க.நா.சு. புதுமைப்பித்தனை சந்திக்கிறார்

க.நா.சு. மணிக்கொடி அலுவலகத்துக்கு முதல் முறையாகப் போகிறார், தன் கதைகளை பிரசுரிப்பார்களா என்று தெரிந்து கொள்ள. அங்கே பி.எஸ். ராமையாவையும் புதுமைப்பித்தனையும் சந்திக்கிறார். இரண்டும் நிமிஷம் பேசிய பிறகு க.நா.சு.வும் தங்கள் கோஷ்டிதான், தேறாத கேஸ் என்று புதுமைப்பித்தன் தீர்ப்பு சொல்லிவிடுகிறார்! சுட்டி இங்கே.

அழிசி ஸ்ரீனிவாச கோபாலனுக்கும் அழியாச்சுடர்களுக்கும் நன்றி!

சுட்டி கொடுத்தால் போதும்தான், ஆனால் இதை சிலிகன் ஷெல்ஃபிலும் பதித்து வைக்க வேண்டும் என்று ஒரு நப்பாசை. அதனால் கீழே கட் பேஸ்ட் செய்திருக்கிறேன்.


முதல் தடவை புதுமைப்பித்தனைச் சந்தித்தது நினைவுக்கு வருகிறது. மணிக்கொடி காரியாலயத்தில் ஒரு சனிக்கிழமை நண்பகல் பன்னிரண்டு மணிக்கு கதைகள் கொடுத்தால் அவர்கள் போடுவார்களா என்று கேட்கப் போயிருந்தேன். 1935 நவம்பர் என்று எண்ணுகிறேன். மழை பெய்து ஓய்ந்திருந்தது.

இரண்டு ஆசாமிகளைச் சந்தித்தேன். ஒருவர் கண்ணால் பயமுறுத்துகிறவராக இருந்தார். ஒருவர் பல்லால் பயமுறுத்துகிறவராக இருந்தார். இருவரும் பயமுறுத்துகிறவர்களாகத்தான் அப்போது தோன்றினார்கள். கண் பி. எஸ். ராமையா என்றும், பல் சொ. விருத்தாசலம் என்கிற புதுமைப்பித்தன் என்றும் அறிந்துகொண்டேன்.

“ராசா கதை எழுதப் போறாக, என்ன சொல்றீக?” என்று பல் கண்ணைக் கேட்டது.

“எழுதட்டுமே. நமக்கென்ன ஆட்சேபம்?” என்றது கண்.

“கதை போட்டால் ஏதாவது பணம் கொடுப்பதுண்டா?” என்று அப்பாவித்தனமாகக் கேட்டேன். சொ.வி. கடகடவென்று உள்பற்களும் தெரிய சிரிக்க ஆரம்பித்துவிட்டார். கண் ஆசிரியராக லட்சணமாகப் பதில் சொல்லிற்று. “மணிக்கொடியில் கதை போட நீங்கள்தான் பணம் கொடுக்க வேண்டும். நாங்கள் கதைகளை விலை கொடுத்து வாங்குவதில்லை” என்றார்.

“விலைமதிப்பில்லாத கதைகளாக எழுதுங்கள்” என்றது பல்.

“போன இதழில் ‘சில்பியின் நரகம்’ என்று ஒரு கதை வந்ததே… படித்தீரா?” என்று கேட்டது கண்.

“நல்ல கதை. படித்தேன். அதனால்தான் என் கதையையும் போடுவீர்களா என்று கேட்க வந்தேன்?”

“நல்ல கதைகளாக நான் ஒருவன் எழுதுகிறேனே, போதாதா?” என்று கேட்டது பல்.

“அவர்தான் அந்தக் கதையின் ஆசிரியர்.”

“அப்படியா? சந்தோஷம் உங்களைச் சந்தித்ததில்.”

“அப்படிச் சொல்லு ராசா!” என்றது பல்.

இது ‘ஹோப்லெஸ் கேஸ்’ என்று நான் எண்ணிக்கொண்டிருக்கும்போது மூன்றாவது ஆசாமி ஒருவர் உள்ளே வந்தார். நல்ல சிவப்பாக, நல்ல உயரமாக, எடுப்பான மூக்குடன், தீட்சண்யமான கண்களுடன், பல்லுக்கும் கண்ணுக்கும் நல்ல காண்ட்ராஸ்ட்.

“இவர் என் ஆர்டிஸ்ட். கே. பாஷ்யம் ஆர்யா” என்றது கண்.

ஆர்யா என்று அவர் சொன்னது ஆர்.ஏ. என்று எனக்குக் காதில் விழுந்தது. ஆர்.ஏ. என்றால் கலை உலகில் ராயல் அகேடெமிசியன் என்பதன் சுருக்கம். கதைகளுக்குப் பணம் தராத பத்திரிகை ஒரு ஆர்.ஏ.யை வேலைக்கு…

“‘ஆர்யா’ என்கிற புனைப்பெயரில் சித்திரங்கள் போடுகிறார். பெரிய ஆர்டிஸ்ட். ஆனால் அதைவிடப் பெரிய தேசபக்தர். பாஷ்யம் சட்டையைத் தூக்கிக் காட்டுங்கள்.” என்று ராமையா பாஷ்யத்துக்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுக்குப் பழக்கப்பட்டவர் போல ஆர்யா தன் சட்டையைக் கழுத்துவரைத் தூக்கிக் காட்டினார். விரல் மொத்தம் குறுக்கும் நெடுக்குமாகத் தழும்புகள் – கசையடித் தழும்புகள். நான் பிரமித்துப்போய் நின்றேன். ஒவ்வொரு தழும்பும் ஒன்பது வாய்களுடன் ‘நீயும் இருக்கிறாயே’ என்று கேட்பது போலத் தோன்றிற்று.

என் பிரமிப்பை நீக்குவதற்கே போல பல் சொல்லிற்று, அவருடைய பேடண்ட் கடகடச் சிரிப்புடன். “என்ன ராசா? பேச்சு வரவில்லை? அவர் தழும்புகள் அவர் முதுகில் தெரிகின்றன. எங்கள் தழும்புகள் உள்ளத்தில் இருப்பதனால் வெளியே தெரிவதில்லை. பாரதியார் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ராசாவே!”

“படித்திருக்கிறேன்.”

“ஹா! ஹா! கேள்விப்பட்டது மட்டுமில்லை. படித்தும் இருக்கிறார் மனுஷன். இதுவும் நம்மைப்போலத் தேறாத கேஸ் என்றுதான் தோன்றுகிறது ராமையா” என்றார்.

இப்படியாக நானும் அன்று தேறாத கேஸாக ‘மணிக்கொடி’ கோஷ்டியில் சேர்ந்துகொண்டேன். உள்ளத்தில் உள்ள வெளியே தெரியாத தழும்புகள், தேறாத கேஸ், பணமில்லாத இடைவிடாத இலக்கிய சேவை என்கிற விஷயங்கள் எல்லாம் தொடருகின்றன. மகாராஜர்கள் ராமையாவும் சொ.வி.யும் போய்விட்டார்கள். நான், அலாஸ் – இருக்கிறேன். சில சமயம் சொ.வி. நல்ல அதிருஷ்டக்காரர். சீக்கிரம் போய்விட்டார் என்று எனக்குத் தோன்றுவதுண்டு

முன்றில் இதழ் 5 (க.நா.சு. நினைவு மலர்)

பின்குறிப்பு: வேலை மும்முரத்தில் இந்தப் பக்கம் வரமுடியவே இல்லை, இனி மேலாவது கொஞ்சம் ரெகுலராக எழுத வேண்டும்…

தொகுக்கப்பட்ட பக்கம்: க.நா.சு. பக்கம், புதுமைப்பித்தன் பக்கம்

எஸ்விவி பற்றி க.நா.சு.

படித்திருக்கிறீர்களா புத்தகம் பற்றி சில முறை எழுதி இருக்கிறேன். எனக்கு அது ஒரு seminal புத்தகம். செகந்தராபாத் புத்தகக் கண்காட்சி ஒன்றில் வாங்கிய கையோடு அங்கேயே வராந்தாவில் படித்தேன், படித்து முடித்தவுடன் அதில் குறிப்பிட்டிருந்த புத்தகங்களைக் கண்காட்சியில் தேடினேன். கிடைத்தது எஸ்விவி எழுதிய உல்லாச வேளை ஒன்றுதான். படிக்கும்போது பிடித்திருந்தது. 20-25 வருஷங்களுக்குப் பிறகு மீள்வாசிப்பில் வெறும் fluff என்றும் தோன்றியது.

அதனால் ஒரு குறைவுமில்லை. க.நா.சு.வின் ரசனையும் என் ரசனையும் வேறு. ஆனால் புத்தகங்களை க.நா.சு. அணுகும் முறையும் நான் அணுகும் முறையும் ஒன்றுதான். அதனால் பசுபதி சார் தளத்தில் இந்தக் கட்டுரையைப் பார்த்தவுடன் சந்தோஷமாக இருந்தது. வசதிக்காக கீழேயும் பதித்திருக்கிறேன். பசுபதி சாருக்கு நன்றி!


தினசரி பழகி, விருப்பும் வெறுப்பும் கொள்கிற மனிதர்களை அறிகிற அளவுக்கு அவர்களையும் நாம் அறிந்து கொள்ள எஸ்.வி.வி.யின் மேதை நமக்கு உதவுகிறது. எவ்வளவு நுட்பமாக எல்லாவற்றையும் கவனித்து, சுலபமாக மனத்தில் பதியும்படியாக விஷயங்களைச் சொல்லியிருக்கிறார் எஸ்.வி.வி.! ஹாஸ்யமாக எழுதியதால்தான் அவருக்குப் பெருமை என்று சொல்லமுடியாது. உண்மைக்கும் கலைக்கும் விரோதமில்லாமல், முரண்பாடில்லாமல், அந்த ஹாஸ்யத்தைக் கையாள முடிந்தது என்பதுதான் எஸ்.வி.வி. யின் தனிச்சிறப்பு.

