நாஞ்சில் நாடன் சிறுகதைகள்

நாஞ்சில் நாடன் நான் தவறவிட்ட தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். பத்து வருஷம் முன்னால் வரை நான் பேரைக் கூட கேட்டதில்லை. அந்த காலகட்டத்தில் அவரைப் பற்றிய பில்டப் நிறைய ஆரம்பித்தது. ஜெயமோகன், நண்பர் ராஜன் மாதிரி நிறைய பேர் அவரை சிலாகித்துக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் பரிந்துரையின் மேல் படித்த இடலாக்குடி ராசா என்னை பெரிதும் கவர்ந்த ஒரு சிறுகதை. போதாதா? அவர் எழுதிய எண்பத்து சொச்சம் சிறுகதைகள் அடங்கிய ஒரு தொகுப்பை ராஜனிடமிருந்து ஆர்வத்தோடு தள்ளிக் கொண்டு வந்தேன்.

எப்போதெல்லாம் பில்டப் அதிகமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் நான் அனேகமாக ஏமாற்றம் அடைகிறேன். சிதம்பர சுப்ரமணியனின் இதயநாதம், ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாள் இரண்டையும் உதாரணமாக சொல்லலாம். என் மனதின் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாகிவிடுகின்றன என்று நினைக்கிறேன். இப்போதும் எனக்கு அப்படித்தான் ஆயிற்று. படித்த கதைகள் நன்றாகத்தான் இருந்தன, ஆனால் என் எதிர்பார்ப்புகள் இன்னும் மிக அதிகமாக இருந்திருக்க வேண்டும். ஒரு பத்து இருபது கதைகள் படித்த பிறகு என் மனநிலையை மாற்ற வேண்டும், எதிர்பார்ப்புகள் இல்லாமல் படிக்க வேண்டும் என்று நினைத்தேன். அது கொஞ்சம் கஷ்டமான காரியம். புத்தகத்தை எடுத்து மூலையில் வைத்துவிட்டேன். அப்புறம் ஒரே மூச்சாக படிக்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்தேன்.

நாஞ்சிலிடம் நான் என்ன எதிர்பார்த்தேன், ஏன் ஏமாற்றம் அடைந்தேன் என்று யோசித்துப் பார்த்தேன். நாஞ்சில் நேரடியாக கதை சொல்கிறார். அதுவே அவரது பலம் என்று புரிந்து கொள்ள எனக்கு நேரம் பிடித்தது. விட்டுவிட்டுப் படிக்கும்போது நன்றாகத்தானே எழுதி இருக்கிறார், அப்படி என்னதான் எதிர்பார்த்தேன் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. தமிழின் முதன்மைப் படைப்பாளிகளில் ஒருவர் என்றே இன்று கருதுகிறேன்.

சிறந்த சிறுகதைகள் என்று லிஸ்ட் போட்டால் நினைவு வருவன:

இடலாக்குடி ராசா வாழ்வில் களைப்பு ஏற்படும்போதெல்லாம் இதைப் படித்தால் கொஞ்சம் தெளிவு ஏற்படலாம். அந்தஸ்து, பொருளாதாரம் என்ற வகைகளில் எவ்வளவுதான் தாழ்ந்து போனாலும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் வாழ்பவர்கள் எந்த விதத்திலும் தாழ்ந்தவர்கள் இல்லை என்பதை அழகாக எழுதி இருக்கிறார்.

வனம். பஸ்ஸில் போகும் அவஸ்தைகளை விவரித்துக் கொண்டே வந்து கடைசியில் “போ மோளே பெட்டென்னு” என்று முடித்த விதம் ஒரு மாஸ்டருக்கு மட்டுமே கைவரும்.

மனகாவலப் பெருமாள் பிள்ளை பேத்தி மறு வீடும் வெஜிடபிள் பிரியாணியும் தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று. சைவப் பிள்ளைமார் பின்புலத்தில் எழுதப்படும் கதைகளில் சும்மா பிய்த்து உதறிவிடுகிறார்.

பாம்பு குறிப்பிட வேண்டிய சிறுகதை. மனிதருக்கு தமிழ்ப் பேராசிரியர்கள் மீது என்ன கோபமோ தெரியவில்லை. இந்த மாதிரி நக்கல் அவருக்கு மட்டுமே கைவந்த கலை.

சாலப்பரிந்து இன்னும் ஒரு சிறந்த சிறுகதை. இதே கருவை வண்ணநிலவனின் எஸ்தர் சிறுகதையிலும் தமயந்தியின் அனல்மின் மனங்கள் சிறுகதையிலும் கூட பிரமாதமாகக் கையாண்டிருப்பார்கள்.

இந்த ஐந்து சிறுகதைகளையுமே நாஞ்சிலின் மிகச் சிறந்த கதைகளாகக் கருதுகிறேன். இவற்றில் நான்கை ஜெயமோகன் தன் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் சேர்க்கிறார்.

ஜெயமோகன் தன் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் இந்த ஐந்து சிறுகதைகளையும் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

நாஞ்சிலுக்கே அவர் எழுதியவற்றில் பிடித்தது யாம் உண்பேம் சிறுகதைதான் என்று நினைக்கிறேன். நல்ல கதைதான், ஆனால் என் அரைகுறை ஹிந்தியால் எனக்கு ஒரு சின்ன சந்தேகம். “ஹம் காத்தேன்” என்று சொல்லி இருக்கலாம், சில வட்டாரங்களில் தன்னை பன்மையில் சொல்லிக் கொள்வார்கள். அதை நாஞ்சில் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டாரோ என்று சந்தேகம்.

எஸ்ரா இந்நாட்டு மன்னர் சிறுகதையை தன் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் வைக்கிறார். நான் இந்தக் கதையை பெரிதாக ரசிக்கவில்லை.

கிழிசல் சிறுகதையை விட்டல்ராவ் தொகுத்த இந்த நூற்றாண்டு சிறுகதைகள் என்ற தொகுப்பில் படித்தேன். ஹோட்டலில் பில் கொடுக்காமல் ஏமாற்றும் அப்பாவை பையனின் கண்ணோட்டத்தில் சித்தரிக்கும் கதை. நல்ல சிறுகதை, ஆனால் சிறந்த சிறுகதைகளில் ஒன்று என்று சொல்லமாட்டேன்.

இவற்றைத் தவிர இந்தக் கதைகளையும் குறிப்பிடலாம்.

விலாங்கு ஒரு கண்ணோட்டத்தில் இது வலியவன் எளியவரிடம் ஆட்டையைப் போடும் கதைதான். நுண்விவரங்கள்தான் இந்தக் கதையை உயர்த்துகின்றன.

துறவு மாதிரி ஒரு கதையைத்தான் நான் எழுத ஆசைப்படுகிறேன். கடைசி வரியில் கதையின் உலகத்தையே மாற்றிவிடுகிறார்.

பேச்சியம்மை என் மனதைத் தொட்ட சிறுகதைகளில் ஒன்று. என் குற்ற உணர்வை அதிகரிக்கும் சிறுகதை. ஊருக்கு போகாமல் இருக்க பணச்செலவு, விடுமுறை இல்லாமை என்று ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் அவை அம்மாவின் மகிழ்ச்சி என்ற ஒரு காரணத்துக்கு சமமாகாது என்பதை உணர வைக்கும் சிறுகதை. இதுவாவது என்னைத் திருத்துகிறதா என்று பார்ப்போம்…

எசுருக்கமாகச் சொன்னால் நாஞ்சிலின் சிறுகதைகள் தவறவிடக் கூடாதவை.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில் பக்கம்