ராஜனின் ஆவணப்பட பரிந்துரை: Wildest India

நண்பர் ராஜன் இப்போதெல்லாம் எழுதுவது குறைந்துவிட்டது. அவருடைய பழைய ஈமெயில் ஒன்றைப் பார்த்தேன், அதை பிரசுரித்திருக்கிறேன். மீண்டும் எழுதுங்கள், ராஜன்!

இந்தியா பாம்பாட்டிகளின் தேசம், பிச்சைக்காரர்களின் தேசம்,விநோதமான சாமியார்களின் தேசம் என்றே வெகுகாலமாக மேற்கத்திய உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வந்துள்ளது. சமீப காலத்தில் ஸ்லம்டாக் மில்லியனர் போன்ற சினிமாக்கள் மூலமாக இந்தியா ஒரு மாபெரும் சேரி என்ற அறிமுகமும் கிடைத்துள்ளது. சற்று விபரம் அறிந்த வெளிநாட்டினருக்கு இந்தியா ஒரு ஐடி கூலிகளின் தேசம் மற்றபடி அங்கு போய் பார்க்கும் அளவுக்கு அடிப்படை வசதிகளும் சுகாதாரமும் இல்லாத ஒரு தேசம் மட்டுமே. காலரா, மலேரியா, ப்ளேக், இபோலா, எய்ட்ஸ் முதலான சகலவிதமான நோய்களும் இந்தியாவில் இறங்கியவுடனேயே காற்றில் கலந்து ஒட்டிக் கொள்ளும் என்ற அபிப்ராயமும் இந்தியா குறித்து உள்ளது. என்னுடன் பணிபுரியும் வெள்ளைக்காரர்கள் எல்லாம் ஆண்டு விடுமுறைகளுக்கு வெளிநாடு செல்ல உத்தேசித்தால் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளுக்கோ அது தவிர்த்தால் ஆஸ்த்ரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கோதான் செல்ல விரும்புகிறார்கள். ஒரு சில சாகச விரும்பிகள் மட்டும் தாய்லாந்து, இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்குப் போகிறார்கள். சீனாவுக்கோ, இந்தியாவுக்கோ விரும்பிச் செல்பவர்கள் எவரும் அனேகமாகக் கிடையாது. விதிவிலக்குகள் உண்டு.

இதற்கான காரணங்கள் பல உவண்டு. சீனாவிலும், இந்தியாவிலும் காண்பதற்கு தாஜ்மஹால், பெருஞ்சுவர் போன்ற விஷயங்கள் உண்டு என்பதைக் குத்துமதிப்பாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் அங்கு போவதற்கு பெரிது தயக்கம் கொள்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை முக்கியமான காரணம் தூய்மை சுகாதாரம் குறித்த அச்சம், இரண்டாவது காரணம் ஒரு இத்தாலி, ஃப்ரான்ஸ், நியூசிலாந்து குறித்து அறிந்த அளவுக்கு இந்தியாவில் என்ன இருக்கிறது என்பது தெரியாமல் இருப்பது. தெரிந்தவரையிலும் உள்ள பாம்பாட்டிகளும், யானைகளும் சாமியார்களும் அனேகமான சுவாரசியம் ஏற்படுத்தாமல் இருப்பது இன்னொன்று. மேலும் தாய்லாந்து போன்ற நாடுகள் மேற்கத்திய பாதிப்பும் நாகரீகமும் அதிகம் உள்ள நாடுகள் ஆகவே அவர்கள் அனேகமாக அங்கு அந்நியர்களாக உணர்வதில்லை. சீனாவில் கூட உணர மாட்டார்கள். அவர்களுக்கு கலாசார அதிர்ச்சி அனேகமாக ஏற்படுவதில்லை. ஆனால் இந்தியாவின் நிலவரம் வேறு. இங்கு உணவு, உடை, சுகாதாரம், போக்குவரத்து, சாலைகள், வாகனங்கள், மொழி, பண்பாடு என்று அனைத்துமே அவர்களுக்கு முற்றிலும் அந்நியமாக உள்ளன. கிட்டத்தட்ட அமேசான் காட்டுக்குள்ளே இருக்கும் காட்டுவாசிகள் நடுவில் பயணிக்க நேரும் உணர்வை அடைந்து அந்நியப்பட்டுப் போகிறார்கள்.

