சுஜாதா சிறுகதைகள்

மனிதர் எக்கச்சக்க சிறுகதைகள் எழுதி இருக்கிறார். இப்போதைக்கு ஸ்ரீரங்கத்துக் கதைகள் மற்றும் அறிவியல் சிறுகதைகளைத் தவிர்க்கிறேன். (முடிந்த மட்டும்).

அவரது பலம் ஒன்றிரண்டு கோடு போட்டு ஒரு தளத்தை தத்ரூபமாகக் கொண்டுவந்துவிடுவது. ஜன்னல் சிறுகதையில் டாக்டரிடம் தாய் “பச்சையா போறான்” என்று தன் மகனைப் பற்றீ விவரிக்கும் அந்த ஒரு வரி காத்திருக்க ஒரு அறை, டாக்டருக்கு ஒரு அறை, ஐந்து பத்து ரூபாய் ஃபீஸ் வாங்கும் டாக்டர், ஜுரம் அல்லது வயிற்றுவலி அல்லது கட்டி என்று அவரைப் பார்க்க வரும் மத்திய வர்க்கக் குடும்பங்கள் எல்லாவற்றையும் கண் முன் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறது. அவருக்கே உரிய நடை. பலவீனம்? சில முறை முடிவை நோக்கி வலிந்து தள்ளுவது போல இருக்கிறது. அவரது புகழ் பெற்ற நகரம் சிறுகதையில் அப்போது தெரியவில்லை, இப்போது அப்படித்தான் உணர்கிறேன். என்ன கொடுமை இது சரவணன் என்று அவர் வெளிப்படையாக எழுதாவிட்டாலும் அதைத்தான் சொல்ல முயற்சிக்கிறார் என்று தெரிகிறது – உதாரணமாக அரிசி. பல முறை வாசகனை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விழைவு தெரிகிறது. இது தொடர்கதைகளில்தான் அதிகம் என்றாலும் சிறுகதைகளிலும் தெரிகிறது. அவர் முயற்சியே செய்யவில்லை என்று நான் உணரும் சிறுகதைகளே எனக்கு இன்றும் அப்பீல் ஆகின்றன.

ஸ்ரீரங்கத்துக் கதைகளில் பல மாணிக்கங்கள் உண்டு. என்னுடைய பர்சனல் ஃபேவரிட் பாம்பு. நான் விவரிக்கப் போவதில்லை, படித்துக் கொள்ளுங்கள்! அவர் காப்பி அடித்த சிறுகதை ஒன்றும் ஸ்ரீரங்கத்துக் கதைகளில் உண்டு – இரண்டணா.

அவரது அறிவியல் சிறுகதைகள் அனேகமாக காலாவதி ஆகிவிட்ட முன்னோடி முயற்சிகள் மட்டுமே. அவற்றுள் திமலா மட்டும் ஒரு ரத்தினம்.


எனக்கு சில பர்சனல் ஃபேவரிட்கள் உண்டு. அதில் ஒன்று பேப்பரில் பேர். இதை விட ஜாலியான கிரிக்கெட் கதை அபூர்வம்! அப்புறம் நிஜத்தைத் தேடி. எனக்கே இதே மாதிரி ஒன்று நடந்திருக்கிறது. அதை வைத்து நானும் ஒரு கதை எழுதி இருக்கிறேன். அப்புறம் ஒரு லட்சம் புத்தகங்கள். படித்த அன்று எப்படி அறை விழுந்தது போல் உணர்ந்தேனோ இன்றும் அப்படியேதான் உணர்கிறேன். காகிதக் கொடிகள் இன்னொரு நல்ல சிறுகதை. ஹை கிளாஸ் ஸ்கூலில் கொடி கட்டும் சிறுவனுக்கு அநியாயமாக அறை விழுகிறது. அவனுடைய ரோஷம் எப்படி வெளிப்படுகிறது?


சுஜாதாவே தான் எழுதியவற்றில் தனக்குப் பிடித்த சிறுகதையாக மஹாபலி சிறுகதையை எங்கோ குறிப்பிட்டிருக்கிறார். நல்ல சிறுகதை. ஏன் என்பது மிகச் சரியான கேள்வி.

