ரிச்சர்ட் நார்த் பாட்டர்சன் – ஜனாதிபதி கெர்ரி கில்கானன் நாவல்கள் (Richard North Patterson’s President Kerry Kilcannon)

ரிச்சர்ட் நார்த் பாட்டர்சன் ஒரு த்ரில்லர் எழுத்தாளர். அவர் எழுதி இருக்கும் ஒரு அமெரிக்க அரசியல் த்ரில்லர் சீரிஸ் (trilogy) இந்த ஜனாதிபதி கெர்ரி கில்கானன் நாவல்கள். அமெரிக்க அரசியல் அமைப்பு – ப்ரைமரி தேர்தல் முறை, அபார்ஷன், துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமை, செனட் இயங்கும் விதம் என்று பல விஷயங்கள் – பற்றி சுலபமாக புரிய வைக்கின்றன.

நோ சேஃப் பிளேஸ், 1998 (No Safe Place:) கெர்ரி கில்கானன் ஒரு செனட்டர். கொஞ்சம் ஜான் எஃப். கென்னடி, கொஞ்சம் பில் கிளிண்டன் எல்லாம் கலந்தடித்த ஒரு பாத்திரம். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முயற்சி செய்து கொண்டிருக்கிறார். கட்சிக்குள் அவருக்கு போட்டி தற்போதைய துணை ஜனாதிபதி டிக் மேசன். கலிஃபோர்னியாவில் கட்சியின் அடுத்த வேட்பாளார் யார் என்பதை நிர்ணயிக்கக் கூடிய ஒரு மாநில அளவிலான primary நடக்கிறது. அந்த ஒரு வாரம் பத்து நாளில் நடப்பது போல கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
கெர்ரி ஒரு போலீஸ்காரரின் மகன். அண்ணன் (ராபர்ட் கென்னடியை நினைவுபடுத்தும் பாத்திரம்) ஒரு செனட்டராக இருந்தவர். கலிஃபோர்னியாவில் 12 வருஷத்துக்கு முன் சுடப்பட்டு இறந்து போனார். அவர் இடத்துக்குத்தான் கெர்ரி செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கெர்ரியின் ஒரு ரகசியம் – அவருடைய முன்னாள் காதலி அபார்ஷன் செய்துகொண்டவள். இந்த விஷயம் வெளியே வந்தால் கெர்ரி தோற்பது அனேகமாக நிச்சயம். என்ன நடக்கிறது என்று சுவாரசியமாக போகும் கதை.

ப்ரொடெக்ட் அண்ட் டிஃபெண்ட், 2000 (Protect and Defend):கில்கானன் தேர்தலில் ஜெயித்தாயிற்று. அடுத்த அமெரிக்க தலைமை நீதிபதியாக அவர் கரோலின் மாஸ்டர்ஸ் என்ற பெண்ணை தேர்ந்தெடுக்கிறார். அந்த தேர்வை செனட் உறுதி செய்தால் கரோலின் தலைமை நீதிபதி ஆகலாம். அப்போது ஒரு 15 வயதுப் பெண் அபார்ஷன் செய்து கொள்ள விரும்புகிறாள் – ஏனென்றால் அவள் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு மூளை என்ற உறுப்பே இருக்கப்போவதில்லை என்று சோனோகிராம் மூலம் தெரிகிறது. அதற்கு அப்பா அம்மா பர்மிஷன் வேண்டும். அவர்கள் அபார்ஷன் என்பது கொலை என்று உறுதியாக நம்புபவர்கள். கேஸ் கரோலினின் தீர்ப்புக்காக நிற்கிறது. அபார்ஷன் செய்துகொள்ளலாம் என்று தீர்ப்பளித்தால் செனட்டில் கரோலினை அனேகமாக நிராகரிப்பார்கள். கரோலின் என்ன செய்யப் போகிறாள்?
இரண்டு பக்க வாதங்களும் நன்றாக இருந்தன.

பாலன்ஸ் ஆஃப் பவர், 2003 (Balance of Power): அமெரிக்க அரசியல் சட்டத்தின் இரண்டாவது சட்டத் திருத்தம் (amendment) பற்றி கொஞ்சம் சர்ச்சை உண்டு. அது நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆயுதம் ஏந்தும் உரிமை அளிக்கிறது. இது இங்கிலாந்தை எதிர்த்து போராடிய காலத்துக்கு சரிப்பட்டு வரும், ஆனால் இப்போது இந்த உரிமை கூடாது என்று சொல்பவர்கள் நிறைய பேர் உண்டு. இந்த சட்டத் திருத்தத்தின் முக்கியமான ஆதரவாளர் NRA என்று அழைக்கப்படும் தேசிய ரைஃபிள் சங்கம் (National Rifle Association) NRA இந்த சட்டத் திருத்தத்தின்படி எந்த விதமான லைசன்ஸ், கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் அனைவரும் AK47 கூட வைத்துக் கொள்ளும் உரிமையை வழங்குகிறது என்று நினைக்கிறது. NRA-இன் எதிர்ப்பாளர்கள் பலர் கட்டுப்பாடு இல்லாத துப்பாக்கிகளால் விபத்துகளும், கொலம்பைன் பள்ளி படுகொலை போன்ற சம்பவங்களும் நடக்கின்றன என்று வாதிடுகின்றன.
இந்த புத்தகத்தில் NRA போன்ற ஒரு அமைப்பு கெர்ரி கில்கானன் கொண்டு வர விரும்பும் துப்பாக்கி கட்டுப்பாடுகளை எதிர்க்கிறது. இந்த அமைப்பு துப்பாக்கி தயாரிப்பளர்களை தன கண்ட்ரோலில் வைத்திருக்கிறது. சுவாரசியமான, கொஞ்சம் கான்ஸ்பிரசி தியரி வாடை அடிக்கும், த்ரில்லர். படிக்கலாம்.

எல்லாம் டைம் பாஸ் நாவல்கள்தான். பயணத்தின்போது படிக்க ஏற்ற நாவல்கள். அமெரிக்க அரசியல் பின்புலம் இவற்றை எனக்கு சுவாரசியமாக ஆக்கின.

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

2 thoughts on “ரிச்சர்ட் நார்த் பாட்டர்சன் – ஜனாதிபதி கெர்ரி கில்கானன் நாவல்கள் (Richard North Patterson’s President Kerry Kilcannon)

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.