தி. ஜானகிராமனின் “நளபாகம்”

நண்பர் ஒருவர் சொன்னார் – மோகமுள்ளை இப்போது படிக்க முடியவில்லை, அலுப்பாக இருக்கிறது என்று. தி.ஜானகிராமன் போன்ற icon அலுத்துப் போகிறாரா என்று ஆச்சரியப்பட்டேன். கரெக்டாக இந்த நாவலும் அப்போது கிடைத்தது. சரி என்று படிக்க ஆரம்பித்தேன்.

தி.ஜா.வின் மீது எனக்கு எப்போதும் உள்ள விமர்சனம் மனிதர் அரைத்த மாவையே அரைக்கிறார் என்பதுதான். எப்போதும் அந்த தஞ்சாவூர் பண்ணையார் அல்லது அக்ரஹாரம் வாழ்க்கை, எப்போதும் ஏதோ ஒரு “தவறான” உறவு. தோசை, மசால் தோசை, ஊத்தப்பம், பெசரட், வெங்காய தோசை என்று மாற்றி மாற்றிப் போட்டாலும் அந்த மாவின் லேசான புளிப்பு சுவைதானே மீண்டும் மீண்டும்!

இதைப் படிக்கும்போதும் அதே விமர்சனம்தான். அதே தஞ்சாவூர் கிராமம். இந்த முறை “தவறான” உறவு மனரீதியாக மட்டும். அதே மாதிரி தி.ஜா. டைப் மனிதர்கள். அதே மாதிரி பேச்சு. சுமாரான கதைப்பின்னல்.

இந்த முறை ஊரின் பேர் நல்லூர். நல்லூர் ரங்கமணி அம்மாள் குடும்பத்தில் எப்போதும் ஸ்வீகாரப் பிள்ளைதான், குழந்தை பிறப்பதே இல்லை. ரங்கமணி யாத்திரை போகும்போது சமையல்கார காமேஸ்வரனை சந்திக்கிறாள். ஏறக்குறைய தன் மகனாக வரித்துக் கொள்கிறாள். அதே யாத்திரையில் ஜோசியர் முத்துசாமி ரங்கமணியின் தத்துப் பிள்ளை மற்றும் மருமகள் இல்லை இல்லை மாட்டுப்பெண் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு உங்கள் பையனுக்கு குழந்தை கிடையாது, மாட்டுப்பெண்ணுக்கு உண்டு என்கிறார். சரி வழக்கமான முடிச்சைப் போட்டுவிட்டார் என்று நினைத்தேன்.

ரங்கமணி காமேஸ்வரனை தன் வீட்டுக்கு வந்து இருக்கும்படி அழைக்கிறாள். காமேஸ்வரனும் போகிறான். நியோக முறைப்படி காமேஸ்வரன் மூலமாக தனக்கு ஒரு பேரனைப் பெற்றுக் கொள்ளலாம் என்று ரங்கமணிக்கு ஒரு ஐடியா இருக்கிறது. மருமகள் பங்கஜத்துக்கும் காமேஸ்வரன் மேல் ஈர்ப்பு இருக்கிறது. காமேஸ்வரனுக்கு ரங்கமணியின் ஐடியா தெரியாவிட்டாலும் தி.ஜா.வின் வழக்கமான அழகான பெண்கள் மீது வழக்கமாக ஏற்படும் ஈர்ப்பு பங்கஜத்தின் மேல் இருக்கிறது. இரண்டு பேரும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. காமேஸ்வரன் மெதுமெதுவாக குடும்பத்தில் ஒருவராக ஆகிறான்.

காமேஸ்வரனுக்கு விஷயம் தெரியும்போது அதிர்கிறான். தற்செயலாக பங்கஜத்தை தனியாக சந்திக்க நேரிடுகிறது. பங்கஜத்துக்கும் ஆசை உண்டு என்று தெரிகிறது. ஆனால் கையைத் தொடுவதற்கு மேல் போகவில்லை. அது என்னவோ ஒரு catharsis மாதிரி பங்கஜத்துக்கு – அவள் தன் கணவன் துரையோடு ஒன்று சேர்கிறாள். இங்கே என்னவோ தி.ஜா. கணவன் மனைவி இது வரை சேராதது மாதிரி ஒரு ஃபில்ம் காட்டுகிறார். எப்படி சார்? பங்கஜம் கர்ப்பம் ஆகிறாள்.

