உ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல…

சாமிநாதையரைப் பற்றி நம்மில் அனேகருக்குத் தெரியும். ஆனால் அவர் மட்டுமே எல்லா பழைய தமிழ் இலக்கியங்களையும் அச்சில் கொண்டு வந்துவிடவில்லை. ரொம்ப சிம்பிளான கேள்வி – திருக்குறளை முதன் முதலாக அச்சில் பதித்தது யார்? எப்போது? குறளும் ஓலைச்சுவடியில் மட்டும்தானே இருந்திருக்க வேண்டும்? அதை யாரோ – அச்சில் ஏற்றி இருக்க வேண்டும் இல்லையா? யார் அச்சேற்றியது என்று எனக்குத் தெரியவில்லை என்று சொல்ல வெட்கமாகத்தான் இருக்கிறது. ஆறுமுக நாவலர் பதித்திருக்கிறார், ஆனால் அவர்தான் முதலில் பதித்தவரா? திருக்குறளை முதலில் பதித்தவர் ஏன் உ.வே.சா. அளவுக்கு கொண்டாடப்படவில்லை? உ.வே.சா.வின் புகழ் மற்றவர்களை மங்கடித்துவிட்டதா? எனக்குத் தெரிந்து சி.வை. தாமோதரம் பிள்ளையை ஏறக்குறைய உ.வே.சா.வுக்கு இணையாகச் சொல்லலாம். மற்றவர்கள் யார் யார்?

தமிழ்ச் சுடர்மணிகள் புத்தகத்தில், வையாபுரிப் பிள்ளையின் வார்த்தைகளில்:

ஆறுமுக நாவலர் சைவ சமய நூல்கள், குறள், பாரதம் வெளியிடுவதோடு அமைந்துவிட்டார்கள். வித்வான் தாண்டவராய முதலியார் திவாகரம் முதலிய நூல்களையும் பள்ளி மாணவர்களுக்கு வேண்டும் வசன நூல்களையும் அச்சியற்றுவதில் ஒடுங்கிவிட்டார்கள். மழவை மகாலிங்க ஐயர் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையோடு பதிப்பித்து வேறு சில நூல்களையும் வெளியிட்டு அத்துடன் நின்றுவிட்டார்கள். களத்தூர் வேதகிரி முதலியார் நாலடி, நைடதம் முதலிய நூல்களை வெளியிட்டு அவ்வளவில் திருப்தியுற்றார்கள். திருத்தணிகை விசாகப் பெருமாளையர் முதலியோர் குறளுக்குத் தெளிபொருள், பிரபுலிங்கலீலை, சூடாமணி நிகண்டு முதலியவற்றைப் பிரசுரித்து அவ்வளவில் தஙகள் முயற்சியைச் சுருக்கிக் கொண்டார்கள். திருவேங்கட முதலியார், ராஜகோபாலப் பிள்ளை முதலானவர்கள் ராமாயணம் வெளியிடுவதிலும் நாலடி முதலியன பதிப்பித்தலிலும் ஈடுபட்டு நின்றனர். ஸ்ரீ உ.வே. சாமிநாத ஐயரவர்கள் அப்பொழுதுதான் சீவக சிந்தாமணிப் பதிப்பு முயற்சியில் போராடிக் கொண்டிருந்தார்கள்.

உ.வே.சா.வின் என் சரித்திரத்தில் பார்த்தபடி – கல்லூரி மாணவர்களுக்கு என்ன பாடம் வைக்கப்படுகிறதோ அதை உடனே அச்சிட்டு வெளியிடுவது லாபகரமான தொழிலாக இருந்திருக்கும் போலிருக்கிறது. சீவகசிந்தாமணியில் ஒரு பகுதி இப்படி உ.வே.சா. பதிப்பிற்கு முன் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. வித்வான் தியாகராஜ செட்டியாரே அந்தப் பாடத்தை நடத்த கொஞ்சம் திணறினாராம். அதனால் அப்படி சில நூல்கள் பதிக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அந்தப் பதிப்பாளர்கள் யார்யாரென்று தெரிய இன்று வாய்ப்பு குறைவு. தியாகராஜ செட்டியாரே திணறினார் என்றால் உரை இல்லாமல் மூலம் மட்டுமே பதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

தமிழ் இலக்கியங்களை பதித்தவர்கள் யார் யார் என்று எனக்குத் தெரிந்த வரையில் கீழே பட்டியல் போட்டிருக்கிறேன். உ.வே.சா.வின் என் சரித்திரம், தாமோதரம் பிள்ளையின் வாழ்க்கை வரலாறு ஒன்று (எழுதியவர் பேர் நினைவில்லை), சீனி. வேங்கடசாமி எழுதிய ‘19-ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்‘, விக்கிபீடியா, மற்றும் அங்கும் இங்கும் பார்த்த கட்டுரைகளிலிருந்து தகவல்களைத் தொகுத்திருக்கிறேன். நான் ஆய்வாளன் அல்லன். தவறுகள் இருக்க வாய்ப்புண்டு, உங்கள் கண்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.  அதை விட முக்கியமாக உங்களுக்கு மேலும் விஷயம் தெரிந்தால் கட்டாயமாகச் சொல்லுங்கள்!

