சாண்டில்யன் நூற்றாண்டு

இது சாண்டில்யனின் நூற்றாண்டாம். வாண்டு மாமாவைக் கடந்து வந்தபோது என்னைக் கவர்ந்த ஸ்டார் எழுத்தாளர் அவர். பத்து வயது வாக்கில் அவரைக் கடந்து வந்துவிட்டாலும், யவனராணி, கடல்புறா, மலைவாசல், ராஜமுத்திரை, கன்னி மாடம் போன்ற நாவல்கள்தான் நான் முதன்முதலாக விரும்பிப் படித்த பெரியவர்களுக்கான புத்தகங்கள். மிகவும் த்ரில்லிங்காக இருந்தன. அவரிடமிருந்து கற்றுக் கொண்ட வரலாறு பள்ளிகளில் கற்றுக் கொண்டதை விட நன்றாக நினைவிருக்கிறது. இந்திய சரித்திரத்தின் சில பகுதிகளை அவர் மிகவும் கவர்ச்சிகரமாக அறிமுகம் செய்து வைத்தார். எனக்கு இன்றும் ஸ்கந்த குப்தனை பற்றி தெரிந்ததெல்லாம் மலைவாசல் புத்தகத்தில் படித்ததுதான். ஹூணர்கள், ராஜபுதனம், கனோஜி ஆங்க்ரே பற்றி முதலில் தெரிந்து கொண்டதெல்லாம் சாண்டில்யனின் கதைகள் மூலம்தான்.

ஆனால் சீக்கிரத்திலேயே அலுத்துவிட்டார். ஒரே ஃபார்முலா வைத்து எழுதுவார். என் கருத்தில் அவர் நாவல்களை இன்னும் ஒன்றிரண்டு ஜெனரேஷன்களில் மறந்துவிடுவார்கள்.

அவரது சரித்திர நாவல்கள் தமிழ் நாட்டில் மிக பாப்புலராக இருந்தன. குமுதம் பல வருஷங்களாக அவரது சரித்திர நாவல்களை தொடர்கதையாக வெளியிட்டது. யவன ராணி, கடல் புறா ஆகியவை அவரது மாஸ்டர்பீஸ்கள். அவருக்கு வால்டர் ஸ்காட், டூமாஸ் ஆகியோரை விட ரஃபேல் சபாடினி போன்றவர்கள்தான் ரோல் மாடல் என்று நினைக்கிறேன். அவருடைய நாவல்களில் பேச்சு இருக்கிற அளவுக்கு ஆக்ஷன் இருக்காது. உதாரணமாக மன்னன் மகள் நாவலில் முக்கால் நாவல் முடிந்த பிறகுதான் கதை நகரவே ஆரம்பிக்கும.

சாண்டில்யனின் பெரிய குறையே வளவள என்று எழுதிக் கொண்டே போவதுதான். பேப்பருக்கு பிடித்த கேடு. ஒவ்வொரு சாப்டரிலும் போன சாப்டரில் என்ன நடந்தது என்று ஒரு சுருக்கத்தோடு ஆரம்பிப்பார். பத்திரிகையில் தொடர்கதையாக படிக்கும்போது அது உபயோகமாக இருக்கலாம். நாவலாக படிக்கும்போது எரிச்சல் ஊட்டுகிறது. இயற்கை வர்ணனை, ஹீரோயின் வர்ணனை ஆகியவற்றை எடுத்துவிட்டால் புத்தக கனம் பாதியாக குறைந்துவிடும்.

சமயத்தில் அவர் சரித்திரத்தை மாற்றவும் தயங்குவதில்லை. பல்லவ அரசனான தந்திவர்மன் ராஷ்டிரகூடர்களால் தோற்கடிக்கப்பட்டான். பல்லவ திலகம் கதையில் தந்திவர்மன் ஹீரோ. ஹீரோ தோற்கக் கூடாது, அதனால் அவர் ராஷ்டிரகூடர்களை வெல்வான். பிறகு நான் வென்றாலும் உன்னிடம் தோல்வியை ஒத்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிடுவான். 🙂