காமேஸ்வரனுக்கு ஊரில் நட்பு வட்டம் பெருகுகிறது. தி.க.வைச் சேர்ந்த இளங்கண்ணன் முதற்கொண்டு நண்பர்கள். உள்ளூர் ஸ்கூலில் அனேகமாக தலித் மாணவர்கள் சாப்பிடும் மதிய உணவின் தரத்தைக் காணும் காமேஸ்வரன் பிடி அரிசி என்று ஒரு திட்டத்தைக் கொண்டு வருகிறான். உலை போடும் முன் ஒரு பிடி அரிசியைத் தனியாக எடுத்து வைத்துவிடவேண்டும். நன்கொடை வசூலிக்கிறான். எல்லாரும் சேர்ந்து நல்ல மதிய உணவை மாணவர்களுக்கு போடுகிறார்கள். (இந்த பிடி அரிசி திட்டம் மறைந்த காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்களின் ஐடியாவாம். நல்ல ஐடியாவாக இருக்கிறதே! ஏன் அவ்வளவாக வெளியே தெரியவில்லை?)

ஆனால் ஊரில் தன்னையும் பங்கஜத்தையும் வைத்து அபவாதம் இருப்பதை உணரும் காமேஸ்வரன் நல்லூரை விட்டு வெளியேறுகிறான். அத்தோடு கதை முடிகிறது.

கதையின் பலம் வழக்காமானவைதான்: மொழி, சரளம், கதாபாத்திரங்கள். அது என்னவோ தி.ஜா.வின் நடை கோடைக்காலத்தின் மெல்லிய குளிர்ந்த காவேரியைத்தான் எனக்கு நினைவுபடுத்துகிறது. தி.ஜா.வின் மனிதர்கள் – இளங்கண்ணன், ஜோசியரின் மனைவி, காமேஸ்வரன் குடியிருக்கும் அறையின் வீட்டு ஓனர் என்று பலர் மிக நல்ல சித்திரங்கள்.

பலவீனங்கள் என்று பார்த்தால் பையனுக்கு குழந்தை இல்லை, மருமகளுக்கு மட்டும்தான் குழந்தை என்று ஒரு முடிச்சு போட்டார். அதை அவிழ்க்கவே இல்லையே? முத்துசாமி ஜோசியர் இப்படி அபவாதம் வந்ததைத்தான் சொன்னேன் என்று சொல்வது வெறும் சப்பைக்கட்டாக இருக்கிறது. அப்புறம் என்னதான் பாயின்ட்?

சில சமயம் எனக்குத் தோன்றுகிறது – தி.ஜா.வின் எந்தக் கதையை முதலில் படித்தாலும் அது பிடித்துப் போகும். அதற்கப்புறம் படிக்கும் கதைகளில் ஒரு மாதிரி deja vu உணர்வு ஏற்பட்டு அலுக்க ஆரம்பித்துவிடும் என்று. ஒரு சூழல் மீண்டும் மீண்டும். பி.ஜி. உட் ஹவுசின் 46-ஆவது கதையைப் படிக்கிற மாதிரி.

படிக்கலாம். நிச்சயமாக above average. சுவாரசியமான பாத்திரங்கள், நடை உள்ள கதை. ஆனால் repetitive தி.ஜா.

இதுதான் தி.ஜா.வின் கடைசி நாவலாம். கணையாழியில் தொடர்கதையாக வந்ததாம்.

உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை 135 ரூபாய்.

6 thoughts on “தி. ஜானகிராமனின் “நளபாகம்”

  1. இவர்களது எழுத்துமுறை – தி.ஜா
    ————————————————————
    1. நான் பணத்திற்காக, பேருக்காக, பேரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, நானும் இருக்கிறேன் என்று காண்பித்துக் கொள்வதற்காக, தாட்சண்யத்திற்காக, எனக்கே எனக்காக, கொஞ்சம் எனக்கும் கொஞ்சம் உங்களுக்குமாக, சில சமயம் எதற்கு, யாருக்கு என்று தெரியாமல் – இப்படிப் பல மாதிரியாக எழுதுகிறேன்.

    2. எனக்குத் தெரிந்தவர்களையும், தெரிந்ததுகளையும் பற்றி எழுதுகிறேன். நான் பார்த்தவர்களையும், பார்த்ததுகளையும் பற்றி எழுகிறேன்…..அல்லது என் கண்ணிலும் மனதிலும் பட்டவர்களையும் பட்டவைகளைப் பற்றியும் எழுகிறேன்.
    சில சமயம் அம்மாமி பாஷையாய் இருக்கிறதே என்று சிலர் சொல்கிறார்கள். அதற்கு நான் என்ன செய்ய? அம்மாமிகளைத்தான் எனக்கு அதிகமாய்த் தெரியும். ஆத்தாள்களைப் பற்றி ஏதோ சிறிதளவுதான் தெரியும். தெரிந்த விகிதத்துக்குத்தான்
    எழுத்தும் வரும்.