எழுதிய ஆண்டு நூல் எழுதியவர் பதிப்பு ஆண்டு பதித்தவர் குறிப்புகள்
2ஆம் நூற்றாண்டு? தொல்காப்பியம்: எழுத்ததிகாரம், நச்சினார்க்கினியர் உரை தொல்காப்பியர் 1847 மழவை மகாலிங்கய்யர்
2ஆம் நூற்றாண்டு? தொல்காப்பியம்: சொல்லதிகாரம், சேனாவரையர் உரை தொல்காப்பியர் 1868 சி.வை. தாமோதரம் பிள்ளை 1858-இல் சாமுவெல் பிள்ளை முழு தொல்காப்பியத்தையும் – உரைகள் இன்றி – பதிப்பித்தார் என்கிறார் ச.வே.சுப்ரமணியன்.
2ஆம் நூற்றாண்டு? தொல்காப்பியம்: பொருளதிகாரம், நச்சினார்க்கினியர் உரை தொல்காப்பியர் 1885 சி.வை. தாமோதரம் பிள்ளை
2ஆம் நூற்றாண்டு? தொல்காப்பியம்: எழுத்ததிகாரம், நச்சினார்க்கினியர் உரை தொல்காப்பியர் 1891 சி.வை. தாமோதரம் பிள்ளை மழவை மகாலிங்கய்யர் 1847-இல் இதை முதன்முறையாகப் பதித்திருக்கிறார்
2ஆம் நூற்றாண்டு? தொல்காப்பியம்: சொல்லதிகாரம், நச்சினார்க்கினியர் உரை தொல்காப்பியர் 1892 சி.வை. தாமோதரம் பிள்ளை
2ஆம் நூற்றாண்டு? தொல்காப்பியம் தொல்காப்பியர் 1885 சி.வை. தாமோதரம் பிள்ளை
2ஆம் நூற்றாண்டு? தொல்காப்பியம் – சொல்லதிகாரம், எழுத்ததிகாரம், இளம்பூரணர் உரை தொல்காப்பியர் 1868 சோடசாவதானம் சுப்பராய செட்டியார்
? நற்றிணை பலர் 1915 பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் எட்டுத்தொகை
? குறுந்தொகை பலர் 1915 திருமாளிகை சௌரிப் பெருமாள் அரங்கன் எட்டுத்தொகை
? ஐங்குறுநூறு அம்மூவனார், ஓதலாந்தையார், ஓரம்போகியார், கபிலர், பேயனார் 1903 உ.வே. சாமிநாதய்யர் எட்டுத்தொகை
2-ஆம் நூற்றாண்டு பதிற்றுப்பத்து அரிசில் கிழார், கபிலர், பரணர் மற்றும் பலர் 1904 உ.வே. சாமிநாதய்யர் எட்டுத்தொகை
? பரிபாடல் பலர் 1918 உ.வே. சாமிநாதய்யர் எட்டுத்தொகை
2ஆம் நூற்றாண்டு? கலித்தொகை, நச்சினார்க்கினியர் உரை இளநாகர், கபிலர், பெருங்கடுங்கோன், நல்லந்துவர், நல்லுருத்திரர் 1887 சி.வை. தாமோதரம் பிள்ளை எட்டுத்தொகை
2-ஆம் நூற்றாண்டு? அகநானூறு பலர் 1923 ரா. ராகவையங்கார் எட்டுத்தொகை
2-ஆம் நூற்றாண்டு? புறநானூறு பலர் 1894 உ.வே. சாமிநாதய்யர் எட்டுத்தொகை
2-ஆம் நூற்றாண்டு? திருமுருகாற்றுப்படை நக்கீரர் 1834 சரவணப் பெருமாள் ஐயர் 1857, ஆறுமுக நாவலர். ஆனால் உ.வே.சா.வின் 1889 பதிப்பே (பத்துப்பாட்டு) கவனம் பெற்றது.
2-ஆம் நூற்றாண்டு? பொருநராற்றுப்படை முடத்தாமக் கண்ணியார் 1889 உ.வே. சாமிநாதய்யர் பத்துப்பாட்டு
2-ஆம் நூற்றாண்டு? பெரும்பாணாற்றுப்படை கடியலூர் உருத்திரங்கண்ணனார் 1889 உ.வே. சாமிநாதய்யர் பத்துப்பாட்டு
2-ஆம் நூற்றாண்டு? சிறுபாணாற்றுப்படை நத்தத்தனார் 1889 உ.வே. சாமிநாதய்யர் பத்துப்பாட்டு
2-ஆம் நூற்றாண்டு? முல்லைப்பாட்டு நப்பூதனார் 1889 உ.வே. சாமிநாதய்யர் பத்துப்பாட்டு
2-ஆம் நூற்றாண்டு? குறிஞ்சிப்பாட்டு கபிலர் 1889 உ.வே. சாமிநாதய்யர் பத்துப்பாட்டு
2-ஆம் நூற்றாண்டு? மதுரைக்காஞ்சி மாங்குடி மருதனார் 1889 உ.வே. சாமிநாதய்யர் பத்துப்பாட்டு
2-ஆம் நூற்றாண்டு? நெடுநல்வாடை நக்கீரர் 1889 உ.வே. சாமிநாதய்யர் பத்துப்பாட்டு
2-ஆம் நூற்றாண்டு? பட்டினப்பாலை கடியலூர் உருத்திரங்கண்ணனார் 1889 உ.வே. சாமிநாதய்யர் பத்துப்பாட்டு
2-ஆம் நூற்றாண்டு? மலைபடுகடாம் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் 1889 உ.வே. சாமிநாதய்யர் பத்துப்பாட்டு
2-ஆம் நூற்றாண்டு சிலப்பதிகாரம் இளங்கோ அடிகள் 1892 உ.வே. சாமிநாதய்யர் ஐம்பெரும் காப்பியங்கள்
2-ஆம் நூற்றாண்டு மணிமேகலை சீத்தலைச்சாத்தனார் 1897 உ.வே. சாமிநாதய்யர் ஐம்பெரும் காப்பியங்கள்
4-ஆம் நூற்றாண்டு ஐந்திணை ஐம்பது மாறன் பொறையனார் பதினெண்கீழ்க்கணக்கு
5ஆம் நூற்றாண்டு ஐந்திணை எழுபது மூவாதியார் பதினெண்கீழ்க்கணக்கு
5ஆம் நூற்றாண்டு? திணைமாலை நூற்றைம்பது கணிமேதாவியார் ரா. ராகவையங்கார்? பதினெண்கீழ்க்கணக்கு
5-ஆம் நூற்றாண்டு? திரிகடுகம் நல்லாதனார் பதினெண்கீழ்க்கணக்கு
5-ஆம் நூற்றாண்டு? ஆசாரக்கோவை பெருவாயின் முள்ளியார் 1893 செல்வகேசவராய முதலியார் பதினெண்கீழ்க்கணக்கு
5-ஆம் நூற்றாண்டு? முத்தொள்ளாயிரம் பெயர் தெரியவில்லை 1905 ரா. ராகவையங்கார்
6-ஆம் நூற்றாண்டு திருக்குறள் திருவள்ளுவர் 1861 ஆறுமுக நாவலர்?
6-ஆம் நூற்றாண்டு திருக்குறள் – மணக்குடவர் உரை திருவள்ளுவர், மணக்குடவர் வ.உ. சிதம்பரம் பிள்ளை
6-9-ஆம் நூற்றாண்டுகள் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் ஆழ்வார்கள்
7-ஆம் நூற்றாண்டு இறையனார் அகப்பொருள், நக்கீரர் உரை இறையனார் 1883 சி.வை. தாமோதரம் பிள்ளை
7-8-ஆம் நூற்றாண்டுகள் தேவாரம் அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர்
? திருமந்திரம் திருமூலர்
8-ஆம் நூற்றாண்டு இனியவை நாற்பது பூதஞ்சேதனார் ரா. ராகவையங்கார்? பதினெண்கீழ்க்கணக்கு
? நாலடியார் களத்தூர் வேதகிரி முதலியார்? பதினெண்கீழ்க்கணக்கு
? நான்மணிக்கடிகை விளம்பி நாகனார் பதினெண்கீழ்க்கணக்கு
? இன்னா நாற்பது கபிலர் பதினெண்கீழ்க்கணக்கு
? களவழி நாற்பது பொய்கையார் பதினெண்கீழ்க்கணக்கு
? கார் நாற்பது கண்ணங்கூத்தனார் பதினெண்கீழ்க்கணக்கு
? திணைமொழி ஐம்பது கண்ணன் சேந்தனார் பதினெண்கீழ்க்கணக்கு
? பழமொழி நானூறு முன்றுரையர் 1917 செல்வகேசவராய முதலியார் பதினெண்கீழ்க்கணக்கு
? சிறுபஞ்சமூலம் காரியாசான் பதினெண்கீழ்க்கணக்கு
? முதுமொழிக்காஞ்சி மதுரை கூடலூர் கிழார் 1919 செல்வகேசவராய முதலியார் பதினெண்கீழ்க்கணக்கு
? ஏலாதி கணிமேதாவியார் பதினெண்கீழ்க்கணக்கு
? கைந்நிலை புல்லங்காடனார் பதினெண்கீழ்க்கணக்கு
? இன்னிலை வ.உ. சிதம்பரம் பிள்ளை பதினெண்கீழ்க்கணக்கு நூலா இல்லையா என்று தெரியவில்லை.
8-ஆம் நூற்றாண்டு திவாகர நிகண்டு திவாகர முனிவர் தாண்டவராய முதலியார்
9-ஆம் நூற்றாண்டு நந்திக் கலம்பகம் பெயர் தெரியவில்லை
9-ஆம் நூற்றாண்டு திருவாசகம் மாணிக்கவாசகர் ஆறுமுக நாவலர்https://siliconshelf.wordpress.com/2014/10/26/ஆறுமுக-நாவலர்/?
9-ஆம் நூற்றாண்டு புறப்பொருள் வெண்பா மாலை ஐயனாரிதனார் தாண்டவராய முதலியார்
10-ஆம் நூற்றாண்டு சீவக சிந்தாமணி திருத்தக்க தேவர் உ.வே. சாமிநாதய்யர் ஐம்பெரும் காப்பியங்கள்
10-ஆம் நூற்றாண்டு குண்டலகேசி ஐம்பெரும் காப்பியங்கள்
? வளையாபதி ஐம்பெரும் காப்பியங்கள், சில பாடல்களே கிடைத்திருக்கின்றன
? சூளாமணி 1889 சி.வை. தாமோதரம் பிள்ளை ஐஞ்சிறு காப்பியங்கள்
10-ஆம் நூற்றாண்டு நீலகேசி தோலாமொழித் தேவர் அ. சக்ரவர்த்தி நாயனார் ஐஞ்சிறு காப்பியங்கள்
11-ஆம் நூற்றாண்டு வீரசோழியம், பெருந்தேவனார் உரை புத்தமித்திரர் 1881 சி.வை. தாமோதரம் பிள்ளை
12-ஆம் நூற்றாண்டு கலிங்கத்துப்பரணி ஜெயங்கொண்டார்
12-ஆம் நூற்றாண்டு ஆத்திசூடி ஔவையார் ஆறுமுக நாவலர்
12-ஆம் நூற்றாண்டு கொன்றை வேந்தன் ஔவையார் ஆறுமுக நாவலர்
12-ஆம் நூற்றாண்டு பெரிய புராணம் சேக்கிழார் 1884 ஆறுமுக நாவலர்?
11ஆம் நூற்றாண்டு யாப்பருங்கலக் காரிகை அமுதசாகரர் களத்தூர் வேதகிரி முதலியார்
12-ஆம் நூற்றாண்டு கம்பராமாயணம் கம்பர்
13-ஆம் நூற்றாண்டு நன்னூல் பவணந்தி முனிவர் தாண்டவராய முதலியார்
13-ஆம் நூற்றாண்டு நளவெண்பா புகழேந்திப் புலவர்
13-ஆம் நூற்றாண்டு தஞ்சைவாணன் கோவை பொய்யாமொழிப் புலவர் 1893 தெய்வசிகாமணி முதலியார், திருமயிலை சண்முகம் பிள்ளை
14-ஆம் நூற்றாண்டு கந்த புராணம் கச்சியப்ப சிவாசாரியார் 1883 ஆறுமுக நாவலர்? நாவலருக்கு முன் வேறு யாராவது பதித்தார்களா என்று தெரியவில்லை
15-ஆம் நூற்றாண்டு வில்லிபாரதம் வில்லிபுத்தூரார் ஆறுமுக நாவலர்?
15-ஆம் நூற்றாண்டு திருப்புகழ் அருணகிரிநாதர் 1895 சுப்ரமணியப் பிள்ளை 1885-இல் ஆறுமுக நாவலர் பதித்தார் என்றும் படித்தேன்.
16-ஆம் நூற்றாண்டு? திருவிளையாடல் புராணம் பரஞ்சோதி முனிவர் ஆறுமுக நாவலர்?
16-ஆம் நூற்றாண்டு நைடதம் அதிவீரராம பாண்டியர் களத்தூர் வேதகிரி முதலியார்
16-ஆம் நூற்றாண்டு சூடாமணி நிகண்டு மண்டலபுருஷர் திருத்தணிகை விசாகப் பெருமாளையர்
17-ஆம் நூற்றாண்டு? முக்கூடற்பள்ளு
17-ஆம் நூற்றாண்டு? பிரபுலிங்கலீலை சிவப்பிரகாச சுவாமிகள் திருத்தணிகை விசாகப் பெருமாளையர் 1867-இல் ஆறுமுக நாவலர் பதித்திருக்கிறார்.
17-ஆம் நூற்றாண்டு நீதிநெறி விளக்கம் குமரகுருபரர் 1853 சி.வை. தாமோதரம் பிள்ளை
18-ஆம் நூற்றாண்டு குற்றாலக் குறவஞ்சி திரிகூட ராசப்ப கவிராயர்
18-ஆம் நூற்றாண்டு திருத்தணிகைப் புராணம் கச்சியப்ப முனிவர் 1883 சி.வை. தாமோதரம் பிள்ளை
18ஆம் நூற்றாண்டு இலக்கண விளக்கம் வைத்தியநாத தேசிகர் 1889 சி.வை. தாமோதரம் பிள்ளை

விவரம் தெரிந்தவர்கள் கட்டாயம் சொல்லுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் இலக்கியம்

உ.வே. சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’

உ.வே.சா.வின் என் சரித்திரம் ஒரு காலத்தின் வாழ்க்கை முறைக்கு ஆவணம். அவருடைய உண்மையான தேடலை எடுத்துக் காட்டுகிறது. அவரது குணாதிசயம் மிக நன்றாகப் புரிகிறது. கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.

