சுஜாதாவின் மூன்று முகங்களும் தமிழ் இலக்கிய வரலாற்றில் அவரது இடமும்

சமீபத்தில் ஜெயமோகன் சுஜாதா

இலக்கியவாதி என்பதைக் காட்டிலும் வணிக எழுத்தாளர்தான். உங்கள் தேவை சுவாரசியம் என்பதல்லாமல் ஆன்மபரிசோதனையோ, அறிவார்ந்த தேடலோ, உணர்வுகளின் அனுபவமோ என்றால் உங்களுக்கு சுஜாதா பெரிதாகப் படமாட்டார். சுஜாதாவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பதின்பருவத்தில் அவரை வாசித்து அதன் பின் அந்த வாசகத் தரத்திலேயே நின்றுவிட்டவர்கள்

என்று எழுதி இருந்தார். அது தமிழ் இலக்கியத்தில் சுஜாதாவின் இடம் என்ன என்று யோசிக்க வைத்தது. கொஞ்ச நாளாக நிறைய சுஜாதா பதிவுகளாக வரவும் இதுதான் காரணம் – கையில் கிடைத்த புத்தகத்தை எல்லாம் படித்தேன்.

பதிவு ரொம்ப நீளமாகிவிட்டது. அதனால் சுருக்கத்தைத் தருகிறேன்.

சுஜாதாவுக்கு மூன்று முகங்கள் இருக்கின்றன – தாக்கம், முன்னோடி முயற்சிகள், தரம் வாய்ந்த படைப்புகள். அவரது தாக்கம் – குறிப்பாக கம்ப்யூட்டர் பற்றிய அபுனைவுகளின் (non -fiction) தாக்கம் – எண்பதுகளின் இளைஞர் கூட்டத்தின் மீது நிறைய உண்டு. அவர் மூலம்தான் நிறைய பேருக்கு இலக்கியம், ரசனை பற்றி அறிமுகம் கிடைத்தது. அவரது முன்னோடி முயற்சிகள் – குறிப்பாக SF (Science Fiction) – அறிவியல் புனைவுகள் முக்கியமானவை. சில சமயம் சாகசக் கதைகளின் limitations-ஐத் அவர் அநாயாசமாகத் தாண்டி இலக்கியம் படைத்திருக்கிறார். (நிர்வாண நகரம்) ஆனால் அவரது தரம் வாய்ந்த படைப்புகள் என்பது ஜெயமோகன் சொல்வது போல சில பல சிறுகதைகளும் (குறிப்பாக ஸ்ரீரங்கத்துக் கதைகள்) சில நாடகங்களும் மட்டுமே. ஜெயமோகன் அவரது மூன்றாவது முகத்தை மட்டும் கருத்தில் கொண்டு மேற்கண்ட வரிகளை எழுதி இருக்கிறார். மற்ற முகங்களை கணக்கில் எடுக்காததால் சுஜாதாவை குறைத்து மதிப்பிடுகிறார். ஆனால் எல்லா முகங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் தமிழ் இலக்கிய வரலாற்றில் சுஜாதா இரண்டாம், மூன்றாம் படியில்தான் இருக்கிறார். சுருக்கமாகச் சொன்னால் சுஜாதா “வணிக/வாரப்பத்திரிகை எழுத்தாளர்களில்” முதன்மையானவர், அதிமுக்கியமானவர். அவணிக எழுத்தாளர், இலக்கியம் படைத்தவர் வரிசையிலும் அவருக்கு இடம் உண்டு.

