(மீள்பதிவு)
வாசிப்பு அனுபவம் சுலபமாக பகிர்ந்து கொள்ள முடியாதது என்று எனக்கு தோன்றுகிறது. ஆனாலும், ஒரு சிறுகதை தந்த வாசிப்பு அனுபவம் என்ன என்பதை இந்தப் பதிவில் எழுத முயற்சி செய்யப் போகிறேன்.
பல வருஷங்களுக்கு முன் விகடனில் பாரதியார் நூற்றாண்டை முன்னிட்டு பல எழுத்தாளர்கள் பாரதியின் வரிகளை வைத்து கதை எழுதினார்கள். எனக்கு இன்னும் ஞாபகம் இருப்பது சுஜாதா எழுதிய ஒரு லட்சம் புத்தகங்கள் என்ற கதைதான்.
அவர் எடுத்துக்கொண்ட வரி “சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்“. ஒரு இலங்கை தமிழ் நூலகத்தில் புத்தகங்கள் சிங்களர்களால் எரிக்கப்பட்டன. இதை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட கதை.
ஏதோ ஒரு கருத்தரங்கமோ என்னவோ. அமைச்சர் வருகிறார். “தமிழறிஞர்” ஒருவர் – பல பதவி கனவுகளில் இருப்பவர் – சிறப்புரை. அப்போது அவருக்கு தெரிந்த ஒரு ஈழத் தமிழன் – அவன் குடும்பம் கலவரத்தில் அழிந்துவிட்டது – ஒரு லட்சம் புத்தகங்கள், ஒரு நூலகம், ஒரு அறிவு சொத்து, ஒரு mob -ஆல் எரிக்கப்பட்டதை பற்றி இங்கே யாருக்கும் தெரியவில்லை, எடுத்து சொல்ல வேண்டும் என்று ஆவேசத்தோடு இருக்கிறான். அவன் குடும்பம் அழிந்ததை விட இதுதான் முக்கியமான விஷயமாக படுகிறது, இது யாருக்கும் தெரியவில்லையே, தெரிந்தவர்களும் பொருட்படுத்தவில்லையே என்ற ஆவேசத்தில் இருக்கிறான். “தமிழறிஞர்” சபையில் அமைச்சர் முன்னால் எல்லாம் சுமுகமாக இருக்க வேண்டும், அமைச்சர் embarass ஆனால் தன் பதவிக் கனவு என்னாகுமோ என்ற பயத்தில் என்று போலீசை வைத்து அவனை அப்புறப்படுத்திவிடுகிறார்.
சுஜாதாவின் மிக சிறந்த சிறுகதைகளில் இதுவும் ஒன்று. இதற்கு அவர் வேறு வரிகளை – உதாரணமாக “சொந்த சகோதரர்கள் துன்பத்திற் சாதற்கண்டும் சிந்தை இரங்காரடி” சொல்லி இருக்கலாம். இந்த வரிகளில் உள்ள வஞ்சப் புகழ்ச்சிதான், sarcasm-தான் இந்த சிறுகதையை உயர்த்துகின்றன.
25-30 வருஷம் கழித்தும் இந்த கதை மறக்கவில்லை. ஏனென்றால் சுஜாதா ஸ்கூல் பையனுக்கு சொல்வது போல பார்த்தாயா இது எவ்வளவு பெரிய அநியாயம் என்று சொல்வதில்லை. சிங்களத் தீவுக்கு பாலம் என்று சொல்வதில் இருக்கும் sarcasm சுர்ரென்று உரைக்கிறது. அதே நேரத்தில் இது ஒரு propaganda கதைதான். இதில் இருப்பது art இல்லை, craft-தான். இந்த கதை எந்த தருணத்தை நோக்கி முன்னே போகிறதோ – அந்த தமிழறிஞரின் சுயநலம் – என்பது உங்களை ஐயோ என்று அலற வைக்கும் தருணம் இல்லை, மனிதனின் சுயநலம் இவ்வளவு கேவலமானதா என்று நம்மை நாமே வெறுக்கும் தருணமும் இல்லை. அலற வைக்கும் தருணம் நூலகம் எரிக்கப்பட்டதுதான். சாவுகளை கேட்டு மனம் மரத்து போயிருந்த காலம் அது. அப்போதெல்லாம் பேப்பரை திறந்தால் பஞ்சாபில் நாலு பேர் சாவு என்று செய்தி வராத நாளே கிடையாது. அந்த சமயத்தில் வேறொரு விதமான கொடுமை, உலக சரித்திரத்தில் மிக அபூர்வமாகவே நடந்திருக்கும் கொடுமை, உங்கள் கண் முன்னால் வைக்கப்படுகிறது. அந்தக் கட்டத்தில் அடப் பாவிகளா என்று மனதுக்குள் ஒரு கூக்குரல். இன்னும் ஓரிரு பக்கம் போனபின் அந்த தமிழறிஞரை பார்த்து அடச்சீ என்று ஒரு அருவருப்பு. பிறகு சிங்களத் தீவுக்கு பாலம் என்று சொல்லி இருக்கும் வரிகளை மீண்டும் ஒரு முறை நினைவு கூர்ந்து முகத்தில் ஒரு சுளிப்பு. மனதில் எழுந்த அந்த கூக்குரல் இந்த சிறுகதையின் பலம் மட்டுமல்ல, பலவீனமும் கூட. அது இந்த கதையின் க்ளைமாக்சைக் கூட dominate செய்கிறது.