உல்லாச வேளை என்கிற நூலை நாவல் என்று சொல்வதா? கதைத் தொகுப்பு என்று சொல்வதா? வெறும் கட்டுரைகள் என்று சொல்வதா? மூன்றுமே சொல்லலாம். இலக்கியத்தில் அது எந்த வகுப்பில் சேரும் என்பது பற்றி எஸ்.வி.வி.க்கு ஒரு போதும், தன் எந்த எழுத்திலுமே கவலையிருந்ததில்லை. கலை என்கிற ஞாபகமே அற்ற ஒரு கலைஞர் அவர். இலக்கிய நண்பர்கள் கூட்டமொன்றில் அவர் தான் எழுதுகிறது எப்படி? என்பதைப் பற்றி விவரித்துச் சொன்னார்:

“பேனாவை எடுக்கும்போது எனக்கு என்ன எழுதப் போகிறேன் என்றே தெரியாது. கதைத் திட்டமோ , கதாநாயகன், நாயகியின் பெயரோ என் மனத்திலிராது. சட்டென்று ஏதாவது ஒரு பெயர் வரும். அவன் ஸ்டேஷனுக்குப் போவான். ஸ்டேஷனுக்குப் போய் என்ன செய்வான்? டிக்கெட் வாங்குவான். எந்த ஊருக்கு? ஏதாவது ஒரு ஊருக்கு. தனக்கா? தனக்காகவும் இருக்கலாம், வேறு யாருக்காகவும் இருக்கலாம். அது ரெயில் கிளம்பும்போது தெரிந்திருந்தால் போதுமே! கதாநாயகி அநேகமாக அவன் அறிந்தவளாகவே இருப்பாள். ஆனால், அவளைக் கதாநாயகியாக அதுவரை அறிந்திருக்கமாட்டான் அவன். நான் மனசு வைத்தால்தான் அறிந்துகொள்ள முடியும்…”

எஸ்.வி.வி.யை மற்ற எழுத்தாளர்களிடமிருந்து பிரித்து வைத்தன அவருடைய கண்களும் காதுகளும் என்று சொன்னால் அது மிகையல்ல. காண்பது பூராவையும் கண்ணில் வாங்கவும், கேட்பது பூராவையும் கொச்சை மொழி அந்தரார்த்தங்கள் உள்படக் காதில் வாங்கவும் அவருக்கு ஒரு சக்தியிருந்தது. தான் பார்த்ததையும் கேட்டதையும் அப்படி அப்படியே அழகு பெறச் சிருஷ்டித்துத் தந்திருக்கிறார் எஸ். வி. வி.

நாம் நேரில் அறிந்து கொண்டவர்களையே பல சமயங்களில் எஸ்.வி.வி.யின் எழுத்துக்களிலும் அறிந்து கொள்கிறோம். ஒரு திடமான பழங்கால அறிவுடனும், அநுபவ முதிர்ச்சியுடனும் இன்றைய வாழ்க்கையின் விசேஷங்களை, முக்கியமல்லாவிட்டாலும் அநுபவிக்கக் கூடிய அதிசயங்களை, எடுத்துச் சொன்னவர் எஸ்.வி.வி. இதைத் தினசரி பேச்சுத் தமிழில் சொன்னார் என்பதும், இயற்கையாகவுள்ள ஒரு ஹாஸ்யத்துடனும் சொன்னார் என்பதும் தனி விசேஷங்கள்தான்.

நேற்று – இன்று என்கிற இரண்டு தத்துவங்களுக்குமிடையே இவ்வுலகில் என்றுமே போராட்டம் நடந்து கொண்டுதான் வருகிறது. மனோதத்துவ நிபுணர்கள், தகப்பன் பிள்ளை, தாய் மகன் என்கிற உறவுகள் சிநேக உறவுகள் அல்ல, வெறுப்பு உறவுகளே என்று நிரூபிக்க இந்தக் காலத்தில் வெகுவாக முயன்று ஓரளவு வெற்றியும் பெற்று விட்டார்கள். மனோதத்துவம் என்கிற கானல் நீரிலே எஸ்.வி.விக்கு அவ்வளவாக நம்பிக்கை கிடையாது. அவர் கொண்டுள்ள முடிவுகளும் வற்புறுத்துகிற தன்மைகளும் வாழ்க்கையை நேர்ப் பார்வை பார்த்து அவர் அறிந்து கொண்டவை. ஆனால் நேற்று – இன்று என்கிற தத்துவத்தின் போராட்டத்தை அவரைப்போல தம் தலைமுறைக்கு விவரித்துள்ளவர்கள் வேறு யாருமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். போராட்டம் என்றோ, தத்துவம் என்றோ, இது பெரிய விஷயம் என்றோ சொல்லாமல் (உணராமல் என்று கூடச் சொல்லலாம்) லேசாகச் சொல்லிவிட்டு நகர்ந்து விடுகிறார்.

எஸ்.வி.வி. ஒரு கலைஞர். அவர் எந்த விஷயத்தை எடுத்துக் கையாளலாம், எந்த விஷயத்தைக் கைவிட்டு விட வேண்டுமென்று யாரும் சட்டம் விதிக்க முடியாது. எதுவும், எவ்வளவு சிறிய விஷயமுமே, அவர் நோக்குக்கு உட்பட்டதுதான் – கலைக்கு அஸ்திவாரம்தான்.

உல்லாச வேளையில் நாம் அறிந்து கொள்கிறவர்கள் எல்லோரும் நம்மை விட்டு அகலாத தோழர்கள். முகத்தைச் சுளிக்காமல் நாம் எங்கு சென்றாலும் நம்முடன் கூட வருவார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

முப்பது வருஷங்களுக்கு முன் நான் கோவையில் இண்டர்மீடியேட் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் போது எஸ்.வி.வி. என்கிற மூன்று எழுத்துக்கள் கொண்ட பெயருடன் ஒருவர் தன் முதற் கட்டுரையை ஹிந்துப் பத்திரிகையில் வெளியிட்டார். ஆங்கிலத்தில்தான் எழுதினார் என்றாலும், அது முழுக்க முழுக்கத் தமிழ்க் கட்டுரைதான் என்றே சொல்லலாம். தமிழன் ஆங்கிலம் எழுதினால் இப்படித்தான் எழுத வேண்டும் என்று ஆங்கிலத்தில் ஆசை கொண்டிருந்த எனக்கு அப்போது தோன்றியது. எஸ்.வி.வி. ஒரு ஏழெட்டு வருஷங்களுக்குப் பிறகு தமிழில் எழுதத் தொடங்கினார். அதனால் இன்றையத் தமிழ் இலக்கியம் ஒரு தனி வளம் பெறவே செய்திருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: க.நா.சு. பக்கம்

மணிக்கொடி சதஸ்

ஒரு புகைப்படம் இல்லாமல் போய்விட்டதே என்று வருத்தமாக இருக்கிறது. வேறு பீடிகை இல்லாமல்.

லா.ச.ரா.வின் சிந்தாநதியிலிருந்து:

நாற்பத்தைந்து, நாற்பத்தேழு வருடங்களுக்கு முன் கூடவே இருக்கலாமோ? ஆனால் ஐம்பது ஆகவில்லை.

உங்களை மெரினாவுக்கு அழைத்துச் செல்கிறேன்.

சொல்லத் தேவையில்லையானாலும் கண்ணகி சிலை இல்லை.

ஸப்வே இல்லை. மூர்மார்க்கெட், பின்னால் வந்த பர்மா பஜார் போல் எல்லாப் பொருள்களும் வாங்கக்கூடிய சந்தையாக மெரினா மாறவில்லை. இத்தனை ஜனமும் இல்லை.

மாலை வேளை, வானொலியின் ஒலி பெருக்கிகளை மாட்டியாகிவிட்டது. அங்கேயே சுட்டு அப்பவே விற்கும் பஜ்ஜியின் எண்ணெய் (எத்தனை நாள் Carryover-ஓ?) புகை சூழவில்லை. நிச்சயமாக இப்போதைக் காட்டிலும் மெரினா ஆசாரமாகவும், சுகாதாரமாகவும், கெளரவமாகவும், காற்று வாங்கும் ஒரே நோக்கத்துடனும் திகழ்ந்தது. பூக்கள் உதிர்ந்தாற்போல், இதழ்கள் சிதறினாற்போல், எட்ட எட்ட சின்னச் சின்னக் குடும்பங்கள். நண்பர்களின் ஜமா. அமைதி நிலவுகிறது.

இதோ மணலில், வடமேற்கில் ப்ரஸிடென்ஸி கல்லூரி மணிக் கோபுரத்துக்கு இலக்காக அக்வேரியம் பக்கமாக என்னோடு வாருங்கள். ஆ, அதோ இருக்கிறார்களே, ஏழெட்டுப் பேர் கூடி உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

உஷ் – மணிக்கொடி சதஸ் கூடியிருக்கிறது. அதன் நடு நாயகமாக- அப்படியென்றால் அவர் நடுவில் உட்கார்ந்திருக்கவில்லை. எல்லாருமே சப்தரிஷி மண்டலம் போல் வரிசை இல்லாமல்தான் அமர்ந்திருப்பார்கள். நாயகத் தன்மையை அவருடைய தோற்றம் தந்தது.

அந்நாளிலேயே அவரைத் தென்னாட்டுத் தாகூர் என்று அந்த வட்டம் அழைக்கும். அந்த ஒப்பிடலுக்குப் பொருத்தமாகத்தான் இருந்தார். நடு வகிடிலிருந்து இருமருங்கிலும் கரும்பட்டுக் குஞ்சலங்கள் போலும் கேசச் சுருள்கள் செவியோரம் தோள் மேல் ஆடின. கறுகறுதாடி மெலிந்த தவ மேனி. ஆனால் அந்தக் கூட்டத்தில் பெரும்பாலும் மெலிந்த உடல்தான். சிதம்பர சுப்ரமணியனைத் தவிர, அவர் பூசினாற் போல், இரட்டை நாடி. க.நா.சு, சிட்டி சாதாரண உடல் வாகு.

ந. பிச்சமூர்த்தியின் அழகுடன் சேர்ந்த அவருடைய தனித்த அம்சம் அவருடைய விழிகள். ஊடுருவிய தீக்ஷண்யமான பார்வை. அதன் அற்புதக்ரணத் தன்மை அவருக்குக் கடைசிவரை இருந்தது. உயரத்தில் சேர்த்தி அல்ல. அவரிடம் மற்றவர்கள் காட்டின மரியாதையும், அவர் பேச்சுக்குச் செவி சாய்த்த தனிக் கவனமும், என்றும் சபாநாயகர் அவர்தான் என்பதை நிதர்சனமாக்கியது.

எத்தனைக்கெத்தனை பிச்சமூர்த்தி ஒரு பர்ஸனாலிட்டியாகப் பிதுங்கினாரோ அத்தனைக்கத்தனை அவர் எதிரே உட்கார்ந்திருந்த கு.ப.ரா. தான் இருக்குமிடம் தெரியாமலிருப்பதே கவனமாயிருந்தார் எனத் தோன்றிற்று. பிச்சமூர்த்தியைக் காட்டிலும் குட்டை. அவருடைய கனத்த மூக்குக் கண்ணாடி இல்லாவிட்டால் அவர் பாடு திண்டாட்டம்தான். பேசும்போது அவர் குரல் அவருக்குக் கேட்டதா என்பது என் சந்தேகம்.

பிச்சமூர்த்தியும், கு.ப.ரா.வும் எழுத்தில் கையாள எடுத்துக்கொண்ட விஷயம், பாணி தனித்தனி, ஆனால் ஏன் இவர்களைச் சிறுகதை இரட்டையர்கள் என்று குறிப்பிட்டார்கள்? எனக்குப் புரியவில்லை.