சாண்டில்யனின் புத்தகங்களில் யவனராணி, கடல்புறா, மலைவாசல், ராஜமுத்திரை, கன்னிமாடம் ஆகியவை சுவாரசியமானவை. ஜலதீபம் (இரண்டாம் பாகம் சுத்த வேஸ்ட் – இந்த பகுதி பூராவும் ஒரு வெள்ளைக்காரி ஹீரோவை மயக்க முயற்சிப்பாள், அவ்வளவுதான்), ஜீவபூமி, அவனிசுந்தரி, பல்லவ திலகம், மூங்கில் கோட்டை, ஜலமோகினி, கவர்ந்த கண்கள், மஞ்சள் ஆறு, நாகதீபம் ஆகியவை படிக்கலாம். பாண்டியன் பவனி, ராஜயோகம், நிலமங்கை, சேரன் செல்வி, ராணா ஹமீர், துறவி போன்றவை எல்லாம் வேஸ்ட்.

அவரது முதல் சமூக நாவலான பலாத்காரம் (புரட்சிப் பெண்) மிக அமெச்சூர்தனமாக எழுதப்பட்டது. அந்த நாவலின் ஒரே ஆச்சரியம் சத்தியமூர்த்தி இதை எப்படி இவ்வளவு சிலாகித்து ஒரு முன்னுரை எழுதினர் என்பதுதான். அவரது ராஜஸ்தானிய நாவல்கள் பல கொடுமையாக இருக்கும். கர்னல் டாட் எழுதிய Annals and Antiquities of Rajasthanஇலிருந்து ஒரு வரி எடுத்துக் கொள்வார். அதை வைத்து ஒரு நூறு பக்கத்துக்கு ஒரு கதை எழுதுவார்.

ராஜயோகம், நிலமங்கை, சேரன் செல்வி என்ற மூன்றும் ஒரு trilogy மாதிரி வந்தது என்று நினைவு. இப்படி எழுதுவது தமிழில் அபூர்வம்.

சாண்டில்யன் கிளுகிளு எழுத்தாளரும் கூட. சமயத்தில் போர்னோ மாதிரி எழுதுவார். ஆனால் அவர் எழுதுவது porno அல்ல, boreனோ. சும்மா சும்மா கவர்ச்சி பிரதேசம், விம்மி நின்றது, உராய்ந்தார்கள் என்று எழுதினால் யார் படிப்பது? கிடுகிடுவென்று பக்கங்களை புரட்டிவிடலாம். ஆனால் அந்தக் காலத்தில் வாரப் பத்திரிகைகளில் இப்படி ஒருவர் பச்சை பச்சையாக எழுத முடிந்தது என்பது ஆச்சரியமே. ஒரு முறை குமுதத்தில் இது ஆழம், உள்ளே சுலபமாகப் போகும் இல்லை போகாது என்றெல்லாம் காதலனும் காதலியும் பேசுவதாக எழுதி இருந்தார். காதலன் கப்பலையும் கடலையும் பற்றி பேசுகிறான் என்று தாமதமாக உணர்ந்த காதலி வெட்கப்பட்டாள் என்று முடிப்பார். டீனேஜ் காலத்தில் இதைப் படித்துவிட்டு ஆச்சரியப்பட்டேன். (கதை பெயர் நினைவில்லை, கடைசி நாயக்கர் ராணி மீனாட்சியின் மகன் விஜயகுமாரன் கதாநாயகன், சந்தாசாஹிபை பழி வாங்குவதாக சபதம் செய்திருப்பான்.)

அவரது போராட்டங்கள் என்ற சுய வாழ்க்கை வரலாற்றை எல்லாருக்கும் சிபாரிசு செய்கிறேன். மிக அற்புதமான memoirs. அதில் அவர் என் வீடு திரைப்படத்தை பற்றி மிகவும் உருகி உருகி எழுதி இருப்பார். ராண்டார்கை இதை பற்றி எழுதி இருப்பது இங்கே. ராண்டார்கை சித்தூர் நாகையாவை பற்றி எழுதிய இந்த கட்டுரையில் சாண்டில்யனும் அவரது நெருங்கிய நண்பர் நாகையாவும் பிற்காலத்தில் சந்தித்த ஒரு நிகழ்ச்சியை பற்றி உருக்கமாக எழுதி இருக்கிறார்.

ஜெயமோகன் யவனராணி, கடல்புறா, மன்னன் மகள் ஆகிய நாவல்களை historical romances-இன் முதல் பட்டியலிலும் ஜலதீபம், கன்னிமாடம், மூங்கில் கோட்டை, ராஜமுத்திரை ஆகிய நாவல்களை historical romances-இன் இரண்டாம் பட்டியலிலும் சேர்த்திருக்கிறார்.

