கணையாழி கஸ்தூரிரங்கன் மறைவு

கஸ்தூரிரங்கன் மறைந்தார் என்பது வருத்தமாக இருந்தது. இத்தனைக்கும் எனக்கும் கணையாழிக்கும் ஸ்நானப்ராப்தி கூட கிடையாது.

நான் கிராமங்களில் வளர்ந்தவன். வீட்டில் குமுதம் விகடன் புழங்கும். கல்கி, கலைமகள், துக்ளக் பற்றி பிரக்ஞை இருந்தது. உள்ளூர் நூலகத்தில் மஞ்சரி, கலைக்கதிர் (தமிழில் எனக்குத் தெரிந்து வந்த ஒரே ஒரு விஞ்ஞானப் பத்திரிகை) , செங்கோல் (இதுதான் ம.பொ.சி. நடத்திய பத்திரிகை என்று நினைக்கிறேன்), திட்டம் என்றெல்லாம் பத்திரிகைகளைப் பார்த்திருக்கிறேன். என் உறவினர் ஒருவர் தீபம் பத்திரிகையை அச்சடித்தாரோ என்னவோ, அதனால் அந்தப் பத்திரிகையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். கணையாழி? அதைப் பற்றி கேள்விப்படும்போது எனக்கு இருபது வயது இருக்கலாம். அப்போது பத்திரிகையே நின்று போய்விட்டது என்று நினைக்கிறேன்.

ஆனால் கணையாழி ஒரு பெரும் இயக்கம். விடுதலைக்கு முற்பட்ட ஒரு தலைமுறைக்கு மணிக்கொடி என்றால் இரண்டு மூன்று தலைமுறைக்கு கணையாழிதான். சரஸ்வதி, எழுத்து, தாமரை என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இந்த இரண்டு பத்திரிகைகளின் தாக்கம் வேறு எதற்கும் இருந்ததாகத் தெரியவில்லை. இவை இரண்டும் இல்லாவிட்டால் வணிக எழுத்து நல்ல இலக்கியத்தை விழுங்கி இருக்கும்.

என்னிடம் கணையாழி தொகுப்புகள் என்று இரண்டு வால்யூம்கள் இருக்கின்றன. அவற்றைப் புரட்டிப் பார்த்தபோது முன்னுரையில் கஸ்தூரிரங்கன் எந்தக் காலத்திலும் கணையாழியின் விற்பனை மூவாயிரத்தைத் தாண்டியதில்லை என்று குறிப்பிடுகிறார். ஆயிரம்தான் சராசரி விற்பனை போலத் தெரிகிறது. மிஞ்சிப் மிஞ்சிப் போனால் ஒரு பத்தாயிரம் பேர் ரெகுலராக படித்திருப்பார்களா? இத்தனை குறைவான விற்பனை உள்ள ஒரு பத்திரிகை எப்படி இவ்வளவு பெரிய தாக்கத்தை உருவாக்கியது? என் கண்ணில் அதுதான் கஸ்தூரிரங்கனின் சாதனை.

மணிக்கொடி, வாசகர் வட்டம், கணையாழி, சுபமங்களா போன்றவற்றை நான் நல்ல எழுத்துகளை விரும்பும் லட்சியவாதிகளின் சாதனைகள் என்று கருதுகிறேன். கஸ்தூரிரங்கனுக்கு என் மனமார்ந்த நன்றி!

5 thoughts on “கணையாழி கஸ்தூரிரங்கன் மறைவு

  1. 1969 -கலீல் சுதேசமித்திரன் ,கணையாழி இதழ்களில் வரும் டெல்லி அரசியல் பற்றி கி.கஸ்துரி ரங்கன் கட்டுரைகள் அற்புதமாக இருக்கும்.காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் பிளவுபட்டிருந்த நேரம்.சம்பவங்களுக்கு குறைவே இல்லை.காமராஜ் தன்னுடைய எழுத்தின் அபிமானி என்பதில் கஸ்துரி ரங்கனுக்கு மிகவும் பெருமை.

    Like

  2. ஆர்வி

    ஸ்நாநனப்பிராப்தி போன்ற தேய்வழக்குகளை தவிர்க்கலாமே. [ஸ்நானப்பிராப்தி என்றால் செத்தால் குளிக்கவேண்டிய அளவுக்கு நெருக்கம். இங்கே தீட்டுப்பாடு என்று சொல்வார்கள்]

    சிற்றிதழ்கள் உலகமெங்கும் உண்டு. அமெரிக்காவிலேயேகூட என்கவுண்டர், எஸ்குயர் போன்ற சிற்றிதழ்கள்தான் நவீன இலக்கியத்தை உருவாக்கின.

    பெருவாரியான எண்ணிக்கை உள்ள ஆக்கங்கள் ஆழமான பாதிப்பை உருவாக்கமுடியாது. அவை புதிய விஷயங்களை போட முடியாது. சராசரியை பேணியாகவேண்டும். சிற்றிதழ் தன் சிறிய வட்டத்திற்குள் தரத்தை பேணலாம். புதிய விஷயங்களை அறிமுகம் செய்யலாம்

    தமிழில் சாதனை புரிந்த சிற்றிதழ்கள் என்றால் மணிக்கொடி [சிறுகதை] எழுத்து [புதுக்கவிதை] சரஸ்வதி [முற்போக்கு இலக்கியம்] தான். முறையே வ.ரா, சி.சு.செல்லப்பா, வ.ஜெயபாஸ்கரன் ஆகியோர் அதற்கு ஆசிரியராக இருந்து நடத்தினார்கள்