நான் வளர்ந்து வந்த காலத்தில் சுஜாதா ஒரு icon. வாரப் பத்திரிகை எழுத்தின் சூப்பர்ஸ்டார். நிர்வாண நகரம், 24 ரூபாய் தீவு, நைலான் கயிறு போன்ற புத்தகங்கள் சுவாரசிய எழுத்து, இலக்கிய எழுத்து இரண்டுக்கும் நடுவில் எங்கேயோ இருக்கின்றன. Minor classics என்று கருதக்கூடிய பல புனைவுகளை அவர் எழுதி இருக்கிறார். சுவாரசியமான எழுத்தின் இலக்கிய சாத்தியங்களை ஒரு இரண்டு தலைமுறையினருக்காவது – அறுபதுகளின் இறுதியிலிருந்து எண்பதுகளின் இறுதி வரை – அவர் காட்டினார். மணியனையும் லக்ஷ்மியையும் சாண்டில்யனையும் படித்து வளர்ந்தவர்களுக்கு அவர் எழுத்தில் ஒரு புத்துணர்வு தெரிந்தது. புதுமைப்பித்தனும் அசோகமித்ரனும் கி.ரா.வும் சுந்தர ராமசாமியும் ஒரு சின்ன வாசகர் வட்டத்தைத் தாண்டி வராத காலம் அது என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆனால் அவர் வெறும் ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ கேஸ்தானா இல்லை அதற்கு மேலும் ஏதாவது உண்டா? என்னைப் பொறுத்த வரையில் அவரது இடத்தை நிர்ணயிக்க நாம் மூன்று வேறு வேறு முகங்களைப் பார்க்க வேண்டும்.

  1. தாக்கம்
  2. முன்னோடி முயற்சிகள்
  3. இலக்கியம் என்ற உரைகல்லில் தேறும் படைப்புகள்

தாக்கம்:
தமிழ் கூறும் நல்லுலகில் அவரது தாக்கம் மிகப் பெரியது. கல்கிக்குப் பிறகு இத்தனை தாக்கம் உடைய, இத்தனை நாள் தாக்குப்பிடித்த, எழுத்தாளர் மற்றும் கலாசார சக்தி இவர்தான். அதற்கு அவரது நடையும், எழுத்தில் தெரிந்த இளமையும், புதுமையும் புத்துணர்ச்சியும் மட்டும் காரணமில்லை; விஞ்ஞானம், மின்னணுவியல் (electronics), கணினிகள் சமூகத்தின் பெரிய மாற்றமாக உருவெடுத்தபோது அவற்றைப் பற்றி விளக்கக் கூடிய திறம் வாய்ந்த ஒரே தமிழ் எழுத்தாளர் அவர்தான். பிரபலமான எழுத்தாளர் எழுதுவதை எல்லாரும் படித்தார்கள். ஓரளவு புரிந்தது. எண்பதுகளின் பிற்பாதியிலிருந்து தொண்ணூறுகள் வரை தமிழ்நாட்டின் இளைஞர் கூட்டம்- குறிப்பாக கிராமங்களிலிருந்து வந்த இளைஞர் கூட்டம் – அவர் மூலம்தான் கணினி, மின்னணுவியலை அறிமுகப்படுத்திக் கொண்டது. அவர்தான் அன்றைய விஞ்ஞான விக்கிபீடியா. அபுனைவுகள் (non-fiction) மூலம் மட்டுமல்ல, என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ போன்ற கவர்ச்சிகரமான பாக்கேஜிங்கில் அவர்களுக்கு விஞ்ஞானப் புனைவுகள், விஞ்ஞானம் அறிமுகம் ஆனது. என் நண்பனின் வீடு கட்டும் கம்பெனி பேர் ஜீனோ பில்டர்ஸ்! ஏண்டா இப்படி சம்பந்தம் இல்லாமல் பேர் வைத்தாய் என்று ஒரு முறை கேட்டேன், அது ஒரு cool name, எல்லாருக்கும் சட்டென்று நினைவிருக்கும் என்று சொன்னான்.