விக்னேஸ்வரன் என்பவர் சில சாண்டில்யன் நாவல்களுக்கு விமர்சனங்கள் எழுதி இருக்கிறார். கடல் புறா, மன்னன் மகள், ராஜயோகம் ஆகியவற்றுக்கான விமர்சனங்கள் கிடைக்கின்றன.

என் கண்ணில் சாண்டில்யனின் புத்தகங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை இல்லை. இலக்கியத் தரம் இல்லை. தமிழ் உரைநடை வரலாற்றில் அவர் ஒரு footnote மட்டுமே. ஆனால் தமிழர் பிரக்ஞையில் சரித்திர நாவல் ஆசிரியர் என்றால் சாண்டில்யன்தான். அவர் ஒரு கால கட்டத்தின் பிரதிநிதி. அவர் மூலமாக நான் கற்றுக் கொண்ட சரித்திரம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அவர் அளவுக்குக் கூட அகிலன், ஜெகசிற்பியன் போன்றவர்கள் எழுதவில்லை. அவரது புத்தகங்கள் இன்னும் விற்கின்றன. அவரது புத்தகங்களை நாட்டுடமை ஆக்க தமிழக அரசு முன்வந்தபோது அவரது வாரிசுகள் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சரித்திர நாவல்கள்

ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், சுஜாதா, ஆர்வி நால்வரும் தேர்ந்தெடுத்த தமிழ் சிறுகதைகள்

சமீபத்தில் சுஜாதாவுக்கு பிடித்த தமிழ் சிறுகதைகள் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். நான் அடிக்கடி quote செய்வது ஜெயமோகனின் சிறுகதை சிபாரிசுகள், மற்றும் எஸ்.ரா.வின் சிபாரிசுகள். அப்புறம் எனக்கு பிடித்த தமிழ் சிறுகதைகள் என்றும் ஒரு லிஸ்ட் போட்டிருந்தேன். நாங்கள் நான்கு பேருமே சிறந்தது என்று சொல்லும் சிறுகதைகள்:

  1. அசோகமித்ரனின் புலிக்கலைஞன்
  2. திலீப் குமாரின் கடிதம்
  3. கிருஷ்ணன் நம்பியின் மருமகள் வாக்கு
  4. கு. அழகிரிசாமியின் அன்பளிப்பு
  5. சுந்தர ராமசாமியின் பிரசாதம்
  6. வண்ணநிலவனின் எஸ்தர்

ஜெயமோகன், எஸ்.ரா., சுஜாதா ஆகியோர் எங்கே, நீ எங்கே என்று நினைப்பவர்களுக்காக: அவர்கள் மூன்று பேரும் தேர்ந்தெடுத்த, நான் தேர்ந்தெடுக்காத சிறுகதைகள்.

  1. ஆ. மாதவனின் நாயனம்
  2. வண்ணதாசனின் நிலை
  3. கு.ப.ரா.வின் விடியுமா?

இவை மூன்றுமே நல்ல சிறுகதைகள்தான். ஆனால் என் லிஸ்டில் வராது.

நாங்கள் நால்வரும் சிறுகதைகளை தேர்ந்தெடுக்க வேறு வேறு methodology-களை பயன்படுத்தி இருக்கிறோம்.

ஜெயமோகன் தன் கணிப்பில் சிறந்த சிறுகதையா இல்லையா என்று மட்டும் பார்க்கிறார். எத்தனை சிறுகதை இந்த எழுத்தாளருக்கு என்றெல்லாம் அவர் அலட்டிக் கொள்ளவில்லை. தன் கணிப்பில் சிறந்த சிறுகதைகள் என்னவோ அவை அத்தனையும் லிஸ்ட் போட்டுவிட வேண்டும் என்று நினைக்கிறார். உதாரணமாக புதுமைப்பித்தனின் 12 கதைகளை தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர் லிஸ்ட் மிக பெரியது. 250+ சிறுகதைகள் இங்கே உண்டு.

