அனிமல் ஃபார்ம்

(இது ஒரு மீள் பதிவு – முன்பு கூட்டாஞ்சோறு தளத்தில் வெளியானது)

 

animalfarm
வெகு நாட்களாக இந்த புத்தகத்தை படிக்கவேண்டும் என்று ஒரு ஆவலிருந்தது. RVயிடம் புத்தகத்தை கேட்டிருந்தேன். ஓவ்வொரு முறையும் அவனிடமிருந்து விடைபெறும் பொழுது மறந்து விடுவேன். என்னுடைய பெண் பிருந்தாவிற்கு இலக்கிய வகுப்பிற்க்காக பள்ளியில் இந்த புத்தகம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதை அவள் படித்து முடித்தும் நான் எடுத்துக் கொண்டேன். அவள் ஒரு எச்சரிக்கை கொடுத்தாள். “Daddy, don’t read the introduction, it will give away the story” என்றாள். நானும் அதை முழுமையாக ஏற்றுக் கொண்டு பிரிஃபேஸ், இண்ட்ரொடக்‌ஷன் இரண்டையும் விட்டு விட்டு படிக்கத் தொடங்கினேன். பின்னர் அவை இரண்டையும் படித்து சரி பார்த்தேன். பிருந்தா சொன்னது ஓரளவு சரியாகத்தானிருந்தது. கதையில் வரும் மேஜர், ஸ்னோபால், நெப்போலியன் கதாபாத்திரங்களை நிஜபாத்திரங்களுடன் உடனே அடையாளம் கண்டுகொண்டேன். இன்னும் சில பாத்திரங்களையும் கண்டு கொள்ளமுடிந்தது. சில பாத்திரங்களை கண்டுபிடிக்கமுடியவில்லை.

பண்ணை வைத்திருக்கும் மிஸ்டர்.ஜோன்ஸை எதிர்த்து பண்ணை மிருகங்கள் புரட்சி செய்து பண்ணையின் நிலைமையை மாற்றிய கதை.  இது காலத்தினுடன் சேர்த்து பார்த்து படித்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். இப்பொழுது படிப்பவர்களுக்கு எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும் என்று தெரியவில்லை. ரஷ்யப் புரட்சி, கம்யூனிஸம், கார்ல் மார்க்ஸ், லெனினின், ஸ்டாலின், ட்ராட்ஸ்கி ஆகியவர்களின் மேல் நாட்டமுள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த இலக்கியம்.

ஜார்ஜ் ஆர்வெல் கலையையும், அரசியலையும் பிணைத்து அழகான இலக்கியமாக Animal Farmஐ நமக்கு வழங்கியுள்ளார். இன்றைய காலத்தில் ”அரசியலில் இதெல்லாம் சகஜம்” என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால் 1920-1950 காலகட்டங்களில் புரட்சி மலர்ந்தால் நமக்கு தினம் விருந்து என்று கனவு கண்டு கொண்டிருந்த பல கோடி மக்களுக்கு அரசியல்வாதிகளின் அந்தர் பல்டிகள் மிகுந்த ஏமாற்றமாகியிருக்கலாம். இன்று இருக்கும் நமக்கு அரசியல்வாதிகள் செயல்கள் இவ்வளவு ஏமாற்றம் அடைய செய்யாது. ஏனென்றால் அன்றைய காலத்தை விட இன்று அரசியல்வாதிகள் நிறையவே மக்களை தலையில் மிளகாய் அரைத்து மொட்டையாக்கி விட்டார்கள். ஏதாவது கொஞ்சம், நஞ்சம் முடி இருந்தாலும் அதையும் திருடி விற்று காசு பார்த்துவிடுவார்கள். இதனால் மக்கள் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை கேட்டும், செயல்களை பார்த்தும் தங்கள் மொட்டை தலையை தடவிப் பார்த்து பழகிக் கொண்டார்கள்.

இன்று Animal Farmஐ இலக்கிய ஆர்வத்துடன் படிப்பவர்களுக்கு, இது இன்றும் மகிழ்வூட்டும் ஒரு புத்தகம். மிருகங்களின் ஏழு கட்டளைகள் (மோசஸின் 10 கட்டளைகளை போல்), Beasts of England என்ற கவிதை எல்லாம் நல்ல தமாஷ்.

அதிகம் கதையை சொல்லவேண்டாம் என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன். புத்தகத்தை ஆன்லைனில் படிக்க விரும்புவோர் இங்கே சொடுக்கவும்.