தன்னை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுகதைகளாக அவர் குறிப்பிடுபவை:

  • தனிமை கொண்டு (தனிப் புத்தகம்)
  • ஜன்னல் (கசடதபற): நல்ல சிறுகதை. குறிப்பாக டாக்டரிடம் வரும் இதர நோயாளிகளின் சித்தரிப்பு.
  • காணிக்கை (கல்கி) – ஸ்ரீரங்கத்துக் கதை – படித்துக் கொள்ளுங்கள், விவரிப்பது கஷ்டம்.
  • செல்வம் (கலைமகள்)
  • முரண் (சுதேசமித்திரன்) – பாவண்ணனின் அலசல்
  • நகரம் (தினமணிக்கதிர்)
  • எதிர்வீடு (கணையாழி) – ஸ்ரீரங்கத்துக் கதை
  • அகப்பட்டுக் கொள்ளாதவரை திருடவில்லை (குமுதம்)
  • வீடு (தினமணிக்கதிர்)
  • ஒரே ஒரு மாலை (ஆனந்த விகடன்)
  • அம்மோனியம் பாஸ்ஃபேட் (தினமணிக்கதிர்) – சுமார்தான்
  • பார்வை (தினமணிக்கதிர்)

தான் எழுதியவற்றில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதை என்று அரிசியை சுஜாதா குறிப்பிடுகிறார். திடீரென்று கோணத்தை மாற்றுவதில் அவரது எழுத்துத்திறமை – craft – வெளிப்படுகிறது, ஆனால் இதை விட நல்ல சிறுகதைகளை சுஜாதா எழுதி இருக்கிறார்.


சுஜாதாவின் ஏழு சிறுகதைகளை ஜெயமோகன் தமிழின் சிறந்த சிறுகதைப் பட்டியலில் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவற்றில் இரண்டு ஸ்ரீரங்கத்துக் கதைகள்தான். குதிரை, மாஞ்சு, எல்டோராடோ ஆகியவற்றை நானும் மிகச் சிறந்த சிறுகதைகளாகக் கருதுகிறேன்.

நகரம் சிறுகதை அனேகமாக எல்லாராலும் சுஜாதாவின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு காலத்தில் நானும் இதை விதந்தோதி இருக்கிறேன். கிராமத்து பெண்மணி நகர மருத்துவமனையில் சாதாரணமாக பேசுவது புரியாமல் படும் அவதி மிகப் பிரமாதமாக வந்திருந்தது என்று கருதினேன், இன்னமும் கருதுகிறேன். ஆனால் இந்தப் பதிவுக்காக மீண்டும் படிக்கும்போது கொஞ்சம் மிகை உணர்ச்சிக் கதையாகத் தெரிந்தது. சுஜாதா நிகழ்வின் pathos-ஐ வலிந்து அடக்க முயற்சி செய்வதாகத் தெரிகிறது. நான் தமிழின் சிறந்த சிறுகதைகள் என்று தேர்ந்தெடுத்தால் அதில் வராது.

குதிரை சிறுகதையும் புகழ் பெற்றது. என் கண்ணிலும் அற்புதமான சிறுகதைதான். வாழ்வின் அபத்தத்தை மிகப் பிரமாதமாக காட்டிவிடுகிறது.