உ.வே.சா., உ.வே.சா.வின் குருநாதரான மீனாட்சிசுந்தரம் பிள்ளை, மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் சமகாலத்தவரான கோபாலகிருஷ்ண பாரதியார், ஏன் உ.வே.சா.வின் அப்பா கூட  19-ஆம் நூற்றாண்டின் பாணர்கள். அவர்களுக்கு தமிழில் புலமை, சங்கீதத் திறமை, செய்யுள் எழுதும் திறன், கீர்த்தனங்கள் எழுதும் திறன் என்று ஏதாவது ஒன்று இருந்திருக்கிறது. வாழ்க்கையை ஓட்ட கிராமங்களில் கச்சேரி, கதாகாலட்சேபம், உரைகள், எதையாவது நடத்தி இருக்கிறார்கள். மிராசுதார்கள், பண்ணையார்கள், சமஸ்தான அதிபதிகள், ஆதீனங்கள் யார் தயவாவது வேண்டி இருந்திருக்கிறது. ஆங்கிலேய ஆட்சியில் தமிழ் பண்டிதர்கள் மெதுமெதுவாக அரசு வேலைகளை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். மீனாட்சிசுந்தரம் பிள்ளை அப்படி புரவலர் ஆதரவில் வாழ்ந்தவர்களின் கடைசி பிரதிநிதிகளில் ஒருவர். உ.வே.சா. மெதுமெதுவாக அரசு வேலைகள் பக்கம் நகர்ந்தவர்களின் முதல் பிரதிநிதிகளில் ஒருவர்.

சிறு வயதிலேயே உ.வே.சா.வின் மனம் தமிழில் ஈடுபட்டுவிட்டது. யாராவது ஏதாவது சொல்லித் தரமாட்டார்களா, எந்த நூலையாவது கற்றுக் கொள்ள மாட்டோமோ என்று அலைந்திருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் முதன்மையான தமிழ் பண்டிதர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. முட்டி மோதி கடைசியில் அவரிடம் சேர்ந்திருக்கிறார். மெதுமெதுவாக பிள்ளையின் முதன்மை சீடர் ஆகி இருக்கிறார். பிள்ளையின் மறைவுக்குப் பிறகு பிள்ளை இருந்த ஸ்தானத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆதரவில் வாழ்ந்திருக்கிறார்.

இந்தக் காலகட்டத்தில் தெளிவாகத் தெரிவது உ.வே.சா. பணம், பதவி உள்ளவர்களிடம் பணிவுடன் நடந்து கொள்வது. சில பல அவமானங்களை சகித்துக் கொள்வது. அவர்களின் ஆதரவு இல்லாமல் வாழ்க்கையை ஓட்ட முடியாது என்று அவருக்கு தெளிவாகத் தெரிந்திருக்கிறது. அவரை விடுங்கள், பிள்ளையே வளைந்து கொடுத்துத்தான் வாழ்க்கையை ஓட்ட முடிந்திருக்கிறது.

தெளிவாகத் தெரியும் இன்னொரு விஷயம் ஜாதி ஆசாரம். உ.வே.சா. பிராமணர். குருநாதர் மீது எத்தனை மரியாதை, அன்பு இருந்தாலும் பிள்ளை வீட்டில் இவர் சாப்பிட முடியாது, பிராமணர் சமைத்துத்தான் சாப்பிட வேண்டும். ஆனால் ஓரளவு நெகிழ்வுத்தன்மையும் தெரிகிறது. பிள்ளையின் சீடர்கள் பல ஜாதியினர். ஏன், கிறிஸ்துவரான சவேரிநாதப் பிள்ளை பிள்ளையின் முதன்மை சீடர்களில் ஒருவர்.

சில காலத்துக்குப் பிறகு தியாகராஜ செட்டியார் பரிந்துரையில் கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராக பணி புரிகிறார். அப்போதும் கல்லூரி முதல்வர் தன் பணியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற டென்ஷன் எல்லாம் இருந்திருக்கிறது. அதாவது, கல்லூரி முதல்வர் தன் சொந்தப் பணத்தை இவருக்கு சம்பளமாகத் தரவில்லை என்றாலும், அவர்தான் இப்போது உ.வே.சா.வுக்கு புரவலர், அவர் மனம் கோணாமல் நடந்து கொள்ளவேண்டும் என்று முயன்றிருக்கிறார்.

தமிழில் பல பிரபந்தங்கள், உலாக்கள் போன்ற கொஞ்சம் பிற்கால நூல்களைப் படித்திருந்தாலும் உ.வே.சா. சிலப்பதிகாரம், மணிமேகலை, போன்ற பல நூல்களைப் பற்றி கேட்டதே இல்லை. அது வரை தமிழ் நூல்களைப் படிப்பது என்றால் குரு சீடருக்கு தலைமுறை தலைமுறையாக சொல்லித் தந்து வருவதுதான். சிறந்த தமிழறிஞர்களான மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தியாகராஜ செட்டியார் போன்றவர்களே சீவக சிந்தாமணி போன்ற நூல்கள் சரியாக புரியவில்லை என்று விட்டுவிட்டார்களாம். இந்த நூல்களைப் படிக்கும் சரடு எப்படியோ அறுந்து போயிருக்கிறது.

தற்செயலாக சேலம் ராமசாமி முதலியார் மூலம் இந்த நூல்களைப் பற்றி அறிந்து கொண்டிருக்கிறார். அவரது வாழ்க்கையே மாறிவிட்டது. சிந்தாமணியைப் புரிந்து கொள்ள பல வருஷம் உழைத்திருக்கிறார். சிந்தாமணியில் பல ஜைன மதம் சார்ந்த குறிப்புகள் உண்டாம். உ.வே.சா. பல ஜைனர்களிடம் சென்று பாடம் கேட்டிருக்கிறார்.  உ.வே.சா. பட்டினியோடு போராடவில்லை என்றாலும் பணக்காரர் அல்லர். பதிக்க பணம் வேண்டும். சி.வை. தாமோதரம் பிள்ளை தன்னால் பணம் புரட்ட முடியும்,  தான் பதிக்கிறேன் என்று கேட்டிருக்கிறார். தன் உழைப்புக்கு சி.வை.தா. புகழ் பெறுவதில் உ.வே.சா.வுக்கு சம்மதமில்லை, ஆனால் அவருக்கு நல்ல பதவியில் இருப்பவரை மறுப்பது சுலபமாகவும் இல்லை. தான் பணம், பதவி உள்ளவர்களின் ஆதரவில் வாழும் பாணன் என்ற மனப்பான்மை அவரை கடைசி வரையில் விடவே இல்லை என்றுதான் நினைக்கிறேன். பல போராட்டங்களுக்கு பின்னால் சிந்தாமணி பதிக்கப்பட்டிருக்கிறது.

அதற்குப் பிறகு அவரது வாழ்க்கை முறையே இதுதான் – ஏடுகளைத் தேடுவது, பதிப்பது. பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் என்று புத்தகத்திற்கு மேல் புத்தகமாக பதித்திருக்கிறார். புகழ் பெற்றிருக்கிறார். இன்றும் பழைய புத்தகங்களைப் பதித்தவர்களில் முதல்வர் அவரே.

வளையாபதியின் முழு வடிவத்தை திருவாவடுதுறை ஆதீனத்தில் சிறு வயதில் பார்த்ததாகவும் ஆனால் புத்தகங்களைப் பதிக்க ஆரம்பித்த பிறகு அது கிடைக்கவில்லை என்றும் ஓரிடத்தில் சொல்கிறார். கொஞ்சம் வருத்தமாக இருந்தது.

உ.வே.சா.வின் வாழ்க்கையின் முதல் தாக்கம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. அவரை ஆதரித்தவர் திருவாவடுதுறை சுப்ரமணிய தேசிகர். அவருடைய அருமை தெரிந்து அவரை உயர்த்தப் பாடுபட்டவர் தியாகராஜ செட்டியார். அவரது வாழ்க்கையை மாற்றியவர் சேலம் ராமசாமி முதலியார். படிக்கும்போது ஆச்சரியமாக இருந்தது. ஜாதி ஆசாரம் மிகுந்து இருந்த நாட்களில் ஒரு பிராமணரின் வாழ்க்கைக்கு பிள்ளை, செட்டியார், முதலியார் என்று பலரும் கை கொடுத்திருக்கிறார்கள்!

வேறு சில இடங்களில் உ.வே.சா. பிராமணர்களுக்கு மட்டுமே தமிழ் சொல்லித் தருவார் என்றும் படித்திருக்கிறேன். அவருடைய முதன்மை சீடர் கி.வா. ஜகன்னாதன் என்பது தெரிந்ததே. குறிப்பாக நாரண. துரைக்கண்ணனின் தமிழறிவைப் பாராட்டினாலும் துரைக்கண்ணன் சூத்திரன், சூத்திரனுக்கு தமிழ் சொல்லித் தரமாட்டேன் என்று மறுத்துவிட்டாராம். இது உண்மையாக இருந்தால் ஆச்சரியம்தான் – மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் ஏறக்குறைய பக்தியே உள்ளவர், சவேரிநாதப் பிள்ளையையும் தியாகராஜ செட்டியாரையும் ராமசாமி முதலியாரையும் தன் உயிர் நண்பர்களாகக் கருதியவர், செட்டியார் வீட்டிலும் முதலியார் வீட்டிலும் பல காலம் தங்கியவர், சூத்திரனுக்கு தமிழ் கற்றுத் தர மாட்டேன் என்று சொல்லி இருப்பாரா? ஒரு வேளை துரைக்கண்ணனுக்கு தமிழ் சொல்லித் தரக் கூடிய சூழ்நிலை இல்லாமல் இருந்திருக்கலாம், அது இப்படி பிராமணன்-சூத்திரன் என்று கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

உ.வே.சா. பலரது வாழ்க்கை வரலாறுகளை எழுதி இருக்கிறார். அவருடைய ஆப்தரான தியாகராஜ செட்டியார் மீது, அவருக்கு சில காலம் சங்கீதம் கற்றுக் கொடுத்த கோபாலகிருஷ்ண பாரதியார் மீது எல்லாம் எழுதி இருக்கிறார்.