    கணையாழி, தீபம் இதழ்களின் சாதனை சிற்றிதழ் இயக்கத்தை அறுபடாமல் கொண்டு சென்றது. தொடர்ந்து இலக்கியத்திற்கு இடத்தை உருவாக்கி வைத்திருந்தது. எழுபதுகளில் மிக எதிர்மறையான சூழல். வாசிப்பவர்கள் 2000 பேருக்குள். அப்போது இச்சிற்றிதழ்கள் இல்லையேல் இங்கே இலக்கியத்தின் தொடர்ச்சி அழிந்திருக்கும்

    கஸ்தூரிரங்கன் அதற்காக நம் அனைவரின் நன்றிக்கும் வணக்கத்திற்கும் உரியவர்

    Like

  3. அன்புள்ள ஜெயமோகன்,

    // கஸ்தூரிரங்கன் அதற்காக நம் அனைவரின் நன்றிக்கும் வணக்கத்திற்கும் உரியவர் // உண்மை, முழுவதும் உண்மை. சிறந்த எழுத்தாளர்கள் ஒரு பக்கம்; அமைப்பு, பத்திரிகை, புத்தக வெளியீடு, விமர்சனம் என்று இன்னொரு பக்கத்தில் வ.ரா., பி.எஸ். ராமையா (அவரது எழுத்துக்களை நான் அவ்வளவாக ரசிக்கவில்லை என்றாலும் கூட), சி.சு. செல்லப்பா, லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி, கோமல், நீங்கள், க.நா.சு., வெ.சா. என்று இன்னொரு பக்கத்து லட்சியவாதிகள், சாதனையாளர்கள் நம் நன்றிக்கும் வணக்கத்திற்கும் உரியவர்கள்…

    // ஸ்நாநனப்பிராப்தி போன்ற தேய்வழக்குகளை தவிர்க்கலாமே. [ஸ்நானப்பிராப்தி என்றால் செத்தால் குளிக்கவேண்டிய அளவுக்கு நெருக்கம். இங்கே தீட்டுப்பாடு என்று சொல்வார்கள்] // 🙂

    // சிற்றிதழ்கள் உலகமெங்கும் உண்டு. அமெரிக்காவிலேயேகூட என்கவுண்டர், எஸ்குயர் போன்ற சிற்றிதழ்கள்தான் நவீன இலக்கியத்தை உருவாக்கின. பெருவாரியான எண்ணிக்கை உள்ள ஆக்கங்கள் ஆழமான பாதிப்பை உருவாக்கமுடியாது. அவை புதிய விஷயங்களை போட முடியாது. சராசரியை பேணியாகவேண்டும். சிற்றிதழ் தன் சிறிய வட்டத்திற்குள் தரத்தை பேணலாம். புதிய விஷயங்களை அறிமுகம் செய்யலாம். // முன்பும் சொல்லி இருக்கிறீர்கள். இருந்தாலும் பெரிய இதழ்களும் நாலைந்து பக்கங்களையாவது இதற்காக ஒதுக்கலாம் என்ற ஆதங்கம் போகவில்லை. விகடனில் முத்திரைக் கதைகள் போட்ட மாதிரியாவது…

    // தமிழில் சாதனை புரிந்த சிற்றிதழ்கள் என்றால் மணிக்கொடி [சிறுகதை] எழுத்து [புதுக்கவிதை] சரஸ்வதி [முற்போக்கு இலக்கியம்] தான். முறையே வ.ரா, சி.சு.செல்லப்பா, வ.ஜெயபாஸ்கரன் ஆகியோர் அதற்கு ஆசிரியராக இருந்து நடத்தினார்கள். கணையாழி, தீபம் இதழ்களின் சாதனை சிற்றிதழ் இயக்கத்தை அறுபடாமல் கொண்டு சென்றது. தொடர்ந்து இலக்கியத்திற்கு இடத்தை உருவாக்கி வைத்திருந்தது. எழுபதுகளில் மிக எதிர்மறையான சூழல். வாசிப்பவர்கள் 2000 பேருக்குள். அப்போது இச்சிற்றிதழ்கள் இல்லையேல் இங்கே இலக்கியத்தின் தொடர்ச்சி அழிந்திருக்கும். // சரஸ்வதி களஞ்சியம் என்று ஒரு தொகுப்பு வைத்திருக்கிறேன், படித்துப் பார்க்க வேண்டும். தீபம்? அவ்வளவு முக்கியமான பத்திரிகையா? சின்ன வயதில் புரட்டிப் பார்த்தது, அவ்வளவாக கவரவில்லை. ஒரு வேளை நா.பா.வின் தீபத்துக்கும், விக்ரமனின் தீபத்துக்கும் பெரிய வேறுபாடு உண்டோ?

    அன்புள்ள விஜயன்,

    // 1969 -கலீல் சுதேசமித்திரன் ,கணையாழி இதழ்களில் வரும் டெல்லி அரசியல் பற்றி கி.கஸ்துரி ரங்கன் கட்டுரைகள் அற்புதமாக இருக்கும்.காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் பிளவுபட்டிருந்த நேரம்.சம்பவங்களுக்கு குறைவே இல்லை.காமராஜ் தன்னுடைய எழுத்தின் அபிமானி என்பதில் கஸ்துரி ரங்கனுக்கு மிகவும் பெருமை // தொகுப்பில் சில கட்டுரைகள் இருக்கின்றன, சுவாரசியமானவை.

    மறுமொழி எழுதியதற்கு நன்றி ரத்னவேல் நடராஜன்!

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.