சாரா பாரட்ஸ்கியின் “டோட்டல் ரீகால்”

எனக்கு துப்பறியும் கதை என்றால் பொதுவாக 1950-க்கு முற்பட்ட ஆங்கிலத் துப்பறியும் கதைகள்தான். அமெரிக்கத் துப்பறியும் கதைகள் கொஞ்சம் crude ஆக இருக்கும், வன்முறையைப் பிரதானமாக வைத்து எழுதுவார்கள், துப்பறியும் நுட்பங்கள் குறைவு என்று ஒரு எண்ணம். சிறந்த எழுத்தாளர்களான டாஷியல் ஹாம்மட், ரேமன்ட் சாண்ட்லர் போன்றவர்கள் அந்த வன்முறையை கதையில் நன்றாக பிணைத்திருப்பார்கள்; மற்றவர்கள் கதையில் அது தனியாகத் தெரியும்; அவ்வளவுதான் வித்தியாசம்.

சாரா பாரட்ஸ்கியின் இந்த நாவல் என் எண்ணத்தை மாற்றியது. கதையின் நாயகி வி.ஐ. வார்ஷாவ்ஸ்கி இத்தனைக்கும் ஒரு துப்பறிபவள்தான். இருந்தாலும் crude வன்முறை என்பதை இந்த நாவல் சுலபமாகத் தாண்டுகிறது.

வார்ஷாவ்ஸ்கி சில யூதர்களின் – டாக்டர் லாட்டி ஹெர்ஷல், மாக்ஸ் லோவந்தால் – நெருங்கிய நண்பர். இவர்கள் இருவரும் ஹிட்லர் காலத்து ஜெர்மனி, ஆஸ்திரியா போன்ற நாடுகளிலிருந்து சிறு வயதில் தப்பியவர்கள். அவர்கள் குடும்பங்களோ ஜெர்மனியிலேயே அழிந்துவிடுகின்றன. வார்ஷாவ்ஸ்கி இப்போது மூன்று மர்மங்களை சந்திக்கிறாள்.

ஒரு கறுப்பர் குடும்பம். இறந்து போனவரின் இன்ஷூரன்ஸ் பணம் அவர் இறப்பதற்கு பல வருஷம் முன்பே அவர் மனைவிக்கு கொடுக்கப்பட்டுவிட்டது என்று இன்ஷூரன்ஸ் ரெகார்டுகள் காட்டுகின்றன. ஆனால் அவர் மனைவிக்கு பணம் கொடுக்கப்படவில்லை. பணம் என்ன ஆனது?

இன்ஷூரன்ஸ் கம்பெனி இரண்டாம் உலகப் போரில் இறந்த யூதர்களிடம் இன்ஷூரன்ஸ் விற்றது; ஆனால் அவர்கள் இறப்புக்கு சரியான ரெகார்டுகள் இல்லாததால் பணத்தைக் கொடுக்காமல் விழுங்கிவிட்டது என்று ஒரு குற்றச்சாட்டு.

கொஞ்சம் கிறுக்கு மாதிரி இருக்கும் ராட்புகா, தானும் டாக்டர் லாட்டி, மாக்ஸ் போலத் தப்பி வந்த யூதச் சிறுவர் என்று நம்புகிறார். ராட்புகா இவர்களை விட வயதில் மிகவும் இளையவர். ஹெர்ஷல், லோவந்தால் போன்றவர்கள் தன் உறவினர்கள் என்று நம்ப விரும்புகிறார். Desperately seeking roots and relatives என்று சொல்லலாம். ஆனால் அவர் தனது உறவினர்களாக நினைக்கும் பேர்களைக் கேட்டு டாக்டர் லாட்டி மயக்கம் போட்டு விழுகிறார். மாக்ஸ் தனக்கும் அவருக்கும் எந்த உறவும் இல்லை என்று சொன்னாலும் நம்ப மறுக்கிறார்.

மூன்று மர்மங்களுக்கும் உள்ள தொடர்பை வார்ஷாவ்ஸ்கி கண்டுபிடிப்பதுதான் கதை. வெறும் மர்மக் கதையாக இல்லாமல் குடும்பத்தில் தான் மட்டுமே தப்பித்ததால் ஏற்படும் குற்ற உணர்ச்சியை நன்றாகச் சித்தரித்திருக்கிறார்.

2001-இல் வெளிவந்தது.

நல்ல த்ரில்லர், அதைத் தாண்டியும் கொஞ்ச தூரம் போகிறது. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொடர்புள்ள சுட்டிகள்:
சாரா பாரட்ஸ்கியின் தளம்