புதியதும் பழையதும், நல்லுரைக் கோவை போன்றவை அவர் எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பு. Charming ஆக இருந்தது.

‘என் சரித்திரம்’ புத்தகத்தை கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

டிங்கினானே – உ.வே.சா.வின் நினைவுகள்

(மீள்பதிப்பு)

உ.வே.சா. எழுதிய நான் கண்டதும் கேட்டதும் நூலிலிருந்து ஒரு excerpt:

மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் உ.வே. சாமிநாதையர் மாணவராய்த் தங்கிப் பல நூல்களைப் பாடம் கேட்டு வந்தார். அப்பொழுது சவேரிநாத பிள்ளை என்ற கிறித்தவரும் உடனிருந்து பாடம் கேட்டு வந்தார்.

ஒரு நாள் பிற்பகலில் பிள்ளையவர்கள் சவேரிநாத பிள்ளையை ஒரு காரியமாக மாயவரத்தில் முனிசீப்பாக இருந்த வேதநாயகம் பிள்ளையிடம் அனுப்பினார்கள். அங்குச் சென்ற சவேரிநாத பிள்ளை இரவு 12 மணியாகியும் திரும்பி வரவில்லை. பிறகு 2 மணிக்கு வந்தார். வந்தவரை “ஏன் இவ்வளவு காலதாமதம்” என்று பிள்ளை வினவினார். அதற்குப் பின்வருமாறு சவேரிநாதர் பதில் கூறினார்:

நான் இரண்டு மணிக்கு வந்ததே பெரும் பிரயாசையாகி விட்டது. முனிசீப் வீட்டிற்கு வருகையில் இரவு 9 மணியாகிவிட்டது. அவர்களோடு பேச வேண்டிய காரியத்தைப் பேசிவிட்டுத் திரும்பும் போது இரவு மணி பதினொன்று. எங்கும் மையிருட்டாய் இருந்தது.

அங்கிருந்து புறப்பட்டுச் சிறிது தூரம் வந்தேன், பெரிய மைதானத்துக்கு அருகில் வந்த போது திடீரென்று காலில் ஏதோ தட்டியது. கட்டையாக இருக்கலாமென்று எண்ணி நான் சிறிது ஒதுங்கி வர ஆரம்பித்தேன். அந்த இடத்திலும் என் காலில் ஒன்று இடித்தது. இருட்டு மிகுதியாய் இருந்ததால் எனக்குப் பயம் ஏற்பட்டது. மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு அந்த இடத்தை ஊன்றிக் கவனித்தேன்.

என்ன ஆச்சரியம்! அங்கே வழி நெடுக அநேக ஜனங்கள் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் சிறிதேனும் சத்தம் செய்யவில்லை. மெல்லக் குனிந்து ஒருவரைத் தடவித் தொட்டுப் பார்த்து வழிவிட வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். அதற்குள், மற்றொருவர் எழுந்து என் காதில், ‘முட்டாளே, பேசாதே! பாரதக்கதை நடக்குது’ என்று சொல்லிவிட்டு என் கையைப் பிடித்து இழுத்துக் கீழே உட்கார வைத்துவிட்டார். நாம் நினைத்தபடி அவ்வளவு அபாயம் இல்லை என்று எனக்கு ஆறுதல் உண்டாயிற்று. பெருமூச்சு விட்டேன். எங்கே பாரதம் நடக்கிறது என்று கவனித்தேன்.

ஏதோ பாட்டுப் போன்ற ஒரு தொனி காதில் விழுந்தது. அதனொடு இடையிடையே ஆமாமா! என்ற சத்தமும், உடுக்கையொலியும் பம்பையின் முழக்கமும் ஒன்றன்பின் ஒன்றாய்க் கேட்டன. என்ன கூறப்படுகின்றன என்று காதை நிமிர்த்திக் கொண்டு கேட்டேன்.

‘பீமசேன மவராசா, மவராசா, மவராசா!’ என்றார் முதல்வர். ‘ஆமாமா!’ என்றார் பின்பாட்டுக்காரர். ‘மரத்தேப்பூ’, ‘மரத்தேப்பூ’ என்று உற்சாகத்தோடு கைகளைக் கீழும் மேலும் அசைத்துக்கொண்டு கர்ச்சனை செய்தார் பிரசங்கியார். பின்பாட்டுக்காரர் ‘ஆமாமா’ என்று மூன்று முறை முழங்கினார். அப்பால் உடுக்கையின் ஓசையும் பம்பையின் முழக்கமும் எழுந்தன. இப்படிச் சில நிமிஷம் முழங்கியபின் உடுக்கைக்காரர்,

‘டிங்கினானே, டிங்கினானே, டிங்கினானே’ என்று சொல்லி ஆலாபனம் செய்யத் தொடங்கிவிட்டார். ஜனங்கள் எல்லாரும் சந்தோஷ ஆரவாரம் செய்தனர். அவ்வளவு பெரிய கூட்டத்தில் நான் மட்டும் அந்த ஆனந்தத்தை அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை. மேடையில் நடந்த கதை ‘பாரதம்’ என்பதை பீமசேன மவராசா என்ற சத்தத்தால் அறிந்தேன். அதற்கு மேல் நான் கேட்ட முழக்கங்களின் பொருள் எனக்கு விளங்கவில்லை.

வரும்பொழுது ஒருவரோடு ஒருவர் பேசி வருகையில் பிரசங்கியார் சொன்ன வாக்கியம் ஒரு யானையை அடிப்பதற்குப் பீமசேனன் மரத்தைப் பிடுங்கினான் என்பதென்று தெரிய வந்தது. இந்த ‘டிங்கினானே’ வரலாற்றைப் பிள்ளையவர்கள் அங்கே வருபவர்களுக்கெல்லாம் சவேரிநாத பிள்ளையைக் கொண்டு சொல்லிக் காட்டி வந்தார்கள்.

நான் கண்டதும் கேட்டதும் பல நிகழ்ச்சிகளின் தொகுப்பு. டிங்கினானே-தான் இவற்றுள் மிகவும் சுவாரசியமானது என்று கருதுகிறேன். இதைத் தவிர உ.வே.சா.வுக்கு மணிமேகலை பிரதி தந்துதவிய அழகிய சிற்றம்பலக் கவிராயரின் முன்னோருக்கு மிதிலைப்பட்டி என்ற கிராமத்தையே மானியமாகத் தந்த வெங்களப்ப நாயக்கரின் வாரிசு ஒருவரே அவருக்கு வண்டி ஓட்டி வந்ததும் கவிராயரின் வரலாறு தெரிந்ததும் என் முன்னோர் கொடுத்த தானத்திலிருந்து நான் கூலி வாங்க மாட்டேன் என்று சொல்லி சென்றுவிட்ட நிகழ்ச்சியையும் குறிப்பிட வேண்டும்.

இதே பாணியில் – தான் கண்ட, கேட்ட நிகழ்ச்சிகள், பாரம்பரியக் கதைகள் – என்று பலவற்றை நினைவு மஞ்சரி என்று எழுதி இருக்கிறார். சீவக சிந்தாமணியில் ஒரு வரிக்கு (கள்ளராற் புலியை வேறு காணிய காவல் மன்னன்) அர்த்தம் தெரியாமல் தவித்ததும், அதே வரியை (கள்ளா, வா புலியைக் குத்து!) பழமொழியாக ஒரு கிழவர் சொல்லும்போது அவரைக் கேட்டு அது என்ன என்று புரிந்து கொண்டதும் குறிப்பிட வேண்டியது. அவருடைய தேடல் முழுமையாக வெளிப்படும் நிகழ்ச்சி.

உ.வே.சா. பரம வைதிகர் என்பது தெரிந்ததே. ஆனால் அவர் குறிப்பிடும், பழகிய அறிஞர்கள் பல ஜாதியினர். (ஜாதிப் பெயரை தவிர்க்கும் வழக்கம் அவர் காலத்தில் இல்லை, அதனால் தெளிவாகத் தெரிகிறது). அவரது ஆசான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. அவருடைய சக மாணவர்கள் சவேரிநாதப் பிள்ளை, தியாகராஜச் செட்டியார் என்று பலர். பூண்டி அரங்கநாத முதலியார், மழவை மகாலிங்கையர், சாமிக்கண்ணு பிள்ளை (பிரசிடென்சி கல்லூரி லத்தீன் பேராசிரியராம்!), தொழுவூர் வேலாயுத முதலியார் என்று பல பேர்கள் போகிற போக்கில் குறிப்பிடப்படுகின்றன. வ.உ.சி. சிறையில் இருக்கும்போது இவருக்கு கடிதம் எழுதி திருக்குறள் பற்றி சந்தேகம் கேட்டிருக்கிறார். இந்தப் புத்தகங்களில் பேர் வரவில்லை என்றாலும் சி.வை. தாமோதரம் பிள்ளைக்கும் இவருக்கும் ஆரோக்கியமான போட்டி இருந்தது என்பார்கள். மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் உ.வே.சா.வுக்கு இருந்த பக்தி உலகறிந்தது. தியாகராச செட்டியாரிடம் நட்பும் மரியாதையும் நிறைய இருந்தது. உ.வே.சா.வை பதிப்புப் பணிக்கு திருப்பியவர் சேலம் ராமசாமி முதலியார்.