மாஞ்சுதான் ஜெயமோகனுக்கு மிகவும் பிடித்த சிறுகதை என்று நினைக்கிறேன். நான் இந்தச் சிறுகதையில் என்னை பாச்சாவின் நிலையில்தான் வைத்துப் படித்தேன். என் மனதுக்கு மிக நெருக்கமாக உணர்ந்த உறவினர் ஒருவருக்கு நான் பொருட்டே இல்லை என்று நான் உணர்ந்த தருணம் ஒன்றுண்டு. பாச்சாவின் குமுறலைப் படிக்கும்போது அதைத்தான் நான் உணர்ந்தேன். ஆண்டாளுக்கு முதலில் மாஞ்சு; அப்புறம் ஆராவமுது. அப்போது அவள் மனதில் பாச்சாவுக்கு என்னதான் இடம்? தன் உறவும் உதவியும் இல்லாமல் மாஞ்சுவால் வாழமுடியாது என்று மாஞ்சுவோடு பிணைப்பு, பாச்சா அவனே சமாளித்துக் கொள்வான் என்று புறக்கணிப்பா? சின்ன வயதில் என் தங்கைக்கு பஜ்ஜி பிடிக்காது. அதனால் என் அம்மா பஜ்ஜி போடும்போதெல்லாம் எங்களுக்கு அதைக் கொடுத்துவிட்டு அவளுக்கு தனியாக பக்கோடா போட்டுக் கொடுப்பாள். ஆனால் எனக்கு பஜ்ஜியை விட பக்கோடாதான் பிடிக்கும், எனக்கு கிடைக்காது. அப்போதெல்லாம் எனக்கு ஆங்காரம் பொத்துக் கொண்டு வரும். அதையேதான் இந்த சிறுகதையிலும் உணர்கிறேன். இந்தச் சிறுகதையை சுஜாதாவின் சாதனைகளில் ஒன்றாகக் கருதுகிறேன்.

ஓர் உத்தம தினம் நல்ல சிறுகதைதான். நுண்விவரங்கள்தான் – சாக்கில் தூங்கும் தேவதைக் குழந்தை – இந்தச் சிறுகதையை உயர்த்துகின்றன. ஆனால் என் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் வராது. இதே கருவை வைத்து சுஜாதா இன்னொரு சிறுகதை எழுதி இருக்கிறார் – புதிதாக கல்யாணம் ஆகி மகிழ்ச்சி ஆரம்பித்திருப்பவர்கள், கணவன் காவேரியில்? நீந்தச் செல்கிறான் – கதையின் பெயர் நினைவு வரமாட்டேன் என்கிறது ஒரே ஒரு மாலை.

நிபந்தனை இந்த சிறுகதை எனக்கு ஏனோ காதரின் மான்ஸ்ஃபீல்டின் Cup of Tea சிறுகதையை நினைவுபடுத்துகிறது. சுஜாதா அப்படி நினைத்துதான் இதை எழுதினாரா, இல்லை உண்மையிலேயே கருணைக்கு சில எல்லைகள் உண்டு, மனைவியின் எல்லை “களங்கமில்லாத” ஏழைக்கு மட்டுமே உதவி செய்வது, கணவனின் எல்லை மனைவி என்று மட்டுமே நினைத்து எழுதினாரா என்று தெரியாது. மனைவிக்கு அடிமனதில் ஏதாவது பயம் இருந்ததோ?

விலையை நான் நகரம் சிறுகதையை விட ஒரு மாற்று அதிகமாக எடை போடுவேன். இரண்டிலும் தான் பழகிய உலகத்துக்கு வெளியே உள்ள உலகத்தை புரிந்து கொள்ளாமல் பெரும் துயரத்துக்கு ஆளாகும் கருதான். ஆனால் இது எனக்கு இன்னும் இயற்கையாக இருக்கிறது.

எல்டொரோடா என் மனதுக்கு மிகவும் நெருக்கமான சிறுகதை. என் அப்பாவை என்னை நினைவு கூர வைக்கும் சிறுகதை. என் வாழ்க்கையின் முதல் நாயகனான என் அப்பாவோடு நெருக்கமாக உணர்ந்த தருணங்கள், அவரை பலவீனங்கள் நிறைந்த மனிதராகவே கண்டு அவரோடு எப்போதும் முரண்டிய பதின்ம வயதுக் காலம், நாயகன் என்ற பெரும் பாரம் நீங்கி அவரை பலங்களும் பலவீனங்களும் நிறைந்த மனிதனாக புரிந்து கொண்ட காலம், அவரது பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு அவரது பலவீனங்கள் பெரிதாகத் தெரியாமல் அவரை மீண்டும் நாயகனாகவே பார்த்த காலம். அன்பான வார்த்தைக்காக, பேச்சுத் துணைக்காக ஏங்கிய, தன் பிரச்சினைகள், குடும்பம் என்று விலகிச் சென்றுவிட்டாலும் அந்தப் பிள்ளைகள் வாழ்வின் மூலமே வாழ்ந்த காலம் எல்லாவற்றையும் நினைவு கூர வைக்கிறது.