புதுமைப்பித்தனை மனதில் கூட்டுகையில், பளிச்சென்று நினைவில் படுவது அவருடைய உயர்ந்த dome like நெற்றியும் வெடிப்பான உரத்த சிரிப்பும்தான். அடிக்கடி சிரிப்பார்.

எனக்கு நினைவு தெரிந்தவரை, பி.எஸ். ராமையா எப்பவுமே உற்சாகமான பேர்வழி, நிமிர்ந்த முதுகும் வரித்த கழி போன்ற உடலுக்கு உறையிட்டாற் போல், ஜிப்பாவும், தரையில் புரளும் வேட்டியும் அவரை உயரமாகக் காட்டின. கைகளை உற்சாகமாக ஆட்டி உரக்கப் பேசுவார்.

இந்தக் கூட்டத்தை நான் உங்களுக்குப் பரிச்சயம் பண்ணும் சமயத்தில் கலைமகளில் சக்ரவாகம் என்கிற அவர் கதை வெளியாகி அதன் வெற்றிப்ரபை சிதம்பர சுப்ரமணியனைச் சூழ்ந்து ஒளி வீசிக்கொண்டிருந்தது. அவரிடம் விஷயம் நிறைய இருந்தது. ஆனால் சங்கோஜி. அப்படியே அபிப்ராயமாக ஏதேனும் அவர் சொல்ல ஆரம்பித்தாலும் சரியாக முடிக்காமல், சிரிப்பில், பலமான தலையாட்டலில் மழுப்பிவிடுவார். நுண்ணிய முக அங்கங்கள். அலைபாயும் க்ராப்.

தி.ஜ.ர. முழங்கால்களைக் கட்டியபடி குந்திட்டபடி உட்கார்ந்திருக்கிறார். அவருக்கு செளகர்யமான போஸ்ட்சர். தலையை அழுத்த வாரி, உடனேயே மெனக்கெட்டுத் தானே கையை உள்ளே விட்டுக் கலைத்துக் கொண்டாற்போல் குட்டையாக வெட்டிய க்ராப் விரைத்துக் கொண்டிருக்கும். அவர் தோற்றத்தில் கவனம் இன்னும் கொஞ்சம் செலுத்தியிருந்தால் அழகான மனிதனாகவே வெளிப்படுவார் என்பது என் கருத்து. செதுக்கினாற் போன்ற மூக்கு, வாய், வரிசையான முத்துப் பற்கள். சிரிக்கும்போது அவர் முகத்தில் ஐந்தாறு வயதுகள் உதிரும்.

சிட்டி, சி.சு. செல்லப்பா, க.நா.சு. இவர்களின் படங்களைச் சமீபமாகப் பத்திரிகைகளில் பார்க்கிறீர்கள். அன்றைக்கு இன்று வருடங்கள் இவர் தோற்றங்களை அதிகம் பாதித்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

ஒருவர், இருவர் அல்லது இருவர் மூவர். கூட்டத்தில் சேரலாம். குறையலாம். ஆனால் மாலை, இந்த வேளைக்கு இந்த இடத்தில் இந்த ஏழு பேர் நிச்சயம்.

அத்தனை பேரும் கதராடை.

இவர்களை விழுங்கும் விழிகளால் பார்த்துக்கொண்டு இவர்கள் பேச்சைச் செவியால் உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருப்பதில் எனக்கு அலுப்பே இல்லை.

இலக்கிய ஆர்வம் மிக்க என் நண்பன் குஞ்சப்பாவும் நானும், எங்கள் மரியாதையில், இயற்கையான வயதின் அச்சத்தில் இவர்களுக்கு நாலு அடி எட்ட உட்கார்ந்திருப்போம்.

நான் அப்போத்தான் மொக்கு கட்டியிருந்த எழுத்தாளன். எஸ்.எஸ்.எல்.சி. குட்டெழுத்து தட்டெழுத்துப் பரீட்சைகள் தேறிவிட்டு வேலைக்கு அலைந்து கொண்டிருந்தேன். தேடினால் கிடைத்துவிடுகிறதா? பறித்து எடுத்துக்கொள் என்கிற மாதிரி அப்பவே, வேலை ஒண்ணும் காய்த்துத் தொங்கவில்லை. அந்த ரோசம், அதனால் படும் கவலை சமயங்களில் தவிர, சிந்தனைக்கும் இலக்கியச் சிந்தனைக்கும் வயது காரணமாகப் பற்றிக் கொண்டிருக்கும் ஆக்கக் கனல் வெளிப்பட வழி காணாது, உள் புழுங்கவும் வேண்டிய நேரம் இருந்த அந்தப் பருவத்தில் என்னை என்னிலிருந்து மீட்டு எனக்குத் தருவதற்கு இந்தக் கடற்கரைக் குழுவின் பாதிப்பு தன் பங்கைச் செய்தது என்றால் மிகையில்லை.

மஞ்சேரி எஸ்.ஈஸ்வரன் ஆசிரிமையில் வெளி வந்து கொண்டிருந்த ‘ஷார்ட் ஸ்டோரி’ ஆங்கில மாதப் பத்திரிகையில் என் கதைகள் இரண்டு பிரசுரமாகியிருந்தன, அடுத்து மணிக்கொடி (ஆசிரியர் ப.ரா) யில் மூன்று கதைகள், ஹனுமான் வாரப் பத்திரிகையில் ஒன்று. உம், ஆமாம்.

“ஏண்டா, அங்கே தனியா உட்கார்ந்திண்டிருக்கே, இங்கே வாயேன்!”

தி.ஜ.ர, அழைப்பார். அப்படியே நகர்ந்து, அவருக்கும் ஈஸ்வரனுக்கும் இடையே (என் நினைப்பில்) அவர்கள் பாதுகாப்பில் இடுங்குவேன். அந்தக் கூட்டத்தில் ஒருவனாக நான் என்னைப் பாவித்துக் கொள்ளும் அதிர்ஷ்டம் இது மாதிரி நேர்ந்தால் வலிக்குமா? ஆனால் இங்கே வாய் திறக்க எனக்கு தில் கிடையாது. போயும் போயும் இங்கே றாபணாவா? என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அப்போதெல்லாம் யார் சொல்வதையும் கவனமாகக் கேட்டுக் கொள்ளும் பங்குதான் என்னுடையது.

என்ன பேசினார்கள்? இலக்கியம். இங்கே மார்தட்டல் கிடையாது. வகுப்பு நடத்தவில்லை. உபதேசம் செய்யவில்லை. இலக்கியத்திலேயே யாருக்கேனும் வாரிசு எடுத்துக்கொண்டு கட்சிப் பிரசாரம் கிடையாது. உலக இலக்கிய கர்த்தாக்களின் சிருஷ்டிகள் நடமாடின. அவர்கள் பெயர்களைச் சொல்லிச் சுவைக்க எனக்கு ஆசைதான். ஆனால் ஏதோ வெறும் பெயர்களை உதிர்த்து அதில் பெருமை அடையப் பார்க்கிறேன் எனும் சந்தேகத்துக்குக்கூட நான் ஆளாக விரும்பவில்லை. அந்த மாதிரிப் பெருமையால் எனக்கு இனி ஆக வேண்டியது ஏதுமில்லை. தவிர அப்போதேனும் மாப்பஸான், மாம், செக்கோவ் என்று எழுத்தாளர்கள் முனகினார்கள். Chase, Robbins, Maclean என்று இடத்தைப் பிடித்துக்கொண்டு, எழுத்து ஒரு ஃபாக்டரியாக மாறியிருக்கும் இந்நாளில் நாங்கள் பழகிய பெயர்கள், அந்த எழுத்துக்களின் சத்தியங்கள் எடுபடா.

பிச்சமூர்த்தியின் வெளிப்பாட்டில் விஷயம் நிறைய இருக்கும். அபூர்வமான விதானங்கள் தட்டும். இத்தனைக்கும் பேச்சில் சிங்காரங்கள், நகாசுகள் effect உண்டாக்க வேண்டும் எனும் தனி முயற்சி இல்லை. உள்ளது உள்ளபடி அவர் கண்டபடி. ஆனால் எப்படியும் கவிஞன் மனம் இல்லையா? லேசாக நடுக்கம் கொடுத்த குரலில் வார்த்தைகள் வெளிப்படுகையில், பிசிர்கள் கத்தரிக்கப்பட்டு, சொல்லும் பொருளும் சுளை சுளையாக விழுவது போலத் தோன்றும். ரத்னச் சுருக்கம். இதற்குள் முடிஞ்சு போச்சா? இன்னும் கொஞ்சம் பேசமாட்டாரா?

“ராஜகோபாலா! சிட்டி! செல்லப்பா!” என்று அழைக்கையில் அந்தக் குரல் நடுக்கத்தில் ததும்பிய இனிமை, பரஸ்பரம் யாரிடம் இப்போ காண முடிகிறது? அவர் பார்வையே ஒரு ஆசீர்வாதம்.

இலக்கிய விழாக்கள் இந்நாளில் கொண்டாடப்படுகின்றன. கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன. டி.வி., வானொலி வழி வேறு: பேட்டிகள், சந்திப்புகள், மோஷியாரா, ஸம்மேளனம்.., எந்தச் சாக்கிலேனும் மேடை.

ஆனால் கடற்கரையில் மாலை அந்த இரண்டு, இரண்டரை மணி நேரம் இந்த ஏழெட்டுப் பேர் கூடி மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தார்களே, அதுதான் உண்மையில் இலக்கியப் பட்டறை.

இத்தனை வருடங்களின் பின்னோக்கில் எனக்கு இன்னும் வேறு ஏதேதோ உண்மைகள் புலப்படுகிறாப் போல் ஒரு உணர்வு.

ஏதோ ஒரு வகையில், இவர்கள் எழுத்துக்குத் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட பிக்குகள்.

இந்த ஏழெட்டுப் பேரில் நாலுபேர் இப்போது நம்முடன் இல்லை. இவர்களில் மூவரேனும் எழுத்துக்கே பலியானவர்கள்.

அந்த மஹாராஜியைப் பற்றி எனக்குக் கொஞ்சம் தெரியும். அவள் மோஹினி. மிக்க அழகி. இரக்கமற்றவள். Medusa “வா, வா. என்னைப் பார். என் அழகைப் பார்!”

அவன் நெஞ்சை நீட்டுகிறாள். உள் உள்ளேயே பாடுகிறாள்.

கொல் இசை.

சிந்தா நதி மேல் கவிந்த ஒரு பனிப் படலம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: லா.ச.ரா. பக்கம்

கொங்கு நாட்டின் முதல் நாவல் – ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’ II

மறுவாசிப்பு. முதல் பகுதி இங்கே.