கணேஷ்-வசந்த் கதைகளின் கவர்ச்சி, குறிப்பாக பெண்களைக் கவர்ந்த வசந்த், மத்யமர் போன்ற இலக்கியம் படைக்கும் முயற்சிகள், கரையெல்லாம் செண்பகப்பூ போன்ற நாவல்களில் நாட்டுப் பாடல் அறிமுகம் என்று பல விஷயங்கள் அவர் மேல் உள்ள ஈர்ப்பை அதிகரித்தன. அவருக்கு நல்ல புனைவுகளோடு, கவிதைகளோடு நல்ல பரிச்சயம் இருந்தது. அவற்றை கணையாழி மாதிரி பத்திரிகைகளில், தனிப்பட்ட முறையில் அறிமுகப்படுத்தி வைத்தார். வணிக எழுத்தின் வாடையே இல்லாத சுப்ரபாரதிமணியன் போன்றவர்கள் கூட அவரிடம் முன்னுரை வாங்கிப் போட்டார்கள். அவரது ரசனையின் மீது நம்பிக்கை இல்லாதவர் யாருமில்லை என்று நினைக்கிறேன்.

கவிதைகள் பற்றி பேசுவது, கணையாழி போன்ற இலக்கியப் பத்திரிகையில் எழுதுவது, பரந்த படிப்பு, விஞ்ஞானி என்ற முத்திரை, பல விஷயங்களை போகிறபோக்கில் அறிமுகப்படுத்துவது எல்லாம் அவரது தாக்கத்தை அதிகரித்திருக்கின்றன.

ஆனால் ஒரு விஷயம். இன்றைய பதின்ம வயதினர் அவரை விரும்பிப் படிப்பதில்லை. நிஜ விக்கிபீடியாவே இருக்கும்போது யாரும் அவரை அறிவியல் கலைக் களஞ்சியமாகப் பார்ப்பதில்லை. அவரது எழுத்தின் புத்துணர்ச்சி பழகிவிட்டது. அவர் இனி வரும் தலைமுறையினரிடம் இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை. சுருக்கமாகச் சொன்னால் இந்த முகம் ஒரு லோகல் முகம்; சிறிது காலமே நிற்கக் கூடிய முகம். அந்த குறுகிய காலத்தில், அந்த சின்ன வட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதால்தான் இந்த முகத்தைப் பற்றி யோசிக்க வேண்டி இருக்கிறது.

முன்னோடி முயற்சிகள்:
தமிழில் சில genre-கள் அவரோடுதான் ஆரம்பிக்கின்றன. அறிவியல் புனைவுகளை முதன்முதலாக எழுதியது அவர்தான். அவை சிறந்த அறிவியல் புனைவுகள் இல்லை என்பது வேறு விஷயம். மீண்டும் ஜீனோ மட்டும்தான் கொஞ்சம் பரவாயில்லை என்று நினைக்கிறேன். இப்போது படித்தால் என்ன நினைப்பேனோ தெரியாது. ஆனால் பிரதாப முதலியார் சரித்திரத்தை இன்று படித்தால் போரடிக்கிறது என்பதற்காக வேதநாயகம் பிள்ளையின் சாதனையை குறைத்து மதிப்பிட முடியுமா? அப்படித்தான் அவரது SF முயற்சிகளும்.

இன்றும் படிக்கக் கூடிய துப்பறியும் புனைவுகளை எழுதி இருக்கிறார். ஒரு விபத்தின் அனாடமி, நைலான் கயிறு போன்ற நாவல்களில் துப்பறியும் நாவல்களின் நுட்பங்களை நன்றாக கொண்டு வந்திருக்கிறார். நிர்வாண நகரம் போன்ற படைப்புகளில் அவர் துப்பறியும் புனைவுகளின் limitations-ஐ சுலபமாகத் தாண்டி இலக்கியம் படைத்திருக்கிறார்.

தமிழின் சிறந்த நாடக ஆசிரியர் வரிசையில் வைக்கப்பட வேண்டியவர். தமிழ் நாடக எழுத்தில் யாருமே ஷேக்ஸ்பியரோ பெர்னார்ட் ஷாவோ இப்சனோ ஆர்தர் மில்லரோ இல்லை என்பது வேறு விஷயம். ஆனால் அவரது சில நாடகங்கள் – ஊஞ்சல், சரளா போன்றவை – டென்னசி வில்லியம்சின் நல்ல படைப்புகளோடு ஒப்பிடக் கூடியவை.