எஸ்ரா நகரம் மற்றும் ஃபில்மோத்ஸவ் இரண்டு சிறுகதைகளையும் தன் பட்டியலில் சேர்க்கிறார். ஃபில்மோத்ஸவை பதின்ம வயதில் படித்தபோது நிஜப் பெண்ணை விட்டு போர்னோ படம் பார்க்கவும் ஒருவன் போவானா என்றுதான் தோன்றியது. ஏதோ perversion-ஐ வைத்து கிளுகிளுப்பு கதை எழுத முயற்சி என்று புறம் தள்ளிவிட்டேன். வயதான பிறகுதான் அதன் உண்மை புரிந்தது. கதையில் அவரது தொழில் திறமை தெரிகிறது, ஆனால் என் சிறந்த தமிழ் சிறுகதைகள் பட்டியலில் வராது.


சுஜாதாவின் மத்யமர் தொகுதி என் கண்ணில் நல்ல, ஆனால் வெற்றி பெறாத முயற்சி. அந்தத் தொகுப்பில் பரிசு, மற்றும் சாட்சி என்ற இரண்டு சிறுகதைகளைப் பரிந்துரைக்கிறேன். முன்னது எண்பதுகளில், ஏன் இன்று கூட நடக்கக் கூடிய ஒன்றுதான். பின்னது, அன்றும் சரி, இன்றும் சரி அபூர்வமாகத்தான் இருக்க வேண்டும்.

ஓர் அரேபிய இரவு சிறுகதை மெல்லிய புன்னகையை வரவழைக்கிறது, அதிலும் நானும் இந்த மாதிரி எல்லாம் ஒரு காலத்தில் பகல் கனவு கண்டிருக்கிறேன். அரங்கேற்றம் சிறுகதையில் எனக்கு ஒரு காலத்தில் ஒன்றுமில்லை. இன்று நான் படிக்க விரும்பியவற்றை என் பெண்கள் மூலம் நிறைவேற்றிக் கொள்ள விரும்பியது அம்மா பாத்திரத்தில் தெரிகிறது. மாதர்தம்மை சிறுகதை கச்சிதமாக எழுதப்பட்டிருக்கிறது.

அனுமதி அவரது நல்ல சிறுகதைகளில் ஒன்று. காலமெல்லாம் நேர்மையாக நடந்த அரசு அலுவலர். மகனுக்காக தவறுகிறார், மகன் அதை எப்படி எதிர்கொள்கிறான்? சில வித்தியாசங்கள் சிறுகதை மாதச் சம்பளக்காரனின் பணப் பற்றாக்குறையை நன்றாக விவரிக்கிறது.

வேறு சில சிறுகதைகளைப் பற்றி தனியாக எழுதுவதற்கில்லை. ஆட்டக்காரன் – பெண்டாட்டியை பணயம் வைக்கும் நவீன யுதிஷ்டிரன், நேற்று வருவேன் – வேறு கிரகத்திலிருந்து விசிட் அடிக்கும் “பெண்”, மோதிரம் – இன்னொரு வேற்று கிரக “தாத்தா” விசிட் கதை ஆகியவை ஆட்டக்காரன் என்ற தொகுதியில் உள்ள படிக்கக் கூடிய, சுமாரான சிறுகதைகள். நயாகரா, கால்கள், இளநீர், கொல்லாமலே போன்றவை டைம்பாஸ். ஓலைப்பட்டாசு சிறுகதைத் தொகுதி பற்றி இங்கே. 55 வார்த்தை சிறுகதைகள் வெறும் gimmicks. 1973-இல் எழுதிய காரணம் என்ற சிறுகதையில் ஓரினச்சேர்க்கை பற்றி குறிப்பிடுகிறார்!

அவரது ஒரு சிறுகதை – பொறுப்பு – இங்கே படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்