உ.வே.சா. தனது ஆசான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் வரலாற்றையும் எழுதி இருக்கிறார். அது அத்தனை சுவாரசியமாக இல்லைதான், ஆனால் அது முக்கியமான ஆவணம். அன்றையத் தமிழ் புலவர்களின் வாழ்க்கை நிலையை சிறப்பாகக் காட்டுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலை சிறந்த புலவர் என்று பிள்ளை அவர்களைத்தான் சொல்ல வேண்டும். ஆனால் லௌகீக வாழ்க்கையின் சிரமங்கள் அவருக்கும் இருந்திருக்கிறது. கந்தசஷ்டி கவசம் எழுதிய தேவராய ஸ்வாமிகள் கூட பிள்ளை அவர்களின் மாணவர்தான். தேவராய ஸ்வாமிகள் பெரும் செல்வந்தர் போலிருக்கிறது. அன்று அவரை பெங்களூருக்கு அழைத்துச் சென்று பல மாதங்கள் உபசரித்து தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறார். பிள்ளையை ஊருக்கு அனுப்பும்போது அவருக்கு ஐயாயிரம் ரூபாய் தட்சிணையாகத் தந்திருக்கிறார்! அன்றைய 5000 ரூபாய் இன்றைக்கு 5 கோடி பெறும் என்று நினைக்கிறேன்!

உ.வே.சா. அன்றைய் சங்கீத வித்வான்களின் வரலாற்றையும் எழுதி இருக்கிறார் – நந்தனார் சரித்திரம் எழுதிய கோபாலகிருஷ்ண பாரதியார், கனம் கிருஷ்ணையர், மஹா வைத்யநாதையர் – இன்று இவற்றுக்கு ஆவண முக்கியத்துவம் தவிர வேறு எதுவுமில்லை.

உ.வே.சா.வின் சுயசரிதத்தையும் எப்போதோ படித்திருக்கிறேன். சுவாரசியமான, முக்கியமான ஆவணம். அவர் கண்ட, கேட்ட சம்பவங்களை எல்லாம் புதியதும் பழையதும் என்றும் தொகுத்திருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

தமிழறிஞர் அறிமுகம் 4 – மஹாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

ஓப்பன் ரீடிங் ரூம் ரமேஷ் சக்ரபாணியின் தொடரும் தமிழறிஞர் அறிமுகங்கள். இந்த அறிமுகங்கள் அஜயன் பாலாவால் எழுதப்பட்டவை, ரமேஷ் இவற்றை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

தோற்றம்:06-04-1815, இறப்பு 01-02-1876

meenakshi_ sundaram_ pillaiஓலைச்சுவடி காலத்திலேயே ஒரு லட்சம் தமிழ் பாடல்களை மற்றவர் பாடக் கேட்டு மனப்பாடம் செய்து அறிவில் தேக்கி அடுத்த த்லைமுறைகளுக்கு கற்றுத் தந்தவர். தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின் தமிழ் பற்றுக்கு காரணமாக இருந்த அவரது ஆசான். மகாவித்துவான் என அனைவராலும் ஆழைக்கப்பட்ட மீனாட்சிசுந்தரம் பிள்ளை.

மதுரையில் பிறந்த மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் தந்தை சிதம்பரம் பிள்ளை. தாயார் அன்னந்தாச்சி. தந்தை சிதம்பிரம் பிள்ளையவர்கள் இயல்பில் தமிழ் ஆசானக இருந்ததால் வீட்டில் பாசத்தோடு தமிழும் சேர்ந்து அவரை வளர்த்தெடுத்தது. இளமையில் இவரது அபாரமான நினைவாற்றல் பாடல்களை படித்த வேகத்தில் மனதில் பதிய வைத்துக் கொண்டது கண்டு அனைவரும் ஆச்சர்யப்பட்டனர்.

காஞ்சீபுரம் சபாபதி முதலியாரரிடம் புராணங்களையும் திருவேங்கடாசல முதலியாரரிடம் பாகவதம், பிரபந்தம் ஆகியவற்றையும் கற்றுக் கொண்டார். ஆசான்கள் இறைவனுக்கு ஒப்பானவர்களாக கருதப்பட்ட அச்சு நூல்கள அற்ற அக்காலத்தில் தமிழ் கற்க பலரை ஊர் ஊராக தேடிக் கண்டு அவர்களைப் பாடச் சொல்லி அச்செய்யுள்களை முழுவதுமாய் மனப்பாடம் செய்து தன் அறிவில் மிகப் பெரிய நூலகத்தை உருவாக்கிக் கொண்டார். ஒரு முறை தண்டியலங்காரம் கற்ற ஒரு யோகி கஞ்சா பிடித்தபடி திருச்சி நகர வீதிகளில் அலைந்து திரிவது பற்றி கேள்விப்பட்டு அவரைத் தேடி இவரும் திருச்சி சென்றார். அங்கு இவரும் வீதிகளில் அலைந்து அவரை கண்டுபிடித்து அவருக்கு தேவையான கஞ்சா வாங்கி கொடுத்து தண்டியலங்காரத்தை பாடச் சொல்லி கேட்டு அதனை முழுவதுமாக மனப்பாடம் செய்துகொண்டார்.

இது மட்டுமல்லாமல் வித்துவான் அவர்கள் சிறு வயதிலேயே பாடல்புனையும் ஆற்றலையும் பெற்றிருந்தார். குறிப்பாக எண்ணற்ற அந்தாதி, பிள்ளைத்தமிழ், கோவை ஆகியவற்றை புனைந்து தன் பிறவிப் பெருமையை அடைந்து கொண்டார். இவ்வாறாக இவர் இயற்றிய நூல்களின் எண்ணிக்கை 65.

திருவாவடுதுறை மகாசன்னிதானமாக இருந்த அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் மீது இவர் பாடிய கலம்பகம் அரங்கேற்றப்பட்டபோது மகாவித்துவான் எனும் பட்டம் இவருக்கு சூட்டப்ட்டது

பல மாணவர்களுக்கு தமிழ் கற்று தரும் நல்லதோர் ஆசானாக விளங்கியவர். தன்னிடம் படிக்கும் மாண்வர்களுக்கு இலவசமாக உணவு உடை இருப்பிடம் தந்து காத்துக் கொண்ட பேருள்ளம் படைத்த பெருமான் இவர். இவரிடம் படித்தவர்களூள் வித்துவான் தியாகராய செட்டியார் மற்றும் சதாவதனம் சுப்புராய செட்டியார் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

பிள்ளையவர்களின் சீடர்களுள் இன்னுமொருவரின் பெயர் பின்னாளில் தமிழ் கூறும் நல்லுலகின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டது. அவர்தான் தமிழ்த் தாத்தா என அனைவராலும் அழைக்கப்பட்ட உ.வே. சாமிநாத அய்யர். அவரே தன் ஆசானை பற்றி ஒரு முறை என் தாயாரைக் காட்டிலும் அதிகமான பாசத்தை என் மேல் காட்டியவர் என புகழ்ந்து கூறியுள்ளார்.

தன் 69ம் வயதில் பிள்ளைவர்கள் இறக்கும் தருவாயில் தனது மாணாக்கன் உ.வே.சா.வை திருவாசகம் ஓதச் சொல்லி அதைக் கேட்டபடியே உயிர் நீத்தார்.

ஆர்வியின் குறிப்பு: உ.வே.சா.வின் ஆசிரியர் என்றே என் போன்றவர்கள் இவரை அடையாளம் கண்டுகொள்கிறோம். நீண்ட தமிழ்ப் புலவர் பரம்பரையின் கடைசிக் கண்ணி இவர்தான் என்று நினைக்கிறேன். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பெரும் தமிழறிஞர் இவராகத்தான் இருக்க வேண்டும். இவருடைய சில படைப்புகளை ப்ராஜெக்ட் மதுரையில் தொகுத்திருக்கிறார்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர் பக்கம்

14 தமிழறிஞர் பட்டியல

14 தமிழறிஞர் பட்டியல் என்று ஒன்று பாஸ்டன் பாலா தளத்தில் கண்ணில் தென்பட்டது. வசதிக்காக கீழே கொடுத்திருக்கிறேன்.

இதில் ஏறக்குறைய எல்லா பேர்களும் கேள்விப்பட்டவையே. ஆனால் இவர்களில் பலர் தமிழுக்கு என்ன செய்தார்கள் என்று தெரியாது. எடுத்துச் சொல்ல எங்கள் சேதுராமனும் இல்லை. சரி எனக்குத் தெரிந்த வரை குறிப்புகள் எழுதுகிறேன்.

மு. வரதராஜன் (மு.வ.): ஒரு காலத்தில் பாப்புலராக இருந்து இப்போது யாருடைய பிரக்ஞையிலும் இல்லாத எழுத்தாளர். இவருடைய திருக்குறள் உரை இன்னும் பாப்புலராக இருக்கிறதா? ஆனால் இவர் எழுதிய இரண்டு நாவல்கள் – கரித்துண்டு மற்றும் அகல் விளக்கு – எனக்குப் பிடித்தமானவை. சேதுராமன் எழுதிய அறிமுகம் இங்கே.

கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை: பேரைக் கூட நான் கேள்விப்பட்டதில்லை. இந்தப் பதிவுக்காக கூகிளில் தேடியபோது வடமொழி கலப்பு இல்லாத தனித்தமிழ் வேண்டும் என்று முயன்றிருக்கிறார் என்று தெரிகிறது. அவருடைய நல்வினை, இன்றைய பீட்டர் தமிழைக் கேட்பதற்குள்ளாகவே மறைந்துவிட்டார்.

ரா.பி. சேதுப்பிள்ளை: அலங்காரத் தமிழில் எழுதுவார், சில கட்டுரைகள் படித்திருக்கிறேன். ஆனால் தமிழில் என்ன ஆராய்ச்சி செய்தார் என்று தெரியவில்லை. தமிழுக்காக முதல் சாகித்திய அகாடமி விருது பெற்றவர் – தமிழ் இன்பம் என்ற கட்டுரைத் தொகுப்புக்காக.