    3. எப்படி எழுதுகிறேன் என்று சொல்வதைவிட எப்படி எழுத ஆரம்பிக்கும் நிலைக்கு வருகிறேன் என்று சொல்வதுதான் இன்னும் பொருந்தும். புகையிலையை மென்று கொண்டு சும்மா உட்கார்ந்து மனம் சுற்றிச்சுற்றி ஒன்றை முற்றுகையிடுகிற,
    வழி காணாமல் தவிக்கிற, வழிகாணப் பறக்கிற ஆட்டங்களைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருக்கிறேன். சாப்பிடும்பொழுது, வேறு வேலை செய்யும் பொழுது, யாருடனோ பேசும்பொழுது இந்த அமர்க்களமும், தவிப்பும், நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நடப்பது தெரிகிறது. வழி தெரிந்ததும் எழுத முடிகிறது. அவ்வளவுக்குமேல் அதைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை.

    4. என் தவம் எத்தனைக்கெத்தனை தீவிரமாக ஒன்றிப்பிலும் தன் மறப்பிலும் கனிந்து எரிகிறதோ அப்போது வடிவம் தானாக அமைந்து விடும். அது சில சமயம் மூளியாகவோ குறையுள்ளதாகவோ இருக்கலாம். ஆனால் பூப்பு நிலையில்
    பூவில் இட்ட முட்டை வண்டாக வளர்கிற மாதிரி, அதை நான் தடுத்திருக்க முடியாது. தவிர்க்க முடியாத நிலையில் எழுதப்பட்ட விதி. இந்தக் கனிவில்தான், இந்தத் தவத்தில்தான் என் சுயரூபம் எனக்குத் தெரிகிறது.

    5. என் ஆத்ம எதிரொலிப்பாக, நான் வாழும் வாழ்க்கையின் ரசனையை எனக்கு எளிதாகக் கைவரும் எழுத்தின் மூலம் வெளிக்காட்டுகிறேன். என்னுடைய இன்பங்களை, நான் துய்க்கும் சோக உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறேன். சுற்றிலும் உலகம் சிறியதும் பெரியதுமாக
    சாதாரண அசைவுகளில் கூட வியப்புகள் நிறைந்து இயங்குகிறது. அதைப் பார்த்துக் கொண்டிருப்பதே ஆனந்தம்தான். அதைத்தான் நான் பகிர்ந்து கொள்கிறேன்.

    6. சிறுவயது முதலே என்னுடைய மனத்தில் “கன்வென்ஷன்” என்று சொல்லப்படும்படியான கட்டுப்பாடுகளை எதிர்க்கும்படியான ஒரு மனோபாவம் உருவாயிற்று. நம்முடைய மக்கள் மரபையும் (டிரெடிஷன்) கட்டுப்பாட்டையும் ஒன்று சேர்த்து குழப்பிக் கொள்ளுகிறார்கள் என்று நினைக்கிறேன். கட்டுப்பாடுகள்
    காலத்துக்கு ஏற்றபடி மாறும் தன்மையுடையன. ஆனால் அவைகளுக்கு அன்றாட வாழ்வில் நிரந்தரமான ஒரு இடத்தை அளிக்க முற்படும்போதுதான் தனி மனித சுதந்திரம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. ஒரு சமுதாய நாகரீகத்தின் உயிர்ப்புச்
    சக்தியுடன் கூடிய ஜீவனானது இம்மாதிரியான கட்டுப்பாடுகளினால் நசித்துப் போக ஏது இருக்கிறது. மனித உணர்ச்சிகளைப் பற்றி, மன விகாரங்களைப் பற்றி எழுத முற்படும்போது கட்டுப்பாடுகளை அறுத்தெறிய வேண்டியிருக்கிறது.

    “அம்மா வந்தாள்” பற்றி எனக்கு வேறு சொல்லத் தோன்றவில்லை.

    –வே.சபாநாயகம் (http://ninaivu.blogspot.com/2010/11/17.html)

    Like

  2. தி.ஜானகிராமன் – அழியா நினைவுகள்
    ====================================
    தனது மகள் சோஸியாலஜி படித்துவிட்டு, ஹைதராபாத்தில் அதுகுறித்த ஆய்வுகளை செய்வதாக தி.ஜா. சொல்லத் தொடங்கினார். ஹைதராபாத்தில் முஸ்லீம் ஏழைகள் அதிகமாக வாழும் பகுதியில், தனது ஆய்வை மேற்கொண்டபோது நடந்த ஒரு நிகழ்வை தனது மகள் சொன்னதாகச் சொன்னார்.