படிக்க வேண்டிய கதை, மறக்கக் கூடாத துயரம் என்று சொல்லத் தோன்றுகிறது. படிக்க வேண்டிய கதை என்று நிறுத்தாமல் துயரத்தைப் பற்றியும் பேசுவதுதான் இந்த கதையின் தோல்வி. ஆனால் அதைத்தான் சுஜாதா விரும்பி இருக்க வேண்டும். இது எழுத்தாளனின் வெற்றி.
ஒரு லட்சம் புத்தகங்கள் எரிக்கப்பட்டன. நினைத்து பாருங்கள், இது நம் அனைவரின் செல்வம். எரித்தவனுக்கும் இந்த செல்வம் சொந்தம். எரித்ததால் அவனுக்கு எந்த லாபமும் இல்லை. லும்பத்தனம், அவ்வளவுதான்.
இன்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மனிதர்கள் இறந்திருப்பார்கள். இன்னும் சிந்தை இரங்காதவர்கள் அநேகம். அப்படி இறந்தவர்களை அந்த “அறிஞர்” போல சுய லாபத்துக்காக அரசியல் ஆக்கும் கும்பல்தான் இன்னும் தமிழ் நாட்டில் மலிந்து கிடக்கிறது.
தொடர்புடைய சுட்டிகள்:
சிறுகதையைப் படிக்க
உயிர்மையில் வந்த ஒரு கட்டுரை
இந்த கதையைப் பற்றி தமிழ் பேராசிரியர் அ. ராமசாமி
கொளுத்தப்பட்ட ஜாஃப்னா நூலகம்
>>…துயரத்தைப் பற்றியும் பேசுவதுதான் இந்த கதையின் தோல்வி.
– என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை…கதையே ஒரு துயர வரலாற்றை தனி மனிதனுக்கும் அவன் சார்ந்த சமுதாயத்திற்கும் நடப்ப்தை எழுதும்போது அது எப்படி தோல்வியாகும்? In fact, இன்னும் 30 வருடங்களுக்குப் பிறகு இந்தக் கதையைப் படித்தாலும் அந்த (துயர) வரலாற்றை க்ண் முன்னால் கொண்டு வந்ததற்கு அது வெற்றியே.
>>…அந்த தமிழறிஞரை பார்த்து அடச்சீ என்று ஒரு அருவருப்பு…
– இது உங்கள் அனுபவமாகக் கொள்கிறேன். சுஜாதாவின் சிறுகதைகள் வெற்றியே வாசகனிடம் செய்தியை சொல்லிவிட்டு ஒதுங்கி விடுவது. எனக்குப் படித்தபோது நடப்பு அரசியலில் ஈழப் பிரச்சினை (நான் around 1995-ல் படித்தேன்) அரசியல்வாதிகளால் கையாளப்படுவதைப் பார்த்ததால் சுஜாதாவின் 1982-ன் தீர்க்கதரிசனத்தை வியக்க முடிந்தது. கதாநாயகனின் குடும்பம் சின்னாபின்னமாகியதை ஒரு குறியீடாக 1 லட்சம் புத்தகங்களோடு இணைத்திருப்பார். எரிந்து முடிந்த நூலகமாக கதாநாயகன்.
இப்போதுதான் எழுதப்பட்டது போன்ற உணர்வுகள் சில கதைகளுக்குப் பொருந்தும் (தஸ்தாவ்யேஸ்கி-க்கு ரொம்பவே பொருந்தும்). இந்தக் கதையும் ஒன்று, அதுதான் சுஜாதாவின் வெற்றி.
அவரின் ‘ரேணுகா’ மற்றும் ‘நிபந்தணை’ படித்திருந்தால் அதைப் பற்றி ஒரு பதிவு (முடிந்தால்) போடுங்களேன்.
LikeLike
படிக்க படிக்க சுஜாதாவின் உலகம் விரிவடைந்து கொண்டே செல்கிறது. இன்னும் எத்தனை பொக்கிசங்கள் அதற்குள் இருக்கின்றனவோ!.