நாகம்மாள்
நாகம்மாள்

க.நா.சு கொடுத்த பில்டப்பால்தான் இந்தப் புத்தகத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். முதல் வாசிப்பில் புத்தகம் எனக்கு ஏமாற்றம் அளித்தது. க.நா.சு.வின் ரசனையும் என் ரசனையும் வேறோ என்று தோன்றியது. அப்போது எனக்குத் தோன்றியதை இப்படி சுருக்கலாம்.

ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு, பூமணி, கி.ரா.வின் படைப்புகள், ஜோ டி க்ரூசின் ஆழிசூழ் உலகு என்று இஇதை விட நல்ல வட்டார இலக்கியம் நிறைய வந்துவிட்டன. ஒரு வேளை க.நா.சு. இப்படிப்பட்ட தமிழில் இப்படிப்பட்ட genre-இல் எழுதப்பட்ட முதல் புத்தகம், முன்னோடி நாவல் (1942-இல் வெளி வந்த புத்தகமாம்) என்று பூரித்துப் போய்விட்டாரோ என்னமோ. புத்தகம் உண்மையான மனிதர்களை, உண்மையான சூழ்நிலைகளை சித்தரிக்கிறதுதான். ஆனால் சுவாரசியமான முடிச்சுகள், ஒரு புதிய உலகம், மனிதர்களைப் பற்றிய insights என்று எதுவுமே இல்லை.

இன்று நாவலை மீண்டும் படிக்கும்போது மிகக் கச்சிதமாக எழுதப்பட்ட நாவல் என்று புரிகிறது. (ஆசிரியரின் குரல் அங்கங்கே இருந்தாலும் கூட). விடை இல்லாத கேள்விகள் புத்தகத்தை சுவாரசியப்படுத்துகின்றன. நாகம்மாள் உண்மையில் விரும்பியது என்ன? சின்னய்யனின் இறப்பையா? அவளுக்கு ராமாயி கணவனோடு வாழ்வது கண்டு பொறாமையா? முதலில் சின்னையன் இறந்துவிட்டானா? அவளுக்கு கெட்டியப்பன் மேல் ஈர்ப்பு இருக்கிறதா இல்லையா? காட்டிலும் மேட்டிலும் யாரும் அறியாமல் சந்தித்துக் கொண்டே இருப்பது எங்கே கொண்டு போகும் என்று அறியாமலா இருப்பாள்? ஊர் என்ன பேசும் என்று உணராமலா இருப்பாள்?

ஆனால் புத்தகம் பாதியில் முடிந்துவிட்டது போலத்தான் உணர்ந்தேன். விடை இல்லாத கேள்விகள் என்பதெல்லாம் சரிதான், ஆனால் இன்னும் கொஞ்ச தூரமாவது போயிருக்க வேண்டும் என்று தோன்றியது.

எனக்கு அரைகுறையாகத் தெரிந்தாலும் சிறப்பான வட்டார நாவல்தான். ராஜம் ஐயரோடும் மாதவையாவோடும் தேங்கிப் போயிருந்த தமிழ் நாவல் உலகத்தை அடுத்த நிலைக்கு இவர்தான் கொண்டு போயிருக்க வேண்டும். இன்றும் படிக்கக் கூடிய, காலாவதி ஆகாத, எதார்த்தவாத நாவல். அவர் காட்டுவது கொங்கு நாட்டு கிராம சூழ்நிலையில் தன் உரிமையைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் தைரியமான பெண்ணை. அவளுக்கு நேர் எதிர் குணாதிசய்ம் கொண்டவள் அவள் கொழுந்தன் மனைவி ராமாயி – அடங்கி ஒடுங்கிப் போகும் ‘குடும்பப் பெண்’. ராமாயி மூத்தவள் மீது கசப்போடு அடிபணிந்து போவது சிறப்பான சித்திரம். சின்னச் சின்ன பாத்திரங்கள் – சின்னையனை வீட்டோடு மாப்பிள்ளை ஆக்கிக் கொள்ள விரும்பும் மாமியார், சண்டியர் கெட்டியப்பன், முன்விரோதம் பாராட்டும் மணியக்காரர், அவரின் உதவியாளர் – மிகக் கச்சிதமாக செதுக்கப்பட்டிருக்கின்றன.

எனக்கு புத்தகம் இன்னும் நீண்டிருக்க வேண்டும்தான். மனக்குறை இருந்தாலும் என் எண்ணம் மாறிவிட்டது என்பதைப் பதிவு செய்கிறேன். இன்னும் சிறப்பான வட்டார நாவல்கள் வந்திருக்கலாம், ஆனால் இந்த நாவல் காலாவதி ஆகிவிடவில்லை. இன்னும் பல வருஷம் உயிரோடு இருக்கும் முன்னோடி நாவல் என்றே இப்போது கருதுகிறேன். கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். இப்போது காலச்சுவடு பதிப்பு ஒன்று இருக்கிறதாம்.

முந்தைய பகுதி

தொகுக்கப்பட்ட பக்கம்: ஷண்முகசுந்தரம் பக்கம்

தொடர்புடைய பதிவுகள்: நாகம்மாள் பற்றி பலர்

க.நா. சுப்ரமண்யத்தின் “பொய்த்தேவு”

மீள்பதிப்பு (முதல் பதிவு, செப்டம்பர் 14, 2008 அன்று). க.நா.சு.வின் குறுநாவல்கள் பற்றி எழுதியதும் இதை மீண்டும் பதிக்கலாமே என்று தோன்றியது.

ரொம்ப நாட்களாக க.நா.சு. எழுதிய இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று ஆசை. யார் யாரோ படிக்க வேண்டிய புத்தகம் என்று சொல்லி இருக்கிறார்கள். முதல் பதிப்பு 1946இல் வெளிவந்தது. ஜெயமோகனின் டாப் டென் லிஸ்டில் இதற்கு ஆறாம் இடம். என்னுடைய டாப் டென் லிஸ்டில் இடம் பெறாது. ஆனால் நான் படித்த சிறந்த புத்தகங்களில் ஒன்று.

எனக்கு ஒரு முட்டாள்தனமான பழக்கம். சில புஸ்தகங்கள் எனது ரசனைக்கு ஒத்து வரும் என்று தெரியும். ஆனால் அதை படிக்க சரியான நேரம் வர வேண்டும் என்று காத்திருப்பேன். என்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி படிக்க வேண்டும் என்றும் வேலை டென்ஷன் இருந்தால் படிக்க முடியாது என்றெல்லாம் நினைத்து நல்ல முகூர்த்தம் வரக் காத்திருப்பேன். முகூர்த்தம் வர வருஷங்கள் ஆகலாம். உதாரணமாக விஷ்ணுபுரம் வாங்கி 4 வருஷம் கழித்துத்தான் படித்தேன். பொய்த்தேவு எப்போது வாங்கினேன் என்று கூட தெரியாது, இரண்டு காப்பிகள் இருந்தன. (ஆனால் காலச்சுவடு அருமையாக பதிப்பித்திருக்கிறது) கொஞ்ச நாட்கள் முன்னால்தான் முதல் முப்பது நாற்பது பக்கம் படித்தேன். உடனே தெரிந்துவிட்டது, இது ஒரு அருமையான புத்தகம் என்றும், படிக்க சுலபமான புத்தகம் என்றும். (விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல் இரண்டும் சுலபமான புத்தகங்கள் அல்ல) சுலபமான புத்தகம் என்றால் மிக விரைவாக படிக்க முடியும். கதை ஒரு நேர் கோட்டில் செல்லும். முன்னால் என்ன சொல்லப்பட்டது என்று திருப்பி திருப்பி பார்க்க வேண்டியதில்லை. ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் சுலபமாக படிக்க முடியும். One Hundred Years of Solitude படிக்க நேரமாகும். ஆனால் ஏனோ பிடிக்கும் என்று தெரிந்தும், சுலபம் என்று தெரிந்தும் இந்த புத்தகத்தை ஒரு ஓரமாக வைத்துவிட்டேன். அப்புறம் ஒரு நாள் திருப்பி எடுத்து ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.

பொய்த்தேவு என்றால் என்ன என்று கூட முன்னால் தெரியாது. தேவு என்றால் தெய்வம் என்று பொருள் இதை படித்துத்தான் தெரிந்து கொண்டேன்.

படித்து முடித்ததும் மனதில் விவரிக்க முடியாத ஒரு நிறைவு.

இதற்கு கதைச்சுருக்கம் எல்லாம் எழுத முடியாது. ஆனால் இந்த கதையை பல தளங்களில் பார்க்கலாம். ஏழை மேட்டுத்தெரு சோமு சோமசுந்தர முதலியாராக மாறி சோமுப் பண்டாரமாக முடிகிறார். அவரது ஆசைகள், பார்த்ததற்கெல்லாம் ஆசைப்படும் குணம், அவரது தெய்வங்கள், அவரது ஆதர்ச மனிதர்கள் என்று பார்க்கலாம். என்னை பாதித்தது வேறு ஒரு தளம். வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நாம் தேடும் விஷயங்கள் வேறு. இந்த தேடலுக்கு உண்மையிலேயே ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? காமம் எல்லா உயிர்களுக்கும் உள்ள அடிப்படை தேடல் என்று வைத்துக்கொள்ளலாம், அதற்கு பொருள் தேடுவது அர்த்தம் இல்லாத செயல். பணம்? புகழ்? குடும்பம்? இவை எல்லாம் நமக்கு ஏன் முக்கியம் என்று நாம் யோசிப்பதே இல்லை. குறைந்தபட்சம் நான் யோசித்தது இல்லை. அப்படி ஒரு நிமிஷமாவது யோசிக்க வைத்ததுதான் இந்த நாவலின் வெற்றி.

எங்கோ அமெரிக்காவில் உட்கார்ந்து இருந்தாலும், எனது வேர்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன. எனது அப்பா, அம்மா, அத்தை(கள்), பெரியப்பா, பெரியம்மா, அத்தான்கள், அத்தங்காள்கள், காலேஜ் நண்பர்கள் இவற்றை சுற்றிதான் என் எண்ணங்கள் சுழல்கின்றன. முதலியாரின் வேர்கள் மேட்டுத்தெருவில் இருப்பது போல. அவரது கைவிலங்குகள் ராயர் குடும்பத்தில் இருப்பது போல.

கடைசி அவதாரமான சோமுப் பண்டாரமாக மாறுவதைப் பற்றி இன்னும் விவரித்திருக்கலாம்.

ஆனால் இந்தப் புத்தகம் எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்வதற்கில்லை. ஒரு கோணத்தில் பார்த்தால் இதில் ஒன்றுமே இல்லை. பெரிய சிக்கல்கள் இல்லை, பிரமாதமான கதைப் பின்னல் இல்லை. இதில் என்ன இருக்கிறது என்று கேட்டால் விவரிப்பது கஷ்டம். ஒன்று உங்களுக்கு இதில் ஒரு தரிசனம் கிடைக்கும் இல்லாவிட்டால் போரடிக்கும். இரண்டுக்கும் நடுவில் ஒரு ஸ்டேஜ் இல்லை.