இந்தியாவின் உண்மையான ஆன்மாவை, இந்தியாவின் உண்மையான அழகை, அதன் உண்மையான சக்தியை, உண்மையான சாதகங்களை உலக அளவில் எடுத்துச் சொல்லாமல் இருந்தது இன்னொரு காரணம். இந்தியாவைப் பற்றியும் அதன் தலைவர்களைப் பற்றியும் சினிமாவோ டாக்குமெண்டரியோ எடுக்க அனேகமாக பிரிட்டிஷ்காரர்கள்தான் வர வேண்டியுள்ளது. அன்று ரெயில் போட்டது போலவே இன்று டாக்குமெண்டரி எடுக்கவும் அவர்கள்தான் வர வேண்டியுள்ளது. இத்தனைக்கும் இந்தியா மணிரத்த்தினம் சார்களினாலும், பி. சி.ஸ்ரீராம் சார்களினாலும் பாரதிராஜா சார்களினாலும் நிறைந்து வழியும் ஒரு தேசம். இருந்தாலும் உருப்படியான உலகத்தின் கவனத்தைச் சரியாகக் கவரக் கூடிய, அவர்களிடம் இந்தியா குறித்து உயர்வாகச் சொல்லக் கூடிய டாக்குமெண்டரிகளையும் சினிமாக்களையும் எடுக்க ஆட்கள் இல்லை. அப்படியே எடுக்கப்பட்டாலும் அதற்கான போதிய கவனிப்பு விளம்பரம் இல்லை.

நான் இந்தியா குறித்தும் இந்தியாவின் ஆன்மா குறித்தும் அதன் வளங்கள் குறித்துமாக பல ஆவணப் படங்களைத் தேடிப் பிடித்துப் பார்த்து வருகிறேன். சற்று தேறக் கூடிய ஏராளமான டாக்குமெண்ட்டரிகள் கிடைக்கின்றன. ஆனால் அவற்றைத் தேடிப் பிடித்தே பார்க்க முடிகிறது. சாதாரணமாக வெளி நாட்டவர்களுக்கும் ஏன் இந்தியர்களுக்குமே அவை காணக் கிடைப்பதில்லை அல்லது தகவல்கள் கிடைப்பதில்லை. மேலும் நிதிப் பற்றாக்குறையினால் அவை அவ்வளவாக சிறப்பாக அமைவதில்லை.

இந்தியா குறித்து அவசியம் காண வேண்டிய சமீபத்திய டாக்குமெண்ட்டரிகளாக நான் மூன்று நான்கு டாக்குமெண்டரிகளை சிபாரிசு செய்வேன். மைக்கேல் வுட்ஸின் ஸ்டோரி ஆஃப் இண்டியா, மைக்கேல் பாலினின் ஹிமாலாயாஸ், மைக்கேல் மர்ஃபியின் இண்டியா ரீபார்ன் இப்பொழுது வந்துள்ள வைல்டஸ்ட் இண்டியா. மூன்று டாக்குமெண்டரிகள் மைக்கேல்களினால் செய்யப் பட்டுள்ளன. இந்தியாவின் சினிமா சார்களினால் அல்ல. இந்த நான்கு டாக்குமெண்ட்டரிகளுமே இந்தியாவை ஏளனமாகவோ, கேலிப் பார்வையுடனோ, அலட்சியமாகவோ, தவறான தகவல்களுடனோ, மட்டமாகக் காண்பிக்கும் நோக்குடனோ எடுக்கப்பட்டவை அல்ல. மைக்கேல் வுட்ஸ், மைக்கேல் பாலின்ஸ் மற்றும் இந்த வைல்டஸ்ட் இண்டியா மூன்றுமே அனேகமாக இந்தியாவின் ஆன்மாவை அதன் ஆன்மீக சக்தியை இந்து மதத்தின் சாரத்தைச் சொல்லுபவையே. ஒரு இந்திய இயக்குனரால் கூட இந்த அளவுக்கு பிரம்மாண்டமாகவும் ஆழமாகவும் இந்திய சிந்தனைகளின் சாரத்தைத் தொட்டிருக்க முடியுமா என்பது சந்தேகமே. நல்ல வேளையாக நமது செக்குலார் இயக்குனர்கள் இந்த முயற்சிகளில் இறங்காமல் இருப்பதும் ஒரு ஆறுதலே.

நான் ஏற்கனவே மைக்கேல் வுட்ஸின் ஸ்டோரி ஆஃப் இந்தியா குறித்தும் மைக்கேல் பாலின்ஸின் ஹிமாலாயாஸ் குறித்தும் விரிவாக பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இப்பொழுது வைல்டஸ்ட் இண்டியாவை பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், ராஜன் பக்கம்