பிரபஞ்சனின் “வானம் வசப்படும்”

Chronologically, மானுடம் வெல்லும் புத்தகத்தின் தொடர்ச்சி. இரண்டு புத்தகங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஒரே கருத்து, ஒரே பின்புலம், ஏறக்குறைய அதே மனிதர்கள். மா. வெல்லும் நாவலின் அநேக பலங்களும் இதிலும் உண்டு. ஒரு பலவீனம் இல்லை. அதிலே கொஞ்சம் rambling, தொடர்பில்லாத பல துணைக் கதைகள் உண்டு. இது இன்னும் கொஞ்சம் கோர்வையாக இருக்கிறது. அப்படி கோர்வையாக இருப்பதே ஒரு விதத்தில் பலவீனமாகவும் இருக்கிறது. சுவாரசியமான துணைக் கதைகள் இதில் கொஞ்சம் குறைவு.

பாண்டிச்சேரிக்கு ஒரு புது கவர்னர் – டூப்ளே. ஆனந்தரங்கம் பிள்ளைக்கு இன்னும் தலைமை துபாஷ் வேலை கிடைக்கவில்லை என்றாலும் அவர்தான் தமிழர்களில் முக்கியஸ்தர். பெரிய வியாபாரி, நிர்வாகி, துபாஷ் எல்லாம் அவர்தான். ஒரே ஒரு பிரச்சினை. டூப்ளேயின் மனைவி பிள்ளையின் நலம் விரும்பி இல்லை. டூப்ளேக்கு பிள்ளையின் அருமை பெருமை எல்லாம் தெரிந்தும், பிள்ளை எத்தனையோ உண்மையாக உழைத்தும், பிள்ளைக்கு கிடைக்க வேண்டிய பதவி, நிலை முழுதாகக் கிடைப்பதில்லை. அவரை மையமாக வைத்து அன்றைய சமுதாயம், வாழ்க்கை முறை சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

அரண்மனைச் சதி genre-இல் என்னதான் சுவாரசியம் இருந்தாலும், மக்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் புத்தகங்களைப் படிப்பதில் ஏற்படும் மகிழ்ச்சி வருவதில்லை. தமிழர்-பறையர்-துருக்கர்-பரங்கியர் வாழ்க்கை, கிருஸ்துவப் பாதிரியார்கள் ஜாதி பார்ப்பது, (ஜாதி கிடையாது என்று பறையர்-மேல் ஜாதியாருக்கு நடுவில் இருக்கும் சுவரை உடைக்கும் பாதிரியாரும் உண்டு) வேதபுரீஸ்வரர் கோவிலை உடைக்க முயல்பவர்கள், டூப்ளேயின் மனைவி அப்பட்டமாகத் திருடுவது, தாசிகள், லஞ்சம் வாங்குவது அதிகார வர்க்கத்தின் சாதாரண நிகழ்ச்சியாக இருப்பது என்று பல நிகழ்ச்சிகளை அருமையாகக் கோர்த்திருக்கிறார்.

நாவலுக்கு 1995-ஆம் ஆண்டு சாஹித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. தகுதி உள்ள நாவலே, ஆனால் மா. வெல்லும் என் கண்ணில் இன்னும் கொஞ்சூண்டு பெட்டர். எந்த வருஷம் வெளியானது என்று தெரியவில்லை. உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை இருநூறு ரூபாய்.

ஜெயமோகன் இதைத் சிறந்த தமிழ் நாவல்களின் இரண்டாம் பட்டியலில் (பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள்) சேர்க்கிறார்.

என்னதான் மா. வெல்லும் கொஞ்சம் rambling என்றாலும் எனக்கு இதை விட அதுதான் ஒரு மாற்று ஒசத்தி. இருந்தாலும் சிறந்த வரலாற்று நாவல், சிறந்த நாவல். நிச்சயமாக தமிழின் டாப் மூன்று வரலாற்று நாவல்களில் ஒன்று. (மற்றவை, மானுடம் வெல்லும் – obviously. மற்றும் பொன்னியின் செல்வன். இதைப் படிப்பதற்கு முன்னால் மூன்றாவது இடத்தில் இருந்தது சிவகாமியின் சபதம்.) படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொடர்புடைய சுட்டி: பிரபஞ்சனின் “மானுடம் வெல்லும்”

இந்திரா பார்த்தசாரதியின் “கிருஷ்ணா கிருஷ்ணா”

இ.பா.வின் புத்தகங்களின் எனக்கு ஓரளவு பிடித்த ஒன்று. எனக்கிருக்கும் மகாபாரதப் பித்து காரணமாக இருக்கலாம்.

கிருஷ்ணனின் கதையை ஏறக்குறைய ஒரு காலட்சேப ஸ்டைலில் சொல்கிறார். கிருஷ்ணனே தன்னைக் கொன்ற வேடனிடம், தான் இறப்பதற்கு முன் சில பகுதிகளை நேரடியாக சொல்கிறான். சில பகுதிகளை நாரதர் சொல்கிறார். பாரதம், பாகவதத்தின் பல பகுதிகளை – திரௌபதி சுயம்வரம், வஸ்திராபஹரணம், ஸ்யமந்தகமணி, பாரதப் போர், ஜராசந்தன் வதை, கம்சன், ராதா, பீஷ்மர், கர்ணன், துரியோதனன் மனைவி பானுமதி, ஷைல்பியா – சுவாரசியமாகத் திருப்பிச் சொல்லப்படுகின்றன. மீள்வாசிப்பு என்றோ வேறு கோணம் என்றோ எதுவும் இல்லை, ஸ்டைல்தான் வேறு மாதிரி இருக்கிறது.

உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை தொண்ணூறு ரூபாய்.

மகாபாரதப் புத்தகம். எனக்குப் பிடித்திருப்பதில் ஆச்சரியமில்லை. அந்தப் பித்து இல்லாதவர்களுக்கு கூறியது கூறலாகத் தெரியலாம்.

தொடர்புடைய சுட்டிகள்:

  • இ.பா. பக்கம்
  • எழுத்தாளர் இரா. முருகனின் விமர்சனம்
  • பத்ரி சேஷாத்ரியின் விமர்சனம்