பெ.நா. அப்புசாமிக்குப் பிறகு மீண்டும் மீண்டும் விஞ்ஞானம் பற்றி விளக்கியவரும் அவர்தான். ஆனால் இன்று அவற்றைப் படிக்க ஆள் இல்லை.

நல்ல இலக்கியம், குறிப்பாக கவிதைகளை மீண்டும் மீண்டும் அறிமுகப்படுத்தி இருக்கிறார். இதை வேறு பலரும் செய்திருக்கிறார்கள், ஆனால் யாருக்கும் இவரது பிராபல்யம் இருந்ததில்லை. அதனால் இவர் சொன்னதற்கு நல்ல தாக்கம் இருந்தது.

அவர் முனைந்திருந்தால் உலகத்தரம் வாய்ந்த SF, துப்பறியும் கதைகளை எழுதி இருக்கலாம். அவர் எதிலும் முழுமூச்சாக ஈடுபடவில்லை என்பதுதான் உண்மை. சாகசக் கதைகள் – குறிப்பாக கணேஷ்-வசந்த் கதைகள் தமிழின் மிகச் சிறந்த சாகசக் கதைகள். ஆனால் ஷெர்லாக் ஹோம்ஸை உரைகல்லாக வைத்துப் பார்த்தால் இவை மிகவும் பின்தங்கி இருக்கின்றன.

எத்தனை குறைகள் இருந்தாலும், முன்னோடி முயற்சிகள் முக்கியமானவை. ஆனால் அவற்றின் காலம் கடந்த பிறகு சராசரி வாசகன் அவற்றை ஒதுக்கத்தான் செய்வான். அவற்றின் முக்கியத்துவத்தை ஒரு தேர்ந்த விமர்சகருக்கு/வாசகருக்கு/ஆராய்ச்சியாளருக்குத்தான் விளங்கிக் கொள்ள முடியும். சுஜாதாவின் SF முயற்சிகளை நான் காலம் கடந்துவிட்ட முன்னோடி முயற்சிகள் என்றுதான் கணிக்கிறேன். இந்தக் கணிப்பு சுஜாதாவின் “விஞ்ஞானச் சிறுகதைகள்” தொகுப்பை வைத்து ஏற்பட்டது. என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ பல வருஷங்களுக்கு முன் படித்தது. இப்போது மீண்டும் படித்தால் என் எண்ணம் மாறலாம்.

சாகசக் கதைகளின் காலம் இன்னும் முடியவில்லை, ஆனால் அந்தக் கதைகளின் limitations-ஐ அவர் தாண்டி இருக்கும் கதைகளே – நைலான் கயிறு, நிர்வாண நகரம் இத்யாதி – இன்னும் பல ஆண்டுகள் நிற்கும்.

நினைவில் நிற்கும் படைப்புகள்:
முழு வெற்றி பெற்ற படைப்புகள் என்பவை குறைவே. சில பல சிறுகதைகள், சில நாடகங்கள் ஆகியவற்றையே அவரது சாதனையாகக் கொள்ள வேண்டும். ஸ்ரீரங்கத்து சிறுகதைகள் – அதுவும் அவை தொகுக்கப்பட்டிருக்கும்போது – நல்ல இலக்கியம். ஒரு தனி சிறுகதையின் தாக்கத்தை விட அந்தத் தொகுப்பின் தாக்கம் அதிகம். அன்றைய அய்யங்கார்களின் ஸ்ரீரங்கத்தை – இன்றைக்கு அது இல்லை – காலாகாலத்துக்கும் நினைவு கொள்ள அவரது சிறுகதைகள்தான் காரணம். பிரச்சினை என்னவென்றால் அவரது output அதிகம். அதில் நல்ல சிறுகதைகள் என்று தேடுவது கொஞ்சம் கஷ்டம். தேறும் விகிதம் (எனக்கு) குறைவுதான்.

