விகடனில் எப்போதோ படித்தது. நன்றி, விகடன்!
ஜூன் 30-ம் தேதி, புதுமைப்பித்தனின் நினைவு நாள்.
சிறுகதையுலகில் இட்டு நிரப்ப முடியாத ஓர் இடத்தைப் பெற்றவர் சொ.விருத்தாசலம் என்கிற புதுமைப்பித்தன். வேளூர் வெ.கந்தசாமிக் கவிராயர் என்ற பெயரில், கவிதையுலகிலும் காலடி எடுத்து வைத்தவர் அவர்.
புதுமைப்பித்தனுக்கு கணேச சர்மா என்று ஒரு நண்பர் உண்டு. அவருக்குச் சங்கீதத்தில் மிகுந்த ஈடுபாடு.
ஒரு தடவை, திருவீழிமிழலை சகோதரர்களான நாதசுர வித்வான்கள் சென்னைக்கு வந்திருந்தார்கள். கணேச சர்மா அந்த வித்வத் சிரோன்மணிகளைப் பார்த்து, “உங்கள் வாசிப்பை யாராரோ கேட்டு ரசித்துத் தலையை ஆட்டினால் போதுமா? இங்கு ஒரு பெரிய ஞானஸ்தர் இருக்கிறார். அவர் சபாஷ் போட்டு விட்டால் அப்புறம் உங்களுக்கு வேறு பட்டயமே தேவையில்லை” என்று கூறினார். அவர்களும் அதிசயித்து, “அப்படியா? அவரைப் பார்க்க வேண்டுமே” என்று கூற, கணேச சர்மா, அவர்களைப் புதுமைப்பித்தன் குடியிருந்த இடத்துக்கு அழைத்துக் கொண்டு வந்தார்.
“என்ன சோவி, திருவீழிமிழலை பிரதர்ஸ் உங்களிடம் நாதசுரம் வாசித்துக் காட்ட வேண்டுமாம்!” என்றார் சர்மா பணிவோடு.
“நாதசுரமா? சரி, வாசிக்கட்டும்” என்றார் புதுமைப்பித்தன்.
வித்வான்கள் வாசிக்க ஆரம்பித்தார்கள். புதுமைப்பித்தன் வெற்றிலைச் செல்லத்தைத் திறந்து வெற்றிலை போட்டபடி, ஏதோ ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்துப் படிக்க ஆரம்பித்துவிட்டார். வித்வான்கள் இருவரும் வெகுநேரம் ராக ஆலாபனை எல்லாம் பண்ணி முத்தாய்ச் சொரிந்து தள்ளினார்கள். ஆனால், புதுமைப்பித்தனின் முகத்தில் எந்த மாறுதலையும் காணோம்.
இதற்குள் அறைக்கு வெளியே இருந்த சர்மா கடகடவென்று சிரித்தபடி உள்ளே வந்தார். “இவ்வளவுதானா உங்கள் சங்கீதம்? இவரை மயக்க முடியவில்லையே!” என்று வித்வான்களைக் கேலி செய்தார். புதுமைப்பித்தனுக்குப் பிறகுதான் உண்மை தெரிந்தது. எல்லாம் சர்மாவின் கலாட்டா!
உண்மை என்ன தெரியுமா? புதுமைப்பித்தனுக்குச் சங்கீதத்தில் அட்சரம்கூடத் தெரியாது. சங்கீத விஷயத்தில் அவர் ஒரு ஒளரங்கசீப். எனவேதான், அந்த வித்வத் சிரோன்மணிகளின் சங்கீதம் புதுமைப் பித்தனைக் கொஞ்சம் கூட அசைக்கவில்லை.
புதுமைப்பித்தன் தினமணியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த காலத்தில், எவ்வளவுதான் கவனமாகப் புரூப் பார்த்துக் கொடுத்தாலும், சமயங்களில் கம்பாஸிடர்கள் பிழைகளைத் திருத்தாமல் விட்டு விடுவதைக் கண்டு எரிச்சலாகி, ஒருமுறை கடைசியில், ‘கடவுள் துணை!’ என்று எழுதி வைத்தார். கம்பாஸிடர் வந்து “ஸார், இதையும் கம்போஸ் செய்யவா?” என்று கேட்க, “இல்லையப்பா! நான் என்னால் ஆன மட்டும் பார்த்து விட்டேன். இனியும் தவறு விழுந்தால், ‘கடவுள்தான் எனக்குத் துணை. நீ அல்ல’ என்பதற்குத்தான் அப்படிப் போட்டேன்” என்றார்.
வேளூர் வெ.கந்தசாமிப் பிள்ளை என்ற பெயரில் எழுதிய அவரது முதல் பாட்டு ‘ஓடாதீர்!’ என்பது. இது கிராம ஊழியன் பத்திரிகையில் வெளிவந்த காலத்துக்கு முன்னர்தான் கு.ப.ரா. காலமாகியிருந்தார். அவரைச் செத்த பிறகு கவனிக்க முனைந்த, நிதி சேர்க்க முனைந்த தமிழர்களின் நிலையைக் கண்டு புழுங்கிப் பாடிய பாட்டு அது!
–தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய ‘புதுமைப்பித்தன் வரலாறு’ நூலிலிருந்து…
புதுமைப்பித்தனை நினைவூட்டியமைக்கு நன்றி..
LikeLike