நிகோலாய் கோகோலின் “ஓவர்கோட்”

எனக்கு மிகவும் பிடித்தமான கதைகளில் இதுவும் ஒன்று. டோஸ்டோவ்ஸ்கி சொன்னாராம் – “ரஷிய எழுத்தாளர்கள், கதைகள் எல்லாமே கோகோலின் ஓவர்கோட் கதையிலிருந்து வந்தவைதான்” என்று. நாலைந்து முறை படித்திருக்கிறேன், ஒவ்வொரு முறையும் கதையின் simplicity என்னை வியக்க வைக்கிறது. கொஞ்சம் பெரிய கதை – குறுநாவல் என்று சொல்லலாம். கட்டாயமாகப் படியுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்:

தொடர்புடைய சுட்டி:
ஓவர்கோட் பற்றிய விக்கி குறிப்பு

ஆனா அபொஸ்டொலு

அலெக்சாண்டர் காலத்தில் நடப்பதாக எழுதப்பட்டிருக்கும் இரண்டு துப்பறியும் கதைகள். இரண்டையும் படிக்கலாம். இந்த ஐடியா தமிழில் வந்தால் நன்றாக இருக்காது? பெரிய பழுவேட்டரையர் துப்பறிகிறார்!

A Murder in Macedon: அலெக்சாண்டரின் அப்பாவான ஃபிலிப் கொல்லப்படுகிறார் – எல்லார் முன்னாலும், அவரது நம்பகமான போர் வீரனால். இது நடக்கும்போது அலெக்சாண்டரின் அம்மாவை தள்ளி வைத்துவிட்டு ஃபிலிப் வேறு ஒரு இளம் பெண்ணை வேறு மணந்து கொண்டிருக்கிறார். அலெக்சாண்டர் ஃபிலிப்புக்கு பிறந்தவர் இல்லை, அவருக்கு அரசாள உரிமை இல்லை என்று ஒரு வதந்தி உலாவுகிறது. அதனால் இந்த கொலை பற்றி அலெக்சாண்டர் மேல் கூட சந்தேகம் இருக்கிறது. இவை எல்லாம் ஆவணங்களில் இருக்கிறது.
யார் கொலை செய்தது, ஏன் கொலை நடந்தது என்று அலெக்சாண்டரின் தோழி (தோழி மட்டுமே) ஆன மிரியம் துப்பறிகிறாள். கதையில் அந்த வீரன் ஃபிலிப்பின் முன்னாள் காதலன் கூட. (கிரேக்க நாட்டில் அப்போது ஓரினச்சேர்க்கை சர்வ சாதாரணமான விஷயமாக இருந்திருக்கிறது.) ஃபிலிப்பை கொல்ல பாரசீக டாரியஸ், ஏதென்சின் டெமாஸ்தனிஸ் போன்றவர்கள் விரும்புகிறார்கள்.

A Murder in Thebes: ஃபிலிப்பின் மரணத்துக்கு பிறகு அவர் வென்ற கிரேக்க நகரங்கள் அலெக்சாண்டருக்கு அடி பணிய விரும்பவில்லை. தீப்ஸ் அலெக்சாண்டருடன் போரிடுகிறது. அலெக்சாண்டர் தீப்சை முழவதுமாக எரித்துவிடுகிறார். இது சரித்திரத்தில் படிக்கக் கூடிய நிகழ்ச்சி. இந்த பின்புலத்தில் எழுதப்பட்ட நாவல். தீப்ஸ் அலெக்சாண்டர் இறந்துவிட்டதாக ஒரு வதந்தியை கேள்விப்படுகிறது. தீப்சில் இருக்கும் ஒரு மாசிடோனியப் படையை தொல்லைப்படுத்துகிறது. அவர்களின் ஒரு தளபதியை பேச்சு வார்த்தைக்கு அழைத்து அங்கேயே கொன்றுவிடுகிறது. இன்னொரு தளபதி பூட்டிய அறையிலிருந்து கீழே விழுந்து இறக்கிறான். அங்கே இருக்கும் ஒரு கோவிலில் கிரேக்க தொன்மங்களில் வரும் ஈடிபசின் கிரீடம் இருக்கிறது. அதை அணிய அலெக்சாண்டர் விரும்புகிறார், ஆனால் அதை எடுப்பது கஷ்டம். ஐதீகப்படி அதை சில விதி முறைகளுக்கு உட்பட்டு எடுக்க வேண்டும். மிரியம் மீண்டும் துப்பறிகிறாள்.

ஆனா அபொஸ்டொலு (Anna Apostolou) என்பது பால் சி. டோஹர்டி (Paul C. Doherty) என்பவரின் புனைபெயர்.

இரண்டையும் படித்துவிட்டு தூக்கிப்போட்டு விடலாம். எனக்கு இவற்றில் உள்ள சுவாரசியம் எல்லாம் சரித்திர சம்பவங்களை வைத்து ஒரு துப்பறியும் கதை எழுதப்பட்டிருப்பதுதான். துப்பறியும் கதைகளில் இது ஒரு sub-genre. லிலியன் டி லா டோரே (Lilian de la Torre) என்பவர் முதல் ஆங்கில அகராதியை தொகுத்த சாமுவேல் ஜான்சன் துப்பறிவதாக சில கதைகள் எழுதி இருக்கிறார். உம்பர்டோ ஈகோ (Umberto Eco) எழுதிய Name of the Rose புகழ் பெற்ற நாவல், படிக்க சுவாரசியமாகவும் இருக்கும். வேறு எதுவும் எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

தொடர்புடைய சுட்டி:
பால் சி. டோஹர்டி பற்றி விக்கி குறிப்பு