ஜெயமோகனின் குறிப்பு

பொய்த்தேவு —— க. நா. சுப்பிரமணியம்.
தமிழின் முதல் நாவல் என்று ஐயமின்றி கூறலாம். நாவல் என்ற விசேஷ வடிவத்தைப் பற்றிய பிரக்ஞையுடன் எழுதப்பட்ட முதல் படைப்பு. சோமு முதலி என்ற கதாபாத்திரத்தின் முழுவாழ்க்கையை முன்வைத்து வாழ்வின் சாரமான பொருளென்ன என்று தேடும் படைப்பு ஒரு காலை வேதாந்தத்திலும் மறுகாலை இருத்தலியத்திலும் ஊன்றி நிற்கும் காத்திரமான ஆக்கம் சோமுவை சிறுவயது முதல் தொடரும் அந்த மணியோசை நாவலில் கவித்துவத்தின் அபாரசத்தியங்களைப் பற்றி தமிழுக்கு கற்பித்தது.

எஸ்.ரா.வும் இதை நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார்.

கட்டாயமாக படிக்க வேண்டிய புத்தகம். படிக்க சொல்லி சொன்ன எந்தரோ மகானுபாவலுகளுக்கு நன்றி. 

அழியாச்சுடர்கள் தளத்தில் சாம்பிளுக்கு ஒரு அத்தியாயத்தைப் படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: க.நா.சு. பக்கம்

க.நா.சு.வின் நாவல் பட்டியல்

ka.naa.su.ஒரு தலைமுறைக்கு முன்னால் க.நா.சு.வைப் பற்றி ஒரு ஜோக் உண்டு. எல்லா எழுத்தாளர்களும் க.நா.சு. எல்லாம் என்னய்யா விமர்சனம் எழுதறாரு, வெறுமனே பட்டியல்தான்யா போடறாரு, அது சரி அவர் சமீபத்தில போட்ட பட்டியல்ல என் நாவல் இருக்கோ என்பார்களாம்.

நண்பர் செல்வராஜு உதவியால் க.நா.சு. போட்ட பட்டியல் ஒன்று கிடைத்தது. சில நாவல்களை – சத்தியமேவ, அறுவடை, நாய்கள், நான்கு அத்தியாயங்கள், பெண் ஜன்மம் – எழுதியது யார் என்று கூடத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்! (தகவல் தந்த ரமணன், செல்வராஜுக்கு நன்றி!)

செல்வராஜுவின் வரிசையை என்னிஷ்டத்துக்கு மாற்றி இருக்கிறேன்.

  1. மாயூரம் வேதநாயகம் பிள்ளை, பிரதாப முதலியார் சரித்திரம்
  2. ராஜம் ஐயர், கமலாம்பாள் சரித்திரம்
  3. மாதவையா, பத்மாவதி சரித்திரம்
  4. கா.சி. வேங்கடரமணி, முருகன் ஓர் உழவன்
  5. கா.சி. வேங்கடரமணி, தேசபக்தன் கந்தன்
  6. வ.ரா., சுந்தரி
  7. அனுத்தமா, கேட்ட வரம்
  8. அகிலன், சினேகிதி
  9. க.நா.சு., பொய்த்தேவு
  10. க.நா.சு., அசுரகணம்
  11. க.நா.சு., ஒரு நாள்
  12. சிதம்பர சுப்ரமணியன், இதயநாதம்
  13. மு.வ., கரித்துண்டு
  14. சங்கரராம், மண்ணாசை
  15. எம்.வி. வெங்கட்ராம், நித்யகன்னி
  16. ஹெப்சிபா ஜேசுதாசன், புத்தம் வீடு
  17. ஜெயகாந்தன், உன்னைப் போல் ஒருவன்
  18. ஜெயகாந்தன், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
  19. ஜெயகாந்தன், சில நேரங்களில் சில மனிதர்கள்
  20. லா.ச.ரா., புத்ர
  21. லா.ச.ரா., அபிதா
  22. தி.ஜா., மோகமுள்
  23. தி.ஜா., அம்மா வந்தாள்
  24. பூமணி, நைவேத்யம்
  25. பூமணி, வெக்கை
  26. பூமணி, பிறகு
  27. ஆர்வி, அணையாவிளக்கு
  28. ஆர். ஷண்முகசுந்தரம், நாகம்மாள்
  29. ஆர். ஷண்முகசுந்தரம், சட்டி சுட்டது
  30. ஆர். ஷண்முகசுந்தரம், அறுவடை
  31. சுந்தர ராமசாமி, ஒரு புளியமரத்தின் கதை
  32. சுந்தர ராமசாமி, ஜே ஜே சில குறிப்புகள்
  33. நகுலன், நினைவுப் பாதை
  34. நகுலன், நாய்கள்
  35. அசோகமித்ரன், தண்ணீர்
  36. அசோகமித்ரன், 18வது அட்சக்கோடு
  37. அசோகமித்ரன், கரைந்த நிழல்கள்
  38. சா. கந்தசாமி, அவன் ஆனது
  39. சா. கந்தசாமி, தொலைந்து போனவர்கள்
  40. சா. கந்தசாமி, சூர்ய வம்சம்
  41. நாஞ்சில்நாடன், மாமிசப் படைப்பு
  42. வண்ணநிலவன், கடல்புரத்தில்
  43. வண்ணநிலவன், ரெயினீஸ் அய்யர் தெரு
  44. வண்ணநிலவன், கம்பாநதி
  45. கசியபன், அசடு
  46. கிருத்திகா, வாசவேஸ்வரம்
  47. கிருத்திகா, புகை நடுவில்
  48. கிருத்திகா, சத்தியமேவ
  49. கி.ரா., கோபல்ல கிராமம்
  50. எம்.எஸ். கல்யாணசுந்தரம், இருபது வருஷங்கள்
  51. சி.சு. செல்லப்பா, வாடிவாசல்
  52. சி.சு. செல்லப்பா, ஜீவனாம்சம்
  53. இந்திரா பார்த்தசாரதி, தந்திர பூமி
  54. இந்திரா பார்த்தசாரதி, குருதிப்புனல்
  55. இந்திரா பார்த்தசாரதி, ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன
  56. ஆ. மாதவன், கிருஷ்ணப்பருந்து
  57. கல்கி, தியாகபூமி
  58. கல்கி, கள்வனின் காதலி
  59. நீல. பத்மநாபன், தலைமுறைகள்

தொகுக்கப்பட்ட பக்கம்: க.நா.சு. பக்கம், புத்தகப் பரிந்துரைகள்

க.நா.சு. – நண்பேண்டா!

ka.naa.su.போன பதிவில் க.நா.சு.வின் விமர்சன அணுகுமுறையைப் பற்றி கொஞ்சம் எழுதி இருந்தேன். என்னை விட ஜெயமோகன் பிரமாதமாக அவரது அணுகுமுறையை பற்றி க.நா.சு.வின் தட்டச்சுப் பொறி என்ற கட்டுரையில் எழுதி இருக்கிறார். அவரது வார்த்தைகளில்:

அவரது துல்லியமான இலக்கிய ரசனை நாம் அறிந்ததுதான். திட்டவட்டமாக இலக்கிய ஆக்கங்களை ஒப்பிட்டுத் தரப்படுத்தி மதிப்பிட அவரால் முடியும். அவ்வாறு அடையப் பெற்ற தன் முடிவுகளை எந்தவித ஐயமும் மழுப்பலும் இல்லாமல் அவர் முன்வைப்பார். ஆனால் க.நா.சு தன்னுடைய ரசனையை அல்லது முடிவை முன்வைத்து வாதிடுவதில்லை. ‘என் வாசிப்பிலே இப்டி தோண்றது. நீங்க வாசிச்சுப் பாருங்கோ’ என்ற அளவுக்கு மேல் அவரது இலக்கிய விவாதம் நீள்வதில்லை. அங்கும் அதைத்தான் அவர் சொன்னார்.

அவருக்கு இலக்கிய ரசனையை விவாதம் மூலம் வளர்க்கமுடியும் என்பதில் நம்பிக்கை இல்லை. இலக்கிய ரசனை என்பது அந்தரங்கமான ஓர் அனுபவம் என அவர் நம்பினார். ஒவ்வொருவருக்கும் அது ஒவ்வொரு தளத்தில் நிகழ்கிறது. வாசகனின் வாழ்வனுபவங்கள், அவன் அகம் உருவாகி வந்த விதம், அவனுடைய உணர்ச்சி நிலை ஆகியவற்றுடன் பிணைந்தது அது. ஆகவே வாசக அனுபவத்தைப் பரிமாறிக் கொள்ள முடியாது. இலக்கிய ரசனையை வளர்க்க இலக்கியங்களை வாசிப்பது மட்டுமே ஒரே வழி. அதற்கு நல்ல இலக்கியங்களை சுட்டிக் காட்டினால் மட்டுமே போதுமானது.

க.நா.சு தமிழின் தலைசிறந்த விமர்சகர் என்று சொல்லப்படுகிறார். ஆனால் அவர் இலக்கிய விமர்சனம் என்று சொல்ல அதிகமாக ஏதும் எழுதியதில்லை. அவருக்கு இலக்கியக் கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லை. இலக்கியத்தை வகைப்படுத்துவதிலும் ஆர்வமில்லை. ஆக அவரால் செய்யக் கூடுவது இலக்கிய அறிமுகம், இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள், இலக்கியப் பரிந்துரைகள் ஆகிய மூன்றுமே. மூன்றையும் ஒட்டுமொத்தமாக இலக்கிய இதழியல் எனலாம். அவர் சலிக்காமல் செய்து வந்ததும் அதுவே.

‘விமர்சகன் ஒரு முன்னுதாரண வாசகன்’ என்ற கூற்றுக்கு மிகச் சிறந்த உதாரணம் அவர். அவர் விமர்சகர் அல்ல என்பவர்கள் கூட அவரது காலகட்டத்தின் மிகச் சிறந்த தமிழ் வாசகர் அவரே என்று எண்ணினார்கள். அவரது கருத்துக்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினார்கள். அவருடன் தொடர்ந்து விவாதித்தார்கள். இலக்கிய ஆக்கங்கள் தேடுவது இத்தகைய மிகச் சிறந்த வாசகர்களையே. எந்த இடத்திலும் நல்ல வாசகர்களை இலக்கியப் படைப்பு கண்டடைகிறது. ஆகவேதான் இலக்கியம் என்ற தொடர்ச்சி நீடிக்க முடிகிறது. எந்த ஒரு நல்ல வாசகனும் உள்ளூர க.நா.சு.வுடன் தன்னை அடையாளம் காண்பான். அவர் சொல்லும் முடிவுகளை அவன் தன் முடிவுகளுடன் ஒப்பிடுவான். அவரை நெருங்கி வருவான். டெல்லியில் நிகழ்ந்தது அதுவே. இலக்கியம் நுண்ணுணர்வு மிக்க மனங்களை நோக்கிப் பேசுகிறது, அந்த மனங்களில் அன்று மிக நுண்மையானது க.நா.சுவின் மனம். ஆகவேதான் அவர் வாசகத் தரப்பின் தலைமைக் குரலாக ஒலித்தார். இலக்கிய விமர்சகராகப் பங்களிப்பாற்றினார். ஒரு வேளை அவர் ஒரு வரிகூட எழுதாமலிருந்தாலும் கூட அவர் இலக்கிய விமர்சகராகவே கருதப்படுவார்.