ஒரு எழுத்தாளரின் தரத்தை நிர்ணயிக்க சுலபமான வழி அவர் எழுதியதில் எதை எல்லாம் மொழிபெயர்த்து உலக அளவில் கொண்டு போக வேண்டும் என்று யோசிப்பதுதான். மூன்றாவது முகம், நினைவில் நிற்கும் படைப்புகள், இலக்கியம் என்பது ஏறக்குறைய அதுதான். அப்படி சுஜாதா எழுத்துகளில் கொண்டு போக வேண்டியவை என்றால் ஸ்ரீரங்கத்துக் கதைகள் (அவை அழிந்துபோன ஒரு உலகை தத்ரூபமாகக் காட்டுகின்றன), மேலும் சில சிறுகதைகள், இரண்டு மூன்று நாடகங்கள். உலக அளவில் வைத்துப் பார்த்தால் அவர் footnote என்ற அளவுக்குக் கூட வருவாரா என்பது சந்தேகம்தான்.

ஜெயமோகன் அவரது மூன்றாவது முகத்தை வைத்து மட்டுமே அவரை மதிப்பிடுகிறார். பிரதாப முதலியார்/கமலாம்பாள்/பத்மாவதி சரித்திரத்தின் முக்கியத்துவத்தை உணரும், எல்லாருக்கும் எடுத்துச் சொல்லும் ஜெயமோகன் சுஜாதாவின் முன்னோடி முயற்சிகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சுஜாதாவின் அபுனைவுகளை (non-fiction) ஜெயமோகன் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. சுஜாதாவின் தாக்கத்தை ஜெயமோகன் கண்டுகொள்வதே இல்லை. இலக்கியம் என்றால் எப்போதுமே ஜெயமோகன் படு கறாராக எடை போடுவார். இப்படி மூன்றாவது முகத்தை வைத்து மட்டுமே பார்ப்பதால் ஜெயமோகன் சுஜாதாவை கொஞ்சம் underestimate செய்கிறார். மூன்றாவது முகத்தை மட்டும் வைத்துப் பார்த்தால் அவர் சொல்வது எனக்கும் ஏறக்குறைய சரியே. ஆனால் அவரது முன்னோடி முயற்சிகள், SF, சாகசக் கதைகளின் format-இல் அவற்றின் limitations-ஐ தாண்டுவது, அபுனைவுகளின் தாக்கம் ஆகியவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவையே என்பது என் உறுதியான கருத்து.

ஆனால் மூன்று முகங்களையும் வைத்துப் பார்த்தாலும் நான் சுஜாதாவை தமிழ் எழுத்தாளர்களின் இரண்டாம் வரிசையில்தான் வைப்பேன். ஆனால் முதல் வரிசையில் மிஞ்சி மிஞ்சிப் போனால் என்ன பத்து இருபது பேர் இருப்பார்களா? என் கண்ணில் அவர் சாதனையாளரே.

பின்குறிப்பு #1: சுஜாதா பற்றி எனக்கு நிறைய நாஸ்டால்ஜியா உண்டு. சிறு வயதிலேயே படிக்கும் பழக்கம் வந்துவிட்டாலும், சுஜாதாவுக்கு முன்பு சில – வெகு சில – தரம் வாய்ந்த புத்தகங்களைப் படித்திருந்தாலும், இலக்கியம்+சுவாரசியம் என்பதற்கான அறிமுகம் சுஜாதாவிடமிருந்துதான் கிடைத்தது. அவருடைய எல்லா புத்தகங்களையும் படிக்க வேண்டும் என்று ஆசை. Bibliography ஏதாவது இருக்கிறதா? நண்பர் ரமணன் கொடுத்த bibliography சுட்டி. பேச்சி தந்த சுட்டி இங்கே.சுஜாதா பக்தர்கள் யாருக்காவது இதை உருவாக்கும் திட்டம் இருக்கிறதா? உப்பிலி ஸ்ரீனிவாஸ்? (பால்ஹனுமான்)

பின்குறிப்பு #2: எண்பதுகளுக்குப் பிறகு சுஜாதா எழுதிய புனைவுகளில் – உள்ளம் துறந்தவன் மாதிரி -கொஞ்சம் சொதப்பி இருப்பார், ஆனால் அதற்கு முன் அப்படி இல்லை என்று எனக்கு ஒரு நினைப்பு இருந்தது. அவர் ஸ்டாராக இருந்த காலத்திலும் – எதையும் ஒரு முறை இத்யாதி – சில சமயம் அப்படித்தான் என்று தெரிந்தது வியப்புதான். வாரப் பத்திரிகைகளில் தொடர்கதையாக விட்டுவிட்டு படிக்கும்போது இது தெரிவதில்லை, ஆனால் மொத்தமாகப் படிக்கும்போது தெரிகிறது.

