சுஜாதாவின் “சில்வியா”

சிறுகதைத் தொகுப்பு.

சுஜாதா சில்வியா ப்ளாத் பற்றி படித்திருக்கிறார், அந்தப் பாதிப்பில் தற்கொலை செய்துகொள்ளும் இளம் பெண்ணைப் பற்றி ஒரு கதை எழுதி இருக்கிறார். சுவாரசியம் இல்லாத கதை. கணேஷ்-வசந்த் இல்லாவிட்டால் நான் இதைப் பற்றி எழுதி இருக்கக் கூட மாட்டேன்.

இந்தக் கதையில் எனக்கு நினைவிருக்கப் போவது நிரந்தர இளைஞனான வசந்த்தின் தலைமுறைக்கு அடுத்து ஒரு தலைமுறை வந்துவிட்டது என்பதுதான். வசந்த்தே தான் இன்றைய இளைஞன் இல்லை என்பதை உணர்கிறான்.

அயோத்தியா மண்டபம் காலிகளால் தாக்கப்படும் ஒரு பிராமண தாத்தாவைப் பற்றி. உரையாடல், பாத்திரப் படைப்பு எல்லாம் நன்றாக வந்திருக்கிறது, ஆனால் கதையின் கரு மிகைப்படுத்தப்பட்டது. மிகை என்று சொல்வது சுலபம், ஆனால் தனி மனிதனின் வலி புறக்கணிக்கக் கூடியதல்ல என்பது உண்மைதான், இருந்தாலும் எனக்கு மிகை என்றுதான் தோன்றுகிறது.

ஏழையின் சிரிப்பு ஒரு டிபிகல் சுஜாதா சிறுகதை. நடை, நக்கல், உரையாடல் எல்லாம் இருக்கிறது, ஆனால் யூகிக்கக் கூடிய முடிச்சு. துர்காவும் அப்படித்தான்.

ஜோதியும் ரமணியும் ஹாஸ்டல் வாழ்க்கையை நன்றாக சித்தரிக்கிறது. ஒவ்வொரு ஹாஸ்டலிலும் யாராவது ஒரு bully இருப்பான். அதன் கச்சிதமான சித்தரிப்பு. ஆனால் என்ன பாயின்ட் என்று புரியவில்லை.

மற்றவற்றில் கொல்லாமலே சிறுகதையைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை. திருப்பங்கள் வேஸ்ட், ட்விஸ்ட் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். மற்றொரு பெண் ஜன்மம் எனக்கு ரசிக்கவில்லை.

உயிர்மை வெளியீடு. விலை 70 ரூபாய்.

சுஜாதா ரசிகர்கள், கணேஷ்-வசந்த் ரசிகர்கள் படிக்கலாம்.