நான் சிறந்த வாசகன் என்றே நானே சொல்ல மாட்டேன். எனக்குப் பரந்த வாசிப்பு உண்டு, ஆனால் ஆழ்ந்த வாசிப்பு உண்டா என்பது எனக்கே சந்தேகம்தான். ஒரு படைப்பு என்னுள் ஒட்டுமொத்தமாக ஏற்படுத்தும் விளைவுகளை நான் மீண்டும் மீண்டும் ஒற்றைப் புள்ளியில் சுருக்கி விடுகிறேன். விஷ்ணுபுரம் என்றால் புரண்டு படுக்கும் அந்த பிரமாண்டமான கரிய சிலை என்னுள் ஏற்படுத்தும் பிரமிப்புதான். அஜிதனின் தத்துவ விவாதங்களும், சங்கர்ஷணனின் காவியமும் அந்த சிலையால் வெகு தூரம் பின்னால் தள்ளப்பட்டுவிடுகின்றன. To Kill A Mockingbird என்றால் அப்பா-மகள் உறவுதான். அன்றைய கறுப்பர்களின் நிலையோ, நிற வெறி சூழ்நிலையோ, பூ ராட்லியின் சித்திரமோ ரொம்பப் பின்னால்தான் இருக்கின்றன. அப்படி ஒற்றைக் குவியமாக சுருக்குவதை நிறுத்தினால்தான் வாசிப்பின் ஆழம் கூடும், அப்படி ஆழம் கூடினால்தான் க.நா.சு.வின் லெவலை நான் என்றாவது நெருங்க முடியும் என்று தோன்றுகிறது.

அவரிடமிருந்து நான் வேறுபடுவது ஒரு விஷயத்தில் மட்டும்தான் – எனக்கு இலக்கிய ரசனை விவாதத்தின் மூலம் மேம்படும் என்ற நம்பிக்கை உண்டு. கலைந்து கிடக்கும் எண்ணங்களை பேசுவதின் மூலம் சில சமயம் தொகுத்துக் கொள்ள முடிந்திருக்கிறது.

முழுக் கட்டுரையையும் படித்துப் பாருங்கள். முடிந்தால் க.நா.சு.வின். பட்டியல்களைப் பற்றிப் பேசும் இந்தக் கட்டுரையையும் படித்துப் பாருங்கள்.

நீங்கள் எப்படி? உங்களுக்கு இலக்கியக் கோட்பாடுகளில் நம்பிக்கை உண்டா?

தொகுக்கப்பட்ட பக்கம்: இலக்கிய விமர்சனம், க.நா.சு. பக்கம், ஜெயமோகன் பக்கம்

க.நா.சு.வும் கருணாநிதியும் – வெங்கட் சாமிநாதன் நினைவு கூர்கிறார்

(திருத்தப்பட்ட மீள்பதிப்பு)

இந்தப் பதிவுக்கு காரணம் ஜெயமோகனின் ‘க.நா.சு.வின் தட்டச்சுப் பொறி‘ என்ற கட்டுரைதான். மிகச் சிறப்பான கட்டுரை. இருந்தாலும் இந்த வாரம் வெ.சா.வுக்கு என்று ஒரு முடிவில் இருப்பதால், ஒரு பழைய பதிவைத் தேடி எடுத்தேன். (ஜெயமோகன் கட்டுரையைப் பற்றி பின்னால் எழுதத் திட்டம்) பிறகு வெ.சா. க.நா.சு.வைப் பற்றி என்ன எழுதி இருக்கிறார் என்று விக்கிமூலத்தில் தேடிப் பார்த்தேன். கருத்தும் பகைமையும் என்ற கட்டுரையில் சொல்கிறார்:

க.நா.சு வோடு நிறைய நான் வாதிட்டிருக்கிறேன். ஒரு கட்டத்தில் அவர் “அப்படியும் சொல்லலாம்” என்பார். செல்லப்பாவோடும்தான். அவர் க.நா.சு. போல விட்டுவிட மாட்டார். ஆனால் இந்த காரசார விவாதங்கள் என்றுமே எங்களிடையே பகைமைக்கு இட்டுச் சென்றதில்லை. கருத்துப் பரிமாற்றம் என்பது மிகவும் கொஞ்சப் பேரிடம்தான் சாத்தியமாகியிருக்கிறது. “சாமிநாதன் விஷயத்தை என்னிடம் விட்டு விடு, அதிலெல்லாம் தலையிட வேண்டாம்” என்று க.நா.சு பதில் சொன்னது என் காதில் விழுந்திருக்கிறது. “அவனோடு உங்களுக்கு என்ன பேச்சு?” என்று சொல்லப்பட்டிருக்க வேண்டும். இந்த மனோபாவம்தான் தமிழ் எழுத்தாள சமூகத்தில் பரவலாகவும் ஆழமாகவும் வேரூன்றியிருக்கிறது. தன்னைப் புகழ் மறுக்கிறானா, வாதமிடுகிறானா, அப்போ அவன் தனக்கு எதிரிதான் என்ற மனோபாவம். சகஜமான, சினேகபூர்வமான கருத்துப் பரிமாற்றம் என்பது இங்கு சாத்தியமில்லாது இருக்கிறது. ஒரு முறை வலம்புரி ஜான், க.நாசு.வின் வீட்டில் அவரைச் சந்தித்து முன்னர் அவரைப் பற்றி தன் ‘தாய்” பத்திரிகையில் வசை என்று சொல்லும் தரத்தில் தாக்கியதற்கு மன்னிப்பு கோரியிருக்கிறார். க.நா.சு.வின் வழக்கமான பதில், “அட சர்த்தான்யா, விடும்” என்பதுதான். இது க.நா.சு.வோடு நெருக்கமாகப் பழகியவர்களுக்குத் தெரியும். கருத்துத் தளத்துக்கு வளம் சேர்க்கும் ஆழமான கருத்துக்கள்தான் பயனுடையவை. பரிமாறிக் கொள்ளும் இருவர் ஆளுமையையும் சிறப்பிப்பவை. க.நா.சு வை அறிந்து கொள்ள முயலும் யாரும் இன்று வலம்புரி ஜான் என்ன எழுதியினார் என்று தேடிச் செல்லப் போவதில்லை.

க.நா.சு.வை நினவு கூர்பவர்கள் வெகு சிலரே. அவர்களும் அனேகமாக கிழங்களாக இருப்பது கொஞ்சம் வருத்தம்தான். இங்கே ஒரு சிறப்பான நினைவு கூர்தல். பகுதி 1, 2, 3

சத்தியமான படைப்புக்கும் வாழ்க்கைக்குமான ஒரு மிகச் சிறந்த உதாரணமாக ஒரு சம்பவத்தை நினைவு கூறுகிறார் (தஞ்சை பிரகாஷ்). இந்த நிகழ்ச்சி க.நா.சு., தஞ்சை பிரகாஷ், கருணாநிதி மூன்று பேரின் ஆளுமையையும் கச்சிதமாகக் காட்டுகிறது.

“கலைஞர் கருணாநிதி ஒரு தடவை, “க.நா.சு. மிகப் பெரிய, ஒரு தலை சிறந்த விமர்சகர். அவரைக் குங்குமத்திலே விமர்சனங்கள் எழுதச் சொல்லுங்க. அவரோட நாவல் கூட ரெண்டு மூணு நம்ப குங்குமத்திலே தொடரா போடலாம். அவர தொடர்ந்து குங்குமத்திலே எழுதச் சொல்லுங்க. அவர நாம ஓரளவுக்கு ஊக்கப்படுத்தலாம்” அப்படீன்னு சொல்லச் சொன்னார்.

எனக்கு ஒரே ஆச்சரியம், என்னடா இது! திடீர்னு க.நா.சு.வை இப்படி கௌரவப்படுத்தறாங்களேன்னு. அவரும் குங்குமத்திலே கிட்டத்தட்ட 64 பேரைப் பத்தி விமர்சனம் எழுதினாரு. ஓராண்டு கழிச்சி கருணாநிதிக்கு 61-ஆவது நிறைவு விழா வருது. ஒரு ரகசியத் தகவல் பாலசுப்ரமணியம் மூலமா, “பிரகாஷைக் கூட்டீட்டு வாங்க”ன்னு எனக்கு செய்தி வருது. நான் போனேன். மாறன் இருந்தாரு அங்க. உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்வாங்க. அத அனுசரிச்சு நீங்க செய்யணும்னு என்னக் கேட்டுக்கிட்டார். பாலசுப்பிரமணியம் என்னை வெளீலே அழைச்சிட்டுப் போய், “ஒண்ணுமில்ல. தொடர்ந்து நாம க.நா.சு.வுக்கு மரியாதை செய்வோம். எந்தப் பத்திரிகையும் தராத அளவுக்கு கௌரவப்படுத்துவோம். தொடர்ந்து ஒவ்வொரு இதழ்லேயும் விமர்சனம் எழுதட்டும்” அப்படீன்னு சொன்னாரு. எனக்கு ரொம்ப சந்தோஷம்! அப்பறம் கொஞ்ச நேரம் கழிச்சு, “அடுத்த மலருக்கு க.நா.சு.வோட கட்டுரை வேணும், இலக்கிய சாதனையாளர்கள்னு 60 பேரைப்பத்தி இது வரைக்கும் க.நா.சு. எழுதியிருக்கார். இந்தப் பட்டியல்லே கலைஞர் இல்ல, இந்தப் பட்டியல்ல மு.க.வோட பேரு இருக்கணும்னு ஆசைப்படறாரு. அதோட க.நா.சு. தன்னைப் பத்தி எழுதணும்னு விரும்பறாரு. அதனாலே ஏதாவது ஒரு நாவலப் பத்தி, எதையாவது பத்தி ஒரு இரண்டு பக்கத்துக்கு இருந்தாக் கூடப் போதும். அவர ஒரு சிறந்த நாவலாசிரியர் அப்படின்னு அவர கௌரவிக்கணும்னு நாங்க நினைக்கறோம். அவர் சொல்ல நாங்க விரும்பறோம். க.நா.சு.வோட வால் நீங்க. அதுனால நீங்க சொன்னாக் கேப்பாரு..” அப்படீன்னாரு.

எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. ஒரு பக்கம் கஷ்டமா இருந்தது. இன்னொரு பக்கம் சிரிப்பா இருந்தது. இவங்க எவ்வளவு தூரம் வெல கொடுத்து வாங்கறாங்கன்னு.

”இதுலே நான் என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க?”ன்னு நான் கேட்டேன். ‘நீங்க ஒரு கட்டுரை வாங்கிக்கொடுக்கறது உங்க பொறுப்பு. உங்களோட நாவல் கூட ஒண்ணு போட்டுடலாம். உங்களுக்கும் நல்ல சம்பளம் கொடுத்துடலாம். கலைஞர் உங்க பேர்ல நல்ல நம்பிக்கை வச்சிருக்காரு. அதனால அது ஒண்ணும் சிரமமில்லே” அப்படீன்னாங்க.

நான் க.நா.சு. வீட்டுக்குப் போனேன். அப்போ அவருக்கு வயசு எழுபது இருக்கும். மெட்ராசுலே வந்து தங்கியிருக்காரு. அவரு கிட்டே போயி, “ஒரு விஷயம் சொல்லணும். நீங்க ஏன் மு.க. பத்தி இது வர ஒன்னும் எழுதலை?”ன்னு கேட்டேன்.

அதுக்கு அவரு “சொல்றதுக்கு ஒண்ணும் இல்லியே. அதுதான் ஒண்ணும் எழுதலே”ன்னாரு.

“இல்லே. நீங்க அவர் படைப்பப் பத்தி ஒரு விமர்சனம் எழுதினா நிறைய பலன் கிடைக்கற மாதிரி தெரியுது. வாரம் 5000-க்கு மேலே வருமானம் வரும் போல இருக்கு. எழுதுங்களேன்”னேன்.

“எழுபது வயசு வரைக்கும் சத்தியத்தத் தவிர வேறு எதையும் எழுதல. இனிப் போய் இந்தக் காரியத்தச் செய்யச் சொல்றியா?”ன்னாரு.

“இல்லே. உங்கள கௌரவப்படுத்தறதாச் சொன்னாங்க” அப்படீன்னேன். என்ன ஒரு மாதிரிப் பாத்தாரு. “இது வரைக்கும் சுத்தமா இருந்துட்டேன். என்னத்த பெரிசா கட்டிக் காத்த? எழுது ஒண்ணும் தப்புல்லேன்னு சொல்லு. நான் எழுதறேன்”னு சொன்னாரு. நான் சுதாரிச்சிட்டேன். ஆகா! நம்ம ஆழம் பாக்கறாருன்னு.

நான் சொன்னேன். “எழுதினா எழுதுங்க. இல்ல எழுதாட்டிப் போங்க. அது உங்க விருப்பம். அவங்க சொல்லச் சொன்னாங்க. நான் சொல்லிட்டேன் அவ்வளவுதான் என் வேலை”ன்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன். அதுக்கப்பறமா க.நா.சு.-வோட விமர்சனக் கட்டுரைகள் குங்குமத்திலே உடனே நிறுத்தப்பட்டது.

(கூடாரம், இதழ் 3. தபால் முத்திரை தெளிவில்லை. அநேகமாக செப். 2000)

சத்யகாம் என்று ஒரு ஹிந்திப் படம். (தமிழில் பாலசந்தர் புன்னகை என்று எடுத்தார், அதுதான் அவர் இயக்கிய படங்களில் அவருக்கு மிகவும் பிடித்ததாம்.) அதில் யாருக்கும் வளைந்து கொடுக்காத தர்மேந்திரா மரணப் படுக்கையில் இருக்கும்போது அவரது “மனைவி” ஷர்மிளா தாகூர் ஒரு பேப்பரில் கையெழுத்துப் போடு, எனக்குப் பணம் கிடைக்கும், உன் மறைவுக்குப் பிறகு நான் என்ன செய்வேன் என்பார். அந்த காட்சியை நினைவுபடுத்தியது. கீழே உள்ள யூட்யூப் இணைப்பில் கிட்டத்தட்ட 2 மணி பதினைந்து நிமிஷம் கழித்து வரும் காட்சி.

வெ.சா.விடமிருந்து இந்தக் கட்டுரையை வாங்கிப் போட்ட தமிழ் ஹிந்து தளத்துக்கு ஒரு ஜே!


தொகுக்கப்பட்ட பக்கம்: க.நா.சு. பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
க.நா.சு. பற்றி வெங்கட் சாமிநாதன் – பகுதி 1, 2, 3
க.நா.சு.வின் தட்டச்சுப் பொறி

இலக்கியக் கோட்பாடுகளும் தரம் பிரித்தலும்

bags_rv_jeyamohanஜெயமோகன் நீல. பத்மநாபன் பற்றி எழுதிய கட்டுரையைப் படித்தபோது தோன்றியவை:

என்னைப் பொறுத்த வரையில் எழுத்தாளனும் படைப்பாளியும் வாசகனும் வேறு வேறு ஜந்துக்கள். எழுத்தாளன் என்ன நினைத்து எழுதினான், படைப்பாளி என்ன சொல்ல விரும்புகிறான் என்பதற்கும் வாசகன் என்ன எடுத்துக் கொள்கிறான் என்பதற்கும் எந்த வித சம்பந்தமும் இருக்க வேண்டியதில்லை. வாசகனுக்கு என்ன தோன்றுகிறது என்பதுதான் முக்கியம். பல தலைமுறை வாசகர்களுக்கு ஒரே மாதிரி தோன்றினால், wisdom of the crowds புத்தகத்தின் தரத்தைப் பற்றிய ஒருமித்த சித்திரத்தை நிர்ணயிக்கிறது, கால ஓட்டத்தில் எந்தப் புத்தகம் நிற்கும் என்பதை தீர்மானிக்கிறது. அது எழுத்தாளன் சொல்ல வந்ததோடு ஒத்தும் போனால் அது எழுத்தாளனின் பேரதிருஷ்டம்.

பல புத்தகங்களில் – குறிப்பாக வணிக எழுத்துகள், அதிலும் துப்பறியும் கதைகள் – வாசகன் மனதில் ஒரே ஒரு விளைவைத்தான் ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை. ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளைப் படிப்பவர்கள் எல்லாருக்கும் கானன் டாயில் என்ன நினைத்து எழுதினார் என்பது தெளிவாகத் தெரியும். அவர் நினைத்தது அனேக வாசகர்கள் மனதில் நடக்கவும் நடக்கிறது, அதனால் அது காலம் காலமாக ஒரு minor classic என்ற அளவிலாவது நிலைத்து நிற்கும் என்று நினைக்கிறேன். இலக்கியம் என்று கருதப்படும் பல minor classic-களிலும் எழுத்தாளன் சொல்ல வந்தது தெளிவாகத் தெரிகிறது, அதை அனேக வாசகர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவும் செய்கிறார்கள். டிக்கன்சின் பல நாவல்கள், Vanity Fair, Pride and Prejudice, Wuthering Heights, Moon and Six Pence, All Quite on the Western Front, பொன்னியின் செல்வன், மானுடம் வெல்லும், புத்தம் வீடு, தலைமுறைகள், அம்பையின் பல சிறுகதைகள், ப்ரேம்சந்தின் பல சிறுகதைகள், காண்டேகரின் யயாதி, பைரப்பாவின் வம்ச விருக்‌ஷா, பர்வா என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

எதிர்-உதாரணமாகவும் (counter-example) நிறைய சொல்லலாம். நான் படித்தவற்றிலேயே மிகச் சிறந்த புத்தகமாகக் கருதும் To Kill a Mockingbird தேர்ந்த விமர்சர்கர்கள் யாருடைய பட்டியலிலும் இடம் பெறுவதில்லை. அதைப் பற்றி எழுதும் விமர்சகர்கள் எல்லாம் அன்றைய தெற்கு அமெரிக்க மாநிலங்களில் கறுப்பர்கள் நடத்தப்பட்ட விதம், கதையை சிறுவர்கள் கண் மூலம் சித்தரிப்பது எல்லாவற்றையும் பற்றி பேசுவார்கள். ஆனால் அதில் எனக்குத் தெரிவது அப்பா-மகள் உறவின் உச்சம், அப்படி நானும் என் பெண்களும் இருந்துவிட்டால் என் வாழ்க்கை வெற்றி அடைந்துவிட்டது. அந்தக் கோணத்தில் ஒருவரும் இந்தப் புத்தகத்தைப் பார்த்ததாக எனக்குத் தெரியவில்லை. என் நெருங்கிய நண்பர்கள் கபி அல்வித நா கெஹனா மாதிரி ஒரு குப்பை திரைப்படத்திலிருந்து வாழ்க்கைக்கு இன்றியமையாத பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

நிலைமை இப்படி இருக்கும்போது இலக்கியக் கோட்பாடு என்ற ஒரு சட்டகத்தின் மூலம் எந்தப் படைப்பையும் அணுகுவது எனக்கு மடத்தனமாகத் தெரிகிறது. கோட்பாடு இருத்தலியமோ (existentialism), வடிவ இலக்கணமோ, ஃப்ராய்டிசமோ, முன்/பின் நவீனத்துவமோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஒரு படைப்பு என்னைத் தொடுகிறதா இல்லையா என்பதல்லவா முக்கியம்? வாங்கும் சட்டை எனக்குச் சரியாக இருக்க வேண்டும், எனக்குப் பிடிக்க வேண்டும். அது அர்மானியின் ஃபாஷன் கோட்பாட்டுக்கு ஏற்ப இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? சரி சட்டையாவது சில விதிகளுக்கு உட்பட்டது, உங்கள் அலுவலகத்தில் சில விதமான சட்டைகளைப் போட்டு வந்தால் அது சில எழுதப்படாத விதிகளை மீறுவதாகலாம். படிப்பது தனி மனித ரசனைக்கு மட்டுமே உரிய சங்கதி இல்லையா?