LikeLike
ஆர்வி
நாகர்கோயில் பூங்கா மையத்தில் ஒரு நூலகம் இருந்தது. சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை நாவலில் அதைப்பற்றிய வர்ணனை வரும். சித்திரைத்திருநாள் மகாராஜா உருவாக்கிய நூலகம். ஒருலட்சம் நூல்கள் இங்கும் இருந்தன. பாதிக்கும் மேல் தமிழ் நூல்கள். அன்றைய திருவிதாங்கூர் மகாரானா தமிழ் நன்கு வாசிப்பவர். ஆகவே அத்தனை தமிழ் நூல்களும் அவருக்கு அனுப்பப்படும். ஆகவே அனேகமா 1890 முதல் 1947 வரையிலான எல்லா பழைய நூல்களின் முதல் பிரதிகளும் இங்கிருந்தன. பட்டுத்துணி வெட்டி ஒட்டப்பட்ட படங்கள் கொண்ட புராதனமான தமிழ் மகாபாரத நூல் ஒன்றை நான் பார்த்து பிரமித்திருக்கிறேன். பல்லாயிரம் அரிய ஆவணங்கள். கைப்பிரதிகள் இருந்தன.ஆய்வாளர்களின் சொற்கம். கெ.கெ.பிள்ளை முதல் அ.கா.பெருமாள், திரிவிக்ரமன் தம்பி முக்கியமான ஆய்வாளார்கள் உருவாக அந்நூலகமே காரணம்
காமராஜருக்கு சிலை வைக்கக் கோரி ஒரு சாதிசங்கம் நெல்லைப்பக்கமிருந்து குண்டர்களை திரட்டிக்கொண்டு வந்து நடத்திய கலவரப்போராட்டத்தில் நூலகத்தின் மொத்த நூல்களும் வெளியே இழுத்துபோட்டு எரிக்கப்பட்டன. நகரெங்கும் நூல்கள் தாள்தாளாக பறந்தன
இதைப்பற்றி மட்டும் எவரும் கவிதை எழுதுவதில்லை. நம்முடையதை நாமே எரித்தால் என்ன சிக்கல் இல்லையா?
எல்லா கும்பலும் ஒன்றே. கும்பல் எப்போதும் அறிவுக்கு எதிரானது
ஜெ
LikeLike
// அன்புள்ள ஜெயமோகன், எனக்கு கண் கலங்குகிறது. புத்தகங்களை எரித்தார்களா? தமிழ்நாட்டிலா? எதுவும் எழுத முடியவில்லை. //
ஜெமோ சொல்லும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்த நிகழ்வை நான் கேள்விப் பட்டிருக்கவில்லை.. சொன்னதும் ஒ.பு.ம, கதையில் படித்தது ஞாபகம் வருகிறது . ஆனால் ஆச்சரியம் அளிக்கவில்லை.
”தீ பரவட்டும்” என்று அறிஞ்சர் அண்ணா ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். அட்டையில் ‘கம்பராமாயணம், பெரியபுராணம் என்று அட்டையில் எழுதப் பட்ட புத்தகங்கள் பற்றி எரிந்து கொண்டிருப்பது போன்று ஒரு படம் இருக்கும் – இந்த புத்தகத்தை நூலகத்தில் சிறுவயதில் பார்த்திருக்கிறேன்..
LikeLike
மதசார்பு காரணமாக நல்லவேளை கம்பராமயணமும், பெரியபுராணமும் தப்பித்துவிட்டன. காமத்துப்பால் இருப்பதற்காக திருக்குறளையும் எறித்திருந்தால் தமிழன் எங்கே போவது.
LikeLike
ஜெர்மனில் ஹிட்லர் நூலகத்தை எரித்தது புத்தகம் மூலம் தெரிந்திருந்தாலும், தமிழத்தில் நடந்தவைகள் பற்றி சொல்வதற்கு சிலராவது இருக்கிறார்கள் என்பதே போதும்.
அடுத்த தலைமுறைக்கான சொத்தினை அழிக்க யாருக்கு உரிமை இல்லை.
LikeLike
சுஜாதாவை பற்றீ சொல்லிக்கொண்டே செல்லலாம். நூலக எரித்தப்பின்னனியில் சுஜாதாப் படைத்தக் கதையை அருமையாக விளக்கி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்
LikeLike
ராஜ் சந்திரா, கதையை படிக்கும்போது கதைக்கு “வெளியே” உள்ள ஒரு நிகழ்ச்சியைப் பற்றி யோசிக்க வைப்பது கதையின் தோல்வி என்று கருதுகிறேன். // அவரின் ‘ரேணுகா’ மற்றும் ‘நிபந்தணை’ படித்திருந்தால் அதைப் பற்றி ஒரு பதிவு (முடிந்தால்) போடுங்களேன். // படித்ததில்லையே சார்!
ஜெயமோகன், தமிழகத்தில் ஒரு நூலகம் எரிக்கப்படக்கூடும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக் குடி அறிவின் மீது பெரும் மரியாதை உள்ளது என்று எனக்கு ஒரு பிம்பம் இருந்தது. அதுவும் போச்சு!
ஜெகதீஸ்வரன், ஜடாயு, மதுரை சரவணன், மறுமொழிக்கு நன்றி!
LikeLike