகவும், அவள் பேரைக் காப்பாற்றவும் தன் மனைவிக்கு தெரியாமல் இருக்கவும்தான் தானே முன்வந்து உண்மையைச் சொல்லவில்லை என்கிறார். தான் கொலை செய்யவில்லை என்று வலிமையாக மறுக்கிறார்.

ஜென்னிஃபருக்கும் இதற்கும் என்ன தொடர்பு? யார் அவளுக்கு ரகசியச் செய்தியை அனுப்பியது? க்ரௌதரின் கள்ளக் காதலி ஜென்னிஃபர் என்று மோர்ஸ் யூகிக்கிறார். ஆனால் இருவரும் இதைக் கேட்டு சிரிக்கிறார்கள். ஜென்னிஃபர் தன்னிடம் கார் இருப்பதாகவும் தான் பஸ்ஸுக்கு காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை என்று சொல்கிறாள்.

ரகசியச் செய்தி இருந்த கடிதம் எந்த தட்டச்சுக் கருவியால் தட்டச்சு செய்யப்பட்டது என்று தேடுகிறார்கள். க்ரௌதரின் வீட்டில் உள்ள கருவியை ஆராய்கிறார்கள். அழுத்தம் அதிகமாகும்போது க்ரௌதரின் மனைவி மார்கரெட் தான் க்ரௌதரை பின்தொடர்ந்ததாகவும், க்ரௌதர் சில்வியாவுடன் மதுச்சாலையின் பார்க்கிங்கில் காரின் பின் சீட்டில் உறவு கொண்டதைப் பார்த்ததாகவும், க்ரௌதர் சென்ற பிறகு கோபத்தில் சில்வியாவை அடித்துக் கொன்றுவிட்டதாகவும் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். மனைவி இறந்ததும் க்ரௌதருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.

மோர்ஸ் இதை நம்பவில்லை. அப்படி என்றால் ரகசியச் செய்தியை அனுப்புவானேன்? யார் அனுப்பியது? தட்டச்சுக் கருவி க்ரௌதரின் சக ஊழியருடையது, க்ரௌதரால் அதை சுலபமாக பயன்படுத்தி இருக்க முடியும் என்று கண்டுபிடிக்கிறார்கள். க்ரௌதர் கள்ளக் காதலியை அன்று பார்க்க முடியாததால் சில்வியாவோடு உறவு கொண்டதாகவும், சில்வியா மிரட்டியதால் அவளைக் கொன்றதாகவும், தன்னைக் காப்பாற்ற மார்கரெட் தற்கொலை செய்து கொண்டதாக வாக்குமூலம் கொடுத்துவிட்டு இறக்கிறார்.

மோர்ஸ் இருவருமே கொலை செய்யவில்லை, கொன்றது இன்னொருவர் என்கிறார். ஏனென்றால் ஜென்னிஃபருக்கு வந்த ரகசியச் செய்தி இன்னும் உறுத்துகிறது. எல்லாவற்றையும் கடைசியில் மோர்ஸ் அவிழ்க்கிறார்.

கதை விவரிப்பு எண்ணியதை விட நீளமாகிவிட்டது. ஆனால் அதுவும் நல்லதுதான்.

ஷெர்லக் ஹோம்ஸ் போலவோ, போய்ரோ போலவோ இப்படித்தான் நடந்தது என்று அறுதியான முடிவுகள் கிடையாது. மீண்டும் மீண்டும் யூகங்கள்தான், சில சமயம் தவறவும் செய்கின்றன. அப்படி நடந்திருக்க வாய்ப்பு, இப்படி நடந்திருக்க வாய்ப்பு என்ற leaps of imagination, காவல்துறையின் விசாரிப்புகள், தர்க்கரீதியாக சிந்திப்பது, சின்ன சின்ன ஓட்டைகளை விவரித்து அடைப்பது ஆகிய எல்லாவற்றையும் ஒன்றிணைத்திருப்பதில்தான் இந்த நாவலின் வெற்றி இருக்கிறது.

ஒட்டாத பகுதி மோர்சுக்கு சூவுக்கும் நடுவே ஏற்படும் ஈர்ப்புதான். என் கண்ணில் அந்தப் பகுதிகள் இல்லை என்றால் கதையின் ஒருங்கமைதி (coherence) இன்னும் கச்சிதப்பட்டிருக்கும். ஆனால் அந்தப் பகுதிகளும் சுவாரசியமானவைதான்.

நல்ல மர்ம நாவல் எழுதுவது கஷ்டம். மர்ம நாவலின் ஃபார்முலாக்களை மீறாமல் சிறந்த கதைப் பின்னலை (plot) டெக்ஸ்டர் உருவாக்கி இருக்கிறார். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: துப்பறியும் நாவல்கள்

1 thoughts on “காலின் டெக்ஸ்டர்: Last Bus to Woodstock

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.