கீழ்வெண்மணி

கீழ்வெண்மணியில் கூலியை உயர்த்த வேண்டும் என்று கேட்டதற்காக எரிக்கப்பட்டவர்களை நாம் எல்லாரும் அனேகமாக மறந்தேவிட்டோம். தமிழ் நாட்டின் மோசமான களங்கம் என்பது எரித்த கோபாலகிருஷ்ண நாயுடு கோர்ட்டில் நிரபராதி என்று வெளியே வந்ததுதான். இன்றைக்கு கீழ்வெண்மணி பற்றி சில சமயம் தலித் சார்பு கட்டுரைகள் குறிப்பிடுகின்றன, அவ்வளவுதான். இன்றைய இளைஞர்களுக்கு இது பற்றி தெரிந்தால்தான் ஆச்சரியம் என்று நினைக்கிறேன்.

இத்தனை மோசமான நிகழ்ச்சி கதைகளிலும் இலக்கியத்திலும் பெரிய இடம் வகிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதை போன்ற ஒரு அநியாயம் இலக்கியவதிகளை எழுதத் தூண்டாதது ஆச்சரியம்!

இந்திரா பார்த்தசாரதி எழுதிய குருதிப்புனல் மூலமாகத்தான் என் ஜெனரேஷன் ஆட்களில் பலர் இதை பற்றி தெரிந்தே கொண்டோம். இத்தனைக்கும் குருதிப்புனல் சுமாரான நாவலே. அதை தேவை இல்லாமல் நாயுடு காரக்டர் ஆண்மைக் குறைவு உள்ளவன் என்று இ.பா. எங்கெங்கோ கொண்டு சென்றார். தனி மனிதக் குறைபாடுகள் பெரும் விபரீதங்களை ஏற்படுத்தக் கூடும் என்று இ.பா. சொல்ல நினைத்தாரோ தெரியாது, ஆனால் நான் இந்த புத்தகத்தை பற்றி யாரிடம் பேசினாலும் அந்த ஆண்மைக் குறைவு பற்றி பற்றி பேச்சு வராமல் இருந்ததில்லை. ஒரு விதத்தில் அந்த பயங்கரத்துக்கு இந்த மாதிரி ஒரு விஷயம்தான் காரணம் என்று சப்பைக்கட்டு கட்டுவது போலவும், அந்த பயங்கரத்தை கொஞ்சம் cheapen செய்வது போல இருந்தது.

எனக்கு தெரிந்த முக்கியமான புத்தகம் சோலை சுந்தரப் பெருமாள் எழுதிய செந்நெல் என்ற நாவல். இலக்கியத் தரம் என்று பார்த்தால் அவ்வளவு நல்ல நாவல் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் மிக முக்கியமான ஆவணம். சித்தரிப்பு மிகவும் உண்மையாக இருந்தது. ஒரு thinly disguised டாகுமெண்டரி போல இருந்தது.

பாட்டாளி என்பவர் எழுதிய கீழைத்தீ என்ற ஒரு புத்தகம் வெளிவந்திருக்கிறது. லக்கி லுக் இதற்கு ஒரு அறிமுகம் எழுதி இருக்கிறார். விடுதலை ஆன நாயுடுவை நக்சலைட்கள் கொன்றதை பின்புலமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறதாம். யாராவது படித்திருக்கிறீர்களா? எப்படி இருந்தது?

இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி நம் பிரக்ஞையில் இன்னும் அழுத்தமாகப் பதியவில்லை என்பது ஆச்சரியம்தான். மூன்றே மூன்று புனைவுகள்தானா? வேறு யாரும் எதுவும் எழுதவே இல்லையா? சினிமா கினிமா வரவே இல்லையா?

டாக்டர் ருத்ரன் குருதிப்புனல் கண் சிவந்தால் மண் சிவக்கும் என்ற முட்டாள்தனமான திரைப்படமாக வந்தது என்று தகவல் தருகிறார். எனக்கு அந்தப் படத்தைப் பற்றி நினைவிருப்பது மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் என்ற பாட்டுதான். ஜெயமோகன் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பா. கிருஷ்ணகுமார் ராமையாவின் குடிசை என்ற சிறந்த ஆவணப்படம் எடுத்திருக்கிறார் என்று தகவல் தருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்:
குருதிப்புனல்

6 thoughts on “கீழ்வெண்மணி

  1. பா கிருஷ்ணகுமார் [மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் பேச்சாளர்.] மிகச்சிறந்த ஆவணப்படம் எடுத்திருக்கிறார். கீழ் வெண்மணி. அதைப்பற்றி நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். எங்கே என நினைவில்லை….

    Like

  2. நான் கீழைதீ படித்திருக்கிறேன் ,,,நல்ல உரைநடை … கண்முன்னே காட்சிகளை அரங்கேற்றும் …நல்ல படைப்பு

    Like

    1. இன்பா, விருப்பம் இருந்தால் கீழைத்தீக்கு ஒரு விமர்சனம் எழுதுங்களேன், இங்கேயே பதிக்கலாம்… (ஈமெயில்: rv டாட் subbu அட் ஜிமெயில்)

      Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.