திரு.வி. கல்யாணசுந்தரம் (திரு.வி.க.): திரு.வி.க.வின் தமிழ் படிக்க சுகமானது. உண்மையிலேயே பெரிய மனிதர். தமிழ், அரசியல், தொழிலாளர் இயக்கம், பத்திரிகை உலகம் என்று பல துறைகளில் சாதித்தவர். அவருடைய வாழ்க்கை குறிப்புகள் படிக்க வேண்டிய புத்தகம். அவருடைய தமிழ்த் தொண்டு என்பது பத்திரிகைகள் (தேசபக்தன், நவசக்தி) மூலமும், தமிழ் நூல்களுக்கு உரை எழுதியதும் மட்டுமே என்று நினைக்கிறேன்.

ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார் (டி.கே.சி.): டி.கே.சி.யின் இதய ஒலி புத்தகம் குறிப்பிட வேண்டியது. தன் ரசனையை மட்டுமே அடிப்படையாக வைத்து கம்பனையும் முத்தொள்ளாயிரத்தையும் மற்றும் பல தமிழ் செய்யுள்களையும் சாதாரண வாசகனுக்கு புரிய வைத்தார். அவருடைய மிக பெரிய தொண்டு என்பது அவர் உருவாகிய வட்டம்தான். பல அறிஞர்கள் – ராஜாஜி, கல்கி, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, பாஸ்கரத் தொண்டைமான் இன்னும் நிறைய பேரின் மேல் அவரது தாக்கம் பெரியது. அது தமிழை முன்னே கொண்டுபோனது.

வித்துவான் தியாகராஜச் செட்டியார்: இவர் உ.வே.சா.வின் சம காலத்தவர், மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர் என்று நினைவு. ஆனால் இவர் ஆற்றிய பணி என்ன என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆறுமுக நாவலர்: நாவலர் சைவத்தையும் தமிழையும் போற்றியவர். மிஷனரிகளினால் மனக் கொதிப்பு அடைந்து அவர்கள் பாணியிலேயே சைவத்தை பரப்ப முயற்சி செய்தவர். மிஷனரிகளை எதிர்த்து அவர் எழுதிய சைவ தூஷணப் பரிகாரம் சுவாரசியமான புத்தகம். ஆனால் இவர் என்ன செய்தார் என்றும் என்னால் சொல்ல முடியவில்லை.

நாவலர் சோமசுந்தர பாரதியார்: 1937-38-இல் ராஜாஜி அரசுக்கு எதிராக நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறார் என்பதைத் தவிர வேறு எதுவும் எனக்கு முக்கியமாகத் தெரியவில்லை. சுவாரசியமான விஷயம் – வ.உ.சி.யின் கப்பல் கம்பெனியில் செயலாளராக இருந்தாராம்.

பரிதிமாற் கலைஞர் தமிழ்ப்பற்றால் பேரை மாற்றிக் கொண்டார். தாங்க முடியாத சில புனைவுகளை (மதிவாணன்) எழுதி இருக்கிறார். அதைத் தவிர?

உ.வே. சாமிநாதையர்: உ.வே.சா.வைப் பற்றி நான் சொல்லித்தானா தெரிய வேண்டும்?

பண்டிதமணி கதிரேசன் செட்டியார்: செட்டியாரும் பேராசிரியராக இருந்திருக்கிறார் என்பதைத் தவிர எனக்கு வேறு எதுவும் முக்கியமாகத் தெரியவில்லை.

மறைமலையடிகள்: இருபது வருஷங்களுக்கு முன்பே படிக்க முடியாத பண்டிதத் தமிழில் பல கட்டுரைகள் எழுதி இருக்கிறார். இவரையெல்லாம் அவரது தாக்கத்தின் அடிப்படையில்தான் மதிப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன்.

மீனாட்சிசுந்தரம் பிள்ளை: பத்தொன்பதாம் நூற்றாண்டின் பெரிய தமிழறிஞர் இவராகத்தான் இருக்க வேண்டும். உ.வே.சா.வின். ஆசிரியர். சிறு காவியங்களை எழுதி இருக்கிறார். இவரது சீடர் சவேரிநாதப் பிள்ளைக்கு? இவரே அரிச்சந்திர புராணத்தை எழுதிக் கொடுத்தார் என்று சொல்வார்கள்.

பாண்டித்துரைத் தேவர்: மீண்டும் தமிழ்ச்சங்கத்தை ஸ்தாபித்தார் என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை.

இவர்களில் பலரும் தமிழ்ப் பேராசிரியர்களாக இருந்து தமிழில் ஆர்வும் உள்ள ஓரிரு தலைமுறைகளை உருவாக்கி இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அது tangible பணியாக இல்லாமல் போகலாம், ஆனால் பெரிய பணிதான். இவர்களில் பலரை அவர்களது தாக்கத்தின் அடிப்படையில்தான் மதிப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன். இரண்டு ராகவையங்கார்கள், கம்பன் அடிப்பொடி சா. கணேசன், ம.பொ.சி., அ.ச.ஞானசம்பந்தம், ஜேசுதாசன், சாலமன் பாப்பையா, கு. ஞானசம்பந்தன் ஆகியோருக்கும் இப்படிப்பட்ட தாக்கம் இருந்திருக்கும்/இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்தப் பட்டியலில் முக்கியமான விடுபடல் சி.வை. தாமோதரம் பிள்ளை மற்றும் வையாபுரிப் பிள்ளை. அது என்னவோ உ.வே.சா.வுக்கு இருக்கும் புகழில் தாமோதரம் பிள்ளைக்கு பத்தில் ஒரு பங்கு கூட இல்லை. ஆனால் அவரது பணியும் உ.வே.சா. அளவுக்கு முக்கியமானதுதான். முதல் அகராதி வையாபுரிப் பிள்ளை பதித்ததுதான் என்று நினவு. அந்தக் காலத்தில் வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார், வேங்கடசாமி நாட்டார் ஆகியோரும் இடைப்பட்ட காலத்தில் நா. வானமாமலை போன்றோரும் இப்போது அ.கா. பெருமாள், வேதசகாயகுமார், அ.இரா. வேங்கடாசலபதி (சில குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலும்) ஆகியோரும் குறிப்பிடப்பட வேண்டிய முக்கியமான களப்பணி புரிந்திருக்கிறார்கள்/புரிகிறார்கள் என்று நினைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

பாலகுமாரனுக்கு பிடித்த புத்தகங்கள்

பாலகுமாரனின் ஒரிஜினல் சுட்டி இங்கே. யார் போட்ட பட்டியலும் இன்னொருவருக்கு முழுதாக ஒத்துப் போகப் போவதில்லை, இருந்தாலும் அவர் சொல்லி இருக்கும் புத்தகங்களில் பெருவாரியானவை நல்ல படைப்புகள். வசதிக்காக பட்டியலை இங்கே மீண்டும் போட்டிருக்கிறேன், என் குறிப்புகளுடன்.

படித்த நாவல்கள்:

  1. கமலாம்பாள் சரித்திரம் – ராஜம் ஐயர்: கமலாம்பாள் சரித்திரத்தைத்தான் நான் தமிழின் முதல் நாவல் என்று கருதுகிறேன். பிரதாப முதலியார் ட்ரெய்லர் மாதிரிதான்.
  2. பொன்னியின் செல்வன்கல்கி: அற்புதமான கதைப் பின்னாலும் முடிச்சுகளும் கொண்ட நாவல். தமிழின் சிறந்த சரித்திர நாவல் இதுவே என்று ஒரு காலத்தில் எண்ணி இருந்தேன். இப்போது வானம் வசப்படும், மானுடம் வெல்லும் இரண்டும் பொ. செல்வனோடு முதல் இடத்துக்கு போட்டி போடுகின்றன.
  3. மோகமுள், செம்பருத்திதி.ஜானகிராமன்: மோகமுள் தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்று. செம்பருத்தி இப்போது சரியாக நினைவில்லை.
  4. மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன்தேவன் மிஸ்டர் வேதாந்தம் என் கண்ணில் தேறாது. ஜ. ஜகன்னாதன் நல்ல நாவல்.
  5. பசித்த மானுடம்கரிச்சான் குஞ்சு: எனக்கு முழுதாகப் புரிந்துவிட்டது என்று சொல்வதற்கில்லை. ஆனாலும் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
  6. ஜே.ஜே. சில குறிப்புகள்சுந்தர ராமசாமி: படித்துப் பல வருஷம் ஆகிவிட்டது. சாதனை என்று அப்போது நினைத்தேன், மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்.
  7. ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்ஜெயகாந்தன்: பிரமாதமான பாத்திரப் படைப்பு. சாதனை.
  8. 18வது அட்சக்கோடு, கரைந்த நிழல்கள்அசோகமித்திரன்: கரைந்த நிழல்கள் ஒரு tour de force. ப. அட்சக்கோடும் சிறந்த நாவல்.
  9. சாயாவனம்சா. கந்தசாமி: சாயாவனம்தான் நான் முதன்முதலாகப் படித்த இலக்கியம் என்று நினைக்கிறேன். கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.
  10. குருதிப்புனல்இந்திரா பார்த்தசாரதி: என் கண்ணில் இது முழுதாக வெற்றி அடையாத படைப்புதான்.
  11. வாடிவாசல்சி.சு.செல்லப்பா: குறுநாவல் என்றுதான் சொல்ல வேண்டும். அற்புதமான புத்தகம்.
  12. தலைமுறைகள்நீல. பத்மநாபன்: சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்று. வட்டார வழக்குக்காகவே படிக்கலாம்.
  13. குறிஞ்சி மலர்நா. பார்த்தசாரதி: இன்று மகா தட்டையான படைப்பாகத்தான் தெரிகிறது. ஆனால் எழுதப்பட்டபோது இதன் லட்சியவாதம் பெரிய தாக்கத்தை உருவாக்கியது என்பதை மறுப்பதற்கில்லை.
  14. ஒரு புளியமரத்தின் கதைசுந்தர ராமசாமி: நல்ல நாவல், படிக்க வேண்டிய நாவல்.
  15. வாசவேஸ்வரம்கிருத்திகா அற்புதமான நாவல்.
  16. தரையில் இறங்கும் விமானங்கள்இந்துமதியின் பிற புத்தகங்கள் எல்லாம் குப்பையாக இருக்கும்போது எப்படி இந்த ஒரு புத்தகம் மட்டும் இலக்கியமாக இருக்கிறது என்று வியந்திருக்கிறேன்.
  17. பிறகுபூமணி இன்னும் ஒரு சிறந்த நாவல்.
  18. கதவு/கோபல்ல கிராமம்கி. ராஜநாராயணன்: கி.ரா.வெல்லாம் ஆங்கிலத்தில் எழுதி இருந்தால் நோபல் நிச்சயம்.
  19. கடல்புரத்தில்வண்ணநிலவன்: பல வருஷங்கள் முன்னால் படித்தபோது என்னைப் பெரிதாகக் கவரவில்லை. மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும்.
  20. என் பெயர் ராமசேஷன் – ஆதவன்: சில புத்தகங்கள் மனதில் ஒரு ஸ்பெஷல் இடத்தைப் எடுத்துக் கொள்கின்றன. எ.பெ. ராமசேஷன் எனக்கு அப்படித்தான். படிக்காதவர்கள் அதிருஷ்டசாலிகள், அவர்களுக்கு ஒரு நல்ல வாசிப்பு அனுபவம் காத்திருக்கிறது.
  21. நாளை மற்றுமொரு நாளே – ஜி.நாகராஜன்: இதுவும் ஒரு சாதனை.
  22. புத்தம் வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன்: ஹெப்சிபா எழுத்தாளர். அவர் படைத்திருப்பது இலக்கியம். அவருக்கு பெண் எழுத்தாளர் என்று அடைமொழி எல்லாம் கொடுக்கத் தேவையில்லை.
  23. யவனராணிசாண்டில்யன்: சிறு வயதில் படித்தபோது இளஞ்செழியனின் சாகசங்கள் மனதைக் கவர்ந்தன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவையெல்லாம் எம்ஜிஆர் பட சாகசங்கள் என்பதையும் சொல்லத்தான் வேண்டும்.
  24. வழிப்போக்கன் – சாவி உப்பு சப்பில்லாத வாரப் பத்திரிகை தொடர்கதை. இதையெல்லாம் பாலகுமாரன் எப்படி விரும்பிப் படித்தாரோ தெரியவில்லை. இந்த லிஸ்டில் உள்ள மற்ற புத்தகங்களுக்கும் இதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.

படிக்காதவை:

  1. வேள்வித்தீ -எம்.வி. வெங்கட்ராம்:
  2. எங்கே போகிறோம் – அகிலன்: அகிலன் உருப்படியாக எதையாவது எழுதி இருப்பார் என்று எனக்கு நம்பிக்கையே இல்லை.
  3. அலைவாய்க் கரையில் – ராஜம் கிருஷ்ணன்:
  4. புதிய கோணங்கி – கிருத்திகா
  5. கடலோடி – நரசையா
  6. சின்னம்மாஎஸ்.ஏ.பி.
  7. படகு வீடு – ரா.கி.ரங்கராஜன்
  8. புயலில் ஒரு தோணி – ப.சிங்காரம்

சிறுகதைகள், தொகுப்புகள்:

  1. மங்கையர்க்கரசியின் காதல்வ.வே.சு.ஐயர்: முன்னோடி சிறுகதை. பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் படிக்கலாம்.
  2. புதுமைப்பித்தன் சிறுகதைகள்: புதுமைப்பித்தனைத்தான் நான் தமிழின் நம்பர் ஒன் எழுத்தாளர் என்று கருதுகிறேன். என்றாவது நான் பணக்காரன் ஆனால் அவரது எழுத்துகளை மொழிபெயர்த்து விளம்பரம் செய்து எல்லாரையும் படிக்க வைப்பேன்…
  3. மூங்கில் குருத்துதிலீப் குமார் மீண்டும் மீண்டும் anthologize செய்யப்படும் இந்தச் சிறுகதை சிறப்பானதுதான். ஆனால் திலீப் குமாரின் கடவு சிறுகதையே எனக்கு எல்லாவற்றிலும் மிகவும் பிடித்தமானது.
  4. சிறிது வெளிச்சம்கு.ப.ரா.: நல்ல சிறுகதை, படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
  5. தெய்வம் பிறந்ததுகு. அழகிரிசாமி
  6. கலைக்க முடியாத ஒப்பனைகள்வண்ணதாசன்: நல்ல சிறுகதை.
  7. சிறகுகள் முறியும்அம்பை: இந்த மாதிரி பெண்ணிய சிறுகதை எழுத அம்பைக்கு சொல்லித் தர வேண்டுமா என்ன?
  8. இன்று நிஜம் – சுப்ரமண்ய ராஜு
  9. தேவன் வருகைசுஜாதா
  10. ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள், ஒரு மனுஷிபிரபஞ்சன்
  11. கல்லிற்கு கீழும் பூக்கள் – மாலன்
  12. அப்பாவும் இரண்டு ரிக்ஷாக்காரர்களும் – ம.வெ. சிவகுமார்
  13. பச்சைக்கனவுலா.ச.ரா.
  14. நுணலும் புனலும்ஆ. மாதவன்
  15. மௌனி சிறுகதைகள் – மௌனி
  16. நினைவுப் பாதை – நகுலன்
  17. சம்மதங்கள் – ஜெயந்தன்
  18. நீர்மைந. முத்துசாமி பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் படிக்கலாம். எனக்கு சிறுகதை புரியவில்லை.
  19. சோற்றுப்பட்டாளம் – சு. சமுத்திரம்
  20. குசிகர் குட்டிக் கதைகள் – அ. மாதவய்யா
  21. ஒரு ஜெருசேலம் – பா. ஜெயப்ரகாசம்
  22. ஒளியின் முன்ஆர். சூடாமணி

கவிதைகள்

  1. அன்று வேறு கிழமை – ஞானக்கூத்தன்
  2. பெரிய புராணம் – சேக்கிழார்
  3. நாச்சியார் திருமொழி – ஆண்டாள்
  4. அழகின் சிரிப்பு – பாரதிதாசன்
  5. வழித்துணை – ந. பிச்சமூர்த்தி
  6. தீர்த்த யாத்திரை – கலாப்ரியா
  7. வரும் போகும் – சி. மணி
  8. சுட்டுவிரல்/பால்வீதி – அப்துல் ரஹ்மான்
  9. கைப்பிடி அளவு கடல் – தர்மு சிவராமு
  10. ஆகாசம் நீல நிறம் – விக்ரமாதித்யன்
  11. நடுநிசி நாய்கள் – சுந்தர ராமசாமி

கட்டுரைகள்

  1. பாரதியார் கட்டுரைகள் – சி. சுப்பிரமணிய பாரதி
  2. பாலையும் வாழையும் – வெங்கட் சாமிநாதன்
  3. சங்கத் தமிழ் – கலைஞர் மு. கருணாநிதி
  4. வளரும் தமிழ் – தமிழண்ணல்
  5. மார்க்சியமும், தமிழ் இலக்கியமும் – ஞானி
  6. இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் – வைரமுத்து

வாழ்க்கை சரித்திரம்

  1. என் சரித்திரம் – உ.வே. சாமிநாத ஐயர்
  2. காரல் மார்க்ஸ் – வெ. சாமிநாத சர்மா

நாடகங்கள்

  1. சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்சி. என். அண்ணாதுரை எழுதிய இந்த நாடகம் என் ரசனைக்கு ஒத்து வராவிட்டாலும் தமிழுக்கு முக்கியமான நாடகம்தான். ஆவணம் என்ற விதத்திலும் முக்கியமானது.

மொழிபெயர்ப்புகள்:

  1. அழிந்த பிறகு, பாட்டியின் நினைவுகள் – சிவராம கரந்த்
  2. அந்நியன் – ஆல்பெர் காம்யு
  3. வால்காவிலிருந்து கங்கை வரைராகுல சாங்க்ரித்தியாயன் இன்னுமொரு பிரமாதமான எழுத்து. இதை பாலகுமாரன் கட்டுரை என்று வரிசைப்படுத்தி இருக்கிறார்!
  4. சிறுகதைகள் – ஓ. ஹென்றியின் சிறுகதைகள் பலவற்றைப் படித்திருக்கிறேன். Gift of the Magi, Last Leaf மாதிரி ஒரு சில சிறுகதைகளே மனதில் நிற்கின்றன. அவரை பேரிலக்கியம் படைத்தவர் என்று சொல்வதற்கில்லை.

இந்தப் பட்டியல் முழுமையானதாய் கருத வேண்டாம். என் நினைவில் தைத்தவரை எழுதியிருக்கிறேன். நல்லவை சில மறந்து போயிருக்கலாம். இதை தவிர என் அபிப்பிராயம் என்னவெனில் ஜெயகாந்தன், தி. ஜானகிராமன், லா.ச.ரா, அசோகமித்திரன், சுஜாதா, சுந்தர ராமசாமி ஆகியோரின் எல்லா படைப்புகளையும் படிக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறேன். —— பாலகுமாரன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: புத்தகப் பரிந்துரைகள்

அசோகமித்திரன் பேட்டி

அசோகமித்திரன் விகடனில் கொடுத்த பேட்டியை இட்லிவடை தளத்தில் மறு பிரசுரம் செய்திருக்கிறார்கள். அசோகமித்திரன் எழுத்தைப் போலவே அவரது பேச்சும் ரத்தினச் சுருக்கமாக இருக்கிறது. இது ஒரு மோசமான பேட்டி, மண்டபத்தில யாரோ எழுதிக் கொடுத்ததைப் போட்டிருக்கிறார்கள் என்று சில நண்பர்கள் சொன்னார்கள். எனக்கு இதில் அசோகமித்ரனின் டச் தெளிவாகத் தெரிகிறது. இது வரை பார்க்காவிட்டால் கட்டாயமாகப் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன். விகடனுக்கும் இட்லிவடைக்கும் நன்றி!