    அந்த காலக்கட்டத்தில், அரபுநாடுகளில் இருந்து ஏகப்பட்ட அரபிகள் ஹைதராபத்தில் உள்ள அந்தப் பகுதிக்கு வந்து, ஏழைப் பெண்களை வயது வித்தியாசம் பாராது சரமாரியாக திருமணம் செய்து, தங்கள் நாட்டிற்கு அழைத்துப் போய் கொண்டிருந்தார்கள் என்பதும், அந்த பெண்களுக்கு வாழ்வின் பாதுகாப்பு குறித்த எந்த ஒரு உத்திரவாதமும் இல்லை என்பதும், அப்படி திருமணம் செய்துக் கொள்ள வருபவர்களுக்கு சௌகரியங்கள் செய்து தரும் திருமண ஏஜண்டுகளும் அந்தப் பகுதியில் இருந்தார்கள் என்பதும் பத்திரிகை வாயிலாக நானும் அறிந்ததே ஆனால் இங்கே தி.ஜா. சொன்ன செய்தி நான் அறியாத ஒன்றுதான். அதன் அதீதம் யாரையும் மலைக்கவும் யோசிக்கவும்கூட வைக்கும்!

    ஓர் அரேபியன், தனது தேசத்தில் இருந்து திருமணத்திற்காக அங்கு வந்ததாகவும், அவனுக்கு பெண் தேடித்தர ஏஜண்டுகள் ஒத்துழைத்ததாகவும், அதன்படி ஓர் ஏழை முஸ்லீம் வீட்டிற்கு அவனை அழைத்துச் செல்ல, அந்த வீட்டில் திருமணம் ஆகாத நாலு பெண்பிள்ளைகளும், அவர்களின் பெற்றோர்களும், மேலும் அவர்களின் வசீகர ஏழ்மையும் இருந்ததாம்! அந்த அரபியிடம் தனது நான்கு பெண்பிள்ளைகளையும் வரிசைக் கிரமமாக கொண்டு வந்து நிற்க வைத்துக் காட்டி, யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து தர சம்மதம் என்றிருக்கிறார் அந்த பெண்ணின் தாய்! அந்த நான்கு பெண்களையும் பார்த்த பிறகு அந்த அரபி, ஏஜண்ட் காதில் ஏதோ குசுகுசுக்க அவனுக்கு அதிர்ச்சி! பின்னே இருக்காதா? பார்த்த நான்குப் பெண்களையும் விட்டு விட்டு, அந்தப் பெண்களின் தாயார் சம்மதித்தால் அவரை திருமணம் செய்துக் கொள்ளச் சம்மதம் என்றால் எப்படி?

    முதலில் தயங்கிய ஏஜண்ட், அந்த பெண்ணின் தாயாரை அழைத்து மெல்ல அரபியின் அபிப்ராயத்தை வெளிப்படுத்தவும், அந்த தாயார் தன் கணவரை அழைத்துச் சென்று கலந்து பேசிவிட்டு அதற்கு உடன்பட்டாளாம்! அலைக்கழிக்கும் ஏழ்மை, அவர்களை எதற்கும் தயார்படுத்தி விடுகிறது என்றார் தி.ஜா! ஆய்வில் அறிய வந்த இந்த செய்தியை தனது மகள் மிகுந்த ஆச்சரியத்துடன் தன்னிடம் விவரித்ததை, சாதாரணமாகச் சொன்னார். தி.ஜாவை காலம் வழி மறிக்காது இருந்திருந்தால், இந்த நிகழ்சம்பவம் குறித்த ரசனையானதோர் கதை நமக்கு நிச்சயம்.

    –http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=3721:2010-02-18-10-37-22&catid=1:articles&Itemid=264

    Like

  3. you are perfectly correct .but why the hell we are often and often want to read his
    novels and stories?whether good or bad there are so many thanjavur asal(real)
    characters in our life..day to day we are meeting them. but devan shows the same
    tanjore people in a differant way.mr.vedantham and other stories i was once mad after his writings.however their works are treasures.
    radhakrishnan,madurai.

    Like

  4. ஸ்ரீனிவாஸ், விவரங்களுக்கு நன்றி!

    ராதாகிருஷ்ணன், தி.ஜா.வின் எழுத்தில் இருக்கும் நளினமும் அழகும் நம்மைக் கவர்வது உண்மைதான்.

    Like

  5. தி. ஜ. வின் படைப்புகளில் என்னை மிகவும் கவர்ந்தது நளபாகம். மோகமுள்ளை விட சிறந்த படைப்பு.

    Like

    1. சிற்றோடை, எனக்கு இன்னும் அம்மா வந்தாளும் மோகமுள்ளும்தான் டாப். ஆனால் நண்பர் பாலாஜி இப்போது படிக்க முடியவில்லை என்று கமென்ட் அடித்த பிறகு மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும் என்று இருக்கிறேன்.

      Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.