எந்த விதி எல்லா படைப்புகளுக்கும் ஒத்து வருகிறது? சிறுகதை என்றால் ஒரு துவக்கம், நடுப்பகுதி, ஒரு உச்சக்கட்டமான முடிவு இருக்க வேண்டும் என்கிறார்கள். வடிவகச்சிதம் நிறைந்த சுந்தர ராமசாமியின் கதைகளுக்கு இவை அனேகமாக ஒத்துவரலாம். ஆனால் அசோகமித்ரனின் புலிக்கலைஞனில் உச்சக்கட்டம் கதையின் நடுவில் வருகிறதே! பஷீரின்பகவத்கீதையும் சில முலைகளும்” சிறுகதையில் பாயிண்டே கிடையாது, துவக்கமாவது, முடிவாவது? அதனால் என்ன குடிமுழுகிவிட்டது? உணர்ச்சிகள் கொந்தளிக்கும் ஜெய்மோகனின் கதைகளும் சரி, எங்கேயோ என்னவோ நடக்கிறது என்று பார்க்கும் அசோகமித்ரனின் கதைகளும் சரி உயர்ந்த இலக்கியம்தான். வெளிப்படையாகப் பேசும் ஹ்யூகோவும் என்னென்னவோ எழுதிக் குழப்பும் மார்க்வெசும் எழுதியது இலக்கியம்தான். ஷேக்ஸ்பியரின் வெளிப்படையாகப் பேசும் உணர்ச்சிகரமான நாடகங்களும் சரி, மனிதர்கள் தங்களைப் பற்றி தாங்களே புரிந்து கொள்ளும் கணங்களை முன் வைக்கும் இப்சனும் சரி, லெக்சர் அடித்தே காலத்தை ஓட்டும் பெர்னார்ட் ஷாவும் சரி, வெங்காயம் உரிப்பது போல மெதுமெதுவாக உள்ளே என்ன இருக்கிறது என்று காட்டும் ஆர்தர் மில்லரும் சரி, அருமையான நாடகங்களைத்தான் படைத்திருக்கிறார்கள்.

பெரும் படைப்பாளிகளின் எழுத்துக்களின் பொதுவான சில கூறுகளை வைத்து இலக்கியத்தில் இப்படி இருக்கலாம் என்றுதான் சொல்ல முடியும். மறைமுகமாகச் சொல்ல வேண்டும், கதாசிரியர் நேரடியாகப் பேசக் கூடாது, முதல் வரியிலேயே சிறுகதை ஆரம்பித்துவிட வேண்டும், சிறுகதையின் இறுதியில் ஒரு ஓ. ஹென்றி ட்விஸ்ட் இருக்க வேண்டும், சிறுகதை ஒரு குறுகிய காலகட்டத்தைத்தான் விவரிக்க வேண்டும் என்பதெல்லாம் ஆரம்பநிலை எழுத்தாளர்களுக்கான அறிவுரைகள். மேதைகளுக்கு விதிகள் இல்லை, அவர்கள் எழுதுவதிலிருந்துதான் ஆரம்பநிலை எழுத்தாளர்களுக்கு சில ஆலோசனைகளை எடுத்துக் கொள்ளலாம், அவ்வளவுதான்.

அதனால் கோட்பாடு எல்லாம் சுத்த விரயம் என்று நான் முழுமையாக நிராகரிக்கவில்லை. உங்களுக்கு சர்ரியலிசப் படைப்புகள்தான் பிடிக்கின்றன என்றால் ஒரு கதை சர்ரியலிச எழுத்தா இல்லையா என்று சொல்வது உங்களுக்கு உதவியாக இருக்கத்தானே செய்யும்? எனக்கு Metamorphosis பிடிக்கவில்லை (புரிந்ததா என்றே சந்தேகம்). இதோ இன்னொரு சர்ரியலிசப் படைப்பு என்றால் நான் அந்தப் புத்தகத்தை கொஞ்சம் பயந்துகொண்டேதான் தொடுவேன். ஹாரி பாட்டர் பிடிக்கிறது என்றால் டோல்கியனை பரிந்துரைக்கலாம் இல்லையா? அந்த மாதிரி சில பயன்கள் இருக்கத்தான் செய்கின்றன.

என் வரையில் கோட்பாடு என்பது சுத்த அனேகமாக விரயம். அனேகமாக என்று மாற்றி எழுத ஒரே காரணம்தான். சில சமயம் கோட்பாடு என்ற சட்டகத்தில் மூலம் பார்த்தால் நான் தவற விட்ட சில இடங்கள் இன்னும் துல்லியமாகத் தெரிகின்றன. ஆனால் விமர்சனங்களைப் படிப்பதை விட மூல எழுத்தைப் படிப்பதுதான் பயனுள்ளது என்று நான் நினைக்கிறேன். உலகத்தினர் எல்லாரும் அப்படித்தான் நினைக்கிறார்கள். ஷேக்ஸ்பியரைப் படிப்பவர்கள்தானே அதிகம்? யார் ஷேக்ஸ்பியர் நாடக விமர்சனங்களைப் படிக்கிறீர்கள்?

ஜெயமோகனை முதல் முறை சந்தித்தபோது அவரது “நாவல்” புத்தகத்தில் படைப்புகளை அவர் நாவல், நீள்கதை என்றெல்லாம் பாகுபடுத்துவதைப் பற்றிக் கேட்டேன். இந்தப் பகுப்பினால் என்ன பயன், இது நீள்கதையா இல்லையா என்று தெரிந்து கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன் என்று கேட்டேன். (இதெல்லாம் இங்கிதம் இல்லாத கேள்விகள் என்று இப்போதுதான் தெரிகிறது.) என்ன எதிர்பார்க்கலாம் என்று தெரிந்துவிடும் என்று சொன்னார். அது உண்மைதான். அதனால்தான் நான் புத்தக அறிமுகம் என்றே என் கட்டுரைகளை சொல்லிக் கொள்கிறேன். என் கட்டுரைகளைப் படித்தால் புத்தகத்தில் என்ன எதிர்பார்க்கலாம் என்று தெரிய வேண்டும் என்றுதான் எழுதுகிறேன். இது அனேகமாக க.நா.சு.வின் பாதிப்பாக இருக்கலாம். அவரும் இப்படித்தான் தன் ரசனையை அடிப்படையாக வைத்து புத்தகங்களை அறிமுகப்படுத்தினார் என்று கேள்வி. எனக்கு seminal புத்தகமான படித்திருக்கிறீர்களா? அப்படிப்பட்ட புத்தகம்தான்.

சுருக்கமாகச் சொன்னால்: கோட்பாடு கீட்பாடு எல்லாவற்றையும் தமிழ்ப் பேராசிரியர்களுக்கும் ஜெயமோகன் போன்றவர்களுக்கும் விட்டுவிடுங்கள். சும்மா ஜாலியாகப் படியுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

விமர்சகர் க.நா.சு. – ஜெயமோகன் பதிவு

நான் விரும்பிப் படித்த முதல் இலக்கிய விமர்சகர் க.நா.சு.தான். அவரது படித்திருக்கிறீர்களா புத்தகம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. அவரது விமர்சன அடிப்படைகள் – விமர்சனம் கறாராக இருக்க வேண்டும், படைப்பை மதிப்பிட (ஒப்பிட) வேண்டும், ஆனால் இவை அனைத்தும் தனி மனித ரசனையின் மேல் கட்டப்பட்டவை, அதனால் என் மதிப்பீடும் உங்கள் மதிப்பீடும் ஒத்துப் போக வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை, படைப்புகளை விவாதிப்பதன் முக்கிய நோக்கமே அவற்றைப் பரிந்துரைப்பதுதான் – என்பவற்றை நான் முழுமையாக ஏற்கிறேன். எனக்கு ரமணி சந்திரன் சகிக்கவில்லை என்பதற்காக நீங்களும் அவரை நிராகரிக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் ரசனையும் என் ரசனையும் ஒத்துப் போகவில்லை, உங்கள் பரிந்துரைகள் எனக்கும் என் பரிந்துரைகள் உங்களுக்கு சரிப்படாது, அவ்வளவுதான்.

ஜெயமோகன் க.நா.சு.வின் அணுகுமுறை பற்றி ஒரு அருமையான பதிவு எழுதி இருக்கிறார். படிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயமாகப் பார்க்க வேண்டிய பதிவு.

ஜெயமோகன் இன்னொரு அணுகுமுறை பற்றி குறிப்பிடுகிறார். சி.சு. செல்லப்பா போன்றவர்கள் ஒரு ஆக்கத்தை எப்படி வகுத்துக் கொள்வது என்பதில் குறியாக இருந்தார்களாம். எனக்கு ஜெயமோகனே கொஞ்சம் அப்படித்தான். ரசனை முக்கியமாக இருந்தாலும் அவரது அணுகுமுறை எப்போதும் வரையறைகள், அந்த வரையறைகளுக்குப் பொருந்தும் படைப்புகள் என்று இருக்கிறது. அந்த அணுகுமுறையை நான் நிராகரிக்கவில்லை, ஆனால் அதை விட எனக்கு ரசனை சார்ந்த அணுகுமுறையே உயர்வானதாகத் தெரிகிறது.

கறாரான மதிப்பீடு பற்றி ஒரு தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டும். எல்லாருக்கும் நாஸ்டால்ஜியா உண்டு. முதன் முதலின் வாசிப்பின் சாத்தியங்களைக் காட்டிய சில புத்தகங்கள் மீது எல்லாருக்கும் ஒரு soft corner உண்டு. ஆனால் அவையும் கறாராகவே மதிப்பிடப்பட வேண்டும். நான் எல்லா கணேஷ்-வசந்த் புத்தகங்களையும் படிக்க விரும்புகிறேன் என்றால் நான் எல்லா கணேஷ்-வசந்த் புத்தகங்களையும் பரிந்துரைக்கிறேன் என்று பொருளில்லை. அது என் தனிப்பட்ட விருப்பம், அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம், ஆனால் எல்லா கணேஷ்-வசந்த் புத்தகங்களையும் நான் கறாராகவே மதிப்பிடுவேன், மதிப்பிட வேண்டும். அசோகமித்ரனுக்கு அந்தக் கால எர்ரால் ஃப்ளின் சாகசப் படங்கள், மாண்டிகிறிஸ்டோ, தியாகபூமி போன்ற புத்தகங்கள் பிடித்திருப்பதைப் பார்த்திருக்கலாம். ராஜாம்பாளும் வடுவூரார் புத்தகங்களும் கல்கியின் மனத்தைக் கவர்ந்தவை என்பதை அவர் பதிவு செய்திருக்கிறார். ஆர்.கே. நாராயண் மேரி கோரல்லியின் புத்தகங்களை விரும்பிப் படித்ததை எழுதி இருக்கிறார். ஜெயமோகன் முக்கியமானவை என்று குறிப்பிடும் இலக்கியங்கள் எனக்கு அனேகமாக உன்னதப் படைப்புகளாகத் தெரிந்தாலும், அவர் பரிந்துரைக்கும் (தமிழ்) வணிகப் படைப்புகள் எனக்கு பல சமயம் தேறுவதில்லை. உங்கள் மனதை சிறு வயதில் எப்படியோ தொட்ட புத்தகங்களை தயவு தாட்சணியம் பார்க்காமல் விமர்சிப்பது கஷ்டம்தான், ஆனால் அப்படித்தான் செய்தாக வேண்டும். (எனக்கு தயவு தாட்சணியம் உண்டு. அப்படி இல்லாவிட்டால் என் சிறுகதைகளை நான் பிரசுரித்திருக்கவே மாட்டேன். 🙂 )


தொகுக்கப்பட்ட பக்கம்: க.நா.சு. பக்கம், ஜெயமோகன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்: ஜெயமோகன் பதிவு