பின்குறிப்பு #3: ஜெயமோகன் சுஜாதாவை நிராகரிக்கிறார் என்று ஒரு கருத்து பரவலாக நிலவுகிறது. மேலோட்டமாகப் படிக்காதீர்கள். ஜெயமோகன் சுஜாதாவைப் புகழ்ந்து சொன்னால் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் அவர் குறை கண்டுபிடித்தால் அது பூதாகாரமாகத் தெரிகிறது!

ஜெயமோகனின் விமர்சனம் இதுதான் – சுஜாதாவின் புனைவுகளில் முக்கால்வாசி இலக்கியம் என்று சொல்வதற்கில்லை. அந்த விகிதம் என்ன, பத்து சதவிகிதம் புனைவுகள்தான் இலக்கியமா, இருபதா, ஐம்பதா, எண்பதா என்பதில் நீங்களும் நானும் ஜெயமோகனும் வேறுபடலாம். ஆனால் சுஜாதா சொதப்பியும் இருக்கிறார், இலக்கியம் என்று சொல்ல முடியாத புனைவுகளும் எழுதி இருக்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவர் இலக்கியம் படைத்திருக்கிறார் என்பதை ஜெயமோகனும் பல முறை அழுத்தி சொல்லி இருக்கிறார். சந்தேகம் இருந்தால் அப்பா அன்புள்ள அப்பா என்ற பதிவுக்கு அவர் எழுதிய கமெண்டைப் பாருங்கள்.

ஒரு முந்தையப் பதிவிலிருந்து – ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சிறந்த சிறுகதைகள் பற்றி – சில வார்த்தைகளை கீழே கொடுத்திருக்கிறேன்.

புதுமைப்பித்தனின் 12 சிறுகதைகள். அசோகமித்ரனுக்கும் 12. தி.ஜா., அழகிரிசாமி, கி. ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கோணங்கிக்கு தலா 8. சுஜாதாவுக்கு 7. பிச்சமூர்த்தி, லா.ச.ரா., ஆ. மாதவன், முத்துலிங்கம், வண்ணதாசன், கந்தர்வன், யுவன் சந்திரசேகர், ஜெயமோகன் ஆகியோருக்கு தலா 6. இந்த 17 பேருக்கும் ஏறக்குறைய பாதி கதைகள்.

அதாவது நல்ல சிறுகதைகளை எழுதியவர்கள் என்று பார்த்தால் (என் கண்ணில்) ஜீனியஸ்களான புதுமைப்பித்தன், அசோகமித்திரன் ஆகியோருக்கு அடுத்த வரிசையில் சுஜாதா – தி.ஜா., அழகிரிசாமி, கி.ரா., சுந்தரராமசாமி, ஜெயகாந்தன், லா.ச.ரா., ஜெயமோகன் இத்யாதியினருடன் இருக்கிறார்!

அனுபந்தம் – ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சுஜாதா சிறுகதைகள்

  1. நகரம்
  2. குதிரை
  3. மாஞ்சு
  4. ஓர் உத்தம தினம்
  5. நிபந்தனை
  6. விலை
  7. எல்டொரோடா

நகரம் சிறுகதைக்கு மட்டும் அழியாச்சுடர்களில் லிங்க் கிடைத்தது. மிச்ச கதைகளுக்கும் சுஜாதா பக்தர்கள் யாராவது லிங்க் கொடுங்கப்பா/ம்மா!

நண்பர் ரமணன் கொடுத்த bibliography சுட்டி. பேச்சி தந்த சுட்டி இங்கே.

 

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்