அமர் சித்ரகதா

சின்ன வயதில் குடும்பத்தில் புத்தகம் எல்லாம் வாங்கிப் படிக்கும் பழக்கம் இருந்ததில்லை. அதுதான் லைப்ரரி இருக்கிறதே என்ற நினைப்புதான். அனேகமாக வாங்கும் அளவுக்கு வசதியும் இருந்திருக்காது. இந்த லட்சணத்தில் காமிக்ஸ் புத்தகம் வாங்குகிறேன், காசு கொடு என்று கேட்டால் அடிதான் விழுந்திருக்கும். அதுவும் இங்கிலீஷ் காமிக்ஸ்! உனக்குப் புரியாது, இங்கிலீஷ் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் ஹிந்து எடிட்டோரியல் படி என்றுதான் அறிவுரை சொல்லி இருப்பார்கள்.

வேலைக்குப் போன பிறகு ஓரளவு புத்தகம் வாங்கினாலும் காமிக்ஸ் வாங்கத் தயக்கம். என்னடா சின்னப் பிள்ளை மாதிரி காமிக்ஸ் படிக்கறான் என்று யாராவது நினைத்துவிட்டால்? அதனால் ஆஸ்டரிக்ஸ் மட்டும் அவ்வப்போது வாங்குவேன். அமர் சித்ரகதாவுக்கெல்லாம் சான்ஸ் இல்லை. அதுவும் கொஞ்சம் வளர்ந்த பிறகு பார்த்ததாலோ என்னவோ அமர் சித்ரகதாவின் சிம்ப்ளிஸ்டிக் ஆன கதைகளும் ஓவியங்களும் என்னை அவ்வளவு தூரம் கவரவில்லை.

முதன்முதலாக அமர் சித்ரகதாவை நானும் படிக்கலாம் என்று தோன்றியது மகாபாரதத்தை காமிக்ஸ் வடிவில் படித்தபோதுதான். மிகவும் அருமையான முயற்சி. அதற்கப்புறம் இன்னும் சிலவற்றை படித்துப் பார்த்தேன். சிறு வயதில் படித்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பேன், இப்போது இவற்றை என்ஜாய் செய்யும் வயது தாண்டிவிட்டது என்று தெரிந்தது.

பிள்ளைகளுக்கு நம் வரலாறு, கலாசாரம் பற்றி சொல்லித் தர இதை விட சுலபமான வழி இல்லை. ஆனால் என் அமெரிக்கக் குழந்தைகளுக்கு அவ்வளவாக ஒட்டவில்லை. அவர்களுக்காக வாங்கியவற்றை நான்தான் படித்து கதை சொல்ல வேண்டிய நிலை.

அமர் சித்ரகதாவை உருவாக்கியவர் அனந்த் பை. 2011-இல்தான் இறந்தார். அவருக்கு ஒரு ஜே!

தொடர்புடைய சுட்டி: அமர் சித்ரகதா தளம்