பாலகுமாரனின் ‘இரும்பு குதிரைகள்’

இரும்பு குதிரைகள் கல்கியில் தொடர்கதையாக வந்தது என்று நினைவு. தொடர்கதையாகப் படிக்கும்போது மனதில் ஆழமாகப் பதிந்தது மன்னார்குடி வாத்தியார் ஒருவர் தான் வேலையிலிருந்து ஓய்வு பெறும்போது பிரிவுபசார நிகழ்ச்சியில் பேசுவது. போதும் போதாமல் இருக்கும் சம்பளமும் போய்விட்டால் ஏழை வாத்தியாரின் கதி என்ன என்ற கேள்வி மிக நிஜமானது. என் அம்மா/அப்பா பள்ளி ஆசிரியர்கள்தான். என் அத்திம்பேர் (அபிராமண மொழியில் அத்தையைக் கட்டிய மாமா) மன்னார்குடியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இப்போது இருப்பதைப் போல ஓய்வூதியத்தில் சௌகரியமாக எல்லாம் வாழ்ந்துவிட முடியாத காலம். என்னை தாக்கிய உரை அது.

பிற்காலத்தில் அந்த வாத்தியார் பாத்திரம் கரிச்சான் குஞ்சுவால் inspire ஆனது என்று தெரிய வந்தது ஒரு சின்ன சுவாரசியம்.

ஆனால் அப்போதே அடுத்தடுத்த பகுதிகளில் என்ன இந்த ஆள் பெண்கள் பற்றிய தன் கனவுகளை (fantasies) கதையில் வலிந்து புகுத்துகிறாரே என்று தோன்றியது. நாயகி மணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவாள். குழந்தையின் உயிரியல் தந்தைக்கு எந்தப் பொறுப்பும் கிடையாது. இன்றே அப்படி ஒரு விருப்பம் சமூகத்தில் புருவத்தைத் தூக்க வைக்கும். அன்று மகா செயற்கையாக இருந்தது. மீண்டும் இந்தப் பதிவுக்காகப் படித்துப் பார்த்தேன், வெறுமனே வாசகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவதற்காக – பகல் உணவை டப்பாவில் கட்டிக் கொண்டு கையில் விகடனையோ கல்கியையோ எடுத்துக் கொண்டு அலுவலகத்துக்கு பஸ்ஸிலோ ரயிலிலோ சென்று கொண்டிருந்த அன்றைய டிபிகல் மத்திய தர வர்க்க வாசகனை, குறிப்பாக முப்பத்தி சொச்சம் வயது வாசகியை, ‘பாருடீ இப்படி எல்லாம் எழுதறான்’ என்று லேசான கிளுகிளுப்புடன் அங்கலாய்த்துக் கொள்ள வைப்பதற்காக – வலிந்து புகுத்தப்பட்ட செயற்கையான முடிச்சு என்று நிச்சயமாகத் தெரிந்தது. உண்மையைச் சொல்லப் போனால், இந்த செயற்கையான முடிச்சு இல்லாவிட்டால், வாத்தியாரின், அவரது மகள் காயத்ரியின், கவிதை எழுதும் நாயகனின் சித்தரிப்பு கதையின் தரத்தை உயர்த்தி இருக்கும்.

சமூகத்தில் உள்ள விழுமியங்களை, பிம்பங்களை தன் எழுத்தால் கட்டுடைக்க வேண்டும் என்ற விழைவுக்கும் வாசகர்கள் தன் எழுத்தால் அதிர்ச்சி அடைய வேண்டும் என்ற விழைவுக்கும் நடுவில் ஒரு மெல்லிய கோடுதான் இருக்கிறது. புதுமைப்பித்தன் பொன்னகரத்திலும், ஜெயகாந்தன் அக்னிப்பிரவேசத்திலும் தி.ஜா. அம்மா வந்தாளிலும் அந்தக் கோட்டை அனாயாசமாகத் தாண்டுகிறார்கள். திறமை இருந்தும் பாலகுமாரனால் அந்தக் கோட்டை என்றுமே தாண்ட முடிந்ததில்லை. தனிப்பட்ட முறையில் தனக்கு எந்த மாதிரி உறவு வேண்டும் என்று நினைக்கிறாரோ அதை வலிந்து புகுத்திவிடுகிறார், அது அவரது சில நல்ல படைப்புகளையும் பெரிதும் பலவீனப்படுத்துகிறது.

நண்பர் ரெங்கசுப்ரமணி இதற்கு ஒரு சிறப்பான விமர்சனம் எழுதி இருக்கிறார். அதைப் படித்த பிறகு எனக்கு லாரித் தொழிலின் பின்புலம் இந்த நாவலின் பலங்களில் ஒன்று, அதைக் குறிப்பிட மறந்துவிட்டோமே என்று தோன்றியது.

பாலகுமாரன் ஏன் நல்ல இலக்கியவாதி இல்லை என்பதைப் புரிந்து கொள்ள இந்த ஒரு புத்தகம் போதும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாலகுமாரன் பக்கம்

தொடர்புடைய சுட்டி: ரெங்கசுப்ரமணியின் விமர்சனம்

4 thoughts on “பாலகுமாரனின் ‘இரும்பு குதிரைகள்’

  1. அந்த லூசுப் பெண் பாத்திரம் மட்டும் இல்லையென்றால இது ஒரு நல்ல நாவலாக இருந்திருக்கும்.

    முன்பு என் தளத்தில் எழுதியது

    //
    நாவலை கெடுப்பது என்பது நான் நினைப்பது காயத்ரி பாத்திரம் மட்டுமே.

    இம்மாதிரி பாத்திரங்கள்தான், நான் முதல் பத்தியில் சொன்ன ஆசாமிகளை உருவாக்குவது. ஓவர் இண்டெல்க்சுவலாக நினைத்துக் கொண்டு பேசுவது. எரிச்சல்தான் வருகின்றது. கல்யாணமாகாமல் குழந்தையை மட்டும் பெற்றுக் கொள்ள விரும்பும் பெண். அது ஒன்றும் பெரிய அதிர்ச்சி லெவல் இல்லை, ஆனால் பேசுவது அப்பா. தாங்க முடியவில்லை.

    நாவலில் வரும் கவிதைகள், மற்றுமொரு ஸ்பீட் ப்ரேக்க்கர். ஏகப்பட்ட கவிதைகள். கவிதை விரும்பிகள் படித்து இன்புறுவார்களாக.

    அவரறிந்த உலகில் ஒரு சிறு பகுதியை இதில் காட்டியுள்ளதாகவே நினைக்கின்றேன்.//

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.