சுஜாதா ஒரு எழுத்தாளருக்கு ஒரு கதை மட்டும் என்ற விதி வைத்திருக்கிறார். அசோகமித்திரன், புதுமைப்பித்தன், சு.ரா., கி.ரா. தி.ஜா. போன்ற மாஸ்டர்களுக்கு ஒரே கதைதான் என்பது கொஞ்சம் கடுமையான விதி. அவருடைய லிஸ்ட் இதனால் மிக குறுகிவிட்டது.

எஸ்.ரா. இருவருக்கும் நடுவில். நூறு சிறுகதைகள் உள்ள லிஸ்ட் என்று arbitrary ஆக முடிவு செய்துவிட்டார். ஒரு எழுத்தாளருக்கு இரண்டு அல்லது மூன்று சிறுகதைகளுக்கு மேல் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று அவருக்கு ஒரு கணக்கு இருக்கிறது.

இந்த லிஸ்டில் சில ஆச்சரியங்கள் இருக்கின்றன. புதுமைப்பித்தன் இல்லை. தி.ஜா. இல்லை. கி.ரா. இல்லை. காரணம் இந்த methodology-தான். சுஜாதா ஒரு எழுத்தாளரின் சிறந்த கதை என்று தேர்ந்தெடுத்தது எஸ்.ராவின் எண்ணத்தில் அவரது மூன்றாவது அல்லது நான்காவது சிறந்த கதையாக இருந்தால் போச்சு. லிஸ்டில் வராது!

நான் ஏறக்குறைய ஜெயமோகன் methodology-யைப் பயன்படுத்தி இருக்கிறேன். எனக்கு பிடித்த சிறுகதைகள் எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்றுதான் முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் என் வாசிப்பு இந்த மூன்று பேர் அளவுக்கு பரந்த வாசிப்பு இல்லை. அப்புறம் நான் இவர்களைப் போல தேர்ந்த வாசகன் இல்லை, ஆரம்ப நிலைக்கு கொஞ்சம் மேற்பட்ட வாசகன், அவ்வளவுதான். என் தேர்வுகளின் அடிப்படை என் ரசனை மட்டுமே. பின் நவீனத்துவம், முன் நவீனத்துவம், நடு நவீனத்துவம் என்றெல்லாம் நான் யோசிப்பதில்லை. எனக்கு பிடித்திருக்கிறதா இல்லையா என்பது மட்டுமே அளவுகோல். அப்புறம் எனக்கு வரலாறு தெரியாது. ஒரு கதை என்ன தாக்கத்தை உருவாக்கியது என்றெல்லாம் நான் கவலைப்படுவதில்லை, தெரியவும் தெரியாது. எல்லாவற்றையும் விட முக்கியம் – நான் அமேரிக்கா வந்து 18 வருசம் ஆகிவிட்டது. என்னுடைய ரேடாரில் இருப்பது அனேகமாக நான் இங்கே வருவதற்கு முன் கேள்விப்பட்ட எழுத்தாளர்களே. ஒரு பெருமாள் முருகனையும் தமயந்தியையும் யூமா. வாசுகியையும் நான் படிப்பதும் படிக்காமல் இருப்பதும் தற்செயலே. எனக்கு தெரிந்த நவீன தமிழ் இலக்கியம் 92-இல் தேக்கம் அடைந்திருக்கிறது. 🙂 இப்போது இணையத்தின் புண்ணியத்தில் இந்த தேக்கம் கொஞ்சம் கொஞ்சம் உடைந்திருக்கிறது.

இந்தியாவிலும் என்ன படிப்பது என்று தெரியாமல் கஷ்டப்பட்டிருக்கிறேன். ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு இந்த பிரச்சினை கொஞ்சம் அதிகமாக உண்டு என்று நினைக்கிறேன். லிஸ்ட் போடுவதும், படிக்க சிபாரிசு செய்வதும் என்ன படிப்பது என்று யோசிப்பவர்களுக்கு கொஞ்சமாவது உதவியாக இருந்தால் ஒரு திருப்தி கிடைக்கும்.

அன்பளிப்பு தவிர்த்த மற்ற கதைகள் அழியாச்சுடர்கள் ராம் புண்ணியத்தில் இணையத்தில் கிடைக்கின்றன. அதையும் ஒரு நாள் போடாமலா போய்விடுவார்? போட்டுவிட்டார். 🙂

தொடர்புடைய பதிவுகள்:
ஜெயமோகன் தேர்வு
எஸ்.ரா. தேர்வு
சுஜாதா தேர்வு
ஆர்வி தேர்வு