சில excerpts:

“இந்த வயதில் இருந்து பார்க்கும்போது, வாழ்க்கை எப்படி இருக்கிறது?”
“ரொம்பச் சோர்வாக இருக்கிறது. தள்ளாமையும் வியாதிகளும் வலியும் கொல்கின்றன. உலகம் விடை கொடுத்துவிடாதா என்று காத்திருக்கிறேன்.”

“உங்கள் 60 ஆண்டு எழுத்து வாழ்க்கை திருப்தியைத் தருகிறதா?”
“இதுவரைக்கும் 9 நாவல்கள், முந்நூற்றிச் சொச்ச சிறுகதைகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். என்னுடைய எழுத்து மேல் திருப்தி இருக்கிறது. வாழ்க்கை மேல் புகார்கள் கிடையாது. ஆனால், என் எழுத்தைப் படித்துவிட்டு எழுத்தாளனாகப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு யாராவது என்னைப் பார்க்க வந்தால் மட்டும் எனக்குப் பொல்லாத கோபம் வரும். ‘போடா மடையா… உருப்படியாக ஏதாவது வேலையைத் தேடிக் கொள்’ என்று கத்தத் தோன்றும். நான் எப்படியோ வாழ்ந்துவிட்டேன். எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கை. மற்றவர்களுக்கு இந்தக் கஷ்டம் வேண்டாம்.”

“தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே சிறப்பாக எழுதக் கூடியவர் நீங்கள். ஆனால், தமிழைச் சுற்றியே உங்கள் படைப்பு உலகத்தை அமைத்துக் கொண்டீர்கள். ஏன்?”
“1952-ல் நான் எழுத வந்தேன். அப்போது தமிழில்தான் செய்ய வேண்டியது நிறைய இருப்பதாகத் தோன்றியது. அதற்கு நிறையப் பேரின் தேவையும் இருந்தது. தமிழைத் தேர்ந்தெடுத்தேன்.”

“புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, கு.ப.ரா. எனப் பலர் அந்தக் காலகட்டத்திலேயே புதுப் புது முயற்சிகளில் ஈடுபட்டு இருந்தார்கள் இல்லையா?”
“ஆமாம்; ஆனால் அது தொடக்கம்தான். செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருந்தது.”

“ஒரு வாசகராக உங்களை மிகவும் பாதித்த படைப்புகளைச் சொல்லுங்கள்?”
உ.வே.சா-வின் ‘என் சரித்திரம்’, நாமக்கல் கவிஞரின் ‘என் கதை’, கல்கியின் ‘தியாக பூமி’, புதுமைப்பித்தனின்சித்தி’, சரத்சந்திர சாட்டர்ஜியின் ‘சந்திரநாத்’, அலெக்சாண்டர் டூமாஸின் ‘The Count of Montecristo’, சார்லஸ் டிக்கன்ஸின் ‘A Tale of Two Cities”

“கடந்த ஒரு நூற்றாண்டில் இந்திய அளவில் மகத்தான இலக்கியச் சாதனையாக எதைச் சொல்வீர்கள்?”
தாகூரின் ‘கோரா’.”

“ஒரு விமர்சகராக நீங்கள் கறாராகச் செயல்பட்டது இல்லை என்ற குற்றச்சாட்டு உண்டு…”
“ஏன் கறாராகச் செயல்பட வேண்டும்? விமர்சகனாக அடையாளப்படுத்திக்கொள்ளக் கூட நான் பிரியப்பட்டது இல்லை.”

“உங்கள் அளவில் நல்ல இலக்கியத்துக்கான வரையறை என்ன?”
“மனிதன் மீது அக்கறை காட்டுகிற எல்லாமே இலக்கியம்தான். மனிதர்களைப் பிரிக்கிற எதுவுமே இலக்கியம் இல்லை.”

“தமிழில் இப்போது எழுதுபவர்களில் நம்பிக்கை அளிப்பவர்களாக யாரைக் கருதுகிறீர்கள்?”
ஜெயமோகன். அவருக்கு இருக்கும் அனுபவங்களும் வாசிப்பும் இன்னும் அவரைப் பெரிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும் என்று நினைக்கிறேன். ஆனால், படைப்புகளைத் தாண்டி அவர் எழுதுவதும் பேசுவதும்… ம்ஹூம்…”

“உங்களை நீங்கள் சுயவிமர்சனம் செய்துகொள்வது உண்டா? உங்கள் படைப்புகளை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?”
“ஒவ்வொருவருக்கும் அது அவசியம் இல்லையா? எல்லாக் காலங்களிலுமே என்னை சுயவிமர்சனம் செய்து வந்திருக்கிறேன். உலகத் தரத்தில் என் எழுத்துகளை ஒப்பிடச் சொன்னால், நான் யாருக்கும் தாழ்ந்தவன் இல்லை என்று சொல்வேன்.”

“நாட்டுநடப்புகள், அரசியல் போக்குகள்பற்றி நீங்கள் அதிகம் விமர்சித்தது இல்லை…”
“வாழ்க்கையோடு முட்டி மோதி நின்றவன் அல்ல நான். வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்தவன். அரசியலையும் அப்படித்தான் பார்த்தேன்.”


தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்திரன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்: முழு பேட்டியும் இங்கே

அசோகமித்ரன் சிபாரிசுகள்

விகடனில் அசோகமித்ரன் தேர்ந்தெடுத்த பத்துப் புத்தகங்கள் (ஏப்ரல் 2, 2006 தேதியிட்ட ஆனந்த விகடனில் இருந்து). நன்றி, விகடன்!

அசோகமித்திரன் தேர்ந்தெடுத்திருக்கும் படைப்புகளில் ஒன்று கூட என் டாப் டென் லிஸ்டில் வராது. கவிதை, பழந்தமிழ் இலக்கியம் எல்லாம் எனக்கு கொஞ்சம் தூரத்தில் இருக்கிறது. நவீன படைப்பிலக்கியத்திலிருந்து அவர் எதையுமே தேர்வு செய்யாதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. புதுமைப்பித்தன் இல்லாமல் ஒரு லிஸ்டா?

  1. திருக்குறள் (கழக வெளியீடு) ஏற்கனவே சொன்ன மாதிரி கொஞ்ச தூரம்தான்.
  2. சிலப்பதிகாரம் (உ.வே.சா. நூலக வெளியீடு) இதுவும் தூரம்தான்.
  3. கம்பராமாயணம் (சென்னை கம்பன் கழக வெளியீடு) இதுவும் தூரம்தான்.
  4. சத்திய சோதனை – காந்தி படிக்கப்பட வேண்டிய புத்தகம்.
  5. கண்டுணர்ந்த இந்தியா – நேரு அருமையான புத்தகம்
  6. என் சரித்திரம் – உ.வே. சாமிநாதய்யர் நல்ல புத்தகம், ஆனால் டாப் டென்னில் எல்லாம் இடம் பிடிக்காது.
  7. என் கதை – கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை படித்ததில்லை
  8. பாரதியார் கட்டுரைகள் நல்ல புத்தகம்.
  9. விடுதலைப் போரில் தமிழகம் – ம.பொ. சிவஞானம் படிக்க ஆசை, கிடைக்க மாட்டேன் என்கிறது.
  10. தற்காலத் தமிழ் அகராதி (க்ரியா வெளியீடு) இது படிப்பதற்கில்லை

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்திரன் பக்கம், புத்தக சிபாரிசுகள்

சுரதா தொகுத்த “நெஞ்சில் நிறுத்துங்கள்”

இந்த புத்தகத்தை தமிழ் virtual பல்கலைகழகத்தின் மின் நூலகத்தில் படித்தேன். பல அரிய ஆவணங்களைத் தொகுத்திருக்கிறார். கட்டாயம் படியுங்கள்!

ஆவணங்களின் அட்டவணை:

  1. பெரிய மருதுவின் மரண வாக்குமூலம் (இது உண்மையிலேயே பெரிய மருதுவின் வாக்குமூலமா என்று கொஞ்சம் சந்தேகத்தோடு குறிப்பிடுகிறார்)
  2. பச்சையப்ப முதலியாரின் உயில்
  3. ஆறுமுக நாவலரின் ஐந்து முடிவுகள்
  4. ராமலிங்க வள்ளலாரின் விளக்கப் பத்திரிகை
  5. பகடாலு நரசிம்ம நாயுடுவின் முதல் காங்கிரஸ் மாநாட்டு அனுபவங்கள்
  6. உ.வே. சாமிநாதய்யரின் சீவக சிந்தாமணி பதிப்பில் குறை கண்ட முருகேசப் பிள்ளையின் சவால்
  7. காரைக்கால் ராஜகோபாலப் பிள்ளையின் கல்வி அறிக்கை
  8. சூளை சோமசுந்தர நாயக்கரின் மன்னிப்புக் கடிதம்
  9. தினமணி டி.எஸ். சொக்கலிங்கத்தின் வேண்டுகோள்

தொடர்புள்ள சுட்டிகள்:

  • தமிழ் virtual பல்கலைக்கழகத்தின் மின் நூலகம்
  • சுரதாவின் “நெஞ்சில் நிறுத்துங்கள்” தொகுப்பு