விமலாதித்த மாமல்லன் பதிவு – “விற்றதும் கற்றதும்”

விமலாதித்த மாமல்லன் தன் புத்தகங்களின் விற்பனை பற்றி ஒரு அருமையான பதிவு எழுதி இருக்கிறார்.

எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் அவரது புத்தகங்களை அவரேதான் பதித்திருக்கிறார் – அறியாத முகங்கள் இரண்டு பதிப்புகள்(1983, 1994), முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள்(1986), உயிர்த்தெழுதல்(1994). புத்தகத்தை அச்சடிக்க காகிதம் வாங்குவதிலிருந்து எல்லாப் பணிகளையும் அவரேதான் செய்திருக்கிறார். புத்தகங்கள் பெரிதாக விற்கவில்லை. இன்னும் அந்தப் புத்தகங்களின் காப்பிகள் சில அவரிடம் இருக்கின்றன என்று தெரிகிறது.

மயிலாப்பூர் அச்சகத்தில் இருந்து 1200 புத்தகங்களைக் கொண்டு வந்தாயிற்று. வரக்கூடும் என எதிர்பார்க்கும் நூலக ஆணைக்குமாக சேர்த்து 1200 பிரதிகளாய் அச்சடித்தால்தான் அந்தக் காலத்தில் நஷ்டத்தை ஓரளவாவது கட்டுப்படுத்த முடியும்

என்ற வரிகள் எனக்கு மிகவும் poignant ஆக இருந்தன. நஷ்டம் வரும் என்று தெரியும், அதை எப்படிக் குறைக்கலாம் என்றுதான் திட்டம் போட முடியும். எழுத்தை மட்டும் வைத்துப் பிழைக்க முடியாது என்று ஒரு முறை ஜெயமோகன் சொன்னார். நஷ்டம் வரும் வியாபாரத்தை வைத்து எப்படிப் பிழைப்பது? அசோகமித்ரன், சி.சு. செல்லப்பா ஆகியோரின் வாழ்க்கையும் இதைத்தான் காட்டுகிறது.

மனுஷ்யபுத்திரன் சொன்னாராம் –

உங்க கதைகளை தளத்துலப் போட்டாலும் பெருசாப் பிரச்சினை ஒண்ணுமில்லை. ஒரு லட்சம் காப்பி போட்டு நெட்டுல வந்துட்டதால அம்பதாயிரம் பிரதி விக்காம நஷ்டமாயிடுச்சின்னு சொன்னா வருத்தப்படறதுல அர்த்தமிருக்கு. இலக்கிய வாசகர்கள் ஒவ்வொருத்தரையும் நேரடியாப் பேரோட தெரியற அளவுக்கு சின்ன எடம் இது. சூதாட்டம் மாதிரி இறங்கிட்டோமேன்னு ஆடிகிட்டு இருக்க வேண்டி இருக்கு. மூனு வருஷமா லைப்ரெரி ஆர்டரே கிடையாது. எப்பையோ தேடிகிட்டு வர வாசகனுக்காக ஷெல்ஃபுல புக்கு இருந்துகிட்டு இருக்கு.

எப்போது நாமெல்லாம் புத்தகம் வாங்க ஆரம்பிக்கிறோமோ, அப்போதுதான் இந்த நிலை மாறும். அமெரிக்காவில் இருக்கும், ஓரளவு பணம் புழங்கும் என்னைப் போன்றவர்கள் கூட புத்தகத்தை விட ஷிப்பிங் செலவு அதிகமாக இருக்கிறதே என்றுதானே யோசிக்கிறோம்? தமிழ் சினிமாவுக்கு வெளிநாடுகளில் ஒரு மார்க்கெட் இருப்பது போல தமிழ் புத்தகங்களுக்கு ஏன் இல்லை? உலகம் முழுவதும் ஒரு ஆயிரம் தமிழர்கள் புத்தகம் வாங்கினால் ஒரு பதிப்பு விற்றுவிடுமே!

வி. மாமல்லன் கூட எனக்கு கடுமையான கருத்து வேறுபாடுகள் உண்டு. தன் திறமையை ஜெயமோகனை நொட்டை சொல்வதிலேயே வீணடிக்கிறார் என்ற வருத்தம் உண்டு. ஆனாலும், அவர் சில கதைகளே எழுதி இருந்தாலும், அவற்றில் வெகு சிலவற்றையே நான் படித்திருந்தாலும், படித்தவற்றிலும் சில புரியவே இல்லை (சிறுமி கொண்டு வந்த மலர்) என்றாலும், அவர் குறிப்பிடப்பட வேண்டிய தமிழ் எழுத்தாளர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

தொடர்புள்ள சுட்டிகள்:
மாமல்லனின் தளம்
எனக்குப் பிடித்த சில மாமல்லன் சிறுகதைகள் – இலை, போர்வை