சுஜாதாவின் “திசைகண்டேன் வான்கண்டேன்”

சுஜாதாவின் SF (Science Fiction) முயற்சிகளில் அடிக்கடி பார்க்கக் கூடிய தீம் ஒரு ரோபாட் – எந்திரன் – உயிர் பெறுவது, பிறகு எஜமானனை எதிர்ப்பது. மீண்டும் ஜீனோவில் இந்த தீம் பெரும் வெற்றி பெற்றது. ஆனால் இது ஜீனோ எழுதப்பட்ட காலத்திலேயே cliche-தான். ஃப்ராங்கன்ஸ்டைனிலிருந்து பல கதைகளில், ஷார்ட் சர்க்யூட் உள்ளிட்ட பல திரைப்படங்களில் வந்த தீம்தான்.

சுஜாதாவின் எந்திரங்கள் பொதுவாக கவிதையை – அதுவும் புதுக் கவிதையை – ரசிப்பார்கள். நாட்டுப்புறப் பாட்டு பாடுவார்கள். இந்த மாதிரி எந்திரன் கதைகளில் அவருடைய touch என்பது இதுதான்.

திசைகண்டேன் வான்கண்டேன் நாவலிலும் அப்படித்தான் ஒரு எந்திரன் – 121 – வருகிறது. அண்ட்ரோமீடா galaxy-இலிருந்து வரும் பாரிக்கு உதவியாளன். பாரியின் வேலை பூமியின் தலைவர்களுக்கு ஒரு நோட்டீஸ் கொடுப்பது, பிறகு பூமியை அழிக்க வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வது. எதற்காக? பாலம் கட்டும் இடத்தில் பூமி இருக்கிறது. அவர்களுக்கு இருக்கும் சில கட்டுப்பாடுகளால் பாரியும் எந்திரனும் சில பல பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள். ஆனால் எல்லாவற்றையும் விட பெரிய பிரச்சினை எந்திரன் செங்கமலம் என்ற பெண்ணிடம் மோகவசப்படுவதுதான். அதனால் அது எஜமானன் பாரியையே எதிர்க்கிறது. பிறகு பூமி அழிகிறதா, மோகத்தின் விளைவு என்ன என்று கதை போகிறது.

கதையின் சிறந்த பகுதி அண்ட்ரோமீடா galaxy-யில் பாரி கிளம்புவதற்கு முன் செய்யும் ஏற்பாடுகள்தான். கடவுள்கள் அங்கே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு வேலை கீலை எதுவும் கிடையாது. அங்கத்திய “மனிதர்கள்”தான் கடவுள்களுக்கு எஜமானர்கள்.

கதையின் வீக் பாயின்ட் என்றால் இதில் SF-க்கு உண்டான கேள்விகளோ, இப்படி நடந்தால் என்னாகும் என்ற சித்திரங்களோ இல்லாததுதான். இது மந்திரவாதியின் பூதம் இளவரசியைக் கண்டு காதல் கொள்ளும் கதைதான், வேறு துணி போட்டுக் கொண்டு வந்திருக்கிறது. பேசாமல் கடவுள் கான்செப்டை டெவலப் செய்திருந்தால் அருமையான SF உருவாகி இருக்கும்.

இது நல்ல SF இல்லை. டைம் பாஸ்…

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. விலை 75 ரூபாய்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்